-சேஷாத்ரி ஸ்ரீதரன்

பண்டைக் கால மக்களிடம், குறிப்பாக சில சாதி மக்கள், சில பகுதி மக்களிடம் விந்தையான  வழக்கங்கள் கடைபிடித்து ஒழுகப்பட்டன என்பது கல்வெட்டுகளால் அறியப்படுகின்றது. இவற்றை படித்துஅறியும் போது அவர்களின் நம்பிக்கை அதனால் அவர்பெற்ற பயன் ஆகியவை பற்றிய கேள்வி நம் நெஞ்சத்தில் கட்டாயம் எழும்.

கோவை மாவட்டம் அவினாசி வட்டம் அன்னூர் எனும் ஊரில் கோவில் கொண்ட மன்னீசர் கருவறைத் தெற்கு சுவரில் காணப்படும் 5 வரிக் கல்வெட்டு.

 1. ஸ்வஸ்திஸ்ரீ கோக்கலிமூர்க்கந் ஸ்ரீ விக்கிரம சோழ தேவற்குத் திருவெழுத்திட்டுச் செல்லாநின்ற யாண்டு இருப்தேத்தேழாவது புரட்டாதி திங்கள் முதல்
 2. கவையன்புத்தூரிலிருந்து வாழும் புள்ளங் _ _ _ _ மன்னியூர் பரதேவரர்க்கு எனக்கு காற்காலத்தில் வண்டு கொட்டி இல்லை வைச்சு என்னடியார் பொ
 3. துவங்கோதையும் மக்களைஉம் கோசநமேயையும் மக்களையும் மன்னியூராழ்வார்க்கு நீரொட்டிக் குடுத்தேன் என்னடியாரை _ _ _ _
 4. என் ஸ்வரூவமாக ஒருபடிமமும் _ _ _ _ பெண்படிமமும் ஸந்தி விளக்கொன்றும் அவ்விளக்குக்குப் பொன் முக்கல முக்கழஞ்சுங் கொண்டு சந்த்ராத்திதவலு மெரிப்பிக்கக் கடவார்
 5. மன்னியூர் ஸபைஓம்.

திருவெழுத்திட்டு – முடிசூடி; இல்லை வைச்சு – பச்சிலை வைத்து; என்னடியார் – வேலையாள்; படிமம்  – பாவை, பதுமை, பொம்மை; சபையோம் – கருவறை பிராமணர்.

விளக்கம்: கொங்கு சோழன் கலிமூர்க்கன் விக்கிரம சோழனின் 27 ஆம்ஆண்டு ஆட்சியில் (கி.பி. 1032) புரட்டாசி மாதம் முதல் அன்று கவையன் புத்தூரைச் சேர்ந்த புள்ளன் என்பான் மன்னியூர் ஈசனுக்கு,  “எனக்கு  மழைக் காலத்தில் வண்டு கொட்டி பச்சிலை வைத்து குணமானதால் என் வேலையாள்கள் பொதுவன் கோதை அவன் பிள்ளைகள், கோசன் மேய் அவன் பிள்ளைகள் ஆகியோரை மன்னியூர் ஈசனுக்கு நீரட்டித் தானமாகக் கொடுத்தேன். என்னை ஒத்த வடிவில் ஒரு பாவையும் என் (மனைவி) வடிவில் ஒரு பெண் பாவையும் செய்து கொடுத்தேன், அத்தோடு ஒரு சந்தி விளக்கும் அவ்விளக்கு எரிக்க பொன், முக்கல முக்கழசு (நெல்) கொடுத்தேன்”. இதை சந்திரசூரியர் வரை எரிக்கக் கடவதாக ஒப்புக் கொண்டோம்  மன்னியூர் கருவறை பிராமணர்.

கோவையில் இன்றும் பதுமைகளைச்  செய்து வழங்கும் வழக்கம் நிலவுவதாகச் சொல்லப்படுகிறது. வேலையாள்களை அடிமைகளாகக் கோவில்களுக்கு அன்றைய ஆண்டைகள் கொடுத்துள்ளனர் என்பது தெரிகின்றது. மூன்று இடங்களில் இக்கல்வெட்டு சிதைந்துள்ளதால் செய்தியைத் தெளிவாக அறிந்துகொள்ள முடியவில்லை.

பார்வை நூல்: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், தொகுதி  I, பக். 75, த.நா.அ. தொல்லியல் துறை, சென்னை – 8.

பாகூர் திருமூலநாதர் கோவில் கருவறை தென்சுவர் 16 வரிக் கல்வெட்டு

 1. ஸ்வஸ்திஸ்ரீ கன்னர [தேவர்க்கு யாண்]
 2. டு 202 (22) வேசாலிப்பாடி வடகரை வாகூர் நா
 3. ட்டு மன்றாடிகளே வாகூ[ர்] ஸ்ரீ மூலட்டா[ன]த்து
 4. ப் பெருமாளுக்கு நாங்கள் வைய்த்த தந்ம
 5. ங் கட்டிலேறப் போம்போது ஒரு ஆடு கு
 6. டுத்துக் கட்டிலேறுவோமாகவும் [புற]நா
 7. ட்டி நின்று வந்து இஞ்ஞாட்டிற் கட்டி
 8. லேறு மன்றாடி வசமொரு ஆடு குடுப்ப
 9. தாகவும் கூடாது திறம்பி[னோ]மைக் க
 10. ணப் பெருமக்களுந் தேவரடியாரு மிர
 11. ண்டாடு பிடித்துக்கொள்ளப் பெறு
 12. வதாகவும் ஒட்டிக் குடுத்தோ மிஞ்ஞா[ட்]
 13. [டு] மன்றாடிக(ள்)ளோம் இத் தம்மம் ஸ
 14. ந்த்ராதித்தவந் நிற்பதாக நிறுத்திக் குடு
 15. ப் போமானோ [மி]ஞ்ஞா[டு] மதகு செய்கின்
 16. ற மதகரோம் ஸ்ரீ0 0 0

மூலட்டானத்து – மூலத்தானத்து; கட்டிலேறு – முதலிரவு கூடுகை நிகழ்த்து; மன்றாடி – இடையர், ஆயர்; திறம்பினோமைக்கு – தவறுதல், மாறுதல், பிறழ்தல்; கணப்பெருமக்கள் – சாதிப் பெருமக்கள்; ஒட்டி –  இரட்டித்து; நிற்பதாக நிறுத்தி – இருப்பதாக நடத்தி; இஞ்ஞாட்டு – இந்நாட்டு, இவ்வூர்; மதகு – நீர்பாயும் மடை, குமிழித் தூம்பு, தேவையான நீரைச் சீராக வெளியேற்றுவதற்கு ஏற்ற வகையில் திறந்து மூடக்கூடிய அமைப்பு.

விளக்கம்: இராட்டிரகூட வேந்தன் மூன்றாம் கிருஷ்ணனான கன்னரதேவனின் 22 ஆம் ஆண்டு ஆட்சியில் (கி.பி. 961) வேசாலிப்பாடி வடகரையில் அமைந்த வாகூர் நாட்டின் இடையர்களோம், “வாகூர் மூலத்தானத்துப் பெருமானுக்கு நாங்கள் வைத்த தர்மமாவது யாதெனில்  கட்டிலேறுதலான முதலிரவுக் கூடுகை நிகழ்த்தப் போகும் போது ஒரு ஆடு கொடுத்துக் கட்டிலேறுவோமாகவும், பிற ஊரில் இருந்து வந்து இங்கு முதலிரவுக் கூடுகை நடத்தும் மன்றாடியிடம் ஒரு ஆடு கொடுப்பதாக ஒப்புக் கொண்டோம். இப்படி ஒப்புக் கொண்டபடி நடக்கத் தவறினால் இடையர் சாதி பெருமக்களும் தேவரடியாரும் இரண்டு ஆடு பிடித்துக் கொள்வார்களாக என்று ஆடுகளை இரட்டித்துக் கொடுத்தோம் இந்தஊர் மன்றாடிகளோம். இத்தர்மம் சந்திரசூரியர்  வரை இருப்பதாக நடத்திக் கொடுப்போமானோம் இவ்வூர் மதகு செய்கின்ற மதகரோம்“

பண்டு சிறுபிள்ளையின் போதே திருமணம் நடத்திவிடுவர். மணமகள் அதன்பின் தன் தாய்வீடு சென்றுவிடுவாள். அவள் பருவம் எய்திய பின்பு நாள் பார்த்து அவளை கணவனிடத்தில் கொண்டு சேர்க்கும் போது அவ்விணையர் குடும்பம் நன்கு பெருகி வளர வேண்டும் என்ற நோக்கில் அதற்கு அடையாளமாக அவர்கள் இல்லற வாழ்வில் முதன்முதலாக ஈடுபடும் போது ஒரு ஆட்டை கோவிலுக்கு தானமாகக் கொடுப்பதை இடையர் வழக்கமாகக் கொண்டிருந்துள்ளனர். அவ்வூர் பெண்ணை மணந்து அவ்வூரிலேயே வாழவரும் மணமகனுக்கும் ஒரு ஆட்டை வளர்ச்சியின் அடையாளமாக கொடுத்துள்ளனர் போலும். இதைக் கண்காணிக்க மதகு பணிசெய்வோரை அமர்த்தி உள்ளனர். அவர்கள் இதற்கு ஏன் ஏற்படுத்தப்பட்டனர் என்று புரிந்துகொள்ள முடியவில்லை. ஒருகால் இருசாராரும் ஊருக்கு வெளியே அண்டிய பகுதியில் வீடு அமைத்து வாழ்ந்ததால் ஒருவரை ஒருவர் அறிவர் என்று  ஒரு சான்றுக்காக மதகு செய்வோர் இப்படி ஆக்கப்பட்டனரோ?

பார்வை நூல்: புதுச்சேரி மாநிலக் கல்வெட்டுகள், பாகூர்  S Kuppusamy & G Vijaya venugopal,  Institute Francais De Pondichéry :  2006.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பண்டு சமூகத்தில் நிலவிய விந்தை வழக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *