Category: Featured

Featured

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…(73)

     சக்திசக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்புடை வாசக உள்ளங்களுடன் அடுத்தொரு மடலில் இணைவதில் மகிழ்கிறேன்.

    இங்கிலாந்து பல்வேறு இனத்தவர் , பல்வேறு சமூகங்கள் இணைந்து வாழும் ஒரு பல்லினக் கலாச்சாரம் கொண்ட நாடு.

    எதனது பல்லினக் காலாச்சார வாழ்வில் இனக்களுக்கிடையே உள்ல இணக்கப்பாடு எத்தனை முன்னில்லை கொண்டதாக இருந்தாலும் காலத்துக்குக் காலம் பொருளாதார ச் சீர்கேடு கொடுக்கும் நெருக்கடியாலும், அடிமனதில் ஊறி நிற்கும் நிறவெறி, இனவெறி ஆகியவற்றின் தாக்கங்களையுடையவர்களின் பிரச்சாரத்தாலும் இங்களுக்கிடையெலேயான முறுகல் நிலை பல்வேறு நாடுகளிலும் ஏற்படுவதுண்டு.

    இங்கிலாந்து இதற்கொன்றும் விதிவிலக்கான நாடு அல்;ல.

    ஆனால் இவ்வினக்களுக்கிடையே ஏஎர்படும் இம்முறுகல் நிலையை எதிர் கொள்வதற்காகவும் இனங்களுக்கிடையே உள்ள ஜக்கியத்தையும், புரிந்துணர்வையும் வளர்ப்பதற்காகவும் சேவையாற்றுவோர் அனைத்து சமூகங்களிலும் செயற்படுகிறார்கள்.

    இத்தகைய செயற்பாட்டுக்கு பல்வேறு இன மக்களின் கலாச்சார அடிப்படையைப் பற்ரிய புரிந்துணர்வு ஏற்பட வேண்டியது அவசியம்..

    என்ன எத்திசையை நோக்கிப் போகிறது இம்மடல் ? எனும் வினா உங்களுக்குள் இப்போது எழுந்திருக்க வேண்டுமே ?

    இங்கிலாந்தில் கோடைகாலத்தில் (Summer Time) நான் இங்கு வந்த காலத்திலிருந்து தவராமல் நடைபெற்று வரும் ஒரு கலாச்சார நிகழ்வு “நொட்டிங் ஹில் காணிவல் ( Notting Hill Carnuval ) எனும் ஒரு நிகழ்வாகும்.

    மிகவும் விமரிசையாக நடைபெறும் இக்கலாச்சார விழாவானது மேற்கிந்திய தீவு மக்களின் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டது.

    ஆகஸ்ட் மாத இறுதியில் வரும் பொதுவிடுமுறை ஒரு திங்களில் விழுவது வழக்கம். இப்பொதுவிடுமுறை வரும் அந்த மூன்று தினங்களடங்கிய வார இறுதி விடுமுறையில் அம்மூன்று நாட்களும் இவ்விழா இலண்டனின் வடமேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் நாட்டிங் ஹில் (Notting Hill ) எனும் பகுதியில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

    சரி இவ்விழாவின் பின்னனி என்ன என்று பார்ப்போமா?

    இவ்விழாவின் பின்னனியில் வெறுபட்ட ஆனல் கருத்தால் இணைந்த இருவேறு நிகழ்வுகள் இருக்கின்றன.

    1958ம் ஆண்டு இலண்டனின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள இதே “நாட்டிங் ஹில்” எனும் பகுதியில் இங்கிலாந்தின் மிக மோசமான இனக்கல்வரம் நடைபெற்றது.

    காலாச்சாரப் புரிந்துணர்வு இல்லாத காரணத்தினாலேயே இத்தகைய இனக்கலவரங்க|ள் இடம்பெறுகின்றன என்பதையுணர்ந்த “குளோடியா ஜோன்ஸ் (Claudia Jones ) எனும் மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான Trinidad and Tobago எனும் தீவைப் பிறப்பிடமாகவும் இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட பெண் “மேற்கிந்திய தீவு விழா ( Caribean carnival )” எனும் விழாவை இலண்டனில் உள்ள St.Pancras Town hall எனும் இடத்தில் 1959 ஜனவரி 30ம் திகதி நடத்தினார்.

    ஆனால் இது ஒரு மண்டபத்தினுள் நடக்கும் நிகழ்வாக அமைந்தது.

    அது போல 1966ம் ஆண்டு நாட்டிங் ஹில் பகுதியில் ” ஹிப்பி லண்டன் ப்ரீ ஸ்கூல் ” எனும் அமைப்பால் தெரு விழா ஒன்று அமைந்தது. .

    இவ்விரண்டு விழாக்களின் ஒன்றினைப்பே தற்போது நடைப்பெற்று வரும் ” நாட்டிங் ஹில் விழா “

    இவ்விழாவில் ஆரன்ப காலங்களில் சட்டம், ஒழுங்கு ஆகியவர்ரின் சீர்குலைவுகள் நடைப்பெற்றிருந்திருக்கின்றன.

    பெரும்பான்மையாக மேற்கிந்திய தீவுஇன் பின்னனியைக் கொண்ட இளம் தலைமுறையினர் ஈடுப்படும் விழாவாக இருக்கும். பல சமயங்களில் இக்குழுக்களுக்கும் பொலிசாருக்கும் இடையே பல கலவரங்கள் மூண்டுள்ளன.

    ஆனால் சமீப காலங்களில் இவ்விழா பொதுவாக அமைதியான முறையிலேயே நடைபெற்று வருகிறது.

    மேர்கிந்திய தீவுகளின் காலாச்சாரத்தில் அமைந்த பல வித நடனங்களையுள்ளடக்கிய ஊர்வலங்கள் இத்தெருக்களில் கோலாகலமாக அரங்கேறும்.

    பல காலாச்சர மக்களுடைய உணவுச் சாலைகள் தெருவோரம் போடப்பட்டு இருக்கும்.

    இவ்விழாவில் இப்போதைய காலங்களில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இதுவே தெருவில் நடைபெறும் விழாக்களில் உலகளவில் மிகப்பெரியது என்று கணிக்கப்படுகிறது.

    இத்திருவிழாவினால் இங்கிலாந்தின் பொருளாதாரத்திற்கு ஏறத்தாழ #93 மில்லியன் நன்மை கிடைக்கிறது என்கிறது ஒரு பொருளாதார அறிக்கை .

    இதுவரை இவ்விழாவின் வன்முறையால் 5 கொலைகள் நிகழ்ந்துள்ளன.

    பல்லின மக்கள் கலந்து வாழும் ஒரு நாட்டில் அமைதியும், சமாதானமும், நீதியும் நிலைபெற வேண்டுமானல் கலாச்சாரப் புரிந்துணர்வு அவசியம். ஒருவரின் கலாச்சாரம் மற்றவர் மீது திணிக்கப்படாத வகையில் அதை கொண்டாடப் பழகிக் கொண்டால் அங்கு அமைதியும், சமாதானமும் நிலவுவது உறுதி.

     மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி

    http://www.thamilpoonga.com

    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • படைப்பாற்றல் நம் மூளையின் எப்பகுதியில் உருவாகிறது?

    தேமொழி

    [குறிப்பு:  இக்கட்டுரை சென்ற மாத,  ‘சயின்டிஃபிக் அமெரிக்கன்’ (Scientific American, August 19, 2013 issue) இதழில் வெளியான, பேராசிரியர். முனைவர். காப்ஃமன் ஸ்காட்  பேரி (Dr. Kaufman Scott Barry) அவர்களின் கட்டுரையின் மொழி பெயர்ப்பு.  இதனை மொழி பெயர்த்து வெளியிடுவதற்கு நியூ யார்க் பல்கலைக்கழகத்தில் உளவியல் பேராசிரியராகப் பணியாற்றும் திருவாளர்.காப்ஃமன் ஸ்காட்  பேரி அவர்களிடம் அனுமதி பெற்ற பின்பு மொழிபெயர்த்து வெளியிடப் படுகிறது. அனுமதி கொடுத்த பேராசிரியர். முனைவர். காப்ஃமன் ஸ்காட்  பேரி அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.]

     

    ஆராய்ச்சிக் கண்ணோட்டம் கொண்டு அலசி ஆராயும் தன்மை, செயல்களில் ஒழுங்குமுறையைக் கடைபிடிக்கும் தன்மை, காரண காரியத் தொடர்புடைய வகையில் தர்க்க ரீதியில் சிந்திக்கும் தன்மை, நிகழக்கூடியவற்றை யதார்த்தமானவற்றை சிந்திக்கும் தன்மை, இயல்பான நடைமுறைக்கேற்ப செயல்படும்  தன்மை போன்ற பண்புகளை வெளிப்படுத்துவது  மனிதர்களின் இடது பக்க மூளையின் செயல் என்று இதுவரை கருதப்பட்டு வந்தது.

    அது போலவே படைப்பாற்றல், உணர்வுப்பூர்வமான வண்ணமயமான சிந்தனைகள், இன்பம் சுவை போன்றவற்றை அனுபவிக்கும் தன்மை, மனம் கவரும் செயல்பாடுகளை, கவிதைத்துவமான எண்ணங்களை வெளிப்படுத்துதல் போன்ற மென்மையான உணர்வுகளை சித்தரிப்பது மூளையின் வலது பக்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கருதப்பட்டு வந்தது.

    crative barain

    தற்கால நரம்பியல் ஆராய்ச்சியில் முன்னோடிகளாகத் திகழும் நரம்பியல் துறை ஆராய்ச்சி வல்லுனர்கள் (Rex Jung, Darya Zabelina, John Kounios, Mark Beeman, Kalina Christoff, Oshin Vartanian, Jeremy Gray, Andreas Fink, Hikaru Takeuchi and others; கொடுக்கபட்டுள்ள சுட்டிகளைச் சொடுக்கி இந்த ஆராய்ச்சியாளர்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம்), மூளை தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தும் பொழுது அது எவ்வாறு இயங்குகிறது என்று தற்கால தொழில் நுட்பங்களின் உதவியுடன் ஆராய்ந்து வருகிறார்கள்.  இவர்களின் கண்டுபிடிப்புகள் இதுவரை படைப்பாற்றல் திறனை மூளை கையாளும் விதத்தைப் பற்றி நாம் கொண்டிருந்த எண்ணங்களை மாற்றி அமைப்பதாக விளங்குகிறது.

    நரம்பியல் ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆராய்ச்சி முடிவுகள் இதுவரை நாம் எண்ணியது போல மூளை வலது பக்கம் மற்றும் இடது பக்கம் என்று தனித்தனியாக இயங்குவதாக நாம் நினைப்பது தவறு என்று அறிவுறுத்துகிறது.  மொழி தொடர்பான செயல்களில் இடதுபக்க மூளை அதிக பங்கு வகித்தாலும், இடம் சார்ந்த ‘ஸ்பாட்டியல்’ செயல்களில் வலது மூளையின் பகுதி அதிகம் பங்கு வகித்தாலும்; மூளை படைப்பாற்றலில் ஈடுபட்டிருக்கும் பொழுது மூளையின் ஒரு பகுதியோ அல்லது மூளையின் ஒரு பக்கமோ மட்டும் அதில் பங்கேற்பதில்லை என்ற உண்மை இப்பொழுது தெரிய வந்திருக்கிறது.

    உண்மையில், படைக்கும் எண்ணம் கருக்கொண்டு, வளர்ச்சியடைந்து, முழுமையாக முற்றுப் பெறும் வரை மூளையின் புலன் மற்றும் உணர்வு தொடர்புடைய பகுதிகள் பல இணைந்து செயலாற்றுகின்றன. நாம் எதனைப் படைக்கிறோமோ அதற்கு ஏற்றவாறு, படிப்படியாக உருவாகும் ஒவ்வொரு நிலைக்கும் தேவையான பணிகளைச் செய்ய மூளையின் வெவ்வேறு பகுதிகள் பங்கேற்கின்றன.  மூளையின் வெவ்வேறு பகுதிகள் தேவைக்கேற்ப ஒருங்கிணைந்து செயலாற்றியே படைப்பாற்றல் வெளிப்படுத்தப்படுகிறது.

    முக்கியமாக, ஒரு செயலை நிறைவு செய்ய மூளையின் இடது மற்றும் வலது பக்கங்களில் உள்ள பல்வேறு பகுதிகள் ஒருங்கிணைத்து செயலாற்ற வேண்டியத் தேவை இருக்கிறது என்பதைத் தற்கால ஆராய்ச்சி முடிவுகள் வலியுறுத்துகின்றன. மூளையின் நரம்புகளின் வலைக்கட்டமைப்புகள் ஒருங்கிணைத்து பெருமளவில் செயல்படுவதாலேயே நம் புலன்கள் சரிவர செயல்படுகின்றன.

    இவ்வாறு மூளையின் பல்வேறு பகுதிகளும் இணைந்து செயல் படுவது நாம் செய்யும் செயலைப் பொருத்து அமைகிறது. காட்டாக, ஒரு சிற்றுந்தின் பின்புறம் உள்ள சாமான்கள் வைக்கும் பகுதியில் பொருட்களை அடுக்கும்பொழுது, அவற்றைத் தேவைக்கேற்றவாறு சுழற்றி சீராக அடுக்க விஷுவோ ஸ்பாட்டியல் என்னும் நரம்புகளின் வலைக்கட்டமைப்பின் (Visuospatial Network)  செயல் தூண்டப்படுகிறது.  இதுபோன்று இடஞ்சார்ந்த முடிவுகளை எடுக்கும் பொழுது மூளையின் பின்புற சுவர் புறணி மற்றும் முன்புற கண் துறைகள் (posterior parietal cortex and frontal eye fields) ஒருங்கிணைந்து செயலாற்றுகின்றன.

    இது போன்றே, ஒரு உரையாடல் அல்லது சொற்பொழிவு ஆற்றும் பொழுது மொழி மற்றும் பேச்சுக்குத் தொடர்புடைய நரம்புகளின் வலைக்கட்டமைப்பின் செயல் தூண்டப்படுகிறது.  அப்பொழுது மூளையின் ‘புரோக்கா’ மற்றும் ‘வெர்னிக்’ பகுதிகள் (Broca’s area and Wernicke’s area  of the brain) இணைந்து செயலாற்றுகின்றன.

    அதுபோலவே மூளை படைப்பாற்றலில் ஈடுபடும்பொழுது மூன்று வித நரம்புகளின் வலைக்கட்டமைப்புகளின் செயல்கள்  தூண்டப்படுகின்றன. அவை:
    1. கவனக்கட்டுப்பாட்டிற்கான நரம்புகளின் வலைக்கட்டமைப்பு (The Attentional Control Network)
    2. கற்பனைத்திறனுக்கான நரம்புகளின் வலைக்கட்டமைப்பு (The Imagination Network)
    3. கவனத்திற்கு தக்கவாறு செயல்படும் நரம்புகளின் வலைக்கட்டமைப்பு (The Attentional Flexibility Network)

    1. கவனக்கட்டுப்பாட்டிற்கான நரம்புகளின் வலைக்கட்டமைப்பு:
    ஒரு செயலில் ஒருமித்த ஆழ்ந்த கவனம் செலுத்தத் தேவை இருக்கும் பொழுது இந்த நரம்புகளின் வலைக்கட்டமைப்பு தூண்டப்படுகிறது. ஒரு விரிவுரையில் கவனம் செலுத்தும் பொழுதோ அல்லது ஒரு சிக்கலுக்குத் தீர்வு காணும் பொழுதோ நம் நினைவுகளுக்கு அதிக வேலை கொடுக்கப்படுகிறது.  அப்பொழுது மூளையின் புறப்பகுதி, முன்புறம் மற்றும் பின்புறப் பகுதிகள் (lateral regions of the prefrontal cortex and areas toward the posterior of the parietal lobe) யாவும் இணைந்து செயலாற்றத் தேவையாக இருக்கிறது.  இப்பகுதிகளை இணைக்கும் நரம்புகளின் வலைக்கட்டமைப்பு தூண்டப்பட்டு செயலாற்றுகிறது.

    2. கற்பனைத்திறனுக்கான நரம்புகளின் வலைக்கட்டமைப்பு:

    படைப்பாற்றலின் பொழுது, மூளையின் இந்த நரம்புகளின் வலைக்கட்டமைப்பு ஒருவருக்கு கடந்த காலத்தில் பெற்ற அனுபவங்களினால் கிடைத்த அடிப்படையான நினைவுகள், எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகள் ஆகியவற்றைக் கொண்டு, தற்காலத் தேவைக்கேற்ப மாறுபட்ட கோணங்களையும் சிந்திக்கும் வகையில் நாம் செய்யும் செயலில் தொடர்ந்து மாற்றங்களை தூண்டிக்கொண்டிருக்கும். அத்துடன் இந்த கற்பனைத்திறன் நரம்புகளின் வலைக்கட்டமைப்பு சமூகத் தாக்கத்தையும் உள்ளடக்கியது.  உதாரணமாக, நாம் அடுத்தவர் இப்பொழுது என்ன சிந்தித்துக் கொண்டிருப்பார் என்று யோசிக்கும்பொழுது இந்த நரம்புகளின் வலைக்கட்டமைப்பு செயல்பட்டுக் கொண்டிருக்கும். பெருமூளைப் புறணியின் (cerebral cortex) முன்பகுதியின் உட்புறம், நடுப்பகுதியின் உட்புறம், மற்றும் பக்கவாட்டுப் பகுதியின் உட்புற மற்றும் வெளிப்புறங்கள் யாவையையும் இணைக்கும் இந்த நரம்புகளின் வலைக்கட்டமைப்பு ஒருங்கிணைந்து செயல்படுவதால் கற்பனை செய்யும் திறன் செயல்பாட்டிற்கு வருகிறது.

    crative barain2crative barain3

    3. கவனத்திற்கு தக்கவாறு செயல்படும் நரம்புகளின் வலைக்கட்டமைப்பு:
    இந்த நரம்புகளின் வலைக்கட்டமைப்பு எப்பொழுதும் விழிப்புடன் இருக்கும் தன்மை கொண்டது. இது வெளிப்புறத்தில் இருந்து கிடைக்கும் சமிக்கைகளையும், உடலினுள் இருந்து கிடைக்கும் சமிக்கைகளையும் தொடர்ந்து கண்காணித்தவண்ணம் இருக்கும்.  சமிக்கைகளின் தேவைக்கு ஏற்றவாறு  கவனக்கட்டுப்பாட்டிற்கான நரம்புகளின் வலைக்கட்டமைப்புக்கோ அல்லது கற்பனைத்திறனுக்கான நரம்புகளின் வலைக்கட்டமைப்புக்கோ சமிக்கைகளை அனுப்பி தேவையான முடிவெடுத்து, தக்க வகையில் செயலை முடிக்க வழி செய்கிறது. இந்த நரம்புகளின் வலைக்கட்டமைப்பு பெருமூளைப் புறணியின் மேல்முன்புறம் உள்ள சிங்குலேட் கார்ட்டெக்ஸ் பகுதிகளையும் (dorsal anterior cingulate cortices), முன்புறம் தனித்திருக்கும் கார்ட்டெக்ஸ் (anterior insular) பகுதிகளையும் உள்ளடக்கியது. இந்த அமைப்பு தேவைகேற்ப கவனத்திற்கோ அல்லது கற்பனைக்கோ என சமிக்கைகளை மாற்றிவிட உதவுகிறது.

    படைப்பற்றலைப் பற்றிய தோராயமான புரிதல்:
    நரம்பியல் அடிப்படையில் படைப்பாற்றலைப் பற்றி அறிந்து கொள்வதில், இந்த மூன்று வகை நரம்புகளின் வலைக்கட்டமைப்புகள் எவ்வாறு இயங்குகிறது, எந்த வகைகளில் இவற்றின் செயல்கள் தூண்டிவிடப்படுகிறது அல்லது செயலிழக்கச் செய்யப்படுகிறது, எந்த நிலைகளில் எந்தெந்த மாற்றங்கள் நிகழ்கிறது என்பதை அறிந்து கொள்வது இன்றியமையாதது. சிலநேரங்களில் இந்த நரம்புகளின் வலைக்கட்டமைப்புகள் இணைந்தும், சில நேரங்களில் அவ்வாறு இணைந்து செயல்படுவது படைப்பாற்றலைக் குறைக்கும் என்பதால் தனித்தும் இயங்கத் தேவையாகிறது.

    சமீபத்தில் வெளியான ஆய்வு அறிக்கையில் ரெக்ஸ் யுங் (Rex Jung and Colleagues) மற்றும் அவருடன் ஆராய்ச்சியில் பங்குபெற்ற நரம்பியல் வல்லுனர்கள் மூளையின் படைப்பாற்றல் உருவாகும் விதத்தின் ஒரு தோராயமான முதல் நிலையை (first approximation) எடுத்துக் காட்டியுள்ளனர். இந்தத் தோராயமான முதல்நிலை வரையறையின்படி, படைக்கும் செயலில் எவ்வாறு நாம் சிந்திக்கும் திறனை கட்டவிழ்க்க வேண்டும், சிந்தனையை சுதந்திரமாக பரவ விட வேண்டும், புதிய வழிகளை கற்பனை செய்ய வேண்டும், உள்மன விமர்சனங்களை அமைதிப் படுத்த வேண்டும், கவனக்கட்டுப்பாட்டிற்கான நரம்புகளின் வலைக்கட்டமைப்பை சிறிதே செயலிழக்கச் செய்ய வேண்டும், மற்ற இரு கற்பனைத்திறனுக்கான மற்றும் கவனத்திற்கு தக்கவாறு செயல்படும் நரம்புகளின் வலைக்கட்டமைப்புகளின் செயல் திறனை அதிகரிக்க வேண்டும் என்று தெரிய வருகிறது.  சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றும் ஜாஸ் மற்றும் ராப் இசைக்கலைஞர்கள் தங்கள் இசையை மேம்படுத்த செய்யும் படைப்பாற்றல் முயற்சிகளில் அவர்களது மூளை கட்டற்று சுதந்திரமாக செயல்படும் பொழுது இந்த தோராயமான வரைமுறை குறிப்பிடும் வகையில் படைப்பாற்றல் வெளிப்படுவதைக் காட்டியது.

    எனினும், கவனக்கட்டுப்பாட்டிற்கான நரம்புகளின் வலைக்கட்டமைப்பின் செயல் திறனை சில சமயங்களில் மறுபடியும் தூண்டிவிட்டு படைப்பாற்றலால் உருவாகிய படைப்பை கவனத்துடன் மதிப்பீடு செய்யவும், அந்த எண்ணங்களை செயல் படுத்தவும் தேவை ஏற்படுகிறது.

    ரெக்ஸ் யுங் ஆராய்ச்சிக் குழுவினர் வரையறுக்கும் மூளையின் படைப்பாற்றல் திறனின் செயல்முறை பற்றிய இந்தத் தோராயமான கணிப்பு ஆராய்ச்சியின் முதல்படிதான். ஆனால் இது மூளையின் நரம்புகளின் வலைக்கட்டமைப்பு பற்றி மேலும் தெரிந்துகொள்ள வழி வகுக்கும் விதத்தில் நம்பிக்கை தருவதாக இருக்கிறது. படைப்பாற்றல் என்பது மூளையின் பல நரம்புகளின் வலைக்கட்டமைப்புகள் இணைந்து செயலாற்றுவதாலேயே நிகழ்கிறது என்று அறிவியல் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  முன்னர் எண்ணியது போல மூளையின் ஒரு சில பகுதிகளோ அல்லது மூளையின் ஒரு பக்கம் மட்டுமோ படைப்பாற்றலுக்குக் காரணம் என்ற எண்ணம் தவறு என்று காண்பிக்கப்பட்டுள்ளது.

    இத்தகவலுடன் பிற ஆராய்ச்சித் தகவல்களையும் இணைத்துப் பார்த்தால்; பகல்கனவு காணுதல், எதிர்காலக் கற்பனைகள், தன்னைச் சார்ந்த நிகழ்வுகளை நினைவு கூர்தல், ஆக்கப்பூர்வமான சுய பரிசோதனைகள், பொருள் புரிந்து கொள்ளல், சமூக அறிவு போன்றவற்றிக்குக் காரணமான மூளையின் மற்ற பகுதிகள் யாவும் படைப்பாற்றலுக்கு உதவி செய்வது தெரிய வருகிறது. மேலும் தொடரும் ஆராய்ச்சிகள் பல இன, கால வேறுபாடுகள் ஆகியவற்றின்  அடிப்படையிலும் எவ்வாறு படைப்பாற்றல் உருவாகிறது என்பதை விளக்குவதாய் அமைவது படைப்பாற்றல் பற்றி மேலும் அறிய வழி வகுக்கும்.

    மூளையின் படைப்பாற்றல் எவ்வளவு சிக்கல் நிறைந்த செயல்பாடு என்பதை ஆராய்ச்சியாளர்கள் பலரின் மூளைகளும் இணைந்து விளக்க முற்படும் இத்தருணம்  நரம்பியல் ஆராய்ச்சியில் ஒரு ஆக்கப்பூர்வமான காலக்கட்டம், இந்நேரத்தில் படைப்பாற்றல் பற்றிய நமது பழைய தகவல்களை விட்டொழித்து படைப்பாற்றல் என்பது மூளையின் பலபகுதிகளையும் உபயோகித்து உருவாகும் செயல்திறன் என்பதை உணரவேண்டும்.

    Reference:
    Kaufman Scott Barry , The Real Neuroscience of Creativity, August 19, 2013 ,  Scientific American.
    http://blogs.scientificamerican.com/beautiful-minds/2013/08/19/the-real-neuroscience-of-creativity/

    Note: The author of this article (Dr. Kaufman Scott Barry) granted permission to publish the translation of his work.

     

     

     

    Share
  • கென்யா பயணம் – 7

    நாகேஸ்வரி அண்ணாமலை

    கென்யாவில் நாற்பத்தி இரண்டு பழங்குடி இனங்கள் உள்ளன.  போர்ச்சுகீசியரின் வருகையின் விளைவாகவும் பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவாகவும் இவற்றில் பல கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவை.  கடற்கரையை ஒட்டி வாழும் இனங்கள் அரேபியர்களின் வணிகத்தின் விளைவாக இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவை.  இவற்றில் ஒன்று விக்டோரியா ஏரியை ஒட்டியுள்ள லியு (Luo)  என்னும் இனம்.  அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் தந்தை இந்த இனத்தைச் சேர்ந்தவர்.  இன்னொன்று கிக்கியு (Kikiyu).  இந்த இரண்டு இனங்களும் மக்கள் தொகையில் பெரியவை.  அதனால் அரசியல் செல்வாக்கும் அதிகம்.  இந்த இரண்டு இனங்களிலிருந்துதான் நாட்டுத் தலைவர்கள் தோன்றுகிறார்கள்.  மக்கள் தொகையில் சிறிய மற்ற இனங்கள் இந்த இரண்டு இனங்களில் ஒன்றோடு சேர்ந்துகொண்டு அரசியலில் பங்கு பெறுகின்றன.  தற்போதைய ஜனாதிபதி கென்யாட்டா கிக்கியு இனத்தைச் சேர்ந்தவர்.  ஆடு மாடுகளுக்குப் புல் தேடி இடம் விட்டு இடம் போகும் மசாய் இனத்தைப் பற்றி ஏற்கனவே விரிவாகப் பார்த்தோம்.

    ஒவ்வொரு இனத்திற்கும் தனிக் கலாச்சார மரபுகள் உண்டு.  ஒவ்வொரு இனமும் தங்கள் குடியிருப்பை அமைக்கும் முறையும் அதில் ஒரு குடும்பத்தின் குடிசைகளை அமைக்கும் முறையும் அந்தக் குடிசைகளைப் பயன்படுத்தும் விதமும் வேறுபடும்.  நைரோபியில் இந்தக் குடியிருப்புகளின் மாதிரிகளை ஒரு இடத்தில் அமைத்திருக்கிறார்கள்.  இங்கே கணவன் குடிசை, முதல் மனைவியின் குடிசை, இரண்டாவது மனைவியின் குடிசை, ஆண் பிள்ளைகள் குடிசை என்றெல்லாம் வேறுபாடு இருந்தது.  இதற்குப் பக்கத்தில் பல இனங்களின் பாரம்பரிய நடனங்களை ஆடிக் காட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு போமாஸ் (Bomas) என்று பெயர்.  போமா என்றால் ஸ்வாஹிலியில் குடியிருப்பு என்று அர்த்தம்.  இந்த நடன நிகழ்ச்சியில் வித்தியாசமான உடைகளுடன் வித்தியாசமான நடனங்களை பல பழங்குடி இன மக்கள் ஆடுவதைப் பார்க்க முடிந்தது.  கடைசியில் சர்க்கஸில் காட்டுவது போல் தீ வளையத்திற்குள் பாய்வது போன்ற தீரச் செயல்களையும் செய்து காட்டினார்கள்.  இந்த நிகழ்ச்சிகளுக்காக ஒரு பிரமாண்டமான அரங்கம் குடிசையைப் போல் வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருந்தது.  நிகழ்ச்சியைப் பார்க்க உல்லாசப் பயணிகள்  மட்டுமல்லாமல் பள்ளி மாணவர்களும் வந்திருந்தனர்.  நவீன கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் கலாச்சாரப் பாரம்பரியத்தைத் தெரிந்துகொள்ள இது வகை செய்கிறது.

    இப்போது கென்யர்களின் பொதுவான சில பண்புகளைப் பார்ப்போம்.  நைரோபியில் நாங்கள் தங்கியிருந்தது ஒரு நடுத்தர ஓட்டல்.  ஒரு கென்யரால் துவங்கப்பட்டது. அங்கிருந்த எல்லா ஊழியர்களும் – வரவேற்பாளரிலிருந்து அறையைச் சுத்தம் செய்பவர் வரை – எங்களிடம் மிகவும் பிரியமாக நடந்துகொண்டனர்.  காலைச் சாப்பாடு அறை வாடகையோடு சேர்ந்தது.  காலை ஏழரை மணியிலிருந்து பத்து மணி வரை காலை உணவு நேரம்.  நான்கு வகைப் பழங்கள், மைதா ப்ரெட், கோதுமை ப்ரெட் என்று இரண்டு வகை ரொட்டிகள், பல வகையான கிழங்கு வறுவல்கள், பல வகை சீரியல்கள், அவற்றோடு சாப்பிட பால், ஆரஞ்சுச்சாறு, மாம்பழச் சாறு, அன்னாசிப்பழச்சாறு என்று மூன்று வகை பழச்சாறுகள், ஏதாவதொரு அசைவ அயிட்டம் என்று பல அயிட்டங்கள் இருந்தன.  இதற்கு மேல் விரும்புபவர்களுக்கு முட்டையை நாம் கேட்கும் விதத்தில் சமைத்துக் கொடுக்கிறார்கள்.   இப்படிப் பல வகை உணவுகளோடு அங்கு வேலைபார்ப்பவர்களும் அன்போடு நமக்குப் பரிமாறுகிறார்கள்.  நாம் முட்டை சாப்பிடவில்லையென்றாலும் தினமும் முட்டை வேண்டுமா என்று கேட்பார்கள்.  பல நாடுகளிலும் உள்ள ஓட்டல்களில் பணிபுரிபவர்கள் இப்படிப் பிரியமாக நடந்துகொண்டாலும் இவர்களுடைய நடத்தையில் உள்ளன்பு இருப்பதாகத் தெரிந்தது.

    மதிய உணவையும் இரவு உணவையும் இரவு ஒன்பது மணி வரை நாம் கேட்கும் நேரத்தில் அங்கேயே சமைத்துக் கொடுக்கிறார்கள்.  அதற்குரிய கட்டணம் அப்படி ஒன்றும் அதிகம் இல்லை.  நாம் விரும்பினால் நம் அறைக்கே உண்வைக் கொண்டுவந்துவிடுகிறார்கள்.  இவர்களுடைய இந்த சேவைக்காக எதுவும் ‘டிப்ஸ்’ கொடுக்க வேண்டியதில்லை என்று வரவேற்பாளர் கூறினார்.  கொடுத்தால் பிரியமாக வாங்கிக்கொள்கிறார்கள்.

    நாங்கள் எங்கள் துணிகளைத் துவைத்துக்கொள்ள விரும்பினோம்.  அதை அறிந்து ஒரு பெரிய பிளாஸ்டிக் பக்கெட் கொடுத்தார்கள்.  துணிகளைக் காயப் போடுவதற்கு ஒரு இடம் இருக்கிறது.  நாங்கள் காலையில் வெளியே போய்ச் சாயங்காலம்தான் திரும்ப ஓட்டலுக்கு வந்ததால் இடையில் மழை பெய்தால் என்ன செய்வது என்று யோசித்தபோது ‘நாங்கள் உங்கள் துணிகளை உள்ளே எடுத்துவைக்கிறோம்’ என்றார்கள்.

    கென்யாவில் நிறைய வடஇந்தியர்கள் இருப்பதால் அவர்களின் இந்திய உணவு வகைகளும் கென்யர்களின் உணவில் கலந்துவிட்டிருக்கின்றன.  அவற்றில் சப்பாத்தி, அதற்குரிய சப்ஜி, புலவு, சமோஸா ஆகியவை முக்கியமானவை.  ஒட்டலிலும் இவை எல்லாம் சமைத்துக் கொடுத்தார்கள்.  எங்கள் மைசூர் வீட்டின் அறையில் தங்கியிருந்த பல மாணவர்கள் எங்களை ஓட்டலில் வந்து சந்தித்தனர்.  அவர்களில் ஒருவரின் கண்வர், ‘சிறு வயதிலிருந்தே இந்த உணவு வகைகளைச் சாப்பிட்டு வந்ததால் இவை கென்ய உணவுகள் என்று நான் நினைத்திருந்தேன்.  விபரம் தெரிந்த பிறகுதான் இவை இந்திய உணவுகள் என்று தெரிந்துகொண்டேன்’ என்றார்.  இதை ஏன் சொல்கிறேன் என்றால் இந்திய உணவுகள் கென்ய உணவுகளோடு இரண்டறக் கலந்துவிட்டிருக்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டத்தான்.  இந்தியர்கள் நடத்தும் ஹாண்டி (Haandi) என்னும் இந்திய உணவகம் பிரசித்தமானது.  அங்கு விலையும் கொஞசம் அதிகம்.  இங்கே நிறைய வடஇந்திய சப்ஜிகள், பல வகையான புலவு வகைகள் கிடைக்கும்.  இங்கு வேலைபார்ப்பவர்கள் அனைவரும் கென்யர்கள்.  ஒரு இந்தியர் கூட இல்லை.  அதே சமயத்தில் அங்கு உணவருந்த வந்திருந்தவர்களில் கிட்டத்தட்ட எல்லோரும் இந்தியர்கள்.

    அங்கு வாழும் இந்தியர்கள் எல்லோரும் வசதியாக இருப்பவர்கள் போல் தெரிகிறது.  கச்சாப் பொருள்களை வாங்கிவந்து அவற்றைப் பொருள்களாகத் தயாரித்து விற்கும் தொழிற்சாலைகளில் 70 சதவிகிதம் இந்தியர்களின் கையில் இருப்பதாக மாணவ நண்பன் ஒருவன் கூறினான்.  நக்குமார்ட் (Nakumart)  என்னும் பெரிய டிபார்ட்மெண்ட் கடை இந்தியர் ஒருவருக்குச் சொந்தம்.  இந்தியர்களின் பிள்ளைகள் கென்யப் பள்ளிகளில் படித்துவிட்டு மேல் படிப்பிற்காக இந்தியாவிற்கோ பிரிட்டனுக்கோ செல்கிறார்கள்.  இதனால் கல்லூரிகளில் இந்திய வம்சாவளி இளைஞர்களும் கென்ய இளைஞர்களும் நட்புக்கொள்வது அரிது.

    நான் முன்பே எழுதியது போல் இந்தியர்கள் கென்யர்களோடு கலப்பதில்லை போல் தெரிகிறது.  அண்மையில் இந்து பத்திரிக்கையில் ஒரு செய்தி வந்தது.  கென்யாவில் சுமார் 1000 கன்னடியர்கள் வசிக்கிறார்களாம்.  ஹிருதய வாஹினி என்று மங்களூரிலிருந்து வரும் பத்திரிக்கையும் கன்னட கலாச்சாரக் அமைப்பும் சேர்ந்து 100 பேர் கொண்ட பரதநாட்டிய, யக்ஷகானா கலைஞர்கள் அடங்கிய ஒரு குழுவைக் கென்யாவிற்கு நவம்பர் மாதம் அனுப்பப் போகிறது.  இவர்கள் அங்கு கன்னட கலாச்சாரத்தைப் பரப்பப் போகிறார்களாம்!  ஆயிரம் பேருக்குக் கலாச்சாரத்தைப் பற்றிக் கூற நூறு பேர் போகிறார்கள்.  எத்தனை கென்யர்கள் இவர்களுடைய நிகழ்ச்சிகளைக் காண வருவார்கள் என்று தெரியவில்லை.

    இந்தியர்கள் யாரும் கென்யர்களோடு பழகாவிட்டாலும் கென்யர்களுக்கு இவர்கள் மேல் வெறுப்பு இருப்பதாகத் தெரியவில்லை.  இந்தியர்கள் நூறு ஆண்டுகளுக்கு முன்பே கென்யாவிற்கு வந்து அதன் பொருளாதாரத்தில் பங்கு பெற்றிருப்பதால் தாங்கள் பின்தங்கிவிட்டோம் என்று நினைக்கிறார்களே- யொழிய அவர்கள் மேல் வன்மம் பாராட்டுவதாகத் தெரியவில்லை.  இந்த இந்தியர்கள்தான் அம்மண்ணுக்குரிய கென்யர்களோடு சுமுகமாகப் பழகாமல் தனித்து வாழ்கிறார்கள்.  இந்தியர்கள் குடியிருப்பு தனியாக இருக்கிறது.  கலப்புத் திருமணங்கள் நடப்பதாகத் தெரியவில்லை.  இந்தச் சந்தர்ப்பத்தில் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் பற்றிக் குறிப்பிட வேண்டும்.  இவர்கள் அமெரிக்கக் கருப்பர்கள் தங்களை விட தாழ்ந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று நினைக்கிறார்கள்.  வெள்ளை இனத்தவர்களைத் தங்களை விட உயர்ந்தவர்கள் என்று நினைக்கிறார்கள்.  இதை எங்கேயிருந்து கற்றார்கள் என்று தெரியவில்லை.  அமெரிக்க இந்தியர்களுக்கு இருக்கும் கருப்பு இன நண்பர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.  இவர்களைப் போன்றவர்கள்தான் கென்ய இந்தியர்களும்.

    (தொடரும்)

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்- 5000 ஆண்டு பழம் நகரம் ஊருக், பெர்காமோன் அருங்காட்சியகம், பெர்லின், ஜெர்மனி (4)

    சுபாஷிணி ட்ரெம்மல்

    இன்றைய தெற்கு ஈராக் நகரமாக அறியப்படும் வார்க்கா (Warka) முந்தைய மெஸொப்போட்டேனியாவின் ஊருக் என்ற பெயர் கொண்டு அழைக்கப்பட்டதொரு நகரம். இந்த நகரம் ஈராக் தலைநகரமான பக்டாட்டிலிருந்து 300கிமீ தூரம் தெற்கில், சமாவா நகருக்கு 15கிமீ கிழக்கில், இயூக்ரப்டீஸ், திக்ரீஸ் நதிக்கரை அமைந்திருந்த பகுதியில் உள்ள பகுதி. இன்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் உலகளாவிய மனித நாகரிகத்தின் சுவடுகளை ஆராயும் வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு நின்று விடாமல் தொடர்ந்து பல ஆய்வுகளுக்கு அடிப்படையாகவும் அமைந்தது.

    முதன் முதலில் 1849ம் ஆண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆங்கிலேயர் வில்லியம் கென்னத் லோஃப்டுஸ் என்னும் தொல்லியல் ஆய்வாளர் இப்பகுதியில் ஓர் நகரம் இருப்பதைக் கண்டுபிடித்தார். இதுவே பழமையான சுமேரியன் நகரான ஊருக். ஆங்கிலேய அரசின் ஆணையின் படி வெவ்வேறு நாடுகளில் சில குறிப்பிடத்தக்க தொல்லியல் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்ட திரு.கென்னத் இறுதியாக ஆங்கில காலனித்துவ இந்தியாவில், தனது பணியை ஆற்றிக் கொண்டிருந்த சமயத்தில் நோய்வாய்ப்பட்டு 1856ல் இந்தியாவிலேயே இறந்தார். அப்போது அவருக்கு வயது 38.

    அதற்குச் சில ஆண்டுகளுக்குப் பின்னர் ஜெர்மானிய கீழ்த்திசைச் சங்கம் அப்போதைய ஒட்டோமான் பேரரசை அணுகி ஊருக் (ஈராக்) நகரப் பகுதியில் தொடர்ந்து தாங்கள் அகழ்வாராய்ச்சிகள் செய்ய விண்ணப்பித்து சம்மதம் பெற்று 1912ம் ஆண்டில் அகழ்வாராய்ச்சியைத் தொடங்கினர். ஊருக் எனும் ஒர் நகரமும் அங்கு நாகரிகம் அடைந்த ஒரு சமூகமும் இன்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் இருந்தமையையும் குறிப்பிடும் சான்றுகளை இந்த அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடித்தது இவ்வாய்வை மேற்கொண்ட குழு. இவ்வாய்வு தொல்பொருள் ஆய்விற்கு மிகச் சிறப்பானதொரு கண்டுபிடிப்பாக அமைந்ததோடு பல்வேறு தொடர்ச்சியான ஆய்வுகளுக்கு அடிப்படையாகவும் அமைந்தது.

    ஊருக் நகரில் ஆய்வுப் பணிகளின் போது நன்றி: http://www.dainst.org
    ஊருக் நகரில் ஆய்வுப் பணிகளின் போது
    நன்றி: http://www.dainst.org

    இங்கு தொல்லியல் பணிகள் தொடங்கிய காலம் தொட்டு இப்பகுதியில் இடையிடையே நடைபெற்று வந்த போர், அரசியல் மாற்றங்களால் இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகள் தொடர்ந்து இடர்பாடுகளுக்குள்ளாகி வருவது தொல்லியல் ஆய்விற்கு பெருமளவில் தடங்கலாகவே அமைந்திருப்பது உண்மை. இத்தகைய தடைகளுக்கிடையேயும் இது வரை நாற்பதற்கும் குறையாத வெவ்வேறு ஆய்வுகள் வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்த்தப்பட்டு இங்கு ஊருக் நகரமும் அந்நகரத்து மக்களின் நாகரிகம் பண்பாடு பற்றியும் ஓரளவு தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது ஆய்வு உலகத்திற்கு கிடைத்திருக்கும் பெறும் நன்மையே.

    இத்தனை ஆய்வுகளும் இந்த நகரைப் பற்றிய முழுமையான தகவல்களை வழங்கி விட்டதா என்றால் இல்லை என்பது தான் விடையாகிறது. ஜெர்மானிய கீழ்த்திசைச் சங்கத்தினரின் அறிக்கையின்படி ஐந்து விழுக்காட்டிற்கும் குறைவான ஊரூக் நகர் மட்டுமே இதுவரை தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்னும் தகவலை அறிகிறோம். இக்குறுகிய பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட சான்றுகளே இந்த நகரத்தின் அக்கால நிலையை இன்று நமக்கு விளக்க உதவுவதாக உள்ளன.

    ஈனன்னா கோயில் கண்டெடுக்கப்பட்ட பகுதி. தொல்லியல் ஆய்வுப்பகுதியாக ஈராக்கில் பாதுப்பில் இருக்கும் ஒரு பகுதி. நன்றி: http://www.dainst.org
    ஈனன்னா கோயில் கண்டெடுக்கப்பட்ட பகுதி. தொல்லியல் ஆய்வுப்பகுதியாக ஈராக்கில் பாதுப்பில் இருக்கும் ஒரு பகுதி.
    நன்றி: http://www.dainst.org

    பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வேட்டையாடியும் மீன் பிடித்தும் ஊர் ஊராக நாடோடிகளாகத் திரிந்த சமூகத்தினரில் ஒரு சிறு பகுதியினர் மெஸபொட்டோமியாவின் தெற்குப் பகுதியில் குடியேறினர். கிபி 3200 ஆண்டு வாக்கில் அங்கே நிரந்தரமாகத் தங்கள் குடியிருப்புகளை அமைத்துக் கொண்டு வாழ்ந்தவர்கள் அமைத்த நகரமே ஊருக் என்ற பெயருடன் இன்று அறியப்படுகிறது. இங்கு அறியப்படும் நகரம் நல்ல நாகரிகம் அடைந்த ஒரு சமூகத்தின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கிறது என்பது ஆச்சரியமளிப்பதாகவும் அமைகிறது. சிறந்த கட்டுமான வடிவத்தைக் காட்டும் கட்டிடங்களின் அமைப்பு, சிற்பங்கள், சிலைகள், வழிபாட்டு முறைகள், ஈமக்கிரியை முறைகள், எழுத்து வடிவங்கள் என பண்பாட்டு வளர்ச்சியடைந்த ஒரு சமூகத்தைக் காட்டும் சான்றுகளாக இவை நமக்கு இன்று கிடைக்கின்றன. சுமேரிய நாகரிகத்தின் குறிப்பிடத்தக்க ஒரு நகரமாக ஊருக் கருதப்பட்டாலும் பெரும்பாலும் அக்காடியப் பேரரசுடன் இணைத்து கருதப்படும் ஒரு நகரமாகவே இது பொதுவாகக் குறிப்பிடப்படுகிறது.

    பெர்லின் பெர்கமோன் அருங்காட்சியகத்தில் இவ்வருடம் ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தொடர்ந்த கண்காட்சியாக 5000 ஆண்டு பழமை வாய்ந்த நகரமான ஊரூக் பற்றிய கண்காட்சி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் மாதம் பெர்லின் நகருக்கு நான் சென்றிருந்த வேளையில் அங்கு பெர்காமோன் அருங்காட்சியகத்தில் இந்தக் கண்காட்சியைக் காணும் வாய்ப்பு அமைந்தது. ஜெர்மனியின் பழமை வாய்ந்ததும் உலகப்புகழ் வாய்ந்ததுமான ஹைடல்பெர்க் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் ஊருக் நகரக் கண்டுபிடிப்புகளும் இந்தக் கண்காட்சியில் இணைத்து வைக்கப்பட்டிருந்தன.

    ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு - எழுத்துக்குறியீடும் சிற்பமும் இணைந்து அமைக்கப்பட்டிருக்கும் ஒரு படிமம்.
    ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு – எழுத்துக்குறியீடும் சிற்பமும் இணைந்து அமைக்கப்பட்டிருக்கும் ஒரு படிமம்.

    1912ம் ஆண்டு முதல் 1989 வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இந்த நகரின் வழிபாட்டு மையங்களைக் கண்டுபிடிப்பதைக் குறிக்கோளாக வைத்து ஆய்வுகளை மேற்கொண்டன. இக்காலகட்டத்தில் 39 தனித்தனி ஆய்வுகளில் பல சான்றுகள் இப்பகுதியில் இருந்து மீட்டெடுக்கப்பட்டன. அவற்றில் போர், அருள் இவையிரண்டிற்கும் ஆதாரமாகக் கருதப்படும் ஈனன்னா தெய்வம், சொர்கத்திற்கான இறைவடிவமான அனு, கிமு 14ம் நூற்றாண்டுக் கோயிலான காரைண்டாஷ் கோயில், கிமு 3-2ம் நூற்றாண்டு கோயிலான காரெய்ஸ் கோயில், கிமு 20-18ம் நூற்றாண்டு ஷின்காஷிட் அரண்மணை போன்றவையும், எழுத்து வடிவங்களும், ஈமக்கிரியைகள் மேற்கொள்ளப்பட்டதற்கான சான்றுகளும், அலங்காரப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

    உலகப் பிரசித்திப் பெற்ற கண்காட்சிகளின் வரிசையில் இடம் பெறும் ஊருக் கண்காட்சியை நேரில் பார்த்து அறிந்து கொண்டமை தனிப்பட்ட வகையில் எனக்கு பிரமிப்பை அளிக்கும் உணர்வினை அக்கணத்தில் ஏற்படுத்தியது என்பதை நான் மறுக்க முடியாது. இன்றைக்கு 5000 ஆண்டுகால பழமையான ஒரு நாகரிகம் நமக்கு விட்டுச் சென்றுள்ள விஷயங்கள் ஏராளம். இந்த கண்டுபிடிப்புகளை தம் வாழ்நாளின் பெரும் பகுதியை செலவிட்டு மிகுந்த ஈடுபாட்டுடன் செய்து முடித்த ஆய்வாளர்களையும் தொடர்ந்து இவ்வாய்வுகளில் ஈடுபட்டு புதிய ஆய்வு முடிவுகளை உலகுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஆய்வாளர்களையும் நினைத்துப் பார்க்கும் போது மனம் பெருமிதம் அடைகிறது. இத்தகைய கண்காட்சிகளுக்கு லட்சக்கணக்கான யூரோ செலவிட்டு அவற்றைப் பாதுகாத்தும் ஆய்வாளர்களை ஊக்குவித்தும் கண்காட்சிகளை ஏற்பாடு செய்தும் வரும் பெர்கமோன் அருங்காட்சியகத்தைப் பாராட்டுவது மிகத் தகும் அல்லவோ!

    தொடரும்

    நன்றி:

    —

    Suba Tremmel
    http://subastravel.blogspot.com– சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
    http://subahome2.blogspot.com – ஜெர்மனி நினைவலைகள்..!
    http://subaillam.blogspot.com – மலேசிய நினைவுகள்..!
    http://ksuba.blogspot.com – Suba’s Musings
    http://tamilheritagefoundation.blogspot.com – த.ம.அ செய்திகள்
    http://voiceofthf.blogspot.com – மண்ணின் குரல்
    http://video-thf.blogspot.com – விழியக் காட்சிகள்
    http://image-thf.blogspot.com – மரபுப் படங்கள்
    http://kanaiyazhi-ezine.blogspot.com – கணையாழி
    Share
  • பக்தர்களின் ஏ.டி.எம்!

     

    கவிநயா

    அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
    பூரியார் கண்ணும் உள.

    என்பது திருக்குறள்.

    அருட்செல்வமே செல்வத்துள் எல்லாம் சிறந்ததாம். பொருட்செல்வமானது, கீழோரிடத்து உட்பட எவரிடத்தும் இருக்குமாம் என்பதே பொருள்.

    அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த அருட் செல்வத்தை அள்ளி வழங்குபவள், அன்னை பராசக்தி. அவளே பக்தர்களின் அள்ளக் குறையாத நிதியாக இருப்பவளும், பக்தர்களுக்கு அள்ளக் குறையாத நிதியைத் தருபவளும், என்கிறது லலிதா சகஸ்ரநாமம். “பக்த நிதிர்” என்பது அன்னையின் ஆயிரம் நாமங்களில் ஒன்று.

    பக்தர்கள் வேண்டும் அனைத்தையும், பக்தர்களுக்கு வேண்டிய அனைத்தையும், பரிவுடன் தருபவள் அன்னை. சாஸ்திரம் தெரியா விட்டாலும், வழி முறைகள் அறியா விட்டாலும், உள்ளார்ந்த அன்பால் மட்டுமே பூசித்தால் கூட அகம் மகிழ்வாளாம் அவள்.

    குற்றம் குறைகள் இருந்தாலும், கொடூரமான தவறே செய்து விட்டாலும், தாயால் மட்டுமே அதனைச் சகிக்க முடியும்; மனதார மன்னித்து மறக்கவும் முடியும். அகிலத்துக்கெல்லாம் அன்னையான அவளுக்கும் அதே குணம் இருப்பதில் வியப்பேதும் இல்லை.

    அவள் இன்னும் என்னென்னவாகவெல்லாம் இருக்கிறாளாம்? அபிராமி பட்டர் அடுக்கிக் கொண்டே போவதைப் பாருங்கள்!

    துணையும் தொழுந் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின்
    பணையும் பதி கொண்ட வேரும்…

    அவளே என் துணை; பெற்ற தாயும் அவளே; வேதங்களின் கிளைகளாகவும், வேராகவும் அவளே இருக்கிறாள், என்கிறார் பட்டர்.

    மேலும்,

    ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
    வான் அந்தமான வடிவு உடையாள், மறை நான்கினுக்கும்
    தான் அந்தமான, சரணாரவிந்தம்-தவள நிறக்
    கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடிக் கண்ணியதே.

    அவளே ஆனந்தமாகவும், அறிவாகவும், வாழ்வின் அமுதமாகவும், ஆகாயத்தில் தொடங்கி ஐம்பூதங்களாகவும், வேதங்களுக்கெல்லாம் தானே தொடக்கமாகவும், முடிவாகவும் இருக்கிறாள்.

    அவளைப் போற்றி வணங்கும் அடியவர்கள் எப்படிப்பட்டவர்களாம்?

    ஏத்தும் அடியவர், ஈரேழ் உலகினையும் படைத்தும்
    காத்தும் அழித்தும் திரிபவராம்…

    பதினான்கு உலகினையும் முறையாகப் படைத்தும், காத்தும், அழித்தும் தொழில் புரியும் தேவாதி தேவர்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகளும் போற்றி வணங்கக்கூடிய அன்னையாம் அவள்.

    மும்மூர்த்திகளும் அவளுடைய பாதங்களில் தலை வைத்து, தலையின் மேல் கைகளைக் கூப்பி, வணங்குகிறார்கள். அதனால் அவளுக்குச் செய்யும் பூசனைகள் யாவும் அவர்களுக்கும் செய்ததாகவே ஆகிறது, என்கிறார் ஆதிசங்கரர் (சௌ.ல. 25).

    மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
    குனிதரும் சேவடிக் கோமளமே…

    என்கிறார் பட்டரும்.

    வேறு யாரெல்லாம் அவளை வணங்குகிறார்களாம்?

    ஆதித்தன், அம்புலி, அங்கி குபேரன், அமரர்தம் கோன்,
    போதிற் பிரமன் புராரி, முராரி பொதியமுனி,
    காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்
    சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர், தையலையே.

    புண்ணியம் பல செய்து, அவற்றின் பயனையும் அடைந்த சூரியன், சந்திரன், அக்கினி, குபேரன், தேவர்களின் தலைவன் இந்திரன், தாமரை மலரில் உதித்த பிரம்மன், முப்புரங்களை எரித்த சிவபெருமான், முரனைத் தண்டித்த திருமால், பொதியமலை முனியாகிய அகத்தியர், கொன்று போர் புரியும் கந்தன், கணபதி, மன்மதன் முதலாகிய எண்ணற்ற தேவர்கள் அனைவரும் அவளைப் போற்றித் துதிப்பார்களாம்.

    இன்னும் என்னவெல்லாமாய் இருக்கிறாள் அவள்?

    சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா
    சக்தியும், சக்தி தழைக்கும் சிவமும், தவம் முயல்வார்
    முத்தியும், முத்திக்கு வித்தும், வித்து ஆகி முளைத்து எழுந்த
    புத்தியும், புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே.

    சித்தியாகவும், அச்சித்தியைத் தரும் தெய்வமான ஆதி சக்தியாகவும் திகழ்கின்றாள். பராசக்தியாகிய அவள் கிளைத்தெழக் காரணமான பரமசிவமும், அச்சிவத்தைக் குறித்துத் தவம் செய்யும் முனிவர்களுக்கு முக்தியும், அம் முக்தியால் ஏற்படுகின்ற விதையும், அவ்விதையில் ஏற்பட்ட ஞானமும், ஞானத்தின் உட்பொருளும், என நின்று, சகல பந்தங்களினின்றும் காக்கக்கூடிய தெய்வமாக இருக்கின்றாள்.

    பொருளே, பொருள் முடிக்கும் போகமே, அரும் போகம் செய்யும்
    மருளே, மருளில் வரும் தெருளே, என் மனத்து வஞ்சத்து
    இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உன்தன்
    அருள் ஏது.- அறிகின்றிலேன், அம்புயாதனத்து அம்பிகையே.

    அவளே பொருளாக இருக்கின்றாள். பிறகு அப்பொருளால் நுகரப்படும் போகமும் அவளே. அப்போகத்தால் ஏற்படுகின்ற மாயையாகவும் இருக்கின்றாள், அம்மாயையில் தோன்றி விளங்கும் தெளிவாகவும் விளங்குகின்றாள்.

    இப்படியாக, ஆதியந்தமற்று, மறைகளின் முதலும், முடிவும், நடுவுமாக, ஒன்றாய் அரும்பிப், பலவாய் விரிந்து இவ்வுலகு எங்கும் பரந்தும், பொருளாகவும், மருளாகவும், தெருளாகவும், அருளாகவும், மும்மூர்த்திகளின் சக்தியாகவும், மும்மூர்த்திகளாலும் தேவர்களாலும் முனிவர்களாலும் வணங்கப்படுபவளாகவும், சித்தியாகவும், புத்தியாகவும், முக்தியாகவும், அறிவாகவும், அது தரும் ஆனந்தமாகவும், இப்படி எல்லாமாகவும் இருக்கிறாள் அன்னை.

    போற்றித் துதித்து உருகி வணங்கிச் சரண்புக வேறென்ன வேண்டும் ஒரு பக்தனுக்கு? பக்தன் என்னவாக நினைத்து வணங்க விருப்பம் கொண்டாலும், அந்த வடிவாகவும், பக்தன் எதை விரும்பிக் கேட்டாலும், அதைத் தரக் கூடியவளாகவும் இருக்கிறாள். எனவே அவளே பக்தர்களின் பொக்கிஷமாக இருக்கிறாள்.

    அவளை வணங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதற்கே, புண்ணியம் செய்திருக்க வேண்டும், என்கிறார் ஆதிசங்கரர் (சௌ.ல.1). அதனால் புண்ணியம் செய்தவருக்கே அவள் பெரும் புதையலாகக் கிடைக்கிறாள் என்றும் கொள்ளலாம்.

    என் மகன் சிறுவயதாக இருக்கும் போது, “பணம் தீர்ந்து போச்சே, என்ன செய்யலாம்?” என்று கேட்டால், “ஏடிஎம் –மில் போய் எடுத்துக்க வேண்டியதுதானே” என்பான்! அதைப் போல, அடியவர்களின் ‘ஏடிஎம்’ அவள்தான்! ‘பக்தி’ என்னும் வங்கியில் கணக்கு இருந்தால் போதும். அவளே நிதியாக வந்து உதவுவாள்.

    சில சமயங்களில் பணம் என்ன மரத்திலா காய்க்கிறது என்றும் சொல்வதுண்டு. பணம் மரத்தில் காய்க்கிறதோ இல்லையோ, ஆனால் அருள் காய்க்கும் கல்ப தரு அவள்தான்.

    இப்படிப்பட்ட பக்த நிதியான அன்னையைத் துதிப்பவர்கள் அளப்பரிய அருட்செல்வத்தைப் பெறுவார்கள் என்பதில் ஐயமில்லை.

    எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!

    படத்துக்கு நன்றி: http://ananthsvedhagroup.org/

    Share
  • ’கப்பலோட்டிய தமிழனின்’ 142வது பிறந்த தினம்!

    ஆவுடை நாயகம்

     voc

    சமுக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கும் உரிமை உங்களுக்கு சுதந்திரமாக வழங்கப்பட்டு இருக்கிறது என்றால், அதற்குப் பின்னால் எத்தனை தியாகம், நேர்மை ,ஆற்றல் காலம் சென்று இருக்கிறது தெரியுமா? உங்கள் குழந்தைகள் எல்லோரையும் பணக்கார பொறியாளனாக, மருத்துவனாக ,அரசியல்வாதியாக, தொழில் அதிபராக உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ள உங்களுக்கு சுதந்திரத் தியாகிகளை காலம் சென்றாலும் வாழும் காந்தியாகவோ, “யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடிய மகாகவி பாரதி, வீரபாண்டிய கட்டபொம்பன், உமறுப் புலவர் போல வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்து உள்ளதா? அதுகூட வேண்டாம் அவர்களின் தியாகத்தை, வீரத்தை என்றாவது உங்கள் குழந்தைகளுக்கு சொல்லி இருக்கிறீர்களா? இன்று யார் பிறந்தநாள் தெரியுமா?  சினிமா நடிகர்  பிறந்த நாளாகவோ, இல்லை கிரிக்கெட் வீரர் பிறந்த நாளாகவோ இருந்திருந்தால் தெரிந்து இருக்கும் நீங்கள் நலமாக வாழ, பணக்காரனாக, வழக்கறிஞராக  வாழ வேண்டியவர் தமிழ்,சுதேசியம்,  என்ற அரசியல் கோட்பாட்டை ஏந்தி வந்தவனை தேசத்தாய் தாங்கிக் கொண்ட தினம் .ஆம் , “கப்பலோடு வருவேன் இல்லை கடலில் விழுந்து சாவேன் ” என்ற கப்பலோட்டிய தமிழன் , செக்கு இழுத்த செம்மல், வழக்கறிஞர் வ உ சிதம்பரத்தின் 142வது  பிறந்த தினம்.

    ரூபாய் இருவது லட்சம் ரொக்கமாக கொடுக்க வேண்டும் என்ற ஆங்கில அரசின் சூழ்ச்சியை பாலகங்காதர திலகர் துணை கொண்டு வென்று தமிழனின் நேர்மையும், வீரத்தையும்  பறைசாற்றி பட்டொளி வீசி வங்கக் கடலில் சிங்கம் ஒரு கப்பலில் வந்தது கடல் மூலமாக வணிகம் செய்ய வந்தவர்களை திருப்பிக் கடல் வணிகத்தால் கலங்க வைத்த ஒரே தலைவன் , உன் பாட்டன் கப்பலோட்டிய  தமிழன் வ. உ.சிதம்பரம். சுதேசி கப்பலில் பயணிகள் நிரம்பினாலும் காத்திருந்து முதலில் ஆங்கிலேயர் கப்பல் சென்ற பிறகுதான் சுதேசி கப்பல் செல்ல வேண்டும் என்ற உத்தரவை நீதியின் துணை கொண்டு வீழ்த்தி சுதேசி கப்பல் சென்றது அப்படிப்பட்ட மாபெரும் வழக்கறிஞர் வ. உ.சிதம்பரம். கப்பலில் செல்லப் பயணிகள் கட்டணம் இலவசம், சரக்குக் கட்டணம் இலவசம் என்று கூறிய ஆங்கில அரசின் வியாபார தந்திரத்தையும், அரசியல் சூழ்ச்சியையும் கவனித்த சிதம்பரம் இலவசம்! இலவசம்  இது நம்மை விலைக்கு வாங்கும் முயற்சி.  எம்  மக்களே இலவசத்தை நம்பாதீர்கள் என்று இன்றைய இலவச அரசியல்  நிலையை அன்றே எடுத்து உரைத்தவன் கப்பலோட்டிய  தமிழன் வ. உ.சிதம்பரம்.

    இந்தியாவில் முதல் தொழிற்சங்கமே 1920ம் –ஆண்டுதான் தொடங்கப்பட்டது. சோவியத்புரட்சி 1917-ஆம் ஆண்டு நடைபெற்றது.  

    வ.உ.சி. 1908-ஆம் ஆண்டே தொழிற்சங்கங்கள் இல்லாமல் தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் பங்கு பெறச் செய்து அவர்களை வழி நடத்தி வேலை நிறுத்தத்தைப் பெரும் வெற்றி பெறச் செய்தார். நூற்பாலை வேலை நிறுத்தத்தின் வெற்றி அவர்களை அச்சுறுத்தியது. இந்தியாவில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் வ.உ.சி.யைக் கைது செய்வது அவசியம் என்று உணர்ந்தார்கள்.வ.உ.சி. கைது செய்யப்பட்டதை அறிந்தவுடன் மக்கள் கொந்தளித்தனர். இந்தியாவில் முதல் அரசியல் வேலை நிறுத்தம். காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியானார்கள். ஆங்கிலேயர்கள் பயந்து தூத்துக்குடி கடலில் உள்ள குட்டி, குட்டித் தீவுகளில் இரவுப் பொழுதைக் கழித்தார்கள்.

     “சிதம்பரம்பிள்ளையின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்”

    1908ஆம் ஆண்டு சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்த தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே எழுதியுள்ள வரிகளே இவை. வ.உ.சி.யின் விடுதலை வேட்கைக்கும் வேகத்துக்கும் இதனை விடச் சிறந்த அங்கீகாரத்தை வேறு எவரும் தந்துவிட முடியாது. மரணத்தின் மடியில் வ உ சிதம்பரம் இருக்கும் போது கடைசியாய் தன் மனைவியைத் தமிழ் பாடச் சொல்லியிருக்கிறார். ” என்று தணியும் இந்த சுதந்திர தாகம், என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் “. செவிகள் பாரதியின் வரிகளைத் தாங்கியபடி,  காலம் அவர் உடலை மட்டும் எடுத்துச் சென்றது. வரலாறு அவர் பெயரை எடுத்துக் கொண்டது!

    Share
  • சைவ சமயம் அறிவியல் மையம்! (பகுதி 1)

    பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ, பிரான்சு

    சமயமும் அறிவியலும் :

    சமயம் வேறு ; அறிவியல் வேறு! பொதுவாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும் கருத்து இது. ஆனால்,சமயத்தைச் சார்ந்திருக்கவில்லை அறிவியல் ; அது போலவே சமயமும் அறிவியலைச் சார்ந்திருக்க வேண்டியது இல்லை. என்றாலும், அறிவியலுக்கும் சமயத்துக்கும் உள்ள தொடர்புகளைப் பற்றி அறிஞர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வந்திருக்கின்றனர்.

    இரண்டும் தம்முள் முரண்பட்டவை என்ற கருத்து 19 -ஆம் நூற்றாண்டில் வலிமை பெற்று இருந்தது. இதனை ‘Conflict thesis’ என்பர். ஒன்றைச் சார்ந்து மற்றது இருக்கவில்லை! சமயம் சொல்வதை எல்லாம் அறிவியல் உறுதிப்படுத்த வேண்டும் என்றோ அறிவியல் கூறுகளைச் சமயம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றோ கட்டாயமில்லை. இவை இரண்டும் இணையாகச் செல்லும் இரு கோடுகள் ; என்றும் எங்குமே இணையாதவை. இது ‘Independance’ என அழைக்கப்படுகிறது. இதற்கு நேர்மாறான கருத்தும் உண்டு. அதாவது, இவை இரண்டுக்கும் பொதுப் பண்புகள் உள ; மதத்தில் இருக்கும் கருத்துகள் அறிவியலில் உண்டு ; அறிவியல் கூறும் கருத்துகள் சில, சமயத்தில் உள்ளன. இரண்டின் அடிப்படை நோக்கம் ஒன்றுதான் : உண்மையைத் தேடிக் கண்டறிவது.

    “உண்மையா? அது என்ன?” – கேட்டவன் பொந்தியுஸ் பிலாத்து (Pontius Pilatus). இரண்டாயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்பு, உரோமைச் சக்கரவர்த்தி சார்பாகப் பாலத்தீன நாட்டை ஆண்டவன். ஏசு பிரானை விசாரிக்கும் பொது இக்கேள்வியை எழுப்புகிறான். (பைபிள் – யோவான் – அருளப்பர்- நற்செய்தி அதிகாரம் 18 : திருவசனம் 38). ஆனால் அவனுக்கு முந்திய காலத்திலும் சரி இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பின்பும் சரி அக்கேள்விக்கு விடைதான் கிடைத்தபாடில்லை! ஏனெனில் உண்மை சார்புடையது. இடம் காலத்தைச் சார்ந்திருப்பது.

    காட்டாக, இப்போது இந்தியாவில் மணி காலை 11.30 என வைத்துக்கொள்வோம். இந்தியாவில் இருந்து பிரான்சுக்குத் தொலைபேசியில் உரையாடும் ஒருவர் ‘மணி என்ன?’ என்று கேட்கிறார். பிரான்சில் இருப்பவர், ‘இங்கு, மணி இப்போது காலை 8.00!’ என்கிறார்! இவ்விரண்டு நேரங்களில் எது உண்மை? இரண்டுமே உண்மைதான்- எனவே காலம் இடத்தைப் பொருத்து உண்மை அமைகிறது. சமயங்களுக்கும் அவற்றில் இடம் பெறும் கதைகளுக்கும் இது பொருந்தும்.

    முழுமுதல் கடவுள் சிவன் எனச் சைவம் கூறும். ‘அடி, முடி தேடிய படலத்தில் பிரமன், திருமாலை விட உயர்ந்தவன் சிவனே என்று உணர்த்தப்படுகிறது. உண்மை இது எனக் கொள்வோம். வைணவத்தில் வைணவப் புராணக் கதையில் இது பொய்யாகிறது! வரங் கொடுத்தவன் தலையிலேயே கை வைக்கப் பத்மாசுரன் ஓடி வர, வரங் கொடுத்த சிவனைக் காப்பாற்ற திருமால் மோகினி அவதாரம் எடுத்து வரவேண்டி இருந்தது. இவ்விரண்டு கதைகளில் எது உண்மை? சைவக் களங்களில் முன்னது உண்மையானது ; வைணவச் சமயத்தில் பின்னதுதான் உண்மை! சரி, சமயங்கள் சொல்லும் இறைவன் உருவம் அற்றவனா? (‘ஒரு நாமம் ஓருருவம் இலார்க்கு’) உருவம் பெற்றவனா? (‘ஆயிரம் திருநாமம் பாடித் தெள்ளேணம் கொட்டோமா’ !) எது உண்மை? சமயங்களில்தான் இப்படிக் குழப்பங்கள் ; அறிவியலில் எப்படி?

    17-18 -ஆம் நூற்றாண்டின் மாபெரும் அறிவியல் அறிஞர் சர் ஐசக் நியுட்டன் ஒளியைப் பற்றி ஆராய்ந்தவர். 1704 -இல் இவர் optiks என்றோர் ஆராய்ச்சி நூல் எழுதினார். அதில் அவர் ஒளி, துகள்களாக உள்ளது, அது நேர்க் கோட்டில் பயணம் செய்கிறது என்று நிறுவினார். பெரிய அறிவியல் மேதை அல்லவா, ஆகவே அவர் கூற்றை 18 -ஆம் நூற்றாண்டு உண்மை என ஏற்றுக்கொண்டது. Robert Hooke (1635-1703), Christiaan Huygens (1629-1695) போன்றோர் ஒளிக்கு ‘அலை வடிவக் கொள்கையை’ (wave theory) ஏற்கனவே வகுத்துத் தந்திருந்தனர். அதனால் நியுட்டன் கருத்து உண்மை அல்ல என்று மெல்ல, மெல்ல மறைந்தது; காலக் காற்றில் கரைந்தது. ‘அலை’ கொள்கையே உண்மை என அறிவியல் அறிவித்தது. இவை இரண்டில் எது உண்மை? இருபதாம் நூற்றாண்டு மலர்ந்த போது Max Planck, Albert Einstein, Arthur Holly Compton…போன்றோரின் ஆய்வுகளால் ஒளி சில சமயம் துகளாகவும் சில போழ்து அலையாகவும் இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், 19 ஆம் நூற்றாண்டிலேயே James Clerk Maxwell, Heinrich Hertz என்னும் அறிவியல் அறிஞர்கள் ஒளி வெறும் மின்காந்தக் கதிர்களே (elctromagnetic radiation) என நிறுவினர். இப்போது சொல்லுங்கள் ஒளி என்பது என்ன? துகளா? அலையா? துகள் -அலையா? மின்காந்தக் கதிரா? இவற்றுள் எது உண்மை?

    இப்படி அலசிப் பார்த்தால், உண்மை என்பது மாய மானாகத் துள்ளி ஓடிகொண்டே இருகிறதே தவிர எட்டிப் பிடிக்கவோ கட்டிப் போடவோ முடியவில்லையே! இருப்பினும் இந்த மாய மானைத்தான் சமயமும் அறிவியலும் துரத்திகொண்டே இருக்கின்றன.

    சமயம், உண்மையின் கொடுமுடியான இறைவனை அடையத் தேடுகிறது! அறிவியலோ இயற்கையின் இரகசியங்களைத் தேடி ஓடுகிறது. எனவே சமயத்துக்கும் அறிவியலுக்கும் உள்ள ஒற்றுமை ‘தேடல்’தான்.

    ஆற்றலுக்கும் பொருளுக்கும் உள்ள பிணைப்பைப் புகழ் பெற்ற தம் சமன்பாட்டால் (E= mC2 )நிறுவிய மாமேதை ஐன்ஸ்டீன்

    ‘சமயம் இல்லா அறிவியல் முடம்
    அறிவியல் இல்லா சமயம் குருடு’ என்கிறார்.
    (‘Science without Religion is lame ;
    Religion without science is blind’ ).

    அப்படி என்றால் சமயமும் அறிவியலும் ஒன்றுக்கொன்று உதவி செய்தால் முது சூரியர் இளஞ்சூரியர் என்ற இரட்டைப் புலவர்களைப் போல நலமாக உலவலாமே! இதனால் அறிவியலுக்கும் சமயத்துக்கும் அல்லது சமயத்துக்கும் அறிவியலுக்கும் தொடர்பு உண்டு பண்ணலாம்! ; ஒன்றில் காணப்படும் கருத்து மற்றதில் இருக்கும், இது கூறும் கருத்தை அது உறுதிப்படுத்தக் கூடும்…என்பதை மட்டும் நம் கருத்தில் கொள்வோம். இக்கால அறிவியல் கூறும் கருத்துகளை அக்காலச் சமயம் ஒன்று தனக்கே உரிய முறையில் கூறுகிறது ; அக்காலச் சமயம் சொல்லும் கருத்துகளை இக்கால அறிவியல் உறுதிப்படுத்துகிறது ! வியப்புதான், இல்லையா! அந்தச் சமயம் எது? அது கூறும் கருத்துகள் எவை? அவற்றை இக்கால அறிவியல் எப்படி உறுதிப்படுத்துகிறது? இவை பற்றித்தான் இங்கே காணப் போகிறோம்!

    ___________________________________________________________________.

    Share
  • மகாபாரத முத்துக்கள் – பகுதி 4

    புவனேஷ்வர்

    பூரிசிரவஸ் வதம்- நிறைவுப்பகுதி:

    முன்கதைச் சுருக்கம்:
    சாத்யகியைக் காக்க, எதிர்பாராத விதமாக தனது வலது கை அருச்சுனனால் வெட்டப்பட்டதை கண்ட பூரிசிரவஸ் அதிர்ச்சி உற்றான். அடுத்து சோகமும் இகழ்ச்சியும் ஊறிய மொழிகளை அவன் அருச்சுனனுக்கு சொல்லத் தொடங்கினான். இனி பார்ப்போம்.
    +++++

    “குந்தி மைந்தனே! இரக்கமற்ற ஒரு காரியத்தை நீ செய்து விட்டாயே! நான் உன்னோடு போர் செய்யாத போது, எனக்கு பின்னாலிருந்து என் கையை வெட்டி விட்டாய். உன்னைக்கேட்கிறேன், இதைப்பற்றி தர்மராஜா யுதிஷ்டிரனிடம் என்ன சொல்வாய்? “வேறு யாருடனோ யுத்தம் செய்து கொண்டிருந்த பூரிசிரவசை நான் பாணத்தால் அடித்தேன்”” என்று சொல்வாயா? எந்த முகத்தை வைத்துக்கொண்டு சொல்லுவாய்? இந்த மாதிரி ஆயுதப்ப்ரயோகத்தை உனக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள் அர்ஜுனா? இந்திரன் சொல்லிக்கொடுத்தானா? ருத்ரர் சொல்லிக்கொடுத்தாரா? இல்லை அந்த துரோணரா? அன்றி ஒருவேளை, கிருபரா? யார் சொல்லிக் கொடுத்தது?

    இந்த உலகத்தில் மற்ற எல்லாரையும் விட யுத்த நீதி அறிந்தவன் நீ. அப்புறம் ஏன் அர்ஜுனா, உன்னோடு யுத்தம் செய்யாத ஒருத்தான் கையை அவன் அறியாமல் வெட்டினாய்? அஜாக்ரதையாய் உள்ளவன், பயந்து விட்டவன், தேரை இழந்தவன், கருணை காட்டுமாறு இறைஞ்சுபவன், யுத்தத்தில் செயலறு நிலைக்கு தள்ளப்பட்டவன் ஆகியோரை தர்மம் அறிந்த க்ஷத்ரியர்கள் தாக்குவதில்லை. பின் ஏன், அருச்சுனா, இந்த மாதிரி, உன் கீர்த்திக்கும் தகுதிக்கும் நினைத்துக்கூட பார்க்க முடியாத, ஒரு கீழ்மகன் மட்டுமே செய்யும் இழிந்த காரியத்தை செய்தாய்? உலகால் போற்றப்படும் செயற்கரிய செயலை சான்றோர்கள் விளையாட்டுப்போல எளிதில் செய்து முடிப்பர். ஆனால் அப்பேர்ப்பட்ட சான்றோரும் பழிக்கு அஞ்சுவர். உலகம் இகழும் இழி செயல்களை செய்தல் அவர்க்கு இயலாத காரியம். ஒரு மனிதன் யாருடன் ஒட்டி உறவாடுகிரானோ, அவன் குணங்களை தானும் அடைகிறான். இதை நான் உன்னில் காண்கிறேன், பார்த்தா. ராஜ வம்சத்தில், அதுவும் குரு வம்சத்தில் பிறந்து, இது வரை நடத்தையில் களங்கமில்லாமல், உயரிய விரத நியமங்கள் பூண்டு புகழுடன் இருந்த நீ, இன்று க்ஷத்ரிய தர்மத்தில் இருந்து தவறி விழுந்துவிட்டாய். நீயாக இந்த மாதிரி செயலை செய்திருக்கவே மாட்டாய். எனக்கென்னவோ, வருஷ்ணி குலத்து வீரனுக்காக (சாத்யகிக்காக) நீ செய்த இந்த மூர்க்கத்தனம் இந்த வாசுதேவன் சொல்லித்தான் நீ செய்திருக்க வேண்டும் எனப்படுகின்றது. இப்படியாம்மபட்ட வீரச்செயலை செய்ய உனக்கு தானாக எங்கே தோன்றியிருக்கப்போகிறது? இந்த புன்மதியாளன் கிருஷ்ணனுடைய யோசனையைக் கேட்கும் அவன் நண்பர் குழாம் தவிர வேறு யார் தன்னோடு யுத்தம் செய்யாதவனை அடிப்பார்கள்?

    வ்ருஷ்ணிகளும் அந்தகர்களும் கெட்டுப்போன க்ஷத்ரியர்கள். சதா தீய செயல்கள் இயற்றும் கெடுமதியாளர்கள். தீயநடத்தை இவர்களுக்கு ஒரு போதை போல ஒட்டிக்கொண்டு விட்டது. நீ ஏன் அர்ஜுனா, போயும் போயும் இந்த துன்மதியாளரை உனக்கு முன்னுதாரணமாக கொள்கிறாய்?”

    இவ்வாறு பூரிசிரவஸால் யுத்த அரங்கத்தில் இகழப்பட்ட பார்த்தன் பூரிசிரவசை பார்த்து, “அரசே! முதுமையால் தங்கள் அறிவும் தளர்ச்சி உற்றது போலும். பொருளற்ற தங்கள் பேசினால் இதைத் தான் தெரிந்து கொள்கிறேன். என்னையும் ஹ்ருஷீகேசனையும் நன்கு அறிந்தவரான தாங்கள், எங்களை நன்கு அறிந்தும் எப்படி எங்களை இகழ்கிரீர்கள்? யுத்தநீதிகளையும் தர்ம சாஸ்திரங்களையும் அறிந்த நான் ஒருபோதும் பாபகாரியத்தை செய்யமாட்டேன். இது தங்களுக்கு தெரிந்தாலும் என்னை திட்டுகிறீர்கள். நண்பர்களும், படைகளும், உறவினர்களும் உதவிக்கு பின்தொடர்ந்து புடைசூழ, அவர்கள் பலத்தையும் நம்பியல்லவோ க்ஷத்ரியர்கள் சத்ருவுடன் யுத்தம் செய்கிறார்கள்? பின்தொடரும் வீரர்களும் முன்னே செல்லும் வீரர்களின் வலிமையை நம்பியல்லவோ சண்டை செய்கிறார்கள்? அப்படி இருக்கும் பொழுது, எங்கள் நன்மைக்காக தனது அரிய உயிரையும் கொடுக்க துணிந்து போராடும் எனது சிஷ்யனும், தோழனும், உறவினனுமான சாத்யகியை நான் ஏன் பாதுகாக்கக்கூடாது? யாராலும் ஜெயிக்க முடியாத இந்த சாத்யகி யுத்தத்தில் எனது வலக்கை ஆவான். கோழைகளுக்கு பயம் தரும் யுத்தத்தில், உண்மையான வீரன் சுயநலமாக தன்னை மட்டும் பாதுகாத்துக்கொள்வதில்லை. தன்னைக்காக்கவும், தனக்கு உதவவும் தன் பின்னே வரும் மற்ற வீரர்களையும் அவன் பாதுகாக்க வேண்டும். (யுத்தத்தில் தான் மட்டும் காயப்படாமல் வீடு சேரும் ஆண்மகன் இகழப்படுகிறான்). இப்படி வீரர்கள் ஒருவரை ஒருவர் காப்பதால் அங்கே மொத்தத்தில் அரசன் காக்கப்படுகிறான். ஜயிக்கப்பட்டு நிராயுதபாணியாக்கப்பட்ட சாத்யகி உங்களால் கொல்லப்படுவதை அமைதியாக நான் வேடிக்கை பார்த்திருந்தால் அந்த கொலைபாவம் என் தலையில் தான் விடிந்திருக்கும். அரசே, அப்படி இருக்க, நான் சாத்யகியை காப்பாற்றியது குறித்து தாங்கள் ஏன் கோபிக்கிறீர்கள்? “வேறு ஒருத்தனுடன் போர் செய்யும் பொது உன்னால் நான் அங்கபங்கம் செய்யப்பட்டேன்” என்று குற்றம் சாட்டுகிறீர். அது தவறு. யானைகளும் ரதங்களும் குதிரைகளும் சிம்மநாதங்களும் நிறைந்த இந்த கடல் போன்ற இந்த சத்ரு சேனையின் நடுவில் கவசம் அணிந்து தேரேறி வில் பிடித்து நாணேற்றி நான் யுத்தம் பண்ணுகிறேன்.

    அது போல, நண்பர்களும் சத்ருக்களும் கலந்த இந்த கூட்டத்தில் போராடும் சாத்யகியை எப்படி உம் ஒருவனுடன் மட்டும் யுத்தம் செய்வதாக தாங்கள் கருதலாம்? பல வீரர்களுடன் யுத்தம் செய்து ஜெயித்த சாத்யகி களைத்திருந்தான். ஆயுதங்களால் காயங்கள் பல பட்ட அவ்வீரன் மனச்சோர்வும் உற்றிருந்தான். ஆந்த சமயத்தில் தாங்கள் அவனை அறைகூவி அழைத்தீர்கள், வெற்றியும் அடைந்தீர்கள். நிராயுதபாணியாக தங்கள் காலடியில் கிடந்த அந்த வீரனின் தலையை வெட்டி ஏறிய தாங்கள் முயல, அவனை நான் காத்தேன். அதை நான் எப்படி சும்மா வேடிக்கை பார்த்திருக்க முடியும்? யுத்தத்தில் சுற்றும் முற்றும் நடப்பதை கவனிக்காமல் அசட்டையாக இருந்த தாங்கள் இவ்விஷயத்தில் தங்களையே தான் நொந்துகொள்ள வேண்டும்.. எனது இடத்தில் தாங்கள் இருந்தால் தாங்கள் என்ன செய்திருப்பீர்கள் அரசே?” என்றான்.

    இதைக்கேட்டதும் யூபஸ்தம்பத்தை தன் கொடியில் உடைய பூரிசிரவஸ் வெட்கினான். சாத்யகியை விட்டு விட்டு, பிரயோபவேசம் (வடக்கிருத்தல்) பண்ணி பிராணத்த்யாகம் செய்ய உத்தேசித்தான். சாத்யகியை விட்டு விட்டு, மகா தர்மவானான பூரிசிரவஸ், தனது இடக்கையால் தரையில் அம்புகளைப் பாயலாகப் பரப்பி, பிரம்மத்தினை த்யானித்து, யோக நிஷ்டனாக அதில் அமர்ந்தான். புலன்களை ஒவ்வொன்றாக உரிய தேவதைகளிடம் நாட்டி மௌனமானான். கண்களை சூரியன் மேல் நாட்டி, ஹ்ருதயத்தை சந்திரனிடம் நாட்டி, உபநிஷத் மகாவாக்யத்தை ஸ்மரித்து, ஓம் எனும் பிரணவத்தை உள்ளுக்குள் நிலை நிறுத்தி, சமாதி நிலையில் உடலை விடும் நோக்கத்தோடு யோக நிஷ்டனாக, மெளனமாக அமர்ந்தான்.

    அங்கிருந்த சேனாவீரர்கள் அனைவரும் அவனை புகழ்ந்து துதித்தனர். கிருஷ்ணனையும் அருச்சுனனையும் இகழத் துவங்கினர். எல்லோராலும் இகழப்பட்டாலும் அந்த இரு வீரர்களும் (அருச்சுனனும் கிருஷ்ணனும்) எந்த கடும் சொல்லையும் பேசாமல் இருந்தனர். அதே போல எல்லாராலும் புகழப் பட்டாலும் பூரிசிரவஸ் ஆனந்திக்கவில்லை. இன்ப துன்பத்துக்கு அப்பாற்ப்பட்ட ஒரு மேனிலையை அவன் அடைந்திருந்தான்.

    எல்லாரும் தூற்றுவதைக் கேட்ட பல்குணன், மேலும் ஏச்சுக்களை பொறுக்க இயலாதவனாகி (அபிமன்யுவை நினைத்தும், வீரர்களின் ஏச்சுக்களைக் கேட்டும்) அளவில்லா சோகத்துடன் அமைதியாகப் பேசலுற்றான். “பூரிசிரவசே! அரசே! காண்டீபத்தின் பாணங்களின் எல்லைக்குட்பட்ட சமர்க்களத்தில் எங்களைச் சேர்ந்த எந்த வீரனையும் ஒரு எதிரி கொல்ல நான் அனுமதிக்க மாட்டேன் என்ற எனது சபதம் உலகறிந்தது. இங்குள்ள அரசர்கள் அனைவரும் அதை அறிவர். இது அறிந்தும், நீங்கள் என்னை இகழ்வது தகாது. தருமத்தை சரியாகப் புரிந்துணராதோர் பிறரை விமர்சிப்பது தகாது. பூரிசிரவசே, நிராயுதபாணியான சாத்யகியை யுத்த தருமத்துக்குப் புறம்பாக, வாளால் தாங்கள் கொல்ல முயன்ற போது தங்கள் கரத்தை நான் பின்னால் இருந்து வெட்டியது தரும விரோதம் ஆகாது. (இங்கே என்னை இகழும்) தருமம் தெரிந்த எந்த நேர்மையான க்ஷத்ரியன் அபிமன்யு கொல்லப்பட்ட விதத்தை புகழ்வான்? பதினாறு வயது பூர்த்தி ஆகாத சிறுவன், தேர் இழந்து, வில் இழந்து, ஆயுதங்கள் தீர்ந்து, கவசம் உடைந்து, களைத்து இருந்த வேளையில் அபிமன்யு ஆறு மகாரதர்களால் பின்பக்கத்தில் இருந்தும் தாக்கப்பட்டு கொல்லப்பட்டான். என்னை இகழும் தர்மம் அறிந்த வீரர்களில் யார் அதை புகழ்வார்கள் அப்பனே?” என்றான் அருச்சுனன், பூரிசிரவசைப் பார்த்து.

    புத்திர சோகத்தோடு அருச்சுனன் பணிவுடன் சொன்ன ஆழ்ந்த பொருள் பொதிந்த அந்த வார்த்தைகளை கேட்ட பூரிசிரவஸ் மறுமொழி எதுவும் சொல்லவில்லை. வெட்கத்தில் தலை குனிந்து தரையைத் தொட்டான். அவ்வளவே. ஒன்றும் பேசவில்லை.

    அவனது அந்த நிலையை கண்ட பார்த்தன் “பூரிசிரவசே, தருமராஜர் மேலும், பீமன் மேலும், நகுல சகாதேவர்கள் மீதும் நான் வைத்துள்ள அளவு பாசம் உங்கள்மீதும் வைத்துள்ளேன். நானும் கிருஷ்ணனும் சொல்கிறோம், ஐயனே, தருமவான்களுக்குரிய உலகங்களுக்கு நீர் ஏகுவீராக. அடைக்கலம் என்று வந்த புறாவுக்காக தன் தசையையே அரிந்தளித்த வள்ளல் சிபிச் சக்ரவர்த்தி வாழும் உலகங்களுக்கு நீரும் ஏகுவீர்” என்றான்.

    வாசுதேவனும் “பூரிசிரவசே, இடையறாது யாகங்களும் அக்னிஹோத்திரமும் நியமம் காத்து செய்து வந்த தருமவானே, நீர் தாமதம் இன்றி பிரம்மா முதலிய தேவரும் விரும்பும் எனது ஒளிபடைத்த வைகுண்டத்துக்கு செல்வீராக. எனக்கு சமானமாக, கருடனால் சுமக்கப் பட்டு, நீர் வைகுண்டம் சேர்வீராக” என்றான்.

    இவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கையில் சாத்யகி களைத்துப் போய் கிடந்தான். கண்ணன் பேசி முடிக்கையில் அவன் எழுந்தான். கண் விழித்துப் பார்த்தான். அவமானத்துக்கு பழி வாங்கும் ஆத்திரத்துடன் வாளை உருவி, பூரிசிரவசின் வாழ்நாளை முடிக்க தீர்மானித்துப் பாய்ந்தான். ஐம்புலன்களையும் அடக்கி, துதிக்கை வெட்டப் பெற்ற யானை போல, அருச்சுனனால் பாதி கொல்லப்பட்டு, யோகத்தில் அமர்ந்த அரசனை கொல்ல விரைந்த சாத்யகியை கண்டு அனைவரும் அதிர்ந்தனர். “ஐயோ இந்த அதர்மம் வேண்டாம்! வேண்டாம்” என பாண்டவர் படையே கூக்குரலிட்டது. அருச்சுனனும் கிருஷ்ணனும், பீமனும், யுதாமன்யுவும், உத்தமௌஜனும் பெருங்குரலில் அவனை “இது தருமமில்லை” என்று தடுத்தனர். கௌரவர் சேனையும் “ஐயோ” என அலறியது.

    அஸ்வத்தாமனும், கிருபரும், கர்ணனும், அவன் மகன் வருஷசேனனும், ஜயத்ரதனும் “வேண்டாம்” என தடுத்தனர். இதையெல்லாம் கேட்டும் லட்சியமே பண்ணாமல், யோக நிஷ்டையில் பிரம்மத்தை த்யானித்து அமர்ந்திருந்த பூரிசிரவசின் சிரஸை தனது கத்தியால் சாத்யகி செத்த பாம்பை அடிப்பது போல வெட்டித் தள்ளினான்.

    சேனா வழக்கப்படி பாண்டவ வீரர்கள் சாத்யகியை பாராட்டவில்லை. சித்தர்களும் சாரணர்களும் இருபக்க சேனாவீரர்களும் பூரிசிரவசையும், அவன் வாழ்நாளில் புரிந்த எண்ணிறந்த தானங்களையும் யாகங்களையும் அறச்செயல்களையும் போற்றி கொண்டாடினர்.

    கௌரவர்கள் தங்களுக்குள் கசமுசா எனப் பேசத் துவங்கினர். “இது வருஷ்ணி குல சாத்யகியின் தவறல்ல. முன்பே விதிக்கப்பட்டது நடந்து விட்டது. அதனால் நாம் கோபப் படக் கூடாது. கோபமே துக்கத்துக்கு காரணம். சாத்யகி தான் பூரிசிரவசை வதைக்க வேண்டும் என்று அவன் விதி இருந்தால் நாம் என்ன செய்ய இயலும்? பிரம்மா எழுதிய எழுத்தின் படி பூரிசிரவசின் யமன் சாத்யகி என்று இருக்கையில் இது சரியா தவறா என்று நாம் விவாதிப்பதில் பயனில்லை………”

    இதைக் கேட்ட சாத்யகி கடுங்கோபத்துடன் “பாபிகளே! பசுத்தோல் போர்த்திய புலி போல தருமம் பேசும் மூடர்களே! இப்போது தருமவான்களைப் போல தருமம் பேசுகிறீர்கள். நல்லது. ஆனால், சௌபத்ரன் (அபிமன்யு) கொல்லப்பட்ட போது நேற்று ஆனந்தக் கூத்தாடியது நீங்கள் தானே? அப்போது எங்கே போயிற்று உங்கள் தர்மம்? என்னை எவன் காலால் உதைக்கிறானோ அவன் சந்நியாசி ஆனாலும் அவனை வதைப்பேன் எனபது எனது சபதம். யுத்தத்தில் நான் உயிரோடு இருக்கும் போதே நான் செத்து விட்டதாக நினைத்தது உங்கள் குற்றம். பூரிசிரவசை நான் கொன்றது தருமமே. இன்னும் சொல்லப்போனால் இந்த பார்த்தன், என் மேல் உள்ள அன்பாலும், தன் சபதத்தை காக்கும் பொருட்டும், இவன் கையை வெட்டி, எனக்குக் கிடைக்க வேண்டிய பெருமையில் பாதியை கிடைக்க விடாமல் செய்து விட்டான்! விதிக்கப்பட்டது நடக்கும். வலியது விதி. நான் என்ன பாப்பம் செய்தேன்? முன்பே ராமாயணத்தில் வால்மீகி பாடினாரே, “வானரமே, பெண்களைக் கொல்லக் கூடாது என்று நீ சொல்கிறாய், ஆனால் எதிரிகளுக்கு துன்பம் தரும் செயலை வீரர்கள் எந்தக் காலத்திலும் உறுதிகொண்டு செய்ய வேண்டும்”. (பின் குறிப்பு காண்க).

    சாத்யகியின் இந்த வார்த்தைகளைக் கெட்டு அங்கே இருந்த யாரும் – பாண்டவரும் கௌரவர்களும் – எதுவும் பேசவில்லை. ஆனால் மனதுக்குள் பூரிசிரவசை மெச்சினார்கள். சாத்யகியை மனதுக்குள் இகழ்ந்தார்கள். அங்கிருந்த ஒரு வீரன் கூட, ரிஷியைப் போன்ற பூரிசிரவசின் வதத்தை பாராட்டவில்லை. வெட்டப்பட்ட பூரிசிரவசின் கருத்த மயிரும் சிவந்த கண்களும் கொண்ட தலை, அஸ்வமேத யாகத்தில் காணப்படும் குதிரையின் தலை போல, அழகில் சற்றும் குறையாமல் ஜொலித்தது. யுத்தத்தில் வீரமரணம் அடைந்த மாவீரனும் தர்மாத்மாவுமான வள்ளல் பூரிசிரவஸ், அழியும் தேகத்தை போர்க்களத்தில் உகுத்து, அழியாப் புகழுடம்பை உலகில் நாட்டி, புண்ணியச் செயல்களால் தான் சம்பாதித்த தனது ஜோதிமயமான வடிவத்தோடு காண்போர் கண்கள் கூசும் வண்ணம், ரிஷிகளாலும் சித்தர்களாலும் தேவர்களாலும் போற்றிக் கொண்டாடப்பெற்று பிரம்மலோகம் ஏகினான்.

    பின் குறிப்பு:

    சாத்யகி சொன்ன வால்மீகி பாடிய சுலோகம் இடம்பெறும் இடம்: வால்மீகி ராமாயணத்தில் யுத்த காண்டம் – சர்க்கம் 81 – ஸ்லோகம் 28 (6-81-28)

    न हन्तव्याः स्त्रियश्चेति यद्ब्रवीषि प्लवङ्गम ||
    पीडा करममित्राणां यत्स्यात्कर्तव्यमेत तत् |

    ந ஹந்தவ்யா ஸ்த்ரியஸ்சேதி யத்ப்ரவீஷி ப்ளவங்கம|

    பீடா கரமமித்ரானாம் யத்ஸ்யாத் கர்தவ்யமேத தத்||

    “ஏ தாவும் வானரமே (ப்ளவங்கம), பெண் கொலை கூடாது என்று நீ சொல்லுவது உண்மைதான். ஆனாலும் மித்திரர் அல்லாதோரை – எதிரிகளைப் பீடிக்கும் காரியங்களை கட்டாயம் முயன்று செய்ய வேண்டும்”

    இதில் இருந்து வால்மீகி ராமாயணம் கட்டுக் கதை அல்ல என்று புலன் ஆகிறது. மகாபாரதத்தில் வால்மீகிக்கு மேற்கோள்/reference வருகிறது என்றால் ராம சரித்திரம் அநாதி காலமாக வழக்கில் இருந்து வந்திருக்கின்றது என்று தானே அர்த்தம்? மகாபாரதத்தில் ராமாயணமே முழுதாக வரும். மார்க்கண்டேயர் தருமனுக்கு, அவனை விட கஷ்டப்பட்ட ராஜாக்கள் உண்டு என்று ஒரு சமயம் தேற்றுவார். அப்போது ராமாயணம் சொல்லுவார். இருந்தாலும், வால்மீகி ராமாயணத்தில் ஒரு குறிப்பிட்ட ஸ்லோகத்துக்கு மேற்கோள் வருவது இந்த இடத்தில் தான். சாத்யகி எந்த அளவுக்கு கல்வி அறிவு பெற்றவன் என்பதும் இங்கு விளங்கும். சாத்யகியே இவ்வளவு படித்திருந்தால் பாண்டவர்களும் கண்ணனும் துரோணரும் பீஷ்மரும் கிருபரும் எவ்வளவு அறிவு உடையவர்களாக இருந்திருப்பார்கள் எனபது விளங்கும். அவ்வளவு அறிவு இருந்தும், அதர்மத்துக்குத் துணை போனதால் அவர்கள் எவ்வாறு தோற்றார்கள் என்பதும் விளங்கும்.

    பூரிசிரவஸ் வதம் முற்றிற்று.

    அடுத்த வாரம் அடுத்த பதிவில் மகாபாரதத்தில் வேறு ஒரு சுவாரஸ்யமான கட்டத்தை பார்ப்போம்.

    (தொடரும்)

    Share
  • சங்கத் தமிழன் சாகாவரம் வேண்டினானா?

     


    கோ. ஆலாசியம் 

     agathiyar

    அறிவினில் உயரியத் தமிழ்மொழி என்பேன் நான்.

    மொழி என்பது கருவியாகும். ஒருவனுடைய உள்ளத்தில் எண்ணங்கள் தோன்றி வளர்வதற்கும், வளர்ந்த எண்ணங்களை மற்றவர்களோடு பகிர்வதற்கும் பயன்படும் கருவியே மொழி என்பதாகும்.

    அறிவினிலுயரியத் தமிழ்மொழி பேராழி 

    ஊறிய அமிழ்தினும் சிறந்ததென்பேன்

    பாரினில் உயரிய மகாகவியோடவன் தாசன் 

    கூறிய உன்னதறிவுப் போற்றியே

    ‘தொன்று நிகழ்ந்தது அனைத்தும்

    உணர்ந்திடு சூழ்கலைவாணர்களும் இவள்

    என்றுப் பிறந்தவள் என்றுணராத

    இயல்பினளாம் எங்கள் தாய்‘

    ‘ஆதி சிவன் பெற்றுவிட்டன என்னை‘ என்று தமிழ் மொழியின் தொன்மையை மகாகவி பாரதி பாடிச் சென்றான்

    “ஆதி சிவன் பெற்று விட்டான் – என்னை

    ஆரிட மைந்தன் அகத்தியன் என்றோர்

    வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை

    மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.

     

    முன்று குலத்தமிழ் மன்னர் – என்னை

    மூண்டநல் லன்போடு நித்தம் வளர்த்தார்,

    ஆன்ற மொழிகளி னுள்ளே – உயர்

    ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்.”

    வாழும் மொழியான செம்மொழி மிகப் பழமையான மொழிகளுள் ஒன்றும்; அதன் சிரஞ்ஜீவித் தன்மைக்கு அதன் அறிவுச் செழுமையும்; உலகப் பொருள்களிலும்; படைப்பைப் பற்றிய அதன் தெளிவை ஐயம் திரிபுர விளக்கும் தன்மையையும்; கிட்டத்தட்ட இரண்டாயிரத்து ஐந் நூறு ஆண்டுகளுக்கு முன்னமே அது முழுமை பெற்றதை; அதாவது முழு வளர்ச்சிப்  பெற்று விட்டதும், அதன் இலக்கண அமைப்பின் வழியே காணும் போது உலக மொழிகளில் வேறந்த மொழியிலும் இப்படி ஒரு இலக்கணம் அதுவும் பொருளிலக்கணம் எழுதப்படவில்லை என்னும் உயர்வும் இந்த அறிவினில் உயரிய அன்னை தமிழுக்கு உண்டு என்பது நமக்குப் பெருமையே.

    இன்றைய நவீன அறிவியல் கூறும் அனைத்துப் பிரபஞ்சக் கூறுகளும் அதன் உருவாக்க அமைப்பின் முறையை முறையே முதல் கரு உரிப் பொருள்கள் வழியே முறைப் படுத்தி இருவரிகளில் பிரபஞ்சத்தை சுருக்கிய தொல்காப்பியச் செய்யுள் எத்தனைப் பெரிய சான்று இம்மொழி அறிவினில் உயர்ந்து முழுமைப் பெற்ற மொழி என்பதற்கு.

    ‘முதல், கரு, உரிப்பொருள் என்ற மூன்றே

    நுவலுங் காலை முறை சிறந்தனவே…..‘

    ஒரு வரிசையைத் தருகிறார், அதுவே இன்றைய அறிவியலும் கூறுகிறது.

    இப்படிப் பொருளிலக்கணம் அதாவது வாழ்வியல் கோட்பாடுகளை வகுத்த மொழியின், அதன் அகம் புறம் என்னும் அன்றைய இலக்கியங்கள் இவற்றின்

    ‘முதல், கரு, உரிப்பொருள் என்ற மூன்றே‘ என்று  கூறிவிட்டு அடுத்த அடியில் ‘நுவலுங்காலை முறை சிறந்தன’ என்பது இந்த பிரபஞ்சத் தோற்றத்தின் வரிசை அதாவது படைப்பின் வரிசையை அதாவது நிலம், பொழுது; அடுத்து கருப் பொருளான தாவரம், விலங்குகள் அதன் பின்பு பல்லாயிரம் வருடங்கள் கழித்து தான் மனிதன் தோன்றினான் என்பதாக. இதை இப்போது அறிவியலாளர்களும் ஒப்புக் கொள்கிறார்கள்.

    தொல்காப்பிய இலக்கண நூல் எழுத்தது சொல் என்று மட்டும் அல்லாது மனித வாழ்விற்கு இலக்கணமும் கூறிய நூல். இது வேறெந்த உலக மொழியிலும் இல்லாத சிறப்பு என்பர்.

    அதனால் அதனை நான் அறிவினில் உயரிய செம்மொழி என்பேன்.

    சற்று உற்று நோக்கினால்…. இப்படியொரு உயரிய இலக்கணத்தை படைக்கும் போது, அது அற்றைய நாட்களில் தமிழன் வாழ்ந்த வாழ்வினையே விளக்கும் என்பதைக புரிந்துக் கொள்ளலாம்.

    இருந்தும் அப்படியொரு வாழ்வு வாழும் போது, இப்படி இலக்கணம் படைபானானேன் என்று எண்ணினால், அது அந்த பண்பாட்டை ஒரு முழு ஒழுங்கு பெறாத பண்பாட்டை ஒரு முழு வடிவுக்கு கொண்டு வரவும், இன்னும் நுண்ணியதாக கூராக்கவும் எண்ணியே தொல்காப்பியர் செய்திருக்க வேண்டும்.

    இல்லாத ஒன்றை; அறியாத ஒன்றை திடீரென ஒருவன் வரையறை செய்ய முடியுமா? என்பதும், அப்படி செய்வானாயின்; தமது வாழ்க்கைக்கு சிறிதும் சம்பந்தமில்லாத ஒன்றை புரிந்துக்கொண்டு  சாதாரண மக்கள் வாழ்வை மாற்றிக் கொள்ள முடியுமா? என்பதையும் சிந்தித்தால்; அது அன்றைய தமிழனின் வாழ்வியல் அமைப்பு தான், அதை அவன் ஒருவாறு கைக் கொண்டிருந்தான் என்பது விளங்கும்.  இலக்கணம் பிறந்தது அப்போதே என்றால் அந்த இனம் எத்தனை நாகரிகமும், வாழ்வியல் விழுமங்களையும் பெற்றிருந்தது என்பதையும் இதன் வழி நன்கு அறியலாம்.

    அகம் புறம் பிரிவு!

    அகமும் புறமும் பற்றிய இலக்கியங்கள் இந்த இலக்கண அடிப்படையிலே தோன்றி தமிழ் மக்கள் வாழ்வின் முழுமையும் பறைசாற்றுகின்றன.

    ‘கவிஞன் ஞானோ காலக் கணிதம்‘ என்பதைப் போல…

    இலக்கியம் என்பது மண்ணின், மாந்தரின் அது தோன்றிய காலத்தின் வாழ்வியலை படம் பிடித்துக் காட்டுவதே. அப்படியானால் அக்கால மக்களின் மனப் பாங்கை அது காட்டும் கண்ணாடி என்று தமிழ் சான்றோர் கூறுவதற்கு இணங்க; தமிழன் தனது உணர்ச்சியின் அடிப்படையில் எப்படிச் செயல் பட்டான்.

    அதாவது, தனது மெய் சார்ந்த உணர்ச்சியில் அவனின் செயல் பாடு அவன் இந்த சமூகத்தில் மற்றோருடன் கொண்ட உறவு; குடும்பம், சமூகம் என்ற அமைப்பில் அவனது பங்கு என்பதும்; அவன் இந்த உலகை, பற்றிய எண்ணம், இயற்கையை பற்றிய கருத்து, புரிந்துணர்வு அதை அவன் கையாண்ட முறை ஆகிய அனைத்தையும் பற்றிய விழுப் பொருள்களை நமக்கு இன்று இந்த அகமும், புறமும் காட்டுகிறது என்பதை மறுப்பதற்கில்லை,

    அருமையான அகத்திலே ஏனிந்த அழுக்கு!

    ‘மக்கள் நுதலிய அகன் ஐந்திணை‘ (தொல் -அகத்திணை-57)

    அனைவரும் அறிந்ததே ஐந்திணைகள்; குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை, மருதம். இந்த ஐந்திணைகளிலே தமிழர் வாழ்வு அமைந்திருக்க வேண்டும் ஆனாலும் அதிலே வரும் மருதத் திணை இவர்களின் வாழ்வை நாசமாக்கி இருக்க வேண்டும்.

    அதை நாமும் வள்ளுவரின் மறைவழியே அறிய முடியும். பரத்தையருடன் வாழும் வாழ்வை சித்தரிப்பது மருதம் ஆகும். இது சங்ககால தமிழனின் வாழ்வை சங்கருத்ததும்  ஆகும்.

    பரத்தமை ஒழுக்கத்தை திருக்குறள் எப்படி எல்லாம் சாடியுள்ளது என்பதை யாவரும் அறிவோம்.

    இருமனப் பெண்டிரும், கள்ளும், கவறும்

    திருநீக்கப் பட்டார் தொடர்பு  – (திருக்குறள் 920)

    பொது மகளிர்த் தொடர்பு, கள்ளுன்னுதல், சூதாடுதல் இவைகள் கொண்டொழுகும் மனிதனை இலக்குமி கைவிட்டு விடுவாள். தரித்திரன் ஆகி விடுவான் என்பதே அது.

    புறத்திலே புரையோடிய போரென்னும் போதை!

     

    ‘கொடுத்தல் எய்திய கொடாமை யானும்‘ (புறத்திணை – 7)

    ‘கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தல்‘ (புறத்திணை-29)

    இது சமூக ஏற்றத் தாழ்வை அந்நாளில் இருப்பதை நமக்குணர்த்தும்.

    எல்லாவற்றிற்கும் மேலாக புறத்திலே அதிகம் பேசப் படுவது வீரம் பற்றியனவாகும் என்பதை நாம் யாவரும் அறிவோம். அது தொண்ணூறு விழுக்காடு இருக்கிறது என்கிறார்கள், ஆழ்ந்துப் பயின்ற தமிழ்ச் சான்றோர் பெருமக்கள்.

    இந்த வீரத்தைப் புகழும் அதே வேளையில் அந்தப் போரினால் விளைந்த அவலனிலைகளைப் பற்றியும் அதுக் கூற தவற வில்லை.

    காஞ்சித் திணையிலே காணக் கிடைக்கும் அவலம் எத்தனை கொடுமை என்பதை காண்பார் உணர்வார். கணவனை போரினிலே இழந்த மனைவியரின் அவலமும், தனது மகனை இழந்த தாயின் நிலையையும், சுற்றத்தாரும் உற்ற பெருந்துயரங்களும் சொல்லி இருப்பதையும் அறியலாம். அப்படி கூறிய அந்த காஞ்சித் திணை; போரிலே புகுந்து வீரம் காட்டுதலையே பெரிதும் விரும்பிப் போற்றின என்று தான் கூற வேண்டும்.

    இதிலே பரத்தமையும், கள்ளும், சூதும் தவறெனக் கூறிய வள்ளுவன் கூட வீரத்தைப் பெரிதாக புகழ்ந்துக் கூறினான்.

    புறத்திணை குறிக்கும் கொடை, வீரம் போக, வாகைத்திணையில் சான்றாண்மை, நல்லொழுக்கம், பிறர் பிழை பொறுக்கும் பண்பு, அருளை மேற்கொண்டு வாழும் வாழ்க்கை துறவு, காமம் நீத்த சிறப்பு என்பவைகளையும் காணலாம்.

    ———————————————–

    துகள் தபு சிறப்பின் சான்றோர் பக்கமும்

    கட்டில் நீத்த பாலினானும்

    கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை யானும்

    ————————————————

    அருளோடு புணர்ந்த அகற்சியானும்

    காம நீத்தப் பாலினாலும். (தொல் -புறத்திணை-17)

    ஆக போர், வெற்றிப் புகழ் என்பதிலே பெரிதும் மயங்கிக் கிடந்த இத்தமிழ்ச் சமுதாயத்தில், அரசு கட்டிலைத் துறப்பதும், அனைத்து உயிர்களிடத்தும் அருள் கொண்டு துறவு மேற்கொண்டோழுகுவது பெரிய வெற்றி என்று வாழ்ந்தாரும் இருந்தனர் என்பதை அறிய முடிகிறது.

    ‘கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை யானும்‘ இதற்கு நச்சினார்கினியர் உரை கூறுகிறார் ‘ வேதம் முதலிய வற்றாற் கட்டுதல் ஒழுக்கத்தோடு கூடியக் காட்சி’

    வேதம் கூறிய படி ஐம்புலன்களையும் கட்டுதல் அது எப்படி சாத்தியமாம் அதற்கான ஒழுக்கத்தைக் கொண்டு கட்டு. அதாவது ஐம்புலன்களின் வழியே உந்தன் மனத்தை அழுக்காக்கிக் கொள்ளாது கட்டு. அப்படிக் கட்டும்கால்  காணும் காட்சி. ஆக, தொல்காப்பியத்திலே இதையும் காண்கிறோம்.

    ஒப்பு நோக்க மனித வாழ்வு என்பது இன்ப துன்பம் கலந்தது என்பது தான் ஆன்றோர் வாக்கும். ஐம்பூதங்களினால் ஆன அண்டம்; இந்த பிண்டமும் அப்படியே! அவைகள் ஒவ்வொன்று வேறு வேறானது ஒத்த தன்மைக் கொண்டு விளங்காது என்பதும் உண்மையே…

    ஆகையால் வள்ளுவனார் கூறியது போல்…

    ‘குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள்

    மிகைநாடி மிக்க கொளல்‘

    தமிழ் மக்களின் வாழ்வுக் குறைகளை நீக்கினால், அந்தத் தமிழனின் வாழ்வு உலகிற்கு முன்னுதாரணம் என்பதில் ஐயமில்லை.

    வடவேங்கடம் தென்குமரி

    ஆயிடை தமிழ்கூறு நல் உலகம். —(தொல் -பாயிரம்-1)

    இது பழந்தமிழ் நாட்டின் பரப்பு என்பதை தொல்காப்பியம் வழி அறிகிறோம். இதை சேர, சோழப் பாண்டிய மூவேந்தர்களும்.. எண்ணிலா சிற்றரசர்களும் ஆண்டு வந்தனர் என்பது அறிந்ததே.

    பக்காளிச் சண்டைகளை வீரம் என்பதா?

    veeram

    இம்மூன்று மன்னர்களும் ஓயாத, ஒழியாத போர்கள். இவர்கள் சில காலம் சும்மா இருப்பினும், இவர்களைத் தூண்டிவிட்டுப் போர் செய்ய செய்தவர்களும் உண்டு என்பர். போரிடா மன்னனே இல்லை. மேலும், சோழர்களுள் அரசு கட்டிலுக்காக நடந்த போர். ஏன்? தந்தை மகனுக்குமான போர்களும் இருந்தன என்பர்.

    இப்படி மூவருள்ளும் சண்டை இட்டுக் கொள்வதால் வலியவன் வெல்வதும்; அதனால் தோற்றுப் போனவன் நாட்டில் சில பகுதிகளையும், விளைந்த விளைச்சல் மிகுந்த நிலங்களை கொழுத்துவதும், போரில் மடிந்த மனிதர்களின் குடும்பத் துயரத்தை பொருள் கொள்ளாது சர்வ சதாக் காலமும்… தமிழனுக்குள் தமிழன் அடித்துக் கொள்வதே இவர்களின் வேலையாகவும் இருந்திருகிறது.

    வாழ்ந்தவன் ஒருத் தமிழன் என்றால் மடிந்தவனும் தமிழன் தான். சமுதாயத்தில் ஒரே வாழ்வியல் என்பதால் பொருளாதாரத்தைத் தவிர வேறு பெரிய மாற்றம் இருந்திருக்க மாட்டா.

     veeram2

    இதிலே, கரிகாலன், பாண்டியன் தலையாலங் கானத்து செருவென்ற நெடுங்செழியன், சேரன் செங்குட்டுவன் பொன்றோர் ஆட்சிக் காலத்திலேயே தான் தமிழ்ப் பெருநிலம் ஒரு குடையின் கீழே இருந்திருப்பதாகவும் வரலாறு காட்டுகிறது.அதுவும் மிகக் குறுகிய காலமென்பர். எஞ்சியக் காலம் எல்லாம் போர் தான் அதுவும் பங்காளிச் சண்டை தான். இவர்கள் சும்மா இருந்தால், இவர்களின் கீழுள்ள சிற்றரசர்கள் அடித்துக் கொள்வார்ககளாம்.

    போர் வெறி, எப்படி த் தமிழனை பிடித்து ஆட்டியது என்பதையும் அதை எப்படி தமிழினம் போற்றியது என்பதையும் புறம் நமக்கு காட்டி நம்மையும் உணர்ச்சியின் எல்லைக்கே கொண்டுத் தள்ளிவிடும் இந்த புறநானூற்றுப் பாடல்களை நான் வாசிக்கும் போதே. இன்னும் சொன்னால் புல் தடுக்கிப் பயில்வான்கள் கூட வீறுகொண்டு எழுந்து வாள் கொண்டு போரிடத் தூண்டும் உணர்விற்கு ஆளாக்கும் அந்த பாடல்கள் கூறும் காட்சிகள்.

    முறத்தைக் கொண்டு பாயவந்தப் புலியை விரட்டி அடித்தாள் வீரமறத்தாய்  என்பதையும். புறமுதுகில் பட்டக் காயம் மார்பின் வழியே வந்துப் பாய்ந்தது என்பதை அறியாதத் தாய் தனது மகனுக்கு வீரப் பாலூட்டிய தனது முலைகளையே அறுத்து எறியத் துணிந்து பிறகு தெளிந்தக் காட்சிகள் எல்லாம் காணலாம்.

    சோழன் நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும் இரு சகோதரர்கள். இருவரிடையே போர் மூண்டது. அதை கண்ட கோவூர் கிழார் என்ற சான்றோர் இருவரையும் அமைதி பெற இப்படிப் பாடுகிறார்.

    நின்ன கண்ணியும் ஆர்மிடைந்தன்றே; நின்னொடு

    பொருவோன் கண்ணியம் ஆர்மிடைந் தன்றே

    ஒருவீர் தோற்பினும்: தோற்பது நும்குடியே  -(புறம் 45)

    அத்திமாலை தரித்த நீவீர் இருவரும் பொருதி யார் தோற்றாலும் அது சோழன் தோற்றான் என்பது தானே. விட்டு விடுங்கள் என்கிறார்.

    வாடுக, இறைவ! நின் கண்ணி ஒன்னார்

    நாடு சுடு கமழ புகை எரித்தலானே   -(புறம்-6)

    உனது தலையிலே நீ சூடிய வெற்றி வாகை மலர் உனது பகைவர் நாட்டை கொளுத்திய நெருப்பால் வாடுகிறதே. ஆக, இப்படி நெருப்பால் கொளுத்துவதும் தமிழனுக்குள் தமிழ் அடித்துக் கொள்வதும்.

    அட, அப்பவே அப்படித் தானா! 🙂

    மேலும், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை, காரிகிழார்  இப்படியும் பாடுவதாக குறிப்பர்.

    பணியியர் அத்தை, நின் குடையே -முனிவர்

    மக்கட் செல்வர் நகர் வலம் செயற்கே.

    நினது குடை, முனிவர் பெருமக்களுக்கும், சிவனுக்கும் அல்லாது வேறு யாருக்குப் பணியும் என்பதே. ஆக, புறநானூறில் பாடப் படுவதில் அறிஞர்கள் கூறுவது போல் தொண்ணூறு விழுக்காடு பெரும்பாலும் சகோதரப் போர்களைப் பற்றியதே இருக்கிறது.

    இதன் பயனாக, ஆக்கப் பூர்வமான சமுதாய வளர்சிக் குன்றி இருந்தது என்று நினைப்பதில் தவறு ஏது?

    இந்த அரசர்களுக்கு அறிவுரைகள் கூறுவோர் வெகு சிலராகவே இருந்திருக்கிறார்கள்.

    மதுரைக் காஞ்சியிலே அவைகள் காணக் கிடப்பதை கூறும் அறிஞர் பெருமக்கள்.

    அது ஓயாமல் போர் மூண்டு கொண்டிருக்கும் போது தலையானங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை விழித்துப் பாடப் பட்டமையைக் கூறுகிறது.

    கோதையின் புனைந்த சேக்கை துஞ்சி – (ம.கா. 713)

    முருகு இயன்றன்ன உருவினை ஆகி – (ம.கா. 724)

    பூத்த சுற்றமொடு இயன்ற உருவினை ஆகி- (ம.கா.770)

    மகிழ்ந்து இனிது உறைமதி பெரும!

    வரைந்து நீ பெற்ற நல ஊழியையே! – (ம.கா. 782)love

    உண்டும், உற்றவளோடு மகிழ்ந்தும் களித்து, சுற்றமொடு வாழ்வாய்  என்கிறார் அவர். நல் விதி நயந்த வாழ்க்கை என்பதை குறிப்பிடுகிறார்.

    ஆக, தமிழராக இருந்தாலும், தன்னாட்டையும், தம் மக்களையும் காக்க போரிடுவது வீரம். அது ஓர் சிறந்த அரசனின் கடமையும் கூட. பெரும்பாலும் அப்படி இல்லாமலும் வெத்துப் புகழுக்கும், நாட்டை பெரிதாக்கி பெருமைப் பட்டுக் கொள்ளவும் தமிழனுக்குள் தமிழனே அதிகம் அடித்துக் கொண்டார்கள் என்பது தெளிவு.

    இதில் பெரும் கொடுமை தோல்வி யடைந்த நாட்டையும் விளைச்சல் நிலத்தையும் கொளுத்துவது தான்.

    இப்படியாகிப் போன பண்டையத் தமிழனின் வாழ்வு பொருளாதார வீழ்ச்சிக்கே வித்திட்டிருக்குமே ஒழிய வேறென்ன.. வேறு பாதிப்புகள் என்ன என்பதை யூகித்தும் கொள்ளலாம்..

    புலவர்களில் வெகு சிலரே இடித்துரைத்து கூறி மன்னர்களின் போக்கை மாற்ற முயன்று இருக்கிறார்கள் என்பதும் உண்மையே என்பதை இலக்கியப் பேராசிரியர்களின் ஆய்வு நூல்களில் காணமுடிகிறது.

    தமிழுக்கு நோய்களானவை.

    சங்கத் தமிழர்கள் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் வளமுடன் வாழ்ந்திருந்தாலும்; அவர்களைச் சில நோய் கிருமிகள் தொற்றி இருந்ததை அறியாதும் இருந்தார்கள் என்பதை தமிழ்ப் பயின்ற சான்றோர் அறுதியிட்டு உரைப்பர்.

    அவைகளாவன… பரத்தமை, கள்ளுண் ணுதல், அரசியலில் சகிப்புத் தன்மை இன்மை, அன்புடைமை இன்மை… மனித அன்பு அகங்காரத்தால் மறைந்திருந்தமை என்றும் கூறலாம்.

    இப்படி தங்களுக்குள்ளே அடித்துக் கொண்டு ஒருவனை ஒருவன் வீழ்த்தியதால் என்ன மிஞ்சியது… திருடர்களாய் வந்தக் களப்பிரர்கள்; நாட்டில் புகுந்து கொள்ளை அடித்தார்கள். கிட்டத்தட்ட இரு நூற்றாண்டுகள், தமிழர் ஒன்று பட்டு எதிர்த்தாலும் அவர்களை அசைக்க முடியாமல் இருந்திருக்கிறது.

    அன்பின் வழியது உயிர்நிலை என்பார் வள்ளுவனார்.  அறிவின் வழியது அதன் உயர்நிலை என்பேன் நான். அதையே, சங்ககாலத் தமிழரின் வாழ்வியலைப் பற்றிக் குறிப்பிடும் போது; தமிழறிஞர் அ.ச. ஞானசம்பந்தன் அவர்கள் தனது கம்பன் – புதியபார்வை என்ற நூலில் தெளிவுறு நடையினில் குறிப்பிடுகிறார். அதனின் சாரத்தை நானும் இங்கே குறிப்பிடுகிறேன்.

    ‘மனிதன் அறிவு, உணர்வு என்ற இரண்டின் கூட்டால் ஆனவன்; விலங்கிலிருந்து மனிதனை வேறு படுத்துவது அவன் பெற்றுள்ள அறிவே; மனிதப் பண்பு என்று எடுத்துக் கொண்டால் அன்பு, அருள் என்பனவற்றின் மேல்தான் அது நிலைத்து நிற்கின்றது. அதை யாரும் மறுக்க முடியாது.

    அப்படிஎன்றால் அறிவின் பயன் என்ன? அவரே பதிலுரைக்கிறார். அன்பென்பது, தான் என்ற ஒன்றின் அடிப்படையில் பிறந்து, தனது குடும்பம் தன்னைச் சுற்றியுள்ளவர்கள், தனக்குத் தொடர்புடையவர்கள் என்பவரின் மாட்டு விரிந்து செல்வது. இது அன்பின் இயல்பு. ஆனால், அவ்வாறு செய்கையில் தனக்குத் தொடர்புடையார் செய்யும் தவறுகளை கண்டும் காணாமல் போகும் தன்மையைத் தானாக அது தருகிறது.

    ஆனால், அறிவுடன் கலந்த அன்பானால்; அத்தவறுகளை இடித்துக் கூறி அது அன்புடையாரையும் திருத்த முயற்சிக்கும்.

    ‘மெய்ப் பொருள் காண்பதறிவு‘

    ‘தீது ஒரீஇ நன்றின்பால், உய்ப்பது அறிவு‘.

    ஆக, இத்தகைய அறிவின் துணையை நாடாது, உணர்வை மட்டுமே கொண்டு ஒரு சமுதாயம் இயங்குமானால் அது முழுவாழ்வாகாது. அது சிறு காற்றிற்கும் தாக்குப் பிடிக்காது என்கிறார்.

    மேலும் கூறுவார், பழந்தமிழ் வாழ்க்கையை எடுத்துக் கூறுவது இந்த இலக்கியங்கள் தாம். எந்த ஒரு இனத்தின் வாழ்வு முறையை அறிய உதவும் கருவி அந்த இனம் படைத்த இலக்கியமே.. இலக்கணம் அறியாதவர்களின் வாழ்வு ஒருபுடை வளர்சியுடையது. அதே போல் இப்பழந் தமிழரின் வாழ்க்கையில் உணர்வு பெற்றிருந்த இடத்தில், ஒரு மிகச் சிறு பங்கைக் கூட அறிவுப் பெற்று இருந்ததா? என்ற கேள்விக்கான சரியான விடையை இன்று கூட கூற முடியவில்லை. இத்துணை சிறந்த நாகரிகம், அந்த நாகரிகத்தின் கொழுந்து போன்ற வெளிப்பாடு தான் அவர்கள் ஆக்கிய இலக்கியம் என்கிறார்.

    முத்தாய்ப்பாய் கூறுகிறார். அக வாழ்க்கையை அணுவணுவாய் ரசித்து ருசித்து இன்புற்று வாழ்ந்தத் தமிழன் இந்த அக, புற வாழ்க்கை இடையே ‘நான் யார் என் உள்ளம் யார்?’ என்ற வினாவை அவன் கேட்டதாகவோ, அவ வினாக்கட்களுக்கு அவன் விடைத் தேட முயன்றதாகவோ அறிய வாய்ப்பில்லை.

    இலக்கணம் வகுத்த தொல்காப்பியனார், புல், பூண்டில் தொடங்கி மனிதன் ஈறாக உயிர்களுள் ஒருத் தொடர்பு உண்டு என்று ஒருக் குறிப்பால் உணர்த்தினரே ஒழிய, இத்தமிழன் மனிதனாகப் பிறந்த தன்னைப் பற்றியும், தன பரந்த உலகம் பற்றியும், இதன் கண்ணுள்ள பிற உயிர்கள் பற்றியும், அதற்கும் தனக்கும் உள்ளத் தொடர்புகள் பற்றியும் எந்த வினாவையும் எழுப்பினதாக அதற்கு விடை காண முயன்றதாக அவன் இலக்கியத்தில் இருந்து அறிய முடியவில்லை.

    வடமொழியில் உபநிடதங்கள் தோன்றியக் காலத்தே சங்கப் பாடல்களும் தோன்றி இருக்க வேண்டும் அப்படி இருந்தும் அவற்றின் துணை கொண்டு மட்டும் ஆராயப் படவேண்டிய மேற்கூறிய வினாக்கள் எதையும் இவர்கள் எழுப்பியதாகக் கூறும் எந்த இலக்கியமும் இன்று இல்லை. தத்துவ ஆராய்ச்சியில் இவர்கள் ஈடுபட்டார்களா என்றும் தெரியவில்லை. அப்படி ஈடுபட்டிருந்து, ஏதேனும் நூல்கள் எழுதியிருந்தால் இன்று அவற்றில் ஓன்று கூட கிடைக்கவில்லை.

    வாகைத் திணை

    உணர்ச்சிக்கு அளவுமீறி இடங்கொடுத்து விட்டமையால் அறிவாராய்ச்சிக்கோ, தத்துவ விசாரணைக்கோ வாழ்வில் நேரம் கிடைக்கவில்லை என்றுத் தோன்றுகிறது. அன்றியும் தொல்காப்பியப் புறத்திணை இயல் 230 வரிகளில் அமைந்துள்ளது. புலனடக்கம் பற்றியும், துறவுப் பற்றியும், ஆசை நீக்கம் பற்றியும், அருளைப் பெருக்கி கொள்ள வேண்டிய இன்றியமையாமையை பற்றியும் மொத்தமாக நான்கே வரிகள் தாம் உள்ளன என்றால், அற்றைநாள் தமிழர் இவைப் பற்றி அதிகம் கவலைப் படவில்லை என்பது வெள்ளிடை மலையாகும்.

    இவ்வாறு கூறுவதால் புலனடக்கம், அருளுடைமை, துறவு என்பவற்றை மேற்கொண்டு வாழ்ந்த தமிழர்களே அந்நாளில் இல்லையென்று யாரும் நினைத்து விடக் கூடாது சிறிய அளவினரே தலைப் பட்டனர். அது வியப்புக்கு உரியதாக மற்றவர்களுக்குத் தோன்றி போற்றினர். ஆகவே தான், தொல்காப்பியம் இந்த நான்கையும் வாகைத் திணையினுள்  அடக்கிற்று போலும்.

    வாகை என்றால் வெற்றி, புலனடக்கம், தன்னலத்தைத் துறத்தல் என்பவை, தன்னையே வெற்றி கொள்வதாகும்… கொடிநிலை, கந்தழி, வள்ளி என்பவைப் பற்றித் தொல்காப்பியம் கூறுவதை அறிந்தாலும், அதன் பொருள் தெரியாததும்.. ஆன்ம விசாரணை இருந்ததா என்பதைப் பற்றி அறிய முடியாது என்று அருமையாக தெளிவுறக் கூறுகிறார்.’

    எனது முந்தையப் பதிவில் வந்த எனதுக் கவிதையின் கருவிற்கு உயிரூட்டிச் செல்கிறார் இந்தப் பெருந்தகை.

    உண்மையிலே சொல்கிறேன், எனதுக் கவிதையை எழுதும் போது;  இந்த கருத்தை நான் படித்திருக்க வில்லை. எனது கவிதை நான் இதுவரை வாசித்த சில நூல்களின் வாயில் பெற்ற அறிவின் மூலமாக எழுந்ததே. வேதாந்த கருத்துக்கள், அனுபூதிகளின் மெய்யுணர்வு விளக்கங்கள் என்று சிலவைகளும், மகாகவி பாரதியின் பாடல்களும் எனக்கு கொடுத்த முடிபே அது. அது சங்கத் தமிழில் காணவில்லை என்பதையும் அறிந்திருந்தேன்.

    திருவாளர் சச்சிதானத்தம் ஐயா அவர்களின் பின்னூட்டத்தை வாசித்து எனக்குள் ஒரு சிறு பயம் கலந்த நெருடல் வந்தது… இன்னும் பெரிதும் ஆய்ந்து நோக்காமல்; அறிவினை உபயோகிக்காது உணர்ச்சி வசப் பட்டு எழுதி இருக்கிறேனோ என்று…. சற்று நேரத்தில் அந்த மன வருத்தம் என்னை விட்டு போக இந்த அறிஞர் ஆய்வுக் கருத்துகள் உதவின. எதேச்சையாக வீட்டில் இருந்த அந்த நூலில் இருக்கும் கருத்தைக் கண்டு மன நிம்மதியுற்றேன் அதை உடனே இங்கு பகிர்ந்துக் கொள்வது கடமையென உணர்ந்து எழுதுகிறேன்.

    முதுபெரும் தமிழ்அறிஞர் அ.ச. ஞானசம்பந்தன் அவர்களுக்கு நமது நன்றிகள் உரியதாகட்டும்.

    இங்கே மீண்டும் எனது கருத்துகளை ஓரிரு வரிகளில் கூறிக் கொள்கிறேன். ஒருவரிடமே இறைவன் அனைத்தையும் தந்துவிடுவதில்லை என்பது தான் பேருண்மை. மேலைநாட்டாரை விஞ்ஞானத்திற்கும் உலக மதங்கள் எல்லாம் தோன்றுவிக்க கீழைநாட்டாரை மெஞ்ஞானத்திற்கும் படைத்து போன்றும்.

    சற்று ஆழ்ந்து யோசித்தால் ஓர் உண்மை விளங்கும்.

    தமிழ் மொழியில் தமிழர் வாழ்வின் விழுமியப் பொருள்கள் என்பன இகலோகம் என்னும் இந்த புவியும் புவிசார்ந்த இயற்கையோடு வாழும் நெறிமுறைகளை; தமிழன் மாத்திரம் அல்ல மனிதனுக்கே உரியதாக; யாவரும் பின்பற்ற தக்கவாறு உயரியதாகச்  செய்திருப்பதைக் காணலாம்.

    அதைப் போன்று… சமஸ்கிருதம் என்னும் வேதங்கள் பூத்த மொழி, தனிப்பட்ட யாரும் ஏகபோக உரிமை கொண்டாட முடியாதது போலும்… பாரத பெருங்கண்ட மக்களாகிய மூதாதையர் தொடங்கி உலகமெல்லாம் பரவி இருக்கும் அனைத்து பாரதக் குழந்தைகளுக்கும் உரிமையானதும்; அதே நேரம் அது மனித குலத்துக்காக இறைவனால் உண்டாக்கப் பட்டது என்பதும் தெளிவு.

    மனித வாழ்வியல் முறையை அறம் பொருள் இன்பம் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு  தமிழரின் வாழ்விலக்கணம் உலக மானுடத்திற்கே காப்பியனாரால் தரப் பட்டுள்ளது.

    அதைப் போல அடுத்த படியான நிலையாமையை குறித்தும் வீடுபேறு என்பதை நோக்கியும் பயணிக்க வேண்டும் என்பதை மட்டும் கூறி நம்மை காப்பியனார் தமிழின் இரட்டைப் பிறவியான வடமொழியினை நோக்கிச் செலுத்துவதாகவே நான் உணர்கிறேன்.

    அதைத் தான் சங்க இலக்கியக் காலத்திற்குப் பின்பு வந்த வள்ளுவனாரும்… இளங்கோவும், கம்பனும் நமக்கு தங்களது காப்பியங்களின் வழியே பாதை அமைக்கிறார்கள் என்பது நடுநிலைமையுடன் உணர்ச்சிக்கு மாத்திரம் இடம் தராத அறிவுடையோர் யாவரும் ஏற்பர்.

    அதோடு, அதற்கு பின்பு தோன்றிய  நாயன்மார்கள், ஆழ்வார்கள் என்று நீளும் வரிசை… இந்த தமிழ் மகான்களின் ஆக்கங்கள் யாவும் தம்ழுக்கு சிறப்பு சேர்த்தாலும்; அதன் உள்ளே இருக்கும் ஒளி , இயக்கம் அது வேதங்கள் கூறும் கருத்துக்கள் என்பதை யாரும் மறுக்க இயலாது. அப்படி மறுத்தால் அது வெறும் விகண்டவாதமேத் தவிர அறிவுடைமை ஆகாது என்பது எனது கருத்து.

    ‘அறிவினிலுயரிய தமிழும் வடமொழியும் சேர்ந்துப்

    பயின்றவர் இவ்வுலகில் ஒளிபெற்று நிரந்தரமானார்

    இவ்வறிவினை ஏற்றிடில் கலியும்மாலுமே!’

    இந்த வரிகள் தாம் யான் குறிப்பிடும் வள்ளுவனும், இளங்கோவும், கம்பனும், நாயன்மார்களும், ஆழ்வார்களும் ஒளிபெற்ற இறவாப் புகழ் பெற்ற ஆக்கங்களை தமிழுக்கு அளித்தனர். அவர்கள் ஆக்கங்கள் இன்னமும் ஒளிர்கின்றன. அப்படி பார்க்கையில் அவர்கள் ஒளிபெற்று நிரந்தரமானாவர்கள் என்னும் உண்மை நன்கு விளங்கும். இன்னும் சொன்னால் ஒளி பெற்றவர்களாலே இப்படி அழியாப் புகழுடைய காவியங்களைப் படைக்கவும் முடியும்.

    ஆயிரமாண்டுகளாய் ஓங்கி உயர்ந்த தமிழரின் வாழ்வு தடமாறிப் போவதைத் தடுக்கவே தெய்வப் புலவர் அவதரித்தார் எனலாம்…. அதன் பின்னே அடியார் படைகள் அணிவகுத்தனவே… ஆழ்வார்களும், நாயன்மார்களும் பக்தியில் திளைத்தாலும் ஒளிபெற்றது இறைவனின் அருளால் என்றாலும், நச்சினார்கினியர் கூறுவது போன்று ‘புலனடக்கத்தோடு கூடிய காட்சி’ என்பதை மறுப்பதற்கில்லை.

    இந்த மகான்கள் எல்லாம் தமிழில் இறவாப் புகழ் உடைய அமரகவிகளை படைத்ததே அந்த ஒளியினில் திளைத்துக் கொண்டிருக்கையிலே தான் என்பதையும் அவைகள் வாசிக்கையில் புரிந்து கொள்ள முடிகிறது.

    மெஞ்ஞானியாகட்டும், விஞ்ஞானியாகட்டும் இருவரும் தனது மனதின் ஆழ்நிலையில் அகக் கண்ணால் தான் யுகங்களுக்கும் நிலை பெற்ற சாதனைகளைச் செய்ய முடியும் என்பதை ஏற்கத்தான் வேண்டும்.

    அப்படிப் பார்க்கையிலே பன்மொழித் திறனாளர், வடமொழியில் பெரும் புலமைக் கொண்ட பேரறிஞர் காப்பியனார் எழுதிய இலக்கணம் ஆதிமுதல் இன்றுவரை அல்ல இன்னும் இந்த உலகம் இருக்கும் வரை மாறுதல் என்பதையே காணாத ஒருப் பொக்கிசமாக விளங்கும். அந்த ஒளி  பொருந்திய மகான் மேற்கூறியோருக்கு எல்லாம் மூத்தோரே.

    எட்டயபுரக் குயில் அது என்ன கூவியது.

    பாரதி நாம் ஒவ்வொருவரும் அமர நிலை பெறவேண்டும் அதற்கு முயல வேண்டும், தியானம் பயில வேண்டும் ஒளி பெறவேண்டும்; அதை இந்த உலகிற்கு நாமே சொல்லியும் கொடுக்கவேண்டும்; அப்படி உலகில் உள்ளவர்கள் யாவரும் அமர நிலைப் பெறுவார்களாயின் இந்தக் கொடும் கலி வீழும். என்பது, பாரதி நமக்குச் சொல்லிச் சென்றுள்ளான்….

    இவைகள் எல்லாம் உபநிடதங்கள் வழியே; தமிழ் மொழி பெரிதும் பெற்று இருக்கிறது. அதைத் தமிழர் கைக்கொள்ளவேண்டும் என்பதே தெய்வப் புலவர் தொடங்கியோர் கூறியது. அதைச் செய்வோம்.. அதோடு அந்த உபநிடதங்கள் படைக்கப்பட்ட மொழியும் நமக்கும் சொந்தம் அது நமது தந்தையர் மொழி என்னும் உரிமையையும் உறுதி செய்வோம்.

    சரி, வாழ்வாங்கு வாழவும், வீடுபேறு பெறவும் வழி கூறிச் சென்றத் தமிழனின் தொடர்ச்சியில் மேற்கூறிய அத்தனையையும்; தானும் பயின்று அதையே நமக்கும் பகன்று; இன்னும் இந்த உலகும் வாழ்வாங்கு வாழ என்ன செய்ய வேண்டும்; என்பதை எட்டயபுரத் தமிழன் அந்த மகாகவி பாரதி அத்துனை அழகாகச் சொல்லிச் சென்றுள்ளான்.

    பாரதியின் புதியதோர் வேண்டுகோள்

    கடைசியாக மகாகவி பாரதி இன்னும் ஒரு புதிய வேண்டுகோளையும் வைக்கிறான்.

    “புத்தம் புதிய கலைகள் – பஞ்ச”

    பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;

    மெத்த வளருது மேற்கே – அந்த

    மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை

    பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

    தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;

    இறவாப் புகழுடைய புதுநூல்கள்

    தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்

    ————————————————-

    சென் றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்

    செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

    அவனது வேண்டுகோளை அனைவரும் ஏற்போம். நம்மால் இயன்றதை இந்த அமரத்தன்மை வாய்ந்த தமிழுக்குச் செய்வோம்.

    தெய்வ நம்பிக்கையும், மறுபிறவிக் கொள்கையும் இருக்குமானால் இது போன்ற மாச்சரியங்கள் வரவேக் கூடாது.

    யார் கண்டார் முற்பிறவியிலே நாம் எதை அந்நிய மொழி என்றும் அந்நிய சமூகம் என்றும்  நினைத்து வெறுப்புறு கிறோமோ, ஒதுக்குகிறோமோ அந்த மொழிக்கும், அந்த சமூகத்திற்கும் அயராது பாடுபட்டு இந்நிலைக்கு நாமும் அதை உயர்த்தியும் இருக்கலாம்.

    இனமொழிப் பேதமில்லைத் தூயறிவினிற்கே – நற் 

    குணமும் குற்றமும் உணர்த்தும் கல்விநமக்கே

    ‘மனமிருந்தால் மார்க்கமுண்டே’ மண்ணில் வாழ்வோருக்கே

    மனமாச்சரியமொழிப்போம் மனிதநேயம் காப்பதற்கே!

     

    ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’

    நன்றி!

    எனது உயர்நிலைப் பள்ளித் தமிழாசான் திருவாளர். கரு. சண்முகம் அவர்கள்.

    எனது மேல்நிலைப் பள்ளி தமிழாசான் திருவாளர். புதுகை கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.

    பாரதியார் கவிதைகள். (நியூ செஞ்சுரி புக் கவுஸ்)

    தமிழறிஞர். அ .ச. ஞானசம்பந்தன் அவர்கள் (கம்பன்- புதியபார்வை)

    தமிழிலக்கிய முதுகலைப் பாடப் புத்தகம் (அண்ணாமலை பல்கலைக் கழகம்)

    மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார். (தொல்காப்பியக் கடல்)

    http://www.projectmadurai.org/pmworks.html

    http://www.google.com

     

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் (3) – பெர்காமோன் அருங்காட்சியகம் பெர்லின், ஜெர்மனி

    சுபாஷிணி ட்ரெம்மல்

    அருங்காட்சியகம் : பெர்காமோன் அருங்காட்சியகம்
    நகரம் : பெர்லின்
    நாடு :ஜெர்மனி
    தொடங்கப்பட்ட ஆண்டு :1930
    சிறப்புகள் : தொல்லியல் ஆய்வுகள் – பெர்காமோன் கோயில், இஸ்லாமிய கலைப்பொருட்கள், இஸ்தார் மண்டபக் கதவு, 5000 ஆண்டுகள் பழம் நகரம் ஊருக்.

    பெர்காமொன் அருங்காட்சியகம் (ஆகஸ்ட் 2013)
    பெர்காமொன் அருங்காட்சியகம் (ஆகஸ்ட் 2013)

     

    இன்றைய துருக்கியின் மேற்குக் கடற்கரை நகரமான பெர்காமும் (துருக்கிய மொழி) நகர் இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பழமையான பேகன் வழிபாட்டு மையமாகத் திகழ்ந்தது. பல ஆண்டுகளின் தொடர்ச்சியான போர், அரசாட்சி மாற்றம், சித்தாந்த மாற்றம், இயற்கை அழிவுகள் இவைகளால் பாதிக்கப்பட்ட இந்த நகரத்தின் எஞ்சிய சான்றுகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனை அப்பகுதி மக்களுக்கோ துருக்கியின் அப்போதைய அரசாங்கத்துக்கோ எழவில்லை. உடைந்து சிதைந்து கிடந்த பெருந்தூண்கள், கோயிற்சுவர்கள், சிலைகளைத் தங்கள் சுய தேவைக்காக மேலும் சிதைத்துவிட்டிருந்தனர் அப்பகுதி மக்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சீறும் சிறப்பும் பெற்று விளங்கிய இந்நகர் 19ம் நூற்றாண்டிலோ அடையாளம் தெரியாமல் சுவடிழந்து மறைந்திருந்த நேரம் அது. 1864ம் ஆண்டு இப்பகுதிக்குத் தொழில் நிமித்தம் வந்திருந்த ஒரு ஜெர்மானிய பொறியியலாளர் கார்ல் ஹூமன் இந்தச் சிதைந்து கிடைந்த நகரின் எச்சங்களைக் கண்டு அதிர்ச்சியுற்றார். விலைமதிப்பற்ற இந்தக் கோயில் மண்டபங்களையும் சிற்பங்களையும் கண்டு அவர் இதனை ஏதாகினும் வகையில் பாதுகாக்க வேண்டும் என்று மனதில் தீர்மானம் செய்து கொண்டார்.

    ஜெர்மனியிலும் அன்றைய துருக்கியிலும் முறையான அனுமதி பெற்று இந்நகரின் அகழ்வாராய்ச்சிப் பணியில் இறங்கினார். 1878ம் ஆண்டில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடங்கின. அவரது முயற்சி வீண் போகவில்லை. அவருக்குக் கிடைத்ததோ விலைமதிக்க முடியாத ஒரு பரிசு. பண்டைய கிரேக்க தெய்வம் ஸியூஸ் (Zeuz) க்காக எழுப்பப்பட்ட கோயில் முழுமையாக இவ்வாய்வில் அகழ்ந்தெடுக்கப்பட்டது!

    1886 வரை இந்த அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. அன்றைய துருக்கி அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டதன் அடிப்படையில் அகழ்ந்து எடுக்கப்பட்ட இக்கோயில் முழுமையாக ஜெர்மனியின் பெர்லின் நகருக்குக் கொண்டு வரப்பட்டது. உலக அகழ்வாராய்ச்சி வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற ஒரு அகழ்வாராய்ச்சியாக இது இன்றளவும் திகழ்கின்றது.

    1878ல் கார்ல் ஹுமனின் குழு அகழ்வாராய்ச்சிப் பணியில்.
    1878ல் கார்ல் ஹுமனின் குழு அகழ்வாராய்ச்சிப் பணியில்.

    ஸியூஸ் கடவுளுக்காகக் கட்டப்பட்ட இக்கோயில் இன்று வரை பழம் நகரான பெர்காமோன் நகரிலேயே இருந்திருந்தால் என்ன நிலைக்கு உள்ளாகியிருக்குமோ எவரும் அறிகிலர். தொல்லியல் ஆராய்ச்சியினாலும் ஒரு தனி மனித முயற்சியாலும் இக்கோயில் முழுமையாகக் காப்பாற்றப்பட்டு இன்று ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் உள்ள பெர்காமோன் அருங்காட்சியகத்தில், உலக மக்கள் அனைவரும் வந்து பார்த்து மகிழும் சந்தர்ப்பத்தை அளித்திருக்கிறது.

    பெர்காமோன் கோயில் ஜெர்மனிக்குக் கொண்டு வரப்பட்ட சமயம் முதலில் `போட` அருங்காட்சியகத்தில் (Bode Museum) தான் வைக்கப்பட்டது. ஆனால் இந்த அருங்காட்சியகம் இக்கோயிலின் சிறப்பை முழுமையாக வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கவில்லை. இதனை மனதிற்கொண்டு புதிய அருங்காட்சியகம் ஒன்று அமைக்க வேண்டியதன் அவசியம் உருவாகியது. அந்தச் சிந்தனையின் அடிப்படையில் தோன்றியதே இன்றிருக்கும் பெர்காமோன் அருங்காட்சியகம். 1910 முதல் 1930 வரை இப்புதிய கட்டிடப் பணிகள் நடைபெற்றன.

    முதலாம் உலகப் போரின்போது ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சனைகளையும் சமாளித்து இந்த அருங்காட்சியகப் பணிகள் தொடர்ந்தன. இருபது ஆண்டுகால உழைப்பில் இந்த அருங்காட்சியகம் 1930ம் ஆண்டு பொதுமக்கள் பார்வைக்ககாகத் திறக்கப்பட்டது. 1933ம் ஆண்டு ஹிட்லரின் நாஸி கட்சி வெற்றி பெற்று அடோல்வ் ஹிட்லர் பெர்லினைத் தலைமையகமாகக் கொண்டு ஆட்சி புரிந்த காலத்தில் பெர்கமோன் அருங்காட்சியகம் பெர்லினின் முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது. பெர்கமோன் அருங்காட்சியகத்தில் உள்ள ஸீயூஸ் கடவுளுக்கான பெர்கமோன் கோயில் கட்டிடத்தின் தூண்களின் வடிவிலே ஆழ்ந்த விருப்பம் கொண்டிருந்த ஹிட்லர் இதே அமைப்பில் தனது தலைமையகத்தைக் கட்டினார். அந்த மண்டபம் இன்று இல்லை. ஆனால் பெர்காமோன் கோயிலோ இரண்டாம் உலகப்போரினால் ஏற்பட்ட பெரும் சேதத்தையும் தாங்கிக் கொண்டு அதிலிருந்து மீண்டு இன்றளவும் பெர்லின் நகரில் அழியாது இருக்கிறது.

    பெர்காமோன் அருங்காட்சியகத்தினுள்ளே வீற்றிருக்கும் ஸியூஸ் கடவுளுக்கான அக்ரோபோலிஸ் : அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட முழு கோயில் (ஆகஸ்ட் 2013)
    பெர்காமோன் அருங்காட்சியகத்தினுள்ளே வீற்றிருக்கும் ஸியூஸ் கடவுளுக்கான அக்ரோபோலிஸ் : அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட முழு கோயில் (ஆகஸ்ட் 2013)

    பெர்கமோன் கோயிலை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இந்த அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப்பெற்ற பொருட்கள் மட்டுமே இங்கு சேகரிக்கப்பட்டுள்ளதாக எண்ணி விட வேண்டாம். இங்கே குறிப்பிடத்தக்க ஜெர்மானிய அகழ்வாராய்ச்சி வல்லுனர்கள் பலர் பண்டைய ஈராக், ஈரான், பாபிலோன், ஊருக், அசூர்,ஆகிய இடங்களில் வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்த்திய அகழ்வாராய்ச்சிகளில் கண்டெடுக்கப்பட்ட பிரம்மாண்டமான வரலாற்றுச் சான்றுகள் பல நிறைந்திருக்கின்றன.

    இந்த அருங்காட்சியகத்திற்கு நான் இருமுறை சென்று வந்திருக்கிறேன். 2010ம் ஆண்டில் ஒரு முறையும் இவ்வாண்டில் சில வாரங்களுக்கு முன்னரும் இங்கு செல்லும் வாய்ப்பு எனக்கு அமைந்தது.

    பண்டைய பாபிலோனின் இஸ்டார் கதவு (Ishtar Gate), ஊருக் நகரம், சுமேரிய அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புகள் ஆகியவை பெர்காமோன் கோயிலைப் போன்றே இந்த அருங்காட்சியகத்திற்குச் சிறப்பு சேர்க்கும் ஏனைய விலைமதிக்க முடியாத கண்டுபிடிப்புகளாகத் திகழ்கின்றன. இந்த அருங்காட்சியகத்தின் ஒரு தனிச்சிறப்புப் பகுதியாக இஸ்லாமிய கலைப்பொருட்களின் நிரந்தரக் கண்காட்சியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனைப் பற்றி ஒரு தனிப் பதிவு ஒன்று தேவை என நான் கருதுவதால் விரிவாக பின்னர் ஒரு பதிவில் எழுத நினைத்திருக்கிறேன். அதே போல பெர்காமோன் கோயிலின் முக்கியத்துவத்தை நினைத்து இதற்காக ஒன்று அல்லது இரண்டு தனிப்பதிவுகளை வழங்க நினைத்திருக்கிறேன். இவற்றை எழுதுவதற்கு முன்னராக இந்த அருங்காட்சியகத்தில் இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் நான் சென்றிருந்த வேளையில் அங்கு சிறப்புக் கண்காட்சியாக ஏற்பாடாகியிருந்த 5000 ஆண்டு பழமை வாய்ந்த ஊருக் நகரத்திற்கு உங்களை பெர்காமான் அருங்காட்சியகத்தின் வழியாக அழைத்துச் செல்கிறேன். உடன் வரத் தயார் தானே?

    தொடரும்….!

    சுபா

    Share
  • 2012 – 2013 ஆண்டிற்கான சிறுகதைப் போட்டி முடிவுகள்

    அன்பு நண்பர்களே,

    வணக்கம். கடந்த ஓராண்டு காலமாக பல சிறுகதைகள், மிக வித்தியாசமான கதைக் களங்களுடன், தேர்ந்த எழுத்தாளர்களின் சிறப்பான நடையுடன், எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற இடைவிடாத முயற்சியில் தன்னை மென்மேலும் பட்டை தீட்டிக்கொண்டு களம் இறங்கியவர்களின் அருமையான படைப்புகள் வாசகர்களாகிய நம் அனைவருக்கும் பெருவிருந்தாக அமைந்தது. ஓராண்டு முடிந்து விட்டது என்று நினைத்துப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. மாதா மாதம் தவறாமல் குறிப்பிட்ட நேரத்தில், தம் இடைவிடாத பணிகளுக்கிடையேயும், காலந்தவறாமல் தம் தீர்ப்பை வழங்கி வந்தார் ஐயா வெங்கட் சாமிநாதன் அவர்கள். அவர்களின் கடமையுணர்ச்சியைப் பார்த்து பல முறை வியந்திருக்கிறேன் நான். அவருக்கே உரிய தனிப்பட்ட பாணியில் விமர்சனங்கள் சுவை கூட்டின. அதன் மூலம் தங்களை  மேலும் செம்மையாக்கிக் கொள்ள எழுத்தாளர்களுக்கு வாய்ப்பாக அமைந்தது. அந்த வகையில் உயர்திரு வெங்கட் சாமிநாதன் ஐயா அவர்களுக்கு நம்முடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுவோம். ஐக்கியா நிறுவனத்தின் உரிமையாளர், எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர், திரு வையவன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதையை எழுதியவருக்கு தாம் அறிவித்திருந்தபடி பரிசுத் தொகையை அனுப்பியிருந்தார். அவருடைய முழுமையான ஒத்துழைப்பு நமக்கு பெரிய பலமாக அமைந்திருந்தது. மேலும் தொடர்ந்து சில போட்டிகள் ஐக்கியா தொண்டு நிறுவனம் மூலமாக விரைவில் அறிவிக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

    போட்டி ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெற்ற இத்தருணத்தில் இறுதிக்கட்ட திறனாய்வை மேற்கொள்ள பிரபல எழுத்தாளர் திரு நாஞ்சில்நாடன் அவர்கள் மனமுவந்து இசைந்துள்ளார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் அனைத்திற்கும் அற்புதமாக மதிப்புரை வழங்கி சிறப்பித்திருக்கிறார்கள். அவருக்கும் நம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    IMG_7849

    போட்டியில் வெற்றிபெற்ற திரு பழமைபேசி அவர்களுக்கு நம் மனம் நிறைந்த வாழ்த்துகள். பங்கு பெற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும் பாராட்டுகள். தொடர்ந்து நம் வல்லமையுடன் இணைந்திருங்கள் . புதுமையான பல போட்டிகளைச் சந்திக்கக் காத்திருங்கள் நண்பர்களே!

    அன்புடன்

    பவள சங்கரி

    ஆசிரியர்

    நாஞ்சில் நாடன்

    nanjilஆகஸ்ட் 2013-ல் சென்னை கம்பன் விழாவில், பெரியவர் இலக்கியச் சிந்தனை ப. இலட்சுமணன் அவர்களிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது, கவலை தொனிக்கும் குரலில் குறிப்பிட்டார் – தமிழில் நாவல் வரத்து அருகி, சிறுகதை எழுத்து குறைந்து போய்விட்டது என. எனக்கும் அந்தக் கருத்தே தான். காரணம் கேட்டு வாடி என ஒற்றை வரியில் நாம் தட்டிக் கழித்து விட இயலாது. படைப்பாற்றல் குறைந்து போனதா, எழுத்து ஊக்கம் தளர்ந்து வருகிறதா, வாழ்க்கை பற்றிய பார்வையும், அனுபவமும் இல்லாமல் ஆகிவிட்டதா? முயற்சி இனமையா, மொழி வசப்படவில்லையா, உழைக்கத் தயாரில்லையா, என்ன எழுதி என்ன ஆகப்போகிறது எனும் சலிப்பா, இவை எல்லாமுமேயா, அல்லது இவற்றுக்கும் வெளியேயும் வேறுள காரணங்களா?

    மாய்ந்து, மாய்ந்து எழுதத் தேவையற்று, எளிதான கணினி தட்டச்சு வந்துவிட்டது. முன்னைப்போல வெளியீட்டு சிரமங்கள் இல்லை. தாளிதழ்கள் இல்லை என்றாலும் மின்னிதழ்கள் பல உள. எதிர்காலத்தில் அரசு நூலக ஆணைகளை நம்பி, புத்தகம் எழுதவும், வெளியிடவும் இயலாது. எந்தக் காலத்திலும் அது எழுத்தாளன் கவலையாக இருந்தது இல்லை. அவனைப் பொறுத்தவரை, விற்றாலும் காப்பீடு இல்லை, விற்காவிட்டாலும் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் வாசகனை , ஒற்றைப் பிரதி விற்பனையை நம்பித்தான் படைப்பாளியும் வெளியீட்டாளர்களும் இயங்க வேண்டியது இருக்கும்.

    பேரம் இல்லாதிருந்த அல்லது சின்ன ஊழலுடன் இருந்த அரசு நூலகத் துறை இன்று நூலகங்களுக்கு புத்தகம் வாங்கினாலும், தமது பை நிறையும் என்று கண்டுகொண்டது. வெளியே உரத்து, சமத்துவம், சகோதரத்துவம், சமூக விடுதலை என்று பேசுகிறவர்களும், தமது நிறுவனங்களுக்கான ஆணைகள் பெற அனைத்து குறுக்கு வழிகளையும் அரசியல் செல்வாக்கையும் கட்சி அனுகூலங்களையும் பயன்படுத்திக்கொள்கிறார்கள். காரசாரமாகக் கட்டுரைகளும், தலையங்கங்களும் எழுதுகிறவர்களும் இதனை நோகாமல், கூசாமல் செய்கிறார்கள்.

    அது கிடக்க…….

    ‘இலக்கிய சிந்தனை’ அரை நூற்றாண்டுக்கும் மேலாக மாதம் தோறும், ஆண்டு தோறும் நல்ல சிறுகதைகளைத் தெரிந்து, பரிசளித்து ஊக்கப்படுத்தி வரும் அமைப்பு. அவர்களது நடுவர்களின் தெரிவுகளில், பல சமயம் தீவிர, நவீன படைப்பாளிகளுக்கு விமர்சனம் உண்டு என்றாலும் பணி போற்றுதலுக்கு உரியதுதான். அதில் எனக்கு இரண்டாம் கருத்து இல்லை. திரு ப.இலட்சுமணன் அவர்களுடைய கவலை மெய்யானது.

    குறிப்பிட்டுச் சொல்லும்படியான தமிழ்ச் சிறுகதையாளர்கள் பலரும் இன்று நாற்பது அகவை கடந்தவர்கள். இளம் படைப்பாளிகள் என்று முப்பத்தைந்து வயதுக்கு உட்பட்டவர்கள் சிலரை மட்டுமே நம்மால் குறிப்பிட முடிகிறது. சாகித்ய அகாதமிக்கு வேண்டுமானால் நூற்றுக்கணக்கில் கிடைப்பார்கள். அவர்கள் தர மதிப்பீடு இலக்கியம் மட்டுமே அல்ல. ஈழத்துப் படைப்பாளிகள் பலர் இன்னும் தீவிரத்துடன் இயங்கி வருகிறார்கள். அவர்களது அனுபவக் களம் இணைய தளத்தில் புகைப்பட திரைப்படக் காட்சிகளில், புத்தகங்களில் வாசித்த அனுபவங்கள் அல்ல. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின், அகதி வாழ்க்கையின் சொந்த வலிகள். சமீபத்தில் ‘சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்’ என்று இளங்கோ எனும் ஈழத்தமிழ் இளைஞரின் சிறுகதைத் தொகுப்பு ஒன்று வாசித்தபோது எனக்கது மீண்டும் உறுதியானது. இது ஒரு பானைச் சோற்றில் ஒரு சோறு.

    ‘உயிர் எழுத்து’ போன்ற சில இதழ்கள் தவிர்த்து, மற்றெவரும் ஒன்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளை ஒரு இதழில் வெளியிடுவதில்லை. அவற்றுள்ளும் சில குறிப்பிட்ட எழுத்தாளர்களுக்கே பொட்டுக் கட்டிக் கொண்டுள்ளன. இந்தச் சூழலில், இணையதள இதழ்களில் நடக்கும் சிறுகதை முயற்சிகள் உற்சாகமூட்டுகின்றன.

    ‘ஐக்கியா & வல்லமை.காம்’ நடத்திய சிறுகதைப் போட்டிக்கு வந்த 2012 ஆகஸ்ட் முதல் 2013 ஜூலை வரையில் எழுதப்பட்ட, எட்டு எழுத்தாளர்களின் பதினேழு சிறுகதைகளை வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இவை அனைத்தும் மதிப்புறு திறனாய்வாளர், திரு. வெங்கட் சாமிநாதன் தெரிவு செய்தவை. எனக்குக் கிடைத்த நம்பிக்கை, தமிழ்ச் சிறுகதை கவலைக்கிடமான நிலையில் இல்லை என்பது.

    கவனமாக வாசிக்கும்போது, கதை கூறலின் பாணி சுதந்திரம் பெற்று காணப்படுகிறது என்பதும், வழக்கமான கதை கூறல் உத்தியில் இருந்து வெகுவாக விலகி, கதைகள் யோசிக்கவும் எழுதவும்படுகின்றன என்பதும் ஆறுதலான விடயங்கள். வெ.சா. தெரிவு செய்தபின் மறுபடியும் அவற்றில் என்ன தெரிவு செய்வது என்று எனக்குத் தோன்றியது. எல்லாக் கதைகளுமே பண்பட்ட எழுத்து. காலம் அவர்களுக்கான கவனிப்பையும் இடத்தையும் பெற்றுத் தரும். மேலும் இந்த எட்டு படைப்பாளிகளுமே எனக்கு முற்றிலும் புது முகங்கள்.

    பழமைபேசியின், ‘செவ்வந்தி’, பார்வதி இராமச்சந்திரனின், ‘நம்மில் ஒருவர்’, ஜெயஸ்ரீ சங்கரனின், ‘நாலடிக் கோபுரங்கள்’ எனும் கதைகள் நல்ல கதைகள் என்றபோதும், வாசகன் பழகிய தடத்திலேயே பயணம் செய்கின்றன. சுதாகரின், ‘காட்சிப் பிழை’ வேறுபட்டதோர் மனநிலையை நுட்பமாகச் சொல்கிறது. அரவிந்த் சச்சிதானந்தத்தின், ‘கைக்குட்டைகளும் டிரான்ஸ்வெஸ்டிசமும்’ நல்ல முயற்சி. ஆனால் சற்று கூர்மையும், தீவிரமும் குவியப் பெற்றிருக்கலாம். தேமொழியின், ‘ஜினா என்றொரு க்ருயல்லா’ சுறுசுறுப்பான வாசிப்பைத் தருகிறது. ஆங்கில வாசிப்புப் பழக்கம் உடையவருக்குப் புதுமை தராதது.

    மணி ராமலிங்கத்தின் ‘நோ- பால்’ படைப்பு நேர்த்தியும், தேர்ச்சியும் கொண்ட எழுத்து. மாதவன் இளங்கோவின், ‘அம்மாவின் தேன்குழல்’ நல்ல கதை. தாய் மனத்தின் ஆழமன நீரோட்டம். பேசுவது மற்றொரு சிறந்த கதை. பழமைபேசியின், ‘மணவாளன்’ இந்தக் கதையின் பிற்பகுதி, கவிதையின் ஆழம் கொண்டது. வரலாற்றில் கவித்துவம் உடைய சிறுகதைகளே நின்று வாழ்கின்றன.

    எனக்குத் தரப்பட்ட இந்தப் பதினேழு கதைகளில், சிறந்த மூன்று என வரிசைப்படுத்தச் சொன்னால்,

    1.மணவாளன் – பழமைபேசி
    2. நோ-பால் – மணி ராமலிங்கம்
    3. அம்மாவின் தேன்குழல் – மாதவன் இளங்கோ

    என்பதாக இருக்கும் அது. என்னை ஒத்த இன்னொருவர் இந்த வரிசையை மாற்றவும் கூடும். அது அவ்வளவு முக்கியம் இல்லை. தமிழில் நல்ல சிறுகதைகள் இன்னும் எழுதப்படுகின்றன எனும் மகிழ்ச்சியே போதுமானது.
    ஏனெனில் முதல், இரண்டு, மூன்று எனும் வரிசை வெறும் சடங்குதான். ஓட்டப் பந்தயம் என்று எடுத்துக் கொண்டாலும், அந்தக் குறிப்பிட்ட நாளில், அந்த மைதானத்தில், அந்தக் கணத்தில், அந்தத் தட்ப வெப்பத்தில் அவர் முதலாவதாக வந்தார் என்று சொல்வதே சரியானதாக இருக்கும்.

    எட்டுச் சிறுகதை ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துகள். ஐக்கியா & வல்லமை.காம் நிறுவனங்களுக்கும் எனது நன்றியும், பாராட்டும். இத்தொகுப்பில் கண்ட எட்டுச் சிறுகதை ஆசிரியர்களின் தனித்தனித் தொகுப்புகளுக்காகக் காத்திருப்போம்.

    மிக்க அன்புடன்

    நாஞ்சில் நாடன்

    கோவை – 641028

     30 – ஆகஸ்ட் – 2013

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் (2) – பெர்லின், ஜெர்மனி

    சுபாஷிணி ட்ரெம்மல்

    ஜெர்மனியில் எனது கடந்த 14 ஆண்டு கால வாசத்தில் 50க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்களுக்குச் சென்று வந்திருக்கிறேன். நான் வாழ்கின்ற பாடன் உட்டென்பெர்க் மாநிலத்தின் தலைநகரான ஸ்டுட்கார்ட் நகரிலேயே குறிப்பிடத்தக்க உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகங்கள் உள்ளன.

    ஜெர்மனியில் முக்கிய நகரங்கள் பலவற்றில் வருடத்திற்கு இருமுறை, அதிலும் குறிப்பாக கோடைக் காலத்தின் இறுதியிலும் இலையுதிர் காலத்தின் தொடக்கத்திலும் Lange Nacht der Museen அதாவது “நீண்ட இரவில் அருங்காட்சியகங்கள்” என்ற வகையில் ஒரு குறிப்பிட்ட கட்டணத்திற்கு அந்த நகரில் உள்ள எல்லா அருங்காட்சியகங்களையும் சென்று பார்த்து வரக் கூடிய வாய்ப்பினை நகராண்மைக் கழகம் பொது மக்களுக்காக வழங்குகிறது. இந்த அருங்காட்சியக பார்வைக்காக பேருந்துகளைத் தயார் செய்து பொது மக்கள் ஒரு அருங்காட்சியகத்திலிருந்து மற்றொன்றிற்குச் செல்லும் வகையில் சிறப்புப் பேருந்து வசதியில் அன்றைய தினத்தில் அமைந்திருக்கும். மாலை 5 மணிக்குத் தொடங்கி இரவு மூன்று மணி வரை பொதுவாக அருங்காட்சியகங்கள் இத்தினத்தில் திறக்கப்பட்டிருக்கும். இத்தகைய நிகழ்ச்சிகளில் ஆண்டுக்கு ஒருமுறையாவது நான் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். இணையத்திலேயே முன்கூட்டியே டிக்கட் பதிவு செய்து பெற்றுக் கொண்டு அன்று இலவசமாக இரயிலில் பயணித்து நகருக்குச் சென்று அங்குள்ள பேருந்துகளில் ஒவ்வொரு அருங்காட்சியகமாகச் சென்று அறிமுகம் பெற்று கண்காட்சிகளையும் கண்டு பயன்பெற முடியும்.

    ஜெர்மனியைப் பொறுத்த வரை பெரிய நகரங்களில் மட்டுமே அருங்காட்சியகங்கள் உள்ளன என்று சொல்லி விட முடியாது. சிறு கிராமங்களிலும், மலைப்பிரதேசங்களிலும் கூட அருங்காட்சியகங்கள் அமைந்துள்ளன. உதாரணமாக தென் பகுதி கருங்காடு என அழைக்கப்படும் Black Forest பகுதியிலும் ஆங்காங்கே மக்கள் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் சில அருங்காட்சியகங்களைக் காணலாம். இப்படி மூலைக்கு மூலை அருங்காட்சியகங்கள் நிறைந்திருப்பது, பெரிதோ, சிறிதோ அந்த நகரத்தை, அக்குறிப்பிட்ட பூகோளப்பகுதியைப் பற்றிய சில தகவல்களை வருகைத் தருவோருக்கு வழங்கவே செய்கின்றன.

    ஜெர்மனியில் பல அருங்காட்சியகங்கள் உள்ள போதிலும் ஜெர்மனியின் தலைநகரமான பெர்லின் நகரின் அருங்காட்சியகங்களிலிருந்து தொடங்குவது ஆர்வமளிப்பதாக உள்ளமையால் பெர்லின் நகரின் அருங்காட்சியகங்கள் பற்றி முதலில் காண்போமே!

    அருங்காட்சியகத்தீவு (Museum island, Berlin) தொடக்கப்பகுதி - போட அருங்காட்சியகத்துடன் தொடங்குகின்றது. (ஆகஸ்ட் 2013)
    அருங்காட்சியகத்தீவு (Museum island, Berlin) தொடக்கப்பகுதி – போட அருங்காட்சியகத்துடன் தொடங்குகின்றது. (ஆகஸ்ட் 2013)

    344.3 sq miles அளவு கொண்ட பெர்லின் நகரத்தில் 50க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்கள் உள்ளன என்பது வியக்கவைக்கும் ஒரு விஷயம் தானே. இணையத்தில் கிடைக்கும் ஒரு வலைப்பக்கத்தில் உள்ள குறிப்பின் அடிப்படையில் இங்குள்ள அருங்காட்சியகங்களின் பட்டியலைத் தருகிறேன். காண்க!.

    Alte Nationalgalerie
    Altes Museum
    Antikensammlung Berlin
    Bode Museum
    Neues Museum
    Egyptian Museum of Berlin
    Pergamon Museum
    Antikensammlung Berlin
    Anne Frank Zentrum
    Brecht House
    Bunker
    DDR Museum
    Deutsche Guggenheim
    Deutsches Historisches Museum
    Ephraim-Palais
    Knoblauchhaus
    Märkisches Museum
    Museum für Naturkunde
    Friedrichswerder Church
    galerie son, contemporary art gallery with a focus on German and Korean artists
    The Kennedys (museum)
    Hamburger Bahnhof: Museum of the Present, with exhibits of contemporary art
    Bauhaus Archive
    Kulturforum
    Berlin Musical Instrument Museum
    Gemäldegalerie, Berlin
    Kunstgewerbemuseum Berlin
    Kupferstichkabinett Berlin
    Neue Nationalgalerie
    Filmmuseum Berlin
    Memorial to the German Resistance
    Sugar Museum
    Computerspielemuseum Berlin (Computer Games Museum)
    East Side Gallery
    Berlinische Galerie
    Checkpoint Charlie Museum
    German Museum of Technology
    Jewish Museum Berlin
    Martin Gropius Bau
    Schwules Museum
    Topography of Terror
    Beate Uhse Erotic Museum
    Berggruen Museum (“Picasso and his Time”)
    Bröhan Museum
    Charlottenburg Palace
    Käthe Kollwitz Museum
    Museum of Photography
    Museum of Pre- and Early History
    Scharf-Gerstenberg Collection
    Allied Museum
    Botanical Garden and Botanical Museum
    Brücke Museum
    Ethnological Museum of Berlin
    Museum of Asian Art
    Museum Europäischer Kulturen
    Köpenick Palace
    Kunstgewerbemuseum Berlin
    Berlin-Hohenschönhausen Memorial
    Stasi Museum
    Liebermann Villa
    Schloss Britz
    நன்றி: http://en.wikipedia.org/wiki/List_of_museums_and_galleries_in_Berlin
    குறிப்பு: மேல் குறிப்பிட்டுள்ள பட்டியலில் உள்ள பெயர்கள் டோய்ச் மொழியிலும் ஆங்கில மொழியிலும் என் வழங்கப்பட்டுள்ளன.

    இதில் ஒவ்வொரு அருங்காட்சியகமாக சென்று வருவது என்பது சற்றே கடினம் என்பதோடு அதற்காகத் தேவைப்படும் நேரத்தையும் ஒதுக்க வேண்டிவரும். ஆனால் நமது தனிப்பட்ட விருப்பத்திற்கேற்ற வகையில் அருங்காட்சியகங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்குச் சென்று வருவது அருங்காட்சியக ஆர்வலர்களுக்குப் பயன்தரும்.

    பெர்லின் சுவரின் மிஞ்சியிருக்கும் பகுதிகளில் சில சாலையோர அருங்காட்சிப் பொருளாக (ஆகஸ்ட் 2013).
    பெர்லின் சுவரின் மிஞ்சியிருக்கும் பகுதிகளில் சில சாலையோர அருங்காட்சிப் பொருளாக (ஆகஸ்ட் 2013).

    பெர்லின் நகரைப் பொருத்தவரை இது நூற்றாண்டுகளின் சிறப்புகளைக் கொண்ட ஒரு நகரம். கடந்த நூற்றாண்டில்நிகழ்ந்த நாஸி அரசியல் படுகொலைகள், அரசியல் விஷயங்கள் இப்பட்டியலில் உள்ள சில அருங்காட்சியகங்களுக்கு மைய அம்சங்களாகத் திகழ்கின்றன. ஒரு சில குறிப்பிடத்தக்க அருங்காட்சியகங்கள் பெர்லின், ஜெர்மனி என்ற எல்லையைக் கடந்து உலகின் பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட தகவல்களை நமக்கு காட்சிக்கு வழங்கும் கருவூலங்களாக இருக்கின்றன.

    ஜெர்மானிய கடல் ஆய்வுத்துறையினர் அட்லாண்டிக் சமுத்திரத்திலும், பஸிபிக் சமுத்திரத்திரத்திலும் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் கண்டெடுக்கப்பட்ட அறிய பொருட்கள் சில அருங்காட்சியகங்களைப் பெருமை செய்கின்றன. தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை ஐக்கிய அரபு நாடுகளிலும் ஆப்பிரிக்க கண்டங்களிலும், வட ஆசிய கண்டத்திலும் செலவிட்ட பல தொல்லியல் ஆய்வுத்துறையினரின் அறிய கண்டுபிடிப்புக்கள் பெர்லினின் சில அருங்காட்சியகங்களில் இருந்து பெர்லின் மட்டுமல்லாது உலக நாகரிக வளர்ச்சியை மக்களுக்கு விளக்கும் நற்றொண்டை ஆற்றுகின்றன. தொழில்நுட்பத்துறையினரின் ஆய்வுகள் கணினி, மருத்துவம் போன்ற துறைகளில் தங்கள் வாழ் நாளையே அர்ப்பணித்த மேதைகளின் ஆய்வுகள் பல பெர்லினின் சில அருங்காட்சியகங்களில் நிறைந்திருக்கின்றன.

    ஜெர்மானிய தத்துவ மேதைகள் உலக தத்துவ சிந்தனை வளர்ச்சிக்கும் புரட்சிக்கும் ஆய்வுக்கும் வழங்கிய கொடைகள் ஏராளம். இத்தத்துவ மேதைகளின் நூல்களையும் ஆய்வுகளையும் கண்டுபிடிப்புகளையும் விளக்குவனவாக பெர்லினில் உள்ள சில அருங்காட்சியகங்கள் இருக்கின்றன. வாகனங்கள், தாவரங்கள், காடுகள், கடல் உயிரினங்கள ஆய்வு பற்றிய தகவல் நிறைந்த அருங்காட்சியகங்கள் உள்ளன. அத்தோடு நின்றுவிடவில்லை. ஜெர்மனிக்கே பிரபலமான Curry Würst (கரி உர்ஸ்ட்) எனச் சொல்லப்படும் உணவு வகையை விளக்கும் அருங்காட்சியகம், கட்டிடங்களைப் பற்றி விளக்கும் கட்டுமான அருங்காட்சியகம், கணினி விளையாட்டு பற்றிய வரலாறு கூறும் அருங்காட்சியகம் என்று விரிவான பல துறைகளை அடிப்படை அம்சமாகக் கொண்ட அருங்காட்சியகங்கள் பெர்லினில் உள்ளன.

    பெர்லின் நாஸி ஹோலோகோஸ்ட் அருங்காட்சியகத்தில் (Holocaust museum) (ஆகஸ்ட் 2013).
    பெர்லின் நாஸி ஹோலோகோஸ்ட் அருங்காட்சியகத்தில் (Holocaust museum) (ஆகஸ்ட் 2013).

    இதில் முதலில் பெர்லின் நகரின் சிறப்புக்குச் சிறப்பு சேர்ப்பதாகவும், பெர்லினுக்கு வருகை தரும் சுற்றுப் பயணிகளுக்கு அளிக்கப்படும் கையேட்டில் அருங்காட்சியகங்களின் பட்டியலில் முதலிடம் பெற்று நிற்கும் பெர்காமோன் அருங்காட்சியகத்திற்கு (Pergamon Museum) உங்களை முதலில் அழைத்துச் செல்கிறேன்.

    தொடரும்…

    Share
  • சின்ன சின்ன மாநிலங்கள் : தீர்வா? சிக்கலா?

    – சு.பொ.அகத்தியலிங்கம்

    News_41557குட்டி குட்டி மாநிலங்களாக இருப்பின் உள்ளங் கைக்குள் பொத்திபொத்தி வளர்ப்பது போல் சிறப்பாக நிர்வாகம் செய்ய இயலும் என் றொரு வாதம் வலுவாக முன்வைக்கப்படுகிறது. மாநிலங்களை துண்டு துக்காணியாகப் பிரித்துக் கொண்டே போனால் வெங்காயத்தை உரித்த கதையாக மாறிவிடாதோ என ஆழ்ந்த கவலை இன்னொரு பக்கம் வீரியமாக வெளிப்படுத்தப்படுகிறது. முன்னதின் நம்பிக்கையும் பின்னதின் கவலையும் புறங்கையால் தள்ளி விடக் கூடியதல்ல. ஒரு அர்த்தமுள்ள விவாதம் தேவைப்படுகிறது.

    “இந்திய துணைக் கண்டம் அரசியல் ரீதியில் 56 தேசங்களாக இருந்த காலமும் உண்டு. ஏன்? பிரிட்டிஷ் பார்லிமெண்ட் இந்தி யாவை ஆளும் பொறுப்பை ஏற்ற போதுகூட பிரிட்டிஷ் இந்தியாவுக்கு வெளியே 600 சமஸ்தானங்கள் இருந்தன. அந்த சுதந்திர ராஜ்யங்களுக்குத்தான் சமஸ்தான இந்தியா என்ற பொதுப்பெயரைத் தந்தது” என்கிறார் ம.பொ.சிவஞானம்.இந்த நேரத்தில் இன்னொன்றை நினைவு படுத்துவதில் தப்பில்லை. காந்திக்கு லியோ டால்ஸ்டாய் எழுதிய கடிதம் ஒன்றில் – பிரிட் டிஸார் இந்தியாவை அடிமைப் படுத்திவிட்ட தாகக் கூறாதீர்கள்; நீங்கள் அடிமைப்பட்டீர்க ளென்று முதலில் ஒப்புக்கொள்ளுங்கள் என்றா ராம். முப்பது லட்சம் மக்களை வெறுமே 30 ஆயிரம்பேர் 3000 கி.மீ தொலைவிலிருந்து வந்து அடிமைப்படுத்தியது எப்படி? நீங்கள் பிளவுண்டு கிடந்தீர்கள், சண்டையிட்டுக் கொண்டு கிடந்தீர்கள், அதனால் அவன் அடிமைகொள்வது சுலபமானது என விளக் கினாராம்.

    மீண்டும் அதே சூழலை உருவாக்கி அந்நிய ஏகாதிபத்தியத்தை – நம் நாட்டு கனிம வளங்களை கபளீகரம் செய்ய மலைப்பாம்பாய் வாய்பிளந்து நிற்போர்களை வெற்றிலை பாக்குவைத்து அழைக்கப் போகிறோமா ?இந்தியா விடுதலை அடைந்த போது பிரிட்டிஸார் தங்கள் அடக்குமுறைக்குத் தோதாக அமைத்திருந்த மாநிலங்களும் சமஸ் தான ஆளுகையிலிருந்த பிரதேசங்கள் என அறிவியல்பூர்வ அடிப்படையின்றி மாநிலங் கள் பிரிக்கப்பட்டு குழம்பிக்கிடந்தன. ஒரு தேசிய இனத்தை நிர்ணயிப்பதில் எல்லைகள், பொதுச்சந்தை, பொது கலாச்சார அமைப்பு போன்ற காரணங்களைவிட மொழி தான் மிகமுக்கிய காரணி என்று தோழர் ஸ்டாலின் கருதினார்.

    அதுதான் அறிவியல் அணுகுமுறையாகவும் இருக்க முடியும். அந்த அடிப்படையில் தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரி பாட் அவர்களும் மலையாள தேசிய இன வளர்ச்சி மற்றும் மலையாள மொழிபேசும் மக்கள் குறித்து ஆய்வு செய்தார். 1942 ல் ஒரு பிரசுரம் வெளியிட்டார். அதன் தலைப்பு “ஒன் றே கால்கோடி மலையா ளிகள்” என்பதாகும். அன்றைய மக்கள் தொகை அவ்வளவுதான் இவ்வாறு இ.எம்.எஸ். எழுதிய அதே சமயத்தில் தோழர் “பி.சுந் தரய்யா விசாலாந் திரா” என்ற ஆய்வுகட்டுரை யை எழுதினார். பின்னர் அது நூலாக வெளி வந்தது அதுதான் அன்றைய தினம் தெலுங்கு மக்களை ஒன் றிணைப்பதற்கான அடிப்படை யாக விளங் கியது. அதே காலகட்டத்தில் தோழர் பவானி சென் வங்க மொழி பேசும் மக்களைத் திரட்ட “புதிய வங்கம்” என்ற நூலை எழுதினார்.

    செழிப்பான நாஞ்சில் நாடும் குமரி மாவட் டமும் செங்கோட்டையும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகையில் அடக்கப்பட் டிருந்தன. அவையும் புதுக்கோட்டை சமஸ்தா னமும் தமிழகத்தோடு இணைக்கப்பட வேண்டும் என்று “ஐக்கிய தமிழகம்” என்ற நூலை ப.ஜீவானந்தம் எழுதினார்.விடுதலைக்குப் பிறகு மொழிவழி உணர்வு வலுப்பெற்றது. விசால ஆந்திரா கோரி 1953 ஆம் ஆண்டு பிரபல தேசபக்தர் பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதமிருந்து 58 – வது நாளில் உயிர் துறந்தார். ஆந்திரா பற்றி எரிந்தது. துப்பாக்கிச் சூட்டில் 7 வயது பள்ளிச் சிறுமி உட்பட மூவர் பலியானார்கள். நேரு அரசு இறங்கிவந்தது. ஆந்திர மாநிலம் அமைக்கப் பட்டது. கூடவே மாநில புனரமைப்புக்குழு அமைக்கப்பட்டது. 1956 ல் மொழிவழி மாநிலங் கள் உருவாயின. அது காலத்தின் தேவை.இப்போது காங்கிரஸ் கட்சி குறுகிய கணக் குப் போட்டு தெலுங்கானா, சீமந்தரா ஆந்திரா என பிரித்திட முடிவெடுத்து அறிவித்துவிட் டது.

    அதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தை நான்காகப் பிரிக்க வேண்டும். ம .பி .இரண்டாக, மேற்கு வங்கத்தை இரண்டாக, அசாமை ஜம்மு-காஷ்மீரை மூன்றாக பிரிக்கவேண் டும். கோலார் மாவட்டத்தை மாநிலமாக்க வேண்டும் ஐதராபாத் – கர்நாடக மாநிலம் கொங்கு சோழன், பாண்டியன், பல்லவன் மாநி லங்கள் இப்படி கரையான் புற்றைக் கலைத் ததும் அது வேகமாய் எங்கும் பரவுகிறது. சிறிய மாநிலங்கள் கேட்பது ஏன் ? யார் ? இக்கேள்வி முக்கியமானது. ஏன் என்பதற்கு பல காரணங்களை முன்வைத்தாலும்; 1. பின் தங்கிய நிலையிலிருந்து விடுபட்டு வளர்ச்சி காணவும் 2. நிர்வாகத் திறமை மேம்படவும், 3. வட்டாரப் பண்பாட்டை பாதுகாக்கவும், 4. வட் டார அல்லது உள்ளூர் மக்களுக்கு அரசியல் அதிகாரத்தில் உரிய பங்கு கிடைக்கவும் – சிறிய மாநிலங்கள் தேவை என வாதிடப் படுகிறது. இது சரியா? ஒவ்வொன்றாய் அலசுவோம். மாநிலத்திற்கு மாநிலம், மாவட்டத்திற்கு மாவட்டம், பிரதேசத்துக்கு பிரதேசம் ஏற்றத் தாழ்வான வளர்ச்சி இருக்கிறது என்பது உண்மையே.

    இதன் அடிப்படைக் காரணம் மாநில, மாவட்ட விஸ்தீரணமோ, சிறிதா பெரிதா என்ப தோ அல்ல. மாறாக மத்திய அரசு கடைப் பிடித்துவரும் முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையும் அது சார்ந்த அரசியல் பாரபட் சமுமே காரணமாகும். உலகமயமும் தாராள மயமும் இந்த ஏற்றத்தாழ்வை குறைக்கவில் லை, தீவிரப்படுத்தியிருக்கிறது.அசாம், மேகாலயா, நாகலாந்து, மிசோரம், மணிப்பூர், அருணாசலப்பிரதேசம், திரிபுரா என்கிற ஏழுசகோதரிகள் என்றழைக்கப்படு கிற வடகிழக்கு மாநிலங்கள் அளவிலும் மக்கள் தொகையிலும் சிறியவையே. ஆயினும் அங்கெல்லாம் வளர்ச்சி இல்லவே இல்லை யே. நிர்வாகம் சீர்குலைந்து கிடக்கிறதே ! அங்கெல்லாம் தீவிரவாத, பிரிவினைவாத அமைப்புகள் தோன்றி ஏழு மாநிலங்களையும் இணைத்து தனி நாடு வேண்டும் என்றே கோரிக்கை தொடர்ந்து ஒலிக்கிறதே !

    ஜார்கண்ட், உத்தரகாண்ட், சத்தீஸ்கர் திறமையான நிர்வாகத்தின் பொருட்டு என்று சொல்லித்தானே தனி மாநிலங்களாக்கப் பட்டன. பின்தங்கிய நிலைமையும் வளர்ச்சி இன்மையும் தானே அங்கே நக்சலிசத்தின் பிடியை இறுக்கி இருக்கிறது. கனிம வளங் களை கொள்ளை அடிக்க உள்நாட்டு, வெளி நாட்டு சுரங்க முதலைகளும் உள்ளூர் அரசி யல் தலைமையும் கூட்டணி அமைத்து செயல்படுகிறதே! ஊழல் முறைகேட்டில் முன்னிலை வகிக்கிறது, அன்னியில் கண்ட மாற்றம் என்ன? சுரங்கப் பணக்காரர் கொஞ்சம் பெருகியதால் சராசரி தனிநபர் வருமானம் உயர்ந்ததாக புள்ளிவிவர மாயாஜாலம் நிகழ் கிறதே ஒழிய பெரும்பான்மை மக்கள் வறுமை யிலிருந்து அறியாமையிலிருந்து, விடுபடவே இல்லையே!

    வட்டாரப் பண்பாட்டைக் காத்திட சிறிய மாநிலங்கள் தேவை என்பதும் அர்த்தமற்றது . உலகமயப் பண்பாடு ஆக்டோபஸ் போல எல் லோரையும் விழுங்கி ஜீரணித்துக் கொண்டி ருக்கும் போது துண்டுதுக்காணியாக உடைந்து நின்று எந்தப் பண்பாட்டைப் பாதுகாக்கப் போகிறோம்?யார் யார் இக்கோரிக்கைகளை ஆதரிக் கிறார்களெனப் பார்ப்பதும் அவசியம். முதலா வதாக, மத்தியில் ஆளும் காங்கிரஸ் – ஏற்கெ னவே மாநில உரிமைகளை கொஞ்சம் கொஞ் சமாக அரித்து தின்று எதேச்சதிகார பசியோடு அலைகிறது.

    சின்னச் சின்ன மாநிலங்கள் அவர்களின் எதேச்சதிகாரக் கொடுங்கனவுக்கு உயிர் கொடுக்கும் . அடுத்து சங்பரிவார்- ஆர். எஸ். எஸ். மற்றும் பாஜக – இவர்களின் இந்துராஷ்டிரக் கனவுக்கு மொழிவழி மாநிலங் கள் இடைஞ்சல். இந்து, இந்தி, இந்துராஷ் டிரம் என்பதே அவர்கள் இலக்கு. ஆகவே குட்டி குட்டி மாநிலங்களை அமைக்கத் துடி யாய்த் துடிக்கிறார்கள்.அப்போதுதானே தங்கள் வலையில் பிடித்து இந்துத்துவக் கூடைக்குள் கொட்ட முடியும்.மூன்றாவதாக முக்கியமான வில்லன் பன்னாட்டு முதலாளிகள். கனிம வளங்களை மொத்தமாய் முழுங்க – சிறிய மாநிலங்கள் எனில் அரசியல் சதுரங்க காய் நகர்த்திகாரி யத்தை எளிதாக முடிக்க இயலும். வேண்டிய வரை முதல்வராக்க குதிரை பேரமோ கழுதை பேரமோ எளிது. ஆகவேதான் குட்டி குட்டி மாநிலக் கோரிக்கைகளை எழுப்புவோருக்கு போராட பணமுடை இல்லை. தாராளம் அள்ளி வழங்குகிறார்கள்.

    இறுதியாக இந்திய ஜனநாயகமும் வலி மையும் கண்ணை உறுத்த; ஒற்றுமையைக் குலைத்து ஊடுருவவும் – தன் கைப்பிடிக்குள் கொண்டுவரவும் – மீண்டும் நவகாலனி யாக்க கனவு காணும் ஏகாதிபத்தியம் இது போன்ற கோரிக்கைகளுக்கு பக்கபலமாக இருக்கும் என்பதை அறியாதவன் அரசியலில் ஏமாளியே!சின்ன மாநிலக் கோரிக்கைகளை இடது கோடியிலிருந்து ஆதரித்தாலும் – வலது கோடியிலிருந்து ஆதரித்தாலும் போய்ச் சேரு மிடம் ஒன்றே. அது யாருக்கு லாபம்? அது யாருடைய கோரிக்கை? இன்னுமா சந்தேகம். ஆயின் மக்கள் ஆதரிப்பது ஏன் என்கிற கேள்வி எழலாம். ஒரே பதில் தான் வளர்ச்சி யின்மை, வேலையின்மை போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் – நிஜ வில் லனை அடையாளம் காணமுடியாமல் திணறு கிற போது அல்லது சாதுரியமாக நிஜவில்லன்கள் முகமூடி அணிந்து நிழல் வில்லன்களை முன்னிறுத்தும் போது; தடுமாறுகிறார்கள் அல்லது திசை திருப்பப்படுகிறார்கள்.

    லியோ டால்ஸ்டாய் அன்று காந்திக்கு எழுதிய கடிதத்தை இப்போது மீண்டும் அசைபோடுவோம். விழித்துக் கொள்வோம். தேசம் மீண்டும் களவு போவதைத் தடுத்திட ஒன்றுபட்டு எழுவோம்.

    **************

    நன்றி : தீக்கதிர் (29 08 2013)

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (25)

    பவள சங்கரி

    முழுமையாக அந்த நொடியில் வாழுங்கள்!!

    “அந்த நொடியில் மகிழ்ச்சியாக இருங்கள், அது போதும். நமக்குத் தேவையானதெல்லாம் அந்த ஒவ்வொரு நொடி மட்டும்தான், அதற்கு மேல் இல்லை”

    அன்னை தெரசா

    images 5முதல் முறையாக என் அமெரிக்கப் பயணம். நடு இரவில் வீடு வந்து சேருகிறோம். நடுங்கச் செய்யும் கடுமையான குளிர். கும்மிருட்டு. இலையுதிர் காலப்பருவம். கம்பளிக்குள் நுழைந்துகொண்டு சுருண்டு விட்டாலும், காலையில் எழுந்து வெளியே வந்து பார்த்தபோது என் கண்களையே நம்ப முடியாத அளவிற்கு திரும்பிய புறமெல்லாம் தரை முழுவதும் செவ்வாடை போர்த்தது போன்ற அழகிய வண்ண இலைகள். நிமிர்ந்து பார்த்தால் மரங்களிலும் அதே அழகுக் காட்சி. எதிர்பார்க்காத இந்த அழகின் உச்சத்தில் அசந்துபோய் நின்றிருந்தேன். நடைபாதை முழுவதும் பட்டுக்கம்பளம் விரித்தது போன்று மெத்தென்ற இலைகளின் குவிப்பு. ஏதோ புதியதோர் உலகில் நுழைந்துவிட்டது போன்றதொரு பரபரப்பு. உலகமே மொத்தமாக உயிருடன் விழித்துக்கொண்டது போல ஒரு தோற்றம். என் மன உணர்வுகள் அத்தனையும் ஒருசேர விழிப்புணர்வு பெற்றிருந்தது. சூழ்நிலைகளைப் பற்றிய தெளிவான விழிப்புடன் இருந்தது மனது – நம்முடைய அன்றாட வாழ்க்கையில் உணர்வுப்பூர்வமாக பாதிக்கக்கூடிய நிகழ்வுகளை மன நிறைவுடன் எதிர்கொள்வதற்கான பயிற்சியும் இதனை ஒத்ததுதான். ஏதோ ஒரு வகையில் மறைந்திருக்கும் விரும்பத்தகாத எண்ணங்கள் அல்லது அச்சப்படக்கூடியதோ, வெட்கப்படக்கூடியதோ, சங்கடப்படச்செய்வதோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ, சமாளிக்கவோ முடியாமல் போகக்கூடியதோ போன்ற சந்தர்ப்பங்களில், முழுமையான விழிப்புணர்வுடன் செயல்படுவதால் அது நம்மை அதன் விளிம்பில் கொண்டு நிறுத்திவிடும் என்றாலும் அந்த மாற்றம் நம்மை பயமுறுத்தவோ, சிரமப்படுத்தவோ அல்லது வேதனைப்படுத்தக்கூடிய வகையிலோ இல்லாமல், அந்தச் சூழலின் நிதர்சனத்தை யதார்த்தமாக ஏற்றுக்கொள்ளும் வகையில் இலகுவாக்கிவிடும். முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளவும் மனம் சம்மதிக்கும். இதனால் அதற்கான தீர்வும் தெளிவாகிவிடும். சுருங்கச் சொன்னால் அது சுகமான அனுபவமோ அல்லது சுமையான அனுபவமோ இரண்டையும் ஒன்று போல உணரும் உன்னதமான ஞானம் பெறுவோம்!

    build-success-from-scratch

    குறிப்பிட்ட அந்தச் சூழலின் முழுமையான ஆக்கிரமிப்பு, நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற தெளிவான விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடியது. இது ஆழ்ந்த நித்திரையிலிருந்து சட்டென விழிக்கும் நிலை அல்லது வெகு நாட்களாக இருண்டு கிடக்கும் ஒரு பகுதியில் பளிச்சென்று வெளிச்சம் தோன்றுவது போல்தான். நம்மைச் சுற்றி எந்த மாற்றமும் நிகழவில்லை. ஆனால் மாற்றம் நிகழ்ந்ததெல்லாம் நம் மனதிற்குள்தான். அமைதியை நோக்கிய நம்முடைய உள்முகப் பயணம் மூலமாக சூழ்நிலைகளை நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் வல்லமை பெறுகிறோம். நம் பிரச்சனைகளைத் தள்ளி நின்று பார்த்து தீர்வு சொல்ல விழைகிறோம். முழுமையான விழிப்புணர்வுடன் தெளிவான சிந்தையும் வசப்படுகிறது. அதனால் ஏற்கனவே மறைந்திருந்த சில உண்மைகள் அப்பட்டமாக வெளியில் தெரிகிறது. இதற்கு முன்பு இல்லாத அளவிற்கு மனத்தெளிவு ஏற்படுகிறது. சாதாரண விசயங்களில்கூட அதிக நாட்டம் ஏற்படுவதைக் காண முடியும். இயற்கை எத்தனை அதிசயமும் அழகும் நிறைந்தது ! நம் சக மனிதர்களையும் இதே கண்ணோட்டத்தில் பார்க்க முடியும். அறியாமையையும், அழகையையும் சேர்த்தே அவர்களை ஒன்றுபோல நேசிக்க முடியும். தேவையில்லாத ஆய்வு செய்வதைவிட அவரவர்கள் இருக்கும் நிலையில் அப்படியே ஏற்றுக்கொள்ளச் செய்யும். எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் வெளிப்படையான அன்பைச் செலுத்த முற்படும்போது நல்ல உறவுகள் மேம்படும்.

    மனக்கட்டுப்பாடு என்பதன் மூலம், மன அழுத்தம் ஏற்படுத்தக்கூடிய எந்த ஒரு பெரிய பிரச்சனையையும் சமாளிக்கும் சக்தி பிறக்கும். அதாவது வேதனைப்படுத்தக்கூடிய அந்த குறிப்பிட்ட எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் அதிகப்படியான முக்கியத்துவம் பெறாமல், நாம் அதற்கான எதிர்விளைவுகளை ஏற்படுத்தாமல், தெளிவான, பக்குவப்பட்ட பார்வையை ஏற்படுத்தும். உதாரணமாக நாம் ஒரு நாளைக்கு 24 மணி நேரங்களும் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் சுவாசிக்கிறோம் என்பதை உணராமலே தானாக அது நடக்கிறது. ஆனால் பரீட்சார்த்தமாக ஒரு சில நிமிடங்கள் மூச்சு உள்வாங்குவதிலும், வெளிவிடுவதிலும் ஆழந்த கவனம் செலுத்த ஆரம்பித்தால் அது நமக்கு மிகவும் ஒரு சிரமமான காரியமாகத் தெரியும். இப்படித்தான் தேவையில்லாமல் கவனம் செலுத்தும் நம்முடைய சில பிரச்சனைகளும். ஒதுக்க வேண்டியதை ஒதுக்கிவிட்டு, தேவையானதில் மட்டும் கவனம் செலுத்தும் கலையை பாலிலிருந்து தண்ணீரைப் பிரித்தெடுக்கும் அன்னப்பறவை போல வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். நம் துன்பங்களை மனக்கட்டுப்பாடுடன் எதிர்கொள்ள ஆரம்பித்தால் அது நம் இருதயத்தை விசாலமாக்கி ஓய்விற்கான இடத்தையும் கொடுக்கும். நம் அச்சத்தையும், ஆவேசத்தையும் விட்டொழித்து, அமைதியான, யதார்த்தமான கோணத்தில் எதிர்கொள்ள ஆரம்பித்தால் வலியும், வேதனையும் குறைந்து ‘இதுவும் கடந்து போகும்’ என்ற உண்மையை உணரச் செய்யும்.

    வாழ்க்கையில் நல்ல நட்புகளும், உறவுகளும் மட்டுமே நம்மை உற்சாகமாக இருக்கச் செய்யும் மந்திரக்கோல்கள். அன்பும், பரிவும், பாசமும் நேர்மையான முறையில் பகிர்ந்து கொள்ளப்பட்டால், நட்பு மற்றும் உறவுகளுடன் வாழ்க்கைப் பயணம் இனிதாக அமையும். ஓக் மேண்டினோ கூறுவது போல,

    “அடுத்தவர்களை, இன்று அர்த்த சாமத்திற்குள் அவர்கள் இறந்து விடப்போகிறார்கள் என்பதுபோல நடத்துங்கள். உங்களுடைய முழுமையான அரவணைப்பையும், கருணையையும் மற்றும் புரிதல் என அனைத்தையும் ஒன்று திரட்டி, எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் அவருக்குச் செலுத்துங்கள். உங்களுடைய வாழ்க்கை திரும்பவும் அதே பழைய வாழ்க்கையைப் போன்று நிச்சயம் இருக்காது”

    மற்றவர்களிடம் கோபத்தில் நிலைத்திருப்பதோ, வெறுப்பு அல்லது சீற்றம் கொள்வதற்குமான முக்கிய காரணம் நம்மால் பெருந்தன்மையுடன், மன்னிக்கும் மனப்பக்குவமும் இல்லாமல் போய்விடுகிறது என்பதுதான். நிலையில்லாத இந்த வாழ்க்கையில், அவர்களோ நாமோ எந்த நேரத்திலும், அன்று இரவேகூட இறந்து போகலாம் என்பதை நினைக்கத் தவறிவிடுகிறோம். அடுத்தவர் மீது செலுத்தும் கோபமும், வெறுப்பும் நமக்கே சுமையாகி நம்மை வேதனைப்படச் செய்யும் என்பதே சத்தியம். அதை வெளிப்படுத்த சரியான தருணம் பார்த்துக்கொண்டு அலைந்திருக்க வேண்டிய சூழலில் நம்முடைய கடமைகளும் பாதிக்கப்படலாம். நமக்கே இது பெரும்பாரமாகிப் போய்விடும். ஒவ்வொரு நாளும் இரவு உறங்கச் செல்லும்முன் எவர் மீதும் கோபம், வெறுப்பு, பொறாமை, காழ்ப்புணர்ச்சி என எதுவும் நம் மனதில் தேங்கி, அதை சாக்கடையாக்கி அசுத்தப்படுத்தாமல் இருக்கிறது என்ற உறுதிப்பாடு கொள்ள வேண்டியது அவசியம். அதுவே அடுத்த நாள் சுத்தமான மன நிலையுடன், உற்சாகமாக நம்மை விழித்தெழச் செய்யும் என்பதே சத்தியம்.

    அதே சமயம், அடுத்தவருடைய உணர்வுப்பூர்வமான மிரட்டல்களுக்கும், கோபம் மற்றும் சுயநலப்போக்கின், அர்த்தமற்ற வெளிப்பாடுகளுக்கும் அடி பணிந்து விடாமல், அடுத்தவரை திருப்தி படுத்துவதற்காக நம் கடமையைத் தவறவிடுதலாலும் நிம்மதி இழக்க ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

    இறுதியாக, நமக்கும் மேல் ஒரு சக்தி இருக்கிறது. அது நம்மை என்றும் வழி நடத்தும் என்ற பூரண நம்பிக்கையோடு நம் பயணத்தைத் தொடருவோமாக! தன் குஞ்சை சிறகினுள் பொத்தி வைத்துக் கொண்டு பறந்து செல்லும் கழுகு உயரமாகப் பறக்கும் வேளையில், கூர்மையான தன் பார்வையின் மூலம் தரையில் கிடக்கும் இரையைப் பார்த்தவுடன் சிறகு விரித்து கீழ் நோக்கிப் பறக்க யத்தனிக்கும் போது அந்த கழுகுக் குஞ்சு சிறகிலிருந்து விடுபட்டு விழுந்துவிடும். அப்போது அந்தத் தாய் கழுகு அதைவிட வேகமாகப் பறந்து வந்து அப்படியே அந்தக் குஞ்சை தரையில் விழுந்து மோதிவிடாமல், அணைத்து காப்பாற்றிவிடும். இது போலத்தான் நமக்கு மேல் இருக்கும் அந்த சக்தியும் நம்மை ஒரு எல்லையில், வீழ்ந்து விடாமல் காத்து நிற்கும் என்ற நம்பிக்கையுடன் நம் வாழ்க்கையை பூரணமாக வாழுவோம்! வெற்றி நிச்சயம்!

    முற்றும்

     படங்களுக்கு நன்றி:

    http://www.google.co.in/imgres?imgurl=http://www.dreamwisemarketing.com/wp-content/uploads/2013/07/SUCCESS_by_the_chosen_pessimist.jpg&imgrefurl=http://www.dreamwisemarketing.com/denver-marketing/5-keys-to-dm-success-releas/&h=600&w=750&sz=65&tbnid=4iU_waTlGMhgyM:&tbnh=90&tbnw=113&zoom=1&usg=__On3jVfdnfqsPgpX1iAeErHyLOGQ=&docid=v2lrJkem1G5GhM&sa=X&ei=H1QfUuGZIY7GrAfd4YDoBQ&ved=0CDQQ9QEwAQ&dur=402#imgdii=4iU_waTlGMhgyM%3A%3BTHrMwedrQaYndM%3B4iU_waTlGMhgyM%3A

    http://www.google.co.in/imgres?imgurl=http://www.insidegatlinburg.com/wp-content/fall-road.jpg&imgrefurl=http://www.insidegatlinburg.com/vacation-tips/when-do-the-leaves-change-color-in-the-fall/&h=2000&w=2956&sz=1248&tbnid=MujWZEXqWRb5cM:&tbnh=90&tbnw=133&zoom=1&usg=__BfmUgwk1LkzjV-JANvKiYv1jVtI=&docid=ME56hl4wOGktkM&sa=X&ei=CVMfUuTzHsaHrQfCkYGABA&ved=0CFkQ9QEwBw&dur=137#imgdii=_

     

    Share
  • அரசு 12 துரைத்தனம்.

    இன்னம்பூரான்

    Cockroachawardராஜமாதா முப்பெரும்தேவி பொன்னம்மா தேவிஶ்ரீ மதுராபுரியை ஆண்ட ராணிமங்கம்மாவை விட பல திறன்களில் தலை சிறந்து விளங்குபவர். ரோமாபுரி இளவரசி. தாமரை மணாளனை அவரை சங்கத்தமிழ் பண்புக்கு இணங்க காதல் செய்த பின்னரே வரைவு செய்து கொண்டது உலகறிந்த விஷயம். அது அவர்களது உரிமை என்பதில் கடுகளவேணும் ஐயமில்லை. அழகான குழந்தைகள். ஆண் அரசாளும் என்கிறார்கள் சிலர். அவருடைய திருமகனார் இளங்குமரனுக்காக, அரியணை காத்திருக்கிறது. வடிவுக்கரசியான அவருடைய திருமகளோ, குடும்ப விளக்கு. எங்கிருந்தோ வந்த ஆணழகன் இளஞ்சேரலாதனை மணந்து பல வருடங்கள் ஆயின. ‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்றாள், ஒளவை பாட்டி. குறிஞ்சி,முல்லை, மருதம், நெய்தல் ஆகிய திணைகள் (பாலையையும் விட்டு விடவில்லை!) நாடோடி, நாடோடி இளஞ்சேரலாதனை நாடின. மணிமேகலையின் அமுதசுரபி தோற்றது, போங்கள். அலிபாபாவின் மாயவிளக்கு மங்கியதோ என்ற தோற்றம்! காசுகள் கொட்டின; மோஹராக்கள் ‘தக தக’வென்று மின்னின; திரவியம், கனகதாரா தோத்திரம் மொழிந்தவாறு, கூரையை பிய்த்துக்கொண்டு ‘கொட்டோ கொட்டு’ என்று இடைவிடாமல் பொழிந்தது; பொழிகிறது; பொழிந்து கொண்டே இருக்கும். இளஞ்சேரலாதன் அமர்ந்தவிடத்தில் அல்லது தேகாப்பியாசம் செய்யும் இடத்தில் அல்லது இளைப்பாறலும், தேறலும், விருந்தும் அளிக்கும் மன்றங்களில் மகிழ்வின் மணமும், செல்வத்தின் செல்வாக்கும் நிறைகுடங்களாக ததும்பி வழிகின்றன.

    என்றென்றும் ராஜ விசுவாசிகளில் ஒருவராக பரிமளிக்கும் குருக்ஷேத்திரத்தின் குறுநிலமன்னராகிய உலகநாதபெருமான் அவர்களிடம் தெற்கத்திய பத்திரிகை ஒன்று, இளஞ்சேரலாதனுக்கு குருக்ஷேத்திர பிராந்தியம் அள்ளி அள்ளி கொடுத்த நிலபுலனை பற்றியும், ஸ்தாவரசொத்தான பூமியயையே காசு பணமாக ரஸவாதம் செய்யப்பட்ட உத்திகளை பற்றியும், குருக்ஷேத்திர நாட்டின் உயர்/தாழ் ஊழியனனான கண்ணிய கமுக்கனார் தட்டிய முரசொலியின் ‘அபஸ்வர’ எதிரொலியை பற்றியும், ஒரு உரையாடல் நிகழ்த்தினார்கள். அவரோ ஜராசந்தன் போன்ற சண்டைக்கோழி. விடுவாரா? ஒரு உயர்/தாழ் ஊழிய சமூகத்தையே அருகில் வைத்துக்கொண்டு கருத்து முத்துக்கள் பல உதிர்த்தார். அவையாவன:

    தேசத்தின் மாப்பிள்ளை இளஞ்சேரலாதன் ஒரு மைனர் குடியானவர்.
    குருக்ஷேத்திர தர்மம் மைனர் குடியானவர்களுக்கு, அதுவும் செல்வக் களஞ்சியங்களுடன் ‘தகாத’ இனம் சேரும் மைனர் குடியானவர்களுக்கு சலுகைகள் அளிக்கும்.

    ஆகவே மாப்பிள்ளை இளஞ்சேரலாதனுக்கு கொடுத்த சலுகைகள் தர்மத்தின் அடிப்படையே.
    இந்திரனா புகாரித்தான்? இந்திர பதவி உயர்ந்தது தான். ஆனால் இந்திரர்கள் எல்லாம் உயர்ந்தவர்கள் அல்ல. இந்திரனும் காசு பார்த்தான். அநீதி + அநீதி = நீதி! இது அறியாத தென்னாட்டுத் திருமாலே. உம்மை கண்டு பரிதாபம் கொண்டேன்.

    கமுக்கரின் குற்றச்சாட்டுகள் நீர்த்துப்போயின, ஐயா. செல்வக்களஞ்சியம் ஏன் புகாரிக்கவில்லை. அது எனக்கு புரியவில்லையே!!!

    கமுக்கரின் குற்றச்சாட்டுகளை, துரைத்தனத்தாரின் கமிட்டி நிராகரித்து விட்டதே. அதன் ரிப்போர்ட்டை நான் படிக்கவில்லை. அதனால் என்ன கெட்டுப்போச்சு? அது நிராகரித்திருக்கும்.கும்! கும்மோ கும்!!

    அப்படியானால் குமுக்கரை ஏன் அமுக்கவில்லை என்றா கேட்கிறீர்கள்! நான் அவசரப்படுபவன் அல்ல. என்னை போன்ற நடுநிலையாளர் கிடையாதாக்கும். கும்! கும் கும்!!

    மாப்பிள்ளை இளஞ்சேரலாதன் ஒரு பண்பாளர். அவர் ராஜமாதாவின் மாப்பிள்ளை என்பதால் தான், பத்திரிகைகள் அவரை வாட்டுகின்றன. அலக்கழிக்கின்றன. என்னே அக்கிரமம்! மம்! மம்மோ மம்!!

    அசரீரி: “ மெய்யெல்லாம் மெய்யல்ல; பொய்யெல்லாம் பொய்யல்ல; மெய் என்பது பொய்யோ? பொய் என்பது மெய்யோ? பொய்யும் மெய்யும் கலந்துக்கட்டியோ? ஐயோ!”

    “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆகும்’ என்று அரசியல் அறியாமையினால், சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் பிழை இழைத்து விட்டார் போலும். எதற்கும் ஒரு செய்தி. அரசியல் பிழைத்தோர்க்கு ஆரூடம் கை வந்த கலை. ஜோசியம் கை கூடிய கலை. அதனால் தான் இந்த உலகநாதபெருமானின் அற்புத வாசகங்கள் வருமுன்னரே, ராஜமாதாவின் பிரதம விசுவாசியும், திவானும் ஆன மனோவசியனார் அவர்கள், பத்திரிகைகளுக்கு ஒரு அறைகூவல் விடுவித்தார். “பத்திரிகைகள் எதையும் விசாரிக்கட்டும்; ஆனால் தனிமனிதர்களை மீது பழி கூறலாகாது….”. அதாவது தவறு செய்தவன் தனிமனிதனாலும், சிஸ்டம் தவறியது என்பது உகந்த சொல் எனலாமோ? அவரது பொழிவை முழுதுமுச்சூடும் கேட்டோ/படித்தோ வசியமானவர்கள் உலகநாதபெருமானின் கூற்றை அனுபவித்து வரவேற்பார்கள்.

    ‘ஏழை குடியானவர்கள்’ பிழைப்பார்கள். விதர்பா ஏழை குடியானவர்கள் மடிவார்கள். குருக்ஷேத்திரத்தில் நிலபுலன் இழந்த ஏழை குடியானவர்கள் நெற்றியில் பட்டை நாமம் பளபளக்கிறது. மாப்பிள்ளை இளஞ்சேரலாதன் மைனர் குடியானவர் என்றால், ‘அமிதா பச்சன் ஒரு அறிமுக நடிகர்’ என்றார், ஒரு ட்விட்டர். மாப்பிள்ளை இளஞ்சேரலாதன் ஒரு மைனர் குடியானவர் என்றால் முதுகலைஞர் கருணாநிதி அவர்கள் பால் மணம் மாறாத குழவி என்பர் சிலர்.
    வர்ரேன்…

    சித்திரத்துக்கு நன்றி: asifmeeran.blogspot.com

     

    Share