அன்பின் பெயரால், அடுத்தவர் சுதந்திரத்தைப் பறிக்கலாமோ!

0

-நிர்மலா ராகவன்

நலம்… நலமறிய ஆவல் (157)

திருமணமான பின், ` நாம் இருவர் அல்லர், ஒருவரே!’ என்று பிரதிக்ஞை செய்துகொள்வதைக் காதல் நவீனங்களிலோ, திரைப்படங்களிலோ ரசிக்க முடியும். அவர்கள் நிலையில் தம்மை வைத்துக்கொண்டு சொக்குவர் இள வயதினர்.

நிழலை நிஜமென எண்ணி, வாழ்க்கையிலும் இப்படி நடக்க ஒருவர் மற்றவரைத் தூண்டுவது கொடுமை. ஒருவரது சுதந்திரத்தைப் பறித்து, அவரைத் தன் கைப்பாவையாக ஆட்டிவைக்கும் வழி இது.

கதை

மயக்கும் படலம்

தன்னால் ஏன் முன்போல் சுயமாகச் சிந்திக்க முடியவில்லை என்று பிரமிளா குழம்பினாள். கணவனை நினைத்தால் கோபமும் பயமும் ஒருங்கே எழுந்தன. இத்தனைக்கும், காதலித்து மணந்த கணவன்!

அவன் அதிகாரத்தால் கட்டுப்படுத்தவில்லை. ஆரம்பத்தில், அவள் அழகில் மயங்கியதாக அடிக்கடி சொல்வான் கேசவன். புகழுக்கு மயங்காத பெண்களும் உண்டோ! பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்து, அவள் பார்க்க ஆசைப்பட்ட இடங்களுக்கெல்லாம் அழைத்துப்போய், இப்படி என்னென்னவோ செய்து அவளைத் தன் வசப்படுத்தி இருந்தான்.

விளையாட்டில்லை

சில காலம் கழித்து, அவளை மட்டம்தட்டிப் பேச ஆரம்பித்தான் கேசவன். அவள் வருந்தினாலோ, கோபித்தாலோ, `உனக்கு விளையாட்டாகப் பேசுவதுகூடப் புரியாதா?’ என்று சமாதானப்படுத்திவிடுவான். திரும்பவும், பரிசுப் பொருட்கள், உல்லாசப் பயணங்கள் தொடரும்.

‘இவ்வளவு அன்பாக இருப்பவரைத் தான்தான் தவறாக எண்ணிவிட்டோமோ!’ என்று ஒரு பெண்ணை யோசிக்கவைக்கும் உத்தி இது. தன்னையுமறியாமல், மேலும் கட்டுப்படுத்தப்படுவதற்கு உட்படுகிறாள். உணர்ச்சிபூர்வமான வதை இது.

குற்றச்சாட்டுகள்

அவன் செய்யும் ஒவ்வொரு சிறிய காரியத்தையோ, உதவியையோ பாராட்ட வேண்டும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. ஏனெனில் அவள் மாறுபட்டிருந்தாள். அவனைப்போல் யோசிக்கத் தெரியவில்லை. அவனோ, அவளும் தன்னை அப்படியெல்லாம் புகழவேண்டும் என்று எதிர்பார்த்தான். ஏமாற்றம் எரிச்சலாகியது.

திருமணத்திற்கு முன், `உனக்குச் சூடிதார், குர்த்தாதான் அழகாக இருக்கிறது!’ என்று கேசவன் சிலாகித்தபோது, பெருமையாக உணர்ந்திருந்தாள் பிரமிளா. அவனுக்குப் பிடித்த வெளிர்நீல வண்ணத்திலேயே அவளுடைய பல ஆடைகள் அமைந்திருக்கும். தனக்கு என்ன உவப்பாக இருக்கும் என்பதையே மறந்து, காதலனின் பாராட்டுக்காகவே எதையும் செய்த காலம் அது.

திருமணமாகி சில மாதங்கள் கழித்து, அவளுக்குப் பிடித்த சிவப்பு, ஆரஞ்சு வண்ணங்களில் புடவை வாங்கிக்கொண்டபோது, கேசவன் முகத்தைச் சுளித்தான்.

“என்னோட வரும்போது, இந்தக் கண்ராவியையெல்லாம் கட்டிட்டு வராதே!’ என்று உத்தரவிட்டான். “ஒன் கருப்புக் கலருக்கு இது நல்லாவா இருக்கு?”

பிரமிளாவின் நீண்ட பின்னலை, `இதாலேதான் என்னைக் கட்டிப் போட்டுட்டே!’என்று புகழ்ந்தது ஒரு காலம். நாகரிகத் தோற்றம் என்று கருதி, அவள் தலைமயிரைக் குட்டையாக வெட்டிக்கொண்ட அன்று பூகம்பமே வெடித்தது.

“எனக்கு உன் நீண்ட முடி எவ்வளவு பிடிக்கும் என்று தெரிந்தும் இப்படி ஒரு காரியம் செய்துவிட்டு வந்திருக்கிறாயே! என்னை வருத்தப்பட வைக்க வேண்டுமென்றேதான் ஒவ்வொரு காரியமும் செய்கிறாய்!” என்று பொரிந்தவன், “யாரை மயக்க?” என்று தாக்கினான்.

`உனக்கு நான் தொலைந்தால்தான் நிம்மதி!’

இந்த பாணத்தில் எந்தப் பெண்ணும் மசிந்துவிடுவாள். குற்ற உணர்ச்சி எழ, அந்த உறவில் தங்கிவிடுவாள்.

எதனால் கட்டுப்பாடு?

இப்படி நடப்பவர், தீயவர் என்பதில்லை. முதலில் கூறியதுபோல், ஆண்-பெண் உறவைப் பற்றி புத்தகங்களிலிருந்தோ, திரைப்படங்களிலிருந்தோ அறிந்து, அதுதான் இனிமையாக வாழும் முறை என்று நம்பியவர். அவரது குடும்ப வழக்கமாகவும் இருக்கலாம்.

தனிமைப்படுத்து

ஒரு முறை, பிரமிளா வேலை பார்த்த இடத்தில் உள்ளவர்கள் ஒன்றாகப் படம் பார்க்கப் போனபோது, “நீ எதுக்கும்மா அவர்களுடன் போக வேண்டும்? நான் அழைத்துப் போகிறேன்!” என்று அன்பு சொட்டச் சொட்ட கேசவன் கூறியபோது, அவளுக்கு மறுக்கத் தோன்றவில்லை.

அபூர்வமாக, யாராவது உறவினர் அவர்கள் வீட்டுக்கு வந்தால், என்றோ, ஏதோ செய்ததற்காக அவளுக்குத் திட்டு விழும். `இவர்களை எனக்குப் பிடிக்கவில்லை. இனி நம் வீட்டுக்கு வரக்கூடாது!’ என்று மிரட்டுவான்.

`நான் சிநேகிதிகளுடன் தொலைபேசியில் பேசும்போது, தவறாது, கழிப்பறையில் அளவுக்கு மீறிய ஓசை எழுப்புவார் என் கணவர்!’ என்று ஒரு பெண்மணி எழுதியிருந்ததைப் படித்திருக்கிறேன். ஆதரவுக் கரம் அளிக்க யாருமின்றி, கணவன் என்ன செய்தாலும் பொறுத்துப் போகும் நிலையை உண்டாக்கச் செய்த தந்திரம் அது.

இதேபோல், பிரமிளாவின் உறவினர் மற்றும் நண்பர் குழாம் சுருங்கியது. பக்கபலமாக யாருமின்றி, தனித்துப் போனாள்.

எது செய்ய ஆரம்பிக்கும்போதும், `அவர் என்ன சொல்வாரோ!’ என்ற தடுமாற்றமும் பயமும் எழுந்தன பிரமிளாவுக்கு. தன்னம்பிக்கை வீழ்ச்சி கண்டது.

பிறரிடம் தன் அவலத்தைச் சொல்லி அனுதாபம் பெற அவளுக்கு விருப்பமில்லை. யாரையும் நம்பவும் முடியவில்லை. நம்பியவனே இப்படி மாறிவிட்டிருந்தபோது, யாரைத்தான் நம்புவது!

அத்துடன், `வீட்டில் எது நடந்தாலும், நான்கு சுவருக்குள் இருக்கவேண்டும்!’ என்று சிறு வயதிலிருந்தே போதனை வேறு கிடைத்திருந்ததே!

எங்கேயும் எப்போதும்

தம்பதியர்களிடையே மட்டும்தான் இப்படிப்பட்ட கட்டுப்படுத்துதல் இருக்கும் என்றில்லை. எந்த வயதிலும், ஏழையோ, பணக்காரரோ, யாரோ ஒருவர் இன்னொருவரைக் கட்டுப்படுத்தி, அதன்மூலம், `நான் பலசாலிதான்!’ என்று தன்னையே நம்பும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

உடன்பிறந்தவர்களோ, நண்பர்களோகூட இப்படி நடப்பது சகஜம். ஒரு வித்தியாசம்: சிரித்த முகத்துடன் குறைகளைச் சுட்டிக் காட்டுவார்கள்.

ஏன் சிரித்த முகம்?

`இவர் நம்மைக் கட்டுப்படுத்த முயலவில்லை, நம்மேல் மிகுந்த அக்கறையால் அப்படிச் செய்கிறார்!’ என்று எண்ணிக்கொள்ள வேண்டுமாம்!

வாழ்க்கைப் பின்னணி, கலாசாரம் போன்ற பலவற்றால் நாம் பிறரிடமிருந்து மாறுபடுகிறோம். இது புரியாது, `எல்லாரும் என்னைப்போல், நான் சொல்கிறபடிதான் இருக்கவேண்டும்!’ என்று வாதம் புரிந்தால் எப்படி!

உதவி அவருக்குத்தான் தேவைப்படுகிறது. இது புரிந்தால், மற்றவர் தன் சுதந்திரத்தை இழக்காமல் தன்னையே காத்துக்கொள்ள முடியும்.

எப்படித் தற்காத்துக்கொள்வது?

`நீ என்ன சொன்னாலும் நான் மாறப் போவதில்லை. எதற்கு உன் சக்தியை விரயமாக்குகிறாய்?’ என்ற நேரடி தாக்குதல் எனக்குப் பலனளித்திருக்கிறது.

ஆனால், உணர்ச்சிபூர்வமான வதையாக ஆரம்பித்தது வன்முறையாக மாறினால், அந்த உறவிலிருந்து விலகுவதைத் தவிர வேறு வழியில்லை.

கதை

ஒரு விருந்தில் சந்தித்தேன் அந்த இளம் தம்பதிகளை. காதலர்களாக இருந்தபோது, காதலி சொல்வதையெல்லாம் கேட்டு நடந்தவன் லீ.

காதலியோ அழகி. அவளை வேறு யாராவது கொத்திப் போய்விட்டால்?

`சண்டை போடத்தான் காலம் பூராவும் இருக்கிறதே! இப்போதே என்ன அவசரம்?’ என்றுகூட அவன் நினைத்திருக்கலாம்.

திருமணமான பின், ஏதாவது பானத்தைக் குடிக்கும்போது, அவன் உறிஞ்சுவதைப் பார்த்து அழகான மனைவி முகம் சுளித்தாள்.

`நாமென்ன ஜப்பானிலா இருக்கிறோம்! அங்குதான் மிகுந்த ஓசையுடன் உறிஞ்சினால்தான் பாராட்டு என்று நினைப்பார்கள்!’ என்று தோன்ற, `அசிங்கம்!’ என்று கணவனைக் கண்டித்தாள்.

அடுத்தமுறை, உறிஞ்சும் ஓசை அதிகமாயிற்று.

“நான் ஏதாவது `கூடாது’ என்று சொன்னால், லீ இன்னும் அதிகமாகச் செய்கிறார். அதனால், நான் அவரை எதுவும் சொல்வதில்லை,” என்று அவள் சொல்லக் கேட்டு, புன்னகைத்தேன். மௌனமான எதிர்ப்பு பலனளிக்கும் என்று புரிந்தவன்!

உறவு என்பது மகிழ்ச்சிக்காக

அச்சம் விளைவிப்பதாகவோ, அளவுக்கு அதிகமான அன்பால் திக்குமுக்காட வைப்பதாகவோ உறவு இருந்தால் மாறுதிசை மின்னோட்டத்தில் (alternating current) கையை வைத்ததுபோல்தான். மகிழ்ச்சி கிடைக்குமா?

அட, மகிழ்ச்சியை விடுங்கள்! நிம்மதி தொலைந்து போய்விடுமே!

Pic courtesy: http://getdrawings.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.