Category: கட்டுரைகள்

கட்டுரைகள்

  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 40

    – நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்

                       40.. கல்வி

    குறள் 391:

    கற்க கசடறக் கற்பவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக.

    கத்துக்கிட வேண்டியத தப்பில்லாம கத்துக்கிடணும். பொறவு என்ன கத்துக்கிட்டோமோ அதுபடி நடக்கணும்.

    குறள் 392:

    எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங்
    கண்ணென்ப வாழும் உயிர்க்கு

    எண்ணும் , எழுத்தும் வாழுத உசிருங்களுக்கு இருக்க ரெண்டு கண்ணுங்க .(அறிவுக் கண்கள்).

    குறள் 393:

    கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
    புண்ணுடையர் கல்லா தவர்

    கண் இருக்கு னு சொல்லுதவங்க எல்லாம் படிப்பு படிச்சவங்கதான்.. படிக்காதவங்களுக்கு இருக்க கண்ண மொகத்துல இருக்க ரெண்டு புண் னு நெனச்சிக்கிடணும்.

    குறள் 394:

    உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
    அனைத்தே புலவர் தொழில்

    மத்தவங்க கூட மகிழ்ச்சியா சேந்து பழகி பொறவு பிரியும்போது இனி எப்பம் பாப்போம் னு ஏங்குத அளவு மனம் கலங்குதது அறிவாளிங்களோட செயல்.

    குறள் 395:

    உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
    கடையரே கல்லா தவர்

    பணக்காரங்க முன்ன ஏழ நிக்கது போல அறிவாளிங்க முன்ன எப்பம் கெடைக்கும் னு ஏங்கி நின்னு படிப்பு கத்துக்கிடுதவங்க தான் ஒசந்தவங்க அப்டி செய்ய வெக்கப்பட்டு நிக்கவங்க படிக்காதவங்க.

    குறள் 396:

    தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்
    கற்றனைத் தூறும் அறிவு.

    தோண்டத்தோண்ட ஊத்துத் தண்ணி ஊறுதது போல படிக்கப் படிக்க அறிவு பெருகிக்கிட்டே போவும்.

    குறள் 397:

    யாதானும் டாடாமால் ஊராமால் என்னொருவன்
    சாந்துணையுங் கல்லாத வாறு

    படிச்சவனுக்கு எல்லா நாடும் எல்லா ஊரும் அவனுக்கு சொந்தம் போலதான். பொறவு சாவுத வரைக்கும் படிக்காம நேரம்போக்குதது எதனால.

    குறள் 398:

    ஒருமைக்கண் தான்னற்ற கல்வி ஒருவற்
    கெழுமையும் ஏமாப் புடைத்து

    ஒரு பொறப்புல படிச்ச படிப்பு அப்பம் மட்டுமில்லாம அவனுக்கு ஏழு தலமுறைக்கும் ஒதவுத தன்ம கொண்டது.

    குறள் 399:

    தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
    காமுறுவர் கற்றறிந் தார்

    தான் சந்தோசப் படுததுக்கு காரணமா இருக்க படிப்பால ஒலகமும் சந்தோசப் படும் னு தெரிஞ்சுக்கிட்டு படிச்ச அறிவாளிங்க அதவிட அதிகமா படிக்க விரும்புவாங்க.

    குறள் 400:

    கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு
    மாடல்ல மற்றை யவை

    ஒருத்தனுக்கு படிப்பு தான் அழியாத சொத்து. மத்ததெல்லாம் ஒசந்த சொத்து ஆவாது.

    (அடுத்தாப்லையும் வரும்….

    Share
  • (Peer reviewed)  சங்க இலக்கியத்தில் மண்ணறிவியல்

    (Peer reviewed) சங்க இலக்கியத்தில் மண்ணறிவியல்

    த.திருமுருகன்
    முனைவர் பட்ட ஆய்வாளர்
    தமிழ்த் துறை
    அழகப்பா பல்கலைக்கழகம்
    காரைக்குடி – 630003
    thirukutty5593@gmail.com

    சங்க இலக்கியத்தில் மண்ணறிவியல்

    சங்ககாலத் தமிழகம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று நிலப் பகுப்பைப் பெற்றிருந்ததைத் தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் குறிப்பிடுகின்றன. இந்நில அமைப்புகளை நிறம், குணம், பயன் அடிப்படையில் ‘புலம்’ என்ற சொல்லால் குறிப்பிட்டமையைச் சங்க இலக்கியங்கள் சுட்டுகின்றன. நிலமும் புலமும் ஒன்றா அல்லது வேறுபட்டவையா என்ற ஐயம் பொதுவாகத் தோன்றும். இவ்வையப்பாட்டை நீக்கும் பொருட்டு நிலம், புலம் பற்றிய வரையறைகளைக் காண்பதும், அவற்றுக்குள்ள வேற்றுமைகளை விளக்குவதும், சங்க கால மண் வகைகளைத் தற்கால மண்வகைகளோடு ஒப்பிட்டுக் காண்பதும், இந்நில, புலத்தில் இடம்பெறும் தாவரங்கள், விலங்குகள், தொழில்கள் பற்றிக் காண்பதும் இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    நிலம், புலம் வரையறை

    புலம் என்பதற்கு “வயல், மேட்டு நிலம், இடம், திக்கு, நுண்மை, அறிவு, திசை, வேகம்” என்று சங்க இலக்கியப் பொருட்களஞ்சியமும் (பக்.70-79), நிலம் என்பதற்கு, “பூமி, இடம், தேசம், தரை, மண், உலகு” என்று நா.கதிரைவேற்பிள்ளை அகராதியும் (ப.93) குறிப்பிடுகின்றன. புலமும் நிலமும் ஒரே பொருளைக் குறிப்பன அல்ல. இதனைத் தொல்காப்பியம் “நிலம் பெயர்ந்து உரைத்தல்” (தொல்.பொருள்.இளம்பூரணர் உரை, நூற்.167) என்று குறிப்பிடுகிறது. அதாவது தலைவன் வேறொரு நாட்டுக்கு நிலம் பெயர்ந்து செல்லுதல் என்று நிலத்தை மட்டும் குறிப்பிட்டுள்ளார்.

    இவர் புலம் பற்றிக் குறிப்பிடவில்லை. சங்க இலக்கியத்தில்தான் முதன்முதலாகப் புலம் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. நிலம் என்பது வாழும் இடத்தைக் குறிப்பதாகத் தொல்காப்பியமும், புலம் என்பது வாழும் இடத்திற்கு வெளியேயுள்ள இடத்தைக் குறிப்பதாகச் சங்க இலக்கியங்களும் சுட்டுவதை உரைகளின் வழி அறிய முடிகிறது. நில புலங்கள் என்றொரு சொல் இன்று வரையிலும் வருவாய்த் துறைப் பதிவேட்டில் வழக்கிலுள்ளது.

    புலம் பற்றி, “புன்புல மயக்கத்து விளைந்தன தினையே” (ஐங்குறுநூறு260), “வன்புலத்துப் பகடு விட்டு” (புறநானூறு.395), “மென்புலத்து வயல் உழுவர்” (புறநானூறு.395) என்ற இப்பாடலடிகள் சுட்டுகின்றன. புன்புலமான குறிஞ்சி நிலத்தில் தினைப்பயிர் விதைக்கப்பட்ட செய்தியும், வன்புல முல்லை நிலத்தில் எருதுகள் மேய்கின்ற செய்தியும், மென்புல மருத நிலத்தில் உழவர் பயன்படுத்தும் மென்மையான நிலச் செய்தியும் பற்றிச் சங்க இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன. இச்சங்கப் பாடல்கள், மக்கள் வாழும் இடத்தின் வெளிப்புறப் பகுதியில் தினை பயிரிடும் இடத்தையும், விலங்குகள் வாழும் இடத்தையும் கால்நடை மேய்ச்சல் இடத்தையும் மக்கள் வேளாண்மைக்கு உழவு செய்யும் இடத்தையும் புலமென்று சுட்டுகின்றன. இவற்றின் வழி புலம் என்பது மக்கள் வாழும் இடத்தின் புறத்தேயுள்ள வயல் வெளிகள் என்பதனை அறிய முடிகிறது.

    மக்கள் வாழும் இடத்தைவிட்டு மற்றோர் இடத்தை வெளிப் புழக்கத்திற்காகவும், பயணத்திற்காகவும் பயன்படுத்துவதனால் இவற்றிற்குப் புலம் என்று சான்றோர்கள் சுட்டியிருக்க வேண்டும். சங்க காலத்தில் குறிப்பிட்டுள்ள புலம் என்ற பெயர் தற்காலத்தில் ஊர்ப்பெயர்களாகத் தாழிபுலம் (ஓர் ஊரில் இடுகாட்டைக் குறிப்பிடும் பகுதி), செட்டிபுலம் (செட்டியார்கள் வாழும் பகுதி), மாரியப்புலம், கோயிலுப்புலம், பள்ளம்புலம் போன்றவை அமைந்துள்ளன. இவை பெரும்பாலும் ஊரின்  புறப்பகுதியில் உள்ள குடியிருப்புகளாக அமைகின்றன. இவற்றை நோக்கும்போது புலம் என்பது ஊரின் வெளிப்பகுதியையே சுட்டுகின்றது. இதனாலேயே தற்காலத்தில் புலம் பெயர்ந்தோர் என்ற சொல் வந்திருக்க வேண்டும் என்று எண்ண இடமளிக்கிறது. இதனை, “தென்புலத்தார் தெய்வம்” (இளங்குமரனார் உரை, திருக்குறள்.43) என்ற இத்திருக்குறளுக்குப் புங்கையூரன், “புலம் என்பது திசையைக் காட்டுகின்றது. எனவே வெவ்வேறு திசைகளுக்குப் போனவர்களைப் புலம்பெயர்ந்தவர்கள் என்று கூறலாம்” (புங்கையூரன், யாழ் இணையக் கட்டுரை, நவம்பர் 14, 2011) என்று தன் இணையக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

    தற்கால மண் வகைகள்

    மனிதர்கள் தாவரங்கள், உயிரினங்கள் போன்றவற்றைச் சார்ந்தே வாழ்கின்றனர். நிலத்தில் வெவ்வேறு மண் அடுக்குகள் காணப்படுகின்றன. மண்ணமைவில் பௌதிக, மற்றும் இரசாயன மாற்றங்கள் ஏற்படும் என்பது அறிஞர்களின் கருத்தாகும். இவற்றின் அடிப்படையில் மனிதன் வேளாண்மையைத் தொடங்கினான். தற்கால வேளாண்மைக்குரிய அனைத்து மண்வகைகளும் தமிழ்நாட்டில் உள்ளதென்று வேளாண் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். செம்மண், வண்டல் மண், கரிசல் மண், சரளை மண், மணற்சாரி மண், உவர்மண் மற்றும் களர்மண் போன்றவை தற்கால மண்வகைகள் ஆகும்.

    பாறைகளிலிருந்து தோன்றிய மண், பாறைகளின் தன்மைகளிலிருந்து மிகவும் வேறுபட்டதென்று தற்கால ஆய்வின் மூலம் விளக்கப்பட்டுள்ளது. தற்காலத்தில் மண்ணைப் பரிசோதனை செய்து அதன் வளத்தினைக் கண்டறிந்து வேளாண்மை செய்கின்றனர். சங்க காலத்தில் நிலத்தின் இயற்கைத் தன்மையையும், விளையும் குணத்தையும், நிறத்தையும் அறிந்து வன்புலம் (புறநானூறு.395), புன்புலம் (குறுந்தொகை.383), மென்புலம் (புறநானூறு.395), இடைப்புலம் (புறநானூறு.288), சேட்புலம் (புறநானூறு.326), செம்புலம் (குறுந்தொகை.40), மெல்லம்புலம் (ஐங்குறுநூறு.120), கானலம்புலம் (ஐங்குறுநூறு.152,154), உவர்நிலம் (அகநானூறு.309), செம்மணல் (அகநானூறு.345), செம்புலப்புறவு (அகநானூறு.221), மென்பால் (புறநானூறு.384), வன்பால் (புறநானூறு.384), சாய்அறல் (பதிற்றுப்பத்து.74) என்று பெயரிட்டு வழங்கியுள்ளனர்.

    இப்புல வகைகள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகை நிலங்களுக்குள் அடங்கும். இதனை மகிழேந்தி, “வன்னிலங்களாகக் குறிஞ்சி, முல்லை ஆகியனவும் மென்னிலங்களாகப் பிற மூன்றும் காணப்படுகின்றன” (மகிழேந்தி, சுற்றுச் சூழலியல் நோக்கில் சங்கத் தமிழகம், ப.160) என்பர். இதனை, “வன்புலம் தழீஇய மென்பால் தோறும்” (பதிற்றுப்பத்து.75:8) என்ற பாடலடி விளக்கும். தற்கால வேளாண் அறிஞர்களின் கண்டுபிடிப்பை அன்றே தமிழன் எவ்விதப் பரிசோதனைக் கருவியுமின்றிக் கண்டுபிடித்துள்ளான் என்பதை மேற்கண்ட சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.

    சங்க இலக்கியப் புல வகைகளும், தற்கால மண்ணமைவும்

    மக்கள் வாழும் பகுதியைத் தமிழர்கள் ஐவகை நிலமாகக் குறிப்பிடுவதை, ”காடுறை உலகம், மைவரை உலகம், தீம்புனல் உலகம், பெருமணல் உலகம்” (தொல்காப்பியம் பொருளதிகாரம், இளம்பூரணர் உரை, நூற்.951) என்ற நூற்பாவில் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று குறிப்பிடுகிறார். இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் பாலை நிலத்திற்கு விளக்கம் தந்துள்ளார். இதனை, “முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து … பாலை என்பதோர் படிவம் கொள்ளும்” (அடியார்க்கு நல்லார் உரை, சிலப்பதிகாரம் – காடுகாண் காதை 64-66) என்று குறிப்பிடுகிறார். இவ்வகை நிலங்கள் பெரும் நிலப்பரப்பினை உடையன. இந்நிலங்களில் உள்ள மண்ணின் இயல்புகளையும் தன்மைகளையும் அறிந்து நிலங்களின் உட்பிரிவாக மென்புலம், வன்புலம், இடைப் புலம், புன்புலம், சேட்புலம், செம்புலம், உவர்நிலம் என்று சங்க இலக்கியப் புலவர்களால் வைக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.

    தற்காலத்தில், “நஞ்சை நிலம் – மென்பால் (விளையும் நிலம்) என்றும், புன்செய் நிலம் – வன்புலம் (விளையாத நிலம்) என்றும், கரம்பை நிலம் – வன்னிலம்” என்று கிராம நிர்வாக அலுவலகப் பதிவேட்டில் (ப.55) இடம் பெற்றுள்ளது. “வன்னிலம் என்பது வன்புலத்திலுள்ள நீர் வறண்டு போவதால் அவற்றைப் பாழ்நிலம் என்றும், கரம்பை நிலமென்றும்” என்று பவானந்தன் தமிழ்ச் சொல்லகராதி (ப.414,114) குறிப்பிடுகிறது.

    செம்மண்

    சிவப்பு நிறமாக இருப்பதால் இதற்குச் செம்மண் எனச் சான்றோர் பெயரிட்டுள்ளனர். சங்க இலக்கியங்களிலும் தற்காலத்திலும் செம்மண் என்றே வழங்கப்படுகிறது. இம்மண் புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், பெரம்பலூர், அரியலூர் போன்ற மாவட்டங்களில் பரவிக் காணப்படுகிறது. செம்மண் என்ற மண் வகை, செவ்வாய்க் கோளிலும் இருப்பதாகத் தற்கால விண்வெளி ஆராய்ச்சிகள் புலப்படுத்துகின்றன.

    “செம்மண் வகைகள், அமிலத்தன்மையுடைய கருங்கல் பாறைகள், பழங்காலப் பாறைகள், உருமாறிய பாறைகள் போன்றவை காலப்போக்கில் சிதறுண்டு நொறுங்கியதால் உண்டானவை ஆகும். மலைச் சரிவுகளில் இருந்து மழை நீரினாலும், புவி ஈர்ப்பு விசையினாலும் இவை கீழே கொண்டு வரப்பட்டு மலை அடிவாரங்களில் பரவிக் கிடக்கின்றன. இவற்றில் இரும்பு ஆக்ஸைடு அதிக அளவில் உள்ளதால் இம்மண் சிவப்பு நிறத்துடன் காணப்படுகின்றது. இவை பொதுவாக இளகிய இயல்புடையது ஆகும்” என்று தமிழ் விக்கிப்பீடியா (நாள்.10.02.2014) விளக்குகிறது. தற்காலத்தில் புவியியல் ஆய்வாளர்கள் குறிப்பிடும் செம்மண், சங்க இலக்கியங்களில் செம்புலம், செம்புலப்புறவு, செம்மணல், செந்நிலப்புறவு, செந்நிலம், செந்நிலன் என்று அழைக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.

    செம்புலம்

    “செம்புலப் பெயல்நீர் போல” (குறுந்தொகை.40) என்ற பாடலடியில், குறிஞ்சி நிலத்தில் செம்மண் இருப்பதையும், இம்மண்ணைச் செம்புலம் என்று குறிப்பிடுவதையும் அறிய முடிகிறது. “செம்புல மருங்கில்” (அகநானூறு.389) என்ற பாடல், பாலை நிலத்தில் சிவந்த நிறமான செம்மண் இருப்பதாகச் சுட்டுகிறது.

    செந்நிலப்புறவு

    செம்மண் முல்லை நிலத்தில் அமைவதனை, “வம்பு விரிந்தன்ன செம்புலப் புறவில்” (நற்றிணை.221), “செந்நிலப் புறவின் புன்மயிர்ப் புரவை” (நற்றிணை.321) என்ற இப்பாடலடிகளில் சரக்கொன்றைப் பூக்கள் பூப்பதையும் செம்மண் காடுகள் இருந்தமையையும், இந்நிலத்தில் ஆயர்களின் ஆடுகள் கட்டப்பட்டிருந்த செய்தியையும் அறிய முடிகிறது. முல்லை நிலச் செம்மண்ணில், வள்ளிக்கொடியும் பெய்த மழையால் வளைந்த கதிரையுடைய வரகுகள் விளைந்திருந்ததையும் (மலைபடுகடாம்.97-100) சுட்டுகிறது. செம்மண் அரக்கைப் பரப்பி வைத்தாற்போல சிவந்த நிலத்தில் இருந்ததை, “அரக்குவிரித் தன்ன செந்நில மருங்கின்” (மலைபடுகடாம்.507-508) என்ற அடி உணர்த்துகின்றது.

    முல்லை நில செம்புலக் காட்டில் செவ்வரக்கும், காயாம் பூக்களும் இந்திர கோபப் பூச்சிகளும் (அகநானூறு.14), உடும்பு (மலைபடுகடாம்.507), மான்கள் (நற்றிணை.97) இருப்பதையும், பாலை நிலச் செம்மண்ணில் பிடவ மலர்களும் (அகநானூறு.79), தேக்கு, இருப்பை மரங்களும் (அகநானூறு.225), யானைகள் (அகநானூறு.227)  இருப்பதையும் அறிய முடிகிறது.

    செம்மணல்

    பாலை நிலத்திலுள்ள செம்மண்ணில் வேங்கை மரத்தின் மலர்கள் பரவியிருந்தன எனபதனை, “செம்மணற் சிறுநெறி கம்மென வரிப்ப” (அகநானூறு.345) என்ற அடி விளக்குகிறது. செம்புலம் என்ற சிவந்த மண் முல்லை, குறிஞ்சி, பாலை போன்ற நிலங்களில் அதிகம் இருப்பதைச் சங்க இலக்கியங்கள் சுட்டுகின்றன. செம்மண் இருக்கும் இடத்தைச் செம்புலமென்றும், அந்நிலத்தில் காணப்படும் மலர்கள், விலங்குகள், பூச்சிகள், மரங்கள் மற்றும் நிறங்கள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. இம்மண் வேளாண்மைக்கு மிகவும் ஏற்றதாகவும், தழைச்சத்து, நார்ச்சத்து, கனிமங்கள் உடையதாக இருப்பதையும் தற்கால ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

    வண்டல் மண்

    இம்மண்ணில் நெல், வாழை, கரும்பு, கோதுமை போன்ற பயிர்களும், ஊடு பயிராகச் சோளம், உளுந்து, பாசிப்பயிறு, வெற்றிலை போன்ற பயிர்களும் நன்கு விளையும். பெரும்பாலும் மருத நிலம் விளைநிலமாகக் கருதப்படுகிறது. நீர்ப்பிடிப்புப் பகுதியான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, பெரம்பலூர், கடலூர், கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இம்மண் பரவிக் காணப்படுகிறது.

    வண்டல் மண்ணைச் சங்க இலக்கியத்தில் மென்புலம், மென்பால், சேட்புலம், வண்டல் என்ற பெயரில் குறிப்பிட்டுள்ளனர். மருத நிலத்து உழவர் பயன்படுத்தும் நிலமாக மென்புலம் கருதப்படுவதை “மென்புலத்து வயல் உழவர்” (புறநானூறு.395) என்ற பாடலடி விளக்குகிறது. மென்பால் என்பது மென்மையான நீரினையுடைய நிலம் ஆகும். இந்நீரையுடைய வயல்களில் நாரை வாழ்வதைப் பற்றிப் புறநானூறு 384ஆம் பாடல் குறிப்பிடுகிறது.

    மருத நிலத்தில் வேளாண்மை செய்வதற்காகக் கண்மாய் நீர் வரும் மடை அருகிலுள்ள சேற்று நிலத்தைச் சேட்புலம் என்று குறிப்பிடப்படுகிறது. இச்சேற்று நீர் வற்றாமல் இருக்கும். இந்நிலத்தில் குறுந்தாள் உடும்பு இருந்ததைப் புறநானூறு 326ஆம் பாடல் குறிப்பிடுகிறது. வண்டல் மண்ணில் பாவை செய்த செய்தியையும், தலைவன் ஊரைச் சிறப்பிக்கும் நிலையிலும் வண்டல் மண் குறிப்பிடப்படுகிறது. இதனை, “வண்டற் பாவை வௌவலின்” (கலித்தொகை.29:5) என்றும், “மென்புல வைப்பின் நாடுகிழ வோனே” (ஐங்குறுநூறு.407:4) என்றும் இப்பாடலடிகள் உணர்த்துகின்றன.

    கரிசல் மண்

    கரிசல் மண், எரிமலைக் குழம்பு லாவா பூமியிலிருந்து வெளிவந்து படிதலால் ஏற்படுகிறது. இம்மண் பெரும்பாலும் தண்ணீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. கரிசல் மண்ணைச் சங்க இலக்கியத்தில் வன்புலம், வன்பால், கரம்பை, வன்னிலம் என்ற பெயரில் சான்றோர்கள் அழைத்துள்ளனர். வன்புலம் என்பது முல்லை நிலத்தில் அமைந்த வலிமையான புலம் என்றும், இந்நிலத்தில் இடையர்கள் ஆடு மேய்த்ததையும், உடும்பு, தவளை, ஈசல் வாழும் மண்ணையுடைய செய்தியையும் புறநானூறு 395ஆம் பாடல் விளக்குகிறது.

    முல்லை நிலக் கரிசல் மண்ணில் செம்பூழ்ப் பறவைகளும் (ஐங்குறுநூறு.469), நடுகல் நிரம்பிய காடுகளும், நெல்லி மரங்களும் (புறநானூறு.314), மருத நிலக் கரிசல் மண்ணில் குறும்பூழ்ப் பறவையும் கடம்ப மலரும் (பெரும்பாணாற்றுப்படை.77), முயல்களும் (புறநானூறு.322) காணப்படுகின்றன. மேலும் வன்புலத்தைக் கரம்பை என்று குறிப்பிடுவதையும், இப்புலத்தில் வௌ்வரகு, செந்நெல் விளைவதையும் “வௌ்வரகு உழுத கொள்ளுடைக் கரம்பைச் செந்நெல்” (பதிற்றுப்பத்து.75) என்ற பாடலடிகள் விளக்குகின்றன. வன்புலத்தை வன்னிலம் என்று குறிப்பிடுவதை, ‘‘வன்னிலங்கள் துனிபடச் சென்று’’ (அகநானூறு.79) என்ற பாடலடி குறிப்பிடுகிறது. இப்புலம், கற்கள் நிறைந்த நீண்ட காடுகளால் ஆனது.

    சரளை மண்

    இம்மண் பாறைப் பரல்களாலான பீட பூமியாகும். மலைப்பாங்கான பிரதேசத்தில் இம்மண் காணப்படும். சோளம், கம்பு, தினை வகைகள் பயிரிடப்படுகிறன. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, நீலகிரி, திருப்பூர், கோவை மாவட்டங்களில் சரளை மண் (துருகல் மண்) பரவிக் காணப்படுகிறது. இம்மண்ணைச் சங்க இலக்கியம் புன்புலம், இடைப்புலம் என்று குறிப்பிடுகின்றது. இம்மண்ணின் பெயரைப் பண்டைய மக்கள் முறைப்படக் குறிப்பதை, “புன்புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக்” (குறுந்தொகை.202) என்று குறுந்தொகையும், புன்செய் நிலத்தில் நெருஞ்சி மலர் பூத்திருப்பதையும், தினைப் பயிர்களை யானைகள் மேய்ந்ததையும்  (ஐங்குறுநூறு.260) உழவர்கள் காளைகளைப் பூட்டிக் கலப்பையால் உழவு செய்யும் திண்மையான நிலம் என்பதையும் (பரிபாடல்.58:15) சங்க இலக்கியங்கள் விளக்குகின்றன.

    முல்லை நிலமான புன்புலத்தில் முயல்களும் (ஐங்குறுநூறு.421), வேல மரங்கள் (பரிபாடல்.58) இருப்பதையும், இந்நிலம் பொலிவற்று இருந்ததையும் இவ்விலக்கியங்கள் சுட்டுகின்றன. இப்புலத்தில் நெல் விளையாது. வரகு, தினை போன்றவை விளைந்தன என்ற செய்தியை, “புறவு சேர்ந்திருந்த, புன்புலச் சீறூர் நெல் விளையாதே, வரகும் தினையும் உள்ளவை எல்லாம்” (புறநானூறு.328) என்ற பாடலடிகள் குறிப்பிடுகின்றன.

    உவர்(களர்)மண், மணற்சாரிமண்

    உவர்மண், பாலை மண் என்று அழைக்கப்படுகிறது. இந்நிலத்தில் உப்பு எடுத்தல், மீன் உணக்கல், மீன் வலை உலர்த்தல் போன்ற தொழில்கள் நடைபெறுகின்றன. இம்மண் வகையைச் சங்க இலக்கியம் மெல்லம்புலம், கானலம் புலம், உவர்நிலம் என்று குறிப்பிடுகிறது. உவர்மண் நெய்தல் நில மண்ணாகும். நெய்தல் நிலத்திலுள்ள இம்மண்ணை, “மெல்லம் புலம்பன் வந்த மாறே” (ஐங்குறுநூறு.120) என்ற பாடலடி விளக்கும். மெய்ப்புலம் என்பது நெய்தல் நிலத்திலுள்ள ஊரைக் குறிக்கும். இந்நிலம் உவர் நிலமென்றும், சேண்புலம் என்றும் குறிப்பிடுவதை, “உவர்விளை உப்பின் கொள்ளை சாற்றி, அதன்படு பூழிய சேண்புலம் படரும்” (அகநானூறு.309) என்ற இப்பாடலடிகள் உணர்த்துகின்றன.

    நெய்தல் நிலத்திற்கும் மருத நிலத்திற்கும் இடையே காணப்படும் கருப்பு நிறமான மணலைச் ‘சாய் அறல்’ (பதிற்று.74) என்று குறிப்பிட்டுள்ளனர். இதன்மூலம்  நெய்தல் நிலத்திற்கும் மருத நிலத்திற்கும் இடையே கருநிற மணல் இருப்பதை அறிய முடிகிறது. சங்க இலக்கியத்தில் குறிப்பிட்ட மண்ணின் அமைப்பை, “வண்டல் மருத நிலத்து ஆற்றுப் படுகைகளிலும், செம்புறை குறிஞ்சி நிலத்திலும் மணற்பாங்கானது நெய்தல் நிலத்திலும், செம்மண் முல்லை நிலத்திலும் காணப்படுகின்றன. கரிசல் மண் மிகுதியான அளவு நன்புலத்திலும், சிறுபான்மை புன்புலத்திலும் காணப்படுகின்றது” (ப.118) என்று ந.வீ.செயராமன், தமிழ் இலக்கியத்தில் வேளாண்மை அறிவியல் என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

    தொகுப்புரை

    சங்ககால மக்கள் மண்ணின் தன்மைக்கும் நிறத்திற்கும் ஏற்றவாறு பெயரிட்டுள்ளதைச் சங்க இலக்கியங்கள் தெளிவுபடுத்துகின்றன. ஐவகை நிலங்களில் ஆறு வகையான புலங்கள் காணப்படுகின்றன. செம்புலம், வன்புலம், மென்புலம், புன்புலம், மெல்லம் புலம் போன்றவை குறிஞ்சி நிலத்தில் இடம்பெற்றுள்ளன.

    குறிப்பிட்ட வேளாண் பயிர்கள், விலங்குகள் பூக்கள் வேற்று நிலத்தில் பெரும்பான்மையாக வளர்வதில்லை. இவற்றை அறிந்த முன்னோர்கள் இந்நிலத்தில் இன்னதுதான் வளரும் என்பதற்கு ஏற்றவாறு மண்ணிற்கு அக்காலத்தில் பொருள்பட பெயர் வைத்துள்ளதை மேற்கண்ட சான்றுகளின் வழி அறியமுடிகிறது.

    புலம் என்ற பெயர் வைத்து வேளாண்மை செய்யும் இடத்திற்கும், நிலத்தின் இயல்புக்கும் ஏற்றவாறு பெயர்கள் சூட்டியிருக்க வேண்டும். எந்தெந்தப் பயிர்கள். எந்தெந்த நிலங்களில் நன்றாக விளையும் என்ற அறிவைச் சங்க கால மக்கள் பெற்றிருந்தனர். இதன் மூலம் அக்கால மக்களிடம் மண்ணியல் அறிவும், நிலத்திற்கும் புலத்திற்கும் வேறுபாடு உண்டு என்பதையும் அறிய முடிகிறது.

    சங்க கால மக்கள் நிலத்தில் வாழ்ந்து புலத்தில் வேளாண்மை செய்தனர் என்பதை மேற்கூறிய கருத்துகள் வெளிப்படுத்துகின்றன. ஓரிடத்தில் பல தலைமுறைகளாக வாழ்ந்த மக்களில் சிலர், தாம் வாழ்ந்த நிலத்தை விட்டு வேறொரு நிலத்திற்குப் புலம் பெயர்ந்ததைப் ‘புலம்பெயர்ந்தோர்’ என்ற சொல் குறிப்பிடுவதையும் அறிய முடிகிறது.

     துணைநூற்பட்டியல்

    1. சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு
    2. ந.கதிரைவேற்பிள்ளை தமிழகராதி, சாரதா பதிப்பகம் சென்னை, 2003.
    3. தொல்காப்பியம், இளம்பூரணர் உரை, சாரதா பதிப்பகம் சென்னை, 2005.
    4. ஐங்குறுநூறு, பொ.வே.சோமசுந்தரனார், கழக வெளியீடு சென்னை, 2009.
    5. புறநானூறு, உ.வே.சாமிநாதையர் உரை, உ.வே.சா. நூல் நிலையம் சென்னை, 2018.
    6. திருக்குறள், இரா.இளங்குமரனார் உரை, பாவாணர் அறக்கட்டளை வெளியீடு, புதுக்கோட்டை, 2006.
    7. குறுந்தொகை, உ.வே.சாமிநாதையர் உரை, உ.வே.சா. நூல் நிலையம் சென்னை, 2017.
    8. அகநானூறு, ந.மு.வேங்கடசாமி நாட்டார், கழக வெளியீடு, சென்னை, 2007.
    9. பதிற்றுப்பத்து, உ.வே.சாமிநாதையர் உரை, உ.வே.சா.நூல் நிலையம் சென்னை, 2018.
    10. மகிழேந்தி, சுற்றுச் சூழலியல் நோக்கில் சங்கத் தமிழகம், தி பார்க்கா், இராயப்பேட்டை சென்னை, 2003.
    11. சிலப்பதிகாரம், அடியார்க்கு நல்லார் உரை, சாரதா பதிப்பகம் சென்னை, 2008.
    12. பவானந்தர் தமிழ்ச் சொல்லகராதி, நியு செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை, 2010.
    13. நற்றிணை, அ.நாராயணசாமி உரை, கழக வெளியீடு சென்னை, 1947.
    14. மலைபடுகடாம், உ.வே.சாமிநாதையர் உரை, உ.வே.சா. நூல் நிலையம் சென்னை, 2017.
    15. கலித்தொகை, நச்சினார்க்கினியர் உரை, கழக வெளியீடு சென்னை, 2007.
    16. பரிபாடல், உ.வே.சாமிநாதையர் உரை, உ.வே.சா. நூல் நிலையம் சென்னை, 2017.
    17. ந.வீ.செயராமன், தமிழ் இலக்கியத்தில் வேளாண் அறிவியல், நியு செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 1978.
    18. அரசு வருவாய்த் துறை, கிராம நிர்வாக அலுவலகப் பதிவேடு, ப.55
    19. தமிழ் விக்கிப்பீடியா, நாள் -10.02.2014
    20. புங்கையூரன், யாழ் இணையக் கட்டுரை நாள் -14.11.2011.

    ======================================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer review):

    ‘சங்க இலக்கியத்தில் மண்ணறிவியல்’ என்னும் கட்டுரை, நிலம், புலம் குறித்த பதிவுகள் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் எவ்வாறு இடம்பெற்றுள்ளன என்பதை விளக்க முயல்கின்றது. தொல்காப்பியத்தில் நிலம் பற்றிய சான்றுகளே உள்ளன. இதை ஐந்து வகையான திணைகளும் அவற்றின் இடங்களும் புலப்படுத்துகின்றன. புலம் என்பது குறித்த பதிவு சங்க இலக்கியத்தில்தான் முதன்முதல் இடம் பெறுகின்றது. புலம் குறித்த பதிவுகள் ஐங்குறுநூறு, புறநானூறு உள்ளிட்ட இலக்கியங்களில் காணப்படுவதை முறையாகத் தொகுத்துக் கட்டுரையாளர் விளக்குகின்றார்.

    சங்க கால மண்ணமைப்பு முறைகளையும் தற்கால மண்வகைகளையும் அறிமுகப்படுத்தும் இக்கட்டுரை, சங்க காலத்தில் இருந்த புலங்களைத் தக்க சான்றுகளோடு எடுத்துரைக்கின்றது. செம்புலம், வன்புலம், மென்புலம், புன்புலம், மெல்லம்புலம் என்னும் இப்புலங்களில் பயிரிடப்படும் உணவுப் பொருட்களைப் பட்டியலிட்டுச் செல்கின்றார் கட்டுரையாளர். மேலும் நவீன வேளாண்மைக்கு முன்னோடியாகப் பண்டைத் தமிழர்களின் வேளாண்மைத் தொழில்களும் உற்பத்தி முறைகளும் இருந்தன என்பதைத் தக்க ஆதாரங்களோடு முன்வைத்திருக்கும் கட்டுரையாளருக்குப் பாராட்டுகள்.

    ======================================================================

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 39

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்

    39. இறை மாட்சி

    குறள் 381:

    படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
    உடையான் அரசரு ளேறு

    வீரம் நெறஞ்ச படை, நாட்டு மேல உசிரா இருக்க சனங்க, கொறையாத செல்வம், நல்ல மந்திரி, அக்கம்பக்கத்து நாட்டோட சினேகம், பலமான அரண் இந்த ஆறு சிறப்பும் இருக்குதவன் தான் அரசர்கள் ல ஆண் சிங்கம் மாதிரி இருக்கவன்.

    குறள் 382:

    அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
    எஞ்சாமை வேந்தற் கியல்பு

    துணிச்சல், இல்லாதவங்களுக்கு கொடுக்கது, புத்திசாலித்தனம், ஊக்கம் இந்த நாலு கொணமும் ராசாக்கு இருக்கணும்.  . .

    குறள் 383:

    தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும்
    நீங்கா நிலனாள் பவற்கு

    எதையும் பைய நேரங்கழிச்சு செய்யாம படிச்ச புத்திசாலியா துணிச்சக்காரனா இருக்கது நாட்ட ஆளுத  ராசாக்கு தேவையான கொணம்.

    குறள் 384:

    அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
    மான முடைய தரசு

    அறநெறி தவறாம குத்தம் கொற செய்யாம வீரத்தோடயும் மானத்தோடயும் ஆட்சி செய்யுதவனே சிறந்த ராசா.

    குறள் 385:

    இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்த
    வகுத்தலும் வல்ல தரசு

    பொருள சம்பாதிக்க வழிய உண்டாக்கி பொறவு வந்தத சேத்து வச்சி காப்பாத்தி அத செலவு செய்யதுக்கு நல்ல மொறைல திட்டம்போட்டு ஆட்சி நடத்துதவனே நல்ல ராசா.

    குறள் 386:

    காட்சி கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
    மீக்கூறும் மன்னன் நிலம்

    பாக்கதுக்கு எளிமையா மனசு நோவ கடுமையா வையாம பேசுத ராசாவத்தான் ஒலகம் புகழும்.

     குறள் 387:

    இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்
    தான்கண் டனைத்திவ் வுலகு

    தன்மையா பேசி தேவப்பட்டவங்களுக்கு பொருளக் கொடுத்து காக்குத ராசாவுக்கு நெனச்சதெல்லாம் குடுக்கும் இந்த ஒலகம்.

    குறள் 388:

    முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்
    கிறையென்று வைக்கப் படும்

    நியாயதர்மத்தோட ஆட்சி நடத்தி மக்கள காப்பாத்துத ராசா தான் மக்கள் தலைவன் னு மதிக்கப்படுவான்.

    குறள் 389:

    செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
    கவிகைக்கீழ்த் தங்கு முலகு

    கொறைபேசுதவங்க சொல்லுதத கேட்டு காது வலிச்சாலும் பொறுத்துப் போகுத ராசாவுக்கு தான் மக்கள் கிட்ட மதிப்பு இருக்கும்.

    குறள் 390:

    கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
    உடையானாம் வேந்தர்க் கொளி

    தேவப்படுதவங்களுக்கு கொடுத்து , கருண காட்டி, நியாயம் தவறாம ஆட்சி செஞ்சு மக்களக் காப்பாத்துத ராசா தான் ராசாக்கெல்லாம் விளக்கு கணக்கா இருக்கவன்.

    (அடுத்தாப்லையும் வரும்…..

    Share
  • அன்பின் பெயரால், அடுத்தவர் சுதந்திரத்தைப் பறிக்கலாமோ!

    -நிர்மலா ராகவன்

    நலம்… நலமறிய ஆவல் (157)

    திருமணமான பின், ` நாம் இருவர் அல்லர், ஒருவரே!’ என்று பிரதிக்ஞை செய்துகொள்வதைக் காதல் நவீனங்களிலோ, திரைப்படங்களிலோ ரசிக்க முடியும். அவர்கள் நிலையில் தம்மை வைத்துக்கொண்டு சொக்குவர் இள வயதினர்.

    நிழலை நிஜமென எண்ணி, வாழ்க்கையிலும் இப்படி நடக்க ஒருவர் மற்றவரைத் தூண்டுவது கொடுமை. ஒருவரது சுதந்திரத்தைப் பறித்து, அவரைத் தன் கைப்பாவையாக ஆட்டிவைக்கும் வழி இது.

    கதை

    மயக்கும் படலம்

    தன்னால் ஏன் முன்போல் சுயமாகச் சிந்திக்க முடியவில்லை என்று பிரமிளா குழம்பினாள். கணவனை நினைத்தால் கோபமும் பயமும் ஒருங்கே எழுந்தன. இத்தனைக்கும், காதலித்து மணந்த கணவன்!

    அவன் அதிகாரத்தால் கட்டுப்படுத்தவில்லை. ஆரம்பத்தில், அவள் அழகில் மயங்கியதாக அடிக்கடி சொல்வான் கேசவன். புகழுக்கு மயங்காத பெண்களும் உண்டோ! பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்து, அவள் பார்க்க ஆசைப்பட்ட இடங்களுக்கெல்லாம் அழைத்துப்போய், இப்படி என்னென்னவோ செய்து அவளைத் தன் வசப்படுத்தி இருந்தான்.

    விளையாட்டில்லை

    சில காலம் கழித்து, அவளை மட்டம்தட்டிப் பேச ஆரம்பித்தான் கேசவன். அவள் வருந்தினாலோ, கோபித்தாலோ, `உனக்கு விளையாட்டாகப் பேசுவதுகூடப் புரியாதா?’ என்று சமாதானப்படுத்திவிடுவான். திரும்பவும், பரிசுப் பொருட்கள், உல்லாசப் பயணங்கள் தொடரும்.

    ‘இவ்வளவு அன்பாக இருப்பவரைத் தான்தான் தவறாக எண்ணிவிட்டோமோ!’ என்று ஒரு பெண்ணை யோசிக்கவைக்கும் உத்தி இது. தன்னையுமறியாமல், மேலும் கட்டுப்படுத்தப்படுவதற்கு உட்படுகிறாள். உணர்ச்சிபூர்வமான வதை இது.

    குற்றச்சாட்டுகள்

    அவன் செய்யும் ஒவ்வொரு சிறிய காரியத்தையோ, உதவியையோ பாராட்ட வேண்டும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. ஏனெனில் அவள் மாறுபட்டிருந்தாள். அவனைப்போல் யோசிக்கத் தெரியவில்லை. அவனோ, அவளும் தன்னை அப்படியெல்லாம் புகழவேண்டும் என்று எதிர்பார்த்தான். ஏமாற்றம் எரிச்சலாகியது.

    திருமணத்திற்கு முன், `உனக்குச் சூடிதார், குர்த்தாதான் அழகாக இருக்கிறது!’ என்று கேசவன் சிலாகித்தபோது, பெருமையாக உணர்ந்திருந்தாள் பிரமிளா. அவனுக்குப் பிடித்த வெளிர்நீல வண்ணத்திலேயே அவளுடைய பல ஆடைகள் அமைந்திருக்கும். தனக்கு என்ன உவப்பாக இருக்கும் என்பதையே மறந்து, காதலனின் பாராட்டுக்காகவே எதையும் செய்த காலம் அது.

    திருமணமாகி சில மாதங்கள் கழித்து, அவளுக்குப் பிடித்த சிவப்பு, ஆரஞ்சு வண்ணங்களில் புடவை வாங்கிக்கொண்டபோது, கேசவன் முகத்தைச் சுளித்தான்.

    “என்னோட வரும்போது, இந்தக் கண்ராவியையெல்லாம் கட்டிட்டு வராதே!’ என்று உத்தரவிட்டான். “ஒன் கருப்புக் கலருக்கு இது நல்லாவா இருக்கு?”

    பிரமிளாவின் நீண்ட பின்னலை, `இதாலேதான் என்னைக் கட்டிப் போட்டுட்டே!’என்று புகழ்ந்தது ஒரு காலம். நாகரிகத் தோற்றம் என்று கருதி, அவள் தலைமயிரைக் குட்டையாக வெட்டிக்கொண்ட அன்று பூகம்பமே வெடித்தது.

    “எனக்கு உன் நீண்ட முடி எவ்வளவு பிடிக்கும் என்று தெரிந்தும் இப்படி ஒரு காரியம் செய்துவிட்டு வந்திருக்கிறாயே! என்னை வருத்தப்பட வைக்க வேண்டுமென்றேதான் ஒவ்வொரு காரியமும் செய்கிறாய்!” என்று பொரிந்தவன், “யாரை மயக்க?” என்று தாக்கினான்.

    `உனக்கு நான் தொலைந்தால்தான் நிம்மதி!’

    இந்த பாணத்தில் எந்தப் பெண்ணும் மசிந்துவிடுவாள். குற்ற உணர்ச்சி எழ, அந்த உறவில் தங்கிவிடுவாள்.

    எதனால் கட்டுப்பாடு?

    இப்படி நடப்பவர், தீயவர் என்பதில்லை. முதலில் கூறியதுபோல், ஆண்-பெண் உறவைப் பற்றி புத்தகங்களிலிருந்தோ, திரைப்படங்களிலிருந்தோ அறிந்து, அதுதான் இனிமையாக வாழும் முறை என்று நம்பியவர். அவரது குடும்ப வழக்கமாகவும் இருக்கலாம்.

    தனிமைப்படுத்து

    ஒரு முறை, பிரமிளா வேலை பார்த்த இடத்தில் உள்ளவர்கள் ஒன்றாகப் படம் பார்க்கப் போனபோது, “நீ எதுக்கும்மா அவர்களுடன் போக வேண்டும்? நான் அழைத்துப் போகிறேன்!” என்று அன்பு சொட்டச் சொட்ட கேசவன் கூறியபோது, அவளுக்கு மறுக்கத் தோன்றவில்லை.

    அபூர்வமாக, யாராவது உறவினர் அவர்கள் வீட்டுக்கு வந்தால், என்றோ, ஏதோ செய்ததற்காக அவளுக்குத் திட்டு விழும். `இவர்களை எனக்குப் பிடிக்கவில்லை. இனி நம் வீட்டுக்கு வரக்கூடாது!’ என்று மிரட்டுவான்.

    `நான் சிநேகிதிகளுடன் தொலைபேசியில் பேசும்போது, தவறாது, கழிப்பறையில் அளவுக்கு மீறிய ஓசை எழுப்புவார் என் கணவர்!’ என்று ஒரு பெண்மணி எழுதியிருந்ததைப் படித்திருக்கிறேன். ஆதரவுக் கரம் அளிக்க யாருமின்றி, கணவன் என்ன செய்தாலும் பொறுத்துப் போகும் நிலையை உண்டாக்கச் செய்த தந்திரம் அது.

    இதேபோல், பிரமிளாவின் உறவினர் மற்றும் நண்பர் குழாம் சுருங்கியது. பக்கபலமாக யாருமின்றி, தனித்துப் போனாள்.

    எது செய்ய ஆரம்பிக்கும்போதும், `அவர் என்ன சொல்வாரோ!’ என்ற தடுமாற்றமும் பயமும் எழுந்தன பிரமிளாவுக்கு. தன்னம்பிக்கை வீழ்ச்சி கண்டது.

    பிறரிடம் தன் அவலத்தைச் சொல்லி அனுதாபம் பெற அவளுக்கு விருப்பமில்லை. யாரையும் நம்பவும் முடியவில்லை. நம்பியவனே இப்படி மாறிவிட்டிருந்தபோது, யாரைத்தான் நம்புவது!

    அத்துடன், `வீட்டில் எது நடந்தாலும், நான்கு சுவருக்குள் இருக்கவேண்டும்!’ என்று சிறு வயதிலிருந்தே போதனை வேறு கிடைத்திருந்ததே!

    எங்கேயும் எப்போதும்

    தம்பதியர்களிடையே மட்டும்தான் இப்படிப்பட்ட கட்டுப்படுத்துதல் இருக்கும் என்றில்லை. எந்த வயதிலும், ஏழையோ, பணக்காரரோ, யாரோ ஒருவர் இன்னொருவரைக் கட்டுப்படுத்தி, அதன்மூலம், `நான் பலசாலிதான்!’ என்று தன்னையே நம்பும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

    உடன்பிறந்தவர்களோ, நண்பர்களோகூட இப்படி நடப்பது சகஜம். ஒரு வித்தியாசம்: சிரித்த முகத்துடன் குறைகளைச் சுட்டிக் காட்டுவார்கள்.

    ஏன் சிரித்த முகம்?

    `இவர் நம்மைக் கட்டுப்படுத்த முயலவில்லை, நம்மேல் மிகுந்த அக்கறையால் அப்படிச் செய்கிறார்!’ என்று எண்ணிக்கொள்ள வேண்டுமாம்!

    வாழ்க்கைப் பின்னணி, கலாசாரம் போன்ற பலவற்றால் நாம் பிறரிடமிருந்து மாறுபடுகிறோம். இது புரியாது, `எல்லாரும் என்னைப்போல், நான் சொல்கிறபடிதான் இருக்கவேண்டும்!’ என்று வாதம் புரிந்தால் எப்படி!

    உதவி அவருக்குத்தான் தேவைப்படுகிறது. இது புரிந்தால், மற்றவர் தன் சுதந்திரத்தை இழக்காமல் தன்னையே காத்துக்கொள்ள முடியும்.

    எப்படித் தற்காத்துக்கொள்வது?

    `நீ என்ன சொன்னாலும் நான் மாறப் போவதில்லை. எதற்கு உன் சக்தியை விரயமாக்குகிறாய்?’ என்ற நேரடி தாக்குதல் எனக்குப் பலனளித்திருக்கிறது.

    ஆனால், உணர்ச்சிபூர்வமான வதையாக ஆரம்பித்தது வன்முறையாக மாறினால், அந்த உறவிலிருந்து விலகுவதைத் தவிர வேறு வழியில்லை.

    கதை

    ஒரு விருந்தில் சந்தித்தேன் அந்த இளம் தம்பதிகளை. காதலர்களாக இருந்தபோது, காதலி சொல்வதையெல்லாம் கேட்டு நடந்தவன் லீ.

    காதலியோ அழகி. அவளை வேறு யாராவது கொத்திப் போய்விட்டால்?

    `சண்டை போடத்தான் காலம் பூராவும் இருக்கிறதே! இப்போதே என்ன அவசரம்?’ என்றுகூட அவன் நினைத்திருக்கலாம்.

    திருமணமான பின், ஏதாவது பானத்தைக் குடிக்கும்போது, அவன் உறிஞ்சுவதைப் பார்த்து அழகான மனைவி முகம் சுளித்தாள்.

    `நாமென்ன ஜப்பானிலா இருக்கிறோம்! அங்குதான் மிகுந்த ஓசையுடன் உறிஞ்சினால்தான் பாராட்டு என்று நினைப்பார்கள்!’ என்று தோன்ற, `அசிங்கம்!’ என்று கணவனைக் கண்டித்தாள்.

    அடுத்தமுறை, உறிஞ்சும் ஓசை அதிகமாயிற்று.

    “நான் ஏதாவது `கூடாது’ என்று சொன்னால், லீ இன்னும் அதிகமாகச் செய்கிறார். அதனால், நான் அவரை எதுவும் சொல்வதில்லை,” என்று அவள் சொல்லக் கேட்டு, புன்னகைத்தேன். மௌனமான எதிர்ப்பு பலனளிக்கும் என்று புரிந்தவன்!

    உறவு என்பது மகிழ்ச்சிக்காக

    அச்சம் விளைவிப்பதாகவோ, அளவுக்கு அதிகமான அன்பால் திக்குமுக்காட வைப்பதாகவோ உறவு இருந்தால் மாறுதிசை மின்னோட்டத்தில் (alternating current) கையை வைத்ததுபோல்தான். மகிழ்ச்சி கிடைக்குமா?

    அட, மகிழ்ச்சியை விடுங்கள்! நிம்மதி தொலைந்து போய்விடுமே!

    Pic courtesy: http://getdrawings.com

    Share
  • பண்டு சமூகத்தில் நிலவிய விந்தை வழக்கம்

    -சேஷாத்ரி ஸ்ரீதரன்

    பண்டைக் கால மக்களிடம், குறிப்பாக சில சாதி மக்கள், சில பகுதி மக்களிடம் விந்தையான  வழக்கங்கள் கடைபிடித்து ஒழுகப்பட்டன என்பது கல்வெட்டுகளால் அறியப்படுகின்றது. இவற்றை படித்துஅறியும் போது அவர்களின் நம்பிக்கை அதனால் அவர்பெற்ற பயன் ஆகியவை பற்றிய கேள்வி நம் நெஞ்சத்தில் கட்டாயம் எழும்.

    கோவை மாவட்டம் அவினாசி வட்டம் அன்னூர் எனும் ஊரில் கோவில் கொண்ட மன்னீசர் கருவறைத் தெற்கு சுவரில் காணப்படும் 5 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ கோக்கலிமூர்க்கந் ஸ்ரீ விக்கிரம சோழ தேவற்குத் திருவெழுத்திட்டுச் செல்லாநின்ற யாண்டு இருப்தேத்தேழாவது புரட்டாதி திங்கள் முதல்
    2. கவையன்புத்தூரிலிருந்து வாழும் புள்ளங் _ _ _ _ மன்னியூர் பரதேவரர்க்கு எனக்கு காற்காலத்தில் வண்டு கொட்டி இல்லை வைச்சு என்னடியார் பொ
    3. துவங்கோதையும் மக்களைஉம் கோசநமேயையும் மக்களையும் மன்னியூராழ்வார்க்கு நீரொட்டிக் குடுத்தேன் என்னடியாரை _ _ _ _
    4. என் ஸ்வரூவமாக ஒருபடிமமும் _ _ _ _ பெண்படிமமும் ஸந்தி விளக்கொன்றும் அவ்விளக்குக்குப் பொன் முக்கல முக்கழஞ்சுங் கொண்டு சந்த்ராத்திதவலு மெரிப்பிக்கக் கடவார்
    5. மன்னியூர் ஸபைஓம்.

    திருவெழுத்திட்டு – முடிசூடி; இல்லை வைச்சு – பச்சிலை வைத்து; என்னடியார் – வேலையாள்; படிமம்  – பாவை, பதுமை, பொம்மை; சபையோம் – கருவறை பிராமணர்.

    விளக்கம்: கொங்கு சோழன் கலிமூர்க்கன் விக்கிரம சோழனின் 27 ஆம்ஆண்டு ஆட்சியில் (கி.பி. 1032) புரட்டாசி மாதம் முதல் அன்று கவையன் புத்தூரைச் சேர்ந்த புள்ளன் என்பான் மன்னியூர் ஈசனுக்கு,  “எனக்கு  மழைக் காலத்தில் வண்டு கொட்டி பச்சிலை வைத்து குணமானதால் என் வேலையாள்கள் பொதுவன் கோதை அவன் பிள்ளைகள், கோசன் மேய் அவன் பிள்ளைகள் ஆகியோரை மன்னியூர் ஈசனுக்கு நீரட்டித் தானமாகக் கொடுத்தேன். என்னை ஒத்த வடிவில் ஒரு பாவையும் என் (மனைவி) வடிவில் ஒரு பெண் பாவையும் செய்து கொடுத்தேன், அத்தோடு ஒரு சந்தி விளக்கும் அவ்விளக்கு எரிக்க பொன், முக்கல முக்கழசு (நெல்) கொடுத்தேன்”. இதை சந்திரசூரியர் வரை எரிக்கக் கடவதாக ஒப்புக் கொண்டோம்  மன்னியூர் கருவறை பிராமணர்.

    கோவையில் இன்றும் பதுமைகளைச்  செய்து வழங்கும் வழக்கம் நிலவுவதாகச் சொல்லப்படுகிறது. வேலையாள்களை அடிமைகளாகக் கோவில்களுக்கு அன்றைய ஆண்டைகள் கொடுத்துள்ளனர் என்பது தெரிகின்றது. மூன்று இடங்களில் இக்கல்வெட்டு சிதைந்துள்ளதால் செய்தியைத் தெளிவாக அறிந்துகொள்ள முடியவில்லை.

    பார்வை நூல்: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், தொகுதி  I, பக். 75, த.நா.அ. தொல்லியல் துறை, சென்னை – 8.

    பாகூர் திருமூலநாதர் கோவில் கருவறை தென்சுவர் 16 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ கன்னர [தேவர்க்கு யாண்]
    2. டு 202 (22) வேசாலிப்பாடி வடகரை வாகூர் நா
    3. ட்டு மன்றாடிகளே வாகூ[ர்] ஸ்ரீ மூலட்டா[ன]த்து
    4. ப் பெருமாளுக்கு நாங்கள் வைய்த்த தந்ம
    5. ங் கட்டிலேறப் போம்போது ஒரு ஆடு கு
    6. டுத்துக் கட்டிலேறுவோமாகவும் [புற]நா
    7. ட்டி நின்று வந்து இஞ்ஞாட்டிற் கட்டி
    8. லேறு மன்றாடி வசமொரு ஆடு குடுப்ப
    9. தாகவும் கூடாது திறம்பி[னோ]மைக் க
    10. ணப் பெருமக்களுந் தேவரடியாரு மிர
    11. ண்டாடு பிடித்துக்கொள்ளப் பெறு
    12. வதாகவும் ஒட்டிக் குடுத்தோ மிஞ்ஞா[ட்]
    13. [டு] மன்றாடிக(ள்)ளோம் இத் தம்மம் ஸ
    14. ந்த்ராதித்தவந் நிற்பதாக நிறுத்திக் குடு
    15. ப் போமானோ [மி]ஞ்ஞா[டு] மதகு செய்கின்
    16. ற மதகரோம் ஸ்ரீ0 0 0

    மூலட்டானத்து – மூலத்தானத்து; கட்டிலேறு – முதலிரவு கூடுகை நிகழ்த்து; மன்றாடி – இடையர், ஆயர்; திறம்பினோமைக்கு – தவறுதல், மாறுதல், பிறழ்தல்; கணப்பெருமக்கள் – சாதிப் பெருமக்கள்; ஒட்டி –  இரட்டித்து; நிற்பதாக நிறுத்தி – இருப்பதாக நடத்தி; இஞ்ஞாட்டு – இந்நாட்டு, இவ்வூர்; மதகு – நீர்பாயும் மடை, குமிழித் தூம்பு, தேவையான நீரைச் சீராக வெளியேற்றுவதற்கு ஏற்ற வகையில் திறந்து மூடக்கூடிய அமைப்பு.

    விளக்கம்: இராட்டிரகூட வேந்தன் மூன்றாம் கிருஷ்ணனான கன்னரதேவனின் 22 ஆம் ஆண்டு ஆட்சியில் (கி.பி. 961) வேசாலிப்பாடி வடகரையில் அமைந்த வாகூர் நாட்டின் இடையர்களோம், “வாகூர் மூலத்தானத்துப் பெருமானுக்கு நாங்கள் வைத்த தர்மமாவது யாதெனில்  கட்டிலேறுதலான முதலிரவுக் கூடுகை நிகழ்த்தப் போகும் போது ஒரு ஆடு கொடுத்துக் கட்டிலேறுவோமாகவும், பிற ஊரில் இருந்து வந்து இங்கு முதலிரவுக் கூடுகை நடத்தும் மன்றாடியிடம் ஒரு ஆடு கொடுப்பதாக ஒப்புக் கொண்டோம். இப்படி ஒப்புக் கொண்டபடி நடக்கத் தவறினால் இடையர் சாதி பெருமக்களும் தேவரடியாரும் இரண்டு ஆடு பிடித்துக் கொள்வார்களாக என்று ஆடுகளை இரட்டித்துக் கொடுத்தோம் இந்தஊர் மன்றாடிகளோம். இத்தர்மம் சந்திரசூரியர்  வரை இருப்பதாக நடத்திக் கொடுப்போமானோம் இவ்வூர் மதகு செய்கின்ற மதகரோம்“

    பண்டு சிறுபிள்ளையின் போதே திருமணம் நடத்திவிடுவர். மணமகள் அதன்பின் தன் தாய்வீடு சென்றுவிடுவாள். அவள் பருவம் எய்திய பின்பு நாள் பார்த்து அவளை கணவனிடத்தில் கொண்டு சேர்க்கும் போது அவ்விணையர் குடும்பம் நன்கு பெருகி வளர வேண்டும் என்ற நோக்கில் அதற்கு அடையாளமாக அவர்கள் இல்லற வாழ்வில் முதன்முதலாக ஈடுபடும் போது ஒரு ஆட்டை கோவிலுக்கு தானமாகக் கொடுப்பதை இடையர் வழக்கமாகக் கொண்டிருந்துள்ளனர். அவ்வூர் பெண்ணை மணந்து அவ்வூரிலேயே வாழவரும் மணமகனுக்கும் ஒரு ஆட்டை வளர்ச்சியின் அடையாளமாக கொடுத்துள்ளனர் போலும். இதைக் கண்காணிக்க மதகு பணிசெய்வோரை அமர்த்தி உள்ளனர். அவர்கள் இதற்கு ஏன் ஏற்படுத்தப்பட்டனர் என்று புரிந்துகொள்ள முடியவில்லை. ஒருகால் இருசாராரும் ஊருக்கு வெளியே அண்டிய பகுதியில் வீடு அமைத்து வாழ்ந்ததால் ஒருவரை ஒருவர் அறிவர் என்று  ஒரு சான்றுக்காக மதகு செய்வோர் இப்படி ஆக்கப்பட்டனரோ?

    பார்வை நூல்: புதுச்சேரி மாநிலக் கல்வெட்டுகள், பாகூர்  S Kuppusamy & G Vijaya venugopal,  Institute Francais De Pondichéry :  2006.

    Share
  • நூல்நோக்கம் 2 – ராஜா வேசம்

    -விவேக்பாரதி

    ராஜா வேசம் – சரசுராம்

    சரசுராம் எழுதியிருக்கும் சிறுகதைத் தொகுப்பு “ராஜா வேசம்”. பொதுவாக சிறுகதைகள் என்னைப் பெரிதாய்க் கவர்வதில்லை. கதை என்றாலே தேர்ந்தெடுத்து வாசிப்பவன் நான். இந்தப் புத்தகத்தின் சில கதைகளை வாசிக்கும்போதே, முழுவதுமாய் வாசித்துவிட வேண்டும் என்று தோன்றிவிட்டது. அத்தனை வசீகரம் இவரது கதைகளில் எவ்விடத்தும் குறையாமல் காணப்படுகிறது. சற்றும் எதிர்பாராக் கோணங்களில் அமைந்திருக்கிறது ஒவ்வொரு கதையும். ஆனால் நாம் அந்த நிலைகளைப் பற்றி ஒருமுறையேனும் வாழ்வில் கேள்விப்படாமல் இருந்திருக்க மாட்டோம்.

    மகனுக்காக பாரட்டை மறுத்த அண்ணாமலையும், தன் சோகத்தை மறைத்த பார்வதியும் கண்முன் நிற்கிறார்கள். என்னுடைய இந்த இருபதாம் வயதில், நானும் என் சமூகமும் எங்கள் பெற்றோர்களை எப்படிக் காக்க வேண்டும் என்பது அதிலே பாடமாக வருகிறது.

    பாட்டி சொல்லாத கதை நம் அனைவரின் வாழ்விலும் நிகழும் தருணம் என்பது ஸ்பாய்லர். இதனை இங்கே வைப்பது எனக்கு மகிழ்ச்சியான செய்தி தான். என் பள்ளிக்கால பேருந்து நிறுத்த நண்பர்களை இப்போது சில டிப்போக்களில் பார்க்க முடியுமா என்று தேடிக் கொண்டிருக்கிறேன்.

    அனைத்துக்கும் முத்தாய்ப்பு அந்த ராஜா வேசம் கட்டிய கபிலன் தான். காதில் கேட்ட நிறைய செவிவழிச் செய்திகளோடும், நேரில் கண்ட சிலரின் வாழ்க்கையோடும் சரசுராமின் கபிலனையும் நர்மதாவையும் ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தது. மகாபாரதக் கதாப்பாத்திரங்களின் நடத்தை முரண், அழகு முரண்.

    ஒவ்வொரு கதையையும் இப்படிச் சொல்லித்தான் ஆகவேண்டும், அத்தனை கதைகளும் அவ்வளவு சிறப்பு வாய்ந்தவை.

    பொதுவாக கதைகளில் அதீத காதல் என்ற பெயரில் சில்மிஷங்களோ இல்லை வெற்றுக் கற்பனைகளையோ மட்டுமே சொல்லிக்கொண்டு வரும் கதைக்காலம் மாறியிருக்கிறது. சரசுராம், சிறுகதைகளைக் குறித்த என் கண்ணோட்டத்தை மாற்றி இருக்கிறார். பிரம்மாண்டம் என்று சொல்லும்படிக்கான கதைக்கருவோ, வார்த்தை ஜாலமோ இல்லாமல் அமைந்திருக்கின்றன கதைகள். மொத்தமாய் சரசுராம் அருகில் அமர்ந்து கதைகளைக் கேட்ட உணர்வு. அத்தனை இலாகவம், தெளிவு, எளிமை மற்றும் எதார்த்தம். ஒவ்வொரு கதையும் பல இரவுகளை விழுங்கும் திறன் கொண்டவை. வாசித்தல் யோசித்தலாக வினை பெயரும் சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு.

    எந்தவொரு இடத்திலும் சமரசம் ஆகாத கண்ணியம் – ராஜா வேசம்.

    புத்தக விமர்சனமாக வரவிருக்கும் இந்தத் தொடரில் தங்கள் புத்தகம் குறித்த விமர்சனம் இடம்பெற வேண்டில் தங்கள் புத்தகத்தின் மென்நகலையும் (SOFT COPY) அட்டைப் படத்தையும் vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 38

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 38

    38.ஊழ்

    குறள் 371:

    ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
    போகூழால் தோன்று மடி

    பணம் சேக்கணும் னு விதி இருந்தா அத சேக்கதுக்கு  நாம முனஞ்சி செய்யுவோம். இருக்கதும் கைவிட்டு போவணும் னு விதி இருந்திச்சின்னா சடவு தான் உண்டாவும்.

    குறள் 372:

    பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
    ஆகலூ ழுற்றக் கடை

    தாழ்ந்து போவணும்னு விதி இருந்தா மனுசனுக்கு புத்தி கெட்டுப் போவும். வாழ்க்கைல ஒசரணும்னு விதி இருந்தா புத்திசாலித்தனம் வளரும்.

    குறள் 373:

    நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
    உண்மை யறிவே மிகும்

    ஒருத்தன் எம்புட்டு ஒசந்த புத்தகங்கள வாசிச்சாலும் தலையெழுத்து சரியில்லன்னா அது அவன் மண்டக்குள்ள ஏராம சொந்த புத்தி தான் நெலைக்கும்.

    குறள் 374:

    இருவே றுலகத் தியற்கை திருவேறு
    தெள்ளிய ராதலும் வேறு

    ஒலகத்தோட இயற்கை நிலைங்கது விதியால ரெண்டா இருக்கு. . ஒருத்தர பணக்காரரா ஆக்குததும் இன்னொருத்தர அறிவாளியா ஆக்குததும் தான் அந்த வேத்துமை.

    குறள் 375:

    நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும்
    நல்லவாஞ் செல்வஞ் செயற்கு

    விதியால நல்லது செய்ய முனையுத சமயம் அது தீமயா முடியுததும்,  தீம செய்ய முனையுதப்போ நல்லதா மாறிக்கிடதும் நடக்கும். . .

    குறள் 376:

    பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
    சொரியினும் போகா தம

    தனக்கு ஒடமையில்லாத பொருள எங்ஙன பொதிஞ்சு வச்சி காத்தாலும் தங்காது. ஒடமையுள்ள பொருள எங்க தொலைச்சாலும் அது விட்டு போவாது.

    குறள் 377:

    வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
    தொகுத்தார்க்குந் துய்த்த லரிது

    முனஞ்சு கோடிச் சொத்து சேத்தாலும் கடவுள் விதிச்ச விதிப்படி தான் அத அனுவிக்க முடியும்.

    குறள் 378:

    துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
    ஊட்டா கழியு மெனின்

    துன்பத்த அனுவிக்கணும் ங்குத விதி ஏழைய தடுக்கலன்னா   ஒண்ணுமில்லாத அவன் துறவி ஆயிருப்பான்.

    குறள் 379:

    நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
    அல்லற் படுவ தெவன்

    நல்லது நடக்குதப்போ நல்லது னு நெனைக்கவங்க தீயது நடக்குதப்போ துக்கப்படுதது ஏன்?

    குறள் 380:

    ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
    சூழினுந் தான்முந் துறும்

    விதிய விட வலிம னு வேற இல்ல. விதிலேந்து தப்பிச்சிக்கிடலாம்னு நெனச்சி வேற வழில போனாலும் அங்கயும் அது வந்து நிக்கும்.

     

    (அடுத்தாப்லயும் வரும்….

    Share
  • அமெரிக்காவில் கொலம்பஸ் நாள்

    -நாகேஷ்வரி அண்ணாமலை

    நான் எப்போதுமே கொலம்பஸுக்கு அமெரிக்காவில் அதிக மரியாதை கொடுக்கிறார்கள் என்று நினைத்ததுண்டு. முதல் முதலாக அட்லாண்டிக் கடலை அவர் கடந்தது பெரிய சாதனைதான். கொந்தளிக்கும் அட்லாண்டிக் கடலை அதுவரை யாரும் கடந்ததில்லை; உயிரைத் துச்சமாக நினைத்து அதைக் கடக்கத் துணிந்தது பெரிய காரியம்தான். இருந்தாலும் அவர் ‘புதிய கண்டத்தில்’ என்னென்ன அட்டூழியங்கள் புரிந்தார் என்பதை அறிந்தால் அவரை இப்படிப் புகழ முடியுமா என்று எனக்கு நினைக்கத் தோன்றும்.

    ஐரோப்பியர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு ஒரு புதிய பூமியைக் காட்டி அங்குள்ள வளத்தை அவர்கள் அனுபவிக்க வழிகாட்டியது கொலம்பஸ்தான். அதனால் அவர்கள் அவரை மிகவும் போற்றுகிறார்கள் என்று எண்ணிக்கொள்வேன். (கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார் என்று நமக்குப் பள்ளியில் கற்பிக்கப்பட்டாலும் இப்போது அமெரிக்கா என்று அறியப்படும் கண்டத்தில் கொலம்பஸ் கால்வைக்கவில்லை. அருகிலுள்ள பஹாமாத் தீவுகளுக்கு வந்ததோடு சரி. அவருக்குப் பிறகு அமெரிக்கக் கண்டத்திற்கு வந்த அமெரிகோ வெஸ்ஸி புச்சி என்னும் இத்தாலியரின் பெயரைத்தான் அமெரிக்கக் கண்டத்திற்கு வைத்தார்கள். இவர்தான் கொலம்பஸ் வந்தது இந்தியாவுக்கு இல்லை, இன்னொரு கண்டத்திற்கு என்று சொன்னவர். 1497-லும் 1502-லும் அமெரிக்கக் கண்டத்தைற்குத் தான் வந்த அனுபவங்களை எழுதினார். இவர் எழுதியதை வைத்து வரைபடம் வரைபவர்கள் வரைபடம் வரைய ஆரம்பித்தார்கள். அதனால் இவர் பெயரையே அதற்கு வைத்தார்கள்.)

    1934-லிருந்துஅமெரிக்காவில் அக்டோபர் மாதம் இரண்டாவது திங்கள்கிழமை கொலம்பஸ் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இது மத்திய அரசால் விடுமுறை நாளாகக் கணிக்கப்பட்டது. இப்போது சில மாநிலங்களில் அந்த நாளை ‘பழங்குடி மக்கள் நாள்’ என்று மாற்றப் போகிறார்களாம். ஏற்கனவே நியூ மெக்ஸிகோ, வட கரோலினா, அலாஸ்கா, தென் டகோட்டா, ஆரகன், மினசோட்டா ஆகிய ஆறு மாநிலங்களிலும் 130 நகரங்களிலும் பெயர் மாற்றம் நடந்திருக்கிறது. (அமெரிக்காவில் மாநிலங்களுக்கென்று சில உரிமைகள் உண்டு.) வெர்மான்ட்டில் பெயர் மாற்றம் செய்வதற்குரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் கையொப்பத்திற்காகக் காத்திருக்கிறது.

    அமெரிக்காவில் நிறைய மாநிலங்களில் கொலம்பஸ் என்ற பெயரில் ஊர்களும் சாலைகளும் உண்டு. அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் இருக்கும் டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியாவின் பெயர்கூட கொலம்பஸ்அமெரிக்கக் கண்டத்தை கண்டுபிடித்ததன் அடையாளமாக வைக்கப்பட்ட பெயர்தான்.

    இப்போது மெயின் மாநில சட்டசபையில் பெயர் மாற்றுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஜேனட் மில்லர் சீக்கிரமே அதில் கையொப்பமிடப் போகிறார். ‘ஒருவரின் பெயரை ஒரு நாளுக்கு வைப்பதால் அவருக்கு நாம் மிகவும் மதிப்பும் மரியாதையும் கொடுக்கிறோம். கிறிஸ்டபர் கொலம்பஸ் அட்லாண்டிக் கடலைக் கடந்தார் என்பதைத் தவிர அவர் என்ன பெரியதாகச் சாதித்துவிட்டார்?’ என்று அந்த மசோதா விவாதத்திற்கு வந்தபோது மெயின் சட்டசபை அங்கத்தினர் ஒருவர் கேட்டிருக்கிறார். கொலம்பஸ் நாளை பழங்குடி மக்கள் நாள் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோருபவர்கள் அமெரிக்கக் கண்டங்களில் அப்போது லட்சக் கணக்கான மக்கள் வாழ்ந்து வந்தார்கள் என்றும் கொலம்பஸ் வந்ததால் ஐரோப்பாவிலிருந்து நிறையக் குடியேறிகள் அமெரிக்காவுக்கு வந்து அங்கு ஏற்கனவே வாழ்ந்து வந்த மக்களைத்தங்கள் நலன்களுக்காகப் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்திக்கொண்டர்கள்என்றும் இவருக்கு இதுவரை கொடுக்கப்பட்டு வந்த மதிப்பையும் மரியாதையையும் இப்போது நிறுத்திவிட்டு அவரால் பல துன்பங்களுக்கு ஆளான பழங்குடி மக்களின் பெயரால் அந்த நாளைக் குறிப்பிடலாம் என்றும் கூறுகிறார்கள். பழங்குடி மக்களின் பிரதிநிதியாக வந்திருந்த பெண்,‘இந்த நிலத்திற்கும் நீருக்கும் சொந்தமான எங்களுக்கு இதுவரை எந்தவித உரிமைகளும் இல்லாமல் இருந்தது. விடுமுறை நாளுக்கு கொலம்பஸ் பெயர் கொடுக்கப்பட்டிருந்ததால் எங்களுக்கு அவர் இழைத்த அநீதி மறைக்கப்பட்டிருந்தது. இப்போது எங்களுக்குரிய அங்கீகாரத்தைக் கொடுத்திருப்பது மனநிறைவைத் தருகிறது’ என்று கூறியிருக்கிறார். இப்படி கொலம்பஸ் நாள் என்று இதுவரைக் குறிப்பிடப்பட்டு வந்த நாளைப் பழங்குடி மக்களின் நாள் என்று பெயர் மாற்றம் செய்வதால் இத்தாலிய-அமெரிக்கர்கள் (இத்தாலியிலிருந்து அமெரிக்காவுக்கு வந்து குடியேறியவர்களை இத்தாலிய அமெரிக்கர்கள் என்று குறிப்பிடுகிறார்கள்; அதுபோல் இந்தியாவிலிருந்து வந்து குடியேறியவர்களை இந்திய-அமெரிக்கர்கள் என்று குறிப்பிடுகிறார்கள்; ஒவ்வொரு நாட்டிலிருந்து வந்தவர்களுக்கும் இப்படிப் பெயர்கள் உண்டு.) தங்கள் மரபுப் பாரம்பரியத்தின் ஒரு அங்கமாக அந்த நாளைக் கொண்டாடுகிறார்கள் என்ற ஒரு விஷயம்தான் கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது என்று பெயர் மாற்றம் செய்யும் விவாதத்தின்போது கூறப்பட்டது.

    கலிஃபோர்னியா மாநிலத்திலுள்ள பெர்க்லி என்னும் நகரம் 1992-லேயே இந்த விடுமுறை நாளைப் பழங்குடி மக்கள் தினம் என்று பெயர் மாற்றம் செய்துவிட்டது. இன்னும் பிரவுன் பல்கலைக்கழகமும்,மினியாப்பிலஸ், சியாட்டல் ஆகிய நகரங்களும் பெயர் மாற்றம் செய்திருக்கின்றன. அலாஸ்கா 2015-இல் பெயர் மாற்றம் செய்தது; வாஷிங்டன் மாநிலம் அந்த நாளை விடுமுறை நாள் என்ற பட்டியலிலிருந்து நீக்கிவிட்டது. இன்னும் சில மாநிலங்கள் வேறு வகையாக இந்த நாளைக் கையாள்கின்றன. ஓக்லஹோமா மாநிலம் கொலம்பஸ் நாளை கொலம்பஸுக்கும் பழங்குடிகளுக்கும் உரிய நாளாக ஆக்கிப் புதிய சட்டம் இயற்றியிருக்கிறது. ஒஹையோ மாநிலத்தில் உள்ள சாண்டஸ்கி என்னும் நகரம் இந்த நாளுக்குப் பதில் தேர்தல் நாளை விடுமுறை நாளாக அறிவித்திருக்கிறது. தேர்தல் நாள் விடுமுறைநாளாக இருந்தால் வாக்காளர்களுக்கு வசதியாக இருக்குமாம். (அமெரிக்காவில் எல்லாத் தேர்தல்களும் – மிகச் சில விசேஷத் தேர்தல்கள் தவிர– நவம்பர் மாதம் முதல் செவ்வாய்க் கிழமையன்று நடைபெறும். எல்லாக் கீழவை அங்கத்தினர்களுக்கான தேர்தல்களும் இரண்டு வருஷங்களுக்கு ஒரு முறையும் ஜனாதிபதித் தேர்தல் நான்கு வருஷங்களுக்கு ஒரு முறையும் மேலவை அங்கத்தினர்களுக்கான தேர்தல் ஆறு வருஷங்களுக்கு ஒரு முறையும் நடக்கும்.அமெரிக்காவில் தேர்தல் நாளன்று விடுமுறை இல்லை. எல்லா ஓட்டுச்சாவடிகளும் காலை ஆறு அல்லது ஏழு மணியிலிருந்து இரவு ஏழு அல்லது எட்டு மணி வரைக்கும் திறந்திருக்கும்)

    கொலம்பஸ் நாள் மத்திய அரசின் விடுமுறை நாளாகத் தொடருகிறது. போன ஆண்டு அக்டோபர் மாதம் கொலம்பஸ் நாளன்று ட்ரம்ப் வெளியிட்ட அறிக்கையில்,‘இந்த நாளன்று திறமை வாய்ந்த ஒரு இத்தாலியரின் சாதனைகளை நாம் கொண்டாடுகிறோம். அமெரிக்க மதிப்பீடுகளான குறிக்கோளை அடைய விரும்பும் பேரார்வம், துணிச்சல், மனோதிடம் ஆகிய குணங்கள் அவரிடம் இருந்தன’ என்று கொலம்பஸைப் புகழ்ந்துதள்ளியிருக்கிறார்.

    இந்த ட்ரம்ப் என்னவாவது சொல்லிவிட்டுப் போகட்டும். இப்போதாவது சில அமெரிக்கர்களாவது கொலம்பஸ் பழங்குடி மக்களுக்குச் செய்த அநீதிகளையும் அட்டூழியங்களையும் நினைவுகூர்ந்து அவருக்கு இதுவரை கொடுத்துவந்த மரியாதையையும் மதிப்பையும் திரும்ப வாங்குகிறார்களே என்பதை நினைக்கும்போது மனதில் ஒரு மகிழ்ச்சி பிறக்கிறது.

    Share
  • சேக்கிழார் பா நயம் – 35

    -திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி

    திருவதிகை வீரட்டானத்தில் சித்த வட மடத்தில் தங்கியிருந்த சுந்தரமூர்த்தி தலைமேல் திருவடியைப் பலமுறை வைத்தருளியதன் உட்பொருளைச் சுந்தரர் உணர வில்லை. அவருக்கே உரிய இறுமாப்புக்கொண்டு இறைவனிடமே கேள்விகேட்டார்! இறுமாப்பு என்பது தன்னை அறியாத தருக்கு! அது தலைவனையும் அறிந்து கொள்ள இயலாத நிலைக்குத் தள்ளிவிடும்! அதனால் தம்செயல், இறுமாப்பினால் அதாவது செம்மாப்பினால் விளைந்தது என்பதை ’’செம்மாந்து இங்கு யான் அறியாது என் செய்தேன் !’’ என்று வருந்தும் நிலைக்குத் தள்ளியதே என்று சுந்தரர் கூறுகிறார்! அதன் பின்னர் அவர் தெளிவடைகின்றார். இங்கே இறைவன் சுந்தரர் தலைமேல் பலமுறை திருவடியை வைத்தது, அவருக்கு அவர் நிலையைத் தெரிவிக்கவே என்பது புலனாகின்றது. அருணகிரிநாதர் தம் தலைமேல் முருகன் திருவடி பட்டமையால் நிகழ்ந்த நன்மையைக் கூறுகிறார்!

    ‘’அவன் கால் பட்டழிந்தது இங்கு என்தலைமேல் அயன் கையெழுத்தே!’’ என்பது அவர் இயற்றிய கந்தரலங்காரம்! இதனைச் சித்தாந்தம் ‘’;திருவடி தீட்சை’’ என்று கூறும். இவ்வாறு வலிய வந்து சிவபெருமான் தம்திருவடியால் சுந்தரருக்கு ஞானம் தந்தார் .அதனால் யான் அறியாமையால் தவறு செய்தேன் இப்போது அறிவு பெற்றேன்! அதனால் ‘’எத்தகைய தவறுசெய்தேன்! ‘’ என்று வருந்துகிறார். அதனால் தம் இழிந்த மனநிலைமையால், தம்தலைவரைக்கூட அறியாத தொண்டனாகி விட்டேனே! என்றுவருந்தி,

    ‘’தம்மானை அறியாத சாதியார் உளரே!’’ என்று கூறுகின்றார். அனைவருக்கும் தலைவராய், வீரட்டானம் என்ற தலத்தில் எழுந்தருளிய சிவபிரானை நினைக்கிறார்! அப்பிரான் ஆணவத்தால் எதிர்த்து வந்த மதங்கொண்ட யானையின் தோலை உரித்து அணிந்த வீரச் செயல் புரிந்த தலம், வீரட்டானம்! ஆகவே செம்மாப்பை, – இறுமாப்பை விலக்குவதற்காக அவர் திருவடி பதித்தார்! முன்பு திருக்கைலையை விட்டுநீங்கிய நிலையில் நினைவால் ஞானம் தரும் ‘’மானஸ தீட்சை’’ எனப்படும் திருவுள்ளதீக்கை யாலும், திருவருட்டுறையில் காட்சிதந்தபோது, நேரில் கண்டு ‘’சட்சுதீட்சை’’ எனப்படும் திருக்கண் தீக்கையாலும், பின்னர் அந்தண வேடத்துடன் சித்தவடமடத்திற்கு வந்த போது, திருவடி தீட்சை எனப்படும் பரிச தீக்கையாலும், ‘’எம்மைப்பாடு!’’ என்றபோது, உபதேச தீட்சை எனப்படும் வாக்குத் தீக்கையாலும், தடுத்தாட் கொண்டார். இவையனைத்தையும் தம் திருப்பாடலில், சேக்கிழார் அமைக்கிறார்.

    ‘தம்மானை அறியாத சாதியாருளரே’ – இது உண்மையுணர்ந்தவுடனே நம்பிகள் பாடிய திருப்பதிகத்தின் முதற்குறிப்பு. தமது தலைவனையும் அறிந்துகொள்ளாத வகுப்பாரும் உலகத்தில் உண்டோ? சாதியார் – வகுப்பினர் – வகையிலே – பட்டவர் – அறியாத வகையினர். சாதி – வகுப்பு என்ற பொருளில் வந்தது. தமது தலைவனைத் – தம்மை ஆளாகக்கொண்டு காக்கின்றவனைத் தமது நலங்கருதியேனும் யாவரும் அறிவர். அவ்வாறு அறியாத வகையினர் உலகில் இல்லை என்றபடி. உளரே – ஏகார வினா இல்லை என்ற விடை குறித்து நின்றது. வேறு ஒருவரும் இல்லை; ஆயினும் யான் ஒருவன் இறைவனை யறியாது இறைபோதும் இகழ்வன் போலும் என்பது பதிகக் கருத்து. முன்னர் ஆணவ மறைப்பினாலே ‘பலகாலும் மிதித்தனை’ என வெறுத்த அந்தக் கழலையே மறைப்பு நீக்கம் பெற்ற இப்போது பணிந்து துதித்தார்.

    (1) எம்மான்ற னடிக்கொண்டென் முடிமேல் வைத்திடு மென்னு மாசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன் – இது திருவடி தீக்கையிலே நம்பிகள் ஆசை வைத்திருந்ததைக் குறிக்கும் “இறைதாள் புரிவுடைய மனத்தினராய்“ என்ற சரிதத்துக்கு அகச்சான்றாம். அறிவிலா நாயேன் – முன்னர் வழக்கு இட்டபோது அறியாததுபோலவே இன்றும் இறைவர் தாமே வெளிவந்தபோதும் அறியாமலிருந்ததற் கிரங்கிய கூற்று.

    (2) முன்னே எம்பெருமானை மறந்தேன்கொல் மறவா தொழிந்தேன்கொல் மறவாத சிந்தையால் வாழ்வேன். இதுவும் நம்பிகளது அறிவு நிலையை மிக நன்றாக உணர்த்தும் அகச்சான்றாம்.

    (3) வளராத பிறையும் வரி அரவும் உடன்றுயில வைத்தாளும் எந்தை – உடன்றுயில
    – ஒன்றாய் வாழ; வளராத பிறை –

    ‘மறுவுடைய கண்டத்தீர் வார்சடைமே னாகந்
    தெறுமென்று தேய்ந்துழலு மாவா – உறுவான்
    தளரமீ தோடுமேற் றானதனை யஞ்சி
    வளருமோ பிள்ளை மதி’

    – காரைக்காலம்மையார் அற்புதத்திருவந்தாதி – 36

    காண்க.

    4) நாற்றானத் தொருவனை – ‘இது நாலா நிலையாகிய சிவயோகத்தைக் குறிக்கும் என்பர். நாற்றானத் தொருவனை – என்பது திருக்களிற்றுப்படி. நின்மல துரிய நிலையே தசகாரியத்துள் சிவயோகநிலை. சிவம் தெளிவாக விளங்கும் நிலை இதுவே! நம்பிகள் ஞானயோக நெறியை விளக்கவந்த ஆசாரியராதலும் காண்க

    “பத்திப்போர் வித்திட்டே பரந்த வைம்புலன்கள் வாய்ப்
    பாலே போகா மேகாவாப் பகையறு வகைநினையா
    முத்திக்கே விக்கத்தே முடிக்குமுக் குணங்கள் வாய்
    மூடாவூடா நாலந்தக் கரணமு மொரு நெறியாய்ச்
    சித்திக்கே யுய்த்திட்டுத் திகழ்ந்த மெய்ப்பரம் பொருள்
    சேர்வார் தாமே தானாகக் செயுமவன்’’

    தலவிசேடம் – அட்டவீரட்டங்களில் ஒன்று. திரிபுரமெரித்த வீரம் நிகழ்ந்த தலம். அப்பர் சுவாமிகளை ஆட்கொண்ட வரலாறு அப்புராணத்துக் காண்க. திலகவதியம்மையார் திருப்பணி செய்தமர்ந்த தலம். இவர்களது திருவுருவங்கள் இங்கு அமைத்துப் பூசிக்கப் பெறுகின்றன. திருஞானசம்பந்த சுவாமிகளுக்கு இறைவன் இங்கு முன்னே எதிர்காட்சி கொடுக்க ‘ஆடும் வீரட்டானத்தே’ என்ற குறிப்புடன் பதிகம் பாடியருளினர். இறைவனது இலிங்க அருட்டிரு மேனி மிக உன்னதமாய் விளங்குவது. தீர்த்தம் – கெடிலநதி. சுவாமி – திரிபுராந்த கேசுவரர். தேவியார் – திரிபுரசுந்தரி. இது நடுநாட்டுத் தலங்களில் 7-வது தலம். கெடில நதியின் வடகரையில் உள்ளதென்பது பதிகம் . பண்ணுருட்டி இருப்புப்பாதை நிலையத்திலிருந்து கிழக்கே ஒரு நாழிகையளவில் அடையத்தக்கது. இனி ,முழுப்பாடலையும் காண்போம்.

    ‘’செம்மாந்திங்கு யான்அறியா தென்செய்தேன் எனத்தெளிந்து
    ‘தம்மானை அறியாத சாதியார் உளரே ‘ என்று
    அம்மானைத் திருவதிகை வீரட்டா னத்தமர்ந்த
    கைம்மாவின் உரியானைக் கழல்பணிந்து பாடினார்!’’

    Share
  • மேல்படிப்பு வேண்டாம்

    -நிர்மலா ராகவன்

    (நலம்… நலமறிய ஆவல் – 156)

    வேண்டுமென்றே பரீட்சையில் தவறான பதில்களை எழுதுவார்கள், சில பதின்ம வயதுப் பையன்கள்.

    ஏன்?

    `எனக்கு மேல்படிப்பு வேண்டாம்பா. படி, படின்னு அம்மாவும் அப்பாவும் உசிரை வாங்குவாங்க!’

    அப்போது அடைந்த அலுப்பு எந்த வயதிலும் மறைவதில்லை.

    `நல்லவேளை! நான் நல்லா பாஸ் பண்ணலே. இல்லாட்டி, படி, படின்னு வீட்டில உசிரை எடுத்திருப்பாங்க!’ என்று நிம்மதியுடன் என்னிடம் கூறியவருக்கு வயது நாற்பது.

    அவருடன் சேர்ந்து நானும் சிரித்தேன். ஆனால், வருத்தமும் அடையாது இருக்க முடியவில்லை. உயர்கல்வி இல்லாது, வாழ்க்கையில் ஓரளவுதான் அவரால் உயர முடிந்தது.

    பெற்றோருக்குப் பயந்தோ, பணிந்தோ, வேண்டா வெறுப்பாக புத்தகத்தைக் கையில் எடுத்தால், நல்ல தேர்ச்சியையா அடைய முடியும்?

    பெற்றோரின் தொணதொணப்பு அதிகரிக்க, அதிகரிக்க, பையன்களின் தன்னம்பிக்கை குறைவதுதான் பலன்.

    “ஏன் இப்படி அவன் உயிரை எடுக்கிறீர்கள்?” என்று நான் ஒரு தாயைக் கேட்டேன்.

    “இவ்வளவு சொல்லியும் அவனால் நல்ல மதிப்பெண்கள் வாங்க முடியவில்லையே! நாங்கள் சொல்லாவிட்டால், தானாக புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படிக்கவா போகிறான்?” என்ற எதிர்க்கேள்வி பிறந்தது.

    படிக்கப் பிடிக்காது

    மிகச் சிறு வயதிலிருந்தே குழந்தைகள் சுதந்திரமாக நடக்கத் தலைப்படுவார்கள். அவர்கள் போக்கில் விட்டால், அவர்களது திறமை வெளிப்படும். அவ்வப்போது வழிகாட்டினாலே போதும்.

    எட்டு மாதக் குழந்தையாக இருக்கும்போதே அதற்குப் பிற்காலத்தில் படிக்கப் பிடிக்குமா இல்லையா என்பது தெரிந்துவிடும்.

    குழந்தையை மடியில் அமர்த்திக்கொண்டு புத்தகத்தில் ஏதாவது படத்தைக் காட்டினால், தலையை வேறு புறம் திருப்பிக்கொள்ளும். முகவாயைப் பிடித்து, புத்தகம் இருக்கும் திசையில் திருப்பினால், தலை இன்னொரு பக்கம் திரும்பிக்கொள்ளும்! (என் அனுபவத்தில், பெண் குழந்தைகள் இப்படிச் செய்வதில்லை. பள்ளிப் பருவத்திற்குப் பின் படிக்கவே பிடிக்காமல் போவது ஏனென்றால், எப்போதும் படித்தால் அறிவு வளர்ந்துவிடும் என்று நச்சரித்த பெற்றோர்களால்தான். இவர்கள், அபூர்வமாக, காதல் நவீனங்களை மட்டும் படிப்பார்கள்).

    இம்மாதிரியான குழந்தைகள் அறிவில் குறைந்தவர்கள் என்பதில்லை. அவர்களுக்கு விளையாட்டிலோ, நுண்கலைகளிலோ அலாதி ஈடுபாடு இருக்கும். அவரவர் போக்கிலேயே விட்டால், புத்தகத்தை எடுத்துப் படிக்காவிட்டாலும், பரீட்சையில் தோற்கமாட்டார்கள். `இந்த வரைக்கும் பெற்றோர் தடை செய்யாமல் இருக்கிறார்களே!’ என்று, சற்றுப் படித்தும் வைத்திருப்பார்கள்.

    `நீ படித்தே நான் பார்த்ததில்லையே! எப்படி பாஸ் பண்ணினே?’ என்று இப்படிப்பட்ட ஒரு சிறுவனை நான் அதிசயப்பட்டுக் கேட்டதற்கு, `பள்ளியில் பெண்கள் ஓயாது பாடங்களை விவாதித்துக்கொண்டு இருப்பார்கள். மௌனமாக அதை கேட்டுக்கொண்டிருப்பேன்!’ என்று பதில் வந்தது.

    பலரும் எழுத்துகளை பார்த்தால்தான் புரியும் என்று நினைக்கிறார்கள். காதில் கேட்டாலே போதும். புத்தகங்கள் இல்லாத காலத்தில் செவிவழி அறிவைப் போதித்தது நீடித்த பலனை அளிக்கவில்லையா?

    செய்வதையே செய்யணுமா?

    வழக்கமாக, சில காரியங்களையே ஒன்றையடுத்து ஒன்று செய்ய நேரும்போது அலுப்பாகத் தோன்றலாம். ஆனால், அதுவும் அவசியம். செய்வதற்கு எதுவும் இல்லாமல் போகிற போதுதான் மனம் வேண்டாத யோசனைகளிலோ, காரியங்களிலோ ஈடுபடும்.

    பள்ளிக்கூடத்தை விட்டு வீட்டிற்கு வந்தால் காலணியைக் கழற்றுவதுபோல், வீட்டுப் பாடம் செய்வதும் பழக்கமாகிவிடும்.

    இது புரியாது, சில தாய்மார்கள், பிள்ளைகள் வீட்டுக்குள் நுழையும்போதே, `வீட்டுப்பாடம் இருக்கா? செஞ்சு முடி!’ என்று ஒவ்வொரு நாளும் நினைவுபடுத்துவார்கள். இது கசப்பில்தான் கொண்டுவிடும்.

    `இவனுக்கு ஒவ்வொண்ணையும் நான் சொல்லிக் குடுத்துக்கிட்டே இருக்கணும்!’ என்று அலுத்துக்கொள்வதுபோல் பெருமை பேசுவது வீண்.

    பதின்ம வயதுச் சிறுவர்கள், சலிக்காது வீட்டு வேலைகளில் உதவ

    ஒவ்வொன்றாகச் சொன்னால்தான் நச்சரிப்பு. ஒன்று, இரண்டு என்று காகிதத்தில் பலவற்றை எழுதி வைத்துவிடலாம். எதை முதலில் செய்ய வேண்டும் என்ற முடிவை அவர்களிடமே விட்டுவிடுகிறோம், அல்லவா?

    என்னால் முடியும்!

    சிறுவர்களுக்கு மூன்று வயதிலேயே மின்சாரச் சாதனங்களில் அலாதி ஈடுபாடு வந்துவிடும். மூன்று வயதில் தானே அவற்றை இயக்க வேண்டும் என்ற பேராவல் எழுந்துவிடும்.

    இது புரிந்து, என் மகனிடம், `ஸ்விட்சைப் போடு!’ என்று பழக்கினேன். (வயதுக்கேற்ற வேலையைத்தான் கொடுக்க வேண்டும் என்பது பிறகுதான் புரிந்தது).

    ஒரு முறை, துணி துவைக்கும் இயந்திரத்தைப் அவன் பாதியிலேயே நிறுத்திவிட்டு, கதவைத் திறக்க, வெள்ளப்பெருக்கு!

    ப்ளெண்டரை மூடுமுன்னரே ஆர்வக் கோளாறுடன் ஸ்விட்சைத் தட்ட, அதற்குள்ளிருந்த அனைத்தும் வெளியே பீய்ச்சி அடித்தது.

    இரண்டு முறையும் பயந்து, அவன் அலறியபடி பின்னால் ஓட, `போனாப் போறது! இனிமே நான் சொல்றச்சே நிறுத்து!’ என்று சமாதானப்படுத்தியபடி, அவனை அணைத்தேன்.

    தவறு செய்தவர்களே, `இப்படிச் செய்துவிட்டோமே!’ என்று வருத்தப்படும்போது, எதற்காகத் தண்டிப்பது! பெரிது பண்ணாது விட்டுவிட்டால், அடுத்த முறை கவனமாக இருப்பார்கள்.

    மாறாக, தண்டித்து, அதைப் பற்றிக் கேலியாகவே பேசிக்கொண்டிருந்தால், `மீண்டும் தப்பு செய்துவிடுவோமோ?’ என்ற பயத்திலேயே காரியம் கெட்டுப்போகும்.

    கதை

    இரண்டு லிட்டர் எண்ணெய் கொண்ட தகரக் குவளையை என்னிடமிருந்து பிடுங்கினான் என் மூன்று வயதுப் பேரன்.

    அவன் அதைத் தூக்க முடியாது தூக்கி வருவதைப் பார்த்த சில ஆண்கள், என்னை வெறுப்புடன் பார்த்தார்கள் – நான் அவனை வேலை வாங்குவதாக எண்ணி.

    “எங்கிட்ட குடு,” என்று நான் கைநீட்ட, “நான் boy! என்னால் முடியும்!” என்று மறுத்தான்.

    ஒருவர் மட்டும் என்னைப் பார்த்து புன்னகைத்தார். அவருக்குப் புரிந்தது, நான் ஏன் குழந்தையை `கஷ்டப்படுத்துகிறேன்’ என்று.

    அடுத்த முறை, ஒரு கூடையில் சில சாமான்களைப் போட்டு, அவனைத் தள்ளிக்கொண்டு வரச்செய்தேன். அவனுக்கு மிகப் பெருமை. `நான் help பண்ணினேன்!’ என்று தாயிடம் பீற்றிக்கொண்டான்.

    கொஞ்சுவானேன்?

    `குழந்தை! அவனால் என்ன முடியும்!’ என்று அவனுக்கான வேலைகளையும் பிறர் செய்தால், சுயமாக நடக்கத் தெரியாது, பிறரைச் சார்ந்திருக்கவே தோன்றும்.

    ஓயாமல் கொஞ்சுவதைவிட அவர்களால் இயன்ற வேலைகளைக் கொடுத்தால் குழந்தைகளின் தன்னம்பிக்கை வளரும்.

    இணைந்து செய்வது

    குழந்தைகள் விளையாடிவிட்டுத் தம் விளையாட்டுச் சாமான்களைத் தரை பூராவும் பரப்பிவிட்டுப் போவார்கள். அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்.

    `நீதான் எல்லாத்தையும் எடுத்து வைக்கணும்!’ இந்த அதிகாரத்தால் அவனுக்கு அழுகைதான் வரும். (தவறு)

    `வா! நாம்ப ரெண்டுபேரும் எல்லாத்தையும் எடுத்து வைக்கலாம். நடக்கிறபோது கால்லே குத்திடுமே!’ (சரி)

    எந்தக் காரியமானாலும், விளையாட்டுபோல் சேர்ந்து செய்பவருடன் உள்ள நெருக்கம் அதிகரிக்கும். (பண்டிகைகளில் குடும்பத்திலுள்ள அனைவரும் வீட்டைச் சுத்தப்படுத்தி அலங்கரிக்கும்போதும், இணைந்து சமைக்கும்போதும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது!)

    பாராட்டும் அவசியம்

    தவறு செய்யும்போது தண்டிப்பதில் குறியாக இருப்பவர்கள் குழந்தைகள் உருப்படியாக ஏதாவது செய்யும்போது அதைப் பாராட்டத் தவறிவிடுவார்கள்.

    பாராட்டினால்தானே தொடர்ந்து நல்வழியில் செல்லத் தோன்றும்?

    எல்லா இனங்களுக்கும், எந்த வயதிலும், பாராட்டு புரிகிறது.

    கதை

    எங்கள் வீட்டில் வளரும் பூனைக்குட்டி தன் பங்கை அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு, பெரிய பூனைக்கு வைக்கும் ஆகாரத்திற்கும் போட்டி போடும்.

    பல முறை தடுத்தபின் அதற்குப் புரிந்தது. ஒரு முறை மெல்ல விலக, “குட்டி சமத்து!” என்று பாராட்டினேன்.

    கண்ணை ஒரு முறை அழுந்த மூடித் திறந்தது, அதை ஆமோதிக்கும் வகையில்!

    சொன்னபடி செய்

    பெற்றோர் தம் வாக்கைக் காப்பாற்றத் தவறும்போது பிள்ளைகளின் மதிப்பையும் இழக்கிறோம் என்பதை உணர்வதில்லை.

    “இன்று எனக்கு பள்ளிக்கூட ஆண்டுவிழாவுக்கான பாட்டுப் பயிற்சி இருக்கிறது,” என்று பூரிப்புடன் சொன்னான், என்னிடம் படிக்க வந்த அமீர்.

    குறித்த நேரத்தில் தாய் வரவில்லை. பையனின் படபடப்பைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருந்தது.

    வழக்கம்போல், இரண்டு மணி நேரம் கழித்து வந்தவளிடம், “நீங்கள் அரை மணியிலேயே வந்துவிடுவீர்கள் என்று அமீர் ஆவலாகக் காத்துக்கொண்டிருந்தான், பாவம்!’ என்றேன்.

    அலட்சியமாகக் கையை வீசியபடி, சூள் கொட்டினாள். அவளுக்கு மகனுடைய ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் முக்கியமில்லை.

    பெற்றோரின் கட்டாயத்தால் படிப்பில் நாட்டமிழந்த பலருள் அமீரும் ஒருவன்.

    Share
  • வீரபாண்டியன் மணந்த தேவரடியாள்

    -சேஷாத்ரி ஸ்ரீதரன்

    கோவில் இயக்கம் தந்திவர்மன், அவன் மகன் கம்ப வர்மன் காலத்தில் கருங்கல் கட்டடமான கற்றளி இயக்கமாக உருப்பெற்று ஆகமமாக முறைப்படுத்தப்பட்ட போது கோவில்களில் ஆடல், பாடல், பூசனை நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டு அதற்கெனத் தம்மைத் தாமே மனமுவந்து ஒப்புக் கொடுப்போர் கோவில்களில் ஏற்கபட்டு அவர்களுக்கான வாழ்வாதார ஏற்பாடுகளும் ஆட்சியாளர்களால் செய்துதரப்பட்டன. தம்மை இறைவனுக்கு அடியவராக ஒப்புக் கொடுத்ததால் இவர்கள் தேவரடியார் எனப்பட்டனர். இதில் ஆண், பெண் இருபாலரும் அடங்குவர். இவருள் அரசகுலத்தாரும் இருந்தனர். கோவில்களில் பெண்களுக்குத் தரப்பட்ட மிக உயர்ந்த பதவி இது என்பதே உண்மை மற்றபடி பலரும் எண்ணுவது போல இந்த தேவரடியார் பாலியற் பெண்டிர் அல்லர்.

    பல்லவர் காலத்தை அடுத்து வந்த சோழப் பேரரசு காலத்தில் கோவில் கற்றளி இயக்கம் அவர் ஆட்சிப் பரப்பு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. இராசராசன் ஆட்சியின் போது தஞ்சைப் பெருவுடையார் கோவிலின் உள்ளே மாடித் தளத்தில் தேவரடியார்க்கு என்றே இடம் ஒதுக்கப்பட்டது. இந்த தேவரடியாருக்கு தனி வீடுகள் கட்டித்தரப்பட்டன. இவர்கள் ஆடல், பாடல், கல்வி, கேள்விகளில் சிறந்தோராக இருந்ததால் வேந்தர் முதல் பொதுமக்கள் வரை அனைவராலும் நன்கு மதிக்கப் பட்டனர்.  இவர்கள் சிறந்த கொடையாளிகளாகவும் இருந்துள்ளனர். கோவில்களுக்கு பல நிவந்தங்கள், கொடைகள் வழங்கி உள்ளனர். இவர்களின் சிறந்த குணங்களுக்காக இவருள் சிலரை வேந்தரும், மன்னவரும், அரையரும் மணந்தனர். இதில் குறிப்பிடத்த தக்கவர் மதுரை ஆண்ட  வேந்தர் வீரபாண்டியன் ஆவார். இவர் திருவானைக்காவில் சாந்தி கூத்து ஆடும் சொக்கத்தாண்டாள் என்ற தேவரடியாளை மணந்தார். வேந்தனை மணந்ததால் அவள் உலகமுழுதுடையாள் எனப்பட்டாள். இவளைப் பற்றிய கல்வெட்டுகள் குமரி மாவட்டம் சுசீந்திரம், நெல்லை வள்ளியூர் ஆகிய இடங்களில் காணக் கிடைக்கின்றன. இவற்றை இனி நாமும் காண்போம்.  

    சுசீந்திரம் கோவில் மேற்கு பிரகாரத்தில் உள்ள வாகனப் புரைச் சுவரில் பொறித்த கல்வெட்டு.

    1. கொல்லம் – 432  மாண்டை(த்) தனு ஞாயிறு 19 சென்ற வி(யாழ) வாட்டையும் வி
    2. சாகமும் ஏகாதேசியும் பெற்ற இந்நாளால் நாஞ்சி நாட்டூர் சுவீந்த்ர சுந்தர சோழச் சதுர்வேதி
    3. தி மங்கலமுடையார் சுவீந்தரம் உடைய நயினார் சீ கோயிலில் திருச்சுற்று மண்டபத்திலிருந்து
    4. சபையும் ஸ்ரீகாரியஞ் செய்வாரும் இருந்தெழுதின செய்கட ஓலை(க்) கரணமாவது உடையார் சுவீந்தர
    5. முடையார்க்கு பெருமாள் ஸ்ரீ வீரபாண்டிய தேவர் நம்பிராட்டியார் சொக்கத்தாண்டாளான
    6. உலக முழுதுடையார் நித்தல் செல்வதாக திருவமுதுக்கு கற்பிச்ச அரிகுறுணி இருநாழிக்கும் அஞ்சிரண்டால்
    7. நெல் முக்குறுணி ஒரு நாழியும் பூஜாகாலத்து அமுது செய்யும் பிராமணர் மூவர்க்கு வெஞ்ச
    8. நமுட்பட நெல் முக்குறுணியுங்கூட _ _ _ _ க்குங் கல்பிச்ச புதுப்பொன் அச்சு இருநூறு
    9. இவ்வச்சு இருநூற்றிலும் இவ்வூர் தேவரடியாள் குன்றாண்டி திருவாண்டி கைக்கொ
    10. ண்ட அச்சு 155 க்கும் நாளொன்றுக்குச் செலுத்தும் அரிகுறுணி யிதில் பெரிய நாயனார்(க்)கு திரு
    11. வமுதுக்கு அரி அஞ்ஞாழியும் திருவேங்கடத்துக்கு திருவமுது செய்விச்சு சோறுதான் கொண்டுவரும்
    12. அரி முந்நாழியும் பிராமண போஜனத்துக்கு ஓராண்டில் இவள் செலுத்தும் மாசம் ஒன்பது
    13. ம் இப்படி செலுத்துவாளாகவும் செலுத்துமிடத்து முட்டுகில் இவள் கைக்கொண்ட அச்சு 155
    14. க்கும் ஓன்றொன்றே காலாக வரக் கண்ட அச்சு 39 ங்கூட அச்சு 194 க்குஞ் செலுத்தின  நில
    15. ங்கள் வேட்கைக் குளத்தின் கீழ் அமரபுயங்க வாய்க்காலுக்கு வடக்கு _ _ _ _ _ _ _ _
    16. கீழ் மருதுறை தடி 1 நில _ _ _ _ _ _ பள்ள மடை தடி _ _ _ _ _ _ யும் இந்திர வீரவாய்க்காலுக்கு தெற்கு _ _ _ _
    17. _ _ _ _ _ _ யும் ஆகத்தடி மூன்று _ _ _ _ _ _ ன் மேல் அச்சு _ _ _ _ _மேல் அச்சு _ _ _ _ மேல்படியாள்  _ _ _ _ _ _ _
    18. _ _ _ _ _ அமரபுயங்க வாய்க்காலுக்கு தெக்கு _ _ _ _ கேசவநாராய _ _ _ _ _ _
    19. _ _ _ _ _ _ பனையறைதடி ஒன்று நிலம் வாய்க்கால் _ _ _ _ _ கு வடக்கு
    20. றைதடி 1 நில _ _ _ _ _ _ ஆக _ _ _ _ _ யின் மேலும் ஓ _ _ _ _ _ _
    21. _ _ _ _ _ _ _ _ _ யின் மேலும் ஒள்ள _ _ __ _ _ _ __
    22. அச்சு _ _ _ _  பிரம்ம சுவமில் 5 ஆம் கண்ணாற்றில் குளத்தில் பெரு _ _ _ _ _
    23. அச்சு 90 கொடுத்து விலை கொண்டுடைய _ _ _ _ _ றொன்றாலும் ஆன இந்நில _ _ _
    24. தொண்ணூற்று நாலும் மேல்படியில் செல்லாண்டி சேகராண்டாள் கைக் கொண்ட _ _ _

    வியாழவாட்டை – வியாழ ஆழ்ச்சை(கிழமை); செய்கட ஓலை – செய்யக்கடவது பற்றிய ஓலை; சபை – கருவறை பிராமணர்; ஸ்ரீகாரியம் – கோவில் திருப்பணியாளர்; கரணம் –ஆவணம்; நம்பிராட்டி – துணைவி, தேவி, மனைவி;  நித்தல் – எப்பொழுதும்;  கற்பிச்ச – பிடிபாடு, வழிகாட்டுநெறி,  guidelines; வெஞ்சனம் – சமையல்; அச்சு – காசு; முட்டுகில் – நின்றுபோனால். 

    கொல்லம் ஆண்டு 432 (கி.பி. 1257) தனுர் ராசி நேரும் ஞாயிற்றுக்கிழமை 19 நாள் இந்த கல்வெட்டு வெட்டப்பட்டது. கடந்த வியாழக்கிழமை விசாக நட்சத்திரமும் ஏகாதேசியும் கூடிய நாளில் நாஞ்சில் நாட்டூரான சுசீந்திரம் என்னும் சுந்தரச்சோழ சதுர்வேதி மங்கலத்தில் சுசீந்திரமுடைய ஈசனின்  கோவில் திருச்சுற்று மண்டபத்தில் கருவறைப் பிராமணரும் கோவிற் பணியாளர்களும் அமர்ந்து எழுதிய செய்யக்கடவதான ஓலை ஆவணம் யாதெனில் இறைவர் சுசீந்திர ஈசனுக்கு வேந்தன் வீரபாண்டியனின் தேவியான சொக்கத்தாண்டாள் என்னும் உலகமுழுதுடையாள் எப்பொழுதும் இறைவனுக்கு திருவமுது நடந்துவர வேண்டும் என்று வழிகாட்டுநெறி தந்து அரிசிகுறுணி அளவில் இருநாழிக்கும் 10ன் அளவு நெல்லை ஒரு நாழி அளவிற்கு அதற்குத் தரவேண்டும். பூசனை காலத்தில்  சோறு உண்பிக்க மூன்று பிராமணருக்கான சமையல் செலவு உட்பட நெல் முக்குறுணி அளவிற்கு கொடுக்க வழிகாட்டுநெறி தந்து இவற்றுக்கு அவள் தந்த புதுப்பொன்னாலான காசு இருநூறு ஆகும். இந்த இருநூறு பொற்காசில் 155 ஐ சுசீந்திரத்து தேவரடியாள் குன்றாண்டி திருவாண்டி என்பாள் கடனாகப் பெற்றுக் கொண்டாள். இதற்கான வட்டியை  இவள் ஒவ்வொரு நாளும் குறுணி அளவு அரிசி தரவேண்டும். இந்த குறுணி அரிசியில் ஐந்துநாழி ஈசன் திருவமுதுக்கும்  எஞ்சியவற்றில் திருமாலுக்கு திருவமுது சோறும் ஆக்க வேண்டும்.  இவள்  மூன்று நாழி அளவில் கொண்டு வரும் அரிசி பிராமணர் உணவிற்கு ஆகும். ஓராண்டில் இவள் மாதாமாதம் செலுத்த வேண்டிய பணம் ஒன்பது ஆகும். இவற்றை எல்லாம் செய்ய முடியாது நின்று போனால் 155 பொற்காசுகளுக்கு  ஒரு காசிற்கு கால் பொற் காசு என்ற கணக்கில் 39 பொற்காசையும் கூட்டி 155 + 39 = 194 பொற்காசிற்கு செலுத்த வேண்டிய அடமான நிலங்கள் வேட்கைக் குளத்திற்கு கிழக்கே உள்ள அமரபுயங்கன் வாய்க்காலுக்கு வடக்கேயும், இந்திர வீரவாய்க்கால்க்கு தெற்கேயும் உள்ளன என்று நில எல்லைகள் குறிக்கப்படுகின்றன. இவளோடு வேறு ஒரு தேவரடியார் செல்லாண்டி சேகராண்டாள் வாங்கிய பணதிற்கு என்ன செய்யவேண்டும் என்று கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. இதன் கல்வெட்டு பெரிது என்பதால் இங்கே தரப்படவில்லை. இணைப்பில் அதைக் காணலாம்.

    உலகுமுழுதுடையாள் தந்த காசு உடனடியாக வட்டிக்கு விடப்பட்டு அதன் மூலம் வட்டியாக குன்றாண்டி திருவாண்டியிடம் அரிசி பெறப்பட்டு  உலக முழுதுடையாளின் திருவமுதப்படிக்கான வழிகாட்டுநெறி நிறைவேற்றப்படுகின்றது. இது ஏனெனில் பண்டு காசு புழக்கம் செல்வரிடம் மட்டுமே நிலவியது. பொது மக்கள் பண்டமாற்றில் வாழ்க்கையை நடாத்தினர். அதனால் இப்படி ஒரு மாற்று ஏற்பாடு செய்யவேண்டிய கட்டாயம் கோவில் பணியாளருக்கு ஏற்பட்டது. கோவில் பணியாளருக்கும் குன்றாண்டிக்கும் ஏற்பட்ட உடன்பாடே கல்வெட்டாகக் காட்சிப்படுகின்றது. பிற்பகுதியில் கல்வெட்டு பல்லிடங்களில் சிதைந்துள்ளதால் செய்தியை முழுவதுமாக அறிய முடியவில்லை. கல்வெட்டில் சேரநாட்டு வழக்குச்சொல் ஆங்காங்கே புழங்குகின்றது. கி.பி.

    1257 இல் ஜடவர்ம சுந்தர பாண்டியன் தான் ஆட்சியில் இருந்தான், வீரபாண்டியன் 1309 இல் தான் ஆட்சிப் பொறுப்பிற்கு வருகிறான். ஆண்டுக் கணக்கு வாசிப்பில் ஏதோ தவறு நிகழ்ந்துள்ளது. அல்லது சுந்தர பாண்டியனுக்கு வீரபாண்டியன் என இன்னொரு பெயர் இருந்துள்ளது எனக் கொள்ள வேண்டும்.

    பார்வை நூல்: கல்வெட்டு ஆராய்ச்சி, பக். 45 & 46, ஆசிரியர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. மூல நூல் Travancore archaeological series, Vol 5.  

    இனி, திருநெல்வேலி வள்ளியூரில் உள்ள மூன்றுமுக அம்மன் கோவிலில் பொறித்த கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ கோசடைய பன்மரான திரி
    2. புவன சக்ரவர்த்திகள் ஸ்ரீ வீர பாண்டிய
    3. தேவர் (க்)கு யாண்டு 4 வது (ராஜகம்பீ)
    4. ர வளநாட்டு திருவானைக்காவில்
    5. திருப்பதியில் சாந்திக் கூத்திகளில்
    6. சொக்கத் தாண்டாரான உலகமு
    7. ழுதுடையார் வள்ளியூர் வடக்கு வா
    8. சலில் தேவி கோயிலுக்கு உபான (ஜெ
    9. கதி குமுதோபரி பட்டிகையந்த மகா) 
    10. தேவியையும் வர்திச்சுத் தங்கள் பேத்தி(யா
    11. ரா) சிறிய பிள்ளை (யை உலகத் தாண்டாளுக்)
    12. கும் _ _ _ _ _ ல அவ _ _ _ _ _ _ _ _ யு
    13. ருளு _ _ _ _ _ _ _ கோயில் _ _ _ _ _ _ _ _
    14. ஞ்செ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _  உலகமுழுதுடையா
    15. த _ _ _ _ _ _ _ _ க்கு _ _ _ _ _

    சாந்தி கூத்தி – சாந்தி கூத்தாடும் ஆட்டத்தி; உபான ஜகதி – கருவறைப் புறச் சுவர் கீழ் பகுதி;  குமுதோபரி – விமான உறுப்புள் ஒன்று; பட்டிகை – கருவறை புறச் சுவர் உறுப்பு; வர்திச்சு – எழுந்துருளவித்து

    வேந்தன் வீரபாண்டியனின் 4 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1313)  ராஜகம்பீர வளநாட்டில் அமைந்த திருவானைக்காவல் கோவிலில் சாந்தி கூத்தாடும் கூத்திகளில் சொக்கத் தாண்டாள் எனும்  உலக முழுதுடையாள் வள்ளியூர் வடக்குவாசலில் அமைந்த அம்மன் கோவில் கருவறை புறச்சுவருக்கு உபான ஜகதி, குமுதம், முப்பட்டை ஆகியவற்றை கட்டிக் கொடுத்து அந்த அம்மனை எழுந்தருளச் செய்தாள். தன் பேத்தியோடு இக்கோவிலுக்கு வந்திருந்தாள். பிற செய்தி கொண்ட கல்வெட்டுப் பகுதி சிதைந்ததால் அச்செய்திகளை அறிய முடியவில்லை.

    வீரபாண்டியனின் 4 ஆம் ஆட்சி ஆண்டில் சொக்கத் தாண்டாள் தன் பேத்தியோடு இக்கோவிலுக்கு வந்திருந்தாள் என்றால் வீரபாண்டியன் முதுமையில் தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான் எனத் தெரிகின்றது. இளமையில் இவன் அவளை மணந்தான் என்பது புலனாகின்றது. சொக்கத் தாண்டாள் ஒரே காலத்தில் சுசீந்திரம் மற்றும் வள்ளியூருக்கு திருச்செலவு சென்றாள் என அறியலாகின்றது.

    பார்வை நூல்: கல்வெட்டு ஆராய்ச்சி, பக்.  48 & 49, ஆசிரியர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. மூல நூல் A.R.E. 1929-30 No 364 P 37.

    Share
  • சேக்கிழார் பா நயம் 34

    திருச்சி  புலவர் இரா. இராமமூர்த்தி

    சுந்தரமூர்த்தியாரை, இறைவன்  திருவருட்டுறையமைந்த  திருவெண்ணை நல்லூரில் ஓர் அந்தணராக வந்து  ஆட்கொண்டருளியபின்    இறைவன் மேல்  அருச்சனை யாகிய சொற்றமிழ்ப் பதிகம்  பாடினார்!  பின்னர் அங்கிருந்து  புறப்பட்டுத் திருநாவலூர் கடந்து  திருத்துறையூரில்  தவநெறி தந்தருள வேண்டிப்   பாடினார். பின்னர் பெண்ணை  யாற்றைக்   கடந்து திருத்தில்லையில்  நடமாடும் கூத்தப் பிரானின்   திருப்பாதம்  பணிய   எண்ணினார்.  தில்லை  செல்லும்   வழியிலே திருமாணி குழியைக்  கடந்து  திருவதிகை என்ற  தலத்தை அடைந்தார்.

    அங்கேதான்  திருநாவுக்கரசரைச்  சிவநெறியில்   செலுத்த  வேண்டித்  திலகவதியார் வழிபட்டார்;  பின்னர்   அப்பருக்குத்  திருநீறளித்தார்!  அந்தத்  திருத்தலத்தில் உறைந்த இறைவனைக்  ‘’கூற்றாயினவாறு’’  என்ற  பதிகத்தால்   திருநாவுக் கரசர்   வழிபட்டார், அந்த அருள்  வரலாற்றை எண்ணிய  சுந்தரர், திருநாவுக்கரசர் நடமாடிய திருத்தலத்துள் கால்வைக்க மாட்டேன் என்று ஊருக்குப்  புறம்பேயுள்ள ‘’சித்தவட மடம்’’ என்ற   வழிப்போக்கர் தங்கும் இடத்தில்  சற்றே சாய்ந்து   படுத்தார்.          

    சுந்தரர் செல்லுமிடந்தோறும்  எழுந்தருளும்  சிவபிரான், அந்தச்   சித்தவட மடத்தில் சுந்தரர்  படுத்திருந்த  இடத்திற்கு ஓர்  அந்தணர்  உருவுடன் வந்தருளி,  அவர் தலைமேல்  தம் பாதத்தை  வைத்தபடிப்  படுத்தார்! தம் தலைமேல்  கால் படும்படி, அவர் படுத்திருப்பதைக்  கண்ட சுந்தரர், ‘’அருமறை உணர்ந்த அந்தணரே, இவ்வாறு  என் தலைமேல்  கால் படும்படிப்  படுக்கலாமா?’’ என்று  கேட்டார். சுந்தரருக்குத்  தாமும் உயர்ந்த  அந்தணர் குலத்தில் பிறந்தோம்  என்ற செருக்கு! அதனால்  ஓர் அந்தணர்  தம் தலைமேல்  பாதம் படப்  படுக்கலாமா?  என்ற  சினத்துடன், ‘’அரிய  வேதங்களைக்  கற்ற  அந்தணரே! இவ்வாறு  அடுத்தவர் தலைமேல் கால் வைத்துப் படுக்கலாமா?’’ என்று கேட்டார்.

    வந்தவர் வேதம் பயின்ற  அந்தணர் என்பதைத்  தம் வாக்கால் வெளிப்படுத்திய  சுந்தரர், தம்மைத்  திருவெண்ணெய் நல்லூரில்  தடுத்தாட்கொள்ள  வந்த சிவபெருமான்  வேதம் பயின்ற அந்தணர்  கோலத்தில்தானே வந்தார், என்பதை மறந்து விட்டார்! வந்த அந்தணர்  சிவபெருமானே  என்பதையும் உணர வில்லை.  அதனால்  அந்தணரிடம்  சினங் கொண்டார்! இன்னும் அவர் மையல் மானுடமாய்  மயங்கினார்! ஆனால் அவரைத்  தொடர்ந்து வந்த சிவபெருமான் , தம் அடையாளத்தை  நுட்பமாக  உணர்த்தினார்! ‘’ எனக்கு  அகவை  மிகவும் அதிகம். ‘’யான்  என்று பிறந்தவன்  என்று  உணராத  இயல்பினன்!’’என்றார்! அவரைப்‘’பிறவாயாக்கைப்பெரியோன், முதுமுதல்வன்’’என்று  சங்கப்பாடல்கள் கூறும். காலப்  பெருவெளியில் என்றும்   நடனமாடுபவர் அவர்! அவர்  ஆடும்  பரவெளிக்குத் திசைகள்  இல்லை !  ஆதலால், ‘’என் மூப்பு என்னைத்   திசை அறியா  வகையில் இவ்வாறு உன்னை மிதிக்கச்செய்துவிட்டது!’’ என்று   அவரே  கூறியருளினார்!  இதனைக்   கேட்ட  பின்னரும் சுந்தரர் பெருமானை உணரவில்லை. ஆதலால் முதியவரை  விட்டு  விலகி சற்றுத்   தள்ளிப்   படுத்தார்! இதனைச்  சேக்கிழார்,  

    ‘’அந்நிலை ஆரூரன் உணர்ந்து அருமறையோய் உன்னடி என்

     சென்னியில் வைத்தனை ‘’

    என்று பாடினார்!  உடனே சிவபிரான் ,

    ‘’திசை அறியா   வகை செய்தது  என்னுடைய   மூப்புக்  காண் ! ‘’    என்றார். அப்படியும்  உணராத சுந்தரர் ,

    ‘’அதற்கு இசைந்து

     தன் முடி அப்பால் வைத்தே துயில் அமர்ந்தான் தமிழ் நாதன்.’’

    என்று  பாடினார் . அங்கும்  அவர் தலைமேல்  தம் காலை நீட்டினார்   இறைவன்! ‘’இங்கே மீண்டும் மீண்டும்  என்னைத் தொடர்ந்து வந்து  பலமுறை மிதித்தது  ஏன்?’’ என்று  சுந்தரர் கேட்டார்! கங்கையைச்  சடையில் மறைத்துக் கொண்ட சிவபிரான் , ‘’என்னை அறிந்து கொள்ள வில்லையோ?’’ என்று கேட்டு , அங்கேயே  மறைந்தார்! அதன் பிறகே  சுந்தரருக்கு  உணர்வு  வந்தது. எந்தக்  கூத்தன் திருவடியில்  வணங்கிப்  பணிய வேண்டும் என்று ஆசைப்பட்டுத்  தில்லை நோக்கி நடந்தேனோ, அந்தப் பெருமானே  எளியேன் தலை  மேல்  திருவடி பதித்தானே !’’ என்று புலம்பினார்! எண்ணங்களின் அலைபாய்ந்த  அவர் உள்ளம்,   செங்கயல் மீன்கள் பாயும் குளம்  போல  அலைபாய்ந்தது  என்பதைச் சேக்கிழார் ,  

    ‘’அங்குமவன்   திருமுடிமேல்  மீட்டும் அவர்   கால் நீட்ட

    செங்கயல் பாய்   தடம்புடைசூழ்  திருநாவ    லூராளி

    ‘’இங்கென்னைப்   பலகாலும்  மிதித்தனைநீ   யார்?’’ என்ன

    கங்கைசடைக்  கரந்தபிரான்   ‘’அறிந்திலையோ?’’ எனக்கரந்தான் ‘’

    எனப் பாடினார்! இப்பாடலில்  சுந்தரர் மனக்கலக்கமும், இறைவன்  அருளிய மொழியும், அடியார்  ஒழுக்கமும், ஆண்டவன்  விளையாடலும் எனப் பல்வகைச்  சொல்லாட்சித்  திறத்துடன்  விளங்குவதைக்  காணலாம்!

    Share
  • 20 ஆண்டுகள் வானியல் வல்லுநர் விண்ணோக்கி ஐந்து புறக்கோள்கள் கண்டுபிடிப்பு

    -சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    +++++++++++++++++

    ஊழி முதல்வன் உட்கொளும் மூச்சில்
    உப்பிடும் பிரபஞ்சக் குமிழி
    உடைந்து மீளும்!
    பரிதி விழுங்கிய கருந்துளை
    வயிற்றில் உயிர்த்தெழும் மீன்கள்!
    விண்வெளி விரிய விண்ணோக்கியின்
    கண்ணொளி நீண்டு செல்லும்!
    நுண்ணோக்கி ஈர்ப்புக் களத்தை
    ஊடுருவிக் காமிரா
    கண்வழிப் புகுந்த
    புதிய பூமிகள் இவை!
    பரிதி மண்டலம் போல்
    வெகு தொலைவில் இயங்கி
    சுய ஒளிவீசும்
    விண்மீனைச் சுற்றிவரும்
    மண்ணுலகம் இவை!
    ஈர்ப்பு விண்வெளியில் முதன்முறை
    பூமி போல் வாயு  சூழ்வெளி
    பூண்ட அண்டக்கோள் ஒன்றைக்
    கண்டுள்ளது கெப்ளர் விண்ணோக்கி!
    சில்லியின் வானோக்கி மூலம்
    விண்வெளி நிபுணர்
    கண்ட கோள்கள் பற்பல! ஆயினும்
    இன்னும் சவால் விட்டு
    கண்ணுக்குத் தெரியாது ஒளிந்த வண்ணம்
    தேடிக் கிடைக்காக் கோள்கள்
    கோடிக் கணக்கில்!

    +++++++++++++++

    20 ஆண்டுகள் விண்ணோக்கி ஐந்து புதிய புறக்கோள்கள் கண்டுபிடிப்பு

    2019 ஏப்ரல் வரை அண்டவெளியில் 4000 புறக்கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. முதல் புறக்கோள் 1995 ம்  ஆண்டில் வெளியிடப்பட்டது. அவற்றில் பெரும்பான்மையான புறக்கோள்கள் அவற்றின் பரிதிகளைச் சுற்றிவரும் பாதைகளின் காலங்கள் [Orbital Periods] குன்றியதாக இருந்தன. ஒரு புறக்கோளின் வசிப்பை உறுதியாக்க, அது அதன் பரிதியை ஒரு முறை அல்லது பல முறை சுற்றும் காலத்தை நிர்ணயம் செய்ய வேண்டியுள்ளது. அதற்கு வானியலார் சில நாட்கள் முதல், பல பத்தாண்டுகள் வரை காத்துக் கண்காணிக்க வேண்டியுள்ளது. உதாரணமாக நமது பூமி சூரியனை ஒருமுறை சுற்ற ஓராண்டு ஆகும்போது, வியாழக்கோள் ஒருமுறை சுற்ற 12 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும்.

    அண்டவெளியில் புறக்கோள்களின் வசிப்பை நீண்ட காலம் கண்காணித்துக் கண்டுபிடிக்க, தனிப்பட்ட கருவிகள் ஏந்திய விண்ணோக்கிகள் தேவைப்படுகின்றன. தென் அமெரிக்கா சில்லியில் உள்ள, சுவிஸ் ஜெனிவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த யூலார் விண்ணோக்கி [Swiss Euler Telescope at La Silla Observatory, Chile] அத்தகைய நெடுங்காலக் கண்காணிப்புக்குப் பயன்படுகிறது. அந்த விண்ணோக்கியில் 20 ஆண்டு காலமாய்ப் பல வானியல் விஞ்ஞானிகள் கூர்ந்து நோக்கி, ஐந்து புறக்கோள்களைக் கண்டுபிடித்துள்ளனர். அவற்றைக் காண இரண்டு முக்கிய மறைமுக முறைப்பாடுகளை  பயன்படுத்தினர்.

    ஆர வேக முறைப்பாடு [Radial Velocity Method]. இம்முறையில் கோளின் ஈர்ப்பு

    • விசைத் தாக்கம் பரிதியைப் பாதிப்பதை அளப்பது.
    • கோளின் குறுக்கீடு, சிறு மறைப்பு [Mini Eclipse] பாதிப்பை அளப்பது.

    அவ்விரு முறைப்படி ஐந்து புறக்கோள்கள் மிகத் தெளிவாகவும், மேலும் நான்கு புறக்கோள்களின் பாதைகள் கண்டறியப்பட்டன. அவற்றின் சுற்றுக் காலங்கள் [Orbital Periods] 15.6 & 40.4 ஆண்டுகட்கு இடைப்பட்டன. அவற்றின் நிறைகள் வியாழக் கோள் போல் சுமார் 3 முதல் 27 மடங்கு இருந்தன. அப்புதிய புறக்கோள்கள் கண்டுபிடிப்பு 15 ஆண்டு சுற்றுக் காலத்துக்கு மேற்பட்ட கோள் எண்ணிக்கையை 26 ஆகப் பெரிதாக்கி யுள்ளது.

    u

    +++++++++++++++
    https://youtu.be/g9pCLcZEJIw

    http://exoplanet.eu/
    http://www.ibtimes.com/gj-1132b-first-astronomers-detect-atmosphere-around-nearby-low-mass-super-earth-2522270
    ++++++++++++

    The rocky exoplanet GJ 1132b was first pinpointed in 2015 (Dana Berry)
    ++++++++

    பூமிபோல் சூழ்வளியுள்ள நீர்க்கோள் முதன்முறைக் கண்டுபிடிப்பு

    2017 ஏப்ரல் 6 ஆம் தேதி ஜெர்மன் மாக்ஸ் பிளாங்க் வானியல் ஆய்வக விஞ்ஞானிகள் பூதப்பூமி [Super-Earth GJ 1132b] ஒன்று சூழ்வெளி வாயு உள்ள நமது பூமிபோல் இருப்பதை முதன்முறை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளார். வாயு உள்ள குன்றிய நிறை கொண்ட அண்டக்கோள் நமது பூமிபோல் வடிவமும், நிறையும் ஒத்திருப்பதை தெரிவித்துள்ளார். அண்டவெளிக் கோளில் உயிரினம் இருப்பதற்கு இந்த புதிய கண்டுபிடிப்பு முக்கிய எட்டடி வைக்கும் என்று தெரிகிறது. மாக்ஸ் பிளாங்க் ஆய்வகத்து ஜெர்மன் விஞ்ஞானிகள் இதன் விண்மீன் [GJ 1132] காண தென்னமெரிக்கா, சில்லியில் உள்ள 2.2 மீட்டர் விண்ணோக்கி [ESO/MPG Telescope] பயன்படுத்தியுள்ளார். புதிய பூதப்பூமியின் நிறை நமது பூமிபோல் 1.6 மடங்கு. அதன் ஆரம் பூமிபோல் 1.4 மடங்கு. விஞ்ஞானிகளின் தற்போதைய குறிக்கோள் : புதிய பூமியில் உயிரின வளர்ச்சிக்கு உகந்த இரசாயனப் பொருள் கலந்த சூழ்வெளிக் காற்றுள்ளதா, போதிய உயிர்வாயு ஆக்சிஜென் உள்ளதா என்று அறிவதே. புதிய கோள் [GJ 1132b] அதன் செங்குள்ளி விண்மீனை [GJ 1132] சுற்றிவரும் பாதை, நமது பூமியிலிருந்து 39 ஒளியாண்டு தூரத்தில், வேலா தென்னக விண்மீன் மந்தையில் [Southern Constellation Vela] உள்ளது.

    Water vapour in Large Planet

    Gliese 1132 b
    EXOPLANET List of exoplanets

    Exoplanet Comparison GJ 1132 b.png
    Size comparison of Gliese 1132 b with Earth.

    PARENT STAR
    Star Gliese 1132
    Right ascension (α) 10h 14m 51.1s
    Declination (δ) −47° 09′ 12″
    Apparent magnitude (mV) 14.7
    Distance 39 ly
    (12 pc)
    Spectral type M3.5D
    ORBITAL ELEMENTS
    Orbital period (P) 1.6 d
    PHYSICAL CHARACTERISTICS
    Mass (m) 1.6 M⊕
    Radius (r) 1.2 R⊕
    Stellar flux (F⊙) 19 ⊕
    Temperature (T) 410 K (137 °C; 278 °F) K
    DISCOVERY INFORMATION
    Discovery date May 10, 2015 (announced)[1]November 12, 2015 (confirmed)[2]
    Discoverer(s) MEarth-South Array Team
    Discovery method Transit
    Discovery site Chile
    Discovery status Confirmed
    OTHER DESIGNATIONS
    Gliese 1132 b, Gl 1132 b, GJ 1132 b

    ஒரு கோள் தனது மூலச் சூரியனைக் கடந்து செல்லும் போது, இப்போது பயன்படுத்திய விதிமுறையைப் [Radial Velocity Technique] பின்பற்றி நீர் ஆவி, மற்றும் வேறு சூழ்வெளிக் கலவைகளையும் உளவிக் கண்டுபிடித்து விடலாம். கோளம் விண்மீனுக்கு வெகு தூரத்தில் இருந்தாலும், படமெடுத்துக் கோளின் சூழ்வெளியை அறிந்து விடலாம்.

    அலெக்ஸாண்டிரா லாக்வுட் [விஞ்ஞானத் தகவல் வெளியீட்டு ஆசிரியர்]

    இப்போதைய பொறிநுணுக்கம் பூமியை ஒத்த கோள்களைக் உளவிக் காண இயலாது. எதிர்கால ஜேம்ஸ் வெப் விண்ணோக்கி [James Webb Space Telescope] & 30 மீட்டர் விண்ணோக்கி [Thirty Meter Telescope] குளிர்ந்த கோள்களைக் காணவும், அவற்றில் நீர் உள்ளதா என்று ஆராயவும் உதவும்.

    ஜெஃப்ரி பிளேக் [பேராசிரியர் பிரபஞ்சவியல் இரசாயனம் & அண்டக்கோள் விஞ்ஞானி]

    Water found in exoplanet

    நாசாவின் கெப்ளர் விண்ணோக்கி புதிய புதையல் கோள்கள் கண்டுபிடித்தது

    2014 பிப்ரவரி 26 இல் நாசா தனது கெப்ளர் விண்ணோக்கியில் குறுகிய காலத்தில் பூமியைப் போலுள்ள 715 கோள்களை நமது சூரிய மண்டலத்துக்கு அப்பால், வேற்று சூரிய மண்டல விண்வெளிப் புதையலாகக் கண்டுபிடித்துள்ளது. அந்த 715 கோள்கள் தமது தனிப்பட்ட 305 வெவ்வேறு விண்மீன்களைச் சுற்றி வருகின்றன. இதுவரை நாசா 1700 [2014 பிப்ரவரி] கோள்களைக் கண்டுபிடித்துள்ளது. புதுக்கோள்களில் உயிரினம் வாழ நீரும், சூழ்வெளியும் உள்ளதா வென்று இப்போது தெரியாது. அவை குளிர்ந்த கோள்களா, சூட்டுக் கோள்களா என்றும் தெரியாது. அவற்றில் நான்கு கோள்கள் பூமியை ஒத்த வடிவமும், விண்மீனுகளுக்கு அருகில் உயிரின வசிப்பு அரங்குகளில் [Habitable Zones] இருந்தன. 2009 ஆண்டில் ஏவப்பட்டு முதலிரண்டு ஆண்டுகளில் கெப்ளர் விண்ணோக்கி உளவிக் கண்டுபிடித்த கோள்களே இந்த 715 புதையல் கோள்கள்.

    Hunt for Earth like planets

    சூடான புதிய பூதக்கோளில் நீர் ஆவி இருப்பு முதன்முறை காணப் பட்டது.

    நமது சூரிய மண்டலத்துக்கு அப்பால் இயங்கும் பூதக்கோள் வியாழனைப் போன்ற ஒரு பெருங்கோளில் நீர் ஆவி [Water Vapour] இருப்பு முதன்முறை கண்டுபிடிக்கப்பட்டது. காலிஃபோர்னி யாவைச் சேர்ந்த கால்டெக் ஆய்வாளார்கள், ஒரு புதுவித பொறி நுணுக்கத்தைப் பின்பற்றி, புற அண்டங்களின் சூழ்வெளி வாயுக்களை ஆராய்ந்து, நீர் இருப்பதை உளவிக் கண்டுபிடித்துள்ளது. இந்த அரிய கண்டுபிடிப்பை வெளியிட்டவர் அலெக்ஸாண்டிரா லாக்வுட் [Alexandra Lockwood] என்று அழைக்கப்படும் ஒரு பட்டப் படிப்பு மாணவி. இம்முறையப் பயன்படுத்தி அண்டக் கோளில் உள்ள மற்ற சூழ்வெளி வாயுக்களையும் அறியமுடியும்.

    CHIO Observatory, Chile

    “இந்த இரண்டு நீர்க்கோள்கள் நமது பரிதி மண்டலக் கோள்களைப் போன்றவை அல்ல. அவை கரையில்லாத, முடிவற்ற கடல்களைக் கொண்டவை. ஆங்கே உயிரினங்கள் இருக்கலாம். ஆனால் அங்கிருப்போர் மனிதர் போல் பொறியியற் திறமை உடையவரா என்பது தெரியாது. இந்த நீர்க்கோள்களில் உயிரின வாழ்வு, உலோகம், மின்சாரம், நெருப்பு போன்றவை இல்லாது, கடலடியில்தான்  நீடிக்க முடியும். ஆயினும் அவ்விரண்டு நீல நிறக் கோள்கள், பொன்னிற விண்மீன் ஒன்றைச் சுற்றி வருவதைக் காண்பது வனப்புடன் இருக்கும். மேலும் அவற்றில் உயிரின இருப்பைக் கண்டுபிடித்த பொறிநுணுக்க அறிவுத்தரம் நம்மை வியக்க வைக்கும்.”

    லீஸா கால்டநேகர் [இயக்குநர் விஞ்ஞானி மாக்ஸ் பிளாங்க் வானியல் ஆய்வுக்கூடம்]

    கண்டுபிடித்த நீர்க்கோள்கள் கெப்ளர் -62e, கெப்ளர்-62f [Kepler -62e & Kepler -62f] எனப் பெயரிடப் பட்டுள்ளன. அவை கெப்ளர் -62 [Kepler -62] என்னும் விண்மீனைச் சுற்றி வருகின்றன. நீர்க்கோள் கெப்ளர் -62e திரண்ட முகில் வானைக் கொண்டது. கணனி மாடலின்படி துருவம் வரை முழுக்கவும் சூடான வெப்ப மயமானது [Warm and Humid]. தூரத்தில் சுற்றும் நீர்க்கோள் கெப்ளர் -62f கார்பன் டையாக்ஸைடு வாயுவை மிகுதியாகக் கொண்டு “கிரீன்ஹௌவுஸ் விளைவால்” சூடேறி நீர்மயத்தை நீடிக்கச் செய்கிறது. இல்லையென்றால் அதன் நீர்வளம் பனியாகி ஓர் பனிக்கோளாய் மாறிப் போயிருக்கும்.”

    டிமித்தர் ஸஸ்ஸெலாவ் [ஹார்வேர்டு வானியல் வல்லுநர்] [Dimitar Sasselov]

    Two Water Planets“ஆதிகாலத்துப் பூர்வீக உலகங்கள் இன்னும் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து கிடக்கின்றன.”

    ரே வில்லார்டு & அடால்ஃப் ஷாலர் (Ray Villard & Adolf Schaller)

    “இன்னும் பத்தாண்டுகளுக்குள் மற்ற விண்மீன் குடும்பங்களில் நமது பூமியைப் போல் உள்ள கோள்களையும், உயிரினச் சின்னங்கள் இருப்பையும் கூடத் தேடிக் கண்டுபிடித்து விடலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.”

    ரே ஜெயவர்த்தனா (Ray Jayawardhana, Associate Professor of Astronomy, University of Toronto) (2007)

    Kepler -62 System

    நாசாவின் கெப்ளர் விண்ணோக்கி முதன்முறை இரண்டு நீர்க்கோள்களைக் கண்டு பிடித்தது

    2013 ஜூலை 6 ஆம் தேதி நாசாவின் கெப்ளர் விண்ணோக்கி முதன்முறை இரண்டு நீர்க்கோள்கள் சுற்றிவரும் ஒரு விண்மீனைக் கண்டுபிடித்தது. அந்த விண்மீனின் பெயர் கெப்ளர் -62 [Kepler -62]. விண்மீன் கெப்ளர் -62 நமது சூரியனை விடச் சிறியது. உஷ்ணமும் தணிந்தது. அந்த விண்மீனைச் சுற்றும் நீர்க்கோள்களின் பெயர்கள் : கெப்ளர் -62e, கெப்ளர் -62f [Kepler -62e and Kepler -62f]. நீர்க்கோள் கெப்ளர் -62e, அதன் விண்மீனை ஒருமுறைச் சுற்றும் காலம் 122 நாட்கள்; நீர்க்கோள் கெப்ளர் -62f விண்மீனைச் சுற்றும் காலம் 267 நாட்கள். அவற்றின் விண்மீன் குறுக்கீடு போக்கை நோக்கி அவற்றின் ஒப்புமை அளவுகள் அறிந்து கொள்ளப்படும். நீர்க்கோள் கெப்ளர் -62e, நமது பூமியை விட 60% பெரிதாகவும், நீர்க்கோள் கெப்ளர் -62f 40% பெரிதாகவும் இருப்பதாய்க் கணிக்கப்பட்டுள்ளன. வானியல் விஞ்ஞானிகள் நீர்க்கோள் இரண்டும் சுற்று வாயு மண்டலம் இன்றி பாறையாலும், நீராலும் உருவானவை என்று ஊகிக்கிறார். கெப்ளர் -62 விண்மீனை அருகில் சுற்றும் நீர்க்கோள் கெப்ளர் -62e, சற்று சூடாகவும், பூமியை விட மேகம் மூடியிருப்பதாகவும் தெரிகிறது. தூரத்தில் சுற்றும் நீர்க்கோள் கெப்ளர் -62f பேரளவு CO2 கரியமில வாயு மிகுந்து, “கிரீன் ஹவுஸ் விளைவால்” சூடேறி, முன்னதை விடத் தணிந்த உஷ்ண நிலையில் நீர்மயத்தைத் திரவ வடிவில் வைத்துள்ளது. இல்லையென்றால் அந்த அரங்கில் நீர்க்கோள் ஓர் பனிக்கோள் ஆகியிருக்கும்.

    நாசாவின் ஹப்பிள் விண்ணோக்கி நீலக்கோள் ஒன்றைக் கண்டுபிடித்தது.

    2013 ஜூலை 11 இல் நாசாவின் ஹப்பிள் விண்ணோக்கி பூமியிலிருந்து 63 ஒளியாண்டு தூரத்தில் உள்ள அண்டவெளி விண்மீனை ஒன்றைச் சுற்றி வரும் நீல நிற வாயுக் கோளைக் கண்டுபிடித்தது. நீலக்கோளின் பெயர் : HD 189733b. 2005 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப் பட்ட அந்தக் கோளின் மீது நீல நிறம் சிதறுவதாக முதலில் ஊகிக்கப் பட்டது. 2013 ஜூலையில் அதை ஹப்பிள் தெளிவாக மெய்ப்பித்தது. நீலக் கோள் அதன் தாய்ப் பரிதியிலிருந்து 2.9 மில்லியன் மைல் தூரத்தில் சுற்றி வருகிறது. மேலும் தனது ஒரு பாதி வடிவை விண்மீனுக்குக் காட்டி, மறு பாதி முகம் இருளில் தெரியாமல், ஈர்ப்பு விசையில் கட்டப் பட்டு [Gravitationally locked], நமது பூமியைச் சுற்றும் நிலவு போல் காணப்பட்டது. நீலக்கோளின் பகல் நேர உஷ்ணம் பயங்கரமானது : 2000 டிகிரி F. வாயுக்களின் வேகம் : 4500 mph. நீல நிறக் கோளின் [Cobalt Blue Colour] நீல நிறம் பூமியைப் போல் நீர் மீது ஒளிச் சிதறலால் எதிர்ப்படுவதில்லை. அந்தக் கோளின் மேக மண்டலத்தில் கலந்துள்ள சிலிகேட் துகள்களே [Silicate Particles] நீல நிறத்துக்குக் காரணம் என்பது அறிய வருகிறது. 2007 இல் நாசாவின் ஸ்பிட்ஸர் [Spitzer Space Telescope] விண்ணோக்கி அறிவித்தபடி, நீலக்கோளின் இரவு-பகல் உஷ்ணங்கள் வேறுபாடு 500 டிகிரி F என்று கணிக்கப்பட்டது.

    Einstein Planet

    பரிதியைப் போல் தெரியும் விண்மீனான எப்ஸிலான் எரிடானியைச் சுற்றும் (Epsilon Eridani) வாயுத் தூசித் தட்டு ஒரு கோள் என்பது நிச்சயம். ஹப்பிள் மூலம் கண்டதால் அது தோல்வியான விண்மீனில்லை, ஓர் அண்டக்கோள் என்பது உறுதி! அது பெரிதளவில் இருந்தால், கோளுக்கும் விண்மீன் தூசிக்கும் தொடர்பில்லாத பழுப்புக் குள்ளி (Brown Dwarf) என்று சொல்லி விடலாம்.

    பார்பரா மெக் ஆர்தர் (Barbara McArthur, Project Leader, University of Texas) ”

    பூதக்கோளின் விட்டம் நமது பூமியைப் போல் ஒன்றை மடங்கு [12,000 மைல்]. அந்த கோள் லிப்ரா நட்சத்திரக் கூட்டத்திலிருந்து 20 ஒளியாண்டு தூரத்தில் இயங்கிச் சுயவொளி வீசும் மங்கிய கிலீஸ்-581 விண்மீனைச் சுற்றி வருகிறது. அதன் சராசரி உஷ்ணம் 0 முதல் 40 டிகிரி செல்ஸியஸ் என்று மதிப்பிடுகிறோம். ஆகவே அங்கிருக்கும் தண்ணீர் திரவமாக இருக்கும் என்று கருதப் படுகிறது. அந்த கோள் பாறைக் குன்றுகளுடனோ அல்லது கடல் நீர் நிரம்பியோ அமைந் திருக்கலாம்.”

    ஸ்டெஃபினி உட்றி [Stephane Udry, Geneva Observatory]

    Hubble Space Telescope

    “மற்ற சுயவொளி வீசும் விண்மீன்களின் கோள்களை விட, கண்டுபிடிக்கப்பட்ட இந்த பூதக்கோள் ஒன்றுதான் உயிரின வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உட்பொருட்களும் கொண்டதாகத் தெரிகிறது. அக்கோள் 20 ஒளியாண்டு தூரத்தில் உள்ளதால், விரைவில் அங்கு செல்லும் திட்டங்களில்லை. ஆனால் புதிய உந்துசக்திப் பொறிநுணுக்கம் விருத்தியானல், எதிர்காலத்தில் அக்கோளுக்குச் செல்லும் முயற்சிகள் திட்டமிடப் படலாம். பேராற்றல் கொண்ட வானோக்கிகளின் மூலமாக அக்கோளைப் பற்றி அறிந்து கொள்ளக் கூடியவற்றை நிச்சயம் ஆய்ந்து கொள்ளப் பயிற்சிகள் செய்வோம்.”

    அலிஸன் பாயில் [Alison Boyle, Curator of Astronomy, London’s Science Museum]

    “அண்டையில் உள்ள சின்னஞ் சிறு சுயவொளி விண்மீன்களைச் சுற்றிவரும் பூமியை ஒத்த அண்டக் கோள்களில் உயிரின வாழ்வுக்கு ஏற்ற பகுதிகள் உள்ளதாக இப்போது அறிகிறோம்.  இச்செய்தி புல்லரிப்பு ஊட்டுகிறது. இப்பணி நாசாவின் அண்டவெளித் தேடல் முயற்சிகளின் முடிவான குறிக்கோளாகும்.”

    டாக்டர் சார்லஸ் பீச்மென்  [Dr. Charles Beichman, Director Caltech’s Michelson Science Center]

    “பூதக்கோள் போல பல கோள்களைத் தேடிக் காணப் போகிறோம். பூமியை ஒத்த கோள்களைக் கண்டு அவற்றின் பண்பாடுகளை அறிய விரும்புகிறோம்.  ஆங்கே வாயு மண்டலம் சூழ்ந்துள்ளதா?  அவ்விதம் இருந்தால் எவ்வித வாயுக்கள் கலந்துள்ளன?  அந்த வாயுக் கலவையில் நீர் ஆவி [Water Vapour] உள்ளதா?  அந்த வாயுக்களில் உயிரினத் தோற்றத்தின் மூல இரசாயன மூலக்கூறுகள் கலந்துள்ளனவா?  நிச்சயமாக அந்த கோள் எந்த விதமான சூழ்வெளியைக் கொண்டது என்பதையும் கண்டு கொள்ள விழைகிறோம்.”

    டாக்டர் விக்டோரியா மீடோஸ் [Member, Terrestrial Planet Finder, NASA]

    “தற்போது ஒருசில வாரங்களுக்கு ஒருமுறை வியாழக் கோளை ஒத்த புறவெளிக் கோள் ஒன்று கண்டுபிடிக்கப் படுகிறது!  சமீபத்தில் கண்ட புதிய கோள் கிலீஸ் 876 (Gliese 876) விண்மீனைச் சுற்றி வருகிறது!  மிக்க மகத்தானது ஹப்பிள் கண்டுபிடித்துப் படமெடுத்த கோள் இரட்டை விண்மீன்கள் வீசி எறியப்பட்டு 450 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது !  எல்லாவற்றுக்கும் உன்னதமான கோள் இனிமேல்தான் வரப் போகிறது !”

    மிசியோ காக்கு (Michio Kakau, Professor Theoretical Physicist, City College of New York) (2007)

    Share
  • காலந்தோறும் மாறிவரும் பெண்கள் நிலை – 9

    -மேகலா இராமமூர்த்தி

    1932ஆம் ஆண்டு தோற்றம்பெற்ற  கலைமகள்  மாத இதழுக்கென்று ஓர் தனிச்சிறப்பு உண்டு. தமிழகப் பெண்களை ஊக்கப்படுத்தி எழுதவைத்த முதல் இதழ் அதுதான். கலைமகள் பெண் எழுத்தாளர்கள் வரிசை என்ற ஒன்றே அந்நாளில் இருந்திருக்கின்றது. சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், எம்.ஆர். ராஜம்மா போன்றவர்கள் அவ்வரிசையில் வரக்கூடியவர்கள். அவ்விதழில் பரிசுக்குரிய சிறுகதைகளையும் பெரும்பாலும் பெண் எழுத்தாளர்களே படைத்துள்ளனர் என்பது நாம் நினைந்து மகிழத்தக்கது. ராஜம் கிருஷ்ணனின் ’ஊசியும் உணர்வும்’, ’நூறு ரூபாய் நோட்டு’, ஆர். சூடாமணி எழுதிய ’காவேரி’ போன்றவை கலைமகளில் பரிசுபெற்ற சிறுகதைகளாகும்.

    1947இல், கல்கி இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில், குறிப்பிடத்தக்க மற்றொரு பெண் எழுத்தாளரான, அநுத்தமாவின் முதல் கதையான ’அங்கயற்கண்ணி’ இரண்டாம் பரிசினைப் பெற்றது. பெண் எழுத்தாளர்களில் பெரும்பாலோர் குடும்ப உறவுகள், குடும்பச் சிக்கல்களை மையமாக வைத்தே அப்போது கதைகள் எழுதினர். ராஜம் கிருஷ்ணன், சூடாமணிபோல் ஓரிருவர் மட்டுமே சமூக நோக்குடைய கதைகளை எழுதி வந்துள்ளதையும் அறியமுடிகின்றது. பெண்ணியச் சிந்தனைகளின் அடித்தளங்களைக் கட்டமைத்த பெருமை இப்பெண் எழுத்தாளர்களையே சாரும்.

    1960களில் தொடங்கி சிவசங்கரி, வாஸந்தி, இந்துமதி, அனுராதா ரமணன் போன்றவர்கள் சிறுகதைகள் அதிகம் எழுதியுள்ளனர். இவர்களது சிறுகதைகளில் பெரும்பாலும் காதல், காதல் மணம், தனிக்குடித்தனம், குழந்தையின்மை போன்றவை கருக்களாக அமைந்திருந்தன. எழுபத்தைந்துக்குப் பின் சிவசங்கரி, வாஸந்தி எழுத்துக்களில் மாற்றங்கள் ஏற்பட்டன. சமூகப் பிரச்சினைகள், பெண் விடுதலை, பெண் உரிமை இவற்றைக் கருவாகக் கொண்ட கதைகளை இவர்கள் எழுதத் தொடங்கினர்.

    இதழ்களேயன்றி வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் என்று பல்வேறு வகைகளில் ஊடகத்துறை வளர்ச்சியும் விரிவும் கண்டது இருபதாம் நூற்றாண்டிலேயே. அதனால் எழுத்து மட்டுமல்லாமல், பேச்சு, நடிப்பு என்று பல்துறைகளில் தம் திறமைகளை வெளிப்படுத்தப் பெண்களுக்கு வாய்ப்புகள் கிட்டின.

    தொடக்க காலத் திரைப்படங்களில் நடிகையாக வலம்வந்த எம். எஸ். சுப்புலட்சுமி சிறந்த பின்னணிப் பாடகியாகவும் திகழ்ந்தார். இவரைப் போன்றே கே.பி. சுந்தராம்பாள், எஸ். வரலட்சுமி போன்றோர் நடிப்போடு சொந்தக் குரலில் பாடியும் புகழ்பெற்றனர். பி. பானுமதி, நடிப்பு, பாட்டு இவற்றோடு நில்லாது இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என்று திரைத்துறையின் பல்வேறு திறன்களும் ஆளுமையும் வாய்க்கப்பெற்ற அரிய பெண்மணியாய்த் திகழ்ந்தார்.

    ஆரம்பத்தில் ஆண் நடிகர்களுக்கு நிகரான கனமான பாத்திரங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பைப் பெண்களுக்கு(ம்) அளித்துவந்த திரைத்துறை பின்பு அந்த நல்ல போக்கிலிருந்து மெல்ல மாறி, பெண்களை வெறும் கவர்ச்சிப் பதுமைகளாகவும், போகப் பொருளாகவுமே திரைப்படங்களில் காட்சிப்படுத்தத் தொடங்கியது. 60களின் இறுதியில் தொடங்கிய இந்த அவலப்போக்கு இன்றுவரை மாறவில்லை என்பது பெரிதும் வருந்தத்தக்கது.

    தொலைக்காட்சிகள் என்று எடுத்துக்கொண்டால் ஆரம்பத்தில் அரசாங்கத் தொலைக்காட்சிகள் ஒன்றிரண்டு இருந்தவரையில் செய்தி வாசிப்பது, அறிஞர்களைப் பேட்டியெடுப்பது என்ற அளவில்தான் பெண்களின் பங்களிப்பு இருந்துவந்தது. நாளடைவில், தனியார் தொலைக்காட்சிகள் புற்றீசல்கள்போல் புறப்படத் தொடங்கின. அத்தோடு பெரிய திரைக்குப் போட்டியாக அவையும் தொலைக்காட்சித் தொடர்களைப் படைக்கத் தொடங்கின. பெண்களுக்கு இவற்றில் அதிக அளவில் வாய்ப்புகள் வழங்கப்படுவதென்னவோ உண்மைதான். ஆனால் அவை பெண்களைப் பெருமைப்படுத்தும் வகையில் இல்லை. அவர்களை இரக்கமே இல்லாத அரக்கிகளாகவும், நடமாடும் நகைக்கடைகளாகவும், எப்போதும் யாரையாவது பழிவாங்கத் துடிக்கும் கொடூர மனம் படைத்தவர்களாகவுமே காட்டிப் பெண்மையைப் பெரிதும் இழிவுபடுத்தி வருகின்றன.

    இவை போதாதென்று விளம்பரத்துறை என்றொரு துறை இருக்கின்றது. அத்துறைக்கு, ஆண்களுக்கான சிகரெட், உள்ளாடை, ஆணுறை விளம்பரங்களுக்குக் கூட அரைகுறை ஆடையணிந்த பெண்களே விளம்பர மாடல்களாகத் தேவைப்படுகிறார்கள்.

    இப்படியாக சின்ன திரை, பெரிய திரை, விளம்பரத்துறை மூன்றுமே பெண்களைப் போட்டி போட்டுக்கொண்டு கேவலப்படுத்துவதைத் தவிரப் பெரிதாக எதையும் செய்துவிடவில்லை.

    ஆண்களின் ஆதிக்கத்தில் அகப்பட்டு மூச்சுத் திணறிக்கொண்டிருந்த மற்றொரு துறை மேடைப்பேச்சுத் துறை.  அத்துறையிலும் பெண்கள் மெதுவாய் நுழைந்து அரங்குகளை அணிசெய்யத் தொடங்கினர். புலவர் காந்திமதி, இளம்பிறை மணிமாறன், சாரதா நம்பிஆரூரன், இராம. சௌந்தரவல்லி, சரஸ்வதி இராமநாதன், சௌந்தரா கைலாசம் என்று நீளும் நாவரசிகளின் பட்டியலில் சமீப காலங்களில் பாரதி பாஸ்கர், வழக்கறிஞர் சுமதி, ஆண்டாள் பிரியதர்சினி, பர்வீன் சுல்தானா, விஜயசுந்தரி, சுமதிஸ்ரீ என்று பல பெண்கள் கேட்டார்ப் பிணிக்கும் வகையில் பேசிவருவது பெண்டிர்க்குப் பெருமை தருவதாகும். ஆனால்…கவியரங்கம், பட்டிமண்டபம் போன்றவற்றில் அரங்கத் தலைமைக்கான நாற்காலிகள் இன்றும் ஆடவர்க்கே அதிகம் ஒதுக்கப்படுவது கண்கூடு.

    கல்விகற்ற பெண்கள் இப்போது அரசு மற்றும் தனியார்த்துறைகளில் ஆண்களுக்கு இணையாகப் பணியாற்றத் தொடங்கிவிட்டனர். தம் அன்றாடத் தேவைகளுக்கும் ஆண்களையே சார்ந்துநின்ற இழிநிலை மாறி இன்றைய பெண்களில் பலர் தம் சொந்தக் காலில் நிற்பதும், சொந்த உழைப்பில் சோற்றை உண்பதும் பெரிதும் போற்றுதலுக்குரியது. எனினும் பெண்களை வேலைக்கு வைத்துக்கொண்டு அவர்களின் உழைப்பை வேண்டியமட்டும் சுரண்டும் அலுவலகங்கள், அவர்களின் தகுதிக்கும் அனுபவத்துக்கும் ஏற்ற உயர்பதவிகளை உரிய காலத்தில் வழங்குகின்றனவா என்று வினவினால் ’ஆம்’ என்று அழுத்தமாகச் சொல்லமுடியவில்லை.

    காரணம், ஆண் பெண் பாலின வேறுபாட்டின் அடிப்படையில் பெண்டிரை மட்டும் மேலெழும்ப விடாமல் தடுத்துநிற்கும் கண்ணாடிக் கூரைகள் (Glass ceiling). இக்கூரைகளைத் தகர்த்தெறிந்தால் மட்டுமே பெண்கள் தம் தகுதிக்கேற்ற பதவி உயர்வையும் ஊதியத்தையும் பெறமுடியும்.

    அடுத்ததாக நாம் ஆராயவேண்டியது பணியிடங்கள் பெண்களுக்கு மகிழ்ச்சியும் மனநிறைவும் தருகின்ற வகையில் அமைந்திருக்கின்றனவா என்பது.

    தாம் கற்ற கல்வியால் தமக்குச் செல்வம் வருகின்றது என்பது பெண்டிர்க்கு மகிழ்ச்சியளிப்பதாக இருந்தாலும் உடன்பணிபுரியும் ஆடவரால் பெண்களில் பலர் சந்திக்கும் பாலியல் தொல்லைகள், அருவருக்கத்தக்க ஆபாசப் பேச்சுக்கள் போன்றவை அவர்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகவும் அலுவலகத்தையே ’விடமென’ வெறுக்க வைப்பதாகவும் அமைந்துவிடுகின்றன. இதனால் கண்ணியமாகவும் ஒழுக்கமாகவும் வாழவேண்டும் எனும் கொள்கையுடைய பெண்கள் மனத்துக்குப் பிடித்த நல்ல வேலையைக்கூட உதறிவிட்டு ஓடவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர்!

    இடைக்காலத்தில் பெண்டிர் கல்வி மறுக்கப்பட்டு, சிந்தனை முடக்கப்பட்டு, வீட்டுக்குள்ளேயே அடைக்கப்பட்டு நுகர்பொருளாகவே நோக்கப்பட்டார்கள் என்றால் ஆண்களுக்கு நிகராகக் கல்வி கற்கவும் பணிபுரியவும் அவர்கள் அனுமதிக்கப்படும் இன்றைய நவீன காலகட்டத்திலும்கூடப் பண்டமாகவும் தசைப் பிண்டமாகவுமே பெண்களைப் பார்க்கும் ஆண்களின் வக்கிரப் பார்வையிலும் கழிகாமச் செய்கைகளிலும் மாற்றமில்லை என்பது வெறுப்பையும் வேதனையையும் தருகின்றது. உயர் விழுமியங்களை ஒல்லும் வாயெல்லாம் ஓயாதுரைத்த தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு வீழ்ச்சியாகவே இதனை நாம் எண்ண வேண்டியிருக்கின்றது.

    கடந்த இருபது ஆண்டுகளில் கணினித் துறை அசுரவளர்ச்சி கண்டிருக்கின்றது. அதன்பயனாய்த் தோன்றியிருக்கும் தொழில்நுட்பங்கள் நம்மை வாய்பிளக்க வைக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றான திறன்பேசி (smartphone), நம் உள்ளங்கைக்குள் உலகத்து நிகழ்வுகள் அனைத்தையுமே கொண்டுவந்து தந்துவிடுகின்றது. ஊடகத்துறையின் புதிய அவதாரமாகப் புறப்பட்டிருக்கும் சமூக ஊடகங்கள் (social media), இணையத் தொடர்பு வைத்துள்ள அனைவருமே எழுத்தாளர்களாகவும், புகைப்பட நிபுணர்களாகவும் மாற வழிவகை செய்துவருகின்றது.

    நம் சிந்தனைகளை இணையத்தில் இலவசமாகப் பூக்கவைக்க உதவும் வலைப்பூக்கள் (Blogs), முகமறியாரோடும் முகமன்கூறிப் பழகவைக்கும் முகநூல் (Facebook), எண்ணச் சிறகால் வையமெங்கும் வட்டமடித்துப் பறக்கவைக்கும் சிட்டுரை (Twitter), சமூக நிகழ்வுகளை உடனுக்குடன் நெருக்கமான நண்பர்களோடு அலச உதவும் புலனம் (WhatsApp), வண்ணப் புகைப்படங்களைச் சுடச்சுட வெளியிட்டுத் தம் அழகையும் ஆளுமையையும் பறைசாற்றப் பயன்படும் இன்ஸ்டாகிராம் (Instagram) என எத்தனை வகைகளில் மனிதர்களின் வாழ்க்கையை இவ்வசதிகள் வனப்புறச்செய்கின்றன!

    எனினும் ஒரு நாணயத்துக்கு இரு பக்கங்கள் இருப்பதுபோல் நம்மை வசீகரிக்கும் இத்தொழில்நுட்பங்களுக்குக் கோரமான இன்னொரு முகமும் இருக்கவே செய்கின்றது.

     [தொடரும்]

    *****

    http://www.tamilvu.org/ta/courses-degree-p101-p1011-html-p1011223-23799

     

    Share
  • கல்வெட்டில் வரிகள், பட்டணவர் பற்றிய செய்தி

    சேஷாத்ரி ஸ்ரீதரன்

    கல்வெட்டில் வரிகள், பட்டணவர் பற்றிய செய்தி

    புதுவை அருகு  திருவாண்டார் கோயில் எனும் ஊரில் அமைந்த பஞ்சநதீசுவரர் கோயிலின் தனித்துக் கிடக்கும் கற்பலகையில் உள்ள 18ஆம் நூற்றாண்டு எழுத்தமைதி கொண்ட  கல்வெட்டு.

    1. விளம்பிஸ்ரீ_ _ _
    2. மாதம் 10 தேதி நயினார்
    3. வசவப்ப மழவராயர்
    4. திருவய்யாறுடை
    5. ய நயினார் கோயில்
    6. வந்தேறு குடியளு
    7. க்கு கட்டளை விட்டபடி
    8. திருவாண்டார் கோயி
    9. லில் குடியிலிபா
    10. ழாக இருக்கவல்
    11. அண்ணமாரை
    12. யன் குடியேற்
    13. றிக் கொள்ள சொல்
    14. விருத்தகை இரு
    15. க்கையில் தம் கு
    16. டியளுக்கு கட்டளை
    17. இட்டபடி கையிகோளர்
    18. வியாபாரியள் உண்
    19. டான பலபட்டடை
    20. காசவற்கத்துக்கும்
    21. குடியளுக்கும் இவரு
    22. ஷம் ஒன்றுக்கு
    23. மானியம். அதுக்கு
    24. மேல் மாதம் ஒன்றுக்
    25. கு அரைக் கட்டணமு
    26. ம் ஆயத்துக்கு மா
    27. தம் மூன்று காசு

    விருத்தகை – வேண்டுகோள்; பலபட்டடை – வணிகர் மற்றும் கைத் தொழில் செய்வோர் வரி; காசவற்கம் – வரியை நாணயமாக செலுத்தும் கைத்தொழிலோர், வணிகர்; ஆயம் – நிர்வாகம் வரி.

    விளக்கம்: விளம்பி ஆண்டு 16 ஆம் நூற்றாண்டில் 1539 & 1599 ஆகிய ஆண்டுகளில் நிகழ்கின்றது. வசவப்ப மழவராயர் கட்டளைப்படி பஞ்சநதீசுவரர் கோயில் அமைந்த திருவாண்டார் கோயில் ஊரில் வந்து குடியேறும் குடிகளுக்கு இட்ட கட்டளை. திருவாண்டார் கோவிலில் குடியில்லாத வறிதாக இருக்கின்ற நிலங்களில் அண்ணமாரையன் குடியேற்றிக் கொள்ளச் சொல்லி வேண்டுகோள் தெரிவித்திருந்தபடி தம் குடிகளிடம் கட்டளையிட்டபடி கைக்கோள வணிகர்கள் உள்ளிட்ட பல தொழில் செய்வோர், வரிகட்டும் வணிகர் உள்ளிட்ட குடியேறும் குடிகள் இவ்வாண்டு மட்டும் மானியம் பெறலாம். அதன்பின் மாதம் ஒன்றுக்கு அரைக் கட்டணமும் நிர்வாகத்திற்கு மாதம் மூன்று காசும் செலுத்த வேண்டும்.

    இந்நாளைய நகர வரி போல் உள்ளது, அந்நாளைய ஆயம். பண்டு மக்கள் அதிக வரிச்சுமைக்கு ஆளாகி இருந்தனர். அதிலும் குறிப்பாக நாயக்கர் ஆட்சிக் காலத்தில் கட்ட முடியாத அளவிற்கு அதிக வரிச்சுமை.

    பார்வை நூல்: வரலாற்றில் திருவாண்டார் கோயில், வில்லியனூர் புலவர் ந. வேங்கடேசன்

    புதுவை காரைக்கால் அருகு மேல்பொன்பேத்தி ஊரில் தனியார் வீட்டின் வாயிற்படியில் உள்ள கற்பலகையில் பொறித்த  16 ஆம்  நூற்றாண்டு 20 வரிக் கல்வெட்டு. இந்தக் கோட்டுச்சேரி, காரைக்காலிலிருந்து பொறையாறு செல்லும் வழியில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது.

    1. ஆங்கீர ஆண்டு வைய்யாசி 10ந் தேதி
    2. ஸ்ரீமதுராயச _ _ _ _ _ ருவர் அய்யன் கா
    3. ரியத்துகே _ _ _ _ _ தவதரையர்
    4. கோட்டுச்சேரி பட்டணவர் செங்
    5. கணச்செட்டி எறையச் செட்டி ஆ
    6. லத்துடைய நம்பி அறம்[வ]ளத்த
    7. நம்பி உள்ப்பட்டாற்கு குடுத்த ச
    8. றுவ மானியப் பட்டையம்
    9. இந்த ஊர்ப் பட்டணச்சேரி வரு
    10. ஷம் ஒன்றுக்கு அய்யன் கட்டளை
    11. பொன் அறுபது இந்தக் கட்டளை
    12. இட்ட[தி]ல் தரும் பொன் அறுபதுக்கு
    13. ள்ளே இந்த ஊரில் பரவை மீனு
    14. [ம்] பட்டணச்சேரி _ _ _ _ _ த்துடநே சே
    15. [ர்]ந்தபடியாலே [நா]ளது முதல் சந்தி
    16. ராதித்தவரையும் கோட்டுச்சேரி பரவை
    17. மீன் உள்பட பட்டணவரே அனு
    18. பவித்துக் கொள்ளவும் யிந்த மாநி
    19. யத்தை இயாதொருவ_ _ _ _ _
    20. அழித்தவன்

    பட்டணவர்–மீனவச் செட்டியார்  அய்யன் கட்டளை – அய்யனுடைய  நில எல்லை பரவை மீன் – கடல் மீன்

    விளக்கம்: 18ஆம் நூற்றண்டில் ஆங்கிர ஆண்டு கி.பி. 1742-1743 இல் நிகழ்கின்றது. கோட்டுச்சேரி பட்டணவரான செங்கணச் செட்டி, எறையச்செட்டி, ஆலத்துடைய நம்பி, அறம்வளர்த்த நம்பி உள்ளிட்ட நால்வருக்கு கொடுத்த சர்வமானிய பட்டயம் யாதெனில் அய்யன் கட்டளை வரை உள்ள பட்டணச்சேரியில் ஆண்டு ஒன்றுக்கு 60 பொன் ஓபோ கட்டவேண்டும். இப்படி தரும் பொன் அறுபதுக்கு கடல்மீனை பிடிக்கும் உரிமையை இந்த நால்வரே அனுபவிப்பாராக என்று கூறப்பட்டுள்ளது.

    இந்தப் பட்டணவர் 12ஆம் நூற்றாண்டில் துணி, ஆடை நெய்து விற்றுவந்தனர் என்று தெரிகின்றது. 18 ஆம் நூற்றாண்டில் மீன் விற்க வந்துவிட்டனர்.

    பார்வை நூல்: புதுச்சேரி மாநிலக் கல்வெட்டுகள், பாகூர்                       S. Kuppusamy & G. Vijayavenugopal.

    திருப்புவனை வரதராஜ பெருமாள் கோயில் மேற்கு வராந்தா திருச்சுற்று மதில் 10 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ பூமாது புணரப் புவிமாது விளங்க நாமாது வி[ளங்க] ஜயமாது மகிழத் தந்திரு பாதமலர் மன்நவர் சூட மந்நிய வுரிமையில் மணிமுடிசூடிச் செங்கோல் செந்று திசை தொறு நடப்ப வேங்கலி  நீங்க மெய்யறந் தழைப்பக் கலிங்க மிரியக் கடம
    2. லை நடத்தி வலங்கோளாழி வரையாழி [ந]டப்ப இருசுடரளவும் ஒருகுடை சுழற்றச் செம்பொன் வீரஸிம்ஹாஸனத்து முக்கோக் கிழாநடிகளோடும் வீற்றிருந்தருளிய கோப்பரகேசரிபந்மரான த்ரி(பு)ஹுவ[ன]ச் சக்கரவத்தி
    3. கள் ஸ்ரீ விக்கிரம சோழ [தேவர்]க்கு யாண்டு ஒன்பதாவது ராஜராஜ வளநாட்டு வீராவதார வளநாட்டு ப்ரஹ்மதேயம் [த்ரி]புவன மாதேவிச் சதுப்பேதி மங்கலத்து [ந]டுவிற் கோயில் ஸ்ரீவீரநாராயண விண்ணகராழ்வார்க்கு இர _ _ _ _ _
    4. ணவர் ப்ரஹ்மவைஸ்வநு[க்]கு ஜனித்த [ப்ரித்ரஷ்ட] ஆயோஹவாரானப் பற்றுள்ணர்கு உபநயாநாதி கருமங்களுக்கும் தேவர்களுக்கு  [த்வ]ஜ படமும் சாத்தியருளத் திருப்பரிசட்டங்களும் ராஜாக்களுக்குச் சாத்தியருளத் திருப்பரிச்ச[ட்டங்களும்]
    5. நெய்யக் கடவ முறைமையாலும் பல ஆஹமங்களும் ங ஸ்மிதிகளாலும் ((ஞ்) சொல்லுதலாலும் செய்யக்கடவராவ[ர்]களே யாதலால் இக்கோயிலுக்கு இவர்களுக்கு நிமந்தமாகவிட்ட நிலம் ஜனனாத நல்லூர்க் கட்டளையில் இவ்வாழ்வார்
    6. யிறையிலி நிலத்தில் திரிபுவனமாதேவி வதிக்கு மேற்குப் பிராந்தக வா[ய்]க்காலுக்கு வடக்கு இரண்டாங் கண்ணாற்று முதற் சதிரத்துக் கிழக்கடைய நிலம் ஆறுமாவில்  வடக்கடைய நில[ம்] இருமாவரையும் சேட்படி விளாகத்தில் வடதலை
    7. யிலே பத்து மனையுங்  கைக்கொண்டு  வைகாசித் திருநாளைக்கு நாலு  திருப்பரிச்சட்டமும்  திருவுத்திரியம் இரண்டு  திருமுடிச்சேலை  இரண்டும்  விஷுவயன ஸங்கிரமங்கள் நாலுக்கு திருப்பரிசட்டம்  நாலும் து[வ]ஜ படமும்  திருவாசலுக்கு  திருநமநி
    8. கையும் திருவிதான ஒந்றும் ஆக இவ்வூர்க்கள் பணிமாரக் கடவோமாக இந்நிலம் இம்மனைகளும் கைக் கொண்டு சிலாலேகை  பண்ணிக்   குடத்தோம்  இயோரிரான பட்டணவரோம். இப்படி  செய்யாவிடில்  இவ்வாழ்வார் கோயிலில் ஸ்ரீவயிஷ்ண
    9. வர் தடுத்தும் வளைத்தும்  தண்டியும்  சிறையாக்கியும் கொள்ளக்கடவ[ர்]களாக  ஸம்மதித்தோம்  செங்காட்டுப் புத்தூரான உத்தம சோழப் பட்டணத்தோமும் உம்பர்பாடியான உய்யக்கொண்ட  சோழபட்
    10. டணத்தோமும்  வேளார்  காணியான  இராஜேந்திர சோழபுரத்தோமும்  கருப்பூரான  விக்கிரம  சோழபுர்த்தோ[மு]ம்.  ஸ்ரீ வைஷ்ணவர்  இரக்ஷை.

    உபநயநாதி கர்மம் – பூணூல் சடங்கு; தேவர்களுக்கு – பிராமணர்களுக்கு; த்வஜ படமும் – பிராணமத் துணியும்; திருப்பரிசட்டம் – செப்புத் திருமேனிகளுக்கு சாற்றும் ஆடை; கட்டளை – எல்லைக்கு உட்பட்ட, jurisdiction;  வதிக்கு –  கால்வாய்க்கு; கண்ணாறு – சிறு பாசன வாய்க்கால்; திருவுத்திரியம் – தோள் துண்டு; விஷுவயன சம்கிரமங்கள் – புத்தாண்டு, அயன கால சடங்குகள்; பணிமார – செய்து தர; இயோரியரான –

    விளக்கம்: விக்கிரம சோழனின்  9 ஆம் ஆண்டு (கி.பி. 1127) ஆட்சிக் கல்வெட்டு. முதல் இரண்டு வரிகளில் மெய்கீர்த்தியுடன் தொடங்குகின்றது. பிரதிலோமரில் அடங்கும் பிரம்ம வைசியரான இதாவது, பிராமணத் தந்தைக்கும் வைசியத் தாய்க்கும் பிறந்த ஆயோகவரான பட்டணவர் பற்றியது.  பூணூல் சடங்குகளில் பிராமணருக்கு பிராமண ஆடை, மேனியில் சாற்றத் துணி. அதே போல் வேந்தர், மன்னவர், அரசர், கிழார் உள்ளிட்ட ஆளும் குடிக்கு மேனியில் சாற்றும் துணியும் நெய்ய வேண்டிய முறையில் நெய்ய ஆகமங்களும் ஸ்மிருதிகளும் சொல்லுகின்ற முறையில் நெய்பவராதலால்  இக்கோயில் தெய்வத் திருமேனிகளுக்கு ஆடை சாற்ற இவர்களுக்கு நிவந்தமாக (பணிக்கூலி) விட்ட நிலம் ஐனனாத நல்லூர் வரம்பில் உள்ள இவ்விறைவர்க்குச் சொந்தமான இறையிலி நிலம் (நான்கு எல்லை குறிக்கப்படுகின்றது) இருமாவரையும் அதோடு சேட்படி விளாகத்தில் வடதலையில் பத்து வீடுகளும் இவர்கள் ஏற்று வைசாகித்  திருநாளுக்கு  நான்கு  சாற்றும் ஆடை, தோள்துண்டு, இரண்டு  திருமுடிச்சேலை,  கொடிக்குத் துணி,  திருவாசலுக்கு திருநமநிகை திருவிதானம் ஒன்று என இந்த உருப்படிகளைச் செய்து தந்து இந்நிலம் இவ்வீடுகளை கைக்கொண்டு இப்படியே ஆவதாகக் கல்வெட்டிக் கொடுத்தோம் பட்டணவரான நாம். இப்படி செய்யாவிட்டால் ஸ்ரீ வைஷ்ணவர் எங்கள் தொழிலைத் தடுக்கவும், எம் உடலை வளைக்கவும், எம்மைத் தண்டிக்கவும், சிறைப்படுத்தவும் ஒப்புக்கொண்டோம். செங்காட்டுப் புத்தூர் உத்தம சோழ பட்டணத்தோம், உம்பர்பாடி உய்யக்கொண்ட சோழ பட்டணத்தோம்,  வேளார் காணி ராஜேந்திர சோழபுரத்தோம், கருப்பூரான விக்கிரம சோழபுரத்தோம் என நான்கு ஊர் பட்டணத்தவர் இந்த ஒப்பந்தத்தை    மேற்கொண்டனர். இது கோயில் சார்பாளர் பட்டணத்தவர் என இரு தரப்புக் கல்வெட்டு ஆகும்.

    எப்படி அனுலோமர் என்பது உண்மையில் இல்லாததோ, அப்படித்தான் பிரதிலோமர் என்பதும் இல்லாதது. அதனால்தான் இங்கு சாஸ்திரம் வலிந்து சுட்டிக் காட்டப்படுகின்றது. பட்டணவர் எவரும் சாஸ்திரம் சொல்லுவது போல பிராமணத் தந்தைக்கும் வைசியத் தாய்க்கும் பிறந்தவர் அல்லர்.  மாறாக தந்தை தாய் இருவருமே வணிகர் குலத்தவர்தாம்.  இந்தப் பட்டணவர் சாதி, பிராமண தந்தை வைசியத் தாய்க்கு பிறந்தவரை மூதாதையராகக் கொண்டது என்பதும் ஏரணப்படி ஏற்புடையது அல்ல. இந்த வரையறை பட்டணவருக்குத் தெரிந்திருக்க வாயப்பில்லை. அப்படி தெரிந்திருந்தால் அதை அவர் ஏற்றிருக்க மாட்டார் என்பது திண்ணம். என்றாலும் இப்படி ஒன்றிரண்டு கல்வெட்டுகள் இருப்பதை மட்டுமே கருத்தில் கொண்டு நால் வருணமும் மனு தர்மமும் சோழர் ஆட்சியில் கோலோச்சியதாகப் பிதற்றுகின்றனர், தொல்லியல் வரலாற்று ஆசிரியர்கள் சிலர்.

    மேற்கண்ட இரண்டாம் கல்வெட்டில் பட்டணவர் மீனவச் செட்டியாராக அறியப்படுகின்றனர். இக்கல்வெட்டிலோ, ஆடை நெய்பவராக அறியப்படுகின்றனர். இவற்றில் இடம்பெறும் இருவரும் ஒரே சாதியார் என்றால் 12ஆம் நூற்றாண்டில் ஒருதொழிலும் 18ஆம் நூற்றாண்டில் வேறு ஒரு தொழிலும் செய்யக் காரணம் என்ன? என்று ஆராய்ந்தால் அயலவரான விஜயநகரர் ஆட்சியின் போதும் நாயக்கர் ஆட்சியின் போதும் ஆந்திரத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட சௌராஷ்டிரர் மற்றும் முத்திரிய நாயுடுகள் ஆகியோர்  கோயில் ஆடைகள் நெய்யவும் ஆட்சியாளருக்கு ஆடை நெய்யவும் உரிமை பெற்றதால் தமிழ்ப் பட்டணவர் வாழ்வாதாரம் இழந்து மீன் விற்கும் தொழிலுக்கு தள்ளப்பட்டதாகத் தெரிகின்றது. அயலவர் படையெடுப்பும் ஆட்சியும் இந்த அளவிற்கு சமூக பொருளியல் பாதிப்பை தமிழருக்கு  ஏற்படுத்தியதை இக்கல்வெட்டின் மூலம் உணர முடிகின்றது.

    பார்வை நூல்: புதுச்சேரி மாநிலக் கல்வெட்டுகள், பாகூர்                         S. Kuppusamy & G. Vijayavenugopal,  Institut Francais De Pondichéry :  2006

    https://en.wikipedia.org/wiki/Varadharajaperumal_temple,_Thirubuvanai

    Share