அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

புகைப்படக் கலைஞர் ஐயப்பன் கிருஷ்ணன் எடுத்த இப்படத்தை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்தில் இருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (20.12.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “படக்கவிதைப் போட்டி – 289

  1. வண்ண வண்ண துணிகள்
    வகை வகையான வடிவத்தில்
    வருட முழுக்க தைத்தாலும்
    ஒட்டுப் போட்ட சட்டைதான் இவனுக்கு

    ஓயாமல் உருளும்
    தையல் இயந்திரம் போல
    உருளுகிறது இவனது வாழ்வும்
    இயந்திரமாய்….

    ஊரார் உடுப்பை தைத்தால் தான்
    உலை பொங்கும் இவன் வீட்டில்
    தைத்து முடித்த கவுனில்
    தெரியும் சின்ன மகளின் முகம்

    தீபாவளி, கிறிஸ்துமஸ் பொங்கல்
    குறைவில்லை பண்டிகைகளுக்கு
    ஊருக்கு வரும் பண்டிகை
    இவன் வீட்டுக்கு வருவது எப்போதோ

    தைத்து விட்டான் மனதின் வாயை
    அடக்கி விட்டான் ஆசாபாசத்தை
    இவனைப் போல எத்தனை பேரோ
    கண்ணன் வழி நிற்கும் கர்மயோகிகள்

  2. தனிமையில் தையல்…

    பாடு பட்டுப் பகலிரவாய்ப்
    பழைய எந்திரம் மிதித்தேதான்
    நாடு போற்றப் பிள்ளைகளை
    நன்றாய்ப் படிக்க வைத்தவர்தான்,
    ஓடி விட்ட பிள்ளைகளால்
    ஒருத்த ராக உழைக்கின்றார்
    வாடும் வயிற்றுக் குணவிட்டு
    வாழும் காலம் ஓட்டிடவே…!

    செண்பக ஜெகதீசன்…

  3. தையலுடையால் தையலை
    தையல் இமையால் காதலை
    பரிமாற்றம் செய்துக் கொள்ள
    இடையிடையே தையல் போட்டு
    மிடுக்கு உடைத் தைய்ப்பவரோ

    ஆண் உடையில் கம்பீரமோ
    அழகு இதென மனக்கர்வமோ
    மிடுக்கு உடையில் நீ நேர்த்தியோ
    இல்லை மிதமான உன் நடையழகோ

    உம் பிழைப்போ கால் சக்கரம் ஓட்டி
    உடையதனை நீ உருவாக்கிடும்
    விந்தைதான் என் சொல்வேன்
    வீதியோர தையல் மன்னவனே

    சாதிமத நல்லிணக்ககம்
    சாதிப்பதன் காரணத்தை
    நம் தையல் இன மக்கள்
    நயமுடனே கடைப்பிடிப்பர்
    அனைத்து மத ஆடை அமைப்பில்

    வகைவகையாய் ஆடைகளை
    வடிவமைத்துக் கொடுக்கின்ற
    விந்தைதான் என் சொல்வேன்
    வியந்து நின்று ரசிக்கின்றேன்

    ஆடை பாதி ஆள் பாதி
    எழில் தோற்றமதைக் கொண்டுவர
    விதவிதமாய் வடிவமைப்பீர்
    வியத்தகு சாதனையாய் வாழ்வையே வெல்வீர்!!

    சுதா மாதவன்

  4. பிடிகொம்பு

    வெட்டி ஒட்டி கச்சிதமாய் இணைத்து
    தட்டிச் செதுக்கும் சிற்பியைப் போல்
    கட்டி அழகு பார்க்க வைக்கும்
    ஆடைகள் தைத்துக்கொள்ள யாருமில்லை….

    பல்பொருள் அங்காடிகளால் படுத்துவிட்டப்
    பக்கத்து மளிகைக்கடை…
    இணையவழி வணிகத்தால் அழிந்துவரும்
    சிறுவணிகக் கூட்டம்…
    துரித உணவைப் போல் கேட்டதும்
    துரிதமாய்க் கிட்டும் தைத்த ஆடைகள்…
    வசதியற்றோரின் வாழ்வாதாரம்
    கிழிந்துப்போனது நிறுவணப்படுத்தலால்…

    சுகத்தைக் கெடுக்கும் நுண்ணுயிரி
    முகத்தை மூடும் கவசம் தைத்து
    பசியைத் தீர்க்க வழிசெய்த நிலைமை என
    அடித்துச் செல்லும் காலச்சுழற்சி வெள்ளத்தில்
    பிடிகொம்புகள் சில கிட்டும் அவ்வப்போது!!!

  5. துண்டு துணிகளை துள்ளியமாய் தைத்து
    தொண்டு செய்யும் தோழா-நீ உழைத்துக் கூலி
    கொண்டு சென்றால் தான் உன் வீட்டினர்
    உண்டு வாழ உலை கொதிக்கும்

    கால் வலிக்க கவனமாய்
    கால் மிதியை நீ மீதித்தால் தான்
    காலாடை மேலாடை எல்லாம்
    கலை ஆடையாக உருமாறும்

    மூக்கு கண்ணாடி வழி
    நோக்கும் விழிப் பார்வையால் நீ
    கோர்க்கும் நூல் இழைகளின்
    சேர்கையால் பலர் மானம் காத்தாய்

    சக்கரம் சுழற்றுவதில்
    சக்கரவர்த்தி நீ தான்
    சக்தி கொண்ட கால்கள்
    சத்தியமாய் உனை வாழ்விக்கும்

    கத்திமேல் நடக்கும் வாழ்கை பயணத்தில்
    கத்திரிக்கோலும் காது ஊசியுமே உனை
    கத்தரிவெய்யலாய் தாக்கும் வறுமையிலிருந்து
    காத்தருளும் கடவுளின் தூதுவர்கள்

    வண்ண பொடிகளின் குவியல் போல்
    எண்ணம் பொங்கட்டும்- சின்ன சின்ன உழைப்பால்
    வின்னையும் தொடலாம் -உழைப்பே உயர்வின் வழி என
    எண்ணி துணிக கருமம் இனி எல்லாம் இன்பமே

    யாழ். பாஸ்கரன்
    ஓலப்பாளையம்
    கரூர்- 639136
    9789739679
    basgee@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.