இலக்கியம்கவிதைகள்

என்று கதவு திறக்கும்?

 

என்று கதவு திறக்கும்?

(சொடுக்கினால் செவிக்கும் விருந்து!)

 

ஆர்.எஸ்.மணி

 

Loves to create- The Record 1998-

 

 

ஏன் இன்னும் இந்தக் கதவு திறக்கவில்லை?

என் பயணம்தான் இன்று முடிந்துவிட்டதே!

 

அன்று குழந்தையாய்த் தவழ்ந்தேன்

இன்று கிழவனாய் நிற்கின்றேன்

 

நடந்து வந்த பாதையிலேதான்

எத்தனை எத்தனைத் திருப்பங்கள்!

கண்டு ரசித்த காட்சிகளில்

எத்தனை வண்ண ஜாலங்கள்!

 

வாழ்க்கையெனும் தோட்டத்தில்

சேர்த்து வைத்த செல்வத்தில்

நானே பறித்த பூக்களுண்டு – பிறர்

தானாய் கொடுத்த மலருமுண்டு

 

கணக்கிலடங்கா பூக்களெல்லாம்

வாடி கீழே விழுந்தபின்னே

மிஞ்சி இன்னும் இருப்பதோ

என் ஆசைத்தீயின் ஆறாத காயங்கள்

 

இன்னும் ஏன் இந்தக் கதவு திறக்கவில்லை?

என் பயணம்தான் அன்றே முடிந்துவிட்டதே!

 

நான் சேர்த்த சொத்தையெல்லாம்

என் தோளில் சுமந்து வந்தேன்

ஒரு பையிலே கனத்திடும் பாவம்

இன்னொன்றில் புண்ணிய பூஜ்ஜியம்

 

எவ்வளவு நீரை நான் குடித்தபோதும்

எந்தன் தாகம் தணியவேயில்லை

உடம்பு எல்லாம் தேய்ந்த பின்னும்

உள்ளம் ஏனோ ஓயவேயில்லை

 

உறவு என்று சொல்லிக் கொள்ள

ஒருவரும் இங்கே காணவில்லை

என்னைச் சுற்றி வருவதெல்லாம் – என்

சென்றகால நினைவுப் பேய்கள்!

 

இன்னுமா இந்தக் கதவு திறக்கவில்லை?

என் பயணம்தான் என்றோ முடிந்துவிட்டதே!

 

—ஆர்.எஸ்.மணி

(கேம்ப்ரிஜ், ஆன்டேரியோ, கனடா)

இந்தப் பாடலைக் கேட்டு மகிழ, இங்கே சொடுக்குங்கள்:

Print Friendly, PDF & Email
Share

Comments (3)

 1. Avatar

  ஆர். எஸ். மணி அவர்களின் கவிதையும், ஒலி வடிவில் அதை வாசித்தளித்தமுறையும் அருமையாகவும் சிறப்பாகவும் இருக்கிறது.
  செய்தித்தாளில் குறிப்பிட்டது போன்ற படங்களையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  அன்புடன்
  …..தேமொழி 

 2. Avatar

  காலம் மிகச்சிறியது. திரும்பி பார்க்கையில் தூரம் தான் தெரியுமே தவிற வேறில்லை.

  //கணக்கிலடங்கா பூக்களெல்லாம்
  வாடி கீழே விழுந்தபின்னே
  மிஞ்சி இன்னும் இருப்பதோ
  என் ஆசைத்தீயின் ஆறாத காயங்கள்///

  ஓடி ஆடியவருக்கு மீதமாய் இருப்பது மேலே சொன்னது மட்டுமே.
  நல்ல கவிதை.

 3. Avatar

  தேமொழி, தனுசு!கவிதையைப் படித்து/கேட்டுக் கருத்து தெரிவித்ததற்கு நன்றி!தேமொழி, என் ஓவியங்களில் சிலவற்றை “வல்லமை”யில் இடுகிறேன்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க