அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் (3) – பெர்காமோன் அருங்காட்சியகம் பெர்லின், ஜெர்மனி

7

சுபாஷிணி ட்ரெம்மல்

அருங்காட்சியகம் : பெர்காமோன் அருங்காட்சியகம்
நகரம் : பெர்லின்
நாடு :ஜெர்மனி
தொடங்கப்பட்ட ஆண்டு :1930
சிறப்புகள் : தொல்லியல் ஆய்வுகள் – பெர்காமோன் கோயில், இஸ்லாமிய கலைப்பொருட்கள், இஸ்தார் மண்டபக் கதவு, 5000 ஆண்டுகள் பழம் நகரம் ஊருக்.

பெர்காமொன் அருங்காட்சியகம் (ஆகஸ்ட் 2013)
பெர்காமொன் அருங்காட்சியகம் (ஆகஸ்ட் 2013)

 

இன்றைய துருக்கியின் மேற்குக் கடற்கரை நகரமான பெர்காமும் (துருக்கிய மொழி) நகர் இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பழமையான பேகன் வழிபாட்டு மையமாகத் திகழ்ந்தது. பல ஆண்டுகளின் தொடர்ச்சியான போர், அரசாட்சி மாற்றம், சித்தாந்த மாற்றம், இயற்கை அழிவுகள் இவைகளால் பாதிக்கப்பட்ட இந்த நகரத்தின் எஞ்சிய சான்றுகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனை அப்பகுதி மக்களுக்கோ துருக்கியின் அப்போதைய அரசாங்கத்துக்கோ எழவில்லை. உடைந்து சிதைந்து கிடந்த பெருந்தூண்கள், கோயிற்சுவர்கள், சிலைகளைத் தங்கள் சுய தேவைக்காக மேலும் சிதைத்துவிட்டிருந்தனர் அப்பகுதி மக்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சீறும் சிறப்பும் பெற்று விளங்கிய இந்நகர் 19ம் நூற்றாண்டிலோ அடையாளம் தெரியாமல் சுவடிழந்து மறைந்திருந்த நேரம் அது. 1864ம் ஆண்டு இப்பகுதிக்குத் தொழில் நிமித்தம் வந்திருந்த ஒரு ஜெர்மானிய பொறியியலாளர் கார்ல் ஹூமன் இந்தச் சிதைந்து கிடைந்த நகரின் எச்சங்களைக் கண்டு அதிர்ச்சியுற்றார். விலைமதிப்பற்ற இந்தக் கோயில் மண்டபங்களையும் சிற்பங்களையும் கண்டு அவர் இதனை ஏதாகினும் வகையில் பாதுகாக்க வேண்டும் என்று மனதில் தீர்மானம் செய்து கொண்டார்.

ஜெர்மனியிலும் அன்றைய துருக்கியிலும் முறையான அனுமதி பெற்று இந்நகரின் அகழ்வாராய்ச்சிப் பணியில் இறங்கினார். 1878ம் ஆண்டில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடங்கின. அவரது முயற்சி வீண் போகவில்லை. அவருக்குக் கிடைத்ததோ விலைமதிக்க முடியாத ஒரு பரிசு. பண்டைய கிரேக்க தெய்வம் ஸியூஸ் (Zeuz) க்காக எழுப்பப்பட்ட கோயில் முழுமையாக இவ்வாய்வில் அகழ்ந்தெடுக்கப்பட்டது!

1886 வரை இந்த அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. அன்றைய துருக்கி அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டதன் அடிப்படையில் அகழ்ந்து எடுக்கப்பட்ட இக்கோயில் முழுமையாக ஜெர்மனியின் பெர்லின் நகருக்குக் கொண்டு வரப்பட்டது. உலக அகழ்வாராய்ச்சி வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற ஒரு அகழ்வாராய்ச்சியாக இது இன்றளவும் திகழ்கின்றது.

1878ல் கார்ல் ஹுமனின் குழு அகழ்வாராய்ச்சிப் பணியில்.
1878ல் கார்ல் ஹுமனின் குழு அகழ்வாராய்ச்சிப் பணியில்.

ஸியூஸ் கடவுளுக்காகக் கட்டப்பட்ட இக்கோயில் இன்று வரை பழம் நகரான பெர்காமோன் நகரிலேயே இருந்திருந்தால் என்ன நிலைக்கு உள்ளாகியிருக்குமோ எவரும் அறிகிலர். தொல்லியல் ஆராய்ச்சியினாலும் ஒரு தனி மனித முயற்சியாலும் இக்கோயில் முழுமையாகக் காப்பாற்றப்பட்டு இன்று ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் உள்ள பெர்காமோன் அருங்காட்சியகத்தில், உலக மக்கள் அனைவரும் வந்து பார்த்து மகிழும் சந்தர்ப்பத்தை அளித்திருக்கிறது.

பெர்காமோன் கோயில் ஜெர்மனிக்குக் கொண்டு வரப்பட்ட சமயம் முதலில் `போட` அருங்காட்சியகத்தில் (Bode Museum) தான் வைக்கப்பட்டது. ஆனால் இந்த அருங்காட்சியகம் இக்கோயிலின் சிறப்பை முழுமையாக வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கவில்லை. இதனை மனதிற்கொண்டு புதிய அருங்காட்சியகம் ஒன்று அமைக்க வேண்டியதன் அவசியம் உருவாகியது. அந்தச் சிந்தனையின் அடிப்படையில் தோன்றியதே இன்றிருக்கும் பெர்காமோன் அருங்காட்சியகம். 1910 முதல் 1930 வரை இப்புதிய கட்டிடப் பணிகள் நடைபெற்றன.

முதலாம் உலகப் போரின்போது ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சனைகளையும் சமாளித்து இந்த அருங்காட்சியகப் பணிகள் தொடர்ந்தன. இருபது ஆண்டுகால உழைப்பில் இந்த அருங்காட்சியகம் 1930ம் ஆண்டு பொதுமக்கள் பார்வைக்ககாகத் திறக்கப்பட்டது. 1933ம் ஆண்டு ஹிட்லரின் நாஸி கட்சி வெற்றி பெற்று அடோல்வ் ஹிட்லர் பெர்லினைத் தலைமையகமாகக் கொண்டு ஆட்சி புரிந்த காலத்தில் பெர்கமோன் அருங்காட்சியகம் பெர்லினின் முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது. பெர்கமோன் அருங்காட்சியகத்தில் உள்ள ஸீயூஸ் கடவுளுக்கான பெர்கமோன் கோயில் கட்டிடத்தின் தூண்களின் வடிவிலே ஆழ்ந்த விருப்பம் கொண்டிருந்த ஹிட்லர் இதே அமைப்பில் தனது தலைமையகத்தைக் கட்டினார். அந்த மண்டபம் இன்று இல்லை. ஆனால் பெர்காமோன் கோயிலோ இரண்டாம் உலகப்போரினால் ஏற்பட்ட பெரும் சேதத்தையும் தாங்கிக் கொண்டு அதிலிருந்து மீண்டு இன்றளவும் பெர்லின் நகரில் அழியாது இருக்கிறது.

பெர்காமோன் அருங்காட்சியகத்தினுள்ளே வீற்றிருக்கும் ஸியூஸ் கடவுளுக்கான அக்ரோபோலிஸ் : அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட முழு கோயில் (ஆகஸ்ட் 2013)
பெர்காமோன் அருங்காட்சியகத்தினுள்ளே வீற்றிருக்கும் ஸியூஸ் கடவுளுக்கான அக்ரோபோலிஸ் : அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட முழு கோயில் (ஆகஸ்ட் 2013)

பெர்கமோன் கோயிலை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இந்த அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப்பெற்ற பொருட்கள் மட்டுமே இங்கு சேகரிக்கப்பட்டுள்ளதாக எண்ணி விட வேண்டாம். இங்கே குறிப்பிடத்தக்க ஜெர்மானிய அகழ்வாராய்ச்சி வல்லுனர்கள் பலர் பண்டைய ஈராக், ஈரான், பாபிலோன், ஊருக், அசூர்,ஆகிய இடங்களில் வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்த்திய அகழ்வாராய்ச்சிகளில் கண்டெடுக்கப்பட்ட பிரம்மாண்டமான வரலாற்றுச் சான்றுகள் பல நிறைந்திருக்கின்றன.

இந்த அருங்காட்சியகத்திற்கு நான் இருமுறை சென்று வந்திருக்கிறேன். 2010ம் ஆண்டில் ஒரு முறையும் இவ்வாண்டில் சில வாரங்களுக்கு முன்னரும் இங்கு செல்லும் வாய்ப்பு எனக்கு அமைந்தது.

பண்டைய பாபிலோனின் இஸ்டார் கதவு (Ishtar Gate), ஊருக் நகரம், சுமேரிய அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புகள் ஆகியவை பெர்காமோன் கோயிலைப் போன்றே இந்த அருங்காட்சியகத்திற்குச் சிறப்பு சேர்க்கும் ஏனைய விலைமதிக்க முடியாத கண்டுபிடிப்புகளாகத் திகழ்கின்றன. இந்த அருங்காட்சியகத்தின் ஒரு தனிச்சிறப்புப் பகுதியாக இஸ்லாமிய கலைப்பொருட்களின் நிரந்தரக் கண்காட்சியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனைப் பற்றி ஒரு தனிப் பதிவு ஒன்று தேவை என நான் கருதுவதால் விரிவாக பின்னர் ஒரு பதிவில் எழுத நினைத்திருக்கிறேன். அதே போல பெர்காமோன் கோயிலின் முக்கியத்துவத்தை நினைத்து இதற்காக ஒன்று அல்லது இரண்டு தனிப்பதிவுகளை வழங்க நினைத்திருக்கிறேன். இவற்றை எழுதுவதற்கு முன்னராக இந்த அருங்காட்சியகத்தில் இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் நான் சென்றிருந்த வேளையில் அங்கு சிறப்புக் கண்காட்சியாக ஏற்பாடாகியிருந்த 5000 ஆண்டு பழமை வாய்ந்த ஊருக் நகரத்திற்கு உங்களை பெர்காமான் அருங்காட்சியகத்தின் வழியாக அழைத்துச் செல்கிறேன். உடன் வரத் தயார் தானே?

தொடரும்….!

சுபா

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் (3) – பெர்காமோன் அருங்காட்சியகம் பெர்லின், ஜெர்மனி

 1. ////உடன் வரத் தயார் தானே?////

  ஓ!. ரெட்ட ரெடி!!. கரும்பு தின்னக் கூலியா!. தங்கள் கட்டுரையைப் படிக்கும் போது, நானே ஒரு சிறுமியாகி, வியப்பால் விரிந்த விழிகளோடும் ஆர்வத்தோடும் தங்களுடன் கூட வந்து சுற்றிப் பார்க்கும் பரவச உணர்வு ஏற்படுகிறது. ஒவ்வொரு வரியையும் இரு முறை படித்து, நினைவில் நிறுத்திக் கொண்டேன். அற்புதமான பகிர்வு!. மிக்க நன்றி சுபா!

  அன்புடன்
  பார்வதி இராமச்சந்திரன். 

 2. உடன் வரத் தயார் 🙂
  நல்ல தொடர். மேலும் படிக்க ஆர்வமாக உள்ளேன்.
  இப்பணியை செவ்வனே செய்து அழகுற நிறைவு செய்ய எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு வல்லமையை அருளட்டும் என வேண்டுகிறேன்.

  பி. கு: (Just musings)
  ஒரு நாட்டின் கலைப் பொக்கிஷத்தை ஒப்பந்தம் போட்டோ போடாமலோ தூக்கிச் செல்வது, அவர்கள் ஊரில் வைத்துக் கொள்வது எனபது ஜீரணிக்கக் கொஞ்சம் கஷ்டமாகத் தான் உள்ளது. ஏனென்றால் நம் நாட்டில் இந்த சோகம் நடந்தது. (உதாரணம்: கோகினூர் வைரம்).

  நமது வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தின் கல்யாண மண்டபத்து ஆங்கிலேயர் இலண்டனுக்கு தூக்கிக்கொண்டு போக கப்பலே கொண்டு வந்தார்கள். அவனுக்கு ஒப்பந்தம் போட வேண்டிய அவசியம் இல்லை அப்போது. ஆட்சி மமதையில் தூக்கிப்போக வந்தான். அந்தக் கப்பல் முழுகியதோ, நம் கலைப் பொக்கிஷம் பிழைத்தது. இப்படி இன்னும் எத்தனையோ?

 3. அருமை. முதல்வராம் தங்கள் கட்டுரையின் தலைப்பைப் படித்த பொழுது ஏற்பட்ட எதிர்பார்ப்பை தங்களின் சுவாரஸ்யமான எழுத்தின் மூலம் 100% நிறைவேற்றி இருக்கிறீர்கள்.

  நண்பர் புவனேஷ்வர் சொல்லுவது போல ஒரு நாட்டின் கலைப் பொக்கிஷத்தை எடுத்துச் செல்வது என்பது கொஞ்சம் நெருடலாகத்தான் இருக்கிறது.

  தொடர்ந்து பல அருங்காட்சியகங்களுக்கு உங்களுடன் சேர்ந்து பயணிக்கக் காத்திருக்கிறேன். நன்றி!

 4. திரு.புவனேஷ்வர்.  நீங்களும் உடன் வருவதில் மகிழ்ச்சி. 🙂

  நீங்கள் சொல்வது புரிகின்றது. இது தொடர்பான சர்ச்சையில் பல நாடுகளுக்கிடையே தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கின்றன. ஒருபக்கம் இதனால் நன்மை இருப்பதையும் காண்கின்றேன். ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்ட பெருவாரியான அயலக அகழ்வாராய்ச்சியினால் பல விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. உதாரணத்திற்கு எகிப்தின் அனைத்து பண்டைய நாகரிகம் பற்றிய ஆய்வுகளின் வெளிப்பாடும் ஐரோப்பியர் முயற்சிகளினால் நிகழ்ந்தவையே.  இது முழுக்க சரி என்று சொல்லி விட மாட்டேன். லண்டன் அருங்காட்சியத்தில் இருந்த நடராஜரை டாக்டர்.நாகசாமியும் அவர் குழுவும் தமிழகம் மீட்டு வந்தனர். ஆனால் இன்னமும் தமிழகத்திலிருந்து சிலை கடத்தல் அயல்நாடுகளுக்குச் சென்று கொண்டுதானிருக்கின்றது. இல்லையா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *