ஈசனுடுக்கை எழுப்பிய ஒளியில் உயர்ந்தது எதுவோ!

11

 

கோ. ஆலாசியம்  

Alasiam G Photo

(பெற்றோர் இட்ட பெயர்: ஹாலாஸ்ய சுந்தரம்)

நான் இந்தியாவில் பிறந்து வளர்ந்து இப்போது சிங்கப்பூரில் வாழ்ந்து வருகிறேன்.

கப்பல் கட்டும் துறையில் மின் மற்றும் மின்னணுவியல் பொறியியளாராக பணி புரிந்து வருகிறேன்.

மகாகவி பாரதியின் மீது தீவிர பற்று கொண்ட நான் தமிழை தொடர்ந்து படித்து வருகிறேன்…

பேரறிவாளர்களும், தமிழறிஞர்களும் வந்து குழுமி தாம் கற்று ஆய்ந்து புரிந்து உணர்ந்த நல்ல கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் இந்த வல்லமையில் எனது இந்தக் கவிதையையும் பதிவு செய்கிறேன்.

எனது வலைப்பூ: http://tamizhvirumbi.blogspot.sg/

 

 

 

Sri Natarajar

ஒட்டிப் பிறந்த யிரட்டயரின் பொருட்டு

முட்டி மோதிக் கொள்வதோ -ஈசனுடுக்கை

தட்டிப் பிறந்த இருவரின் பெயரால்

கட்டிப்பிடித்து ருண்டடித்துக் கொள்வதோ

 

பாரினி லுயரிய பாரதத்தைப் படைகொண்டு

பிரித்தாளெண்ணிய ஆங்கிலேயன் காலத்தில் -கால்டுவெல்

கூறிய ஆரியத் திராவிட கட்டுக் கதைகளை

கூரியப்புத்தி யிலாய்ந்துப் பொய்யென்றுரைப்பர்

 

திராவிடனென்றும் திராவிட மொழிகளென்றும் பொய்

பரப்பிய அம்மதப்போதகர் மேலுமு ரைப்பார்

பரந்ததுலகில் திராவிடனென்பான் துரானிய வம்சமென்றெவன்

கறந்ததிவ்விசத்தை பருகியதால் கசந்தோமே

 

மலர்மன்னன் கூர்ந்து ஆய்ந்துத் தேர்ந்தோர்ந்து

விளம்பியப் புதுநூலதை வாசித்திடினில் -சங்கரன்

விளக்கிய திராவிடனவன் தென்னாட்டானென யாவரும்

விளங்கிடுவது தீர்க்கமென அறிவோமே!

 

ஒருத்தாயின் முலைகளில் சுரக்கும் அமுதில்

ஒருபுறம் சுரப்பதுயர்வென்றும் மறுபுறம் மாசென்றும்

குறுகிய நோக்கினால் குறிப்பதுப்பொருந்துமோ – அழகின்

முருகுத்தமிழும் வேதமொழியும் இரட்டையரே!

 

சங்கம் வளர்த்த சான்றோரும் அதில்

அங்கம் வகித்த ஆன்றோரும் ஒரு

பங்கமில்லாத் தமிழோடு வடமொழியும் கற்றாரே

அங்ஙனம்கற்காத் தமிழறிஞர் யாருளரோ

 

வேதம்பாடிய விண்ணவர் மொழியினை உயர்பாரதம்தந்த

பகவத்கீதையை படித்துணர்ந்து தம்படைப்பில் புகுத்திடாத

தமிழ்காப்பியக் கவியேதும்கண்டவரைக் காண்கிலேன் அவைதாம்

தந்தையர் மொழியென்றுரைப்பதில் தயங்கிளேன்

 

தமிழ்வேதம் பாடியவள்ளுவனும் தன்னிகரில்லாத் -தண்

டமிழ்க் கவிபாடியக் கம்பனும் -உயர்முத்

தமிழால் கற்பின் கனலியையுல கோரேத்தக்காவியம் 

அமிழ்ந்த இளங்கோவும் நமக்குரைத்ததுவே!

 

பிரிவினைப் பேசுவதொன்றும் அறிவினில் உயர்வாகா

அறிவினிலுயரிய தமிழும் வடமொழியும் சேர்ந்துப்

பயின்றவர் இவ்வுலகில் ஒளிபெற்று நிரந்தரமானார் 

இவ்வறிவினை ஏற்றிடில் கலியும்மாலுமே!

 

அறிவெங்குக் கிடைக்கினும் தவம்கொண்டுப் பருகுவது

அறிவுடையார்ச் செய்யும் செயலே -அன்றி

பிரிவு பற்பலப் பேசியதனை மறுப்பது

அறிவாளி களுக்கே அதி லழகே!

 

இனமொழிப் பேதமில்லைத் தூயறிவினிற்கே – நற்  

குணமும் குற்றமும் உணர்த்தும் கல்விநமக்கே

‘மனமிருந்தால் மார்க்கமுண்டே’ மண்ணில் வாழ்வோருக்கே

 

மனமாச்சரியமொழிப்போம் மனிதநேயம் காப்பதற்கே!

 

இது ஒரு சாமான்யனின் தமிழ் கவிதை! அது  தரும் கருத்துகள் இந்த மன்றத்திலே இருக்கும் தமிழ்ச் சான்றோர்கள் ஏற்பார்கள் என்பதே எனது நம்பிக்கை. உலகில் உள்ளத் தொன்மையான மொழிகளில் முழுமை பெற்ற இரு செம்மொழிகளுக்கும் எனக்கும் தொடர்பிருக்கிறது என்பது எனது பெருமை. அதே வேளையில் கருவிகளை ஆய்வதைவிட அது கொய்து தந்த கனியை சுவைப்பதிலே தான் உண்மையான இன்பமும் இருக்கிறது என்பதே எனது முடிவும்.

மிக்க நன்றியும் அன்புகலந்த வணக்கங்களும் உரியதாகட்டும்.

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

11 thoughts on “ஈசனுடுக்கை எழுப்பிய ஒளியில் உயர்ந்தது எதுவோ!

 1. //ஒரு தாயின் முலைகளில் சுரக்கும் அமுதில்
  ஒருபுறம் சுரப்பதுயர்வென்றும் மறுபுறம் மாசென்றும்
  குறுகிய நோக்கினால் குறிப்பதுப்பொருந்துமோ – அழகின்
  முருகுத்தமிழும் வேதமொழியும் இரட்டையரே!//………

  தெளிவான நோக்கில் அமைந்த கருத்துக்கள். வெள்ளையன் சொன்ன பொய்யை ஆதாயம் தரும் முதலாகக் கொண்டு வியாபாரம் செய்து பெருத்த லாபம் அடைந்தவர்கள் அதிகம்.  தமிழர் தனிமைப்பட்டுப் போய் பாரதத்தாயால் ஒதுக்கப்பட்ட பலவீனப் பிள்ளையாக‌  ஆனதற்கு இந்த பிரித்தாளும் சூழ்ச்சியே காரணம். உண்மையை உரக்கச் சொன்ன உங்களை என்ன சொல்லிப் பாராட்டினாலும் தகும். தமிழுக்கோ, தமிழனுக்கோ, இந்திய சுதந்திரத்துக்கோ, இந்திய நாட்டின் வளர்ச்சிக்கோ எந்த வகையிலும் பாடுபடாதவர்களின், கவைக்குதவாத‌  பிரிவினைவாதம், இன வாதம் பேசி நம்மை மேலும் கீழ்நிலைக்கே கொண்டு செல்பவர்கள் தவறை என்றுணர்வார்களோ? நல்ல பதிவு திரு ஆலாசியம். ஆங்காங்கே சில எழுத்துப் பிழைகள், அவற்றை நீக்கிவிடில் மாசுமறுவற்ற நல்ல பதிவு.

 2. வருக!!, வருக!!. வல்லமையில் தங்கள் முதல் பதிவினை  பதிவிட்டமைக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

  தஞ்சாவூர் ஐயா சொன்னது போல், உண்மையை உரக்கச் சொன்ன உங்களை என்ன சொல்லிப் பாராட்டினாலும் தகும். நிலையில்லாத வாழ்வில், அன்பும், மனித நேயமுமே எந்நாளும் வாழ்வது.

  ///அறிவெங்குக் கிடைக்கினும் தவம்கொண்டுப் பருகுவது
  அறிவுடையார்ச் செய்யும் செயலே -அன்றி////

  அருமையான வரிகள்.

  ////மனமாச்சரியமொழிப்போம் மனிதநேயம் காப்பதற்கே!/////
  முத்திரை வரிகள். அக்ஷர லக்ஷம் பெறும். பகிர்வுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

 3.  ////நல்ல பதிவு திரு ஆலாசியம். ஆங்காங்கே சில எழுத்துப் பிழைகள், அவற்றை நீக்கிவிடில் மாசுமறுவற்ற நல்ல பதிவு.///

  நன்றிகள் ஐயா. 
  ஆமாம், கவனக் குறைவால் தட்டச்சில் வந்த பிழைகளைச் சரி செய்யாதும் விட்டு விட்டேன். இனி கவனமாக இருக்கிறேன். தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் ஐயா!

  ///வருக!!, வருக!!. வல்லமையில் தங்கள் முதல் பதிவினை  பதிவிட்டமைக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.///

  மிக்க நன்றி சகோதரி.

 4. தனது முதல் கவிதையை பதிவு செய்திருக்கும் திரு.ஆலாசியம் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். கவிதை நடை மிகவும் அருமை. ஆழமான கருத்துக்களை அழகாக வழங்கி உள்ளீர்கள்.

  தங்களின் கருத்துக்களில் ஒருசில இடங்களில் எனக்கு மாற்றுக் கருத்து இருக்கும் பொழுதும் “கருவிகளை ஆய்வதைவிட அது கொய்து தந்த கனியை சுவைப்பதிலே தான் உண்மையான இன்பமும் இருக்கிறது என்பதே எனது முடிவும்” என்ற தங்களின் கருத்தை முழுமையாக ஏற்கிறேன். நன்றி!

 5. நண்பர் ஆலாசியத்தின் வருகை நல்வரவாகுக. இன்னும் பல மரபுக்கவிதைகள் தாங்களால் இங்கு படைக்க இருப்பதை அறிந்து மகிழ்கிறேன். முதல் கவிதையே மனிதனுக்குள் வேறுபாடு வேண்டாம் எனும் முழக்கத்தோடு ஆராம்பம். இன்னும் தொடர வாழ்த்துக்கள்.

 6. திரு. சத்-சித்-ஆனந்தம் ஐயா!

  குறிஞ்சிப் பாடும் குயிலென தமிழறிஞர்
  உறிஞ்சிப் பருக கொம்புத்தேன்கவியினை
  அறிஞர் வியக்க அள்ளிவீசும் பெருங்கவியே
  வறிஞரை வளமாக்குமும் வல்லமையே  

  //// ஆழமான கருத்துக்களை அழகாக வழங்கி உள்ளீர்கள்.////
  கருத்திற்கும் கனிவிற்கும் காட்டுகிறேன் நன்றிதனையே!

 7. வில்லெடுத்து வரும் நிலவே! @ புதுமைக் கவி தனுசு

  ///இன்னும் தொடர வாழ்த்துக்கள்///

  வடகிழக்கே கடல்நடுவே குடிகொண்ட 
  இளஞ்சூரியனே இலகுதமிழ் கவியே 
  இடைவிடாப் பணியிலும் இன்பமளிக்க 
  இம்மன்றம் வந்துக்கூவும் புதுக்கவியே 
  வாழ்த்துமக்கு வழங்கிடுவேன் நன்றியினையே!

 8. பிரிவினை பேசுதல்
  அறிவினில் தாழ்வென
  அடித்துச்சொல்லும் கவிதை
  நன்று…!

 9. அண்ணா, வணக்கங்கள். வருக வருக. தாங்கள் வல்லமையில் எழுத வந்தது அடியேனுக்கு மிக்க குதூகலத்தை உண்டு பண்ணி விட்டது. தங்கள் கவிதை அருமை.

  ஒருத்தாயின் முலைகளில் சுரக்கும் அமுதில்

  ஒருபுறம் சுரப்பதுயர்வென்றும் மறுபுறம் மாசென்றும்

  குறுகிய நோக்கினால் குறிப்பதுப்பொருந்துமோ – அழகின்

  முருகுத்தமிழும் வேதமொழியும் இரட்டையரே!

  ஆஹா. நான்மட்டும் அரசனாக இருந்திருந்தால் வாணாள் முழுக்க தங்களுக்குத் தேவையான நிதிக்குவையை நல்கியிருப்பேனே பரிசிலாக! யானோ வல்வினையேன் அரசனல்லேன். அந்தோ!

  ஆயினும் நெஞ்சாரப் பாராட்டுகிறேன் உம்மை.

  தஞ்சை பெரியவறும் பார்வதியாரும் பிறரும் சொன்னவற்றை அடியேன் அடக்கத்துடன் வழிமொழிகிறேன்.

  வருக. நற்றமிழ் விண்டு தருக, நாங்கள் பருக.

  பணிவன்புடன்,
  புவனேஷ்வர்

 10. ///இனமொழிப் பேதமில்லைத் தூயறிவினிற்கே – நற்  
  குணமும் குற்றமும் உணர்த்தும் கல்விநமக்கே
  ‘மனமிருந்தால் மார்க்கமுண்டே’ மண்ணில் வாழ்வோருக்கே///

  மிக நல்லதொரு துவக்கம் ஆலாசியம்.
  மேலும் பல கவிதைகளை எதிர் பார்கிறேன்.

  அன்புடன்
  ….. தேமொழி 

 11. ///பிரிவினை பேசுதல்
  அறிவினில் தாழ்வென
  அடித்துச்சொல்லும் கவிதை
  நன்று…!///

  ///ஆஹா. நான்மட்டும் அரசனாக இருந்திருந்தால் வாணாள் முழுக்க தங்களுக்குத் தேவையான நிதிக்குவையை நல்கியிருப்பேனே பரிசிலாக! யானோ வல்வினையேன் அரசனல்லேன். அந்தோ!
  ஆயினும் நெஞ்சாரப் பாராட்டுகிறேன் உம்மை./// 🙂

  ///மிக நல்லதொரு துவக்கம் ஆலாசியம்.
  மேலும் பல கவிதைகளை எதிர் பார்கிறேன்.////

  திருவாளர்ஜெகதீசன்ஐயா, சகோதரர் புவனேஷ் மற்றும் சகோதரியார் தேமொழி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *