கொங்குதேர் வாழ்க்கை : தொ.ப

முனைவர் ம. இராமச்சந்திரன்
உதவிப் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு-தமிழ்
ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மதுரை தியாகராசர் கல்லூரி பல சிறப்புகளைக் கொண்டு தனக்கான ஆளுமையை உருவாக்கிக் கொண்டது. அதற்குப் பல அறிஞர்கள் காரணமாக இருந்துள்ளனர். அவர்களில் ஒருவர் பேராசிரியர் தொ.பரமசிவன். இக்கல்லூரியில் நான் 1995-2000 ஆண்டுகளில் இளங்கலை மற்றும் முதுகலை படித்துக்கொண்டு இருந்தேன். தியாகராசர் கல்லூரி சைவ மரபிற்கும் தமிழ் அறிஞர்களுக்கும் பெருமக்களுக்கும் பெயர்பெற்ற கல்லூரி. எப்போதுமே மரபின் ஆளுமையும் ஆதிக்கமும் மேலோங்கி நிற்கும். இப்படிப்பட்ட சூழலில் தமிழ் நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் மாணவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இத்தாக்கம் அரசியல் தளத்தில் மட்டுமல்லாமல் அறிவுத்தளத்திலும் தனது செல்வாக்கைச் செலுத்தியது. ஆக மரபுக்கும் புதுமைக்கும் இடையேயான இடைவெளி மாறத் தொடங்கியது. இது தியாகராசர் கல்லூரித் தமிழ்த்துறையையும் பாதித்தது.

பேராசிரியர் மாணிக்கம், பேரா. மாரியப்பன், பேரா. அருணகிரி, பேரா. காளிதாஸ் என்று மரபைப் போற்றும் சைவநெறி பின்பற்றும் பேராசிரியர்கள் ஒரு பகுதியாகவும் பேரா.சக்திவேல், பேரா. தொ.பரமசிவன், பேரா. கு. ஞானசம்பந்தன், பேரா. கருணாமூர்த்தி, பேரா. பேச்சிமுத்து என்று புதிய சிந்தனைகளோடு இருந்த பேராசிரியர்கள் ஒரு பகுதியாகவும் செயல்பட்டனர். இவ்வாறு மரபுக்கும் புதுமைக்கும் இடையே காணப்படும் அனைத்து முரண்பாடுகளும் இங்கும் காணப்பட்டன. பேரா தொ.ப அவர்கள் புதுமையின் அடையாளமாக வலம் வந்தார். இவரின் ஆய்வு மனப்பான்மையாலும் சிந்தனைத் தெரிப்பாலும் பலர் கவரப்பட்டனர். எப்போதும் நண்பர்கள் கூட்டம் மாணவர்கள் கூட்டம் என்று விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டேயிருக்கும். மேற்கோள் காட்டும் நூல்களைப் படிக்க இவருக்கு எப்போது நேரம் கிடைக்கும் என்றும் எந்த வகையில் இத்தகைய நூல்களை அறிந்து கொள்கிறார் என்றும் பல நேரங்களில் வியந்தது உண்டு. ஏதேனும் கேள்விகள் கேட்டால் அதற்கான நேரடியான பதிலைக்கூறி இந்தப் புத்தகத்தை, சிறுபத்திரிக்கையைப் படி என்று கூறுவார். இவரின் ஆளுமையைத் தூரத்திலிருந்து வியந்த தருணங்கள் அனேகம். அப்போதெல்லாம் எனக்கு மனதில் தோன்றிய எண்ணம் படிக்க வேண்டும் என்பது தான். ஆனால் கோட்பாட்டுப் பார்வையோடு படிக்க வேண்டும் ஆராய வேண்டும் என்ற பார்வை எனக்கு ஏற்படவில்லை. என்றாலும் அவரின் தோற்றம் என்னையறியாமல் என்னுள் பதிந்தது. மண் சார்ந்த பண்பாட்டு ஈர்ப்பும் அவர் மேல் ஆழமான பற்றுதலை உருவாக்கியது.

தொ.ப அவர்கள் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இளங்கலையில் பொருளாதாரமும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதுகலையில் தமிழும் கற்றார். இதன் பின்னர் ஆறு ஆண்டுகள் கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், 1976ல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவராகச் சேர்ந்தார். முனைவர் பட்ட ஆய்வுக்காகப்  புதுமைப்பித்தன் குறித்து ஆய்வு செய்ய விரும்பினார். ஆனால், இவருடைய ஆய்வு நெறியாளர் மு. சண்முகம் பிள்ளை, கோயில் குறித்து ஆய்வுமேற்கொள்ளும்படி கூறவே, மதுரையில் உள்ள அழகர் கோயிலைத் தனது ஆய்வுப் பொருளாக எடுத்துக்கொண்டார். இந்தக் கோயில் குறித்து இவர் மேற்கொண்ட ஆய்வு, கோயில் குறித்த ஆய்வின் எல்லைகளை விரிவடையச் செய்தது. இவரது ஆய்வுக் கட்டுரையினை மதுரை காமராசர் பல்கலைக்கழம் “அழகர் கோயில்” என புத்தகமாக வெளியிட்டது. வழக்கமாக கோயில்கள் குறித்த ஆய்விலிருந்து இவரது அணுகு முறை முற்றிலும் மாறி, அழகர் கோயிலுக்கும் பல்வேறு சாதியினருக்கும் இடையிலான உறவு குறித்ததாக அமைந்தது. தமிழ் மொழியின் மீது பெரும் பற்றும் ஆர்வமும் கொண்டிருந்தவராக இருந்தபோதும் தன்னுடைய ஆய்வினைச் செம்மைப்படுத்தும் நோக்கில் சமஸ்கிருதமும் கற்றார்.

சாக்கிர் உசைன் கல்லூரி, மதுரை தியாகராஜர் கல்லூரி ஆகியவற்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1998 முதல் 2008 இல் இளைப்பாறும் வரை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றினார்.

மக்கள் பண்பாடு, சமயங்கள் தொடர்பான இவரது ஆய்வுகள் மார்க்சிய பெரியாரிய அடிப்படையைக் கொண்டவை. அடித்தள மக்களின் அழிந்து வரும் பண்பாடுகளைக் காக்கவேண்டியதன் அவசியத்தைக் கூர்மையாக முன்வைப்பவர். திராவிடக்கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர்.

இவரின் நூல்கள் பலதரப்பட்ட பதிப்பகங்களின் வெளியீடாக வெளிவந்துள்ளன. அவை அறியப்படாத தமிழகம், பண்பாட்டு அசைவுகள், அழகர் கோயில், தெய்வம் என்பதோர், வழித்தடங்கள், பரண், சமயம், சமயங்களின் அரசியல், தொ.பரமசிவன் நேர்காணல்கள், விடு பூக்கள், உரைகல், இந்து தேசியம், நாள்மலர்கள், மானுடவாசிப்பு, பாளையங்கோட்டை, மஞ்சள் மகிமை, மரபும் புதுமையும், இதுவே சனநாயகம் போன்றவையாகும்.

முதுகலை பயிலும் காலத்தில் பேரா. தொ.ப அவர்கள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்குச் சென்று விட்டார். அக்காலத்தில் இவரின் ‘நாள் மலர்கள்’ புத்தகம் எங்களுக்கு பாடமாக வைக்கப்பட்டிருந்தது. புத்தகத்தைப் படித்துவிட்டுப் பாவை பதிப்பகத்தைத் தேடிய காலம் அது. ‘அழகர் கோயில்’ படித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் மதுரையில் இருந்து அழகர்மலை வரை நினைவுகளோடு பயணித்த காலம். கள்ளந்திரி, வைகை ஆற்றுக் கால்வாயில் குளித்து மகிழ்ந்த காலம் என்று வாழ்வோடு கலந்துவிட்டது. ‘பண்பாட்டு அசைவுகள்’ காலச்சுவடு வெளியிட்ட நூலில் பீட்டர் பாண்டியன் என்று அன்போடு அழைக்கப்படும் ஆங்கிலேய அதிகாரியின் வாழ்க்கைச் செய்திகளைத் தொ.ப எடுத்துக் கூறும் விதம் புதுமையானது. எந்த ஒப்பனைகளும் இல்லாமல் திருக்குறளை நினைவுபடுத்தும் சுருங்கச் சொல்லி சிந்திக்க வைக்கும் இவரின் கட்டுரை வடிவம் உவப்பானது, முன்மாதிரியானது. இவரின் ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பற்றிய சிந்தனைகள் வியப்பானவை மற்றும் இன்றளவும் கண்டுகொள்ளப்படாதவை.

இவர் இந்து நாளிதழில் அளித்துள்ள நேர்காணல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இன்றைய தமிழாய்வு எப்படி சென்று கொண்டிருக்கிறது என்ற தனது கருத்துக்களை விரிவாகக் கூறியுள்ளார். “அவர்களைப் (நாட்டுப்புற மக்கள்) படிக்கிறதுதான் உண்மையாகவே தேசத்தைப் படிப்பதாகும். அவர்களுடைய வாழ்க்கை அசைவுகள் அர்த்தமுடையவை. இன்னும் சொல்லப்போனால், நாட்டார் என்று நாம் அடையாளங்காட்டும் ஒவ்வொருவரையும் ‘படிக்கப்பட வேண்டிய புத்தகங்கள்’ என்று சொல்லலாம். அந்தப் புத்தகங்களைத்தான் நான் ரொம்ப விரும்பிப் படிக்கிறேன். அவர்களிடம் இருக்கும் இயல்பான ஞானம், நம்ம நகர்ப்புறத்துக்காரங்கக்கிட்ட இல்லைங்கிறதுதான் சோகமான விஷயம்” என்று கூறுவதன் மூலம் தனது ஆய்வுக்களம் நாட்டார் மக்களிடமிருந்தே தொடங்குவதைக் காட்டுகிறார்.

மேலும் “அப்படி நம்பிக்கையளிக்கக்கூடியவர்கள் யாரும் இல்லை. நாங்கள் நம்பிக்கையிழந்து போயிருக்கிறோம் என்பதுதான் இப்போதைய சோகம். நீங்கள் சொல்வது போல், வானமாமாலை, லூர்து போன்றவர்கள் முதல் தலை முறையினர். எங்களைப் போன்றவர்கள் அவர்களுக்கு அடுத்தத் தலைமுறை. மூன்றாவது தலைமுறைக்கு இப்போது ஆள் இல்லையென்பதுதான் உண்மை” என்று ஆய்வுத் தொடர்ச்சி அறுபட்டுப் போன சோகத்தை அவரின் இறுதி நாள் வரை காண முடிந்தது. 1990 களுக்குப் பிறகு ஏற்பட்ட பின் நவீனத்துவ மாற்றமும் 2000க்கு பிறகு ஏற்பட்ட கல்வி வணிகமயமானதும் தமிழாய்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக அறிவு சார்ந்த தேடுதல் மாற்றமடைந்து பதவி பெறுதல் சார்ந்த அறிவு தேடுதல் நடைமுறைக்கு வந்தது. இதன் காரணமாகத் தன்னை இழந்து தமிழிலக்கியத்தை வளர்த்தெடுத்தத் தன்னார்வ உணர்வாளர்கள் தமிழ்ச் சூழலில் ஒதுங்கிக் கொண்டனர் அல்லது ஓரங்கட்டப்பட்டனர். இவ்வாறு தமிழாய்வு அறுபட்ட பட்டமாகக் காற்றில் திசையற்று அல்லாடிக்கொண்டு இருக்கிறது.

மேலும் ஆய்வாளர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு “என்னைவிட, முத்துமோகனுக்கு சித்தாந்தத் தெளிவு நிறைய இருக்கிறது. அவருடைய ‘ஏகம், அநேகம், சாதியம்’ என்ற புத்தகத்துக்கு நான் முன்னுரை எழுதியிருக்கிறேன். என்னுடைய ‘தெய்வங்களும் சமூகமரபுகளும்’ என்ற புத்தகத்துக்கு அவர் முன்னுரை கொடுத்திருக்கிறார். நாங்கள் இருவரும் ஒரே படகில் பயணிப்பவர்கள்” என்று கூறியுள்ளது சிந்திக்கத் தக்கது.

தொ.பவின் ஆய்வுப்போக்கைக் கீழ் கண்ட அவரின் வெளிபாட்டின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

“பாளையங்கோட்டையைப் பற்றிய இதுபோன்ற நிறைய நுணுக்கமான சான்றுகள் அழிந்துவிட்டன. அதற்குப் பிறகுதான் நான் என் ஆய்வுகளைத் தொடங்கினேன். ஹென்றி பவரின் நூல்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஒரு வியப்பான செய்தி என்னவென்றால், ஹென்றி பவர் சிந்தாமணிக்கு ஒரு உரை எழுதியிருக்கிறார். சிந்தாமணியைப் பாடம் சொல்வதற்கு தமிழ் ஆசிரியர்கள் இப்போதும் பயப்படுவார்கள். ஆனால், ஹென்றி பவர் 1865-லேயே ‘நாமகள் இலம்பகம்’ பகுதிக்கு உ.வே.சாவிற்கு முன்னர் உரை எழுதியிருக்கிறார். ஆனால், உ.வே.சா அதைச் சொல்லவேயில்லை” என்பதன் மூலம் ஆய்வாளரின் அறத்தொடு நிற்றலைச் சிந்திக்கத் தூண்டுகிறார். எச்சார்பும் இல்லாமல் தமிழ்ச் சார்ந்து வாழ்ந்த தொ.ப பழுமரம். இலக்கியப்பறவைகளின் வாழ்விடம்.

நன்றி: தமிழ் விக்கிப்பீடியா, இந்து தமிழ் நாளிதழ்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *