Category: நறுக்..துணுக்…

  • நிலை மாறும் உலகில்……..

    பவள சங்கரி

    வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும். ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் என்பது இதுதானோ!!

    images (2)

    ஒரு காலத்தில், இந்தியா உள்பட தெற்காசிய கண்டத்தில் உள்ள பல நாடுகளை பிரிட்டன் ஏகாதிபத்தியம் அடிமைப்படுத்தி வைத்திருந்தது. இன்று நிலைமையைப் பாருங்களேன்…. இதைச் சாத்தியமாக்கிய அத்துனை இந்தியர்களுக்கும் உளமார்ந்த பாராட்டுகள்!

    இந்திய கோடீசுவரர்கள் அனைவரும் பிரிட்டனில் வீடு மனை விற்பனைத் துறையில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வமுடன் உள்ளனர். பிரிட்டனில் ஆடம்பர பங்களா வாங்குவதற்காக, அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியர்கள் சார்பில் ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளது’ என, உலகின் முன்னணி வீடு மனை வர்த்தக நிறுவனமான ஜோன்ஸ் லாங் லாசல்லா நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கோடீசுவரர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சராசரியாக ஆண்டுக்கு 7.3 சதவீதமாக உள்ளது. இதனால், புதிய பணக்காரர்கள் உருவாகி வருகின்றனர். உலகின் பெரும் கோடீசுவரர்கள் பட்டியலில் இந்தியாவின், இலண்டன்வாழ் லட்சுமி மிட்டல், முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்திய கோடீசுவரர்கள் அனைவரும் பிரிட்டனில் வீடு மனை விற்பனை (ரியல் எஸ்டேட்) துறையில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வமுடன் உள்ளனர். பிரிட்டனின் லண்டன் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆடம்பர பங்களாக்களை வாங்கவும் திட்டமிட்டுள்ளனர். இதன்படி சராசரியாக, அடுத்த 10 ஆண்டுகளில் இதற்காக இந்தியர்கள் சார்பில் ரூ.12 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தொகை முதலீடு செய்யப்பட உள்ளது.

    உலக பணக்காரர்கள் அதிகம் உள்ள நாடுகள்குறித்த விவரத்தை ஹூரன் குளோபல் ரிச் அறிக்கை வெளியிட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டில் இந்தியாவில் கோடீசுவரர்கள் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்தது. பல வருடமாக 3 வது இடத்தில் இருந்த உருசியாவை, இந்தியா இந்த வருடம் 4-ஆம் இடத்திற்கு தள்ளி உள்ளது. உலகத்தில் இருக்கும் பாதி கோடீசுவரர்கள் அமெரிக்கா மற்றும் சீனாவில் தான் உள்ளனர் என இந்த ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா கோடீசுவரர்கள் அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் முறையாக முதல் 3வது இடத்திற்கு வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது!

    “நம் நாட்டு அரசியலில் தற்போது பிரிட்டிஷ் இந்தியர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மேலும் அதிக அளவில் நாடாளுமன்ற மேலவை, கீழவை ஆகியவற்றிலும் அரசிலும் இடம்பெறுவதைக் காண விரும்புகிறேன். பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்வோம். இது வலுவான உறவாகும். நமது பொருளாதார உறவுகள் குறித்து இரு தரப்பிலும் ஆர்வம் காணப்படுகிறது. இதர ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் மேற்கொள்ளும் முதலீட்டை விட, பிரிட்டனில்தான் இந்தியா அதிக அளவில் முதலீடு செய்கிறது. அதே போல், இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்யும் 3 நாடுகளில் ஒன்றாக பிரிட்டன் விளங்குகிறது” – 2013 நவம்பரில் பிரிட்டன் பிரதமர் கேம்ரூன் அவர்களின் அறிக்கை இது.

    Share
  • அவர் ஏன் பெருந்தலைவர்?

    பவள சங்கரி

    இன்று பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள். அவர் ஏன் பெருந்தலைவர்?

    kamaraj-lalbahardur

    தன் தாய்க்கு மாதம் 120 ரூபாய் சாப்பாட்டு செலவிற்குக் கொடுப்பாராம். ஒரு முறை அவருடைய தாயார், மகனிடம், செலவிற்கு பணம் போதவில்லை கொஞ்சம் சேர்த்து கொடுக்கும்படி கேட்டாராம். ஆனால் நம் தலைவரோ முடியாது என்று மறுத்துவிட்டாராம். முதல் அமைச்சரின் தாயார் என்பதால் அடிக்கடி அவரைக் காண வருபவர்களுக்கு காபி, தேநீர் கூட கொடுக்க முடியவில்லையே என்று அன்னை வருந்தியிருக்கிறார். அப்போது காமராஜரைப் பார்த்து அவருடைய நண்பர் ஒருவர், ‘நீங்கள்தான் சம்பளம் வாங்குகிறீர்களே. அதையெல்லாம் என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்க, அவரும் உடனே, ‘என் தாயாருக்கு சாப்பாட்டு செலவுக்கு பணம் அனுப்பி வைக்கிறேன். என்னுடைய சாப்பாட்டு செலவுகள் போக, அடிக்கடி கட்சி வேலைகளுக்காக புதுடெல்லிக்குப் போவதால், சம்பளப் பணம் செலவழிந்து போகிறது. முதலமைச்சராகப் போனால் மட்டும்தான் அரசாங்கச் செலவு. நம் கட்சி வேலைகளுக்காகப் போனால் என் சொந்தப் பணத்திலேதான் சென்று வருகிறேன்’ என்று பதில் வந்துள்ளது. எத்தனை பெருந்தன்மை! இவரல்லவோ சிறந்த தலைவர்!

    Share
  • தல விருட்சம்

    பவள சங்கரி

    201411241735412096_TreeShiva_SECVPF

    அனைத்து கோவில்களிலும் தல விருட்சம் என்று இருக்கிறதே. அதன் தாத்பரியம் என்ன என்று தெரியுமா? ஆதி காலத்தில் நம் முன்னோர்கள் காடுகளில் குடில் அமைத்து கூட்டமாக வாழ்த்து வந்தனர். பெரிய கட்டிடங்கள் எல்லாம் இல்லை. அந்த காலத்தில் மரத்தினடியில் இறை உருவை எழுந்தருளச் செய்து வழிபட்டு வந்தனர். பின்னர் நாகரீக வளர்ச்சியில், காடுகள், நாடு, நகரமாகவும் மாறி, கட்டிட அமைப்புகளும் உருவாக ஆரம்பித்தன. பிரம்மாண்டமான ஆலயங்களும் உருவாயின. மரத்தடியில் இருந்த தெய்வச் சிலைகள் ஆலயங்களில், மூலத்தானத்தில் வைக்கப்பட்டபோது, ஆண்டவனுக்கு அடைக்கலமான மரங்கள் தல விருட்சங்களாக பாதுகாக்கப்பட்டு வருவதாக ஐதீகம்…. சுவையான தகவல் அல்லவா?

    சிவன் கோவிலில் பெரும்பாலும் வில்வ மரங்களே தல விருட்சமாக இருக்கும்.

    Share
  • முயலாமை!

    —சுரேஜமீ.

    NSK and TAM

    அம்மா மதுரம் அவர்கள் திருவரங்கத்தைச்(Srirangam) சேர்ந்தவர்கள் என்பது தாங்கள் அறிந்ததே! கவிஞர் வாலி அவர்களும் அதே ஊரைச் சார்ந்தவர்தான்! வாலியின் இளமைக் காலங்களில், அய்யா என்.எஸ்.கே வைச் சந்திக்க விரும்பியிருக்கிறார். அப்போது, மதுரம் அம்மாவின் தம்பி மணி அவர்களும், வாலி அவர்களும் நண்பர்கள் என்பதால், அவர்கள் மூலம், உங்கள் அத்தான் (என்.எஸ்.கே) வரும்போது, சந்திக்க ஏற்பாடு செய் எனக் கேட்க, அந்த சந்திப்பும் நடந்தேறி இருக்கிறது.

    என்.எஸ்.கேயிடம் தன்னை ஒரு தமிழ் ஆர்வலர் என்றும், பாட்டில் நாட்டம் உண்டு எனவும் அறிமுகம் செய்து கொண்டுள்ளார் வாலி. எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட என்.எஸ்.கே அவர்கள்,

    தம்பி நீ சொல்றதெல்லாம் சரி. நான் உன்னை ஒரு கேள்வி கேக்குறேன். அதுக்கு சரியான பதிலை சொல்லு அப்படின்னு சொல்லி,

    ‘முயலும் ஆமையும் கதை கேட்டிருக்கேளே …அது சொல்ற நீதி என்னனு சொல்லு! என்று கூறியிருக்கிறார்!

    ஏதேதோ சொல்லியும், கடைசி வரை கலைவாணர் எதிர்பார்த்த ஒற்றை வரி நீதி சொல்ல இயலவில்லை வாலி அவர்களால்!

    தலையைச் சொறிந்து கொண்டே….அண்ணே நீங்களே சொல்லுங்களேன்! அப்படின்னு வாலி கேட்க,

    கலைவாணார் சொன்ன பதில் என்ன தெரியுமா?

    ‘முயலாமை’!

    இதுதான் கலைவாணாரின் சிறப்பு!

    (நன்றி: அருமைச் சகோதரர் NSK நல்லதம்பி)

    Share
  • இருபத்துநான்கு மணி நேரம்

    — ரா.பார்த்தசாரதி.

     

     

    berkeley parkingஇருபத்துநான்கு மணி நேர ஆஸ்பத்திரி, ஏ டிஎம், மெடிக்கல் ஷாப், இவை எல்லாம் பெரிய அதிசயம் இல்லை. ஆனால் அமெரிக்காவில் பார்க்கிங் என்பதே ரொம்ப கஷ்டம்.

    ஒரு முறை பீட்டர் என்கிற 83 வயது முதியவர் தனது காரில் இரண்டு புள்ளி நான்கு மணி நேரம் பார்கிங் செய்வதற்காகச் சுற்றியலைந்து, கடைசியில் தனது காரை பார்க் செய்தார். செக்யூரிட்டியிடம் போய் தான் கஷ்டபட்டதைச் சொன்னார். தப்பாக புரிந்து கொண்ட அவர் தலைமை அதிகாரியிடம் சொல்ல, உடனே அவர் CNN TV க்குப் போன் செய்ததும், அவர்கள் உடனே பீட்டரை பேட்டி காண வந்தனர்.

    டிவி ரிபோர்ட்டர் அவரிடம், எப்படி நீங்க 24 மணி நேரம் பார்க் செய்வதற்காகச் சுற்றினீர்கள்? இது பெரிய சாதனை… இதை கின்னஸ் ரெக்கார்டில் போடபோகிறோம் என்றார். பீட்டருக்கு ஒன்றும் புரியவில்லை. டிவி ரிபோர்ட்டரிடம், சார் இரண்டு புள்ளி நான்கு மணிநேரம் சுற்றிய பின் பார்க்கிங் செய்தேன். நீங்கள் தவறுதலாக இருபத்துநான்கு மணி நேரம் என்று புரிந்து கொண்டது என் தவறில்லை என்றார். ரிப்போர்ட்டரும், தலைமை அதிகாரியும் அசடு வழிந்தார்கள்.

     

     

     

     

     
    பெர்க்லி நகர ஊர்திகள் நிறுத்துமிடம் படம் எடுத்தவர்: தேமொழி

    Share
  • என்றும் இளமை,இனிமை – எப்படி

    சுந்தரராஜன் ஸ்ரீநிவாசன்

    எந்த வயதினரும் உடலால் மனத்தால் இளமையாக இருக்க முடியும். அதற்க்கு லேகியம் சூரணம் சாப்பிட வேண்டாம்.

    அதற்கான வழி முறைகள்:

    images (2)முதலில் எதற்கும் டென்ஷன் ஆவதை தவிர்க்க வேண்டும்.
    அலுவலகங்கள் சம்பந்தப்பட்ட வேலையோ அல்லது குறிப்பிட்ட நேரத்தில் கட்டாயம் முடிக்க வேண்டிய வேலையோ தவிர மருத்துவம் சம்பத்தப்பட்ட வேலையோ தாமதிக்க கூடாது!
    மற்றபடி இன்று நினைத்த காரியம் இன்றே இப்பொழுது நடக்க வில்லையே என்று நினைப்பது, இதை வாங்க முடியவில்லையே, அதை வாங்க முடியவில்லையே என்று நினைப்பதை தவிர்த்தல்!
    தெளிவாக நேரான பாதையில் நாம் செல்லும்போது மற்றவர் அறிவுரையோ குருக்கீடலையோ பொருட்படுத்தாமல் இருத்தல்!
    யாரிடமும் அதிகமாக பேசாதிருத்தல்! சம்பந்தமில்லாதவர்களிடம்
    தானே அறிமுகம் செய்துகொள்வது சம்பந்தமில்லாத விஷயங்கள்
    பேசுவது தவிர்க்கப்படவேண்டியது.
    தேவையற்ற இடத்தில நம்மைபற்றி பெருமை பேசுவது, அடுத்தவரை குறை கூறுவது இவற்றை தவிர்க்க வேண்டும்.
    அதிக சிந்தனையும் கற்பனையும் தவிர்க்க வேண்டும்.
    தேவைக்கு அதிகமான உணவு உண்ணாதிருத்தல் ஆனால் கண்டிப்பாக நேரத்தில் தேவையான உணவு உண்ணுதல்.
    நம்மை நேரில் புகழ்வது பின்னால் இகழ்வது இரண்டையும்பொருட்படுத்தாமல் இருத்தல்.
    வஞ்சனையற்ற உடல் உழைப்பு.
    பிறர் மனம், உடல் நோக காரணமாக நாம் இல்லாதிருத்தல்.
    நமக்கு வாழ்வில் கிடைத்த செல்வங்கள்,புகழ்ச்சி இகழ்ச்சி அனைத்தும் இறைவனுக்கே அர்ப்பணம் என்ற தெளிவு.

    இவை யாவும் கடை பிடித்தால் மட்டுமே நாம் என்றும் இளைமையாக இருப்பது நிச்சயம் முயற்சி திருவினையாக்கும்!

    இன்றுமுதல் முயற்சி செய்வோமே!

    Share
  • அது பணக்காரர்களுக்கான தேசம்..!

    சீன தேசத்து நண்பன் ஒருவனின் தந்தையிடம் அன்று நீண்ட நேரம் அளவளாவிக் கொண்டிருந்தேன்.

    கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன்பு என் நண்பன் குழந்தையாக இருக்கும் போது ஒரு நாடோடியைப் போன்று ஐரோப்பாவிற்கு வந்திருக்கிறார். நண்பனுக்கு பதினைந்து வயது ஆகும்வரை அடிக்கடி சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்று வருவாராம். இப்போதெல்லாம் செல்வதில்லை. மகன் தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை செய்கிறார். தந்தை நீண்ட காலமாக உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்.

    “நீ எப்போது இங்கு வந்தாய்?” என்று கேட்டார்.

    “நான்கு வருடங்களுக்கு முன்பு. உங்களைப்போலவே என் மகன் கைக்குழந்தையாக இருக்கும் போது வந்தேன்” என்றேன்.

    “இந்தியாவிற்கு அடிக்கடி செல்வதுண்டா?” என்றார்.

    “வருடத்துக்கு ஒருமுறை சென்று வருகிறோம்.” என்றேன்.

    “இந்தியாவிற்குத் திரும்பிச் சென்றுவிடும் எண்ணம் இருக்கிறதா?”

    “நிச்சயமாகத் தெரியவில்லை. இந்த விஷயத்தில் எல்லா புலம்பெயர்ந்தோரைப் போன்று நானும் ஒரு மதில் மேல் பூனை! நிச்சயம் சென்று விடுவேன். இன்னும் சில வருடங்கள் தான். இப்படிச் சொல்லிக்கொண்டே வாழ்க்கையைக் கழித்துவிடுவார்கள். ஏதோ ஒருபுறம் குதித்துவிடுவது நல்லது என்று தோன்றுகிறது.” என்றேன்.

    சிரித்துக்கொண்டே, “இதோ எனக்கும் அப்படி முப்பது வருடங்கள் ஓடிவிட்டது.” என்றார்.

    “உங்கள் தேசத்துக்கே திரும்பிச் சென்றுவிட வேண்டும் என்று தோன்றியதே இல்லையா?” என்று கேட்டேன்.

    “என்னுடைய தேசத்தை நான் நேசிக்கிறேன். மதிக்கிறேன். வாசிக்கிறேன். சுவாசிக்கிறேன். ஆனால் என்ன செய்வது, ‘அது பணக்காரர்களுக்கான தேசம்!’.” என்று கூறிவிட்டு, சில நொடி மௌனத்திற்குப் பிறகு, “ஏழைகள் அதிகமாக இருப்பதாலேயே அவை ஏழைகளுக்கான நாடுகளாக ஆகிவிடப்போவதில்லை. அவை உள்ளவர்களுக்கும், ஆள்பவர்களுக்குமான தேசங்கள்! உன்னுடைய தேசமும் அப்படித்தான்.” என்று அவர் மேலும் கூறியதைக் கேட்டு சிரித்துவிட்டு வந்துவிட்டேன்.

    அவரது வார்த்தைகளை இப்போது அசைபோட்டுக்கொண்டே இருக்கிறேன்.

    “அது பணக்காரர்களுக்கான தேசம்!”

    Share
  • பெயரிடப்படாத ஆண், பெண் உறவு

    ரா. பார்த்தசாரதி

     
    தர்ம சிந்தனை, நல்லெண்ணம் கொண்டு உதவுபவன்
    செய்யும் உதவிக்கு எந்த கைம்மாறும் எதிர்பாரான்.

    வேலைக்காரியின், மகள் படிப்பிற்கு ஏன் உதவவேண்டும்?
    கார் டிரைவரின் தாயாரின் மருத்துவத்திற்கு ஏன் உதவவேண்டும் ?
    மாதம் ஒரு முறை அநாதை குழந்தைகளுக்கு ஏன் உதவவேண்டும் ?
    இவர்கள் எனது பெயரிடப்படாத உறவுகள் என சொல்லவேண்டும்

    உறவுகளின் பெயர் இருந்தும், உறவு மறந்துபோகும் !
    பெயரே இல்லாத ஆண், பெண் உறவுகள் வந்து போகும் !

    பாசமும், பந்தமும், கொண்ட உறவுகள் நிலைக்குமா?
    நாம் செய்யும் நல்லவைகள் என்றாவது பிரதிபலிக்குமா!

    ஒழுக்கம் மாறாத அன்பும், பழகும் விதமே உறவின் எல்லை !
    இதனை அறிந்த மனித இனத்திற்கு என்றும் கவலை இல்லை !

    நான் நோய்வாய்பட்டு இருந்தேன் சில நாட்கள் !
    என்னை காண வந்ததே அந்த பெயரிடப்படாத உறவுகள் !

     

     

    Share
  • கதைசொல்லியும் கதாநாயகனும்..

    மாதவன் இளங்கோ

    என் மகனுக்குக் கதை சொல்வது என்பது அத்தனை எளிதல்ல.

    கதைக்குள் நிச்சயம் ஒரு சிங்கம் இருந்தாக வேண்டும். மரங்கள், அருவிகள், மலைகள் இருந்தாக வேண்டும். காட்டுக்குள் மழை பெய்தாக வேண்டும். யானையோ, புலியோ, முயலோ, மானோ, கரடியோ – இதில் ஏதொன்றுக்காவது பிறந்தநாள் கொண்டாடவேண்டும். கதையில் சண்டை இருக்கக்கூடாது. சிங்கமும் மானும் நண்பர்களாக இருக்கவேண்டும். அவனது நண்பர்கள் சிலரின் பெயரைச் சொல்லவேண்டும். அரவம் கூடாது. பறவைகள் பற்றி பேசலாம்.

    கண்டங்களும், நாடுகளும், கடல்களும் பற்றிய விவரிப்பு இருந்தாக வேண்டும். அவ்வப்போது இந்தியாவையும், சென்னையையும், ஏலகிரி மலையையும் தொட வேண்டும். வானவில்லும் அதை நோக்கிச் செல்லும் விமானமும் வந்தாக வேண்டும். கதை சொல்லிக்கொண்டிருக்கும் போதே, ஆங்காங்கே இடைமறித்து அதை அவன் திருத்துவதற்கு முழுவதுமாக அனுமதிக்க வேண்டும். மிக முக்கியமாக, அவனுடைய கதாப்பாத்திரம் அதில் நிச்சயம் இருந்தாகவேண்டும். வெறும் கதாப்பாத்திரமாக அல்ல, கதாநாயகனாக! அந்த கதாநாயகனின் வீரத்தைப் பற்றிய விவரிப்பும் நிச்சயம் இருந்தாக வேண்டும். 

    விண்வெளி பற்றி பேசவேண்டும். அவன் விஞ்ஞானி என்று கூறவேண்டும். இறுதியில் அவனுக்குப் பிடித்தமான அத்தனை மிருகங்களையும், பறவைகளையும், நண்பர்களையும், உறவுகளையும், எங்களையும் விண்கலத்தில் கூட்டிக்கொண்டு அவன் விண்வெளிப் பயணம் போவது பற்றி ரசனையுடன் விவரிக்க வேண்டும். பூமியில் தொடங்கி, வியாழனைக் கடந்து, (கோள்களின் வரிசை மாறக்கூடாது!) புளூட்டோவைத் தொட்டு, பால்வெளியை விட்டு வெளியேறி, வேறு ஏதேதோ மண்டலங்களுக்கெல்லாம் சென்று விட்டு மீண்டும் பூமிக்கு வந்து சென்னையில் இறங்கி, அனைவரும் தாத்தா பாட்டி வீட்டுக்குச் சென்றுவிட வேண்டும்.

    பெரியது குழந்தைகளின் உலகமும், மனமும்.

     

    Kadhaisolli Kadhanayagan

     

    Share
  • அ..ஆ..இ..

    மாதவன் இளங்கோ

    மனிதனின் இடுப்புச் சுற்றளவு – 0.001 கிலோ மீட்டர் (என்று வைத்துக்கொள்வோம்)

    பூமியின் சுற்றளவு – 40075 கிலோமீட்டர்
    வியாழனின் சுற்றளவு – 448969 கிலோமீட்டர்
    சூரியனின் சுற்றளவு – 4368175 கிலோமீட்டர்
    ரைஜலின் சுற்றளவு – 340717650 கிலோமீட்டர்
    மு-செபேயின் சுற்றளவு – 2839313750 கிலோமீட்டர்
    கேனிஸ் மேஜோரிசின் சுற்றளவு – 6202808500 கிலோமீட்டர்

    இப்படி விரிந்துகொண்டே போகிறது பிரபஞ்சம்…

    மேலே நான் குறிப்பிட்டுள்ள அந்த நட்சத்திரத்தை விட 6202808500000 மடங்கு சிறிய இந்த மனிதனாகிய எனக்கு ஏன் இவ்வளவு அ..ஆ..இ.. இன்னொரு மனிதனோடு என்னை ஒப்பிட்டுப் பார்த்து?

    அகம்பாவம்… ஆணவம்… இறுமாப்பு…!

    அந்த மனிதன் ஒருவேளை அந்த நட்சத்திரத்தை விட ஒரு 6202808500000.01 மடங்கு சிறியவனாக இருப்பானா?

    தூசு நான்!

    ஒருநாளும் என்னை கேலி செய்ததில்லை பிரபஞ்ச அன்னை என் சிறுமை கண்டு!

    எனக்கு ஏன் இவ்வளவு அகம்பாவம்.. ஆணவம்.. இறுமாப்பு..?

     universe

     

    Share
  • வர்ணம்

    அன்று காலை. பெல்கிய நாட்டின் லூவன் நகரில் ஒரு மின்னணு சாதன அங்காடியில் அந்த மனிதருக்காக (attender) காத்துக் கிடந்தேன். வந்தவர் என்னைத் தவிர்த்து விட்டு எனக்கருகே நின்ற, எனக்கடுத்து வந்த சீமாட்டியிடம் என்னவென வினவிவிட்டு கவனித்தார். சில மணித்துளிகள் காத்திருப்பில் கழிந்தது. திரும்பி வந்தவரிடம் மீண்டும் கேட்க முற்பட்டேன்.

    “ஒரு நிமிடம்!” என அவர் மொழியில் தெரிவித்துவிட்டு, இன்னொரு கனவானை கவனிக்கச் சென்றார். அவரும் எனக்கடுத்து வந்தவரே! இன்னும் சில மணித்துளிகள் விழுந்து முடிந்திருந்தது. திரும்பி வந்தவர் மீண்டும் இன்னொரு கனவானை நோக்கிச் சென்றார்.

    பொறுமை இழந்தவனாய் உரக்க உரைத்தேன், “மன்னிக்கவும்.” நான் குறுக்கே நுழைந்து தொல்லை தருகிறேன் என்பது போன்று என்மீது கோபப்பார்வை வீசியவரிடம் தொடர்ந்து கூறினேன், “மன்னிக்கவும். நான் வந்து வெகுநேரம் ஆயிற்று.”

    “மன்னிக்கவும். கவனிக்கவில்லை!” என்றார்.

    “பரவாயில்லை. தங்கள் கவனத்தை கவரும் அளவிற்கு என் முகம் ‘பளிச்சென’ இல்லாததற்கு தாங்கள் என்ன செய்வீர்கள் பாவம்!” என்று உடனே கூறினேன் சிறுபுன்னகையுடன் – அவர் மொழியில்.

    யாரோ அறைந்ததுபோல் சில நொடிகள் உறைந்து போனார். பின் என்ன தோன்றியதோ தெரியவில்லை. என் கைகளைப் பற்றி, “மன்னிக்கவும்!” என்றார் – பலமுறை!

    எனக்கு இன்னமும் புரியவில்லை. இந்த மன்னிப்பு ‘என்னைக் காத்திருக்க வைத்ததற்கா?’ அல்லது ‘அவர் மொழியில் பேசியதற்காகவா’ அல்லது ‘நான் பளிச்சென இல்லை என்பதற்கா?’, அல்லது ‘அவரது இருண்ட ஆழ்மனம் எனக்கு தெரிந்துவிட்டது என நினைத்துக் கொண்டதாலா?’ எனக்கு இன்னமும் புரியவில்லை.

    வளர்ந்த நாடாயிருந்தாலென்ன? வளரும் நாடாயிருந்தாலென்ன? வளரா நாடாயிருந்தாலென்ன?

    ‘மனித மனங்கள் வளராத வரை!’.

    Share
  • ‘ப்ரமான் சூபியங்க’

    அன்று அதிகாலை ஒரு முழுநாள் தேர்வுக்காக லூவன் நகரிலிருந்து ப்ரசல்சு நகரம் செல்ல வேண்டியிருந்தது.

     லூவன் எகானோம் டாக்சி நிறுவனம், சொன்னதற்குப் பத்து நிமிடங்கள் முன்னதாகவே வண்டி அனுப்பி இருந்தார்கள். பென்சு காரில் ஏறி அமர்ந்தவுடன் கோனிங்கு போடெவெய்ன்லான் நெடுஞ்சாலையில் காரை விரட்டினார் என் சாரதி.

     ‘ஹுய மார்ஹன்’ என்பதற்குப் பதிலாக ‘குட் மார்னிங்’ என்று கூறிய பாங்கும், அவரது உருவ அமைப்பும் அவர் நிச்சயம் ஃபிளம்மியர் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டியது.

     “ஆர் யூ ஃப்ரம் போலன்ட்?” என்று கேட்டேன்.

     “இல்லை, ரஷ்யா!” என்று கூறியவர், “தாங்கள் பாகிஸ்தானியா?” என்றார்.

     “எப்படி இருவருமே ‘சரியாக’ தவறாகக் கேட்கிறோம்?” என்று நினைத்துக்கொண்டே, “இல்லை, இந்தியன்!” என்றேன்.

     சிறிது நேர  மௌனத்திற்குப் பிறகு, “தாங்கள் ரஷ்யா சென்றதுண்டா?” என்று கேட்டார்.

     “இல்லை, நண்பரே. ஆனால், நானும் என் பள்ளி நண்பனும் ரஷ்யாவில் மருத்துவப் படிப்பு படிக்க ஆசைப்பட்டதுண்டு.” என்றேன்.

     அவர் புன்னகைத்தார். நான் தொடர்ந்து, “நீங்கள் ‘தாய்’ (தி மதர்) நாவலைப் படித்ததுண்டா?” என்று கேட்டேன்.

     அவர் மிகுந்த ஆச்சர்யத்துடன், “உங்களுக்கு மதர் நாவலைப் பற்றி எப்படித் தெரியும்?” கேட்டார்.

     “மாக்சிம் கோர்கி என் அபிமான எழுத்தாளர்!” என்றேன்.

     பரவசத்தோடு, “எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது!” என்று கூறிவிட்டு, “உங்களுக்கு எந்த கதாபாத்திரம் மிகவும் பிடிக்கும்?” என்று கேட்டார்.

     “அந்தத் தாய் – பெலகேயா நீலவ்னா!” என்றேன்.

     “எனக்கு பாவெல்!” என்றார்.

     தாய் பற்றிய சிலமணித்துளி உரையாடலில் இலக்கை சென்றடைந்தோம்.

     “என் பெயர் ‘ப்ரமான் சூபியங்க’ (Roman Zubenko)” என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, என் பெயரையும் கேட்டுத் தெரிந்துகொண்டு, என் தொலைபேசி எண்ணையும் வாங்கிக்கொண்டு, “மாலையும் நானே வர விரும்புகிறேன்!” என்று கூறிவிட்டு சென்றார். மாலையும் வந்தார். மீண்டும் பேசினோம். பேச்சு தாய், மாக்சிம் கோர்கி, ஆன்டன் செக்கோவ், ரஷ்யா, இந்தியா என்று சுற்றிவந்தது. இதோ, இன்று, இதை எழுதிக்கொண்டிருக்கும் இதே வேளையில் கூட ஜி-டாக்கில் ஆன்லைனில் இருக்கிறார்.

     மறக்க முடியாத நாள்! மறக்க முடியாத மனிதர்!

     “மொழி இனத்தை இணைக்கிறது. இலக்கியம் உலகையே இணைக்கிறது.”

    Share
  • முடிதிருத்தகமும் மனிதமும்..

    மாதவன் இளங்கோ

    பெல்கிய நாட்டின் லூவன் நகர பிரசல்ஸ் தெருவில் உள்ள ஒரு முடிதிருத்தகம். இப்போதுதான் அங்கிருந்து வருகிறேன்.

     சிறுவயதிலிருந்து இன்று வரை மாறாத பல பழக்கங்களில் ஒன்று – ‘முடிதிருத்தும் போது தூங்கிவிடுவது’. ஒரு குட்டித் தூக்கம் போட்டு முடிப்பதற்குள் வெட்டி முடித்து விட்டார் அந்தக் கலைஞர். அதோடு விடாமல், இன்னும் மூன்று வருடங்களில் உனக்கு அநேகமாக முடியனைத்தும் கொட்டிவிடும் போலிருக்கிறது என்று சிரித்துக்கொண்டே ஆரூடம் வேறு சொல்லி வழியனுப்பி வைத்தார். இந்த இரண்டு காரணங்களுக்காகவே நிறைய முடி வளர்ந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

     ‘உங்கள் ஆரூடம் ஒருவேளை பலித்துவிட்டால், நீங்கள் ஒரு வாடிக்கையாளரை இழக்க நேரிடும்! அதனால், எனக்கு நன்றாக முடி வளர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.’ என்று நானும் சிரித்துக் கொண்டே கூறிவிட்டுத் திரும்பினேன்.

     ஆங்கிலத்தில் முடிதிருத்துபவர்களை ‘Tonsorial Artist’ என்பார்கள். உண்மையாகவே அது ஒரு கலை என்பதில் எனக்குத் துளி ஐயமில்லை. ஏனென்றால், நீலாம்பரி ராகத்தில் தாலாட்டு பாடிக்கூட இத்தனை அழகாய் என்னைத் தூங்க வைக்க முடியாது. 😉

     இன்று நான் சென்று வந்தது, நான் வழக்கமாகச் செல்லும் பாகிஸ்தானியர் ஒருவரின் முடிதிருத்தகம். உள்ளூர்காரர்களிடம் சென்றால் சொத்தையே எழுதிக்கொடுக்க வேண்டியிருக்கும் என்பதால் அவர்களிடம் எப்போதுமே செல்வதில்லை. இந்த நகரத்துக்கு வந்த புதிதில், ஒரே ஒருமுறை தலைமுடி வெட்டிக்கொள்ளச் சென்று, மொட்டை அடித்துக்கொண்டு திரும்பியதோடு சரி. பிறகு அவர்கள் பக்கமே தலைவைத்துப் படுப்பதில்லை.

     சரி, அதை விடுங்கள். நான் கூற வந்தது இதுதான் –

     பதினைந்து மணித்துளிகள் ஒரு பாகிஸ்தானியரிடம் தலையைக் கொடுத்து, நிம்மதியாய் தூங்கிவிட்டு வந்திருக்கிறேன். தலையில் முடியிருக்கும் வரை, இந்த ஊரில் நான் இருக்கும் வரை, இன்னும் பலமுறை அவரிடம் செல்வேன் – அந்த பதினைந்து மணித்துளி உறக்கத்துக்காய்.. நிம்மதிக்காய்.. நிம்மதியான உறக்கத்துக்காய்..

     அரசியல்வாதிகளும், மதவாதிகளும் என்னென்னவோ செய்து பார்க்கிறார்கள் – மனிதர்களைப் பிரிக்க. நிஜத்தில் மனிதமே நிலைத்து நிற்கிறது. நிற்கும். வெல்லும்!

    Share
  • திருடனுக்கு கிடைக்காத பணம்

    விசாலம்

    ஒரு வியாபாரி அதிக பணத்துடன் ரயிலில் ஏறினான். அவன் மாதா மாதம் தில்லிக்குச் சென்று வியாபாரம் செய்த பின் சென்னை திரும்புவான். ஒரு தடவை இவனிடம் நிறைய பணம் இருப்பதைக் கண்டுகொண்டு ஒரு திருடன் அவனது எதிர் சீட்டில் அமர்ந்துகொண்டான். எப்படியாவது பணத்தை வியாபாரிக்குத் தெரியாமல் எடுத்துகொண்டு விட வேண்டும் என்றும் எண்ணினான்.

    இரவில் தூங்கும் நேரம் வந்தது. வியாபாரி அந்த நேரம் தன் பணத்தை எண்ணிக்கொண்டிருந்தான்.

    அடிக்கடி எதிரே அமர்ந்த திருடனையும் கண்காணித்தான். இதனால் திருடன் தான் பாத்ரூமுக்கு போவது போல் எழுந்துச் சென்றான். அவன் திரும்பி வந்தவுடன் வியாபாரி நன்கு  தூங்குவதைக் கண்டு தன்  வேலையை ஆரம்பித்தான். அவனது பைகளையும் பெட்டியையும் குடைந்தான்.

    திருடனுக்குப் பூட்டுத் திறக்க சொல்லியா கொடுக்கவேண்டும்!

    ஆனால் இவ்வளவு தேடியும் அவனுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை; ஏமாற்றம் தான் மிகுந்தது.

    இரண்டாவது நாளும் இதேபோல் சந்தர்ப்பம் கிடைக்க பணத்தைத் தேடினான். ஆனாலும் பணம் கிடைக்கவில்லை.

    மறுநாள் இருவரும் இறங்கும் தருணம் வந்தது. அப்போது திருடன் வியாபாரியிடம் கேட்டான்.

    “நீங்கள் பணத்தை எண்ணியதைப் பார்த்தேன். ஆனால் அதை எங்கு வைத்திருந்தீர்கள்?”

    “நீங்கள் எதற்கு இதைப்பற்றிக் கேட்கிறீர்கள்?”

    “நான் எதற்கு பொய் சொல்ல வேண்டும்? நான் ஒரு திருடன். உங்கள் பணத்தை அபகரிக்கவே உங்கள் முன் அமர்ந்திருந்தேன். பணமும் தேடித் தேடிப் பார்த்தேன். ஆனால் கிடைக்கவில்லை. நீங்கள் மிகவும் சாமர்த்தியசாலிதான் . பணத்தை எங்கு வைத்திருந்தீர்கள்?”

    “எனக்கு உன்னைப் பார்த்தவுடனேயே நீ பணத்தைத் திருட வந்தாய் என என் உள் மனம் எனக்குச் சொல்லி விட அதை  பத்திரமாக எங்கு வைப்பது என யோசித்தேன். ஆகையால் உன் தலையணையின் அடியே வைத்துவிட்டு நிம்மதியாகத் தூங்கினேன். உன் பொருளை நீ சோதிக்க மாட்டாயே…”

    திருடன் பிரமித்து போனான்.

    நாமும் நமக்குள் இருக்கும் கடவுளைத் தெரியாமல் என்னெவெல்லாமோ செய்துக்கொண்டிருக்கிறோம் இந்தத் திருடன் போல் ……

    Share
  • சங்கீத சீசன் (நகைச்சுவை)

    கோமதி நடராஜன்

    தேங்காமூடி பாகவதர்ன்னு சொல்றதெல்லாம் அந்தக்காலம் இப்போ எப்படி?
    சட்னியாவே அரைச்சு கைலே கொடுத்து அனுப்பிடுறா…

    என்னது! பாகவதர் பாடும் போது எம்பிராய்டரி எல்லாம் போடுவாரா? எப்படி…?!
    அவர் ,தனியா தனியாவர்த்தனம் பண்றப்போ ,அவர் கையிலே ,துணியும் ஊசி நூலும் கொடுத்துப் பாருங்க , கைவேகத்திலே ,எம்பிராய்டரி அழகா போட்டு கொடுத்திடுவார்

    எப்படிடா உங்க அப்பா எது கேட்டாலும் சரி சரின்னு சொல்ல வைக்கிறே..?
    எது கேட்கணும்னாலும் எங்க அவர் ஸ்வரம் சொல்லிட்டு இருக்கும் போது கேட்பேன் ,ஒரே சரி சரி சரிதான்…..எப்படிடா நம்ம ஐடியா…?

    புது பாகவதர்களையெல்லாம்  உற்சாகப் படுத்த புது டெக்னிக் பண்றீங்களாமே எப்படி ?
    நிறைய , அப்ளாஸ் ஆஹா பேஷ் பேஷ் கைதட்டல் ஒலிகளை ,ரெக்கார்ட் பண்ணி இடையிடையே ஓடவிட்டுடுவோம் …இதைவிட வேற எப்படி பண்றது சொல்லுங்க…?

    அம்மா ! அப்பா சாதகம் பண்ண ஆரம்பிச்சுட்டார்மா..
    சீக்கிரமா இந்த சப்பாத்தி மாவை அவர் தாளம் போடுற தொடையில் வச்சுட்டு வா அவர் அடிக்கிற அடியில் இன்னைக்கு சப்பாத்தி சூப்பரா வரும் பாரு

    இன்னைக்கு என் கச்சேரிக்கு கிடைச்ச கைதட்டலை நீங்க கேக்கலியே
    நீங்க வேற …..! ஹால்ல கொசுக்கடி தாங்காம அடிச்ச அடி உங்களுக்கு அப்ளாஸா விழுந்துச்சு ஓய்

    கரகரப் பிரியா  ராகத்துக்குப் பிறகு பாகவதர் என்ன ராகத்திலே பாடுவார்..?
    இது தெரியாதா காபி ராகம்தான்…!

    இன்னைக்குத்தான் நீங்க ,நான் போட்ட காபியை கம கமன்னு ரசிச்சீங்க ரொம்ப சந்தோஷமா இருக்குங்க..!
    இது வேறையா உனக்கு …? நான் ஸ்வரம் பாடிட்டு இருந்தேண்டி…

    பாகவதர் பதனி கேக்கறாரே நாங்க பதனிக்கு எங்கே போறது
    சரியா போச்சு அவர் ஸ்வரம் பாடிட்டு இருக்கார்

    அம்மா ! மாஸ்டர் பாட்டு சொல்லிக்கொடுக்காம ,பதனி கமகம சரி சரின்னு பதனியை பாராட்டிட்டே இருக்காரே ?
    சரிகமபதனி சொல்லிக் கொடுத்துட்டு இருக்கார்டி

    Share