2012 – 2013 ஆண்டிற்கான சிறுகதைப் போட்டி முடிவுகள்
அன்பு நண்பர்களே,
வணக்கம். கடந்த ஓராண்டு காலமாக பல சிறுகதைகள், மிக வித்தியாசமான கதைக் களங்களுடன், தேர்ந்த எழுத்தாளர்களின் சிறப்பான நடையுடன், எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற இடைவிடாத முயற்சியில் தன்னை மென்மேலும் பட்டை தீட்டிக்கொண்டு களம் இறங்கியவர்களின் அருமையான படைப்புகள் வாசகர்களாகிய நம் அனைவருக்கும் பெருவிருந்தாக அமைந்தது. ஓராண்டு முடிந்து விட்டது என்று நினைத்துப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. மாதா மாதம் தவறாமல் குறிப்பிட்ட நேரத்தில், தம் இடைவிடாத பணிகளுக்கிடையேயும், காலந்தவறாமல் தம் தீர்ப்பை வழங்கி வந்தார் ஐயா வெங்கட் சாமிநாதன் அவர்கள். அவர்களின் கடமையுணர்ச்சியைப் பார்த்து பல முறை வியந்திருக்கிறேன் நான். அவருக்கே உரிய தனிப்பட்ட பாணியில் விமர்சனங்கள் சுவை கூட்டின. அதன் மூலம் தங்களை மேலும் செம்மையாக்கிக் கொள்ள எழுத்தாளர்களுக்கு வாய்ப்பாக அமைந்தது. அந்த வகையில் உயர்திரு வெங்கட் சாமிநாதன் ஐயா அவர்களுக்கு நம்முடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுவோம். ஐக்கியா நிறுவனத்தின் உரிமையாளர், எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர், திரு வையவன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதையை எழுதியவருக்கு தாம் அறிவித்திருந்தபடி பரிசுத் தொகையை அனுப்பியிருந்தார். அவருடைய முழுமையான ஒத்துழைப்பு நமக்கு பெரிய பலமாக அமைந்திருந்தது. மேலும் தொடர்ந்து சில போட்டிகள் ஐக்கியா தொண்டு நிறுவனம் மூலமாக விரைவில் அறிவிக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
போட்டி ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெற்ற இத்தருணத்தில் இறுதிக்கட்ட திறனாய்வை மேற்கொள்ள பிரபல எழுத்தாளர் திரு நாஞ்சில்நாடன் அவர்கள் மனமுவந்து இசைந்துள்ளார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் அனைத்திற்கும் அற்புதமாக மதிப்புரை வழங்கி சிறப்பித்திருக்கிறார்கள். அவருக்கும் நம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
போட்டியில் வெற்றிபெற்ற திரு பழமைபேசி அவர்களுக்கு நம் மனம் நிறைந்த வாழ்த்துகள். பங்கு பெற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும் பாராட்டுகள். தொடர்ந்து நம் வல்லமையுடன் இணைந்திருங்கள் . புதுமையான பல போட்டிகளைச் சந்திக்கக் காத்திருங்கள் நண்பர்களே!
அன்புடன்
பவள சங்கரி
ஆசிரியர்
நாஞ்சில் நாடன்
ஆகஸ்ட் 2013-ல் சென்னை கம்பன் விழாவில், பெரியவர் இலக்கியச் சிந்தனை ப. இலட்சுமணன் அவர்களிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது, கவலை தொனிக்கும் குரலில் குறிப்பிட்டார் – தமிழில் நாவல் வரத்து அருகி, சிறுகதை எழுத்து குறைந்து போய்விட்டது என. எனக்கும் அந்தக் கருத்தே தான். காரணம் கேட்டு வாடி என ஒற்றை வரியில் நாம் தட்டிக் கழித்து விட இயலாது. படைப்பாற்றல் குறைந்து போனதா, எழுத்து ஊக்கம் தளர்ந்து வருகிறதா, வாழ்க்கை பற்றிய பார்வையும், அனுபவமும் இல்லாமல் ஆகிவிட்டதா? முயற்சி இனமையா, மொழி வசப்படவில்லையா, உழைக்கத் தயாரில்லையா, என்ன எழுதி என்ன ஆகப்போகிறது எனும் சலிப்பா, இவை எல்லாமுமேயா, அல்லது இவற்றுக்கும் வெளியேயும் வேறுள காரணங்களா?
மாய்ந்து, மாய்ந்து எழுதத் தேவையற்று, எளிதான கணினி தட்டச்சு வந்துவிட்டது. முன்னைப்போல வெளியீட்டு சிரமங்கள் இல்லை. தாளிதழ்கள் இல்லை என்றாலும் மின்னிதழ்கள் பல உள. எதிர்காலத்தில் அரசு நூலக ஆணைகளை நம்பி, புத்தகம் எழுதவும், வெளியிடவும் இயலாது. எந்தக் காலத்திலும் அது எழுத்தாளன் கவலையாக இருந்தது இல்லை. அவனைப் பொறுத்தவரை, விற்றாலும் காப்பீடு இல்லை, விற்காவிட்டாலும் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் வாசகனை , ஒற்றைப் பிரதி விற்பனையை நம்பித்தான் படைப்பாளியும் வெளியீட்டாளர்களும் இயங்க வேண்டியது இருக்கும்.
பேரம் இல்லாதிருந்த அல்லது சின்ன ஊழலுடன் இருந்த அரசு நூலகத் துறை இன்று நூலகங்களுக்கு புத்தகம் வாங்கினாலும், தமது பை நிறையும் என்று கண்டுகொண்டது. வெளியே உரத்து, சமத்துவம், சகோதரத்துவம், சமூக விடுதலை என்று பேசுகிறவர்களும், தமது நிறுவனங்களுக்கான ஆணைகள் பெற அனைத்து குறுக்கு வழிகளையும் அரசியல் செல்வாக்கையும் கட்சி அனுகூலங்களையும் பயன்படுத்திக்கொள்கிறார்கள். காரசாரமாகக் கட்டுரைகளும், தலையங்கங்களும் எழுதுகிறவர்களும் இதனை நோகாமல், கூசாமல் செய்கிறார்கள்.
அது கிடக்க…….
‘இலக்கிய சிந்தனை’ அரை நூற்றாண்டுக்கும் மேலாக மாதம் தோறும், ஆண்டு தோறும் நல்ல சிறுகதைகளைத் தெரிந்து, பரிசளித்து ஊக்கப்படுத்தி வரும் அமைப்பு. அவர்களது நடுவர்களின் தெரிவுகளில், பல சமயம் தீவிர, நவீன படைப்பாளிகளுக்கு விமர்சனம் உண்டு என்றாலும் பணி போற்றுதலுக்கு உரியதுதான். அதில் எனக்கு இரண்டாம் கருத்து இல்லை. திரு ப.இலட்சுமணன் அவர்களுடைய கவலை மெய்யானது.
குறிப்பிட்டுச் சொல்லும்படியான தமிழ்ச் சிறுகதையாளர்கள் பலரும் இன்று நாற்பது அகவை கடந்தவர்கள். இளம் படைப்பாளிகள் என்று முப்பத்தைந்து வயதுக்கு உட்பட்டவர்கள் சிலரை மட்டுமே நம்மால் குறிப்பிட முடிகிறது. சாகித்ய அகாதமிக்கு வேண்டுமானால் நூற்றுக்கணக்கில் கிடைப்பார்கள். அவர்கள் தர மதிப்பீடு இலக்கியம் மட்டுமே அல்ல. ஈழத்துப் படைப்பாளிகள் பலர் இன்னும் தீவிரத்துடன் இயங்கி வருகிறார்கள். அவர்களது அனுபவக் களம் இணைய தளத்தில் புகைப்பட திரைப்படக் காட்சிகளில், புத்தகங்களில் வாசித்த அனுபவங்கள் அல்ல. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின், அகதி வாழ்க்கையின் சொந்த வலிகள். சமீபத்தில் ‘சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்’ என்று இளங்கோ எனும் ஈழத்தமிழ் இளைஞரின் சிறுகதைத் தொகுப்பு ஒன்று வாசித்தபோது எனக்கது மீண்டும் உறுதியானது. இது ஒரு பானைச் சோற்றில் ஒரு சோறு.
‘உயிர் எழுத்து’ போன்ற சில இதழ்கள் தவிர்த்து, மற்றெவரும் ஒன்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளை ஒரு இதழில் வெளியிடுவதில்லை. அவற்றுள்ளும் சில குறிப்பிட்ட எழுத்தாளர்களுக்கே பொட்டுக் கட்டிக் கொண்டுள்ளன. இந்தச் சூழலில், இணையதள இதழ்களில் நடக்கும் சிறுகதை முயற்சிகள் உற்சாகமூட்டுகின்றன.
‘ஐக்கியா & வல்லமை.காம்’ நடத்திய சிறுகதைப் போட்டிக்கு வந்த 2012 ஆகஸ்ட் முதல் 2013 ஜூலை வரையில் எழுதப்பட்ட, எட்டு எழுத்தாளர்களின் பதினேழு சிறுகதைகளை வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இவை அனைத்தும் மதிப்புறு திறனாய்வாளர், திரு. வெங்கட் சாமிநாதன் தெரிவு செய்தவை. எனக்குக் கிடைத்த நம்பிக்கை, தமிழ்ச் சிறுகதை கவலைக்கிடமான நிலையில் இல்லை என்பது.
கவனமாக வாசிக்கும்போது, கதை கூறலின் பாணி சுதந்திரம் பெற்று காணப்படுகிறது என்பதும், வழக்கமான கதை கூறல் உத்தியில் இருந்து வெகுவாக விலகி, கதைகள் யோசிக்கவும் எழுதவும்படுகின்றன என்பதும் ஆறுதலான விடயங்கள். வெ.சா. தெரிவு செய்தபின் மறுபடியும் அவற்றில் என்ன தெரிவு செய்வது என்று எனக்குத் தோன்றியது. எல்லாக் கதைகளுமே பண்பட்ட எழுத்து. காலம் அவர்களுக்கான கவனிப்பையும் இடத்தையும் பெற்றுத் தரும். மேலும் இந்த எட்டு படைப்பாளிகளுமே எனக்கு முற்றிலும் புது முகங்கள்.
பழமைபேசியின், ‘செவ்வந்தி’, பார்வதி இராமச்சந்திரனின், ‘நம்மில் ஒருவர்’, ஜெயஸ்ரீ சங்கரனின், ‘நாலடிக் கோபுரங்கள்’ எனும் கதைகள் நல்ல கதைகள் என்றபோதும், வாசகன் பழகிய தடத்திலேயே பயணம் செய்கின்றன. சுதாகரின், ‘காட்சிப் பிழை’ வேறுபட்டதோர் மனநிலையை நுட்பமாகச் சொல்கிறது. அரவிந்த் சச்சிதானந்தத்தின், ‘கைக்குட்டைகளும் டிரான்ஸ்வெஸ்டிசமும்’ நல்ல முயற்சி. ஆனால் சற்று கூர்மையும், தீவிரமும் குவியப் பெற்றிருக்கலாம். தேமொழியின், ‘ஜினா என்றொரு க்ருயல்லா’ சுறுசுறுப்பான வாசிப்பைத் தருகிறது. ஆங்கில வாசிப்புப் பழக்கம் உடையவருக்குப் புதுமை தராதது.
மணி ராமலிங்கத்தின் ‘நோ- பால்’ படைப்பு நேர்த்தியும், தேர்ச்சியும் கொண்ட எழுத்து. மாதவன் இளங்கோவின், ‘அம்மாவின் தேன்குழல்’ நல்ல கதை. தாய் மனத்தின் ஆழமன நீரோட்டம். பேசுவது மற்றொரு சிறந்த கதை. பழமைபேசியின், ‘மணவாளன்’ இந்தக் கதையின் பிற்பகுதி, கவிதையின் ஆழம் கொண்டது. வரலாற்றில் கவித்துவம் உடைய சிறுகதைகளே நின்று வாழ்கின்றன.
எனக்குத் தரப்பட்ட இந்தப் பதினேழு கதைகளில், சிறந்த மூன்று என வரிசைப்படுத்தச் சொன்னால்,
1.மணவாளன் – பழமைபேசி
2. நோ-பால் – மணி ராமலிங்கம்
3. அம்மாவின் தேன்குழல் – மாதவன் இளங்கோ
என்பதாக இருக்கும் அது. என்னை ஒத்த இன்னொருவர் இந்த வரிசையை மாற்றவும் கூடும். அது அவ்வளவு முக்கியம் இல்லை. தமிழில் நல்ல சிறுகதைகள் இன்னும் எழுதப்படுகின்றன எனும் மகிழ்ச்சியே போதுமானது.
ஏனெனில் முதல், இரண்டு, மூன்று எனும் வரிசை வெறும் சடங்குதான். ஓட்டப் பந்தயம் என்று எடுத்துக் கொண்டாலும், அந்தக் குறிப்பிட்ட நாளில், அந்த மைதானத்தில், அந்தக் கணத்தில், அந்தத் தட்ப வெப்பத்தில் அவர் முதலாவதாக வந்தார் என்று சொல்வதே சரியானதாக இருக்கும்.
எட்டுச் சிறுகதை ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துகள். ஐக்கியா & வல்லமை.காம் நிறுவனங்களுக்கும் எனது நன்றியும், பாராட்டும். இத்தொகுப்பில் கண்ட எட்டுச் சிறுகதை ஆசிரியர்களின் தனித்தனித் தொகுப்புகளுக்காகக் காத்திருப்போம்.
மிக்க அன்புடன்
நாஞ்சில் நாடன்
கோவை – 641028
30 – ஆகஸ்ட் – 2013
வாழ்த்துக்கள் பழமைபேசி.
மணி ராமலிங்கம், மாதவன் இளங்கோ ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.
…..தேமொழி
பழமைபேசி மற்றும் மணி ராமலிங்கம், மாதவன் இளங்கோ அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
இதுவரைகாலமும் வந்த கதைகளைத் தெரிவு செய்து கருத்துக்கள் கூறிய திரு வெங்கட் சாமிநாதன் ஐயா அவர்களுக்கும், தேர்வுபெற்ற கதைகளை வாசித்துக் கருத்துக்கூறிய திரு நாஞ்சில் நாடன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
திரு.பழமைபேசி, திரு.மணி இராமலிங்கம் மற்றும் திரு.மாதவன் இளங்கோ ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். சிறுகதை உலகில் நீங்கள் மேலும் பல சாதனைகளைப் படைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
சிறந்த கதாசிரியர்கள் பழமைபேசி, மணிராமலிங்கம், மாதவன் இளங்கோ ஆகிய மூவருக்கும் வாழ்த்துக்கள்.
இந்தப் போட்டியைத் தாமே முன் வந்து வல்லமையில் தொடங்கிய வையவன் அவர்களுக்கும் மாதந்தோறும் அனைத்துக் கதைகளையும் வாசித்து, மதிப்பிட்டு, சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்த வெ.சா. அவர்களுக்கும் 17 கதைகளை வாசித்து, ஆண்டின் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுத்த நாஞ்சில் நாடன் அவர்களுக்கும் முதற்கண் நன்றிகள்.
வெற்றி பெற்ற பழமைபேசி அவர்களுக்கும் ஆர்வத்துடன் பங்கேற்ற எழுத்தாளர் பெருமக்களுக்கும் வாழ்த்துகள் – பாராட்டுகள்.
ஒவ்வொரு கதையையும் உடனுக்குடன் சிறந்த முறையில் வெளியிட்டு, இந்தப் போட்டியை ஒருங்கிணைத்த ஆசிரியர் பவளசங்கரி அவர்களுக்கும் ஆசிரியர் குழுவினருக்கும் தனியே எனது நன்றிகள்.
இந்தப் போட்டியின் மூலம், எழுத்தாளர்களின் படைப்பாற்றல் தூண்டப்பெற்று, புதிய வலுவான படைப்புகள், தமிழுக்குக் கிடைத்துள்ளன. இந்த எழுத்தாளர்கள் மேலும் ஊக்கம் பெற்று, வெ.சா., நாஞ்சில் நாடன் ஆகியோரின் விமர்சனங்களை உள்வாங்கி, தம் படைப்புகளை மேலும் செம்மையாக்குவார்கள் என நம்புகிறேன்.
ஒத்த கருத்துள்ள ஆர்வலர்களின் ஒத்துழைப்புடன் மேலும் பல போட்டிகளை நடத்த வல்லமை காத்திருக்கிறது. விருப்பமுள்ள அன்பர்கள், ஆசிரியர் பவளசங்கரி அவர்களைத் தொடர்புகொள்ள அழைக்கிறேன்.
சிந்தனை, செயல், முன்னேற்றம்!
வல்லமை இதழில் இதுவரை வெளியாகியுள்ள என்னுடைய கதைகள் அனைத்தையும் பெருமதிப்பிற்குரிய வெ.சா அவர்கள் வாசித்து, அவற்றில் சிலவற்றை சிறந்த கதைகளாகத் தேர்ந்தெடுத்து விமர்சித்தது, நான் சற்றும் நினைத்தே பார்த்திராத நிகழ்வு. தற்போது, நான் மிகவும் விரும்பி வாசிக்கும், நேசிக்கும் எழுத்து ஆளுமை திரு.நாஞ்சில் நாடன் அவர்களும் எனது ‘அம்மாவின் தேன்குழல்’ சிறுகதையை பாராட்டி எழுதியிருப்பதை எனக்கு கிடைத்திருக்கும் உயரிய விருதாகக் கருதி, அந்த விருதை எனக்கு வல்லமை இதழை அறிமுகப்படுத்திய சகோதரர் சந்தோஷ் அவர்களுக்கும், என்னுடைய எழுத்தை முதன்முதலில் அங்கீகரித்ததோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து எழுத ஊக்கமூட்டி வரும் ஆசிரியர் பவளசங்கரி அவர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்!
சிறந்த கதாசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சகோதரர் பழமைபேசி மற்றும் மணி இராமலிங்கம் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! மேலும், சிறந்த சிறுகதைகளை படைத்த வல்லமையாளர்கள் பார்வதி இராமச்சந்திரன், தேமொழி, ஜெயஸ்ரீ சங்கரன், சுதாகர், மற்றும் அரவிந்த் ஆகியோருக்கும், போட்டியில் பங்குபெற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!!
தமிழ் இலக்கிய உலகின் ஜாம்பவான்கள் இருவரும் எங்களைத் தேர்ந்தெடுத்து, நாங்கள் அறிந்திராத எங்கள் பலத்தை உணர்த்தி, பாராட்டியதோடு விட்டுவிடாமல், எங்கள் அனைவருக்கும் மிகப்பெரிய பொறுப்பை வழங்கியிருப்பதாகவே நான் உணர்கிறேன்.
வல்லமையைப் பற்றி மீண்டும் சொல்லியே ஆகவேண்டும். நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது போல பல இளம் எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட்டு அறிமுகப்படுத்துவதோடு நின்று விடாமல், அவர்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்திவரும் ஒரு ஆரோக்கியமான தளமாக வல்லமை இயங்கி வருகிறது. பணிச்சுமை காரணமாக இரு மாதங்களாக வல்லமையில் எழுத இயலவில்லை. தற்போது திரு.நாஞ்சில் நாடன், திரு.வெ .சா மற்றும் தங்கள் அனைவரின் வாழ்த்துகளும், வார்த்தைகளும் என்னைத் தொடர்ந்து எழுதத் தூண்டுவதாக அமைந்துள்ளது.
வல்லமை மின்னிதழின் ஆசிரியர் குழு மற்றும் ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கும், படைப்பாளிகளை ஊக்கப்படுத்திவரும் துரோணர்கள் அனைவருக்கும், சக படைப்பாளிகளுக்கும், வாசகர்களுக்கும், வல்லமை தளம் மூலம் எனக்கு அறிமுகமாகிய நண்பர்கள் அனைவருக்கும், ஐக்கியா அறக்கட்டளைக்கும் என் வாழ்த்துகளும், நன்றியும்!
“வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே!”
வெற்றி பெற்ற திரு.பழமைபேசி அவர்களுக்கும், திரு.மணி ராமலிங்கம், திரு.மாதவன் இளங்கோ ஆகியோருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
திரு.நாஞ்சில் நாடன் அவர்கள், தேர்ந்தெடுத்த எட்டு சிறுகதை ஆசிரியர்களுள் ஒருவராக, ‘நம்மில் ஒருவருக்காக’ என் பெயரும் இருப்பதைப் பார்த்து பேருவகை அடைந்தேன். இது என்னை மேன்மேலும் வளர்த்துக் கொள்ள உதவும் ஒரு தூண்டுகோல். திரு.நாஞ்சில் நாடன் அவர்களுக்கும், திரு.வெ.சா அவர்களுக்கும் வல்லமை மின்னிதழுக்கும் என் மனமார்ந்த நன்றி.
வாழ்த்திப் பாராட்டியவர்களுக்கும், உடன் பங்கேற்றவர்களுக்கும், போட்டி நடத்திய ஆன்றோருக்கும் எனது பணிவார்ந்த நன்றிகள்!!