கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 22

0

-மேகலா இராமமூர்த்தி

இராவணனின் வீர பராக்கிரமங்களை இலைக்குடிலில் அமர்ந்திருக்கும் துறவியார் விதந்தோதுவதைக் கண்ட சீதை, அதனைச் சிறிதும் இரசிக்காது, ”ஐய! உடம்பையும் மிகையாகக் கருதும் இயல்புடைய துறவி நீர்! அப்படியிருக்க வேதங்களையும் வேதியர்களின் அருளையும் விரும்பாமல், மன்னுயிர்களைக் கொன்று புசிப்பவர்களும் பாதக வினைகளையே நன்றெனப் புரிபவர்களுமாகிய அரக்கர்தம் பதியில் வதியக் காரணம் என்ன?” என்றாள் வியப்போடு!

வேதமும் வேதியர்
     அருளும் வெஃகலா
சேதன மன்உயிர்
     தின்னும் தீவினைப்
பாதக அரக்கர்தம்
     பதியின் வைகுதற்கு
ஏது என் உடலமும் மிகை
     என்று எண்ணுவீர் (கம்ப: இராவணன் சூழ்ச்சிப் படலம் – 3467)

தீயாரைக் காண்பதுவும் தீதே திருஅற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே – தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.
(மூதுரை – 9) என்பது ஆன்றோர் சொன்ன மூதுரையாயிருக்க, இத்துறவியோ தவநெறியின் நீங்கி அவநெறியில் வாழும் அரக்கரோடு இணங்கி வாழ்ந்திருக்கின்றாரே என்ற சிந்தனை எழுந்தது சீதையின் சிந்தையில்!

தொடர்ந்து பேசியவள், “ஒன்று காட்டில் வாழும் முனிவர்களோடு நீவிர் வாழ்ந்திருக்க வேண்டும்; அல்லது நல்லவர்கள் வாழும் நாட்டிலாவது உறைந்திருக்க வேண்டும். இரண்டையும் விடுத்து அறநெறி வழுவியோரது ஊரின்கண் வாழ்ந்திருக்கின்றீர்! என்ன காரியம் செய்தீர்?!” என்று துறவியாரின் அறம்வழுவிய செயலுக்குத் தன் கண்டனத்தையும் தெரிவித்தாள்.

அவள் கருத்தை மறுத்த போலித் துறவியார், ”எம்மைப் போன்றோர்க்கு தேவர் நிருதர் என்ற வேறுபாடில்லை. சொல்லப்போனால் தேவர்களைக் காட்டிலும் நிருதர்கள் நல்லவரே” என்றார்.

சீதை அதை ஒப்புக்கொள்ளவில்லை. ”அரக்கர்கள் தீயரே! அவர்வழி சேருவோரும் நல்லாராய் இருக்கமுடியாது” என்றாள் தீர்மானமாக. அரக்கர்களைத் தொடர்ந்து புகழ்ந்தால் சீதை தன்மீது ஐயங்கொள்ள நேரும் என்றெண்ணிய இராவண சந்நியாசியார், பேச்சை மாற்ற விரும்பி, ”அம்மணி! தேவர் நாகர் மானுடர் ஆகியோர்க்கு வலிமையில் மிக்கவரான அரக்கர்வழி நிற்பதல்லாது வேறுவழி என்ன இருக்கின்றது நமக்கு?” என்றார்.

சந்நியாசியாரின் கபட உள்ளத்தை உணராத மங்கை சீதை, ”அறந்தரு வள்ளலான என் நாயகன் இராமன் பாலைவழிகளில் திரிதரும் அரக்கர்கட்கோர் முடிவுகட்டுவான்; பின்பு இவ்வுலகிற்குத் துன்பமில்லை” என்றாள்.

அரக்கரைச் சீதை இழித்துரைக்கக் கேட்ட இராவணன், ”மீனனைய கண்ணாளே! மானிடவர் அரக்கரை வெல்வர் என்று நீ உரைப்பது யானை இனத்தை இளமுயல் வெல்லும் என்பதற்கும் ஆண்சிங்கக் கூட்டத்தைச் சிறுமான் வெல்லும் என்பதற்கும் ஒப்பானது” என்றான். நெஞ்சில் துறவாது துறந்தான்போல் வஞ்சிக்கும் இராவணனின் உண்மை மனநிலை மெல்ல மெல்ல அவன் சொற்களில் வெளிப்படத் தொடங்குவதை இங்கே நாம் காணமுடிகின்றது.

சீதையும் சளைக்கவில்லை. ”குற்றமில்லாதவரே” என்று இராவண சந்நியாசியை விளித்து, ”தாங்கள் குறிப்பிட்ட சிங்க ஏற்றைப் போன்றவர் இராமன்; அரக்கர்களோ மான் கணத்தவர். இராமனால் அவ் அரக்கர்கள் சுற்றத்தோடு மடிவதையும் தேவர்கள் ஆரவாரிப்பதையும் விரைவில் காண்பீர். தருமத்தை என்றேனும் பாவம் வெல்லுமோ?” என்று கேட்டாள்.

வாள் அரி வள்ளல் சொன்ன மான் கணம் நிருதரானார்
கேளொடு மடியுமாறும் வானவர் கிளருமாறும்
நாளையே காண்டிர் அன்றே நவை இலிர் உணர்கிலீரோ
மீளஅருந் தருமம் தன்னை வெல்லுமோ பாவம் என்றாள்.
(கம்ப: இராவணன் சூழ்ச்சிப் படலம் – 3475)

போலிச் சந்நியாசியார் அரக்கர்களை வானளாவப் புகழ்ந்தபின்னரும்கூட அவர் அரக்கராக இருக்கக்கூடும் என்ற ஐயம் தூயவளான சீதைக்குத் தோன்றவில்லை. காப்பியத்தின் பாவிகப் பண்புகளில் ஒன்றான ’அறம் வெல்லும் பாவம் தோற்கும்’ என்பதனை இங்கே காப்பியத் தலைவியின் வாயிலாகக் கம்பர் அழுத்தமாகப் பதிவுசெய்வது கருதத்தக்கது.

அதுவரை சீதையின் சொற்களைப் பொறுத்திருந்த இராவணன், மானுட இராமன் அரக்கரினும் ஆற்றல் மிக்கவன் எனும் சீதையின் மொழிகளால் தன் இனத்துக்கு இழுக்கு நேர்ந்ததென்றெண்ணித் தன்மானம் ஓங்கிடப் பொங்கியெழுந்தான். ”இராவணனின் இருபது தோள்களின் வலியின்முன் சிறிய பூளைப் பூவைப்போல் இராமன் எனும் மானுடன் வீழ்வான்” என்றான் சீற்றத்தோடு.

அத்தோடு விட்டானில்லை! ”பேதைப் பெண்ணே! மேருமலையைப் பெயர்க்க வேண்டுமா? வானத்தை இடிக்க வேண்டுமா? கடல்நீரைக் கலக்க வேண்டுமா? கடலிடை தோன்றும் வடவாமுகாக்கினி எனும் தீயை அவிக்க வேண்டுமா? உலகத்தைப் பெயர்த்தெடுக்க வேண்டுமா? இவ்வரிய செயல்கள் அனைத்தையும் எளிதாகச் செய்துமுடிக்கக் கூடிய வல்லவன் இராவணன். அவனை மிக எளியன் என்றா கருதிவிட்டாய்?” என்று கேட்டான்.

மேருவைப் பறிக்க வேண்டின்
     விண்ணினை இடிக்க வேண்டின்
நீரினைக் கலக்க வேண்டின்
     நெருப்பினை அவிக்க வேண்டின்
பாரினை எடுக்க வேண்டின்
     பல வினை சில சொல் ஏழாய்
யார் எனக் கருதிச் சொன்னாய்
     இராவணற்கு அரிது என் என்றான். (கம்ப: இராவணன் சூழ்ச்சிப் படலம் – 3478)

இப்பாடல் அடிகளை,

”மலை அகழ்க்குவனே கடல் தூர்க்குவனே
வான் வீழ்க்குவனே வளி மாற்றுவன்எனத் தான்
முன்னிய துறைபோகலின்…”
(பட்டின: 270-273) என்று திருமாவளவனின் ஆற்றல்சாற்றும் பட்டினப்பாலை அடிகளோடு நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

வாக்குவாதம் முற்றிக்கொண்டே சென்றது. இருபது தோள்கள் கொண்ட இராவணனை ஆயிரம் தோள்கள் கொண்ட கார்த்தவீர்யார்ச்சுனன் சிறை வைத்ததைச் சுட்டிக்காட்டிய சீதை, அவ் ஆயிரந்தோளுடையவனோ இரு தோளுடைய பரசுராமனின் மழுவால் வெல்லப்பட்டான்; அந்தப் பேராற்றலாளனான பரசுராமனோ மானுடன் இராமனுக்குத் தோற்றான். எனவே இராவணனை இராமன் வெல்வது உறுதி என்றாள்.

அதைக் கேட்டதும் சினத்தின் உச்சிக்குச் சென்ற இராவணன் அதன்பின்னரும் தவசியாய் நடிக்கவிரும்பாமல் அச்சம்தரக்கூடிய தன் உண்மை வடிவத்தை எடுத்து நின்றான். ”இவர் உண்மையான துறவி அல்லர் போலிருக்கின்றதே” என்ற ஐயம் அப்போதுதான் சீதைக்கு எழுந்தது; உடனே நடுக்கம் கொண்டாள் அந்த நங்கை!

இராவணன் சீதையைப் பார்த்து, ”பெண்ணே! தேவர்களை வென்ற என் வீரத்தை இகழ்கின்றாய்; புழுக்களையொத்த மானிடரைப் புகழ்கின்றாய்! நீ பெண் என்பதால் பிழைத்தாய்” என்றுரைத்தான். உடனே சீற்றம் தணிந்து,
”அன்னமே! என்னைக் கண்டு நடுக்கம் கொள்ளாதே! யாரையும் கும்பிட்டு வணங்காத என் தலைகளிலுள்ள மணிமுடிபோல் உன்னை நான் இன்பமாக வைத்துத் தாங்குவேன்! அரம்பையர்கள் உனக்கு ஏவல்செய்ய, பெரும் செல்வத்தில் திளைத்து என்னோடு மகிழ்ந்திருப்பாயாக!” என்றான்.

ஒருகணம் கோபமும் மறுகணம் காமமுமாகச் சீதையிடம் இராவணனின் உள்ளம் காணும் ஊசலாட்டத்தைக் கம்ப நாடகம் இப்பாடல்களில் கவினுறக் காட்சிப்படுத்துகின்றது.

”இராமனின் அம்பில் சிக்கி உயிரை விடுவதற்குமுன் இங்கிருந்து ஓடிவிடு!” என்று சீதை இராவணனை எச்சரிக்க, ”மலைபோன்ற வடிவுகொண்ட என்மீது உன் கணவன் விடும் கணை வெறும் மலரம்பு போன்றது; அது என்னை ஏதும் செய்யாது” என்று அலட்சியமாகப் பதிலிறுத்த இராவணன், சீதையின் அடியின்கீழ் வீழ்ந்துவணங்கி என்னை ஏற்றுக்கொள் என்று அவளிடம் இறைஞ்சினான்.

தம் மனைவியரிடம் புலவிக் காலத்தில்கூடத் தலை வணங்காதவன் என்று பெருமை பெற்றிருந்த இராவணன், சீதைமீது கொண்ட கழிகாமத்தால் தன் பெருமித நிலையினின்று பெரிதும் இழிந்துபோனதற்கு இச்செயல் சான்றாகின்றது.

இராவணனின் அருவருக்கத்தக்க இச்செயலால் சீதை மேலும் திகில்கொண்டு, இராமனையும் இளவல் இலக்குவனையும் அழைத்து அரற்றவும், அவளைத் தன்னோடு தூக்கிச்செல்ல முடிவெடுத்த அத் தீயவன், தனக்கு பிரமன் இட்ட சாபத்தை நினைவுகூர்ந்து, சீதையைத் தொட்டுத் தூக்காமல் அவளைப் பன்னசாலையோடு ஒரு யோசனை தூரத்துக்கு நிலத்தொடு பெயர்த்தெடுத்தான் என்கிறார் கம்பர்.

ஆண்டு ஆயிடை தீயவன் ஆயிழையைத்
தீண்டான் அயன் மேல் உரை சிந்தைசெயா
தூண்தான் எனல் ஆம் உயர் தோள் வலியால்
கீண்டான் நிலம் யோசனை கீழொடு மேல்
. (கம்ப: இராவணன் சூழ்ச்சிப் படலம் – 3490)

பிரமனிடம் அப்படி என்ன சாபம் பெற்றான் இராவணன்?

”எந்தப் பெண்ணிடமும் அவள் விருப்பமின்றி வல்லுறவில் ஈடுபட்டால் இராவணன் அழிவான்” என்ற சாபத்தை அவனுக்குப் பிரமன் அளித்திருந்தான். அதுபோலவே குபேரனின் அளகாபுரியில் அவன் மருமகள் அரம்பையை இராவணன் பாலியல் வன்புணர்வு செய்தபோது அவள் இராவணனுக்கு இட்ட சாபம் “வலிய ஒரு பெண்ணைத் தீண்டின் அவள் கற்புக் கனலால் எரிவாய்” என்பது. வேதவதி என்ற பெண்ணிடம் இராவணன் முறைகேடாக நடக்க
முற்பட்டபோது அவளும் அவனுக்குச் சாபமளித்துத் தீயில் புகுந்தாள்.

இவையல்லாமல் அரம்பையின் கணவனான நளகூபன், இராவணனால் வன்புணர்வு செய்யப்பட்ட மற்றொரு தேவலோகப் பெண்ணான புஞ்சிகத்தலை ஆகியோரிடமும் இராவணன் சாபம் பெற்ற வரலாறுகள் உண்டு!

பிரமன் அளித்த சாபத்தை எண்ணிப்பார்த்த இராவணன், சீதையைத் தொடாமல் பன்னசாலையோடு பெயர்த்தெடுத்துச் சென்றான் என்று கம்பர் காப்பியம் பேசுகின்றது. சீதையை இராவணன் தொட்டுத் தூக்காமல் குடிலோடு எடுத்துச் சென்றான் என்று கம்பர் எழுதியமைக்கு இதைவிடவும் முக்கியக் காரணம் மணமான, கற்பிற் சிறந்த பெண்ணொருத்தியை அந்நிய ஆடவன் தொட்டுத் தூக்குவது அப்பெண்ணுக்கும் தமிழ் மரபுக்கும் இழுக்கு என்பதே.

ஆனால் வான்மீகம் இராவணன் சீதையைத் தொட்டுத் தூக்கிச்சென்றான் என்றே பேசுகின்றது. இராவணன் சீதையைத் தொட்டால் இறந்துபோவான் என்ற சாபமிருக்கும்போது அவன் சீதையை வலிந்து பற்றியபோதும் ஏன் இறக்கவில்லை என்ற வினாவைச் சிலர் எழுப்புவதுண்டு!

பெண்ணைத் தொட்டாலே இறந்துபோவான் என்பதன்று அவன் பெற்ற சாபம்! பெண்ணிடம் வல்லுறவில் அவள் விருப்பமின்றி ஈடுபட்டால் இறந்துபோவான் என்பதே அவன்பெற்ற சாபம். தீண்டுதல், தொடுதல் என்பவை வன்புணர்வைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கும் நாகரிகச் சொற்கள் என்பதை ஓர்க!

சீதையைக் கடத்திச் சென்று அசோகவனத்தில் சிறைவைத்த பின்பும் இராவணன் அவளிடம் தவறாக நடந்துகொள்ளாமல் பல்வேறு உபாயங்களால் அவளை வயப்படுத்த முயன்றமைக்கு(ம்) அவன் பெற்ற சாபமே காரணம். மற்றபடி சீதையின் சம்மதத்தைப் பெற்ற பின்பே அவளைத் தொடவேண்டும் என்று கருதிய உத்தமனோ ஒழுக்கசீலனோ அல்லன் இலங்கையர்கோன்!

[தொடரும்]

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

  1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
  2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
  3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
  4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *