மேல்படிப்பு வேண்டாம்
-நிர்மலா ராகவன்
(நலம்… நலமறிய ஆவல் – 156)
வேண்டுமென்றே பரீட்சையில் தவறான பதில்களை எழுதுவார்கள், சில பதின்ம வயதுப் பையன்கள்.
ஏன்?
`எனக்கு மேல்படிப்பு வேண்டாம்பா. படி, படின்னு அம்மாவும் அப்பாவும் உசிரை வாங்குவாங்க!’
அப்போது அடைந்த அலுப்பு எந்த வயதிலும் மறைவதில்லை.
`நல்லவேளை! நான் நல்லா பாஸ் பண்ணலே. இல்லாட்டி, படி, படின்னு வீட்டில உசிரை எடுத்திருப்பாங்க!’ என்று நிம்மதியுடன் என்னிடம் கூறியவருக்கு வயது நாற்பது.
அவருடன் சேர்ந்து நானும் சிரித்தேன். ஆனால், வருத்தமும் அடையாது இருக்க முடியவில்லை. உயர்கல்வி இல்லாது, வாழ்க்கையில் ஓரளவுதான் அவரால் உயர முடிந்தது.
பெற்றோருக்குப் பயந்தோ, பணிந்தோ, வேண்டா வெறுப்பாக புத்தகத்தைக் கையில் எடுத்தால், நல்ல தேர்ச்சியையா அடைய முடியும்?
பெற்றோரின் தொணதொணப்பு அதிகரிக்க, அதிகரிக்க, பையன்களின் தன்னம்பிக்கை குறைவதுதான் பலன்.
“ஏன் இப்படி அவன் உயிரை எடுக்கிறீர்கள்?” என்று நான் ஒரு தாயைக் கேட்டேன்.
“இவ்வளவு சொல்லியும் அவனால் நல்ல மதிப்பெண்கள் வாங்க முடியவில்லையே! நாங்கள் சொல்லாவிட்டால், தானாக புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படிக்கவா போகிறான்?” என்ற எதிர்க்கேள்வி பிறந்தது.
படிக்கப் பிடிக்காது
மிகச் சிறு வயதிலிருந்தே குழந்தைகள் சுதந்திரமாக நடக்கத் தலைப்படுவார்கள். அவர்கள் போக்கில் விட்டால், அவர்களது திறமை வெளிப்படும். அவ்வப்போது வழிகாட்டினாலே போதும்.
எட்டு மாதக் குழந்தையாக இருக்கும்போதே அதற்குப் பிற்காலத்தில் படிக்கப் பிடிக்குமா இல்லையா என்பது தெரிந்துவிடும்.
குழந்தையை மடியில் அமர்த்திக்கொண்டு புத்தகத்தில் ஏதாவது படத்தைக் காட்டினால், தலையை வேறு புறம் திருப்பிக்கொள்ளும். முகவாயைப் பிடித்து, புத்தகம் இருக்கும் திசையில் திருப்பினால், தலை இன்னொரு பக்கம் திரும்பிக்கொள்ளும்! (என் அனுபவத்தில், பெண் குழந்தைகள் இப்படிச் செய்வதில்லை. பள்ளிப் பருவத்திற்குப் பின் படிக்கவே பிடிக்காமல் போவது ஏனென்றால், எப்போதும் படித்தால் அறிவு வளர்ந்துவிடும் என்று நச்சரித்த பெற்றோர்களால்தான். இவர்கள், அபூர்வமாக, காதல் நவீனங்களை மட்டும் படிப்பார்கள்).
இம்மாதிரியான குழந்தைகள் அறிவில் குறைந்தவர்கள் என்பதில்லை. அவர்களுக்கு விளையாட்டிலோ, நுண்கலைகளிலோ அலாதி ஈடுபாடு இருக்கும். அவரவர் போக்கிலேயே விட்டால், புத்தகத்தை எடுத்துப் படிக்காவிட்டாலும், பரீட்சையில் தோற்கமாட்டார்கள். `இந்த வரைக்கும் பெற்றோர் தடை செய்யாமல் இருக்கிறார்களே!’ என்று, சற்றுப் படித்தும் வைத்திருப்பார்கள்.
`நீ படித்தே நான் பார்த்ததில்லையே! எப்படி பாஸ் பண்ணினே?’ என்று இப்படிப்பட்ட ஒரு சிறுவனை நான் அதிசயப்பட்டுக் கேட்டதற்கு, `பள்ளியில் பெண்கள் ஓயாது பாடங்களை விவாதித்துக்கொண்டு இருப்பார்கள். மௌனமாக அதை கேட்டுக்கொண்டிருப்பேன்!’ என்று பதில் வந்தது.
பலரும் எழுத்துகளை பார்த்தால்தான் புரியும் என்று நினைக்கிறார்கள். காதில் கேட்டாலே போதும். புத்தகங்கள் இல்லாத காலத்தில் செவிவழி அறிவைப் போதித்தது நீடித்த பலனை அளிக்கவில்லையா?
செய்வதையே செய்யணுமா?
வழக்கமாக, சில காரியங்களையே ஒன்றையடுத்து ஒன்று செய்ய நேரும்போது அலுப்பாகத் தோன்றலாம். ஆனால், அதுவும் அவசியம். செய்வதற்கு எதுவும் இல்லாமல் போகிற போதுதான் மனம் வேண்டாத யோசனைகளிலோ, காரியங்களிலோ ஈடுபடும்.
பள்ளிக்கூடத்தை விட்டு வீட்டிற்கு வந்தால் காலணியைக் கழற்றுவதுபோல், வீட்டுப் பாடம் செய்வதும் பழக்கமாகிவிடும்.
இது புரியாது, சில தாய்மார்கள், பிள்ளைகள் வீட்டுக்குள் நுழையும்போதே, `வீட்டுப்பாடம் இருக்கா? செஞ்சு முடி!’ என்று ஒவ்வொரு நாளும் நினைவுபடுத்துவார்கள். இது கசப்பில்தான் கொண்டுவிடும்.
`இவனுக்கு ஒவ்வொண்ணையும் நான் சொல்லிக் குடுத்துக்கிட்டே இருக்கணும்!’ என்று அலுத்துக்கொள்வதுபோல் பெருமை பேசுவது வீண்.
பதின்ம வயதுச் சிறுவர்கள், சலிக்காது வீட்டு வேலைகளில் உதவ
ஒவ்வொன்றாகச் சொன்னால்தான் நச்சரிப்பு. ஒன்று, இரண்டு என்று காகிதத்தில் பலவற்றை எழுதி வைத்துவிடலாம். எதை முதலில் செய்ய வேண்டும் என்ற முடிவை அவர்களிடமே விட்டுவிடுகிறோம், அல்லவா?
என்னால் முடியும்!
சிறுவர்களுக்கு மூன்று வயதிலேயே மின்சாரச் சாதனங்களில் அலாதி ஈடுபாடு வந்துவிடும். மூன்று வயதில் தானே அவற்றை இயக்க வேண்டும் என்ற பேராவல் எழுந்துவிடும்.
இது புரிந்து, என் மகனிடம், `ஸ்விட்சைப் போடு!’ என்று பழக்கினேன். (வயதுக்கேற்ற வேலையைத்தான் கொடுக்க வேண்டும் என்பது பிறகுதான் புரிந்தது).
ஒரு முறை, துணி துவைக்கும் இயந்திரத்தைப் அவன் பாதியிலேயே நிறுத்திவிட்டு, கதவைத் திறக்க, வெள்ளப்பெருக்கு!
ப்ளெண்டரை மூடுமுன்னரே ஆர்வக் கோளாறுடன் ஸ்விட்சைத் தட்ட, அதற்குள்ளிருந்த அனைத்தும் வெளியே பீய்ச்சி அடித்தது.
இரண்டு முறையும் பயந்து, அவன் அலறியபடி பின்னால் ஓட, `போனாப் போறது! இனிமே நான் சொல்றச்சே நிறுத்து!’ என்று சமாதானப்படுத்தியபடி, அவனை அணைத்தேன்.
தவறு செய்தவர்களே, `இப்படிச் செய்துவிட்டோமே!’ என்று வருத்தப்படும்போது, எதற்காகத் தண்டிப்பது! பெரிது பண்ணாது விட்டுவிட்டால், அடுத்த முறை கவனமாக இருப்பார்கள்.
மாறாக, தண்டித்து, அதைப் பற்றிக் கேலியாகவே பேசிக்கொண்டிருந்தால், `மீண்டும் தப்பு செய்துவிடுவோமோ?’ என்ற பயத்திலேயே காரியம் கெட்டுப்போகும்.
கதை
இரண்டு லிட்டர் எண்ணெய் கொண்ட தகரக் குவளையை என்னிடமிருந்து பிடுங்கினான் என் மூன்று வயதுப் பேரன்.
அவன் அதைத் தூக்க முடியாது தூக்கி வருவதைப் பார்த்த சில ஆண்கள், என்னை வெறுப்புடன் பார்த்தார்கள் – நான் அவனை வேலை வாங்குவதாக எண்ணி.
“எங்கிட்ட குடு,” என்று நான் கைநீட்ட, “நான் boy! என்னால் முடியும்!” என்று மறுத்தான்.
ஒருவர் மட்டும் என்னைப் பார்த்து புன்னகைத்தார். அவருக்குப் புரிந்தது, நான் ஏன் குழந்தையை `கஷ்டப்படுத்துகிறேன்’ என்று.
அடுத்த முறை, ஒரு கூடையில் சில சாமான்களைப் போட்டு, அவனைத் தள்ளிக்கொண்டு வரச்செய்தேன். அவனுக்கு மிகப் பெருமை. `நான் help பண்ணினேன்!’ என்று தாயிடம் பீற்றிக்கொண்டான்.
கொஞ்சுவானேன்?
`குழந்தை! அவனால் என்ன முடியும்!’ என்று அவனுக்கான வேலைகளையும் பிறர் செய்தால், சுயமாக நடக்கத் தெரியாது, பிறரைச் சார்ந்திருக்கவே தோன்றும்.
ஓயாமல் கொஞ்சுவதைவிட அவர்களால் இயன்ற வேலைகளைக் கொடுத்தால் குழந்தைகளின் தன்னம்பிக்கை வளரும்.
இணைந்து செய்வது
குழந்தைகள் விளையாடிவிட்டுத் தம் விளையாட்டுச் சாமான்களைத் தரை பூராவும் பரப்பிவிட்டுப் போவார்கள். அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்.
`நீதான் எல்லாத்தையும் எடுத்து வைக்கணும்!’ இந்த அதிகாரத்தால் அவனுக்கு அழுகைதான் வரும். (தவறு)
`வா! நாம்ப ரெண்டுபேரும் எல்லாத்தையும் எடுத்து வைக்கலாம். நடக்கிறபோது கால்லே குத்திடுமே!’ (சரி)
எந்தக் காரியமானாலும், விளையாட்டுபோல் சேர்ந்து செய்பவருடன் உள்ள நெருக்கம் அதிகரிக்கும். (பண்டிகைகளில் குடும்பத்திலுள்ள அனைவரும் வீட்டைச் சுத்தப்படுத்தி அலங்கரிக்கும்போதும், இணைந்து சமைக்கும்போதும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது!)
பாராட்டும் அவசியம்
தவறு செய்யும்போது தண்டிப்பதில் குறியாக இருப்பவர்கள் குழந்தைகள் உருப்படியாக ஏதாவது செய்யும்போது அதைப் பாராட்டத் தவறிவிடுவார்கள்.
பாராட்டினால்தானே தொடர்ந்து நல்வழியில் செல்லத் தோன்றும்?
எல்லா இனங்களுக்கும், எந்த வயதிலும், பாராட்டு புரிகிறது.
கதை
எங்கள் வீட்டில் வளரும் பூனைக்குட்டி தன் பங்கை அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு, பெரிய பூனைக்கு வைக்கும் ஆகாரத்திற்கும் போட்டி போடும்.
பல முறை தடுத்தபின் அதற்குப் புரிந்தது. ஒரு முறை மெல்ல விலக, “குட்டி சமத்து!” என்று பாராட்டினேன்.
கண்ணை ஒரு முறை அழுந்த மூடித் திறந்தது, அதை ஆமோதிக்கும் வகையில்!
சொன்னபடி செய்
பெற்றோர் தம் வாக்கைக் காப்பாற்றத் தவறும்போது பிள்ளைகளின் மதிப்பையும் இழக்கிறோம் என்பதை உணர்வதில்லை.
“இன்று எனக்கு பள்ளிக்கூட ஆண்டுவிழாவுக்கான பாட்டுப் பயிற்சி இருக்கிறது,” என்று பூரிப்புடன் சொன்னான், என்னிடம் படிக்க வந்த அமீர்.
குறித்த நேரத்தில் தாய் வரவில்லை. பையனின் படபடப்பைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருந்தது.
வழக்கம்போல், இரண்டு மணி நேரம் கழித்து வந்தவளிடம், “நீங்கள் அரை மணியிலேயே வந்துவிடுவீர்கள் என்று அமீர் ஆவலாகக் காத்துக்கொண்டிருந்தான், பாவம்!’ என்றேன்.
அலட்சியமாகக் கையை வீசியபடி, சூள் கொட்டினாள். அவளுக்கு மகனுடைய ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் முக்கியமில்லை.
பெற்றோரின் கட்டாயத்தால் படிப்பில் நாட்டமிழந்த பலருள் அமீரும் ஒருவன்.