குன்றக்குடி அடிகள்

24.  அழுக்காறு தீண்டா உள்ளம் பெறுக!

மனிதன் வெற்றி பெறுவது குணநலன்களினாலேயாம். குணநலன்களுடன் ஊக்கமும், திறனும் அமையின் மேலும் புகழ்மிக்க வாழ்க்கை கிடைக்கும். தீய குணங்கள் தாமே விலகா. நற்குணங்களைப் பயில்வதன் மூலமே தீய குணங்கள் அகலும். நற்குணங்கள் வளர்க்கப் பெறுவன. தீய குணங்கள் தானே வளர்வன. மனத்தைக் கெடுக்கும் தீய குணங்களுள் தலையாயது அழுக்காறு. அதாவது மற்றவர் பெறும் பெருஞ் சிறப்புகளைக் கண்டு மகிழ இயலாத உள்ளம் பெறுதல்; மற்றவர் பெறும் பேறுகளைப் பாராட்டும் உணர்வின்மை; மற்றவர் பெற்றுள்ள பெருஞ்சிறப்புகளை அங்கீகரிக்க மனம் இல்லாமல் குற்றங்குறைகளைக் கூறுதல். இவையெல்லாம் அழுக்காற்றின் இயல்புகள். அழுக்காறுடையான், தான் ஒன்றைப்பெற முயல மாட்டான். மற்றவர்கள் பெற்றிருப்பவைகளுக்குக் களங்கம் கற்பிக்கவே முயற்சி செய்வான். அதனால், தான் நலம் பெறும் முயற்சிகளில் அவனுடைய மனம் தலைப்படாது. கல்வி போன்றவற்றில் அழுக்காறு கொள்ளலாம் என்று சிலர் அறியாமல் கூறுவார். இது தவறு. ஒரு பொழுதும் அழுக்காறுடையார் நன் முயற்சியில் ஈடுபடார்; நன்னெறியில் நிற்க ஒருப்படார். அழுக்காற்றினைப் “பாவி” என்று கூறியது திருக்குறள்.

அழுக்காறு என்ற தீயகுணம் நம்மைத் தீண்டாமல் இருக்க வேண்டுமானால் மற்றவர்கள் பெற்றுள்ள தனித்திறன்களைக் கண்டு உளமாரப் பாராட்டக் கற்றுக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் பெற்றுள்ள செல்வம் முதலியன நியாயமானவையே என்ற எண்ணம் தேவை. இது மட்டும் போதாது. மற்றவர்களுடைய குற்றங் குறைகளைக் கண்டு எக்காரணத்தைக் கொண்டும் மகிழக் கூடாது. அதற்கு மாறாக இரக்கம் கொள்ளுதல் வேண்டும்.  இங்ஙனம் வாழ்ந்து பழகின் அழுக்காறு எனும் தீய குணம் மனத்தைத் தீண்டாமல் காக்க இயலும்.

அழுக்காறு – பொறாமைக் குணம் உடையவர் உள்ளம் ஊக்கத்தை இழத்தல் இயற்கை.  ஊக்கத்தை இழந்த பின் ஏது ஆக்கம்? ஆதலால், அழுகாற்றுக் குணமுடையவர்கள் ஒருபொழுதும் வளரமாட்டார்கள்; வளமுடையவராக மாட்டார்கள். இந்த நியதிக்கு மாறாக அழுக்காறே பிறவிக் குணமாக உடையவர்கள் செல்வம் பெற்றிருந்தால் அந்தச் செல்வம் நியாயத்தின் பாற்பட்டதல்ல; நீதியோடு தொடர்புடையதல்ல. அழுக்காறுடையாரிடம் உள்ள செல்வம், களவால் ஆகிய செல்வமாக இருக்கலாம்; இருக்க வேண்டும். தேர்ந்து தெளிக! அது போலவே அழுக்காறிலாது தூய மனப்பான்மையுடன் வாழும் மனிதர்கள் வறியவர்களாக வாழ்தலும் நெறியன்று; முறையுமன்று. இதிலும் முறைபிறழ்வுகள் உள்ளன! தேர்ந்து தெளிதலே முறை!

அறிவில் வளர்ச்சி, ஊக்கம் நிறைந்த உள்ளம், நன்மையைப் பாராட்டி மகிழும் இயல்பு, பிறர் பெறும் பெருஞ் சிறப்புக்களை மதித்துப் போற்றும் பண்பு ஆகியன அழுக்காறு தீண்டா உள்ளம் பெற வேண்டிய பழக்கங்கள்; வழக்கங்கள்!

 

_________________________________
REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

 

 

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “வாழ்க்கை நலம் – 24

  1. அற்புதப் பணியைச் செய்து வருகிறீர்கள் சகோதரியாரே!

    அடிகளார் அமர்ந்த மேடையில் சிறுவயதில் நான் பேசியது ஞாபகம் வருகிறது… 
    (கூறியது கூறல் பிழையாயினும் பெரிய மனிதர் அவர் என்ற ஒரு பெருமை தானே :))) )

    அழுக்காறு => வந்தால் அவா=> அது வந்தால் சொல்லாமல் வரும் வெகுளி=> அடுத்து அது தனியா வருமா இன்னாச் சொல்லையும் கொண்டு வரும்…

    நான்கு சனியன்கள் பிடித்தால் என்னாவது!!! நானுரைப்பது யாவரும் அறிந்ததே ஆயினும் மீண்டும் கூறுவதில் ஒரு அலாதி….

    உண்மையில் அற்புதப் பணி . அதுவும் மருந்தைப் போல ஒரு சிட்டிகை அளவாக.
    பகிர்விற்கு நன்றிகள் சகோதரி :)))

  2. பாராட்டிற்கு நன்றி ஆலாசியம்.

    அடிகளார் அவர்கள் பங்கேற்ற பாரதி விழாவில், நீங்கள் பெரியோர் பலர் முன்னிலையில் பாரதி பற்றிய சொற்பொழிவாற்றும் வாய்ப்பு கிடைத்தது பற்றி முன்பொருமுறை குறிப்பிட்டு மகிழ்ந்தது இன்னமும் எனக்கு நினைவில் உள்ளது 🙂

    அன்புடன்
    ….. தேமொழி 

  3. அழுக்காறு இல்லாத உள்ளம் பெறுவது என்பது மனிதன் பெறவேண்டிய பேறுகளில் முதன்மையானதாகும். வாழ்க்கையில் நேர்மறை எண்ணங்களை மனதில் விதைக்கும் முக்கியமான காரணி அழுக்காறு இல்லாத குணம் என்பதை மிக அழகாக விளக்கி இருக்கிறது கட்டுரை. கட்டுரையை செவ்வனே தொகுத்து வழங்கி வரும் திருமதி.தேமொழி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  4. உங்கள் பாராட்டிற்கு நன்றி சச்சிதானந்தம். இதில் பெரும்பகுதி சேர வேண்டியது ஆசிரியர் பவளாவிற்கு.

    எனக்கு மிகவும் பிடித்த ஆன்மிகம் அறிவியல் இவற்றை ஒப்பிடும் முதல் கட்டுரையை மட்டும் பகிர்ந்துகொள்ள நினைத்தேன். பவளா அவர்கள் நூலின் அருமையான கருத்துக்களைக் கண்டு முழு நூலையும் மின்னாக்கம் செய்யும் ஆலோசனையைக் கூறினார்கள்.

    நான் இதனை என்னால் செய்ய முடியுமா என்ற ஐயத்தை எழுப்பிய பொழுதும், உற்சாகப்படுத்தி ஊக்கமூட்டினார்கள். அவர்கள் ஆதரவுடன் இக்கட்டுரைத்தொடர் வளர்ந்து வருகிறது. பாராட்டுக்கள் அனைத்தும் ஆலோசனை கூறிய ஆசிரியருக்கே உரியது.

    அன்புடன்
    ….. தேமொழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *