கவிநயா

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.

என்பது திருக்குறள்.

அருட்செல்வமே செல்வத்துள் எல்லாம் சிறந்ததாம். பொருட்செல்வமானது, கீழோரிடத்து உட்பட எவரிடத்தும் இருக்குமாம் என்பதே பொருள்.

அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த அருட் செல்வத்தை அள்ளி வழங்குபவள், அன்னை பராசக்தி. அவளே பக்தர்களின் அள்ளக் குறையாத நிதியாக இருப்பவளும், பக்தர்களுக்கு அள்ளக் குறையாத நிதியைத் தருபவளும், என்கிறது லலிதா சகஸ்ரநாமம். “பக்த நிதிர்” என்பது அன்னையின் ஆயிரம் நாமங்களில் ஒன்று.

பக்தர்கள் வேண்டும் அனைத்தையும், பக்தர்களுக்கு வேண்டிய அனைத்தையும், பரிவுடன் தருபவள் அன்னை. சாஸ்திரம் தெரியா விட்டாலும், வழி முறைகள் அறியா விட்டாலும், உள்ளார்ந்த அன்பால் மட்டுமே பூசித்தால் கூட அகம் மகிழ்வாளாம் அவள்.

குற்றம் குறைகள் இருந்தாலும், கொடூரமான தவறே செய்து விட்டாலும், தாயால் மட்டுமே அதனைச் சகிக்க முடியும்; மனதார மன்னித்து மறக்கவும் முடியும். அகிலத்துக்கெல்லாம் அன்னையான அவளுக்கும் அதே குணம் இருப்பதில் வியப்பேதும் இல்லை.

அவள் இன்னும் என்னென்னவாகவெல்லாம் இருக்கிறாளாம்? அபிராமி பட்டர் அடுக்கிக் கொண்டே போவதைப் பாருங்கள்!

துணையும் தொழுந் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின்
பணையும் பதி கொண்ட வேரும்…

அவளே என் துணை; பெற்ற தாயும் அவளே; வேதங்களின் கிளைகளாகவும், வேராகவும் அவளே இருக்கிறாள், என்கிறார் பட்டர்.

மேலும்,

ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
வான் அந்தமான வடிவு உடையாள், மறை நான்கினுக்கும்
தான் அந்தமான, சரணாரவிந்தம்-தவள நிறக்
கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடிக் கண்ணியதே.

அவளே ஆனந்தமாகவும், அறிவாகவும், வாழ்வின் அமுதமாகவும், ஆகாயத்தில் தொடங்கி ஐம்பூதங்களாகவும், வேதங்களுக்கெல்லாம் தானே தொடக்கமாகவும், முடிவாகவும் இருக்கிறாள்.

அவளைப் போற்றி வணங்கும் அடியவர்கள் எப்படிப்பட்டவர்களாம்?

ஏத்தும் அடியவர், ஈரேழ் உலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம்…

பதினான்கு உலகினையும் முறையாகப் படைத்தும், காத்தும், அழித்தும் தொழில் புரியும் தேவாதி தேவர்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகளும் போற்றி வணங்கக்கூடிய அன்னையாம் அவள்.

மும்மூர்த்திகளும் அவளுடைய பாதங்களில் தலை வைத்து, தலையின் மேல் கைகளைக் கூப்பி, வணங்குகிறார்கள். அதனால் அவளுக்குச் செய்யும் பூசனைகள் யாவும் அவர்களுக்கும் செய்ததாகவே ஆகிறது, என்கிறார் ஆதிசங்கரர் (சௌ.ல. 25).

மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே…

என்கிறார் பட்டரும்.

வேறு யாரெல்லாம் அவளை வணங்குகிறார்களாம்?

ஆதித்தன், அம்புலி, அங்கி குபேரன், அமரர்தம் கோன்,
போதிற் பிரமன் புராரி, முராரி பொதியமுனி,
காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர், தையலையே.

புண்ணியம் பல செய்து, அவற்றின் பயனையும் அடைந்த சூரியன், சந்திரன், அக்கினி, குபேரன், தேவர்களின் தலைவன் இந்திரன், தாமரை மலரில் உதித்த பிரம்மன், முப்புரங்களை எரித்த சிவபெருமான், முரனைத் தண்டித்த திருமால், பொதியமலை முனியாகிய அகத்தியர், கொன்று போர் புரியும் கந்தன், கணபதி, மன்மதன் முதலாகிய எண்ணற்ற தேவர்கள் அனைவரும் அவளைப் போற்றித் துதிப்பார்களாம்.

இன்னும் என்னவெல்லாமாய் இருக்கிறாள் அவள்?

சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா
சக்தியும், சக்தி தழைக்கும் சிவமும், தவம் முயல்வார்
முத்தியும், முத்திக்கு வித்தும், வித்து ஆகி முளைத்து எழுந்த
புத்தியும், புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே.

சித்தியாகவும், அச்சித்தியைத் தரும் தெய்வமான ஆதி சக்தியாகவும் திகழ்கின்றாள். பராசக்தியாகிய அவள் கிளைத்தெழக் காரணமான பரமசிவமும், அச்சிவத்தைக் குறித்துத் தவம் செய்யும் முனிவர்களுக்கு முக்தியும், அம் முக்தியால் ஏற்படுகின்ற விதையும், அவ்விதையில் ஏற்பட்ட ஞானமும், ஞானத்தின் உட்பொருளும், என நின்று, சகல பந்தங்களினின்றும் காக்கக்கூடிய தெய்வமாக இருக்கின்றாள்.

பொருளே, பொருள் முடிக்கும் போகமே, அரும் போகம் செய்யும்
மருளே, மருளில் வரும் தெருளே, என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உன்தன்
அருள் ஏது.- அறிகின்றிலேன், அம்புயாதனத்து அம்பிகையே.

அவளே பொருளாக இருக்கின்றாள். பிறகு அப்பொருளால் நுகரப்படும் போகமும் அவளே. அப்போகத்தால் ஏற்படுகின்ற மாயையாகவும் இருக்கின்றாள், அம்மாயையில் தோன்றி விளங்கும் தெளிவாகவும் விளங்குகின்றாள்.

இப்படியாக, ஆதியந்தமற்று, மறைகளின் முதலும், முடிவும், நடுவுமாக, ஒன்றாய் அரும்பிப், பலவாய் விரிந்து இவ்வுலகு எங்கும் பரந்தும், பொருளாகவும், மருளாகவும், தெருளாகவும், அருளாகவும், மும்மூர்த்திகளின் சக்தியாகவும், மும்மூர்த்திகளாலும் தேவர்களாலும் முனிவர்களாலும் வணங்கப்படுபவளாகவும், சித்தியாகவும், புத்தியாகவும், முக்தியாகவும், அறிவாகவும், அது தரும் ஆனந்தமாகவும், இப்படி எல்லாமாகவும் இருக்கிறாள் அன்னை.

போற்றித் துதித்து உருகி வணங்கிச் சரண்புக வேறென்ன வேண்டும் ஒரு பக்தனுக்கு? பக்தன் என்னவாக நினைத்து வணங்க விருப்பம் கொண்டாலும், அந்த வடிவாகவும், பக்தன் எதை விரும்பிக் கேட்டாலும், அதைத் தரக் கூடியவளாகவும் இருக்கிறாள். எனவே அவளே பக்தர்களின் பொக்கிஷமாக இருக்கிறாள்.

அவளை வணங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதற்கே, புண்ணியம் செய்திருக்க வேண்டும், என்கிறார் ஆதிசங்கரர் (சௌ.ல.1). அதனால் புண்ணியம் செய்தவருக்கே அவள் பெரும் புதையலாகக் கிடைக்கிறாள் என்றும் கொள்ளலாம்.

என் மகன் சிறுவயதாக இருக்கும் போது, “பணம் தீர்ந்து போச்சே, என்ன செய்யலாம்?” என்று கேட்டால், “ஏடிஎம் –மில் போய் எடுத்துக்க வேண்டியதுதானே” என்பான்! அதைப் போல, அடியவர்களின் ‘ஏடிஎம்’ அவள்தான்! ‘பக்தி’ என்னும் வங்கியில் கணக்கு இருந்தால் போதும். அவளே நிதியாக வந்து உதவுவாள்.

சில சமயங்களில் பணம் என்ன மரத்திலா காய்க்கிறது என்றும் சொல்வதுண்டு. பணம் மரத்தில் காய்க்கிறதோ இல்லையோ, ஆனால் அருள் காய்க்கும் கல்ப தரு அவள்தான்.

இப்படிப்பட்ட பக்த நிதியான அன்னையைத் துதிப்பவர்கள் அளப்பரிய அருட்செல்வத்தைப் பெறுவார்கள் என்பதில் ஐயமில்லை.

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!

படத்துக்கு நன்றி: http://ananthsvedhagroup.org/

பதிவாசிரியரைப் பற்றி

10 thoughts on “பக்தர்களின் ஏ.டி.எம்!

 1. //அவளை வணங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதற்கே, புண்ணியம் செய்திருக்க வேண்டும், என்கிறார் ஆதிசங்கரர் (சௌ.ல.1).//
  உண்மைதான்! இதைத்தான் மணிவாசகப் பெருந்தகையும் தன் ‘சிவ புராணத்தில்’ அவன் அருளாலே அவன் தாள் வணங்கி…. என மொழிகின்றார். Great minds think alike!
  அமுதீசரின் துணைவியான அன்னை அபிராமியையே சதாசர்வகாலமும் நினைத்திருந்த அபிராமி பட்டருக்காக அமாவாசையையே பௌர்ணமியாக மாற்றியவளல்லவா அந்த அபிராமவல்லி. அவளை அனுதினமும் சித்தசுத்தியோடு பூசித்தால் அருட்செல்வத்தையும் அளிப்பாள்; அத்தோடு தனத்தையும், கல்வியையும், தளர்வறியா மனத்தையும், நெஞ்சில் வஞ்சமில்லா இனத்தையும், ஏன்…நல்லன எல்லாவற்றையும் சேர்த்தே அளித்தருள்வாள் அல்லவா!
  அம்மையின் பெருமைதன்னை பட்டரின் பாடல்கள் வாயிலாய் அழகாய் விளக்கியுள்ளீர்கள் கவிநயா..பாராட்டுக்கள்!!

 2. அளப்பரிய அருட்செல்வம் அள்ளித் தரும் அன்னையின் அற்புத மகிமைகளைப் போற்றும் அமுதநிகர் அந்தாதியை அருமையாக வழங்கி ஆனந்தத்தில் ஆழ்த்தி விட்டீர்கள். படிக்கப் படிக்க பேரானந்தமாக இருக்கிறது. அன்னையின் அருள்மழையில் நனைந்து எழுதியிருக்கிறீர்கள். பாராட்ட வார்த்தைகளில்லை. பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி!

 3. எத்தனை முறைப் பிறந்தேனம்மா நானுனை 
  எத்தனை முறை அலைத்தேனம்மா அத்தனை 
  முறையும் அருகிலே வா வா என்றே 
  கைத்தட்டி அழைத்துக் கொண்டே 
  அண்மையில் இருப்பவளாய் காட்டிக்கொண்டே 
  சேய்மையில் சென்று மறைதியோ அம்மே! 
  எந்தன் ஆருயிரே! எந்தன் சிந்தனை 
  நிறைச் செல்வமே! செல்வக் களஞ்சியமே!
  உன்னையல்லா வேறொரு கதிதான் 
  வேறுளதோ அதை நீயும் தான் அறிவாயே! 
  இருந்தும் ஏனிந்த விளையாட்டோ என் 
  கதறலும் கண்ணீரும் பெருகும் போது  
  அருகிலே வருபவளே நான் சிரிக்கையிலே 
  தொலைவில் போவதேனோ -பொல்லா 
  வினையினை போக்கிடுவாய் பூந்தளிரே 
  எனை அப்படியே ஏந்தி உன்மடியில் இருத்திடுவாயே 
  அம்மா! என்னுயிர் ஊரும் அமுதே 
  வேதங்களைப் பாதங்களாக கொண்டவளே 
  வேத முனி தொழும் தேவியே 
  வாருவாயே வந்தெனெக்கு அருள்வாயே!!!

  சகோதரியாரே  தங்களின் ஆக்கங்கம் என்னின்  உதிரத்தில் உறைந்திருக்கும் நமது அன்னையின் சிந்தனை பொங்கியது கண்கள் கலங்கியது காப்பாள் நமக்கவள்  காண காட்டுவாள் தனது கனி முகம் தனையே!

  அருமையானப் பதிவு பகிர்விற்கு நன்றிகள்!

 4. ‘அவனருளாலே அவன் தாள் வணங்கி’ – ஆமாம், அழகாகச் சொன்னீர்கள். நல்லன எல்லாம் தரும் அவளைப் பற்றிய பதிவை வாசித்தமைக்கு மிக்க நன்றி மேகலா இராமமூர்த்தி!

 5. //காப்பாள் நமக்கவள் காண காட்டுவாள் தனது கனி முகம் தனையே!//

  அந்த நம்பிக்கைதான் இன்றளவும்.
  உங்கள் உணர்வுகளை மிக அழகாகக் கவிதையாக்கிப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி திரு.ஆலாசியம்.

 6. தற்கால வாழ்க்கைச் சுழற்சிபடி ATM  என்று அம்பாளைப் புரியும் படி வித்தியாசமாகச் சொல்லி விட்டீர்கள். அம்பாள்  அருள் நிதி , பொருள் நிதி, மனமுவக்கும் நிறைவென்னும் நிதி , பிறவியிலே பக்தி நிதி,பக்தியில் பெரும் ஆனந்த நிதி, ஆனந்தத்தால் முக்தி நிதி தரும் வள்ளல் அவள். மண்ணுலகிற்கு மட்டுமல்ல விண்ணிற்கும் வழங்குபவள். இந்த நிதி விஷயம் கேட்டால் நிதி அமைச்சகம் அம்பாளுக்கே தரிசனம் தரவும், ATM போல் இயங்கவும் சேவைவரியும் போடலாம்.
  இல்லை என்றால் வரி ரெய்டும் விடலாம்.காலம் கெட்டு இருக்கு…..

  ஸ்ரீவித்தையின் பிதாமகன் பாஸ்கராயரின் சஹஸ்ராஷர வித்தையும் லலிதா சஹஸ்ரநாமம் மற்றும் ஆதிசங்கரரின் ஸெளந்தரிய லஹரியின் பாணியும் இவற்றின் எளியத் தமிழாக்கமே அபிராமி அந்தாதி . முடிந்தால் அதையும் படியுங்கள். அன்னை அருள் மலரட்டும்.

 7. //ஸ்ரீவித்தையின் பிதாமகன் பாஸ்கராயரின் சஹஸ்ராஷர வித்தையும் லலிதா சஹஸ்ரநாமம் மற்றும் ஆதிசங்கரரின் ஸெளந்தரிய லஹரியின் பாணியும் இவற்றின் எளியத் தமிழாக்கமே அபிராமி அந்தாதி . முடிந்தால் அதையும் படியுங்கள். அன்னை அருள் மலரட்டும்.//

  ஆகட்டும் ஐயா. ஆசிகளுக்கு மிக்க நன்றி.

 8. //பக்தி’ என்னும் வங்கியில் கணக்கு இருந்தால் போதும். அவளே நிதியாக வந்து உதவுவாள்.//

  தற்காலத்திற்கேற்ற அழகான ஒப்பீடு.

  அன்னையின் மகிமையை அழகாக தொகுத்து வழங்கி இருக்கிறீர்கள். நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *