மாதவன் இளங்கோ

என் மகனுக்குக் கதை சொல்வது என்பது அத்தனை எளிதல்ல.

கதைக்குள் நிச்சயம் ஒரு சிங்கம் இருந்தாக வேண்டும். மரங்கள், அருவிகள், மலைகள் இருந்தாக வேண்டும். காட்டுக்குள் மழை பெய்தாக வேண்டும். யானையோ, புலியோ, முயலோ, மானோ, கரடியோ – இதில் ஏதொன்றுக்காவது பிறந்தநாள் கொண்டாடவேண்டும். கதையில் சண்டை இருக்கக்கூடாது. சிங்கமும் மானும் நண்பர்களாக இருக்கவேண்டும். அவனது நண்பர்கள் சிலரின் பெயரைச் சொல்லவேண்டும். அரவம் கூடாது. பறவைகள் பற்றி பேசலாம்.

கண்டங்களும், நாடுகளும், கடல்களும் பற்றிய விவரிப்பு இருந்தாக வேண்டும். அவ்வப்போது இந்தியாவையும், சென்னையையும், ஏலகிரி மலையையும் தொட வேண்டும். வானவில்லும் அதை நோக்கிச் செல்லும் விமானமும் வந்தாக வேண்டும். கதை சொல்லிக்கொண்டிருக்கும் போதே, ஆங்காங்கே இடைமறித்து அதை அவன் திருத்துவதற்கு முழுவதுமாக அனுமதிக்க வேண்டும். மிக முக்கியமாக, அவனுடைய கதாப்பாத்திரம் அதில் நிச்சயம் இருந்தாகவேண்டும். வெறும் கதாப்பாத்திரமாக அல்ல, கதாநாயகனாக! அந்த கதாநாயகனின் வீரத்தைப் பற்றிய விவரிப்பும் நிச்சயம் இருந்தாக வேண்டும். 

விண்வெளி பற்றி பேசவேண்டும். அவன் விஞ்ஞானி என்று கூறவேண்டும். இறுதியில் அவனுக்குப் பிடித்தமான அத்தனை மிருகங்களையும், பறவைகளையும், நண்பர்களையும், உறவுகளையும், எங்களையும் விண்கலத்தில் கூட்டிக்கொண்டு அவன் விண்வெளிப் பயணம் போவது பற்றி ரசனையுடன் விவரிக்க வேண்டும். பூமியில் தொடங்கி, வியாழனைக் கடந்து, (கோள்களின் வரிசை மாறக்கூடாது!) புளூட்டோவைத் தொட்டு, பால்வெளியை விட்டு வெளியேறி, வேறு ஏதேதோ மண்டலங்களுக்கெல்லாம் சென்று விட்டு மீண்டும் பூமிக்கு வந்து சென்னையில் இறங்கி, அனைவரும் தாத்தா பாட்டி வீட்டுக்குச் சென்றுவிட வேண்டும்.

பெரியது குழந்தைகளின் உலகமும், மனமும்.

 

Kadhaisolli Kadhanayagan

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.