-நாகேஷ்வரி அண்ணாமலை

நான் எப்போதுமே கொலம்பஸுக்கு அமெரிக்காவில் அதிக மரியாதை கொடுக்கிறார்கள் என்று நினைத்ததுண்டு. முதல் முதலாக அட்லாண்டிக் கடலை அவர் கடந்தது பெரிய சாதனைதான். கொந்தளிக்கும் அட்லாண்டிக் கடலை அதுவரை யாரும் கடந்ததில்லை; உயிரைத் துச்சமாக நினைத்து அதைக் கடக்கத் துணிந்தது பெரிய காரியம்தான். இருந்தாலும் அவர் ‘புதிய கண்டத்தில்’ என்னென்ன அட்டூழியங்கள் புரிந்தார் என்பதை அறிந்தால் அவரை இப்படிப் புகழ முடியுமா என்று எனக்கு நினைக்கத் தோன்றும்.

ஐரோப்பியர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு ஒரு புதிய பூமியைக் காட்டி அங்குள்ள வளத்தை அவர்கள் அனுபவிக்க வழிகாட்டியது கொலம்பஸ்தான். அதனால் அவர்கள் அவரை மிகவும் போற்றுகிறார்கள் என்று எண்ணிக்கொள்வேன். (கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார் என்று நமக்குப் பள்ளியில் கற்பிக்கப்பட்டாலும் இப்போது அமெரிக்கா என்று அறியப்படும் கண்டத்தில் கொலம்பஸ் கால்வைக்கவில்லை. அருகிலுள்ள பஹாமாத் தீவுகளுக்கு வந்ததோடு சரி. அவருக்குப் பிறகு அமெரிக்கக் கண்டத்திற்கு வந்த அமெரிகோ வெஸ்ஸி புச்சி என்னும் இத்தாலியரின் பெயரைத்தான் அமெரிக்கக் கண்டத்திற்கு வைத்தார்கள். இவர்தான் கொலம்பஸ் வந்தது இந்தியாவுக்கு இல்லை, இன்னொரு கண்டத்திற்கு என்று சொன்னவர். 1497-லும் 1502-லும் அமெரிக்கக் கண்டத்தைற்குத் தான் வந்த அனுபவங்களை எழுதினார். இவர் எழுதியதை வைத்து வரைபடம் வரைபவர்கள் வரைபடம் வரைய ஆரம்பித்தார்கள். அதனால் இவர் பெயரையே அதற்கு வைத்தார்கள்.)

1934-லிருந்துஅமெரிக்காவில் அக்டோபர் மாதம் இரண்டாவது திங்கள்கிழமை கொலம்பஸ் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இது மத்திய அரசால் விடுமுறை நாளாகக் கணிக்கப்பட்டது. இப்போது சில மாநிலங்களில் அந்த நாளை ‘பழங்குடி மக்கள் நாள்’ என்று மாற்றப் போகிறார்களாம். ஏற்கனவே நியூ மெக்ஸிகோ, வட கரோலினா, அலாஸ்கா, தென் டகோட்டா, ஆரகன், மினசோட்டா ஆகிய ஆறு மாநிலங்களிலும் 130 நகரங்களிலும் பெயர் மாற்றம் நடந்திருக்கிறது. (அமெரிக்காவில் மாநிலங்களுக்கென்று சில உரிமைகள் உண்டு.) வெர்மான்ட்டில் பெயர் மாற்றம் செய்வதற்குரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் கையொப்பத்திற்காகக் காத்திருக்கிறது.

அமெரிக்காவில் நிறைய மாநிலங்களில் கொலம்பஸ் என்ற பெயரில் ஊர்களும் சாலைகளும் உண்டு. அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் இருக்கும் டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியாவின் பெயர்கூட கொலம்பஸ்அமெரிக்கக் கண்டத்தை கண்டுபிடித்ததன் அடையாளமாக வைக்கப்பட்ட பெயர்தான்.

இப்போது மெயின் மாநில சட்டசபையில் பெயர் மாற்றுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஜேனட் மில்லர் சீக்கிரமே அதில் கையொப்பமிடப் போகிறார். ‘ஒருவரின் பெயரை ஒரு நாளுக்கு வைப்பதால் அவருக்கு நாம் மிகவும் மதிப்பும் மரியாதையும் கொடுக்கிறோம். கிறிஸ்டபர் கொலம்பஸ் அட்லாண்டிக் கடலைக் கடந்தார் என்பதைத் தவிர அவர் என்ன பெரியதாகச் சாதித்துவிட்டார்?’ என்று அந்த மசோதா விவாதத்திற்கு வந்தபோது மெயின் சட்டசபை அங்கத்தினர் ஒருவர் கேட்டிருக்கிறார். கொலம்பஸ் நாளை பழங்குடி மக்கள் நாள் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோருபவர்கள் அமெரிக்கக் கண்டங்களில் அப்போது லட்சக் கணக்கான மக்கள் வாழ்ந்து வந்தார்கள் என்றும் கொலம்பஸ் வந்ததால் ஐரோப்பாவிலிருந்து நிறையக் குடியேறிகள் அமெரிக்காவுக்கு வந்து அங்கு ஏற்கனவே வாழ்ந்து வந்த மக்களைத்தங்கள் நலன்களுக்காகப் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்திக்கொண்டர்கள்என்றும் இவருக்கு இதுவரை கொடுக்கப்பட்டு வந்த மதிப்பையும் மரியாதையையும் இப்போது நிறுத்திவிட்டு அவரால் பல துன்பங்களுக்கு ஆளான பழங்குடி மக்களின் பெயரால் அந்த நாளைக் குறிப்பிடலாம் என்றும் கூறுகிறார்கள். பழங்குடி மக்களின் பிரதிநிதியாக வந்திருந்த பெண்,‘இந்த நிலத்திற்கும் நீருக்கும் சொந்தமான எங்களுக்கு இதுவரை எந்தவித உரிமைகளும் இல்லாமல் இருந்தது. விடுமுறை நாளுக்கு கொலம்பஸ் பெயர் கொடுக்கப்பட்டிருந்ததால் எங்களுக்கு அவர் இழைத்த அநீதி மறைக்கப்பட்டிருந்தது. இப்போது எங்களுக்குரிய அங்கீகாரத்தைக் கொடுத்திருப்பது மனநிறைவைத் தருகிறது’ என்று கூறியிருக்கிறார். இப்படி கொலம்பஸ் நாள் என்று இதுவரைக் குறிப்பிடப்பட்டு வந்த நாளைப் பழங்குடி மக்களின் நாள் என்று பெயர் மாற்றம் செய்வதால் இத்தாலிய-அமெரிக்கர்கள் (இத்தாலியிலிருந்து அமெரிக்காவுக்கு வந்து குடியேறியவர்களை இத்தாலிய அமெரிக்கர்கள் என்று குறிப்பிடுகிறார்கள்; அதுபோல் இந்தியாவிலிருந்து வந்து குடியேறியவர்களை இந்திய-அமெரிக்கர்கள் என்று குறிப்பிடுகிறார்கள்; ஒவ்வொரு நாட்டிலிருந்து வந்தவர்களுக்கும் இப்படிப் பெயர்கள் உண்டு.) தங்கள் மரபுப் பாரம்பரியத்தின் ஒரு அங்கமாக அந்த நாளைக் கொண்டாடுகிறார்கள் என்ற ஒரு விஷயம்தான் கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது என்று பெயர் மாற்றம் செய்யும் விவாதத்தின்போது கூறப்பட்டது.

கலிஃபோர்னியா மாநிலத்திலுள்ள பெர்க்லி என்னும் நகரம் 1992-லேயே இந்த விடுமுறை நாளைப் பழங்குடி மக்கள் தினம் என்று பெயர் மாற்றம் செய்துவிட்டது. இன்னும் பிரவுன் பல்கலைக்கழகமும்,மினியாப்பிலஸ், சியாட்டல் ஆகிய நகரங்களும் பெயர் மாற்றம் செய்திருக்கின்றன. அலாஸ்கா 2015-இல் பெயர் மாற்றம் செய்தது; வாஷிங்டன் மாநிலம் அந்த நாளை விடுமுறை நாள் என்ற பட்டியலிலிருந்து நீக்கிவிட்டது. இன்னும் சில மாநிலங்கள் வேறு வகையாக இந்த நாளைக் கையாள்கின்றன. ஓக்லஹோமா மாநிலம் கொலம்பஸ் நாளை கொலம்பஸுக்கும் பழங்குடிகளுக்கும் உரிய நாளாக ஆக்கிப் புதிய சட்டம் இயற்றியிருக்கிறது. ஒஹையோ மாநிலத்தில் உள்ள சாண்டஸ்கி என்னும் நகரம் இந்த நாளுக்குப் பதில் தேர்தல் நாளை விடுமுறை நாளாக அறிவித்திருக்கிறது. தேர்தல் நாள் விடுமுறைநாளாக இருந்தால் வாக்காளர்களுக்கு வசதியாக இருக்குமாம். (அமெரிக்காவில் எல்லாத் தேர்தல்களும் – மிகச் சில விசேஷத் தேர்தல்கள் தவிர– நவம்பர் மாதம் முதல் செவ்வாய்க் கிழமையன்று நடைபெறும். எல்லாக் கீழவை அங்கத்தினர்களுக்கான தேர்தல்களும் இரண்டு வருஷங்களுக்கு ஒரு முறையும் ஜனாதிபதித் தேர்தல் நான்கு வருஷங்களுக்கு ஒரு முறையும் மேலவை அங்கத்தினர்களுக்கான தேர்தல் ஆறு வருஷங்களுக்கு ஒரு முறையும் நடக்கும்.அமெரிக்காவில் தேர்தல் நாளன்று விடுமுறை இல்லை. எல்லா ஓட்டுச்சாவடிகளும் காலை ஆறு அல்லது ஏழு மணியிலிருந்து இரவு ஏழு அல்லது எட்டு மணி வரைக்கும் திறந்திருக்கும்)

கொலம்பஸ் நாள் மத்திய அரசின் விடுமுறை நாளாகத் தொடருகிறது. போன ஆண்டு அக்டோபர் மாதம் கொலம்பஸ் நாளன்று ட்ரம்ப் வெளியிட்ட அறிக்கையில்,‘இந்த நாளன்று திறமை வாய்ந்த ஒரு இத்தாலியரின் சாதனைகளை நாம் கொண்டாடுகிறோம். அமெரிக்க மதிப்பீடுகளான குறிக்கோளை அடைய விரும்பும் பேரார்வம், துணிச்சல், மனோதிடம் ஆகிய குணங்கள் அவரிடம் இருந்தன’ என்று கொலம்பஸைப் புகழ்ந்துதள்ளியிருக்கிறார்.

இந்த ட்ரம்ப் என்னவாவது சொல்லிவிட்டுப் போகட்டும். இப்போதாவது சில அமெரிக்கர்களாவது கொலம்பஸ் பழங்குடி மக்களுக்குச் செய்த அநீதிகளையும் அட்டூழியங்களையும் நினைவுகூர்ந்து அவருக்கு இதுவரை கொடுத்துவந்த மரியாதையையும் மதிப்பையும் திரும்ப வாங்குகிறார்களே என்பதை நினைக்கும்போது மனதில் ஒரு மகிழ்ச்சி பிறக்கிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.