Category: மறு பகிர்வு

மறு பகிர்வு

  • மகாசிவராத்திரி – சிவபூசாவிதி

    சுபாஷிணி டிரெம்மெல் – பவள சங்கரி 

    இவ்வருட மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

    இந்தப் பதிவு கடந்த ஆண்டு (2013) சிவராத்திரி தினத்தன்று ஈரோடு ஸ்ரீ மஹிமாலீஸ்வரர் சமேத மங்களாம்பிகைதிருக்கோயிலில் பதிவு செய்யப்பட்டது. அன்றைய தினத்தில் கோயிலில் செய்யப்பட்ட சிறப்பு சிவலிங்க பூஜை இந்தப் பதிவில் இடம் பெறுகின்றது.

    pic12

    பூஜை ஏற்பாட்டில் இடம்பெறும் சிவலிங்கம், பூஜை பொருட்கள் ஆகியவை தயாரானதும் ஆலயத்தில் கருவறையில் இருக்கும் மூலஸ்தான தெய்வத்திற்கு அபிஷேகம் நடைபெற்றது. அந்தச் சிறப்பு பூஜையும் இந்தப் பதிவில் பதிவாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து பொது மக்கள் இணைந்து ஈரோடு திரு தங்க. விசுவநாதன் தலைமையில் சிவபுராணம் ஓதி சிவலிங்க பூஜை செய்வதைக் காணலாம்.

    இந்த விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2014/02/2014_26.html

    யூடியூபில் இப்பதிவைக் காண: http://www.youtube.com/watch?v=t8I64GTDiHM

    திருமதி பவள சங்கரியின், மகா சிவராத்திரியின் சிவ பூஜா விதிகளை விளக்கும் ஒரு கட்டுரையையும் ஈரோடு திரு தங்க. விசுவநாதன் அவர்களின் நித்திய வழிபாட்டு முறை என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையையும் இன்றைய நாளில் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகின்றோம். கட்டுரை கீழே இணைப்பில்!

    இந்த விழியம், மற்றும் புகைப்படங்கள் பதிவினை நான் செய்திட உதவிய திருமதி பவள சங்கரிக்கும் அவர் தம் துணைவர் திரு.திருநாவுக்கரசு அவர்களுக்கும், அனுமதி வழங்கிய ஆலயத்தின் நிர்வாகத்தினருக்கும், திரு தங்க விசுவநாதன் அவர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

    மேலும் படங்கள்: கட்டுரைக்கு கீழே!

    அன்புடன்
    சுபாஷிணி ட்ரெம்மல்
    [தமிழ் மரபு அறக்கட்டளை]

     
    மகாசிவராத்திரி – சிவபூசாவிதி
    பவள சங்கரி

    ”இவர் ஒரு கற்பத்தில் தம்மையே தியானித்திருந்த காலத்துத் தம் தேகத் துண்டான ஆனந்த பிந்துக்களே சிவலிங்கங்களாயின – (சிவரகசியம்)

    சிவன் – நாராயணர் இவரது கழுத்தைக் கட்டிக் கொண்டதால் கறுத்த கழுத்துடையவரானார்.

    சிவராத்திரி – கால நிர்ணயம், மாசி மாதம் கிருஷ்ணபட்சம், சதுர்த்தசி இரவு, பதினான்கு நாழிகை லிங்கோற்பவ காலம். இதுவே மகா சிவராத்திரி புண்யகாலம்.

    இந்த மகாசிவராத்திரி தினத்தில் நேரிடும் திரயோதசி பரமசிவத்திற்கு தேகமாகவும், சதுர்த்தசி தேகியாகவும், அன்றிச் சக்தியாகவும் சிவமாகவும் கூறப்பட்டிருக்கிறது. சிவராத்திரி முதற் சாம முதல் நான்கு சாமங்களிலும் ஆத்மார்த்த பரார்த்த பூசைகள் நடத்த வேண்டியது. தானஞ்செய்ய வேண்டியது. இதை அனுஷ்டித்தோர் நான்கு யுகங்களிலும் முறையே விநாயகர், கந்தமூர்த்தி, பிரம்ம விஷ்ணுக்களாம். பலன் இம்மையில் சத்சனசானாதி சௌபாக்கிய சம்பத்தும் மறுமையில் சொர்க்காதி போகமுமாம். இது காமியம், நிஷ்காமிகன் இகத்தில் புத்தியும், பரத்தில் முக்தியும் அடைவர்”. – அபிதான சிந்தாமணி.

    பிரம்மா மற்றும் விஷ்ணு ஆகியோருக்காக, சிவபெருமானார் லிங்கோத்பவராக எழுந்தருளியபோது, தேவர்கள் பூசித்த காலம் எனவும், ஒரு பிரம்மகற்பத்தில் சக்தி தேவியார், நான்கு காலங்களும் சிவ பூசை செய்து ஐயனை உளம் ஒன்றி வழிபட்ட காலமே சிவராத்திரி என்பது. சிவபெருமானிடம் அன்னையார் வரம் வேண்டிப் பெற்ற நாளும் இதுவே. சக்தி தேவி, பெருமானாரிடம் விளையாடும் முகமாக ஐயனின் திரிநேத்திரங்களையும் மூடப்போக, அகில உலகமே இருளில் மூழ்கிவிட, தேவர்கள் ஐயனை வணங்கி வழிபட்ட காலமும் இதுவே. பாற்கடலில் தோன்றிய நஞ்சுண்டகண்டனான பெருமானாரை அந்த விடம் தாக்காமல் இருக்கும்பொருட்டு தேவர்கள் விடிய விடிய இடையறாது பூசித்த காலமே மகாசிவராத்திரி என்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன. உருத்திரராக வந்த சிவபெருமானார், அண்டங்களின் மாயை எனும் அனைத்து இருளையும் போக்கி, ஞான ஒளியை நீக்கமற எங்கும் நிறையச் செய்த அந்த அற்புதமான காலமே மகாசிவராத்திரி எனப்படுகிறது.

    சிவலிங்கநியாசங்கள் என்பதாவன – தண்டபங்கிநியாசம், முண்டபங்கிநியாசம், ஸ்ரீகண்டநியாசம், ஆகமநியாசம், கலாநியாசம், மாத்ருகா நியாசம் போன்றவைகளாம்.
    சிவதீக்கை

    நம் புற உடலில் ஏற்படும் மாசு மற்றும் நுண்கிருமிகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வது போன்று, ஆன்மா என்ற நம் அகமாகிய உயிரின் மாசு நீங்கும் பொருட்டு அளிக்கப்படுவதே சிவ தீக்கை எனப்படும். ஆண், பெண் என்ற வேறுபாடின்றி சைவ சமயத்தில் பிறந்த அனைவரும் சிவதீக்கை பெறும் தகுதி பெற்றவர்களாகிறார்கள். ‘முள்ளிச் செடிக்கு முக்தி கொடுத்த உமாபதி சிவம்’ மூலமாக, மனிதர்களுக்கு மட்டுமன்றி, பறவை, புல், பூண்டு ஆகியவற்றிற்கும்கூட தீக்கை கொடுக்கப்படுவதை அறிய முடிகிறது. சிவதீக்கை பெறுபவர்கள் உடல், மனம், வாக்கு என்ற மூன்றையும் தூய்மையாக வைத்துக்கொள்பவராக இருக்க வேண்டும். உயர் பண்பும், ஆசாரமும், குரு பக்தியும் உடையவராக இருத்தல் அவசியம். உலக பற்றுகளை கட்டுக்குள் வைத்து தியானத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளும் வல்லமை பெற்றவராக இருத்தல் நலம்.

    தெய்வ வழிபாடு என்பதே பையப்பைய நம் மனதை பக்குவப்படுத்தி, இகம் மற்றும் பரம் என்ற இரு வாழ்க்கைக்கும் நம்மை அதற்கு உகந்த நிலைக்கு வழிநடத்திச் செல்வது தான். அந்த வகையில் சிவ தீக்கை என்பது அடிப்படையில் மூன்று நிலைகளாகப் பிரித்திருக்கிறார்கள். முதன் முதலில், ‘சமய தீக்கை’ என்கிற அடிப்படையான, சிவலிங்க வழிபாட்டிற்கான ஆயத்தமாக இதனைக் கொள்ளலாம். ‘நான்’ என்ற ஆணவ மலம் அகன்று நாமே சிவம் என்ற உயர் நிலையை அடையும் எண்ணம் உதிக்கத் தோன்றும். சில காலம் மனம் ஒன்றி குரு அருளிய நெறி முறைகளைக் கடைபிடித்து அனுதினமும் அதன் வழி தொடர அடுத்து விசேட தீக்கை பெறும் தகுதியைப் பெறலாம். விசேட தீக்கை பெறுவதன் மூலம் மட்டுமே, சிவலிங்க மூர்த்திக்கு அகப்பூசை மற்றும் அபிசேகம் செய்து, மலர் தூவி வழிபட்டு, அலங்காரங்கள் செய்து, பெருமானாரைத் தம் அகத்திலும், இல்லத்திலும் எழுந்தருளச் செய்யும் புறப்பூசை என்கிற யோக நெறியில் நிறைந்து செய்யும் பூசைக்கான உரிமம் பெறலாம்!

    அடுத்து மூன்றாவதாக வருவது, ‘நிர்வாண தீக்கை’ என்பது. உயிரை ஞான நிலைக்கு இட்டுச் செல்லும் இதனால் பல்வேறு சக்திகளையும் பெற முடியும் என்கிறார்கள். ‘கண்டவர் விண்டிலை, விண்டவர் கண்டிலை’ என்பதே தத்துவம்! இறைவன் தனக்குள்ளும் இருக்கிறார், மற்றனைத்து உயிர்களுக்குள்ளும் உறைந்திருக்கிறார் என்பதை உணரச் செய்யும் தீக்கை என்பதாகக் கொள்ளலாம். முப்பொருள் உண்மையையும், தீய சக்திகளை அடக்கும் கலையையும் அருளும் இந்த நிர்வாண தீக்கை, உலகப் பற்றுகள் அனைத்தும் துறந்த நிலையில் இருப்பவர்களுக்கு வீடு பேறு கிடைக்கும் வகையில் செய்வது, ‘சத்தியோ நிர்வாண தீக்கை’ மற்றும் ஆன்மா, பிரார்த்த வினைப்பயன்களை முழுவதுமாக அனுபவித்த பின்பு, வீடு பேறு (முக்தி நிலை) அடையச் செய்யக்கூடிய, ’அசத்தியோ நிர்வாண தீக்கை’ என்பதாகும். சிவபெருமானின் அருளைப் பூரணமாகப் பெற்று இம்மை, மறுமை இன்பங்களனைத்தும் பெறவே சிவதீக்கை பெறுகிறார்கள்.

    ஆனஅஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும்
    ஆனஅஞ் செழுத்துளே ஆதியான மூவரும்
    ஆனஅஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்
    ஆனஅஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே.

    அரியும்அல்ல அயனும்அல்ல அப்புறத்தில் அப்புறம்
    கருமைசெம்மை வெண்மையைக் கடந்துநின்ற காரணம்
    பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்
    துரியமும் கடந்துநின்ற தூரதூர தூரமே.

    -சிவவாக்கியர்
    ஏழு வயது ஆன எவரும் சிவதீக்கை பெறலாம். குரு அருளிய திருவைந்தெழுத்து மந்திரத்தை உச்சரிக்கவும், திருநீறை நீரில் குழைத்து திரிபுண்டரமாக பூசிக்கொள்ளவும் சிவதீக்கை பெற வேண்டியது அவசியம். குரு மூலம் தீட்சை பெற வேண்டும் என்பதே சமயக் குரவர்கள் மூலம் நாம் அறியும் நீதி. அகத்திய மாமுனியிடம் ஸ்ரீராமபிரானும், உபமன்யு முனிவரிடம் ஸ்ரீகிருஷ்ணரும் சிவ தீக்கை பெற்று சிவபூசை செய்துள்ளார்கள் என்பதை புராணங்கள் கூறுகின்றன. சமய தீக்கை பெற்று, அன்றாட வழிபாடுகளை நியமங்களின்படி செய்வோருக்கு ஆயுள் கூடும் என்பதும் கண்கூடு. சிவதீக்கை பெற்றவரின் உயிர் முற்றும் அந்தப் பரமனுக்கே உடமையாவதாக ஐதீகம். அந்த வகையில் அந்த உயிரைப் பறிப்பதற்கு எமதர்மனுக்கும் அதிகாரம் இல்லை என்கிறது ஆகமங்கள்.
    ஞான நிலை

    என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது இல்லையே
    என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது கொண்டபின்
    என்னிலே இருந்தஒன்றை யாவர்காண வல்லரோ ?
    என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டனே.

    நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை,
    நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ ?
    அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
    எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாற தெங்ஙனே !
    யோக நிலை

    உருத்தரித்த நாடியில் ஒடுங்குகுன்ற வாயுவைக்
    கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீரேல்
    விருத்தரரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும்
    அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே.

    அறிவு நிலை

    கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணை மோர்புகா;
    உடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடற்புகா;
    விரிந்துபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா;
    இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே.

    -சிவவாக்கியர்
    விசேட தீக்கை பெற்றவர்களின் உயிர் அனந்த தேவருக்கும், நிர்வாண தீக்கை பெற்றவரின் உயிர் சதாசிவ மூர்த்திக்கும் மட்டுமே எடுக்க உரிமையுள்ளதாம். இதனால் தீய சக்திகள் எதுவும் அவர்களை அணுக முடியாது. மேலும் வாரிசுகளால் பிதுர் கடன் ஆற்றாமையாலும் தீங்கு விளையாது. பெருமானாரிடம் பாவ மன்னிப்பு பெறவும் தீக்கை அருள் புரியும். இவையனைத்திற்கும் மேலாக பிரணாயாமம் செய்வதால் அறிவியல் காரணங்களால் இருதய நோயும் அண்டாது. மனம் கட்டுக்குள் அடங்கிவிடுவதால், பூரண அமைதியடைந்து உயிர் தூய்மையடைகிறது. முத்திரைகள் பிடிப்பதால், விரல்களுக்கும், நரம்புகளுக்கும் , நல்ல பயிற்சி கிடைப்பதால் நரம்பு சம்பந்தமான நோய்கள் வராமல் காக்கிறது. ஆன்மார்த்த பூசை செய்வதனால் கடந்தகால பாவங்களின் வினைகள் குறைவதோடு, நிகழ்காலத்தில் பாவங்கள் அணுகாது என்கிறார்கள்.
    தில்லைநாய கன்அவன்; திருவரங் கனும்அவன்;
    எல்லையான புவனமும் ஏகமுத்தி யானவன்
    பல்லுநாவும் உள்ளபேர் பகுத்துகூறி மகிழுவார்;
    வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாய்வரே.

    எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்கள்அப்பன் எம்பிரான்
    சத்தியான வித்துளே முளைத்தெழும் அச்சுடர்
    சித்தமும் தெளிந்துவேத கோயிலும் திறந்தபின்
    அத்தன்ஆடல் கண்டபின் அடங்கல்ஆடல் காணுமே.

    உற்றநூல்கள் உம்முளே உணர்ந்துணர்ந்து பாடுவீர்;
    பற்றறுத்து நின்றநீர் பராபரங்கள் எய்துவீர்;
    செற்றமாவை யுள்ளரைச் செருக்கறுத்து இருத்திடில்
    சுற்றமாக உம்முளே சோதிஎன்றும் வாழுமே.

    அண்டம்நீ அகண்டம்நீ, ஆதிமூல மானநீ,
    கண்டம்நீ, கருத்தும்நீ, காவியங்க ளானநீ,
    புண்டரீக மற்றுளே உணருகின்ற புண்ணியர்,
    கொண்டகோல மானநேர்மை கூர்மைஎன்ன கூர்மையே.
    நமசிவாய அஞ்செழுத்தும் நல்குமேல் நிலைகளும்
    நமசிவாய அஞ்சில்அஞ்சும் புராணமான மாயையும்
    நமசிவாய அஞ்செழுத்து நம்முளே இருக்கவே
    நமசிவாய உண்மையை நன்குஉரைசெய் நாதனே!

    ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
    ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் தெளிந்தபின்
    ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
    ஓம்நமசி வாயமே உட்கலந்து நிற்குமே!

    -சிவவாக்கியர்
    நித்திய வழிபாட்டு முறை

    ஈரோடு திரு தங்க. விசுவநாதன்

    அதிகாலையில் படுக்கையைவிட்டு எழும்போது “சிவ சிவ” என்று இறைவன் திருநாமத்தைச் சொல்லி மடியிலுள்ள திருநீற்றுப் பையிலிருந்து சிறிது திருநீற்றை எடுத்து நெற்றியில் தரித்துக்கொண்டு எழுந்திருக்கவும்.

    1. நீராடுதல்

    நாம் ஆடும் நீரினை இறைவன் வடிவாக எண்ணிக் கீழ்வரும் பதிகத்தைச் சொல்லிக் கொண்டு குளிக்க.

    திருச்சிற்றம்பலம்

    களித்துக் கலந்ததோர் காதற்கசிவொடு காவிரிவாய்க்
    குளித்துத் தொழுது முன்நின்ற இப்பத்தரைக் கோதில் செந்தேன்
    தெளித்துச் சுவையமுது ஊட்டி அமரர்கள் சூழிருப்ப
    அளித்துப் பெரும் செல்வம் ஆக்கும் ஐயாறன் அடித்தலமே. (அப்பர்)

    குளித்தபின் தோய்த்து உலர்ந்த ஆடையையும் கோவண ஆடையையும் அணிந்து கொண்டு துலக்கிய சிறு பாத்திரத்தில் தூய நீரை எடுத்துக்கொண்டு தனியிடத்தில் அமர்ந்து வழிபாட்டைத் தொடங்குக. (வழிபாட்டு அறை தனியாக இருப்பின் சாலச் சிறந்தது).

    2. பிள்ளையார் வணக்கம்

    ஐந்து கரத்தனை ஆனைமு கத்தனை
    இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
    நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
    புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே

    -திருமூலர்
    ஆ. திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
    பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்
    ஆதலால் வானோரும் ஆனை முகத்தனைக்
    காதலால் கூப்புவர்தம் கை. [நம்பியாண்டவர் நம்பி]

    [இ] பிடியதன் உருவுமை கொள, மிகு கரியது
    வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
    கடி, கணபதி வர அருளினன் – மிகு கொடை
    வடிவினர் பயில் வலிவலம் முறை இறையே. [1: சம்பந்தர்]
    திருச்சிற்றம்பலம்
    3. சற்குரு வணக்கம்

    சைவ சமய குருமார்கள் நால்வருக்கும், தனக்குத் தீக்கை அருளிய குருவிற்கும் வணக்கம் சொல்லுதல்.

    அ] பூமியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி
    ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி
    வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம்போற்றி
    ஊழிமலி திருவாதௌஊரர் திருத் தாள்போற்றி [உமாபதி சிவாச்சாரியார்]

    ஆ] தந்தையாய் ஆவானும் சார்கதி இங்காவானும்
    அந்தம் இல்லா இன்பம் நமக்கு ஆவானும்
    எந்தம்உயிர் தான்ஆ குவானும் சரண் ஆகுவானும்
    அருட்கோணாரு வானும் குரு [தத்துவராய சுவாமிகள்]

    4. வழிபடும் இடத்தை சுத்தி செய்தல்

    சிறிது தண்ணீரைக் கையில் எடுத்து, “பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி” என்று ஓதி வழிபாடு செய்யும் இடத்தில் தெளித்து அதை தூய்மை செய்யவும்.
    5. நீரைச்சுத்தி செய்தல்

    தண்ணீரைச் சிவமாக எண்ணி “நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி” என்று மலர் தூவித் தண்ணீரில் சிவலிங்கத் திருமேனியாய் எழுந்தருளியிருக்கும் திருவானைக்காப் பெருமானை எண்ணி,

    வானைக்காவில் வெண்மதி மல்குபுல்கு வார்சடைத்
    தேனைக்காவில் இன்மொழி தேவிபாகம் ஆயினான்
    ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர்
    ஏனைக்காவல் வேண்டுவோர்க்கு ஏதும் ஏதம் இல்லையே. [3. சம்பந்தர்]

    என்னும் பதிகம் ஓதித் துதித்து வலக்கைப் பெருவிரலை மடித்துக்கொண்டு, மற்ற விரல்களை நீட்டிக் கவிழ்த்துத் தண்ணீர் உள்ள குவளையை மூடித் திருவைந்தெழுத்தை எண்ணித் துதிக்கவும்.
    6. ஆத்ம சுத்தி [நீரை உட்கொள்ளுதல்]

    நடு மூன்று விரல்களாலும் மேற்கண்ட தண்ணீரை மூன்று முறை தலையின் மேல் தெளித்துக்கொண்டு, சிறிது நீரை உள்ளங்கையில் எடுத்து இறைவனை எண்ணிக்கொண்டு சிவ தீர்த்தமாக மனத்துள் கொண்டு மூன்று முறை உட்கொண்டு அடுத்து வரும் பாடலைச் சொல்லித் துதிக்கவும்.

    ஒன்றா உலகு அனைத்தும் ஆனார் தாமே;
    ஊழி தோறு ஊழி உயர்ந்தார் தாமே;
    நின்று ஆகி எங்கும் நிமிர்ந்தார் தாமே; நீர்,
    வளி, தீ, ஆகாசம், ஆனார் தாமே;
    கொன்று ஆரும் கூற்றை உதைத்தார் தாமே;
    கோலப் பழனை உடையார் தாமே;
    சென்று ஆடு தீர்த்தங்கள் ஆனார் தாமே திரு
    ஆலங்காடு உறையும் செல்வர் தாமே. – அப்பர்.
    7. [அ] திருநீற்றைத் தூய்மை செய்தல்

    திருநீற்றைப் பராசக்தியின் வடிவமாக எண்ணி சிந்தித்துத் திருநீற்றைச் சிறிது எடுத்துத் தலை, நெற்றி, உடல், முதலியவற்றில் பூசிக்கொள்ள வேண்டும். மேலும் சிறிது எடுத்து தொப்புழிலிருந்து கழுத்து வரையிலும் சிறிது நேர் கோடுகளாகப் பூசவும். இடது கையில் திருநீற்றை வைத்துக்கொண்டு வலக்கை மோதிர விரலால் சிறிது அதிலிருந்து எடுத்துத் தீய சக்திகளை விலக்க நிருதி மூலையில் [இடது தோளுக்கு மேல் பின்புறமாகத்] தெளித்து விடவும்.

    இடது உள்ளங்கையில் உள்ள திருநீற்றை வலக்கையால் மூடி வலது தொடைமேல் வைத்துக்கொண்டு, அடுத்து வரும் பாடலைப் பாடவும்.

    இராவணன் மேலது நீறு எண்ணத் தருவது நீறு
    பராவண மாவது நீறு பாவம் அறுப்பது நீறு
    தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
    அராவணங் துந்திருமேனி ஆலவாயன் திரு நீறே. – [2.சம்பந்தர்]

    சிறிது நீர் விட்டுத் திருநீற்றைக் குழைத்து, தலை, நேற்றி, மார்பு, புயங்கள், இரண்டு முழங்கை, இரண்டு மணிக்கட்டு, தொப்பூழ், முழங்கால் இரண்டு, வலது – இடது விலாப்புறங்கள் இரண்டு, நடுமுதுகு, கழுத்து ஆகிய பதினாறு இடங்களிலும் இட்டுக் கொள்ளவும். நெற்றி, மார்பு, தோள்களில் ஆறு அங்குலமும், கழுத்து முழுவதும் கீழ்வரும் பாடல்களை சொல்லித் துதித்துக் கொண்டே திருநீறு அணிந்து கொள்ளவும். இதனால் தேகசுத்தி அடைகிறது.

    அ] சந்திரற் சடையில் வைத்த சங்கரன் சாமவேதியன்
    அந்தரத்து அமரர் பெம்மான் ஆன்நல் வெள்ளூர்தி யாந்தன்
    மந்திர நமச்சிவாயவாக நீறணியப் பெற்றால்
    வெந்தறும் வினையும் நோயும் வெவ்அழல் விறகிட்டன்றே [4. அப்பர்]
    ஆ] கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை
    மங்காமல் பூசி மகிழ்வீரே யாமாகில்
    தங்கா வினைகளும் சாரும் சிவகதி
    சிங்காரமான திருவடி சேர்வரே
    -திருமூலர்

    திருநீறு அணிந்த பிறகு கைகளை அலம்பி, அலம்பிய நீர் இடக்கை மூலம் வரும்படியாகச் செய்து இடக்கையை முஷ்டியாகப் பிடித்துக்கொண்டு பெருவிரலை மட்டும் நீட்டி அதன் வழியாகக் கையில் உள்ள நீர் வடிந்து கீழ் உள்ள பாத்திரத்தில் விழும்படியாக வலக்கை முஷ்டியைத் தாழ்த்தி மல்லாத்தி பிடித்துக்கொண்டு பெருவிரல் வழியாக வடியும் நீரைச் சிவத் தீர்த்தமாகப் பாவித்து இடக்கையின் விரல்களினால் ஏற்று, “சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே” என்று இறைவனைத் துதித்துக்கொண்டே மேலே மும்முறை தெளித்துக் கொண்டு வாயிலும் சிறிது விட்டு அருந்துதல் வேண்டும். இதனால் ஆத்மசுத்தி பெறுகிறது.
    7. [ஆ] திருநீறு அணிதல்

    திருநீறு இட வேண்டிய இடம் 16. இப்பதினாறும் இறைவனின் புறத் திருத்தொண்டாம், பதினாறிணையும் முறை தவறாது நிறைவேற்ற அன்புடன் இயற்றுதற்கே இவ்வுடல் என்பதனைக் குறிப்பதாகும்.

    அவை வருமாறு

    1. ஒழுக்கம், 2. அன்பு, 3. அருள், 4. ஆச்சாரம், 5. உபச்சாரம், 6. உறவு, 7. சீலம், 8. தவம், 9. தானம், 10. வந்தித்தல், 11. வணங்கல், 12. வாய்மை, 13. துறவு, 14. அடக்கம், 15. அறிவு, 16. அருச்சித்தல்.

    ஒழுக்கம், அன்பு, அருள், ஆச்சாரம், உபச்சாரம், உறவு, சீலம், வழுக்கிலாத் தவம், வந்தனங்கள், வந்தித்தல், வணங்கல், வாய்மை, அழுக்கிலாத் துறவு, அடக்கம், அறிவோடு அருச்சித்தல், ஆதி இழுக்கிலா அறங்கள் ஆனால் இறங்குவான் பணி அறங்கள். [சித்தியார்]
    திருச்சிற்றம்பலம்.

    8. உறுப்புகளைத் தொடுதல்

    “வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும், தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவா போற்றி”, என ஓதிக் கைகளைக் கூப்பித் தலை வணங்குக. இஃது அருளால் பெற்ற இவ்வுடலால் இறைவனின் அகத் திருத்தொண்டு இயற்றும் முறைமையைக் குறிப்பதாகும்.

    உறுப்புகளைத் தொடும் முறை

    வலக்கைப் பெருவிரல் நுனியை அணி விரல் [மோதிர விரல்] நடுவரையிற் சேர்த்து மற்றைய விரல்களை நீக்கி நமது உடலில் ஒன்பது உறுப்புகளையும் அவ்விரல் கொண்டு தொடுக.

    இவற்றுள் எட்டாவது எண்ணாகிய ஆக்கையைத் தொடுங்கால் இரு கைவிரல்களையும் தனித்தனி இணைத்துச் சிறிது குவித்துத் தலைமுதல் கால் வரை கட்டி, நெஞ்சின் நேர் வைத்துக் கும்பிடுக. 10, 11, 12, திருக்கண்ணிகளை அன்புடன் ஓதிக் கைகள் இரண்டையும் உச்சிமேற் குவித்துத் தொழுக. இம்மூன்றையும் இறை, உயிர், தளை என்னும் முப்பொருள் உண்மையைக் குறிக்கும்.

    1. உச்சி : தலைவனைத் தலையே நீ வணங்காய்.

    2. கண்கள் ; கடல் நஞ்சுண்ட கண்டன் தன்னைக்
    கண்களால் காண்மின் களோ.

    3 . செவிகள் : எரிபோல் மேனிப் பிரான் நிறம்
    எப்போதும் செவிகாள் கேண்மின்களோ

    4 . மூக்கு : வாக்கே நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீ முரலாய்.

    5. வாய் : பேய் வாழ் காட்டகத்து ஆடும்பிரான்
    தன்னை வாயே வாழ்த்து கண்டாய்,

    6. நெஞ்சு : மஞ்சாடும் மலைமங்கை மணாளனை
    நெஞ்சே நீ நினையாய்.

    7. கைகள் : பைவாய் பாம்பரை ஆர்த்த பரமனைக்
    கைகாள் கூப்பித் தொழீர்.

    8. ஆக்கை : அரனைப் போற்றி எண்ணாத இவ
    ஆக்கையாற் பயன் என்.

    9. கால்கள் : கோகரணம் சூழாக் கால்களாற் பயனென்.

    10. இறை : உற்றார் யார் உளரோ!
    உயிர் கொண்டு போம்பொழுது,
    குற்றாலத்துறை கூத்தன் அல்லால்
    நமக்கு உற்றார் யாருளரோ?

    11. உயிர் : இறுமாந்து இருப்பன் கொலோ?
    ஈசன் பல்கணத்து எண்ணப்பட்டுச்
    சிறுமான் ஏந்திதான் சேவடிக்கீழ்ச் சென்று
    அங்கு இறுமாந்து இருப்பன் கொலோ

    12. தளை : தேவனை என்னுளே தேடிக் கண்டு
    கொண்டேன் -[4. அப்பர்]

    திருச்சிற்றம்பலம்

     

    9. மந்திரசுத்தி
    பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை
    பிரிவிலா அடியார்க்கென்றும்
    வாராத செல்வம் வருவிப்பானை
    மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித்
    தீராநோய் தீர்த்தருளவல்லான் தன்னை
    திரிபுரங்கள் தீயெழத் திண்சிலைக் கைக்கொண்ட
    போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
    போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே
    – [5.அப்பர்]
    10. பிராணாயாமம்

    வலச்சுட்டு விரல் நடுவிரல் இரண்டையும் உள்ளே மடக்கிப் பெருவிரலால் வலப்பக்க மூக்கை மூடி “ஓம் சிவாய நம” என் ஐந்து முறை சொல்லி, இடப்பக்க மூக்கால் காற்றை உள்ளே இழுத்துக், காற்றை நிறுத்தி மோதிர விரலால் இடப்பக்க மூக்கை மூடி வலப்பக்க மூக்கால் காற்றை வெளிவிடவும். மீண்டும் இது போலவே இடப்பக்க மூக்கை மூடிக்கொண்டே ஐந்தெழுத்து மந்திரத்தை ஐந்து முறை சொல்லி வலப்பக்க மூக்கால் காற்றை உள்ளிழுத்து இடப்பக்க மூக்கால் வெளிவிடுக. இது போன்று இயன்றளவு செய்க.

    இது சமயம் தொப்புழுக்கு நான்கு விரல் இடம் கீழ் உள்ள இடமாகிய மூலாதாரம் என்னும் இடத்திலிருந்து குண்டலினி என்னும் சிவசக்தி எழுந்து மேல் நோக்கி மூலாதாரம், தொப்பூழ், மார்பு, கழுத்து, புருவமத்தி, உச்சி தலைக்குமேல் பன்னிரண்டங்குல அளவில் உள்ள இடம் ஆகிய உணர்ச்சி நிலையங்களில் எழுந்தருளி விளங்குவதாக எண்ணிப் பிறகு தலைக்கு மேல் இரு கைகளையும் கூப்பி வணங்கி மேற்கண்ட சிவசக்தியை அங்கிருந்து கூப்பிய கரத்தினூடாக, மார்புக்குக் கொணர்ந்து மார்பில் எழுந்தருளி விளங்குவதாகக்கொண்டு பஞ்சபுராணம் ஓதித் துதிக்க.

    11. பஞ்ச புராணம் துதித்தல்

    தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம் ஆகிய ஐந்து நூல்களையும் பஞ்ச புராணம் என்று சொல்வது மரபு. வழிபாட்டின்போது குறைந்த அளவு மேற்கண்ட நூல்களில் ஒவ்வொன்றாக ஐந்து பாடல்களாவது பாடித் துதித்தல் வேண்டும். கூடுமானால் பத்தாம் திருமுறையாகிய திருமந்திரத்தில் ஒரு பாட்டும், ஆக பன்னிரு திருமுறைகளிலும் ஒவ்வொரு பாட்டாவது சொல்லித் தினந்தோறும் வழிபடுவது சைவருடைய கடமையாகும். மேற்குறிப்பிட்ட பன்னிரு திருமுறைகளும் தவறாமல் ஒவ்வொரு சைவர் இல்லத்திலும் இருக்க வேண்டுவன.

    தேவாரம்

    அ. தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடி
    காடு உடைய சுடலை பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்
    ஏடு உடைய மலரான் முனை நாள் பணிந்து ஏத்த அருள் செய்த
    பீடு உடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே! – [சம்பந்தர்]

    திருவாசகம்

    ஆ. அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
    அன்பினில் விளைந்தஆ ரமுதே
    பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
    புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
    செம்மையே ஆய சிவபதம் அளித்த
    செல்வமே சிவபெரு மானே
    இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
    எங்கெழுந் தருளுவ தினியே. [8. மணிவாசகர்]

    திருவிசைப்பா

    இ. கண்பனி அரும்பக் கைகள் மொட்டித்(து)என்
    களைகணே! ஓலம்என்(று) ஓலிட்டு
    என்பெலாம் உருகும் அன்பர்தம் கூட்டத்(து)
    என்னையும் புணர்ப்பவன் கோயில்
    பண்பல தெளிதென் பாடிநின் றாடப்
    பனிமலர்ச் சோலைசூழ் மொழுப்பில்
    செண்பகம் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்
    திருவளர் திருச்சிற்றம் பலமே.
    [9. கருவூர்த்தேவர்]

    திருப்பல்லாண்டு

    ஈ. மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்
    வஞ்சகர் போயகல
    பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து
    புவனி யெல்லாம் விளங்க
    அன்னநடை மடவாள் உமைகோன்
    அடியோ முக்கருள் புரிந்து
    பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப்
    பல்லாண்டு கூறுதுமே.
    [9. சேந்தனார்]
    பெரிய புராணம்

    உ. நன்மை பெருகு அருள்நெறியே வந்தணைந்து நல்லூரின்
    மன்னு திருத்தொண்டனார் வணங்கி மகிழ்ந்தெழும் பொழுதில்
    “உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம்!” என்று அவர் தம்
    சென்னி மிசை பாதமலர் சூட்டினான் சிவபெருமான்.
    [10. சேக்கிழார்]

    வாழ்த்துப்பா

    ஊ. வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
    வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
    ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
    சூழ்க வையக முந்துயர் தீர்கவே.
    [3. சம்பந்தர்]
    12. ஜபம்

    மனதை புருவ மத்தியில் இறுத்திப் பத்மாசனத்தில் அமர்ந்த வண்ணம் குரு உபதேசித்த திருவைந்தெழுத்தை 108 தடவை மனத்திற்குள்ளாகவே எண்ணுக.

    13. தியானம்

    இறைவன் புருவ மத்தியில் ஒளி வடிவமாக விளங்குவதாக எண்ணி எந்த விதமான வேற்று எண்ணமும் இன்றி அமைதியாகச் சிவனைச் சிந்தித்து இருக்கவும். மேற்கண்டவாறு [அனுஷ்டானத்தை] வழிபாட்டை முடித்துக்கொண்டு புறத்தில் சிவ வழிபாடு தொடங்குதல் வேண்டும்.

    இத்துடன் நித்திய வழிபாடு முற்றுப்பெறும். சிவபூசை செய்வோர் இதற்குமேல் ஆன்மார்த்த மூர்த்தி வழிபாடு செய்தல் வேண்டும்.

    திருச்சிற்றம்பலம்.

    கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி
    நில்லாப் பிழையும், நினையாப் பிழையும், நின்னஞ்செழுத்தைச்
    சொல்லாப் பிழையும், துதியாப் பிழையும், தொழாப் பிழையும்
    எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே.

    – திருவேகம்ப மாலை, பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்)

    pic8
    ஆலய வரலாறு
    pic16
    ஆலயத்தின் உள்ளே
    pic9
    சிவ பூஜை செய்ய தயார் நிலையில் இருக்கும் பக்தர்கள்
    pic10
    சிவலிங்கங்கள் தனி பிரகாரங்களில்
    சிவ பூஜை செய்ய தயார் நிலையில் இருக்கும் பக்தர்கள்
    pic13
    சிவ பூஜை செய்ய தயார் நிலையில் இருக்கும் பக்தர்கள்
    pic17
    திரு. தங்க விசுவநாதன்
    மூலஸ்தான தெய்வத்திற்கு அபிஷேகம்

     

    —

    THF: Shivarathiri (Erode Sri Mahimaliswarar Temple – 2013)
    Share
  • காதல் நாற்பது!…2

    சி. ஜெயபாரதன்

     

    காதல் நாற்பது (2)

    சொர்க்கத்தை நோக்கி !
    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     elizabeth-browning1

     

    எலிஸபெத் பிரௌனிங்

    (1806-1861)

    தேவன் படைத்த இந்த பிரபஞ்சத்தில்
    மூவர் மட்டுமே கேட்டனர்,
    நீவீர் சொல்லிய
    இந்த வாய்மொழியை,
    எல்லோரும் இருந்தாலும் !
    இறைவன் அருகில் உரைத்தது நீ !
    கேட்டது நான் !
    நம்மில் ஒருவர்தான் பதிலளித்தோம் !
    கண்ணால்
    உன்னைக் காணக் கூடாதெனத்
    தண்டித்து எனக்குச்
    சாபமிட்டுக்
    கடவுள்தான் கருமை பூசினார்
    எனது
    கண்ணிமைகளில் !
    நான் செத்துப் போயிருந்தால்
    புதைக்கும் போது
    பளுச்சுமைப்
    பன்மடங்கு பெருகித்
    தனித்துவம் உள்ளடங்கும் !
    அந்தோ இல்லை !
    அதை விடக் கோரம் !
    எல்லா மனிதரை விட
    இறைவன் செய்வது கொடூரம் !
    என்னரும் நண்பனே !
    விலகிச் செல்ல மாட்டார் மனிதர்,
    உலகப் பொருட்களை
    நம் வசம் விட்டு !
    அதுபோல்
    மாற்றாது பெருங் கடலும்
    நம் மனதை !
    வளைக்காது பெரும் புயலும்
    நம் முடிவை !
    இறுதியில் அனைத்து
    மலை முகடுகளின் உச்சிக்கு
    நீண்டு
    தொட்டுவிடும் நம் கரங்கள்,
    நம்மிடை ஓடி வரும்
    சொர்க்க புரியை !
    மேலும்
    சூளுரைக்க வேண்டும்
    நாம் மட்டும்,
    விண்ணில் தாரகை நோக்கி
    விரைந்து செல்ல !

    ********************

    Poem -2

    Elizabeth Browing
    But only three in all God’s universe
    Have heard this word thou hast said,–Himself, beside
    Thee speaking, and me listening! and replied
    One of us . . . that was God, . . and laid the curse
    So darkly on my eyelids, as to amerce
    My sight from seeing thee,–that if I had died,
    The deathweights, placed there, would have signified
    Less absolute exclusion. “Nay” is worse
    From God than from all others, O my friend!
    Men could not part us with their worldly jars,
    Nor the seas change us, nor the tempests bend;
    Our hands would touch for all the mountain-bars:
    And, heaven being rolled between us at the end,
    We should but vow the faster for the stars.

    **********

    Share
  • காதல் நாற்பது (1)::சாதல் அல்ல காதல் !

    காதல் நாற்பது (1)

    சாதல் அல்ல காதல் !

    எலிஸபெத் பிரௌனிங்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     elizabeth-browning1

    எலிஸபெத் பிரௌனிங்

    (1806-1861)

     

    கிரேக்கக் கவி தியோகிரிடஸ்
    எப்படித்தான்
    கீதமிசைத் தாரென எண்ணினேன்,
    ஒருகாலத்தில் !
    விரும்பியபடி வாழ்ந்து
    தன்னினிய
    காலங்களைக் கடந்தது எப்படி ?
    கவியின் ஒவ்வோர்
    காலச் சுவடும்
    வாலிபர், முதியோர் தமக்கு
    மனிதக் கொடையாய்த் தங்கும்,
    நளினக் கரத்தில் !
    கவிஞனின் வாழ்வை
    அவன் பூர்வீக மொழியில்
    ஆராய்ந்தேன் !
    என் கண்ணீர்த் திரைக்குள்
    எழுந்தன மெதுவாய்
    இன்ப துன்பக் காட்சிகள்,
    என் துயர்க் காலங்கள் !
    வாழ்வுச் சம்பவம் அனைத்தும்
    திரும்பி வந்து
    கருநிழலைப் பரப்பி எனது
    நெஞ்சைக் கீறின !
    நேரடியாய்ப் புரிந்தது எனக்கு !
    பின்னே கூந்தலைப்
    பிடித்திழுத்து மர்ம
    வடிவம் ஒன்று ஓலமிட்டுப்
    பின்புறம் நடந்தது !
    தத்தளித்த என்னை
    ஓர் அசரீரி
    ஆதிக்கமுடன் கேட்டது:
    “உன்னைப் பற்றுவது எதுவென
    ஊகிக்க முடியுதா ?”
    “ஆம் அது மரணம்” எனப்பதில் அளித்தேன் !
    ஆயினும் ஆங்கே
    வெள்ளிக் குரலோசை ஒன்று
    விடை அளித்தது,
    “சாதல் அல்ல !
    உனது
    காதல் உணர்வு !”

    +++++++++++++++++++++++++++++++++

    (Sonnets from the Portuguese (1)
    By: Elizabeth Browning

    I thought once how Theocritus had sung
    Of the sweet years, the dear and wished-for years,
    Who each one in a gracious hand appears
    To bear a gift for mortals, old or young:
    And, as I mused it in his antique tongue,
    I saw, in gradual vision through my tears,
    The sweet, sad years, the melancholy years,
    Those of my own life, who by turns had flung
    A shadow across me. Straightway I was ‘ware,
    So weeping, how a mystic Shape did move
    Behind me, and drew me backward by the hair;
    And a voice said in mastery, while I strove, –
    “Guess now who holds thee!” – “Death,” I said,
    But, there,
    The silver answer rang, “Not death, but Love.”

    ********************

     

    Share
  • வேண்டாம் உன் நட்பு

    விசாலம்-drinkindex

    என் இனிய சிநேகிதியே ,
    நீயா ? எனக்கு  ..இப்படி?
    உன்னை மார்பில் அணைத்தேனே !
    இனிய சுகத்தைத் தந்தாயே ,
    உதடுடன் உன்னை இணைத்தேனே!
    இனிய ரசத்தைக் கொடுத்தாயே ,
    மாலையில் சந்தித்த நான்,
    திரும்பப் பார்க்கும்  எக்கம் ,
    அடுத்தடுத்து ஏற்பட
    காலையிலும்  இணைந்தேனே ,
    உன் நட்பு எனக்கு பெரிது ,
    உன்னை நான் விரும்ப ,
    என்னை நீ விடாமல் பிடிக்க
    சுவர்க்கத்தில்  மிதந்தேன் ,
    உன்னால் பல நட்பு போனது ,
    காலால் உதைப்பட்ட மனைவி
    கர்ப்பம்  கலைந்து நின்றாள் ,
    என்னை விட்டுப் போனாள்
    பின்னும் நீதான் எனக்கு
    என்றும் துணை நின்றாய்
    சோகமா நீ கைக் கொடுத்தாய் ,
    தனிமையா, ஓடி வந்தாய் ,
    கோபமா ?என் கூட நின்றாய் ,
    சிநேகிதியாக நடித்து
    ஏன் இன்று துரோகியானாய்! ,
    நிம்மதிக் கொடுப்பதுப் போல்
    என் நிம்மதியை    கெடுத்தாயே ,

    இன்று  ஆஸ்பத்திரியில் நான்
    இது நீ கொடுத்தப் பரிசு ,
    கல்லீரலில்  புற்று நோய்
    இதோ உன்னைத் தூக்கி எறிகின்றேன் ,
    வேண்டாம் உன் சகவாசம் ,
    நட்பாக நடித்து
    என் உயிருகே உலையா?
    ஏ மதுப்புட்டியே, விஸ்கியே
    ஒழிந்து போ !
    இன்னும்  சிறிது காலம் தான் வாழ்வு
    உன்னால் வந்தது இந்தத் தாழ்வு
    கண்கெட்டப்பின்  சூரிய நம்ஸ்காரம்
    இனி  உன் திக்கிற்கும் ஒரு நமஸ்காரம்

    பின் குறிப்பு   புற்றுநோயினால் உயிருக்கு மனறாடும் ஒருவரைப்பற்றி
    என் தோழி சொல்ல அதனால் எழுதப்பட்டது இந்தக்கவிதை என் இனிய சிநேகிதியே ,

     

    படத்துக்கு நன்றி
    Share
  • சிற்றருவி ! பேரருவி !

    kutralam-niagara1

    சி. ஜெயபாரதன், கனடா

     z

    இறை வணக்கம்

    அண்டத் தலைவனை, ஆதி முதல்வனைத்
    தொண்டன் வணங்கித் துணிகின்றேன் ! – பண்டைமுதல்
    குற்றாலத் தேனருவி கொட்டுவதை நானெழுத
    வற்றாத் தமிழூட்ட வா !

    ***********

    கற்றேன் கடுகளவு ! கற்க உலகளவு !
    ஒற்றைப் பிறப்பெனக்கு ஒவ்வாது ! – முற்றிலும்
    தாரணியைக் காணத் தருணம் கிடைப்பதில்லை !
    ஓரளவு தேறிடவே ஓது !

    ***********

    குற்றால அருவி எப்படி உள்ளது என்றொரு பெருங் கவிதை புனைவதை விட, அது எப்படி இருக்க வில்லை என்றும் நான் சொல்ல விழைகிறேன். அப்போதுதான் அதன் முழுத் தோற்றத்தை நாம் விழுமையுடன் காண முடிகிறது.
    ஒரு கல்லில் அடிப்பேன்
    இரு மாங்காய் !
    இரு நீர்வீழ்ச்சி வடிப்பேன்
    ஒரு மூச்சில் !

    ******************

    குற்றால அருவி !

     

    குற்றாலச் சிற்றருவி !
    குதித்தோடும் தேனருவி !
    முத்தான நீரருவி !
    முகிலெட்டும் வானருவி !

    குற்றாலம் வெண்ணருவி !
    கொட்டுகின்ற தண்ணருவி!
    சிற்றாறுக் குன்றருவி !
    சிரித்தோடும் பொன்னருவி !

     

    நயாகரா அருவி !

     

    புவியிலே பேரருவி !
    பூத உடல் நீரருவி !
    கவிழ்ந்து விழும் கீழருவி !
    கழுத்தொடிக்கும் பேயருவி !

    முற்றிலும் மண்ணருவி !
    முதலிரவுப் பெண்ணருவி !
    குற்றாலம் விண்ணருவி !
    குறைவாகும் சின்னருவி !

    தோற்றம் கீழே உனக்கு ! வானத்
    தோரணம் ஏது உனக்கு ?
    போற்றிப் புகழ்ந்தாலும் சேரும்
    நாற்றச் சாக்கடை தான் !

     

    குற்றால அருவி !

     

    குற்றாலம் குளியருவி !
    குடிமக்கள் தேனருவி !
    நெற்றி நிமிர் மேலருவி !
    நெளிதோடும் கானருவி !

    குரங்காடும் நீரருவி !
    கூடுகட்டும் ஊர்க்குருவி !
    மரமாடும் பேரருவி !
    மானோடும் வானருவி !

    குற்றாலம் சிற்றருவி ! மழைக்
    குன்றின் வெற்றருவி !
    நயாகரா பேரருவி !
    நல்வணிகர் பேருதவி !

     

    குற்றால அருவி !

    எளியவர் கண்டு களிக்கலாம் !
    எல்லாரும் இனிதாய்க் குளிக்கலாம் !
    துர்நாற்றம் இல்லா நீரது !
    தூய்மை யான மழையது !

    குற்றாலச் சூழ் மேடை
    சூழ்ந்து வரும் பூவாடை !
    நயாகரா நதி ஓடை
    நாகரீகச் சாக்கடையே !

     

    நயாகரா அருவி !

    ஆறாக ஓடி வரும் !
    ஆத்திரமாய்ப் பாய்ந்து விழும் !
    மாறாகக் கீழ் ஓடுது !
    மண்ணைப் போய்த் தாவுது !

    குரங்கில்லை ! குன்றில்லை !
    மரமில்லை ! மானில்லை !
    இயற்கை வனப்பழியும் ! எங்கும்
    செயற்கை மினுப்படிக்கும் !

    ஒரு நதி இடையில் பிரியுது !
    இரு நீர் வீழ்ச்சியாய்த் தெரியுது !
    பிரமிப் பான காட்சிதான் !
    பேரிடி கேட்கும் மூச்சிதான் !

     

    குற்றால அருவி !

     

    வெள்ளிக் கதிர் எழுமருவி !
    வேகமாய் விழுமருவி !
    துள்ளி வரும் நீரருவி !
    தூங்கி விடும் ஓரருவி !

    ஆன்மீக நாட்டருவி !
    ஆடிவரும் காட்டருவி !
    நான் விழையும் நீரருவி
    நாத எழும் தூயருவி !
    நயாகரா அருவி !

     

    வாணிபச் சந்தை அது !
    வஞ்சிப்போர் மந்தை அது !
    தோணியிலே சென்றாலும்
    துட்டுத்தான் கரையுதடா !

    காசிருந்தால் நீர் வீழ்ச்சி !
    காசுரிக்க ஓர் சூழ்ச்சி !
    காசிருந்தால் சூதாட்டம் !
    காசிழந்தால் போராட்டம் !

    பகலிரவாய் நீர் பாயும் !
    பார்த்தாலே குடல் சாயும் !
    மகத்தான நீர்வீழ்ச்சி !
    மாறான கண்காட்சி !

    மின்சக்தி உருவாக்கும் !
    மின்வெளிச்சம் நிற மூட்டும் !
    வானூர்தி வட்டமிட்டு
    வானிருந்து நதி காட்டும் !’

     

    குற்றால அருவி !

     

    பசுமை மரமுண்டு !
    பாடும் குயிலுண்டு !
    அசையும் இலையுண்டு !
    அத்தனைக்கும் உயிருண்டு !

    பட்டப் பகலில் பரிதி ஒளி !
    பறவை பாடும் பண்ணின் ஒலி !
    எட்டும் இரவில் நிலவின் வெளி !
    என்றும் மாறா வண்ண ஒளி !

     

    நயாகரா அருவி !

     

    நயாகரா நீர்வீழ்ச்சி
    நாணயப் படக்காட்சி !
    உயிரில்லை !
    உணர்வில்லை
    ஒப்பனையாய்க் கவர்ந்தாலும் !

    நயாகரா காதலர்க்கு !
    நாடிவரும் வாணிபர்க்கு !
    வயாகரா மானிடர்க்கு !
    வாடிக்கை மாதருக்கு !

     

    சிற்றருவியா ? பேரருவியா ?

     

    டாலர் வாழும் நயாகாரா !
    டாலர் ஆளும் நயாகரா !
    டாலர் கூடும் நயாகரா !
    டாலர் நாடும் நயாகரா !

    குபேரச் சாக்கடையில் முங்கிக்
    குளிப்பது யார் தற்காலம் ?
    குசேலக் குற்றாலம் பொங்கிக்
    குளிப்பது நம் பொற்காலம் !

     

    ***********

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! அகிலப் பிண்டத்தின் அடிப்படை மர்மமான நியூடிரினோ நுண்ணணுக்கள் !

     
     

     

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     

    அற்பச் சிறு நியூடிரினோ அகிலத்தின்
    சிற்பச் செங்கல் !
    அண்டத்தைத் துளைத்திடும்
    நுண்ணணு !
    அகிலப் பெரு வெடிப்பில்
    உதிர்ந்த கோடான கோடி
    அக்கினிப் பூக்கள் !
    சுயவொளிப் பரிதிகளின்
    வயிற்றில் உண்டானவை !
    வலை போட்டுப் பிடிக்க முடியாத
    வையகக் குஞ்சுகள் !
    ஒளிவேகத்தில் விரையும் மின்மினிகள் !
    கண்ணுக்கும் தெரியா !
    கருவிக்கும் புரியா !
    எதனுடனும் இணையா !
    முன்னூறுக்கு மேற்பட்ட
    நுண்ணணுக்கள்
    விண்வெளியில் விளையாடும் !
    பிரபஞ்சத்தின்
    சீரமைப்பு முரணுக்குக்
    காரணம்
    நியூடிரி னோவா ?
    கருமைப் பிண்டத்தின் அடிப்படைக்
    கருச் சிசுவா ?

    ++++++++++++++++

    “அதனுடைய திணிவு நிறை எலெக்டிரானை விட மிகச் சிறியது ! ஃபெர்மி அந்த நுண்ணணுவுக்கு “நியூடிரினோ” என்று பெயரிட்டார் ! அவற்றின் சுழற்சி 1/2 (Spin 1/2) என்று இருக்கலாம் என்பது எனது யூகம். அவை மற்ற பிண்டத் துகளுடனும், ஒளித்திரளுடனும் இணைப்பாடு இல்லை. (No Interactions with Matter or Photons)”

    நோபெல் பரிசு விஞ்ஞானி : உல்ஃப்காங் பாலி (Wolfgang Pauli) (1930)

    “இரவு வானத்தில் ஒளிவீசித் தெரியும் விண்மீன்களின் கொள்ளளவுப் பிண்டங்களை விட நியூடிரினோக்களின் திணிவு நிறைப் பேரளவு மிஞ்சி இருப்பதாக நாம் அறிவோம். விண்மீன்களை விட மிக்கப் பரிமாணம் கொண்டவையாக நியூடிரினோக்கள் இருக்கலாம். அதனால் (கருமைப் பிண்டத்தைப் பற்றிக் கணிக்கும் போது) அகிலவியல்வாதிகள் (Cosmologists)  நியூடிரினோக்களைக் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.”

    ஜான் லேனர்டு விஞ்ஞானி ஹவாயி பல்ககைக் கழகம்

     

    புதிரான கருமைச் சக்தியின் மர்மான நுண்ணணுக்கள் !

    பிரமாண்டமான பிரபஞ்சத்தில் முக்கால் திணிவுப் பகுதியான கருமைச் சக்தி (Dark Energy) மனிதக் கண்ணுக்குப் புலப்படாமலும் என்னவென்று விளக்க முடியாமலும் “அகிலப் புதிராக” (Heavenly Mystery) இன்னும் இருந்து வருகிறது ! அதைப் போன்று அடுத்து மர்மமானது பிரபஞ்சத்தின் கால் பகுதியாக இருக்கும் “கருமைப் பிண்டம்” (Dark Matter) ! புதிருக்குள் புதிரான நியூடிரினோ துகள்கள் பிரபஞ்சப் பிண்டத்தின் மூலத்துக்கு அடிப்படை என்று நிரூபிக்க உதவலாம் ! அகிலவெளிப் புதிர்களை ஆழ்ந்து ஆராய விஞ்ஞானிகள் நுண்ணணு விரைவாக்கிகள் (Particle Accelerators), தொலைநோக்கிகள், துணைக்கோள்கள் ஆகியவற்றைத் தற்போது பயன்படுத்தி வருகிறார். சில உயர்ச் சீரமைப்பு நுண்ணணுக்கள் (Super Symmetric Particles) மிகப் பலவீனமாக உடனியங்கும் துகள்களின் பிரதானக் குடிகள் (Prime Candidates for the very weakly interacting Particles) என்று ஜப்பானிய விஞ்ஞானி முராயமா கருதுகிறார். விரைவாக்கிகள் நுண்ணணுக்கள் எவ்விதம் தம்முள் உடனியங்குகின்றன என்று உளவவும், அவற்றின் திணிவு நிறையை (Mass) அளக்கவும் உதவு கின்றன. அம்முறையில் “நியூடிரினோ பௌதிகம்” (Neutrino Particle Physics) ஓர் மகத்தான இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளது ! 1995 ஆம் ஆண்டில் அமெரிக்க விஞ்ஞானிகள் லாஸ் அலமாஸ் தேசீய ஆய்வகத்தில் நியூடிரினோவின் திணிவு நிறையை 5 eV (5 Electron Volt) (Mass of Neutrino is 1/100,000 of the Mass of Electron) என்று கண்டுபிடித்தது விண்வெளித் தேடலில் முக்கியத்துவம் பெறுகிறது !

     

    பிரபஞ்சப் பெரு வெடிப்பிலிருந்து கோடானகோடி நியூடிரினோ நுண்ணணுக்கள் சிதறி விண்வெளி எங்கும் பில்லியன் ஆண்டுகளாய்ப் பொழிந்து வந்துள்ளன. சூரியனைப் போன்ற சுயவொளி விண்மீன்கள் நியூடிரினோக்களை உற்பத்தி செய்கின்றன. வெடித்துச் சிதையும் சூப்பர்நோவாக்கள் நியூடிரினோக்களை வெளியாக்கி வருகின்றன ! எலெக்டிரானுக்கும் சிறிதான நியூடிரினோவுக்கு முதலில் நிறையில்லை என்றுதான் விஞ்ஞானிகள் கருதி வந்தனர். மேலும் நியூடிரினோ எலெக்டிரான் நியூடிரினோ, மியூவான் நியூடிரினோ, டௌ நியூடிரினோ (Electron Neutrino, Muon Neutrino & Tau Neutrino) என்று மூன்று வகையில் மிகச் சிறிதாக இருப்பதாலும், அவற்றைப் பிடித்துப் பரிமாணம், பண்பாடுகளைக் காண முடியாது. நியூடிரினோவின் நிறையை விரைவாக்கிகளில் கணிக்க முடியாது. கனடாவில் பூமிக்கடியில் பல மைல் ஆழத்தில் இருக்கும் ஸட்பரி சுரங்கத்தில் அமைக்கப் பட்டுள்ள “ஸட்பரி நியூடிரினோ நோக்ககத்தில்” (Sudbury Neutrino Observatory SNO) பரிதியின் நியூடிரினோக்களைக் கனநீரில் பிடித்துப் பண்பாடுகளைக் காண முடிகிறது. அதுபோல் ஜப்பானில் நியூடிரினோவை நோக்க “உயர் காமியோகந்தே” (Super_Kamiokande) என்னும் பிரமாண்டமான விஞ்ஞானச் சாதனம் ஒன்று உள்ளது !

     

    நியூடிரினோவைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் !

    13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய பிரபஞ்சத்தில் நியூடிரினோப் பொழிவுகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. பிரபஞ்சம் கனலில் கொதித்து விரிந்து, விரிந்து மெதுவாகக் குளிர்ந்து அகிலப் பின்புலக் கதிர்வீச்சு (Cosmic Background Radiation) உஷ்ணம் தற்போது 1.9 டிகிரி கெல்வின் (-217 டிகிரி செல்ஸியஸ்) ஆக உள்ளது. ஆனால் நியூடிரினோவின் இருப்பு முதன்முதலில் 1930 ஆம் ஆண்டில் ஆஸ்டிரிய விஞ்ஞானி உல்ஃப்காங் பாலி (Wolfgang Pauli) [1900-1958] என்பரால் அறிமுகமானது. அணுக்கருப் பீட்டாத் தேய்வில் சக்தியின் அழிவின்மை கோட்பாட்டை விளக்க வரும் போது புதுத் துகள் ஒன்றின் நிழல்தடம் அவருக்குத் தெரிந்தது. அதன் நிறை எலெக்டிரான் நிறையை விடக் குறைவானது ! அதற்கு எந்த மின்னேற்றமும் இல்லை (No Electrical Charge) ! ஏறக்குறைய புலப்படாத நுண்துகள் (Almost Invisible Particle) ! மற்ற துகள்களுடன் உடன்சேர்ப்பில்லை (No Interaction with Other Particles). இத்தாலிய விஞ்ஞானி என்ரிகோ ஃபெர்மி (Enrico Fermi) (1901-1954) அந்தத் துகளுக்கு “நியூடிரினோ” (Little Neutral One) என்று பெயரிட்டார். ஆனால் 1956 இல் ஃபிரெடிரிக் ரையின்ஸ் & கிளைடு கோவன் (Fred Reines & Clyde Cowan) இருவரும் முதன்முதலில் அணு உலையில் நியூடிரினோ உடனியக்கங்களை நிகழ்த்திக் காட்டினர். நியூடிரினோவின் நிறை எலெக்டிரான் நிறையை விடச் சிறியது என்று 1933 இல் எடுத்துக் காட்டியவர் எஃப். பெர்ரின் (F. Perrin). 1934 இல் ஹான்ஸ் பெத்தே & ரூடால்ஃப் பையர்ஸ் (Hans Bethe & Rudolf Peiers) இருவரும் நியூடிரினோவின் “குறுக்குப் பரப்பு” (Cross Section means Probability of Interaction) எலெக்டிரானின் குறுக்குப் பரப்பை விட மில்லியன் மடங்கு சிறியது என்று நிரூபித்தனர்.

    அகிலக் கதிர்கள், சூரியன் போன்ற சுயவொளி விண்மீன்கள், அணு உலைகள், பூமிக்குள் நிகழும் கதிரியக்கத் தேய்வுகள் (Cosmic Rays, Sun Like Stars & Nuclear Reactors, Radioactive Decay within the Earth) ஆகிய நான்கு முறைகளையும் சேர்த்துப் பல்வேறு முறைகளில் மூன்றுவித நியூடிரினோக்களும் உண்டாக்கப் படுகின்றன ! வலுவில்லாத நுண்ணணு நியூடிரினோ விழுங்கப் படாமல் 600 டிரில்லியன் மைல் (மில்லியன் மில்லியன் மைல்) தடிப்புள்ள ஈயத்தைக் கூட ஊடுருவும் வல்லமை பெற்றது ! பரிதியிலிருந்து வினாடிக்குச் சுமார் 10 மில்லியன் நியூடிரினோக்கள் வெளியாகி ஒளிவேகத்தில் நம்மை ஊடுருவிச் செல்கின்றன ! எந்தப் பிண்டத் துகளுடன் இணையாத நியூடிரினோ அண்டக் கோள்களைத் துளைத்துச் செல்பவை ! சூரியன், சந்திரன், பூமி அனைத்தையும் ஊடுருவிச் செல்பவை ! சூரியன் மட்டும் ஒவ்வொரு வினாடியும் 200 டிரில்லியன், டிரில்லியன், டிரில்லியன் நியூடிரினோக் களை உற்பத்தி செய்கிறது ! வெடித்துச் சிதையும் ஒரு சூப்பர்நோவா சூரியனை விட 1000 மடங்கு மிகையான நியூடிரினோக்களை வெளி யாக்கும் ! சுமார் 65 பில்லியன் நியூடிரினோக்கள் பரிதியிலிருந்து ஒவ்வொரு வினாடியும் 1 சதுர மீடர் பூமியின் சதுரத்தில் பாய்ந்து விழுகின்றன !

    கனடாவின் ஸட்பரி நியூரினோ நோக்ககம் (SNO)

    அமெரிக்காவின் புருக்ஹேவன் தேசீய ஆய்வகத்தின் கூட்டுறவுடன் அண்டாரியோ, கனடாவில் ஸட்பரி நியூடிரினோ நோக்ககம் (SNO) 1996 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு 1999 அக்டோபர் முதல் இயங்கத் துவங்கியது. அந்த ஆய்வகம் 6800 அடி ஆழத்தில் குடையப்பட்ட ஒரு சுரங்கத்தில் (Sudbury, Ontario Creighton Mine) அமைக்கப் பட்டுள்ளது. உளவும் பிளாஸ்டிக் கலத்தில் சுமார் 1000 டன் பூரணத் தூயக் கனநீர் (1000 Ton Ultra Pure Heavywater in Acrylic Plastic Container) கொண்டது. அந்த பூதக் கலமானது 7000 டன் தூய சாதா நீர் சுற்றியுள்ள கவசப் பானையில் வைக்கப் பட்டுள்ளது. அதில் பயன்படும் 300 மில்லியன் டாலர் மதிப்புள்ள 1000 டன் கனநீரைக் கனடா வாடகைக்குக் கொடுத்துள்ளது. அந்த சாதா நீர்ப் பானையில் 9500 அடுக்குப் படம் நோக்குக் கருவிகள் மூலம் (Photomultiplier Tubes PMT) நியூடிரினோக்கள் கனநீரில் உண்டாக்கும் நீல நிறச் “செராங்கோவ் கதிர்வீச்சைப்” (Blue Glow – Cerenkov Radiation) படம் எடுக்கலாம்.

    அறியப்படாத சில வித நியூடிரினோக்கள் கருமைப் பிண்டத்துக்கு மூலமாகுமா ?

    பரிதியைப் போன்ற சுயவொளி விண்மீன்கள் அணுப்பிணைவு சக்தியில் கனல் வீசினாலும் நியூடிரினோ நுண்ணணு எவ்விதம் வெளியாகிறது என்பது அறியப்படாமல் பிரபஞ்சப் புதிராகவே இருந்து வருகிறது ! வானியல் விஞ்ஞானிகள் கண்ணுக்குப் புலப்படும் ஒளிமயத்தைத் தவிர பிரபஞ்சத்தில் இன்னும் ஏராளமான பிண்டம் (Matter) இருப்பதாகக் கணிக்கிறார்கள். ஏனெனில் காலாக்ஸி ஒளிமந்தைகளை ஏதோ கண்ணுக்குத் தெரியாத பிண்டங்களின் கவர்ச்சி நகர்த்திச் செல்கிறது. அந்தப் பிண்டம் ஒளியைத் தடுத்து மறைப்பதில்லை ! மேலும் அந்தப் பிண்டம் ஒளியை உமிழ்வதுமில்லை ! ஆகவேதான் கண்ணுக்குத் தெரியாத அந்தப் பிண்டம் “கருமைப் பிண்டம்” (Dark Energy) என்று அழைக்கப் படுகிறது !

    இப்போது விஞ்ஞானிகள் மனதில் எழும் வினாக்கள் இவைதான் ! இதுவரை அறியப்படாத சில வித நியூடிரினோக்கள் கண்ணுக்குப் புலப்படாமல் கணிக்கப் பட்ட கருமைப் பிண்டத்துக்கு அடிப்படை ஆகுமா ? இன்னும் புலப்படாமல் இருக்கும் புதிய நியூடிரினோக்கள் பிரபஞ்ச வெளியில் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கக் காத்துக் கொண்டுள்ளனவா ? அந்தக் கேள்விகளுக்கு “ஆம்” என்று பதில் அளிப்பவர் : ஹவாயி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜான் லேனர்டு (John Learned) என்னும் வானியல் விஞ்ஞானி ! “இரவு வானத்தில் ஒளிவீசித் தெரியும் விண்மீன்களின் கொள்ளளவுப் பிண்டங்களை விட நியூடிரினோக்களின் திணிவு நிறைப் பேரளவு மிஞ்சி இருப்பதாக நாம் அறிவோம். விண்மீன் களை விட மிக்கப் பரிமாணம் கொண்டவையாக நியூடிரினோக்கள் இருக்கலாம். அதனால் (கருமைப் பிண்டத்தைப் பற்றிக் கணிக்கும் போது) அகிலவியல் வாதிகள் (Cosmologists).” நியூடிரினோக்களைக் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.” என்று கூறுகிறார் ஜான் லேனர்டு.

    பிரபஞ்சத்தில் பேரளவு பிண்டம் எவ்விதம் ஆதியில் உண்டானது ? நியூடிரினோக்களைத் தவிர்த்துக் கருமைப் பிண்டத்தில் இன்னும் புலப்படாமல் இருக்கும் நுண்ணணுக்கள் பங்கேற்றிருக்கலாம் ! பிண்டம் எப்படித் தோன்றியது என்று அவை விஞ்ஞானிகளுக்குப் புதிய பாடத்தைப் போதிக்கலாம் ! பிரபஞ்சப் பெருவெடிப்பு நேர்ந்த போது பிண்டமும், எதிரிப் பிண்டமும் (Matter & Antimatter like Electron & Positron) சமப் பரிமாணத்தில் படைக்கப் பட்டிருக்க வேண்டும் ! ஆனால் பிண்டமும் எதிர்ப் பிண்டமும் சேரும் போது அவை இணைந்து அழிகின்றன ! அப்படிச் சம அளவில் படைக்கப் பட்டிருந்தால் அவை அழிந்து வெறும் கதிர்வீச்சு மட்டும் (Radiation Energy) பிரபஞ்சத்தில் நிரம்பி யிருக்கும் ! ஏராளமாக ஏன் பிரபஞ்சத்தில் பேரளவு ஈர்ப்பாற்றல் கொண்ட பிண்டம் கொட்டிக் கிடக்கிறது ? ஒரு வேளை நியூடிரினோக்கள் பிரபஞ்சத்தின் ஆரம்ப காலச் “சீரமைப்பு முரணுக்குப்” (Early Asymmetry of the Universe) பங்கேற்றி யிருக்கலாம் ! அது மெய்யானால் நமது உயிர் வாழ்வுக்கும் நியூடிரினோக்களே மூல காரணமாக இருக்கும் !

    [தொடரும்]

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – Do Neutrios Hold Secrets to the Cosmos ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 South Pole Neutrino Detector Could Yield Evidences of String Theory (www.physorg.com/)
    20 Where Cosmology & Particle Physics Meet By : Paul Preuss – Science@berkeley Lab (Jan 30, 2006)
    21 Fermi Lab – MINOS Experiment Sheds Light on Mystery of Neutrino Disappearance (Mar 30, 2006)
    22 The Birth of Neutrinos (1930-1934)
    23 What is a Neutrino By : Dave Casper
    23 Dept of Energy USA, Solar Neutrinos & Sudbury (Canada) Neutrino Observatory (SNO) By : Richard Halm, Minfang Yeh, Keith Rowley, Zheng Chang & Alexander Garnov (July 27, 2004)

    24.  http://en.wikipedia.org/wiki/Neutrino  [December 3, 2013]

    ******************
    jayabarathans@gmail.com [December 3, 2013]  [R-1]

    http://jayabarathan.wordpress.com/

    Share
  • அழகான ராட்சஷியே!!!

    தேமொழி

     

    “அழகான ராட்சஷியே அடிநெஞ்சில் கொதிக்கிறியே
    முட்டாசு வார்த்தையிலே பட்டாசு வெடிக்கிறியே
    அடி மனச அருவாமணையில் நறுக்குறியே”

    என்று கதாநாயகன் பாடும்பொழுது, “வீட்டுக்கு வீடு வாசப்படின்னு சொல்றது ஏன்னு இப்பல்ல புரியுது,” என்று பெருமூச்சு விட வேண்டாம். தோழர்களே, உங்கள் அழகான ராட்சஷி உங்களை வார்த்தையால் நையப் புடைக்கும்பொழுது மனம் வெறுத்து அவளிடம் கோபம் கொள்ளவேண்டாம். அவள் அவ்வாறு செய்வதற்கும் காரணம் இருக்கிறது.

    காரணம் வேறு இருக்கிறதா இதற்கெல்லாம்? என்று வெகுண்டெழ வேண்டாம். இதை நான் சொன்னால், அதாவது …ஒரு பெண்குலத்தின் பிரதிநிதி சொன்னால், ஒத்துக் கொள்ள உங்களுக்கு விருப்பமில்லாமல் இருக்கலாம். ஆனால், தமிழுலகம் போற்றும் பாரதியார் சொன்னால் மறுக்காமல் ஒத்துக் கொள்வீர்கள் என நினைக்கிறேன். நம்ப முடியவில்லையா? பாரதியாரின் “சந்திரிகையின் கதை” என்ற கதையில் அவ்வாறுதான் அவர் எழுதியுள்ளார்.

    நான் கதைக்கவில்லை, பாரதியார் சந்திரிகையின் கதை என்று ஒரு கதையை எழுதினார். ஒரு மழை, புயல், பூகம்பம் நாளில் பிறந்து, பிறந்த அன்றே குடும்பம் முழுவதையும், தாய் உட்பட, இயற்கையின் சீற்றத்திற்கு வாரி வழங்கிய குழந்தை சந்திரிகைதான் அந்தக் கதையில் கதாநாயகி. அக்குழந்தை சந்திரிகை, இளம்கைம்பெண் ஆன அத்தை விசாலாட்சியிடம் வளர்கிறாள். அந்த அத்தைக்கும் மறுமணம் நடக்கிறது, கதைப்படி 1905ஆம் ஆண்டு, நூறு வருடங்களுக்கு முன்னே நடந்த கதையாகும் இது. ஆனால், நம் துரதிர்ஷ்டம், ஒன்பதாம் அத்தியாயம் வரை எழுதிய பாரதியார் கதையை முடிக்கும் முன்னே மறைந்துவிட்டார். ஒன்பதாம் அத்தியாயத்தின் தலைப்பு “பெண்டாட்டிக்கு ஜயம்.” அகால மரணத்தினால் பாரதியாருக்கு கதாநாயகி குழந்தை சந்திரிகையைப் பற்றி அதிகம் அந்தக் கதையில் எழுத வாய்ப்பில்லாமல் போனது. அத்தை விசாலாட்சியைப் பற்றி எழுதியவையே அதிகம்.

    கதையின் எட்டாம் அத்தியாயத்தில், மயிலாப்பூர் லஸ் சர்ச் வீதியில் வசிக்கும் சோமநாதய்யர் என்ற (அத்தை விசாலாட்சியின் உறவினர்) உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தன் மனைவியின் சொல்லம்புகளினால் நொந்து போய், பெண்களின் கோபச் சொற்களைப் பற்றி சிந்திப்பதாக கூறுவதன் மூலம் பாரதியார் தன் கருத்தை நமக்குத் தெரிவிக்கிறார். பெண்கள் துணைவர்களிடம் கோபம் கொள்வதேன்? தெரிந்து கொள்ள மேலே படிக்கவும்.
    (பாரதி எழுதியவரை, அதாவது முற்றுப் பெறாத அக்கதையைப் படிக்க விரும்புபவர்கள், இந்த சுட்டியின் வழியேசென்று படிக்கவும்:http://projectmadurai.org/pmworks.html)

    பாரதிக்கு பெண்களின் சார்பில் நன்றி நவில்கிறேன்.

    ——————————————————————————————————————————————————————-
    பாரதியாரின் “சந்திரிகையின் கதை” என்ற கதையின் ஒரு பகுதி கீழே கொடுக்கப் பட்டுள்ளது
    ——————————————————————————————————————————————————————-

    ”வில்லம்பு சொல்லம்பு மேதினியிலே யிரண்டாம்;
    வில்லம்பிற் சொல்லம்பே மேலதிகம்.”

    என்று பழைய பாட்டொன்று சொல்லுகிறது. இந்தச் சொல்லம்பைப் பிரயோகிப்பதில் ஆண் மக்களைக் காட்டிலும் பெண்கள் அதிகத் திறமையுடையவர்களென்று தோன்றுகிறது. இதற்கு முக்கியமான காரணம் ஆண் மக்கள் பெண்மக்களுக்குச் செய்யும் சரீரத் துன்பங்களும், அநீதிகளும், பலாத்காரங்களுமே போலும்.

    வலிமையுடையோர் தம் வலிமையால் எளியாரைத் துன்பப்படுத்தும்-போது எளியோர் வாயால் திரும்பத் தாக்கும் திறமை பெறுகிறார்கள்.கை வலிமை குறைந்தவர்களுக்கு அநியாயம் செய்யப்படுமிடத்தே அவர்களுக்கு வாய்வலிமை மிகுதிப்படுகின்றது.

    மேலும், மாதர்கள் தாய்மாராகவும் சகோதரிகளாகவும் மனைவியராகவும் மற்ற சுற்றத்தாராகவும் இருந்து ஆண் மக்களுக்கு சக்தியும் வலிமையும் மிகுதிப்பட வேண்டுமென்ற நோக்கத்துடன் வேலை செய்கிறார்கள்.அவ்வலிமையும் சக்தியும் தமக்கு விரோதமாகவே செலுத்தப்படுமென்று நன்கு தெரிந்த இடத்திலும், மாதர்கள் தம்மைச் சேர்ந்த ஆண் மக்களிடம் தமக்குள்ள அன்பு மிகுதியாலும், தாம் ஆடவர்களின் வலிமையை சார்ந்து வாழும்படி நேர்ந்திருக்கும் அவசியத்தைக் கருதியும், அவர்களிடத்தே மேற்கூறிய குணங்களேற்படுத்தி வளர்க்க வேண்டுமென்ற நோக்கத்துடன் இடையின்றி முயற்சி பண்ணுகிறார்கள்.

    இவ்வுலக வாழ்க்கையில் ஒருவன் வெற்றியடைய வேண்டுமானால், அவன் சம்பாதித்துக் கொள்ளவேண்டிய குணங்களெல்லாவற்றிலும் மிக மிகமிக உயர்ந்த குணமாவது பொறுமை. மனிதனுடைய மனம் சிங்கம் போல் தாக்குந்திறனும், பாயுந்திறனும் கொண்டிருப்பது மட்டுமேயன்றி ஒட்டகத்தைப் போலே பொறுக்குந் திறனும் எய்தவேண்டும். அவ்விதமான பொறுமை பலமில்லாதவர்களுக்கு வராது. மனத்திட்டமில்லாதோரின் நாடிகள் மிகவும் எளிதாகச் சிறகடிக்கக் கூடியன. ஒரு இலேசான எதிர்ச்சொல் கேட்கும்போதும், இலோசன சங்கடம் நேரும்போதும் அவர்களுடைய நாடிகள் பெருங் காற்றிடைப்பட்ட கொடியைப் போல் துடித்து நடுங்கத் தொடங்குகின்றன. மனத்திட்பமில்லாதோருக்கு நாடித் திட்பமிராது. அவர்களுக்கு உலகத்தில் புதிய எது நேர்ந்தபோதிலும், அதை அவர்களுடைய இந்திரியங்கள் சகிக்குந் திறமையற்றவனவாகின்றன.

    மனவுறுதியில்லாத ஒருவன் ஏதேனும் கணக்கெழுதிக் கொண்டிருக்கும்போது, கக்கத்திலே ஏதேனும் குழந்தை குரல் கேட்டால் போதும், உடனே இவனுடைய கணக்கு வேலை நின்றுபோய்விடும். அல்லது தவறுதல்களுடன் இயல்பெறும். அடுத்த வீட்டில் யாரேனும் புதிதாக ஹார்மோனியம் அல்லது மிருதங்கம் பழகுகிற சத்தம் கேட்டால் போதும், இவனுடைய கணக்கு மாத்திரமேயன்றி சுவாசமோ ஏறக்குறைய நின்று போகக் கூடிய நிலைமை எய்திவிடுவான். புதிதாக யாரைக் கண்டாலும் இவன் கூச்சப்படுவான்; அல்லது பயப்படுவான்; அல்லது வெறுப்பெய்துவான். மழை பெய்தால் கஷ்டப்படுவான். காற்றடித்தால் கஷ்டப்படுவான். தனக்கு சமானமாகியவர்களும் தனக்குக் கீழ்ப்பட்டவர்களும் தான் சொல்லும் கொள்கையை எதிர்த்து ஏதேனும் வார்த்தை சொன்னால், இவன் செவிக்குள்ளே நாராச பாணம் புகுந்தது போலே பேரிடர்ப்படுவான்.

    பொறுமையில்லாதவனுக்கு இவ்வுலகத்தில் எப்போதும் துன்பமேயன்றி, அவன் ஒரு நாளும் இன்பத்தைக் காண மாட்டான். ஒருவனுக்கு எத்தனைக்கெத்தனை பொறுமை மிகுதிப்படுகிறதோ, அத்தனைக்கத்தனை அவனுக்கு உலக விவகாரங்களில் வெற்றியுண்டாகிறது. இது பற்றியேயன்றோ நம் முன்னோர் ”பொறுத்தார் பூமியாள்வார், பொங்கினார் காடாள்வார்” என்று அருமையான பழமொழியேற்படுத்தினார்.

    இத்தகைய பொறுமையை ஒருவனுக்குச் சமைத்துக் கொடுக்கும் பொருட்டாகவே, அவனுடைய சுற்றத்து மாதர்களும், விசேஷமாக அவன் மனைவியும், அவனுக்கு எதிர் மொழிகள் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். கோபம் பிறக்கத் தக்க வார்த்தைகள் சொல்லுகிறார்கள். வீட்டுப் பழக்கந்தான் ஒருவனுக்கு நாட்டிலும் ஏற்படும். வீட்டிலே பொறுமை பழகினாலன்றி, ஒருவனுக்கு நாட்டு விவகாரங்களில் பொறுமையேற்படாது. பொறுமை எவ்வளவுக்கெவ்வளவு குறைகிறதோ, ஒருவனுக்கு அத்தனைக்கத்தனை வியாபாரம், தொழில் முதலியவற்றில் வெற்றியுங் குறையும்.

    அவனுடைய லாபங்களெல்லாம் குறைந்து கொண்டேபோம். பொறுமையை ஒருவனிடம் ஏற்படுத்திப் பழக்க வேண்டுமானால் அதற்கு உபாயம் யாது? சரீரத்தில் சகிப்புத் திறமையேற்படுத்தும் பொருட்டாக ஜப்பான் தேசத்தில் ஒரு குழந்தையாக இருக்கும்போதே ஒருவனுடைய தாய் தந்தையார் அவனை நெடு நேரம் மிக மிகக் குளிர்ந்த பனிக்கட்டிக்குள் தன் விரலை அல்லது கையைப் புதைத்து வைத்துக் கொண்டிருக்கும்படி செய்து பழக்குகிறார்கள். மிக மிகச் சூடான வெந்நீரில் நெடும்பொழுது கையை வைத்துக் கொண்டிருக்கும்படி ஏவுகிறார்கள். இவை போன்றன உடம்பினால் சூடு குளிரைத் தாங்கும்படி பயிற்றுவதற்குரிய உபாயங்களாம்.

    இது போலவே சுக துக்கங்களை சகித்துக் கொள்வதாகிய மனப்பொறுமை ஏற்படுத்துவதற்கும், சூடான சொற்களும் சகிக்க முடியாத பேதைமைச் சொற்களும் சொல்லிச் சொல்லித்தான், ஒருவனைப் பழக்க வேண்டும். அவற்றைக் கேட்டுக் கேட்டு மனிதனுக்குக் காதும் மனமும் நன்கு திட்பமெய்தும், இங்ஙனம் பொறுமை உண்டாக்கிக் கொடுக்கும் பொருட்டாகவும், மனிதனுடைய மனத்தில் அவனாலேயே அடிக்கடி படைத்துக் கொள்ளப்படும் வீண் கவலைகளினின்றும் வீண் பயங்களினின்றும் அவன் மனத்தை வலிய மற்றொரு வழியில் திருப்பிவிடும் பொருட்டாகவும், ஒருவனுடைய மாதா அல்லது மனைவி அவனிடம் எதிர்பார்க்கப்படாத, பேதைமை மிஞ்சிய, கோபம் விளைக்கக்கூடிய சொற்கள் உரைக்கிறார்கள்.

    அவனுடைய அன்பு எத்தனை ஆழமானதென்று சோதிக்கும் பொருட்டாகவும் அங்ஙனம் பேசுகிறார்கள். அன்பு பொறுக்கும். அன்பிருந்தால் கோபம் வராது. அன்றி ஒருவேளை தன்னை மீறிக் கோபம் வந்தபோதிலும் மிகவும் எளிதாக அடங்கிப் போய்விடும். இத்தகைய அன்பைக் கணவன் தன் மீதுடையவனா என்பதைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு மாதர் பல சமயங்களில் கோபம் விளைக்கத் தக்க வார்த்தைகளை மனமறியப் பேசுகிறார்கள்.

    நம்முடன் பிறந்து வளர்ந்து நம்மைத் தாயாகவும் மனைவியாகவும் சகோதரியாகவும் எப்போதும் காப்பாற்றிக் கொண்டும், கவனித்துக் கொண்டும், நம்மிடம் தீராத அன்பு செலுத்திக்கொண்டும் வருகிற மாதர்கள் சில சமயங்களில்-அனேக சமயங்களில் – நமக்குப் பயனற்றனவாகவும், கழி பெரும் பேதைமையுடையனவாகவும் தோன்றக் கூடிய மொழிகளைப் பேசுவதினின்றும் ஆடவர்களாகிய நம்முடை பலர் அம்மாதர்களை மகா மடைமை பொருந்தியவர்களென்று நினைப்பது தவறு.

    அங்ஙனம் நினைத்தல் நமது மடைமையையே விளக்குவதாம். ஆண்மக்கள் பிரத்யேகமாகக் கற்கும் வித்தைகளிலும், விசேஷமாகப் பயிலும் தொழில்களிலும், பொதுவாக சரீர பலத்திலும் மாதரைக் காட்டிலும் ஆண்மக்கள் உயர்ந்திருக்கக் கூடுமேயெனிலும், சாதாரண ஞானத்திலும், யுக்தி தந்திரங்களிலும், உலகப் பொது அனுபவத்தால் விளையும் புத்திக் கூர்மையிலும் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் குறைவாக இருப்பார்களென்று எதிர்பார்ப்பதே மடமை.

    ஆதலால், குடும்பத்திலிருந்து பொறுமை என்பதொரு தெய்விக குணத்தையும், ஆதனால் விளையும் எண்ணற்ற சக்திகளையும் எய்த விரும்புவோர், தாய் மனைவி முதலிய ஸ்திரீகள் தமக்கு வெறுப்புண்டாகத் தகுந்த வார்த்தை பேசும்போது, வாயை மூடிக்கொண்டு பொறுமையுடன் கேட்டுக் கேட்டுப் பழக வேண்டும். அங்ஙனமின்றி ஒரு ஸ்திரீ வாயைத் திறந்த மாத்திரத்திலேயே , அவள் தாயாயனினும், உடம்பிலும் உயிரிலும், பாதியென்று அக்கினியின் முன் ஆணையிட்டுக் கொடுத்த மன¨வியாயினும், அவள் மீது புலிப் பாய்ச்சல் பாய்ந்து பெருஞ் சமர் தொடங்கும் ஆண்மக்கள் நாளுக்கு நாள் உலக விவகாரங்களில் தோல்வி எய்துவோராய்ப் பொங்கிப் பொங்கித் துயர்ப்பட்டுத் துயர்ப்பட்டு மடிவார்.

     

     

     

     

     

     

    நன்றி: வகுப்பறை

    Share
  • ஓர் ஆல விருக்ஷம் பரப்பிய விழுதுகள்

    வெங்கட் சாமிநாதன்

    03-poorani-at-95-225x300தனக்குக் கொடுக்கப்பட்ட வாழ்வைப் பூரணமாக வாழ்ந்த பூரணி அம்மாள் தன் நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்தது கூட தெரியாது மறைந்து விட்டார்கள். அமைதியாக. 1913-ம் ஆண்டு தமிழ் நாட்டின் ஒரு பிராமணக் குடும்பத்தில் ஒன்பது பேரில் ஒருவராகப் பிறந்த ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்? ஆனால், இப்போது அவரைப் பற்றி எண்ணும் போது, தெரிந்த ஒரு சில தகவல்களோடு தெரியாதவற்றையும் சேர்த்துப் பார்க்கும் போது தெரிகிறது, அவர் தன்னை மீறி, தன் சூழலை மீறி, தன் காலத்திய வாழ்க்கைக் கட்டுப்பாடுகளோடு வாழ்ந்தே அவற்றை மீறி தன்னை விகசித்துக்கொண்டு தன் இரண்டு தலைமுறை சந்ததிகளுக்கும் வாழ்ந்து காட்டிய ஆதர்சமாக இருந்தவர்.  தன் நூறாவது ஆண்டு பிறந்த தினத்தில் மறைந்த செய்தி கேட்டு 40 ஆண்டுகளூக்கு முன், தற்செயலாக சற்று நேரம், ஓர் இரவுச் சாப்பாட்டு நேரம் கொடுத்த ஒரு தற்செயலான அறிமுகம் தொடர்ந்த சந்திப்பு என வளர்க்கப் படாவிட்டாலும் அடிக்கடி நினைவு படுத்தி வியந்து, மனதுக்குள் சந்தோஷப்படும் கணங்கள் வந்து சென்றனதான்.

    அது ஓர் எதிர்பாராத சந்திப்பு, அறிமுகம். 1973 என்று தான் நினைவு. அப்போது  உருவாகி வந்த சிறுபான்மை இலக்கியச் சூழலில், நான் அனேகமாக எல்லோருடைய வெறுப்புக்கும் ஆளாகியிருந்த நாட்கள் அவை.  என் இயல்பில் எனக்கு மனதில் தோன்றியவற்றை தயக்கமில்லாது எழுதிச் சம்பாதித்துக்கொண்ட பகை நிறையவே.  மனதில் பட்டதை எழுதாது வேறு என்ன எழுதுவதாம் என்ற சாதாரணப் பொது அறிவின் பால், தர்மத்தின் பால் பட்ட விஷயங்கள் அவை. தாக்கப்பட்டது ஒரு சிலரே என்றாலும் அவர்களுக்கு வேண்டியவர்களும் எனக்கு பகையானார்கள்.  ஏதோ ஓர் அரசியல் கட்சியின் செயல்பாடு போலத்தான் இருந்தது. ராஜ தர்பாரில் ஒரு குழுவின் ஒருத்தரை ஏதும் சொல்லிவிட்டால் தர்பார் முழுதுமே மேலே விழுந்து பிடுங்கும் இல்லையா? கடைசியில் அது ராஜத்வேஷமாக வேறு பிரசாரப்படுத்தப்பட்டது. நிறையவே எழுத்திலும் காதோடு காதாகப் பேச்சுப் பரவலிலும் எனக்கு எதிராக நிறைய பிரசாரம் நடந்தாலும், என் கருத்துக்கு மாற்றுக் கருத்து வைக்கப்படாமலேயே, தனி மனித உறவுகள் துண்டிக்கப்பட்டன. இன்னமும் என் கருத்துக்கள் அப்படியே தொடர்ந்தாலும், எனக்கு எதிரான பகைகள் கூர் அற்றுப் போனாலும் அவை தொடர்கின்றனதான், இன்னும் பரவலாகின்றனதான்.

    எனக்கும் கொஞ்சம் சார்பாகப் பேசுகிறவர்கள் இடம் கொடுத்து கருத்து கேட்பவர்கள் இருப்பார்கள்தானே. இருந்தார்கள். அதில் ஒருவர் ஞான ரதம் என்னும் ஒரு மாதப்பத்திரிகை நடத்திவந்த இப்ராஹீம். ஜெயகாந்தனின் அத்யந்த ரசிகர், பக்தர். நான் விடுமுறையில் வந்திருந்தவன். சில நாட்கள் சென்னையில் கழிக்க வந்திருந்தேன். அந்தப் பதினைந்து இருபது நாட்கள் நான் பழகியிராத நட்புகள், நிகழ்ச்சிகள், சம்பவங்கள் நிறைந்த நாட்கள். புதிய நட்புகள். இறுகி அறுந்து விழும் பிணைப்புகள். தளர்ந்து மெலிந்து விட்டு பிரியும் சினேகங்கள் இவை எல்லாவற்றிற்கும் மையமான இருந்தது இலக்கியப் பகையும் ஜன்ம விரோதம் போன்ற புகைச்சலும்.

    அந்த மாதிரியான புதிய நிகழ்வுகள் உறவுகள் என்பதில் இருந்தவை இப்ராஹீமின் நட்பும் ஞானரத மேடையில் இடமும். இப்ராஹீமின் பத்திரிகைக்கு அதன் மூன்று விட்டு விட்டுத் தோன்றிய அவதாரங்களிலும் பெயர் ஞான ரதம் தான். கண்ணன் சாரதியாக தேர் ஓட்டும் சித்திரம் தான் அதன் அடையாளம். இது 1970 களில். இன்று சாத்தியமில்லை. இப்ராஹீமுக்கு ஒரு ஃபட்வா பிறந்திருக்கும். மீறினால் இருக்குமிடம் தெரியாது போயிருப்பார். அன்று அவர் எனக்கு அவர் மிக உறுதுணையாக இருந்தார். அடையாற்றில் ஏதோ ஒரு மெயின் ரோடின் ஓரத்தில் இருந்த தன் வீட்டுக்கு என்னையும் சிவராமுவையும் அழைத்து காலை விருந்து அளித்தார். நிறைய இட்லிகள் சாப்பிட்டோம். அப்போது நான் மௌபரீஸ் ரோடில் ஓர் உறவினர் வீட்டில் கொஞ்ச நாளும், திருமலைப் பிள்ளை ரோடில் சாரங்கன் என்னும் ஓவியரின் வீட்டில் கொஞ்ச நாளுமாக இருந்தேன். சாரங்கன் வீட்டில் இருந்தது தனிமை வேண்டி. ஜான் ஆபிரஹாமின் அக்கிரஹாரத்தில் கழுதை படத்திற்கு ஸ்க்ரிப்ட் எழுத வேண்டி.

    இப்ராஹீம் ஞானரதத்துக்கான ஒரு நேர்காணல் என்று நண்பர்கள் எல்லோரையும் சந்திக்கலாம், காந்தி மண்டப புல்வெளியில் என்றார்.  சந்தித்தோம். இப்ராஹீமையும் என்னையும் சேர்த்து சுமார் பத்துப் பேர் இருப்போம் என்று நினைவு. எனக்கு புல்வெளியில் சந்தித்தவர்களில் சுப்ரமண்ய ராஜூ, கே.வி. ராமசாமி, நா. ஜெயராமன் என்று ஒரு சிலரைத் தான் நினைவில் இருக்கிறது. எல்லோரையும் புதிதாக அன்று தான் பார்க்கிறேன். அன்று நான் சச்சரவான மனிதன் ஆனதால் கேள்விகள் நிறையக் கேட்கப்படும். பொறி பறக்கும் என்று தோன்றலாம். அப்படியெல்லாம் ஏதும் நடக்கவில்லை. மிகத் தோழமையோடு, சகஜ பாவத்தில்தான் அந்தப் பரிமாறல் நடந்தது. ஞான ரதம் கொணர்ந்த அன்பர்கள் என்பதால் வெட்டுக்குத்து இல்லாமல் போயிற்று எனக் கொள்ளலாம். இருட்டி வரும் நேரத்தில், கூட்டம் கலைந்தது. கே.வி. ராமசாமி சொன்னார். ”வாங்க இங்கே பக்கத்தில் தான் வீடு. அங்கே சாப்பிடலாம் என்றார். சென்றோம். அவர் வீடு பட்டினப் பாக்கத்தில் இருப்பதாகச் சொன்னார்கள்.

    பேசிக் கொண்டே நடந்து தான் சென்றோம் என்று நினைவு. நடப்பதற்குச் சலிக்காத நாட்கள். விரும்பிய நாட்கள். அப்போது கே.வி. ராமசாமி ஞானரதம் மூலம் அறிமுகமான பெயர். ரமணன் என்று அவ்வப்போது கவிதைகள் எழுதிய பெயரும் பழக்கமானது தான். பின்னர் தான் இருவரும் சகோதரர்கள் எனத் தெரிந்தது. கே.வி. ராமசாமியின் வீடு அடைந்ததும், நாங்கள் ஒரு நாலைந்து பேர் இருக்கும். நான் முதலில் உள்ளே நுழைந்ததும், என் முன் நின்றது ஓர் வயதான அம்மையார். ராமசாமி, என்னிடம் “இது அம்மா” என்றார். பின் தன் அம்மாவிடம் “இவர் தான் சாமிநாதன்” என்றும் அறிமுகப்படுத்தினார். உடனே அவர் சிரித்துக்கொண்டே “நீங்க என்ன எழுத உக்காந்தா, பச்சை மிளகாயைக் கடிச்சிண்டே தான் எழுதுவேளோ?” என்றார் இப்படியும் இருக்கலாம். அல்லது “கையிலே ஒரு மிளகாயை வச்சிண்டே தான் எழுதுவேளா?” என்றும் இருக்கலாம். எப்படியானால் என்ன? மைய பாத்திரம் வகித்தது ஒரு பச்சை மிளகாய்.  எல்லோரும் சிரித்து விட்டோம். இப்படி ஒரு வரவேற்பா? ஒரு குடும்பத்தில் இருக்கும் அறுபது வயது மூதாட்டி, கே.வி. ராமசாமியின் அம்மாவாகவே இருக்கட்டும். சுற்றி இலக்கிய உலகில் நடப்பதில் அவருக்கு ஈடுபாடு இருக்கும். தொடர்ந்து படித்து வருவார். அது பற்றிய அபிப்ராயமும் அவருக்கு இருக்கும் என்று எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்? அதிலும், என் கடுமையான அபிப்ராயம் கொண்ட எழுத்துக்களில் விருப்பமும் சாதகமான எண்ணமும் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியுமா? ஆச்சரியம் அப்படித்தான் இருந்தது என்பது அந்த ஒரு கேள்வியிலும் அதோடு வந்த  அவருடைய மெல்லிய சிரிப்பும் சினேக பாவமும் அதேசமயம் இப்படி ஒரு கேள்வி. இது கேள்வி அல்ல. நான் சண்டைக்காரன் என்ற தீர்மானத்தோடு அது அவர் விரும்பிய சண்டை, சுவாரஸ்யமான சண்டை என்ற அபிப்ராயமோ முடிவோ அதன் பின்னிருப்பது. எனக்கு இம்மாதிரியான முதல் அறிமுகம் ஆச்சரியமாக இருந்தது. வீட்டின் நான்கு சுவர்களுக்கும் அடைந்து இருக்கும் ஓர் அறுபது வயது மூதாட்டியிடமிருந்து. சுற்றியிருந்த எழுத்தாளர் சமூகத்தின் பெரும்பாலோர் விரோதிக்க, இப்படி ஓர் ஆதரவுக் குரல் வீட்டினுள்ளிருந்து. அவர் பெறுவதற்கோ இழப்பதற்கோ ஏதுமில்லை. அந்தச் சிக்கல்கள் எழுத்தாளர்களுக்குத் தான் இருந்தது.  ஒரு மிகப் புகழ் பெற்ற எழுத்தாளர் எழுதினார், “நாங்கள் மௌனமாக இருந்தோம். அந்த மௌனமே உங்களுக்கு பலம் “ என்று. வேடிக்கையாக இல்லை?

    அந்த அம்மையார்தான் பூரணி. இந்த அம்மையார் நம் மதிப்புக்குரியவரா, இல்லை எங்கள் மௌனம் தான் உங்களுக்கு பலம் என்று மௌனித்து யாரையும் விரோதித்துக் கொள்ளப் பயந்து தன் காரியத்தைச் சாதித்துக்கொள்ள விரும்பிய எழுத்தாளரா?

    இன்னொரு முக்கியமானதும், சுவாரஸ்யமானதுமான விவரம். அன்று 1972- ல் ஒரு நாள் இரவு பட்டினப் பாக்கம் வீட்டில் ஒரு வயதான மூதாட்டி, எனக்கு அந்த மாதிரியான ஒரு பாராட்டை, வியப்பை வெளிப்படுத்தியது எந்த டெஹல்கா ஸ்டிங் ஆபரேஷனில் பதிவாகியிருக்கப் போகிறது? சட்ட சபையில் நடந்த அவலங்களே எப்படியெல்லாமோ மூடி மறைக்கப் பட்டு தான் ஏதோ அரசியல் நாகரீகத்தின் உச்ச உருவாக்கம் போலப் பேசப்படுகிறது. அப்போது இருந்தவர் அனேகர் இப்போது இல்லை. இருந்தாலும் யார் நினைவிலும் இருக்கப் போவதில்லை. எனக்கே என் நினைவிலிருந்து அனேகமாக நழுவிய விஷயம் தான். அது திரும்ப எங்கோ ஆழ்மனதில் முழ்கியிருந்ததை மேலெழுப்பி நினைவூட்டியது அன்று இதையெல்லாம் எங்கோ பின்னால் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருந்த ஒரு 20 வயதுப் பையன். கே.வி. ரமணனின் தோழன். அதை நினைவுக்குக் கொண்டு வந்து என்னை ஆச்சரியப்படுத்தியது கிட்டத்தட்ட 34 வருடங்களுக்குப் பின். அந்த நிகழ்வுக்குச் சாட்சி பூதமாக இருந்தது இப்போதைய பங்களூர் வாசியும் அன்று பூரணி அம்மாளுக்கு வேண்டிய செல்லப் பிள்ளையுமாக இருந்த ஹரி கிருஷ்ணன். அந்த பூரணி அம்மாள் ஓர் ஆலவிருக்ஷம் அந்த விருக்ஷத்தின் நிழலுக்குத்தான்  தான் அவரும் அன்று இருந்த தலைமுறையும் பின்னர் வரவிருந்த தலைமுறையினரும் பாரம்பரியம் என்ற பொருளில், வாழையடி வாழை என்போமே அந்த அர்த்ததில் தொடர்ந்தனர் என்பதை நான் பின்னர் வெகு காலம் பின்னர்தான் உணர்ந்து கொண்டேன்.

    சரி இதெல்லாம் போகட்டும். அன்று இரவு சாப்பாடு முடிந்து திரும்பும் போது வெகு நேரமாகிவிட்டது. என்னுடன் பஸ் ஸ்டாண்ட் வரை வந்திருந்து “இது தி.நகர் போகும் பஸ். இடையில் மௌபரீஸ் ரோடில் இறங்கிக் கொள்ளுங்கள்” என்று ஏற்றி விட்டனர். அது தான் கடைசி பஸ். எனக்கு மௌபரீஸ் ரோடில் இறங்கும் பஸ் ஸ்டாப் எது என்று தெரியவில்லை. ”நீங்க சொல்லியிருக்கக் கூடாது? என்று கண்டக்டர் முறைக்க, கடைசியில் தி.நகர் பஸ் ஸ்டாண்ட் வரை சென்று அங்கு ஒரு சிமெண்ட் பெஞ்சில் படுத்து இரவைக் கழிப்பது என்று தீர்மானித்தேன். பஸ் ஸ்டாண்டுக்கு வெளியே இருந்த கடையில் தொங்கிக்கொண்டிருந்த ஆங்கிலப் பத்திரிகை ஒன்றை வாங்கிக்கொண்டு படிக்கத் தொடங்கி…உறங்கி காலை எழுந்து மறுபடியும் பஸ் பிடித்து மௌபரீஸ் ரோடில் இறக்கி விட கண்டக்டரிடம் சொல்லி பக்கத்து இருக்கையிலேயே உட்கார்ந்து கொண்டேன்.  வீடு போய்ச் சேர்ந்ததும், “ஏன் ராத்திரி வரலை? என்ன ஆச்சு? என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்லி அசடு வழிந்திருப்பேன் என்று இங்கு எழுதுவது அவசியமா என்ன?  முக்கிய வரலாற்றுச் சிறப்பு  வாய்ந்த தகவல் இது: 1973-ல் தி.நகர் பஸ்டாண்டில் வீடு திரும்ப முடியாத ஒருவன் அங்குள்ள சிமெண்ட் பெஞ்சில் படுத்து உறங்கி இரவைக் கழிக்க முடியும். யாரும் ”யோவ், எந்திரி, யாரு நீ, இங்கே என்ன செய்யிறே” என்று விரட்ட மாட்டார்கள்.

    கே.வி. ராமசாமியுடன் அன்றிலிருந்து பழக்கம் அவ்வப்போது தொடர்ந்தது. ஞான ரதம் நின்று விட்ட பிறகும்.  1991-ல் ஹைதராபாதில், தில்லி சங்கீத நாடக அகாடமி நடத்திய தென்னிந்திய நாடக விழாவில். நாங்கள் போய் இறங்கிய தினம் தான் பாப்ரி மசூதி சமாசாரம் நடந்தது. ஹைதராபாதில் ஊரடங்கு சட்டம். இரவில் நாடகம் நடத்த முடியாது. பகலில் நடத்திக்கொள்ளுங்கள் என்று நிர்ப்பந்தம். இரவில் ஹோட்டலில் ஒரு சந்திப்புக்கு சங்கீத நாடக அகாடமியின் விழா பொறுப்பாளரான கே.எஸ் ராஜேந்திரன் ஒரு ஸ்வாதந்திரமான, அதிகார பூர்வமற்ற கருத்துப் பரிமாறல் வைத்துக்கொள்ளலாம் என்றார். அதில் பங்கேற்றது இந்திரா பார்த்தசாரதி, ந முத்துசாமி, செ.ரவீந்திரன், எஸ் ராமானுஜத்தின் வெறியாட்டத்தில் மையப் பாத்திரம் ஏற்ற காந்தி மேரி பின் மிக முக்கியமாக கே.வி. ராமசாமி. இதன் பதிவுகள் வெளி ரங்கராஜனின் வெளி பத்திரிகையில் பிரசுரமானது.

    கே வி ராமசாமியுடனான அடுத்த என் சந்திப்பு சில வருடங்களுக்குப் பின், கே.எஸ் ராஜேந்திரன் சென்னை மாக்ஸ்ம்யூல்லர் பவன் உதவியுடன் நடத்திய உத்பல் தத் விழாவில் என்று நினைவு. அந்நாட்களில் கே.எஸ் ராஜேந்திரனுடனான என் நட்பு இறுகும், பிரியும். ஆனால் எல்லாவற்றிலும் ஒரு பங்கேற்பு இருக்கும். அதற்கு முதற் காரணம் கே.எஸ் ராஜேந்திரன் தான். நாங்கள் இருவரும் சென்னை வந்ததும் அப்போது மடிப்பாக்கத்தில் ஓர் ஏரிக்கரையை ஒட்டிய ஷீலா நகரில் கே.வி.ராமசாமியுடன் சந்திப்பு நேர்ந்தது. அங்கு பூரணி அம்மையாரைப் பார்க்கவில்லை. அவர் வேறு யாருடனோ இருந்தார். வயது ஆகிக்கொண்டிருந்தது. ராமசாமியின் ஒரு மகன், இரு பெண்கள். இளையவள் அர்ச்சனா, மிக துடிப்பும் விளையாடும் நிறைந்த பெண். மூத்தவள் சட்டம் படித்துக்கொண்டிருந்தாள் என்று நினைவு. இளையவள் அப்பாவோடு எப்போதும் வாதாடிக்கொண்டிருப்பாள். 15/16 வயது செல்லப் பெண்ணுக்கு ”அப்பாவுக்கு ஒண்ணுமே தெரியாது”  என்று வாதாடுவதில் தான் சந்தோஷம். அப்போது தான் ராமசாமி நாடகங்களில் மிக ஈடுபாடு கொண்டிருந்தது தெரிந்தது. கே.எஸ் ராஜேந்திரனோடு அந்தக் குடும்பத்துக்கு மிக நெருங்கிய பிணைப்பு இருந்தது. தன் நாடக ஈடுபாடுகளில் கே.எஸ் ராஜேந்திரன் என்னையும் இணைத்துக்கொள்வது போல ராமசாமியையும் இணைத்துக் கொள்வதில் ஆர்வமாக இருந்தார். எனக்கும் கே.வி.யோடு நெருக்கம் உருவானது.

    அடுத்தச் சந்திப்பை நான் எதிர்பார்த்து வந்தது சென்னையில் ஒரு நாடகப் பட்டறையை தேசிய நாடகப் பள்ளியின் சார்பில், மறுபடியும் கே.எஸ் ராஜேந்திரனின் பொறுப்பில் தான்,  நடந்த போது. சென்னை சென்ட்ரலில் வந்து இறங்கியதும் எங்களைச் சந்தித்தது உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தைச் சேர்ந்த துளசி. அவர் சொன்ன செய்தி கே.வி. ராமசாமி இறந்து விட்டார். என்னென்னமோ கனவுகளோடு வந்தது சட்டென எல்லாம் சரிந்தது.

    எப்போதோ சந்தித்த போதும் அன்போடும் ஆதரவோடும் பழகிய ஒரு நட்பை இழந்தாச்சு.  மடிப்பாக்கம் தான் மறுபடியும். முன்பு பார்த்த போது ஒரே விளையாட்டும் சகோதரப்பூசலும் அப்பாவைக் காலை வாருதலுமாக இரைச்சல் நிறைந்த இடம் இப்போது அமைதி அடைந்து கிடந்தது. பூரணி அம்மாள் வந்திருந்தார். எல்லோரும் ஒவ்வொரு மூலையில் எதையோ வெறித்து நோக்கிக் கிடந்தனர். அப்போது தான் முதன் முறையாக, கே.வி. ராமசாமியின் தங்கை கிருஷாங்கினியைப் பார்த்தேன். வாசலில் அவர் கணவர் நாகராஜன் உட்கார்ந்திருந்தார். ஏதோ பாங்கில் வேலை. ஆர்ட் ஸ்கூலில் பயின்றவர். ஓவியமும் அவர் ஆளுமையின் ஒரு முக்கிய அங்கமாக இருந்தது என்று தெரிந்தது, இடையில் அர்ச்சனா சென்னையில் நாடகங்களில் பங்கு பெற்று வருவது பற்றியும் நடனம் பயில்வது பற்றியும் செய்திகள் வந்தன. மூத்த பெண் வக்கீலாக ஹைகோர்ட்டில் யாருக்கோ உதவியாக இருக்கிறாள். அர்ச்சனாவை புரிசை சம்பந்தம் பங்கு பெற்ற ப்ரெஹ்ட் நாடகம் ஒன்றில் (Caucasian Chalk circle – இதற்குத் தமிழில் என்ன பெயர் என்று நினைவில் இல்லை) நடித்திருந்தாள், என்றும் தகவல் வந்தது. கே.வி. ராமஸாமியின் நாடக ஈடுபாடும், அர்ச்சனாவின் துறுதுறுப்பும் தான் கே.வி. ராமசாமி தன்னோடு அர்ச்சனாவையும் நாடகங்களில் நடிககத் துண்டியது என்று நினைக்கிறேன். அந்த ஈடுபாடு பல வருடங்களாகத் தொடர்ந்துள்ளது பல ரூபங்களில் என்று நினைக்கத் தோன்றுகிறது. மணிரத்தினத்தின் ஆயுத எழுத்தோ என்னவோ, ஒரு படத்தில் அர்ச்சனா நடித்திருந்ததில் குறுந்தகட்டில் பார்த்தபோது யாரும் தகவல் சொல்லாமல் எனக்குத் தெரிந்தது.

    அடுத்த கட்ட நகர்வு என்று அடுத்த சென்னை வருகை மறுபடியும் தேசீய நாடகப் பள்ளியின் நாடகப் பட்டறை, கே.எஸ் ராஜேந்திரனின் பொறுப்பில் நிகழ்ந்த போது. இம்முறை அது இந்திரா பார்த்த சாரதியின் ராமானுஜரா இல்லை. எஸ் ராமானுஜத்தின்  செம்பவளக் காளியா எது என்று சரியாக நினைவில் இல்லை.

    அப்போது கூட இருந்தது எஸ் கே எஸ் மணி அதாவது பாரதி மணி. நாங்கள் தங்கியிருந்தது தரமணியின் தங்குமிடம் ஒன்றில். வந்திறங்கிய ஒன்றிரண்டு நாட்களுக்குள் நானும் ராஜேந்திரனும் தங்கியிருந்த அறைக்கு வந்தது கிருஷாங்கிணி நாகராஜன் தம்பதியினர். கூட ஒரு பையில் எல்லோருக்கும் மசால் தோசை. இப்படியல்லவா இருக்கவேண்டும் தங்கியிருக்கும் இடம் வந்து உபசாரம். மிக கலகலப்பான பொழுது. மசால் தோசை காரணமாக மட்டுமல்ல.  அடுத்த பட்டறைப் பயிற்சிக்கோ என்னவோ ப்ரெஹ்டின் Mother Courage நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்துத் தரும்படி கே எஸ் ராஜேந்திரன் கேட்க. அவர் அடுத்த முறைவரும்போது மொழிபெயர்த்த சில பக்கங்களுடன் வந்திருந்தார். அடுத்து  நடந்தது நானும் மணியும் கிருஷாங்கினி வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம். எனக்குப் பணிக்கப்பட்டது, இரண்டு பேரும் சேர்ந்து மொழிபெயர்ப்பு வேலையை முடித்து வாருங்கள் அது வரைக்கும் பட்டறையில் உங்களுக்கு வேலை இல்லை,” என்பதாகும். இது எப்படி நிகழ்ந்தது என்று எனக்கு சரியாக நினைவில் இல்லை. கிருஷாங்கினி அழைத்தா, இல்லை அடிக்கடி வந்து போவதை விட இரண்டு பேரும் சேர்ந்து மொழிபெயர்த்தால் எளிதாகும் என்றா, தெரியவில்லை.
    அடுத்து நானும் மணியும் கிண்டி வந்து மின்சார ரயிலில் ஏறி சிட்ல பாக்கம் போனோம். கிருஷாங்கினி வீட்டுக்கு. பத்து நாட்களோ என்னவோ அங்கு அவர்கள் விருந்தினராக இருந்தோம். கிருஷாங்கினி, நாகராஜன் இருவரோடும் மிக நெருங்கிப் பழகும் வாய்ப்பு இப்படிக் கிடைத்தது. சிட்ல பாக்கதில் ஒரு மெயின் ரோடில் மாடி வீட்டில் இருந்தனர். இப்போது அதே இடத்தில் கீழ்த் தளத்துக்கு மாறிவிட்டதாகச் சொன்னார்கள்.

    அங்கு கிருஷாங்கினி- நாகராஜன் தம்பதிகளுடன் கழித்த நாட்கள் சந்தோஷமான நாட்கள். அங்கு போய்ச் சேர்ந்த ஒரு சில05-poorani-age-94-with-krishangini-300x196 நாட்களுக்குள் எனக்கு சுரமோ என்னவோ நினைவில் இல்லை, உடல் சரியில்லாமல் போய்விட்டது. இடையில் ஒரு நாள் ராஜேந்திரன் வந்து என்னை அழைத்த போது நாகராஜன், “அவர் உடல் சரியாகும் வரை நான் அனுப்பமாட்டேன்” என்று நிர்தாக்ஷண்யத்துடன் மறுத்துவிட்டார். அங்கு ஒரு நாய் கூட வளர்ந்து வந்தது. அதனுடன் கொஞ்சம் ஜாக்கிரதையோடேயே ஒதுங்கி வந்தேன். என்ன இருந்தாலும் அதன் கண்களுக்கு நான் அந்நியன். அப்போது நான் சாஹித்ய அகாடமியின் என்ஸைக்ளோபீடியாவுக்கும் தமிழ் ஆலோசகராக, கட்டுரைகள் பல எழுதி வந்தேன். அந்த வேலையும் அவர்களது வீட்டு டெலெஃபோன் மூலமே நடந்தது. இதற்கெல்லாம் மேலாக, நாகராஜனின் ஓவிய ஈடுபாடு பற்றியும் சங்கீதத்தில் இருந்த அபார ஈர்ப்பைப் பற்றியும் உடன் இருந்தே தெரிந்து கொள்ள முடிந்தது. சிட்லபாக்கத்தில் இருந்த டாக்டரிடம் தான் மருந்து சாப்பிட்டு வந்தேன். என் சுகக்கேடு அவர் சிகித்சைக்குள் முடிந்து விட்டது அன்றைய வரலாற்று அதிசயம் தான். திரும்ப தரமணிக்குச் சென்றேன். அங்கு பட்டறைக்கான அலுவலகம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மையத்தின் மேல் மாடியில் இருந்தது. அங்கு கிருஷாங்கினியின் மொழிபெயர்ப்பு வந்தது. அந்த மொழிபெயர்ப்பு “வீரத் தாய்” (Mother Courage) என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. ஒரு போனஸாக, அங்கு இருந்த ஆராய்ச்சியாளர் துளசியின் நட்பு கிடைத்தது.

    இந்தச் சமயத்தில்தான் அவர்களின் பெண், நீரஜா பரத நாட்டியம் பயின்று வருவது தெரிந்தது. ஒரு நாள் நான் தரமணி அலுவலகத்தில் இருந்த போது திடீரென நீரஜாவை அழைத்து வந்திருந்தார் கிருஷாங்கினி. ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது. பின்னர் மலேசியாவில் நீரஜா ஒரு நாட்டியப் பள்ளி தொடங்கி அதில் நடனம் பயிற்றுவிப்பதாகவும் சொன்னார்.

    தில்லியில் இருந்த கடைசிப் பத்துக்களில் சாஹித்ய சங்கீத அகாடமிகளுடன் நெருங்கி உறவாடும் வாய்ப்பு கிடைத்தது. எதுவும் தமிழ் நாட்டுத் தமிழர்களின் காரணமாக அல்ல. தில்லியில் இந்த அகாடமிகளில் இருந்தவர்களுடன் ஏற்பட்ட ஒருவருடன்  ஒருவர் பழகிப் பிறந்த புரிதலால்.

    ஹிந்திலும் ஆங்கிலத்திலும் அகாடமி வெளியிட்ட பத்திரிகைகளில் தமிழ் கவிதை, நாவல் சிறுகதை பற்றியெல்லாம் சிறப்பிதழ்கள் கொணர முடிந்தது. முற்றிலும் என் தேர்வில். அந்த இதழ்களில் தமிழ் நாட்டு ஓவியர்கள், சிற்பிகளையும் பிரதிநிதித்வப்படுத்த முயன்றேன். ட்ராஸ்கி மருது, ஆதிமூலம், இலங்கை                 த.சனாதனன், போன்றோருடன், எனக்குப் புதிதாக அறிமுகமான நாகராஜனையும் அதில் சேர்க்க முடிந்தது. அகாடமியில் இருந்த ஹிந்தி இலக்கியவாதிகள் யாருக்கும் ஏதும் மறுப்பு இருந்ததில்லை.

    மறுபடியும் இன்னொரு வருகை, ராஜேந்திரனது. இம்முறை நாடகப்பயிற்சி முகாம் எடுத்துக்கொண்டது மராத்திய நாடகாசிரியர் சதீஷ் ஆலேகரின் மகா நிர்வாண். அது எப்போது கே.வி. ராமசாமியால் மொழிபெயர்க்கப்பட்டது என்பது தெரியவில்லை. மொழி பெயர்த்திருக்கிறார் அது  நான் சென்னை வந்த பிறகு தான் மொழிபெயர்ப்புப் பிரதியைப் பார்த்தேன். கிருஷாங்கினி தான் கொண்டு வந்தார். நாகராஜன், கிருஷாங்கினி நான் மூவரும் தமிழினி வசந்த குமாரிடம் கொடுத்தோம். அவரும் மிக ஆர்வத்துடன் அதைப் பிரசுரித்தார்.

    இதற்குள் நான் கோயில் மணி கேட்டு விழித்தெழும், வாசல் தெளிக்கும் ஒலி கேட்டு வாசலில் காணும் கோலங்களையும் கோலமிடும் சிறு பெண்களின் தொங்கும் சடைகளையும் பளிச்சிடும் கால் கொலுசுகளையும் அந்த அதிகாலையில் தரிசனம் பெறும் ஆசை துளிர்த்தது. தமிழ் நாடு தனது என்றளிக்க வேறு என்ன இருக்கிறது?
    பக்கத்தில் இருந்த ஐயப்பன் அதற்குக் குறை வைக்கவில்லை.

    வந்த உடனேயே அல்லது அதற்குச் சற்றுப் பின்னோ, க்ரிஷாங்கினியின் சிறுகதைத் தொகுப்பு ஒன்று வந்தது. 1982 லிருந்து 1999 வரையிலான 17 வருடங்களில் எழுதிய 17 கதைகள். வருடத்திற்கு ஒன்று. அது வரை அவர் என்னிடம் தான் சிறுகதை எழுதுபவராகக் காட்டிக்கொண்டதே இல்லை. ஓவியராக, சங்கீத ரசிகராக நெருங்கிப் பழகிய பின்னரே தன்னைக் காட்டிக் கொண்ட நாகராஜனைப் போல்.  அது மட்டுமல்ல. கிருஷாங்கினியை ஒரு கவிஞராக, பெண்ணியவாதியாக அறிந்து கொண்டது இங்கு வந்து சந்திப்புகள் கொஞ்சம் கூடியதும் தான். பல இலக்கியச் சந்திப்புகளில் அவரைக் கவிஞராக மேடையிலும். ஒரு பெண்ணியக் கவிதைகளின் தொகுப்பு மாற்றுக்குரல் என்ற தலைப்பில், கிருஷாங்கினியும் இன்னொரு கவிதாயினி,  பெயர் மறந்து விட்டது) வந்தது. அது ஒரு முக்கியமான கவிதைத் தொகுப்பு. பெண்ணிய குரலின் பல வண்ணங்களையும் அதில் காணலாம். தன் கையெழுத்திலேயே அச்சிட்ட கவிதைத் தொகுப்பு ஒன்றையும் கிருஷாங்கினி வெளியிட்டிருக்கிறார்.

    நான் இங்கு குடிபெயர்ந்த ஆரம்ப வருஷங்களில் நாகராஜனை சென்னை ஒவியக கலைக் கண்காட்சிகளில் சந்தித்ததுண்டு. பின்னர் அவரே சொல்வனத்தில் மேற்குலக சரித்திரம் முழுதையும் ஒவ்வொரு மாற்றத்தையும் அதற்குக் காரணமாக இருந்த ஒவியர்கள் சிற்பிகளைப் பற்றியும் விரிவாக எழுதியுமிருக்கிறார். அவரின் சதுரம் பதிப்பகம் மூலம் இருபதாம் நூற்றாண்டின் ஒவிய நிகழ்வுகள் என்று புத்தகமும் வெளிவந்துள்ளது. இதை ஒவியர்களோ, சிற்பிகளோ எழுதுவதே சிறப்பானது. . இவையெல்லாம் தமிழுக்கு வருவதில்லை.

    இதற்கிடையில் கிருஷாங்கினி தொகுத்த பரத நாட்டியப் பாடல்கள், எனக்கு மிகவும் மகிழ்ச்சியும் சில ஆச்சர்யங்களயும் தந்த பாடல் தொகுப்பு. இன்னம் ஒரு சிறுகதைத்  தொகுப்பு நாட்டியம் பற்றிய நேர்காணல்கள் கொண்ட ஒன்று. இசைக்கலைஞர்களுடன் கொண்ட நேர்காணல்கள் கொண்ட தொகுப்பு ஒன்று இப்படி சதுரம் என்று தாம் தொடங்கிய பதிப்பகம் மூலம் வெளிவந்தன. நான் தில்லியிலிருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்த பின் இம்மாதிரியான நிகழ்வுகள் அடிக்கடி வரத் தொடங்கின.

    இதெல்லாம் வருவதற்கு முன்னால் பூரணி அம்மாளின் சுயவரலாறு, நினைவலைகள் என்ற தலைப்பில் கிடைத்தது. அதைப் பார்த்ததும் தான். அதன் பல விவரங்கள் எனக்கு மறந்து விட்டன. அவர் ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்திருக்கிறார், அக்காலத்தில் ஏழையோ வசதி உண்டோ இல்லையோ எல்லாம் பெரிய குடும்பங்கள் தான். அவையெல்லாம் செல்வங்கள் எனத் தான் சொல்வார்கள். ஆனாலும் வாழ்வது அதற்கேற்ப எளிமையாகத் தான் இருக்கும். இருப்பினும் கசப்பில்லை. சுகம் துக்கம் எல்லாம்தான் இருந்திருக்கும். ஆயினும் அவ்வளவுக்கிடையிலும் அந்த அம்மையார் வளர்ந்து மணம் செய்து குடும்பம் நடத்தி, ஒரு பெரிய குடும்பத்துக்குத் தானும் தாயாகி, எல்லாம் சரிதான். இப்படி வாழ்ந்து காட்டுவதே ஒரு பெரிய சாதனையாகச் சொல்வார்கள். சாதனைதான். சந்தேகமில்லை.  இப்போது ஒரு தலைமுறை, திட்டமிட்ட குடும்பமாக சந்தோஷமாக வாழ்வதாக, பரஸ்பர அன்போடு மரியாதையோடு வாழ்வதாகக் காண்பது கிடைக்கக் கூடும்தான்.

    இவ்வளவு வாழும் அவஸ்தைகளுக்கும் இடையில், இடைப்பட்ட சந்தோஷங்களுக்கும் இடையில் தன்னை ஒரு லக்ஷிய குடும்பஸ்த்ரீ என்பதற்கும் மேலாகத் தன் வாழ்வினை, தன் அனுபவங்களை, தன் வாழ்வின் ஆதார ஸ்ருதியின் விகாசங்களைப் பதிய வேண்டும். அதில் சாரமுண்டு, அதை தனக்குத் தோன்றும் மொழியில் வடிவில் சொல்லவேண்டும், யாரையும் பின்பற்ற வேண்டியதில்லை. யாரிடமும் வடிவு, மொழி, பற்றி ஆலோசனை தேவையில்லை, தன் மொழிக்கும், அந்தப் பதிவு பெறும், வடிவத்திற்கும் ஒரு நியாயம் உண்டு என்று தனக்குள்

    முடிவு செய்து எழுதியது செய்லாற்றியது ஒரு முதல் தர எழுத்தாளனின், சிந்தனை. இது இன்னும் பல புகழ் பெற்ற எழுத்தாளர்களுக்குக் கிடைத்திராத சிந்தனை. அந்தச் சுய சிந்தனைதான், வேறு பாதிப்புகளோ, அக்கறைகளோ, செல்வாக்கோ அற்று தன் மனதுக்குப் பட்டதைச் சொல்லும் சிந்தனை வயப்பட்ட மனதுதானே, அன்று எல்லோராலும் சுயநலத்துக்காக வசைபாடப்பட்ட எழுத்தையும் கண்டு ஆச்சரியப்பட்டு, “நீங்க என்ன ஒரு பச்சை மிள்காயைக் கடித்துக்கொண்டே தான் எழுதுவேளோ?” என்று கேட்கத் துணிந்தது?ஆமாம் காரம் தான். ஆனால் அது வேண்டிய காரம் என்றும்,  மௌனம்தான் (தனக்கு) பலம் என்றும் சுயநலம் சொல்லத் தூண்டியது.

    சுயவரலாறு, கவிதை, கதைகள், மொழிபெயர்ப்புகள் என எத்தனை. இது ஒரு பாரம்பரிய குடும்பப் பெண்ணின் ஆளுமையின் விகாசம் அல்லாமல் வேறு என்ன? அந்த ஆலவிருக்ஷத்தின் விழுதுகள் ஒவ்வொரு தலைமுறைக்கும், நாடகம், சங்கீதம், நடனம், கவிதை, சிறுகதை ஒவியம் நடிப்பு என தன் விழுதுகள் ஒவ்வொன்றும் விகாசித்து நிழல் பரப்பி இருக்கின்றன. இதை நான் அன்று நினைத்துப் பார்த்தவனில்லை. முடிந்தும் இராது.

    சென்னை வந்த பிறகு, 2004-ல் கம்ப்யூட்டர் ஒன்று வாங்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக என் மகனிடமிருந்தும் வரும் நண்பர்களைத் தொந்திரவு செய்தும் ஒரு டைப்ரைட்டர் மாதிரி உபயோகிக்கக் கற்றுக்கொண்டேன். பிறகு வந்த நண்பர்களில் ஒருவர், யாராக இருக்கும், அரவிந்தன் நீலகண்டன்? நேசகுமார்,? ராஜன் சடகோபன்? தெரியவில்லை. என்னை சிந்தனை என்ற ஓர் இணையக் குழுமத்தில் சேர்த்துவிட்டார். எனக்கே தெரியாது எப்படி இந்தக் குழுமத்தில் என் பெயர் சேர்ந்தது என்று. அப்போது அந்த குழுமத்தில் ஒருவராக எனக்கு அறிய வந்தவர் தான் ஹரி கிருஷ்ணன். அவர்தான் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தன் இழை ஒன்றில் 1973 பட்டினப்பாக்கம் கே.வி. ராமசாமி வீட்டில் எனக்கு நடந்த பச்சை மிளகாய் சாத்துபடியைச் சொல்லி எல்லோரையும் குதூகலப் படுத்தினார். அப்போது தான் எனக்கே அது நினைவுக்கு வந்தது. நினைவின் ஆழ்கடல் தோண்டி எடுத்த முத்து. முத்தோ அரிய வகை மீனோ அல்லது வேறு எதோ. ஆச்சரியத்துடன் கேட்டேன் அவரை. அப்போது தான் அவர் முழுவிவரத்தையும் தான் அங்கிருந்ததும், ஒரு சிறுவனாக வியப்புடன் பார்த்திருந்ததையும் சொன்னார். இப்படி இருவரும் மறுபடியும் அறிமுகம் செய்து கொள்வோம் என்று யார் கண்டார்?

    ஆழ்கடல் தோண்டி எடுத்தது ஏதோ. ஒரு ஆலவிருக்ஷமாக இருந்து தன்னை மீறி எழுந்து விகாசித்த பூரணி அம்மையாருக்கும் அஞ்சலி. ஒரு நூற்றாண்டு சரியாக. 17.10.1913 – 17,11. 2013.

    -நன்றி : சொல்வனம் இணைய இதழ்

    Share
  • இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் : (5) க்ரௌஞ்ச பக்ஷி

    நடராஜன் கல்பட்டு

    தூக்கணங்குருவி பற்றி எழுதிய போது அதன் துர் குணம் பற்றியும் நான் சொல்லிஇருந்தேன்.  ஆண் பறவை ஒரு கூடு கட்டி பின், ஒரு பெண் பறவை அதனுடன் ஜோடி சேர்ந்தவுடன், ஆண் மேலும் ஒன்று இரண்டு என பல கூடுகள் கட்டி பல புதிய ஜோடிகள் சேர்த்துக் கொண்டு வாழ்ந்திடும் என்று.

    அதற்கு நேர் எதிர் ஆங்கிலத்தில் Sarus crane  என்று  அழைக்கப் படும் கிரௌன்ச பக்ஷி.

    Saurus cranes-2

    கொக்கு இனத்திலேயே மிக உயரமானது கிரௌன்ச பக்ஷி.  இந்தப் பறவையை தென் இந்தியாவில் காண முடியாது.  வட இந்தியாவில் ஹரியானா, டில்லி, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் வயல் வெளிகளிலும் தரிசு நிலங்களிலும் இப் பறவைகளைக் காண முடியும்.

    வால்மீகி ராமாயணம் பிறக்கக் காரண கர்த்தா என நமது புராண இதிகாசங்களிலும் சமிஸ்கிருத கவிதைகளிலும் இடம் பெற்றுள்ள பறவை இந்த கிரௌஞ்ச பட்சி.                                                                                                                                 .

    இப்பறவையின் ஓர் அபூர்வ குணம், ஒரு முறை ஜோடி சேர்ந்த பறவைகள் ஆயுள் பூராவும் ஒன்றை விட்டு ஒன்று பிரியாது.  ஒரு பறவை இறந்து விட்டால் மற்றொன்று பிரிவாற்றாமையில் துணை பிரிந்த இடத்திலேயே சில நாட்கள் சுற்றிச் சுற்றி வந்து உணவு கூட உட்கொள்ளாமல் தன் உயிரை விட்டு விடும்.  கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உச்ச கட்ட உதாரணம் இப்பறவை.

    கிரௌஞ்ச பக்ஷி கூடு அமைத்து முட்டை இட்டு குஞ்சு பொரித்து குஞ்சுகளை வளர்ப்பது ஜூலை மாதம் முதல் டிசம்பர் வரையில் ஆன நாட்களில்.  இது தன் கூட்டினை நீர் தங்கிய நெல் வயல்களின் நடுவே அமைக்கும்.  கூடு சுமார் மூன்றடி விட்டத்தில் வைக்கோல், நாணல் இவற்றால் அமைக்கப் பட்டு இருக்கும்.  இப்பறவை இடும் இரண்டு முட்டயினை அடை காப்பது அனேகமாக பெண் பறவைதான்.  குஞ்சுகள் வெளியே வந்தவுடன் அவற்றுக்கு உணவு அளிப்பது இரு பறவைகளுமே.

    கிரௌஞ்ச பக்ஷி பறக்க ஆரம்பிப்பதோ பறப்பதோ பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும்.  போர் விமானங்கள் சுமார் முன்னூறு அடி நீளமுள்ள விமானம் தாங்கிக் கப்பல்களிலிருந்து ஆகாயத்தில் எழும்பும்போது, ஜம்போ ஜெட் விமானங்கள் சில கிலோ மீடர் தூரம் தரையில் ஓடிப் பின்னரே ஆகாயத்தில் எழும்புகிறதல்லவா ?  அதுபோலத்தான் கனமான இந்தக் கிரௌஞ்ச பக்ஷிகளும் இறககைகளை அடித்துக்கொண்டு பல அடி தூரம் தரையில் ஓடிப் பின்னரே அகாயத்தில் எழும்பும்.  அதன் பின்னரும் அதிக உயரத்தில் பறக்காது.

    பல மாநிலங்களில் மக்கள் இப்பறவைகளைக் கொல்வ தில்லை என்பதால் மனிதர்களைக் கண்டு இவை பயந்து ஓடுவதில்லை. நிலங்களில் வேலை ஆட்கள் வேலை செய்துகொண்டிருக்கும் போது அவர்களருகிலேயே பயமின்றி இவை இரை தேடிக் கொண்டு இருக்கும்.

    Saurus cranes-1 “வெவ்வேறு திசையில் நோக்கினாலும் என்றுமே நாங்கள் இருவர்தான் ஜோடி”

    இறைவன் படைத்த இயற்கையில் தான் எத்தனை  வினோதங்கள்!  எத்தனை காட்சிகள் !!

    (வண்ணப் படங்கள் இ​ணைய தளத்தில் இருந்து)

    Share
  • அணு, அகிலம், சக்தி !

     

    அணு, அகிலம், சக்தி !

    atoms-man

     

    சி. ஜெயபாரதன், கனடா

     

    பிரபஞ்சப் பெரு வெடிப்பில் சிதறி
    பொரி உருண்டை ஒன்று
    பரமாணுக்களாகி,
    துணுக்காகி அணுவாகி,
    அணுவுக்குள் அணுவாகித்
    துண்டுக் கோள்கள் திரண்டு
    அண்டமாகி,
    அண்டத்தில் கண்டமாகித்
    கண்டத்தில்
    துண்டமாகிப் பிண்டமாகி,
    பிண்டத்தில் பின்னமாகிப்
    பிளந்து, பிளந்து தொடர்ப் பிளவில்
    பேரளவுச் சக்தி யாகித்
    சீராகிச் சேர்ந்து
    சின்னஞ் சிறு அணுக்கருக்கள்
    பிணைந்து, பிணைந்து பேரொளி யாகிப்
    பிரம்மாண்டப் பிழம்பாகி,
    பரிதியாகி,
    பரிதியின் பம்பரப் பந்துகளாகி,
    பாசபந்த ஈர்ப்பில்
    அணைத்து
    அம்மானை ஆடினாள் என்
    அன்னை !

     

    நீராகி, நிலமாகி, நெருப்பாகிப்
    வாயுவாகிக்
    கல்லாகி, மண்ணாகிக் காற்றாகி
    புல்லாகி, நெல்லாகிப்
    புழுவாகி, மீனாகிப் பறவையாகி
    நில்லாமல் செல்லும்
    எல்லாமே படைத்தாய் !
    ஒன்றுக்குள் ஒன்றாகிப்
    புணர்ச்சியில்
    ஒன்றும் ஒன்றும் பலவாகி
    உருவுக்குள் கருவாகி,
    தாயின் கருவுக்குள் உருவாகி
    உயிரளித்து
    நீயாகி, நானாகி, அவனாகி,
    விலங்குகளாய்
    வடிவாகி, விரிவாகி,
    மடிய வைத்தாய் !
    கன்றுக்குள் பசுவாகிப் பாலாகி,
    ஒன்றுக்கு ஒன்று வித்தாகி,
    ஒன்றும், ஒன்றும் சேர்ந்து
    மூன்றாகி, மூன்று
    மூவாயிரம் கோடி யாகித்
    தொடர்ந்து
    வித்திட்டாய் ! வேரிட்டாய் !
    கிளை விட்டாய் !
    விழுதிட்டாய் !
    ஆலுக்கு வேரிலே
    மூளை வைத்தாய் !
    நீரேற்றும் பொறி வைத்தாய் !

     

    பெண்ணுக் குள்ளே எப்படி
    என்னை வைத்தாய் ?
    கண்ணுக் குள்ளே எப்படி
    எண்ணற்ற
    வண்ணங்கள்  இட்டாய் ?
    முட்டையைப்
    பெயர்த்து வெளிவரும் குஞ்சுக்கு
    உயிர் எப்படி  ஊட்டினாய் ?
    ஊர்ந்திடும் இலைப்புழு எப்படி
    ஒருசில நாட்களில்
    பறந்திடும்
    பட்டாம் பூச்சி ஆனது ?
    வான வில்லை எப்படி ஓவியமாய்
    வரைந்து வைத்தாய் ?
    மரத்தில்
    காயாகிக் கனியாகிக்
    முதிர்ந்து மூப்பாகி
    உதிர்ந்து விழ வைத்தாய் !

     

    பிண்டமும் சக்தியும் ஒன்று !
    அணுவுக்கு
    ஒளிவேகம் அளித்தால் சக்தி !
    சக்திக்கு
    ஒளிவேகம் குன்றின் பிண்டம் !
    முதலாகி
    முதலுக்கு மூலமாகி,
    தோற்றக் காலம் அறியா
    மூலத்தின்  வேராகி, வித்தாகி
    முடிவே இல்லா காலத்தின்
    முதியோ னாகி,
    வடிவே இல்லா உருவாகி
    உள்ளத்தைக் கடந்த
    ஒளியாகிக் கனலாகி
    அகிலாண்ட கோடி யெல்லாம்
    உப்பி விரிந்திடும்
    சோப்புக் குமிழாகி
    ஒப்பற்ற
    உன் மகத்துவத் தோற்றம்
    வியந்து எமது
    உள்ளம் விரிய வைப்பாய் !

    +++++++++++++++++++

    S. Jayabarathan (jayabarat@tnt21.com) November 11, 2013 (R-3)

    Share
  • உயிர் பெறுமா நீதியின் குரல்?

    உரத்த சிந்தனை

    இன்னம்பூரான்

    “ மக்கள் தொகுதிக்கும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிக்கும் அன்யோன்யமான தொடர்பு இருக்கவேண்டும்…அவர் தொகுதியின் தேவைகளை நிறைவேற்றவும், மக்களின் அபிலாஷைகளை மதிக்கவும், கருத்துக்களை கேட்டறியவும் பாடுபடவேண்டும். மக்களும் அவருடைய பாவனைகளை தங்கள் பக்கம் திருப்பவும், அவரை தட்டிக்கேட்கவும் முடிய வேண்டும்…”

    ~ இந்திய அரசியல் சாசன கூட்டுக்குழு அறிக்கை: முதல் பாகம் -1933-34 (இங்கிலாந்து பிரபுக்கள் மன்றமும், மக்கள் சபையும்: பக்கம் 110)

    அன்றாட அரசியல் நிகழ்வுகள் மக்கள் மன்றத்தில் அலசப்படும்போது, அவற்றின் பின்னணிகளும், அடித்தளங்களும் மறக்கப்படுவதையும், மறைக்கப்படுவதையும் கண்கூடாகக் காண்கிறோம். தற்காலம், நமது இந்திய நாடாளுமன்றமே சர்ச்சைக்கு உட்பட்டுள்ளது. வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளில் சிலரின் அணுகுமுறைகளும், செயல்பாடுகளும், ஒழுங்கீனங்களும், கவலையை தருகின்றன. மக்களாட்சியின் மேலாண்மை குலைந்து விட்டது என்ற பேச்சு, ஊடகங்களில் மிகவும் அடிபடுகிறது. ஜனநாயகம் தான் சுதந்திர இந்தியாவின் ஆணிவேர் என்பது இந்திய அரசியல் சாசனத்தின் முத்திரை. குந்தகம் விளையாமல் அதை பாதுகாப்பது நம் கடமை. அதை செவ்வனே நிறைவேற்ற, பின்னணிகளையும், அடித்தளங்களையும், தற்காலத்து விவாதங்களிடமிருந்து சற்றே தள்ளி நின்று, பரிசீலிப்பது நலம் பயக்கும்; நடுவு நிலை ஆய்வுகளை முன் கொணரும். ஜனநாயகத்தின் பல பரிமாணங்களை தனித்தும், தொகுத்தும் புரிந்து கொள்வதால், பொது மக்களில் ஒவ்வொருவரும் தனது வாக்கை அளிப்பது முதல், பிரதிநிதி/அரசு நிர்வாகம் ஆகியவற்றை கண்காணிக்கமுடியும். பொது நலம் சார்ந்தக் கருத்துக்களை அமலாக்குவதைத் துரிதப்படுத்த முடியும். அதற்கான வேத பாடம் தான் மேற்கோளில். அந்த கூட்டுக்குழு தன்னுடைய பொறுப்பை முழுமையாக உணர்ந்து, இந்தியாவிலிருந்து சான்றோர்களை வரவழைத்து, அவர்களின் கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டது. அவர்களில் ஒருவர் பாபா சாஹேப் அம்பேத்கார் அவர்கள்.

    சாக்கோ தலைமையிலான நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழு ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இறுதி அறிக்கையை நிறைவேற்றி, தோழமை கட்சியான தி.மு.க. உள்பட, முக்கிய கட்சிகளிடமிருந்து எதிர்ப்பை சம்பாதித்துக்கொண்டுள்ளது. இது புதிது அல்ல. இன்று வரை, இந்தியாவின் பாராளுமன்ற கூட்டுக்குழுக்களின் சாதனைகள் சொல்லிக்கொள்ளும் மாதிரி இல்லை. எல்லாம் இழுபறி தான். முதற்கண்ணாக, நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழுவின் விருத்தாந்தம், இந்த ஸ்பெக்ட்ரம் கூட்டுக்குழுவின் இடம், பொருள், ஏவல் பற்றி அலச உதவும்.

    மாநில சட்டசபைகளும், நாடாளும் மன்றமும் பலவிதமான, பளுவான கடமைகளை ஆற்றுவதால், அவை குழுக்கள் மூலமாக இயங்குவது உலகளாவிய நடைமுறை. தணிக்கை அறிக்கைகளை ஆராயும் பொதுக்கணக்குக்குழு, மனுக்களை ஆராயும் குழு, அரசு கம்பெனிகளை ஆராயும் குழு, ஒவ்வொரு துறையையும் கண்காணிக்கும் குழு போன்றவை எப்போதும் நிலுவையில் உள்ளவை. குறிப்பிட்ட நடவடிக்கையை ஆராய, இரு மன்றங்களும் ஒத்துப்போய் அல்லது அவைத்தலைவர்கள் தீர்மானித்து, குழுக்கள் நியமிக்கப்படுவது உண்டு. அவை தான் கூட்டுக்குழுக்கள். நமது அரசியல் சாஸனமோ, நாடாளுமன்ற மரபோ அவற்றை பற்றிய வரையறைகளை விதிக்கவில்லை. அதன் காரணம் நாடாளுமன்றத்தின் ஆளுமையை மதிக்கும் அணுகுமுறை. ஆனால், ஒவ்வொரு கூட்டுக்குழுவும் விட்ட குறை தொட்ட குறையாகவே இயங்கியுள்ளன. இந்திய அரசியல் சாஸனம் 1950ல் அமலுக்கு வந்தது. 37 வருடங்களுக்கு கூட்டுக்குழு அமைக்க வேண்டிய நிர்பந்தம் நமது குடியரசுக்கு ஏற்படவில்லை. தணிக்கை அறிக்கைகளை ஆராயும் பொதுகணக்குக்குழுவின் தலைமை, முக்கிய எதிர்க்கட்சிக்கு என்ற அருமையான மரபு ஆளும் கட்சிக்கு தர்மசங்கடமானது. போஃபோர்ஸ் பீரங்கி விவகாரம் 1987ல் தலையெடுக்க, ஆளும் கட்சி உபத்ரவம் தாங்காமல், ஒரு கூட்டுக்குழுவுக்கு அடி கோலியது. எதிர்க்கட்சி வெளிநடப்பு செய்தது. அதன் அறிக்கையை நிராகரித்தது. அடுத்த இரண்டு கூட்டுக்குழுக்களும் (1992, 2001) தாறுமாறான பங்குச்சந்தை வஞ்சகங்களை ஆராய்ந்தன. அவற்றின் அறிக்கைகளின் மேல் சொல்லிக்கொள்ளும் படி நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. குளிர்பானங்களில் கிருமிநாசினிகள் கலந்துள்ளன என்ற குற்றச்சாட்டை விசாரித்த கூட்டுக்குழுவின் அறிக்கை அந்த குற்றச்சாட்டு உண்மை என்றது. அத்துடன் சரி. நோ ஆக்க்ஷன். குளிர்பானங்கள் இன்றும் சக்கை போடு போடுகின்றன. குடிநீர் பிரச்னை தீரவும் இல்லை.

    அடுத்த கூட்டுக்குழு ஸ்பெக்ட்ரம் சிக்கலை பற்றி. அது தான் இந்த பாடு படுகிறது. 30 உறுப்பினர்களில் பாதி, அதாவது 15 உறுப்பினர்கள்,குழுத்தலைவர் மீது நம்பிக்கையில்லை என்று லோக்சபை தலைவரிடம் மனு கொடுத்து வரலாறு படைத்தனர். ஆக மொத்தம் கூட்டு இல்லை. எல்லாம் வழ, வழ, கொழ, கொழ தான்! தற்காலம் வருமுன்காப்போன் ஆகிவிட்ட அரசு நிர்வாகம், ஹெலிகாப்டர் ஊழல் பற்றி விசாரிக்க ஒரு கூட்டுக்குழுவுக்கு ஏற்பாடு செய்து விட்டது. மேற்படி நடவடிக்கைகளை சீர் தூக்கிப்பார்த்தால், எதிர்க்கட்சி தலைமையில் இயங்கும் பொதுக்கணக்குக்குழுவின் அறிக்கைகளை நீர்த்துப்போக செய்யத்தான் இந்த கூட்டுக்குழு உபாயம் பயன்படுவதாக, நமது நாடாளுமன்ற வரலாறு கூறுகிறது.

    சுருங்கச்சொல்லின், இது வரை இந்திய பாராளுமன்றத்தின் கூட்டுக்குழுக்கள் அவசியமான பின்னணியில் நியமிக்கப்படவில்லை; அவை பிரிதிநித்துவ ஜனநாயகத்துக்கு இணங்க நடவடிக்கைகளை அமைத்துக்கொண்டதாக சொல்வது கடினம். பொதுக்கணக்குக்குழுவின் அறிக்கைகளை நீர்த்துப்போக செய்வது இந்திய அரசியல் சாஸனத்தை அவமதிக்கும் செயல் என்றால்,அது மிகையாகாது.

    நன்றி: தினமலர்

    Share
  • காத்திருப்பில் கலங்காதே …

    -தனுசு-

    கொல்லிமலை காட்டுக்குள்ள
    மூங்கில் வெட்டும் சின்னப்புள்ளை
    மூணு நாளா தவிச்சிருக்கு -என்
    முகம் காண துடிச்சிருக்கு.

    பச்சரிசி சோறோடு
    கருவாட்டு குழம்பாக்கி
    தெருவோடு பார்த்திருக்கு -எனக்காக
    ஒத்தையிலே காத்திருக்கு.

    உச்சந்தலை கூந்தலிலே
    கட்டிவச்ச கருப்பு!
    நெற்றியெனும் முற்றத்திலே
    பொட்டு வச்ச வனப்பு !

    கண்ணுக்குள் குடிவந்த
    கடல்மீனின் துடிப்பு!
    கன்னக் கதுப்பினில்
    உப்பியிருக்கும் செழிப்பு!

    வெளஞ்ச சோளக்கொல்லை
    போல உந்தன் உடம்பு!
    மெலிந்த உதட்டோரம்
    மின்னுமடி சிவப்பு!

    நிமிர்ந்து நடந்தாலே -சுவைக்கும்
    மாங்கனி நினைப்பு!
    இத்தனையும் பார்த்தாலே -மனசில்
    வைக்குமடி நெருப்பு!

    மலரும் நினைவினில் -உன்முகம்
    உலர வேண்டாமடி
    புலரும் பொழுதிதில் -விலகும்
    உன் வருத்தமடி!

    கொஞ்சிப்பேச வாரேனடி
    கொஞ்சம் பொறு மயிலே!
    கூட்டிக் கொண்டு வாரேன்
    குளிர்காயும் நிலவை!

    கொக்கரொக்கோ கூவும்வரை
    நித்திரைக்கு தடை சொல்ல
    வில்லாளன் வாரேனடி
    வன வேட்டை முடித்து.

     

     

     

    Share
  • இப்படியும் சில மனிதர்கள்! – 8

    தஞ்​சை ​வெ. ​கோபாலன்

    தில்லும் திவானாவும் நெற்குன்றத்திலிருந்து புறப்பட்டு சைதாப்பேட்டையிலிருந்த தங்கள் மகள் வீட்டுக்குச் சென்றார்கள் அல்லவா? அங்கு மகள் வீட்டில் மாடி போர்ஷனில் இவர்கள் இருவரும் தனிக் குடித்தனம் செய்து கொண்டிருந்தார்கள். அந்த வீடு மகளுக்குச் சொந்தமானது. மாடி போர்ஷன் கட்டுவதற்கு தில் பணம் கொடுத்திருந்தார் போலிருக்கிறது. ஆகவே அவர்களே அங்கு குடிபோய்விட்டார்கள். மாடியில் பெற்றோர்களும், கீழ் வீட்டில் மகள் குடும்பமும் இருந்தன. மகளுக்கு மாமனார் மாமியார் ஆகியோரும் இருந்ததால் இவர்கள் தனியாக இருக்க வேண்டியதாக போயிற்று. எனினும் அனேகமாக இரண்டு குடும்பத்துக்கும் மகள் வீட்டில்தான் சாப்பாடு நடக்கும்.

    தில் திவானா இருவரும் மகனையும் மருமகளையும் பார்ப்பதற்காக நெற்குன்றம் வருவதில்லை. இந்த நிலையில் மகனுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்புக்காக ஒரு பயிற்சி வகுப்பில் சேர்ந்து ஓராண்டு காலம் படிக்க வேண்டியிருந்தது. அந்த ஒரு வருஷமும் சாமிநாதனின் மகள் நல்ல காலமாக வேலப்பன்சாவடியில் ஒரு கல்லூரியில் வேலை செய்து வந்ததால் குடும்பத்தை ஓரளவு நன்றாக நடத்த முடிந்தது. மேலும் அவளுக்கு நிறைய டியூஷன் படிக்க மாணவ மாணவியர் வந்தனர். அது ஏதோ ஒரு குருகுலம் போல சதாகாலமும் மாணவர்கள் கூட்டம் மொய்த்துக் கொண்டிருக்கும். அதனால் அவசரமாக கடைக்குப் போகவேண்டுமென்றாலோ, அல்லது யாராவது விருந்தினர் வருவது, பேருந்துக்குக் கொண்டு விடுவது போன்றவற்றுக்கு இவர்கள் உதவிகரமாக இருந்தனர்.

    பயிற்சி முடிந்து தில்லின் மகன் அமெரிக்காவுக்குச் செல்லத் தயாரானார். மனைவி வேலையில் இருந்ததால் அவளுக்குத் துணையாக சைதாப்பேட்டையிலிருந்த பெற்றோர்களை வந்து பார்த்துக் கொள்ள முடியுமா என்று கேட்டார். ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர். சைதாப்பேட்டைதான் எங்களுக்குச் சரியாக இருக்கும். நெற்குன்றத்துக்கு வருவது என்றால் வெளியூர் பயணம் போல இருக்கிறது என்று மறுத்துவிட்டனர். சரி இவர்களை எதிர்பார்த்தால் உதவ மாட்டார்கள், நான் மட்டும் முதலில் போய் அங்கு வீடு பார்த்துக் கொண்டு உன்னையும் வரவழைத்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு தில்லின் மகன் புறப்பட்டு விட்டார்.

    சாமிநாதனும் அவன் மனைவி, மகன் ஆகியோர் அடிக்கடி சென்று மகளைப் பார்த்துக் கொண்டனர். அமெரிக்காவில் நியு ஜெர்சி மாகாணத்தில் வேலையில் அமர்ந்த மகன் ஆறு மாத காலத்துக்குள் மனைவியையும் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று விட்டார். அவர்கள் அமெரிக்கா போனதும் நெற்குன்றம் வீடு காலியாக இருக்கிறது, நீங்கள் இங்கு வந்து தங்கிக் கொள்ளுங்கள் என்று கேட்டதற்கும் தில் திவானா மறுத்து விட்டனர். சில காலம் வீட்டை வாடகைக்கு விட்டு வைத்திருந்தனர். ஆனால் வீட்டை அவர்கள் சரியாக வைத்துக் கொள்ளவில்லை. ஆகையால் வீட்டை விலைபேசி விற்றுவிட்டனர். எதிர் வீட்டில் இருந்த மகாலக்ஷ்மியின் உறவினர் அந்த வீட்டை வாங்கிக் கொண்டனர்.

    அமெரிக்கா சென்ற சில காலத்துக்குள் அவர்கள் சாமிநாதனையும் அவன் மனைவியையும் நியு ஜெர்சிக்கு வரும்படி கேட்டுக் கொண்டனர். இவனும் ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு அமெரிக்காவுக்கு மனைவியையும் அழைத்துக் கொண்டு சென்றான். இரண்டு மாதம் அங்கு தங்கியிருந்த போது இவர்கள் இருவரையும் பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று காட்டினார்கள். வட அமெரிக்காவில் கனடா எல்லையில் இருந்த நயாகரா நீர்வீழ்ச்சிக்குச் சென்றது இவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. தன் மகன் அவனுடைய மாமனார் மாமியாரை மட்டும் அமெரிக்காவுக்குக் கூட்டிச் சென்று பல இடங்களுக்கும் அழைத்துப் போனது தில்லுக்கும் திவானாவுக்கும் வயிற்றில் தீயை மூட்டிவிட்டது.

    தாங்களும் அமெரிக்காவுக்கு வரவேண்டும் தங்கள் இரண்டு பேருக்கும் டிக்கெட்டுகள் வாங்கி அனுப்பச் சொல்லி கேட்டுவிட்டு, சென்னை அமெரிக்கன் கான்சலேட் அலுவலகத்துக்குப் போய் தங்களுக்கு விசாவுக்கும் ஏற்பாடு செய்து கொண்டார்கள். விசாவுக்காக அவர்கள் மகனுடைய கடிதம், வங்கி பாஸ் புத்தகத்தின் நகல் ஆகியவற்றைக் கொண்டு போய் கொடுத்து அலைந்து திரிந்து விசாவை வாங்கிவிட்டார்கள். ஒரு நல்ல நாளில் தில்லும் திவானாவும் முதன் முறையாக வான ஊர்தியில் அமெரிக்காவுக்குப் பயணமானார்கள்.

    அமெரிக்கா சென்றடைந்த இருவருக்கும் அவ்வூரின் குளிர் பொறுக்கவில்லை. மேலும் தில் தனக்கு சந்தி, ஜபம் இவையெல்லாம் செய்வதற்கு இங்கு போதிய வசதி இல்லை. இங்கெல்லாம் மடி தீட்டு ஒருவரும் பார்ப்பதில்லை. இப்படி பல குறைகளைச் சொல்லி ஒரு மாதத்தில் தான் ஊர் திரும்புவதாகச் சொல்லி இருவரும் இந்தியா திரும்பி விட்டனர். இவர்களுக்குத் தெரியும் அங்கு இவர்களுக்குச் சரிவராது என்று, என்றாலும் கூட தன் பிள்ளை மாமனாரை வரவழைத்து விருந்தினராக உபசரித்தது இவர்கள் இருவருக்கும் பொறுக்க வில்லை. வீம்புக்குச் சென்று திரும்பி விட்டனர். பாவம், மகனுக்கு அனாவசியமான செலவு. ஆனாலும் தில் சென்னைக்கு விரைவில் திரும்புவதற்கு வேறொரு காரணமும் இருந்திருக்கிறது. அது மற்றவர்களுக்கு அப்போது புரியவில்லை.

    தில் சென்னையில் ஒரு பெரிய கம்பெனியில் வேலையில் இருந்த போது தனது தூரத்து உறவுப் பெண்மணி ஒருவருக்கு அதே கம்பெனியில் வேலை வாங்கிக் கொடுத்திருந்தார். அப்படி அந்தப் பெண் தன் கூட வேலை செய்து வந்த நாளில் இருவருக்கும் நெருக்கம் அதிகரித்து ஒரு நல்ல நாளில் திருநீர்மலைக்குச் சென்று அவளுக்கும் தில்லுக்கும் பொதுவான சில உறவினர்களை அழைத்துச்சென்று மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டு விட்டனர். இது மிகவும் ரகசியமாக நடந்ததால் அவரது முதல் மனைவியான திவானாவுக்கு இந்த விவரங்கள் தெரிந்திருக்க வில்லை. பொதுவான உறவினர்களும் தங்களுக்கு எதுவும் தெரியாதது போல கடப்பரையை விழுங்கியவர்களைப் போல வாயைத் திறக்காமல் இருந்து விட்டனர். புது திருமணமான பெண்ணுக்குப் போரூரில் தனியாக இடம் பார்த்து குடிவைத்து விட்டார் தில். வாரத்தில் சில நாட்கள் அங்கும் சில நாட்கள் திவானாவுடனும் குடித்தனம் செய்யத் தொடங்கியிருந்தார்.

    இரண்டு பெண்களும், ஒரு மகனும் இருந்த நிலையில் தில் இப்படியொரு செயலைச் செய்திருந்தது பிள்ளைகளுக்கு பலகாலம் கழித்துத்தான் தெரிய வந்தது. இதன் காரணமாக தில்லோடு அவரது மகள், மகன் ஆகியோர் கடுமையாக சண்டையிட்டாலும், திவானா மட்டும் அதீதமான பதிபக்தி காரணமாக அதை அவ்வளவு தீவிரமாக எதிர்க்கவில்லை. மேலும் இதனால் திவானா தன் பதி மீது வைத்திருந்த அன்பு, இல்லை இல்லை அப்படிச் சொல்லக்கூடாது, பக்தி எல்லை கடந்திருந்தது. எனவே அவர் செய்யும் தவறுகளைக் கூட தன் மக்களிடம் ஏதாவது சப்பைக்கட்டுக் கட்டி சமாதானம் செய்துவிடுவதோடு, தானும் சமாதானமாகிவிட்டாள். இப்படி இரு பெண்டாட்டிக்காரராக தில் இருப்பது மெல்ல மெல்ல மற்ற உறவினர்களுக்கும் பரவியிருந்தாலும், அவர்கள் இரண்டு கட்சியாகப் பிரிந்து தில் சார்பில் பரிவு காட்டுபவர்களாகச் சிலரும், அதை எதிர்க்க திராணியின்றி சிலரும் இருந்தனர். ஆனாலும் சாமிநாதனின் மாப்பிள்ளையும், அவரது இரு சகோதரிகளும் இதில் மிகவும் உறுதியாக இருந்து தில்லின் இரண்டாவது திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இவர்கள் சம்மதம் இருக்கிறதோ இல்லையோ, பல ஆண்டுகள் தில் தனது இரண்டாவது மனைவியோடு அன்போடு வாழ்க்கை நடத்தி அங்கும் ஒரு மகனை ஈன்றெடுத்து அவர்களுக்குச் சொந்தமாக ஒரு வீட்டையும் வாங்கிக் கொடுத்து திறம்பட இரண்டு வீட்டையும் பாலன்ஸ்டாக நடத்தி வந்ததைப் பாராட்டியே ஆக வேண்டும்.

    இப்போது தில் ஏன் அப்படி அடித்துப் பிடித்துக் கொண்டு அமெரிக்காவிலிருந்து திரும்பினார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறதல்லவா. இந்த நிலையில் தில் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அவருக்கு சஷ்டியப்த பூர்த்தி நடைபெறுவதாக இருந்தது. முதல் மனைவியின் மகனுடன் உறவு கெட்டிருந்த நிலையில் தன் இரண்டாம் மனைவியின் மகனை விட்டு ஒரு பத்திரிகை அடித்து தனக்கு மணிவிழா கொண்டாட ஏற்பாடு செய்தார். இதனை அறிந்து அப்போது நெற்குன்றம் வீட்டிலிருந்த சாமினாதனின் மருமகன் ஒரு வழக்கறிஞரை விட்டு நோட்டீஸ் விட்டு இரண்டாம் திருமணம் செல்லுபடியாகாது. அந்த மகனுக்கு எந்த சட்டப்படியான உரிமையும் கிடையாது. அவன் தில்லின் சஷ்டியப்த பூர்த்தி விழாவைக் கொண்டாட அனுமதிக்கக்கூடாது என்று நோட்டீஸ் விட்டுவிட்டார். அவர்கள் தங்களுடைய வக்கீலை கலந்து ஆலோசித்துவிட்டு அந்த விழாவை நிறுத்தி வைத்து விட்டனர்.

    இப்போது அமெரிக்காவில் இருக்கும் தில்லின் மகனும் மருமகளும் பல ஆண்டுகளுக்கு முன்பு தில் தனது சஷ்டியப்த பூர்த்தியைக் கொண்டாட முடியாமல் போய்விட்டது; அதற்குத் தனது வக்கீல் நோட்டீஸ்தான் காரணம் என்பதால் இப்போது தங்கள் செலவில் அவருக்கும் திவானாவுக்கும் தில்லுக்கும் சதாபிஷேகம் எனும் எண்பதாவது ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடலாம் என்று முடிவு செய்தார்கள். அது குறித்து தில்லுக்கு செய்தி கொடுத்து அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்து அதற்கான ஏற்பாடுகளை சென்னையில் தானே செய்துவிடுவதாகவும், அதற்கான பணத்தைத் தனக்கு அனுப்பி விடுமாறும் தில் கேட்டுக் கொண்டார். தில்லின் மனைவி அதற்குள் விழாவுக்கான பட்ஜெட்டையும் போட்டுவிட்டாள். உறவினர்கள் எல்லோருக்கும் துணிமணிகள், மண்டபம், சாப்பாடு போன்ற செலவுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை முன்னதாக அனுப்பும்படி மகனுக்கு திவானா கேட்டாள். மகன் அவர்கள் சொல்லும் திட்டத்தைப் பார்த்து பயந்து போனார்.

    மாப்பிள்ளை தன் மாமனாரான என் நண்பன் சாமிநாதனிடம் கேட்டார் என்ன செய்யலாம் என்று. சாமிநாதன் சொன்னார் அவர்கள் பட்ஜெட்டில் கால்பகுதிக்குள் இந்த விழாவை மிகவும் சிறப்பாகச் செய்ய முடியும் என்றும், அதை சென்னையில் இல்லாமல் ​வேறொரு சிறப்பு வாய்ந்த நகருக்கு வெளியேயுள்ள ஆலயத்தில் தனது நண்பர்கள் மூலம் செய்து விட முடியும் என்று சொல்லவே, தில்லின் மகன் அப்படியே ஏற்பாடுகளைச் செய்யலானார். தில்லுக்கு போன் செய்து நான் எல்லா ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்து விடுகிறேன். நான் சொல்லுமிடத்துக்கு நீங்கள் வந்து விழாவை ஏற்றுக் கொண்டு போனால் போதும் என்று சொல்லிவிட்டார். இதனால் தில்லுக்கும் திவானாவுக்கும் அதிர்ச்சி, மகன் மீது அளவிடமுடியாத கோபம். இதற்கெல்லாம் சாமிநாதனின் மகள்தான் காரணம் என்று அவள் மீது அவர்களுக்கு தீராத ஆத்திரம் ஏற்பட்டது.

    தாங்கள் கேட்டபடி தில்லின் மகன் பணம் கொடுக்காததல் திவானா அடிக்கடி தன் மருமகளுக்குப் போன் செய்து இதுபோன்ற விசேஷங்கள் என்றால் எல்லா உறவுக்காரர்களும் வருவார்கள், அத்தனை பேருக்கும் ஆண்களுக்கு வேஷ்டி துண்டும், பெண்களுக்குப் புடவையும் வாங்கித் தருவதோடு தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் புதிய உடைகள் வாங்க வேண்டும். அதற்காக தேவையான அளவு பணம் கொடுத்தால்தான் சதாபிஷேகம் சிறப்பாக அமையும் என்று மீண்டும் மீண்டும் வற்புறுத்தினாள். மருமகள் தன் மாமியாரிடம் இதையெல்லாம் உங்கள் மகனிடம் பேசிக்கொள்ளுங்கள் அவர்தான் இவற்றைக் கவனித்துக் கொள்ளவும் பணம் செலவு செய்யவும் செய்கிறார், தனக்கு இதில் ஒரு பங்கும் இல்லை. அவர் சொல்வதைச் செய்வதுதான் தன் கடமை என்று அவர்களுக்கும் தனது பதிபக்தியைத் தெளிவாக எடுத்துக் கூறினாள். இது என்ன, இவள் தன்னைக் காட்டிலும் பதிபக்தியோடு இருக்கிறாளே, நிஜமாகவேதானா அல்லது தனக்கு ஏட்டிக்குப் போட்டியாக இப்படிப் பேசுகிறாளா என்று திவானாவுக்குக் குழப்பம்.

    இறுதியாக தில்லும் திவானாவும் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்த போதும் அவர்கள் விரும்பியபடி எதுவும் நடக்கவில்லை. நண்பன் சாமிநாதன் என்னுடைய உதவியை நாடினான். எனக்குப் பழக்கமான என்னுடைய ஊரையடுத்த மிகப் பிரபலமான ஓர் சிவத் தலத்தில் அவ்வூர் ஆலய விழா மண்டபத்தில் ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தேன். அங்கு எனக்கு நிறைய நண்பர்கள் இருந்ததால் எல்லா ஏற்பாடுகளும் சிறப்பாக நடந்தது. அவ்வூர் ஆலயத்தில் சதாபிஷேகம் செய்துகொள்ள ஏற்ற இடம் என்று அவ்வூர் தலபுராணம் கூறுவதையும் எடுத்துச் சொல்லி, அது குறித்த ஒரு சிறு புத்தகத்தையும் வெளியிட ஏற்பாடுகள் நடந்தன. இவை பற்றிய எந்த செய்தியையும் தில் போன் மூலமாகக் கூட சாமிநாதனிடம் கேட்கவில்லை; சாமிநாதனும் என்ன ஏற்பாடுகள் செய்கிறோம் என்று அவரோடு பேசவில்லை. பேச்சு வார்த்தை முழுவதும் சாமிநாதனுக்கும் மருமகனுக்கும் இடையேதான் நடந்தது. நீங்கள் யார் ஆலோசனைகளையும் கேட்க வேண்டாம். நீங்கள் விழாவைச் சிறப்பாக நடத்தக் கூடியவர், உங்கள் நண்பரும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார் என்று எனக்குத் தெரியும். ஆகவே இந்த விழாவை நான் சிறப்பாக நடத்தி முடித்து விட்டால் என் கடமை முடிந்து விடும். அவர்கள் அதற்கு மேல் என்னிடம் எதையும் எதிர் பார்க்கமுடியாது. ஏனென்றால், பல லட்சம் பெறுமான அவர்களது மாம்பலம் வீட்டை விற்ற போது என்னிடம் ஒரு வார்த்தைகூட கேட்கவில்லை. விற்ற பணத்தில் ஒரு பைசா கூட என் கண்களில் காட்டவில்லை. அவர் மனமுவந்து கொண்டு வந்து கொடுத்த சிறு தொகைக்கான முதலீட்டுப் பத்திரத்தைத் தூக்கி எறிந்து விட்டேன், என் கடமை முடிந்தது என்றார் அவர்.

    சாமிநாதனின் மனச்சாந்திக்காகவும், அவன் மருமகனின் நோக்கம் நிறைவேற வேண்டியும் நான் இந்த விழா குறித்து சிறப்பு கவனம் செலுத்தி மிக அற்புதமாக ஏற்பாடுகளைச் செய்தேன். இதில் ஏதாவது குறை காண வேண்டுமென்று விடாப்பிடியாக தில்லும், திவானாவும், அவரது நெருங்கிய உறவினர்கள் சிலரும் காத்துக் கொண்டிருந்தனர். நகரத்தை விட்டு வெகு தூரத்தில் ஒரு கிராமக் கோயிலில் நடந்தால் அங்கு யார் வருவார்கள்? என்றார்கள். அப்படி வந்தாலும் அவர்கள் தங்குவதற்கு அங்கு வசதியான இடம் இருக்கிறதா. குளிக்கவும் மற்ற தேவைகளுக்கும் அங்கு வசதிகள் எப்படி? என்றெல்லாம் கேள்விக் கணைகள் பிறந்தன. எல்லாம் இருக்கும் வசதிக்குள் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். அங்கு ஒருநாள் தங்க இத்தனை கேள்விகளா, என்னவோ வாழ்நாள் முழுவதும் அங்கேயே இருக்கப்போகிறோம் என்கிற மாதிரி என்று அவர்களுக்குப் பதில் சொல்லியாயிற்று.

    இருந்தாலும் அவர்களுக்கு எந்த விவரங்களையும் தெரியாமலே அவர்கள் எல்லாம் தங்குவதற்கு ஒரு திருமண மண்டபம், அங்கேயே இரண்டு நாட்கள் டிபன், காபி, சாப்பாடு எல்லாவற்றுக்கும் சமையல்காரர்களை நியமித்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திருமண மண்டபத்தில் நிறைய பேர் தங்க முடியுமா. எங்கள் கம்பெனியிலிருந்து பெரிய உத்தியோகஸ்தர்கள் எல்லாரும் காரில் வருவார்கள். அவர்களுக்கு எப்படி ஏற்பாடு என்றெல்லாம் கேள்வி பிறந்தது. அவர்கள் விழாவன்று காலையில் வந்துவிட்டு பகல் உணவுக்குப் பிறகு போய்விடுவார்கள். இங்கேயேவா தங்கப் போகிறார்கள். அப்படி அவர்கள் ஓரிரு நாட்கள் தங்குவதாயிருந்தால் அதற்கும் நாங்கள் ஏற்பாடு செய்து விடுவோம் என்று சாமிநாதன் கூறிவிட்டான்.

    விழாவுக்கு முதல் வாரம் சாமிநாதனின் மகள் அமெரிக்காவிலிருந்து வந்து சேர்ந்தாள். நேராக அவள் சாமிநாதன் வீட்டுக்கு வந்து விட்டாள். பின்னர் அங்கிருந்து சைதாப்பேட்டை போய் மாமனார் மாமியாரைப் பார்த்துவிட்டு திரும்ப வந்து விட்டாள். அவளிடம் செய்யப்பட்டிருக்கிற ஏற்பாடுகள் குறித்து சொல்லப்பட்டது. அவளுக்கும் அவள் கணவருக்குத் தெரிவித்த போது அவருக்கும் இதில் முழு திருப்தி ஏற்பட்டது. திங்கட்கிழமை சதாபிஷேகம். முதல்நாள் ஞாயிறன்று ருத்ர ஏகாதசி எனும் ஜபம் முதலானவை. இருந்தது. இவர்கள் வெள்ளிக்கிழமையே அவ்வூருக்கு வந்து விட்டார்கள். அவர்களை திருமண மண்டபத்தில் தங்க வைத்தோம். அங்கு சாப்பாடு முதலான ஏற்பாடுகள் மிக அருமையாக இருந்தது. குறை ஒன்றும் சொல்ல முடியவில்லை. ஆனால் திவானாவின் வழக்கம் போல சமையல் காரர்களிடம் சென்று தனக்கும் தில்லுக்கும் வெங்காயம், புடலங்காய் சேர்க்கக்கூடாது சாப்பட்டில் அவைகளை நீக்கிவிடுங்கள் என்று சொன்னாள். நான் சென்று, நீங்கள் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ள வேண்டாம். அவர்களுக்கு வேண்டுமானால் அவைகளை பரிமாற வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.

    ஞாயிறன்று ருத்ர ஏகாதசி தொடங்கியது. தான் காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருப்பதால் தன்னால் மணையில் கீழே அமர முடியாது, நாற்காலியில்தான் உட்காருவேன், கொண்டுவா நாற்காலிகளை என்றார் தில். உடனே எங்கள் நண்பர்கள் ஓடிப்போய் சில நாற்காலிகளை வாடகைக்கு வாங்கி வந்து கோயில் மண்டபத்தில் போட்டார்கள். மண்டபம் மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு தூணிலும் குழல் விழக்குகள் எரிந்தன. கோயில் பதாகைகள் வாயிலிலும் மண்டபத்தின் நுழைவுப் பாதையிலும் கட்டப்பட்டிருந்தன. இதையெல்லாம் பார்க்கப் பார்க்க இது ஏது குறையொன்றும் சொல்லமுடியாது போல இருக்கிறதே என்று தில்லும் திவானாவும் கவலைப் பட்டனர்.

    மறுநாள் நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடந்தேறின. கஜ பூஜை, கோ பூஜை என்று யானைக்கும், பசுவுக்கும் பூஜைகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன. ஆலய மரியாதைகள் இவர்களுக்குக் கொடுக்கப்பட்டன. கோயில் நாதஸ்வர வித்வான்கள் வந்திருந்து நாதஸ்வர இசை எழுப்பினார்கள். புகைப்படங்களும், வீடியோ படங்களும் எடுக்கப்பட்டன. இவர்கள் உறவினர்கள் ஐம்பது பேர் இருக்குமென்றால், எங்கள் நண்பர்கள் வகையில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் இருந்தனர். எங்கள் நண்பர்கள் வீட்டில் குளிர்சாதன வசதி இருந்த விடங்களில் உறவினர்கள் சிலர் படுக்க வைக்கப்பட்டனர். கல்யாண மண்டபத்துக்கு அருகில் ஒரு சங்கத்தின் கட்டடம், அதையும் திறக்கச்சொல்லி அங்கும் சிலர் தங்க வைக்கப்பட்டனர். அப்படி அங்கெல்லாம் தங்கியவர்கள் என்னிடமும் சாமிநாதனிடமும் ஏகமாகப் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தனர். இதையெல்லாம் பார்த்து தில் திவானா வாயடைத்துப் போய்விட்டனர்.

    அந்த மாவட்டத்திலேயே சிறந்த வேத பண்டிதர்கள் வந்து விழாவை நடத்தி வைத்தனர். மிகச் சிறந்த சமையல்காரர்கள் முதல் நாள் தொடங்கி விழாவின் மதியம் வரை சுவையான சாப்பாட்டை பரிமாறி அசர வைத்துவிட்டனர். இப்படி அவர்கள் எதிர்பார்ப்பையும் மீறி, இப்படியும் நடத்த முடியுமா என்று அதிசயிக்கத் தக்க வகையில் சதாபிஷேகத்தை சாமிநாதன் முடித்து வைத்தார். எல்லோரும் ஊருக்குத் திரும்பி விட்டனர். தில் திவானா இருவரும் மட்டும் விழாவில் தங்களுக்கு பரிசாக வந்த வேஷ்டிகள், புடவைகள் இவற்றைப் பிரித்து பெட்டிக்குள் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் கொண்டு வந்த பெட்டிகளில் இடம் போதாததால் சாமிநாதனிடம் கேட்டுப் பெட்டி, பை முதலானவற்றை வாங்கி அதிலும் நிரப்பிக் கொண்டனர். அவர்கள் தனி அறையில் இதையெல்லாம் பெட்டிக்குள் அடைத்துக் கொண்டிருக்கும் போது சாமிநாதன் எதேச்சையாக அந்த அறைக்குள் சென்று விட்டான்.

    அப்போதுதான் தில் மனம் குளிர்ந்து, சம்பந்தி, விழாவை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தி விட்டீர்கள். இவ்வளவு அருமையாக நகரத்தில் எங்களால் ஏற்பாடு செய்ய முடியாது. என் மைத்துனன் மகன் கூட சொன்னான், கஜ பூஜைக்கும், கோ பூஜைக்கும் சென்னையில் எங்கே போவது, இங்கு இதையெல்லாம் கண்குளிர பார்க்கும் வாய்ப்பும், கோயிலில் தரிசிக்கும் வாய்ப்பும் ஒருசேர கிடைத்ததற்கு பாக்கியம் செய்திருக்கிறோம் என்றான். உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை என்று சொல்லிவிட்டு, திவானாவை நோக்கி, ஏய்! அந்த வேஷ்டி துண்டை எடு என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே சாமிநாதன் காதில் வாங்காதது போல வெளியே வந்து விட்டான். அங்கு திவானா என்ன ஜாடை காண்பித்தாளோ தெரியவில்லை தில்லும் அதன் பிறகு வேஷ்டி துண்டு சாமிநாதனுக்குக் கொடுப்பது பற்றி வாயையே திறக்கவில்லை. இவனுக்கும் கவலையில்லை. அவர்கள் கொடுக்கக்கூடாதே என்றுதான் வேண்டிக் கொண்டிருந்தான்.

    எல்லாம் முடிந்து அவரவர் வீடுகளுக்குச் சென்று விட்டனர். தில் தன் மகனிடம் கேட்டார். நீ எங்களை கவனிப்பதில்லை. மாதாமாதம் எங்களுக்குப் பணம் அனுப்ப வேண்டும் என்றார். திவானா மகனிடமும் மருமகளிடமும், தங்களுக்கு வயது ஆகிவிட்டதால் இனி எங்களால் தனியாக இருக்க முடியாது. ஆகையால் நீ மட்டும் அமெரிக்காவுக்குப் போ, உன் மனைவியை இங்கு விட்டுவிட்டுப் போ. எங்களைப் பார்த்துக் கொள்ள வேறு யார் இருக்கிறார்கள். இவள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூசாமல் கேட்டார்கள்.

    மகனுக்கு அதுவரை அடக்கி வைத்திருந்த கோபம் வெடித்து வெளிவந்தது. ஆதிமுதல் அவர்கள் நடத்தைகளையெல்லாம் சுட்டிக் காட்டிப் பேசினார். மாம்பலம் வீட்டை பல லட்சம் ரூபாய்க்கு விற்ற பணம் என்ன ஆகியது. அது விற்பது குறித்து எனக்கு ஏதாவது தகவலாவது கொடுத்தீர்களா. உங்கள் பணமெல்லாம் என்ன ஆயிற்று. அதற்கெல்லாம் கணக்கு எங்கே. உங்கள் பணமெல்லாம், வீடு விற்ற பணமெல்லாம் செலவாகி யிருந்தால் எந்த வகையில் செலவு ஆனது எல்லாவற்றையும் எழுதிக் கொடுங்கள். உங்களுக்குத் தேவையென்றால் நான் மாதாமாதம் அனுப்புகிறேன். என் மனைவியை இங்கே உங்களுக்கு சேவை செய்ய விட்டுவிட்டுப் போ என்கிறீர்களே, அங்கு வெளிநாட்டில் நான் சாப்பாடுக்கு என்ன செய்வேன். இங்கு உங்களுக்கு அண்ணன் பிள்ளை, அண்ணன் பெண், அத்தான், அம்மாஞ்சி என்று ஊர் முழுவதும் உறவுக் காரர்கள். அங்கு எனக்கு தலைவலி என்றால்கூட கவனிக்க யார் இருக்கிறார்கள். இதுவரை அவளா உங்களைப் பார்த்துக் கொண்டாள். இனி அந்தப் பேச்சையே எடுக்காதீர்கள். அவளுக்கும்தான் உடல்நலம் இல்லை. அவள் தன்னைப் பார்த்துக் கொள்வாளா உங்களுக்கு சேவை செய்வாளா என்றார்.

    நீ செய்வது பாவமில்லையா என்றார் தில். ஆம் பாவம் தான். ஆனால் அந்த பாவம் தீருவதற்காக நான் பல தர்ம காரியங்களைச் செய்து கொண்டு வருகிறேன். நீங்கள் நான் செய்ய வேண்டிய உதவிகளுக்கு அருகதை உள்ளவர்களாக இருந்திருந்தால் உங்களுக்குச் செய்திருக்கலாம். நீங்கள் அந்த அருகதையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. உங்களுக்கு நான் உதவி செய்வது என்பது தேவையில்லாதது. அது பாவம் என்றால் அந்தப் பாவம் தீர நான் பல தான தர்மங்களைச் செய்து கொண்டுதான் இருக்கிறேன். அதுவே போதும் என்றார். தில்லுக்கும் திவானாவுக்கும் பேசுவதற்கு வாய் இல்லை. அதுவரை அவர் பக்கம் நின்று மகன் மருமகளை கரித்துக் கொட்டியவர்கள் மெதுவாக ஒதுங்கிக் கொண்டனர். ஒருவருக்கும் பேச வாய் இல்லை. ஒரு வழியாகத் தங்கள் கடமைகளைச் செவ்வனே செய்து விட்டு ஊருக்குப் புறப்பட மகனும் மருமகளும் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.

    அவர்கள் புறப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்பிருந்து தில் வீட்டில் காணப்படவில்லை. திவானாவிடம் கேட்டதற்கு அவர் அங்கே போயிருப்பார் என்றாள். எங்கே என்று சொல்லவில்லை. மகனும் புரிந்து கொண்டு கேட்கவில்லை. இருவரும் விமான நிலையத்துக்குக் கிளம்பும் வரையில் தில் வீடு திரும்பவில்லை. ஒரு வழியாக இங்கு விழாவுக்காகச் செலவழித்த ஒரு வார காலத்தை ஈடுகட்டும் வகையில் போரூரில் தன் துணைவி வீட்டில் கழித்துவிட்டு வீடு திரும்பியதாக அமெரிக்கா திரும்பிய மகனுக்குத் தகவல் கிடைத்தது. அப்பாடா! இனி தில்லின் தொல்லையும் , திவானாவின் தொந்தரவும் இருக்காது என்று அமைதி அடைந்தனர்.

    முற்றும்

    Share
  • இப்படியும் சில மனிதர்கள்! – 7

    தஞ்​சை ​வெ. ​கோபாலன்

    தில், திவானா ஆகியோரின் நடவடிக்கைகள் பிடிக்காததாலும், தில் தன் மகனை ‘கெட் அவுட்’ என்று வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லிவிட்டதாலும், அவர்கள் மகனும் மருமகளும் நெற்குன்றத்திலிருந்த அவர்கள் சொந்த மனையில் வீடு கட்டிக்கொண்டு குடிபோன விவரத்தைச் சென்ற பகுதியில் பார்த்தோம். அங்கிருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக அவருடைய அலுவலகம் செல்ல வசதியாகவும் இருந்தது. சாமிநாதனின் மனைவி எம்.எஸ்.சி. எம்.எட். படித்திருந்தாள். அப்போது வேலப்பன்சாவடியில் இருந்த ஒரு கல்லூரியில் அவளுக்கு வேலை கிடைத்தது. கணவன் அலுவலகம் சென்றதும், இவளுக்குக் கல்லூரி சென்று வர பஸ்சில் போக முடிந்தது. நெற்குன்றத்திலிருந்து அவள் கல்லூரி மிக அருகில் இருந்ததால் அவளுக்கு ஒரு மொப்பெட் வாங்கிக் கொடுத்திருந்தார் கணவர். இப்படி அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் மாம்பலத்திலிருந்து தில்லும் திவானாவும் ஒருநாள் பெட்டி படுக்கையோடு நெற்குன்றம் வந்து சேர்ந்தனர். மாம்பலத்தில் தண்ணீர் கஷ்டம் அதிகமாக இருக்கிறது. அங்கு இருக்க முடியவில்லை. அதனால் இனி இங்கேயே தங்கிவிடுவதாக நினைத்து வந்திருக்கிறோம் என்றனர். என்ன செய்வது? மகனும் மருமகளும் சரியென்று தலை அசைத்து வைத்தனர்.

    சாமிநாதன் மகளுக்கு டியூஷன் நடத்த அதிக அளவில் மாணவர்கள் வந்து சேர்ந்தனர். அவர்கள் வீடு தனி வீடு என்பதாலும் வீட்டுக்கு வாயிலில் மரங்களும் பரந்த புல் வெளியும் அமைந்திருந்ததனால் மாணவர்கள் அங்கு அமர்ந்து படித்து வந்தனர். அவர்களை அடிக்கடி தில் ஏதாவது சொல்லி வம்பு இழுப்பார். நாளடைவில் தில்லும் திவானாவும் அந்த மாணவர்களின் கேலிப் பொருளாக மாறினர். இவர்களை அந்த மாணவர்கள் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. அதிலும் இவர்கள் தங்கள் ஆசிரியையைத் துன்புறுத்துவது அவர்களுக்கு அறவே பிடிக்கவில்லை.

    அதிகாலையில் எழுந்ததும் மருமகள்தான் எழுந்து காப்பி போட்டுக் கொண்டு வந்து தில்லுக்கும் திவானாவுக்கும் கொடுக்க வேண்டும். இருவரும் சூரிய உதத்துக்குப் பிறகுதான் எழுந்திருப்பார்கள். பிறகு அவசர அவசரமாக கணவனுக்கு பிரேக்பாஸ்ட் தயார் செய்து கொடுத்து அவரை அலுவலகம் அனுப்பிய பிறகு குளித்துவிட்டு சமையலை முடிக்க வேண்டும். இவ்வளவும் செய்து முடிக்கும் போது மணி ஒன்பதைத் தாண்டிவிடும். அவளுக்குக் கல்லூரிக்கு நேரம் ஆகிவிடும். தான் ஏதாவது சாப்பிட்டுவிட்டுச் செல்லலாம் என்றால் தில், திவானா குளிக்காமலும், எங்களுக்கு இப்போ சாப்பாடு இறங்காது, பதினோரு மணியாயிடும் என்பாள் நீட்டி முழக்கிக் கொண்டு திவானா. அவர்கள் சாப்பிடாமல் தான் மட்டும் சாப்பிட்டுவிட்டுக் கல்லூரி செல்லலாம் என்றால், அப்படி ஒருநாள் செய்தபோது, இது என்ன இது? பெரியவா ஆத்துல இருக்கறச்சே நீ முதல்ல சாப்பிடறது எந்த சாஸ்த்திரத்திலே சரின்னு சொல்லறது என்று வக்கணையாகப் பேசினாள் திவானா. சரி நீங்கள் குளித்துவிட்டு வந்து சாப்பிட உட்காருங்கோ, உங்களுக்குப் போட்டுவிட்டு நானும் சாப்பிட்டுவிட்டு காலேஜுக்குப் போறேன் என்பாள் மருமகள். அதெல்லாம் எங்களுக்குச் சரிப்படாது. நாங்க முதல்ல ஸ்நானம் பண்ணி, ஜபம் பண்ணனும், அதுக்குப் பிறகுதான் சாப்பாடு என்பாள். அப்போ நான் என்ன செய்யட்டும், பட்டினியா போகட்டுமா என்பாள் மருமகள். அது உன் இஷ்டம். கஷ்டமா இருந்தா வேலையை விட்டுடு என்றாள் மாமியார் சுலபமாக.

    இது சரிவராது என்று மருமகள் பட்டினியோடு காலேஜ் செல்லலானாள். அங்கு கேண்டீனில் ஏதாவது சாப்பிட்டுக் கொள்வாள். இதையெல்லாம் எதிர்வீட்டில் இருந்த மகாலக்ஷ்மி என்னும் சக ஆசிரியர் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் வலிய வந்து சாமிநாதன் பெண்ணிடம் நட்பு பூண்டு பழகத் தொடங்கினாள். அந்த மகாலக்ஷ்மி துணிச்சலான பெண். தில்லும் திவானாவும் செய்யும் அட்டூழியங்களை அப்போதைக்கப்போது போட்டு உடைத்து அவர்களை வாங்கு வாங்கென்று வாங்கிவிடுவாள். படிச்சிருந்தா தெரியும் பண்பாடெல்லாம், உங்களுக்கு என்ன தெரியும். அழுக்குத் துணிமணிகளை வீட்டுக்குள்ளேயே மடி உலர்த்தரேன்னு நிழலில் ஒணர்த்தி அதன் பிசுக்கு நாத்தத்தோடு கட்டிக்கொண்டு பளிச்சென்று சுத்தமாக வரும் எங்களைப் பார்த்து மடி, தீட்டுன்னு சொல்லி கழுத்தறுப்பேள். நீங்க சாப்பிட்ட பிறகுதான் வேலைக்குப் போகும் மருமகள் சாப்பிடணும்னா எல்லா மருமகளும் பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான் என்று சாடிவிட்டு, வாம்மா நீ எங்க வீட்டிலே சாப்பிட்டுட்டு காலேஜ் போகலாம். இவா என்னிக்குக் குளிக்கறது, என்னிக்கு ஜபம் பண்ணி முடிக்கிறது, நீ எப்போ காலேஜ் போறது என்று மருமகளைத் தன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் சாப்பிட்டுவிட்டு இருவரும் காலேஜ் போய்விடுவார்கள். இது தொடர்வது தில், திவானாவுக்குப் பிடிக்கவில்லை.

    அடிக்கடி அந்த மகாலக்ஷ்மியோடு சண்டைக்குப் போய்விடுவார்கள். இது எங்காத்து விஷயம். இதில் தலையிட நீ யார்? என்று திவானா விரட்டுவாள். விஷயம் உங்க மட்டும் இருந்தா அது வீட்டு விஷயம், அடுத்தவளை பட்டினி போட்டா அது பொது விஷயம் யார் வேணுமானாலும் வந்து கேள்வி கேட்பாங்க. கொடுமை படுத்தறீங்கன்னு ஒரு புகார் போதும், உங்களைப் புடிச்சுண்டு போய் வறுத்து எடுத்துடுவாங்க. தெரிஞ்சுக்கோங்க. சும்மா பழம் பெருச்சாளிகள் மாதிரி படிச்ச பொண்ணை கொடுமை படுத்தறதை விட்டுட்டு ஒழுங்கா இருக்கப் பாருங்க என்று சாடிவிடுவாள். நீ இனிமே எங்காத்துப் பக்கம் வரக்கூடாது என்பார் திவானா. அதெல்லாம் ஒங்க மாம்பலத்திலே, இது நெற்குன்றம், இந்த வீடு இவளுக்கும், இவ கணவனுக்கும் சொந்தம். என்னை வெளியே போகச்சொல்லற அதிகாரம் உங்களுக்கு இல்லை. வேணும்னா உங்க மகனை விட்டுச் சொல்லச் சொல்லுங்கோ. நான் போறேன் என்பாள். ஆக, இங்கே தில், திவானாவின் அதிகாரம் செல்லுபடியாகவில்லை.

    நாளடைவில் மருமகள் கை ஓங்க, தில் திவானா கரங்கள் ஒடுங்கத் தொடங்கியது. மருமகள் தன்னுடைய தோழி இருக்கும் தைரியத்தில் காலையில் தன் வேலைகளை முடித்துக் கொண்டு சமையல் செய்து தில்லுக்கு வைத்துவிட்டு காலேஜுக்குக் கிளம்பிவிடுவாள். போகும்போது சொல்லிக் கொண்டுகூட போவதில்லை. இதெல்லாம் தில் திவானாவுக்கு ஆத்திரத்தை உண்டு பண்ணியது. மருமகளைக் கெடுப்பது அந்த மகாலக்ஷ்மிதான் அவளை நம் வீட்டு வாசலை மிதிக்கவிடக்கூடாது என்று கருவினாள் திவானா.

    மருமகள் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பாள். மாலை வேளைகளில், விடுமுறை நாட்களில் இரு வேளைகளிலும் டியூஷன் படிக்க வரும் மாணவர்களோடு பொழுது போய்விடும். அவர்கள் வீட்டின் நிலைமையை நன்கு உணர்ந்த இளைஞர்கள். அதில் சில மாணவிகள் ஆசிரியருக்குக் கூடமாட வேலை செய்வார்கள். இது திவானாவின் கண்களை உறுத்தும். அவாளையெல்லாம் ஏன் சமையலறைக்குள் விடுகிறாய். நாங்கள் சாப்பிடவேண்டாமா என்பாள். அவற்றையெல்லாம் மருமகள் பொருட்படுத்தாமல் இருந்து விடுவாள்.

    இந்த நிலையில் ஒரு நாள். தில்லும் திவானாவும் ரகசியமாகப் பேசிக் கொண்டனர். அதைத் தொடர்ந்து சில நாட்கள் அவர்கள் தங்கள் அறையில் கதவைச் சாத்திக் கொண்டு பேசினர். ஒரு சில நேரம் அவர்கள் பேச்சை ஒட்டுக் கேட்க நேர்ந்த போது மாம்பலம் வீட்டை தில் விலை பேசிக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்தது. தன் மகனிடமோ மருமகளிடமோ மூச்சு விடவில்லை கிழம். ஒழிந்து போகட்டும், அவர்கள் என்ன வேணுமானாலும் செய்து கொள்ளட்டும் என்று மகனும் விட்டுவிட்டார். தன் மனைவியையும் அவர்களிடம் இதுபற்றி நீயும் பேசவேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

    டியூஷன் மாணவர்கள் இந்த விஷயத்தைத் துப்பறிந்து வந்து மருமகளிடம் சொல்லிவிட்டார்கள். மனைவி சொல்ல மகனும் புரிந்து கொண்டார். இதுவரை ஒரு விஷயம் கூட மகனுக்கு அவர்கள் தெரிவிக்கவில்லை. ஒருநாள் பிரவீண், பாபு எனும் சகோதரர்கள் ஓடிவந்து மருமகளிடம், மேடம் மேடம், மாம்பலம் வீட்டை விற்றுவிட்டார்கள், நேற்றுதான் ரிஜிஸ்ட்டிரேஷன் முடிந்துதாம் என்று தகவல் சொன்னார்கள். என்ன விலைக்கு விற்றார்கள், யாரிடம் என்பது போன்ற விவரங்களும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. கணவன் வந்ததும் சாமிநாதன் மகள் அவரிடம் விவரங்களைச் சொன்னாள். அவர் எப்படி வேணுமானாலும் செய்து கொள்ளட்டும், நீ கவலைப் படாதே என்று சொல்லிவிட்டார்.

    ஒரு வாரம் சென்றிருக்கும், தில்லும் திவானாவும் வீட்டில் தங்கள் அறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்களுடைய பெண்கள் பெரியவர்கள் இருவர் ஒவ்வொருவராகத் தனித்தனியாக வந்து பெற்றோர்களிடம் பேசிவிட்டுச் சென்றார்கள். அவர்கள் உள்ளே வந்ததும் அவர்கள் அறைக் கதவு சாத்தப்படும். பின்னர் அவர்கள் சென்று விடுவார்கள். வீடு விற்ற பணத்தில் அவர்களுக்குப் பங்கு கொடுத்தார்கள் போலிருக்கிறது. ஆனால் ஒரே மகனான தன் கணவருக்கோ, தனக்கோ இது பற்றி ஒன்றும் சொல்லாததோடு, பணத்தையும் கண்ணில்கூட காட்டவில்லை. அதோடு கதவை சாத்திக்கொண்டு பணத்தைத்தான் இவர்கள் எண்ணியிருக்கிறார்கள் என்பது அவள் ஆத்திரத்தை அதிகப் படுத்தியது. ஆனால் கிழங்கள் இருவரையும் டியூஷன் மாணவர்கள் மறைமுகமாக கேலியும் கிண்டலும் செய்து ஓயாமல் அவர்களை வம்புக்கு இழுத்தார்கள். இந்த மாணவர்கள் வந்து விட்டால் தில்லும் திவானாவும் ஓடி ஒளிந்துகொள்ளத் தொடங்கினர்.

    தங்கள் பெண்கள் வந்துவிட்டுச் சென்ற மறுநாள், தில் வந்து மருமகளிடம், இந்தா இதை உன் வீட்டுக்காரனிடம் கொடுத்துவிடு என்று ஒரு கவரைக் கொடுத்தார். அதைப் பிரித்துப் பார்த்தாள் மருமகள். அதில் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு ஒரு இந்திரா விகாஸ் பத்திரம் இருந்தது தன் கணவர் பெயரில். இது எதற்கு இப்போது என்று மருமகள் கேட்டாள். உனக்கு எதுக்கு அதெல்லாம், நீ உன் ஆம்படையானிடம் கொடுத்து விடு என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் தில். கணவன் மாலையில் வந்தவுடன் இதைக் கொடுத்தாள். அவர் விவரங்களைக் கேட்டுவிட்டு, அதை ஒரு புறமாக வீசி எறிந்தார். இதையெல்லாம் எதற்காக வாங்கி வைத்திருக்கிறாய். அவர்கள் முகத்திலேயே விட்டு எறிய வேண்டியதுதானே என்று கடுப்படித்துவிட்டுப் போய்விட்டார். அது குறித்து பிறகு அவரும் கேட்கவில்லை, மனைவியும் சொல்லவில்லை. ஆனால் அதை எடுத்து பத்திரமாக வைத்துவிட்டாள் மருமகள்.

    அவர்கள் வீட்டுத் தொட்டத்தில் புல்லோடு பலவகை பூண்டுகளும் முளைத்திருந்தன. அதில் ஒருநாள் பாம்பு வந்துவிட்டது. அங்கு அமர்ந்து படிக்கும் மாணவர்கள் மேடம் மேடம் இங்கு ஒரு பாம்பு வந்துவிட்டது. ஒரே காடாக புல் பூண்டு இருப்பதால்தான் அவைகள் வருகின்றன. நாங்கள் சுத்தம் செய்து விடுகிறோம் என்று அங்கிருந்த புல் பூண்டுகளைச் சுத்தமாக அகற்றிவிட்டனர். மாலையில் தில் எங்கோ வெளியே போய்விட்டு வீட்டுக்கு வந்தவர். தோட்டம் சுத்தமாக இருப்பதைப் பார்த்தார். மனசு கேட்குமா? தானாக முளைத்த பூண்டுகள் அதைக்கூட வேறு எவரோ அகற்றிவிட்டது அவருக்குக் கோபத்தை உண்டு பண்ணியது போலிருக்கிறது.

    “இங்கிருந்த எல்லா செடிகளையும் பிடுங்கிப் போட்டது யார்?” என்று கத்தினார். மருமகள் வெளியே வந்து, இங்கு பாம்பு வந்துவிட்டது. பசங்க உட்கார பயந்தாங்க. அவங்கதான் எல்லாத்தையும் பிடுங்கிப் போட்டுட்டு சுத்தப் படுத்தியிருக்காங்க என்றாள். போச்சு போச்சு, அதில நிறைய காசித்தும்பை செடி பூத்துண்டு இருந்தது. காசித்தும்பை பிள்ளையாருக்கு பிரீதி. அதைப் போய் பிடுங்குவாங்களா? யாரைக் கேட்டு இதெல்லாம் அந்தப் பசங்க செய்யறாங்க என்றார். எப்படித்தான் தைரியம் வந்ததோ தெரியாது மருமகளுக்கு. நான் தான் பிடுங்கச் சொன்னேன். பாம்பு கடிச்சுட்டா அவா குடும்பத்துக்கு யார் பதில் சொல்றது? காட்டுச் செடியெல்லாம் விநாயகருக்குப் பிரீதி என்றால் காட்டிலே போயி பறிச்சுக்க வேண்டியதுதான். வீட்டிலே எதுக்கு அந்தச் செடியெல்லாம். பசங்க உசுரு பெரிசா, விநாயகருக்குப் பிரீதியான பூ பெரிசா? என்றாள்.

    தில் திகைத்துப் போனார். இனி நமது அதிகாரம் எடுபடாது. இவள் மகாலக்ஷ்மி, மாணவர்கள் இவர்களது தெம்பில் பேசுகிறாள். இனி நம் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் இங்கு இருப்பது சரியாக இருக்காது என்று முடிவு செய்தார். ஓரிரு நாட்களில் தனது பெட்டி படுக்கைகளுடன் கிளம்பிவிட்டார். மருமகளும் எங்கே போகப் போகிறீர்கள் என்று கேட்கவில்லை. வாசலில் வந்து நின்ற டாக்சியில் சாமான்களை ஏற்றும்போது நாங்கள் சைதாப்பேட்டைக்கு எங்க ரெண்டாவது பெண்கிட்டே போறோம். அவளுக்கு அங்கே உதவிக்கு யாரும் இல்லையாம் எங்களை வந்து இருக்கச் சொன்னா நாங்க போறோம் என்று சொல்லிவிட்டு திவானா போனாள். அப்போது அங்கே நின்றிருந்த மாணவர்களில் ஒருவனை அழைத்து அதோ பாருப்பா அந்த துளசி மாடம் என்னோடது. அதை எடுத்து கார் டிக்கியில் வை என்றாள். அந்த பையன் மிகவும் விவேகமானவன் போலிருக்கிறது. வாழற வீட்டிலேருந்து துளசி மாடத்தையெல்லாம் எடுக்கக்கூடாது பாட்டி, புதுசா ஒண்ணு வாங்கிக்கோங்கோ. இங்கே டீச்சருக்கு இருக்கட்டும் அது என்றான்.

    “போடா, சொன்னதைச் செய், அதிகப்பிரசங்கி, உங்கிட்டே நான் அட்வைசா கேட்டேன்” என்று எரிந்து விழுந்தாள் திவானா. அந்தப் பையன் துளசி மாடத்தை எடுக்க விரும்பாமல் வேறு பக்கம் போய்விட்டான். பிறகு தில்லும் திவானாவுமே அதைப் பெயர்த்து எடுத்துக் காரில் வைத்துக் கொண்டு போய்விட்டார்கள். அடுத்த விநாடி, டியூஷன் படிக்கும் பையன்கள் செங்கற்களைக் கொண்டு வந்து அடுக்கி புதிதாக ஒரு துளசிமாடம் அமைத்து அதில் மண்ணை நிரப்பி ஒரு துளசிச்செடியையும் கொண்டு வந்து வைத்து நீர் ஊற்றினார்கள். அது நன்கு வளர்ந்தது. அதுமுதல் சாமிநாதனின் மகளுக்கு நல்ல காலம் என்றே சொல்லலாம். எனினும் அவ்வப்போது அமாவாசை வந்து நிலவை மூடுவது போல தில், திவானா வந்து ஏதாவது வெடிகுண்டு வீசிவிட்டுப் போவது வழக்கமாகிவிட்டது. எனினும் மகாலக்ஷ்மியும், மாணவர்களும் இவர்களுக்கு உறுதுணையாக இருந்து வாடிய பயிர்போல இருந்த அவர்கள் வாழ்க்கையில் நீர் ஊற்றி தளதளவென்று வளரவைத்தார்கள். .

    (​தொடரும்)

    Share
  • இப்படியும் சில மனிதர்கள்! – 6

    தஞ்​சை ​​வெ. ​கோபாலன்

    தில் வீட்டில் சாமிநாதனின் பெண்ணுக்கு தினந்தினம் நரக வேதனைதான். என்ன செய்வது? பெற்றோர்களும் மனதைக் கல்லாக்கிக் கொண்டனர். நாம் வருந்துவது தெரிந்தால் அவளுக்கும் வருத்தம் அதிகமாகும், ஆகையால் அங்கு அவள் படும் துன்பங்கள் தங்களுக்குத் தெரியாதது போல நடந்து கொள்ளத் துவங்கினர். ஆனால் அவள் தன் தம்பியிடம் போனில் பேசி தன்னை எப்படியாவது இந்த நரகத்திலிருந்து வெளியே கொண்டு வாடா, நீயும் நானும் எவ்வளவு அன்பாக, ஆசையாக விளையாடிக்கொண்டு நம் வீட்டில் சுதந்திரமாக இருந்தோம். நான் இங்கே சாப்பிட்டு இரண்டு நாள் ஆச்சுடா. நேத்து ராத்திரி இவா என்னைப் படுத்தின பாடு தாங்காம எங்கேயாவது போய் செத்துப் போயிடலாம்னு தெருக்கடைசில போயி நின்னுண்டிருந்தேன். எங்கே போறது, எப்படி சாகறதுன்னு தெரியலை. மறுபடி வீட்டுக்கே வந்து அழுதுண்டே படுத்துத் தூங்கிட்டேன். என்னை ஏண்டா அப்பா இப்படியொரு பாழும் கிணற்றில் கொண்டு வந்து தள்ளிவிட்டு, அவர் பாட்டுக்கு இருக்கிறார் என்று அழுதிருக்கிறாள். தம்பிக்கு வருத்தம் தாங்கவில்லை. நெஞ்சு வெடித்துவிடுவது போல துக்கம் அவனை வாட்டியது. உடனே ஓடிப்போய் அக்காவை அந்த கொடுங்கோலர்களிடமிருந்து மீட்டுவிட வேண்டுமென்ற வெறி. பி.காம் ஃபைனல் இயர் படிக்கும் அந்த இளைஞன் தன் அக்காவின் மேல் அளவற்ற பாசம் வைத்திருந்தான். அப்பாவிடம் சொல்லிவிட்டுத் தான் போய் அக்காவைப் பார்த்துவிட்டு வருவதாகத் தன் பைக்கை எடுத்துக் கொண்டு மாம்பலம் சென்றான்.

    அக்காவின் வீட்டையடைந்த சமயம் அங்கு அக்காவுக்கு ஏதோ அர்ச்சனை நடந்து கொண்டிருந்தது. திவானா தலையை ஆட்டி ஆட்டி ஏதோ கடுமையாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். எங்க மாமியார் எனக்குச் சொல்லிக்கொடுத்தபடிதான் நான் நடப்பேன். நீ என்ன? படிச்சுட்டோம்கிற திமிர்ல பதில் பேசறே. அப்பாவை நான்கூட எதிர்த்து ஒருவார்த்தை பேசினது கிடையாது, எனக்கும் கல்யாணமாகி புக்ககம் வந்து இதோட முப்பது வருஷம் ஆச்சு. நீ ஒவ்வொண்ணுக்கும் பதில் சொல்லிண்டு நிக்கறயே. அவரை யார்னு நினைச்சே. அவா கம்பெனி எம்.டிக்கு அவர் பி.ஏ. தெரியுமா. அவர் நெனைச்சா எந்த காரியமும் சாதிக்க முடியும். அவரைப் போய் நீ எதிர்த்து பதில் பேசறது நன்னா இல்லை. நன்னா வளர்த்திருக்கா பெண்ணை என்று முனகிக் கொண்டு வாசல் புறம் திவானா வரவும் அங்கு மருமகளின் தம்பி வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

    தன் அக்கா ஆதரவில்லாத அனாதையா என்ன? இந்தக் கிழவி வாயில் வந்ததெல்லாம் சொல்லி திட்டிக் கொண்டிருக்கிறாளே. என் அம்மா கூட தன் பெண்ணை ஒரு வார்த்தை அதிர்ந்து பேசினது கிடையாது. அவளுக்குக் கல்யாணம் பண்ற வரையிலும் கூட அவளைத் தன் மடியில் தலை வைத்து படுக்கச் சொல்லி அவளைக் கொஞ்சிக் கொண்டிருப்பாளே. அப்பாவுக்குக் கூட தெரியாமல் பெண் மீது செல்லம் கொடுத்து, அவள் வேண்டியதை யெல்லாம் வாங்கித் தருவாளே. அவள் காலேஜ் விட்டு வீட்டுக்கு வருவதற்கு முன்பாக அவளுக்கு ஸ்பெஷலா டிபன் பண்ணிக் கொடுப்பாளே. அவள் பசி தாங்க மாட்டான்னு அவளுக்கு மட்டும் அம்மா எவ்வளவு கரிசனத்தோடு பரிந்து பரிந்து எல்லாம் செய்து கொடுப்பாள். அவள் கால் தரையில் பட்டால் கூட அடடா, வலிக்குமே என்று வருந்தும் அந்தத் தாய் எங்கே, இங்கே சதா திட்டித் தீர்க்கும் இந்த ‘இடும்பி’ போன்ற சூன்யக்காரக் கிழவி எங்கே? அவனுக்குத் தாளமுடியாத கோபம் வந்தது.

    கிழவி தன் எதிரில் வந்து நிற்கவும் அவன் கோபம் தலைக்கேறிவிட்டது. இளைஞனல்லவா? பக்குவமாய் தன் கோபத்தை வெளிப்படுத்தத் தெரியவில்லை. “என்ன மாமி. என்ன நீங்க பாட்டுக்கு என் அக்காவை ஓட்டு ஓட்டுன்னு ஓட்டிண்டு இருக்கீங்க. நான் எல்லாத்தையும் கேட்டுண்டுதான் வந்து நிக்கறேன். எங்க வீட்டிலே எங்களுக்கெல்லாம் மரியாதைன்னா என்னன்னு சொல்லிக்கொடுத்துதான் வளத்திருக்காங்க. நீங்க ஒண்ணும் புதுசா மரியாதை சொல்லித் தர வேணாம். உங்க ஆத்துக்காரர் எம்.டிக்கு பி.ஏ.வாக இருக்கலாம். எங்க அப்பா, ஃபாக்டரி மானேஜர். உங்க வீட்டுக்காரரை விட அதிக சம்பளம். அதிக அதிகாரம். பெரிய கம்பெனி. தெரியுமா?” என்றான்.

    “இப்ப என்னடா ஆயிடுத்து. வந்து நுழைந்தும் நுழையாம மல்லுக் கட்டிண்டு சண்டைக்கு வரயே. இதெல்லாம் உங்காத்துல வச்சுக்கோ. இப்போ உன்னை இங்கே யாரு வெத்தல பாக்கு வைச்சு அழைச்சா?” என்றாள் திவானா.

    பையனின் கோபம் இன்னும் அதிகமாகியது. “அதிகமா பேசினேள்னா தெரியும் சேதி. நான் உங்க புருஷன் இல்ல. உங்க வாய்க்கு பயந்து தொப்புக்கரணம் போட, நாக்கைப் புடிச்சு இழுத்து வச்சு அறுத்துடுவேன்” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே தில் வந்து பின்புறமாக நின்று கொண்டிருந்ததைக் கண்டான்.

    தில்லுக்கு மகா கோபம். “அறுப்பேடா, அறுப்பே, போடா வெளியே, யூ கெட் அவுட்” என்று கத்தினார்.

    இந்த விவகாரத்தை உள்ளேயிருந்து பார்த்துக் கொண்டிருந்த சாமிநாதனின் மகள் ஓவென்று அழுது அரற்றினாள். தன் தம்பிக்கு ஏற்பட்ட சங்கடத்தை நினைத்து அவள் துக்கம் தாங்க முடியாமல் போனது. என்ன செய்வாள் பாவம். “டேய், சுரேஷ், போயிடுடா, நீ ஆத்துக்குப் போயிடு. அவாகிட்டே நின்னு பேசிண்டு இருக்காதே, அவா அப்படித்தான் பேசுவா” என்றாள்.

    “நீ போடி உள்ளே. வந்துட்டா தம்பிக்கு பரிஞ்சுண்டு” என்று உத்தரவு போட்டாள் திவானா.

    சுரேஷுக்கு எல்லை மீறிவிட்டது கோபம். தன்னை ‘கெட் அவுட்’ என்று சொன்ன தில்லைப் பார்த்து “என்னய்யா சொன்னே?” என்றான்.

    “போடா வெளியே, கெட் அவுட்” என்று தலையைக் குனிது, கையை நீட்டி, கண்ணை மூடிக்கொண்டு அதிகார தோரணையில் அவர் விரட்ட, சுரேஷ் விட்டான் ஒரு அறை அவர் கன்னத்தைப் பார்த்து. தில் கிழம் ஆடிப்போய் விட்டது.

    “என்னையா அடிச்சே, அடேய், உன்னை சும்மா விடமாட்டேண்டா, போலீசைக் கூப்பிடறேன்” என்று சொல்லிக்கொண்டே, திவானைவைப் பார்த்து “என்னடி பாத்துண்டு நிக்கறே, போயி அக்கம் பக்கத்துல இருக்கறவாள கூட்டிண்டு வா, சின்னப் பய இவன் என்னை கன்னத்துல ஓங்கி அடிச்சுட்டான், போடி” என்று பதறினார். திவானா கூண்டுக்குள் அடைக்கப்பட்ட மிருகம் மாதிரி உருமிக்கொண்டு அங்கும் இங்குமாக உலவினாள். உள்ளே மருமகள் ஓவென்று பெருங்குரல் எழுப்பி அழத்தொடங்கியிருந்தாள்.

    சுரேஷ் தில் மீது பாய்ந்து அவரைப் பிடித்துக் கீழே தள்ளிவிட்டு வெளியே வந்து தனது பைக்கை எடுத்துக் கொண்டு விர்ரென்று தன் வீடு நோக்கிப் பயணமானான் தன் அப்பா அம்மாவை அழைத்து வர. அது சின்னத் தெரு, தில் எதிர்பார்த்தது போல ஒருவரும் இவருடைய உதவிக்கு வரவில்லை. எல்லோரும் வாசலில் வந்து நின்று கொண்டு வேடிக்கைப் பார்த்தார்கள். அடுத்த வீட்டு மாடி ஃப்ளாட்டில் இருக்கும் பெரியவர் மட்டும் வீட்டு வாசலுக்கு வந்து, சின்ன குழந்தைகள் அவாளோடு சரிசமமா நின்னு சண்டைக்கு நிக்கறேளே. நீங்க இல்லாதபோது உங்காத்து மாமி பேசற பேச்சை அந்தக் குழந்தையாகக் கொண்டு கேட்டுண்டு பொறுமையா இருக்கு. அந்தப் பையன் அடிச்சுட்டான்னு கத்தறேளே, வெட்கமாயில்லை. வீட்டுக்கு வந்த மாட்டுப்பொண்ணை நல்லபடியாக அன்பா நடத்தத் தெரியலை, நீரெல்லாம் ஒரு பெரிய மனுஷன், தூ” என்று காறித் துப்பிவிட்டுப் போய்விட்டார். மற்ற வீட்டுக்காரர்கள் சிரித்துக் கொண்டு தங்கள் வேலையைப் பார்க்கப் போய்விட்டனர்.

    அடிபட்ட தில்லுக்குப் பொறுக்கவில்லை. சின்ன பையன் அடித்தது ஒருபுறம், பக்கத்து வீட்டு பெரிசு வந்து தன்னை திட்டிவிட்டுப் போனது அவருக்கு மேலும் கோபம். தெருக்காரர்களும் ஒருத்தரும் ஆதரவாகப் பேசவில்லை, தில்லும் திவானாவும் கதவைச் சாத்திக் கொண்டு உள்ளே போய்விட்டனர். தெருக்காரர்கள் மீது இருந்த கோபம் முழுவதும் இப்போது அந்த அனாதை மருமகள் பெண்ணின் மீது பாய்ந்தது. சர்க்கஸ் கூண்டுக்குள் இருக்கும் புலி சிங்கத்துக்குப் போடப்படும் மாமிசத்தை அவை எப்படிக் கடித்துக் குதறுமோ அப்படியொரு குதறல் தாழிட்ட வீட்டுக்குள். பலியானது அந்தச் சின்னஞ்சிறு பெண். பாவம்!

    மாலை ஆயிற்று. தில் திவானாவின் மகன் வீட்டுக்கு வந்தான். உள்ளே நுழைந்ததும் மயான அமைதியில் வீடு இருப்பதைக் கண்டான். தில்லும் திவானாவும் அவர்கள் அறையில் உட்கார்ந்து கொண்டு ‘குசுகுசு’ வென்று தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். அவன் மனைவி எங்கிருக்கிறாள் என்று தெரியவில்லை. அவர்கள் அறைக்குச் சென்று பார்த்தான். அங்கு அவன் மனைவி தரையில் அழுது ஓய்ந்து போய் விசும்பிக் கொண்டு படுத்திருந்தாள்.

    “என்னமா ஆச்சு, ஏன் இப்படி தரையிலே படுத்திண்டுருக்கே” என்று அன்போடு தன் மனைவியை எழுப்பினான் அந்தப் பையன். அவள் எழுந்து ஒன்றும் சொல்லாமல் அவன் மார்பில் சாய்ந்து கொண்டு, “என்னை கொன்னு போட்டுடுங்கோ, இந்த வீட்டிலே என்னால ஒரு நிமிஷம் கூட இருக்கமுடியாது, இல்லைன்னே எங்க வீட்டுக்குப் போறேன்” என்றாள்.

    இதைக் கேட்டுக் கொண்டே அறை வாயிற்படியருகில் நின்று கொண்டிருந்த திவானா, அழிச்சாட்டியக்காரி, என்னமா டிராமா போடறா பாரு என்று சொல்லிக் கொண்டே, தன் மகனைப் பார்த்து, “இதைப் பாருடா, பொண்டாட்டி அழறான்னு உடனே அவளை சமாதானப் படுத்திண்டு இருக்கிறே. இவ தம்பி என்ன செஞ்சான் தெரியுமா? உன் அப்பாவை கை நீட்டி ஓங்கி அறைஞ்சுட்டு ஓடிப்போயிட்டான். அதைக் கேளு முதலில்” என்றாள்.

    “அடிச்சுட்டானா. அவன் இங்கே வந்திருந்தானா? எதுக்கு அப்பாவை அடிச்சான்? அவன் அடிக்கும்படியா இவர் ஏதாவது சொன்னாரா?” என்றான் மகன்.

    “ஆமாண்டா. பொண்டாட்டியையும் மச்சினனையும் விட்டுக் கொடுப்பியா. அப்பாவை அடிச்சுட்டாண்டான்னு சொன்னா, அவர் அதுக்கு என்ன தப்பு பண்ணினார்னு கேட்டுண்டு நிக்கறியே. ஒனக்கு அப்பா மேல கொஞ்சமாவது பாசம் இருக்கா?” என்றாள் திவானா.

    “அதெல்லாம் எனக்குத் தெரியும். என்ன நடந்தது. யார் என்ன பேசினாங்கன்னு விசாரிச்சுட்டுத்தான், தப்பு யார் மேல இருந்தாலும் அவாளைக் கண்டிக்கணும். கண்ணை மூடிண்டு எதையும் என்னால செய்ய முடியாது. என்ன நடந்தது, அதை முதலில் சொல்லு” என்றான் தன் தாயைப் பார்த்து.

    மகனைத் தங்கள் அறைக்கு அழைத்துக் கொண்டு போய், அவன் மனைவியும், அவள் தம்பியும் தங்களைக் கொல்ல வந்தது போலவும், இவர்கள் சத்தம் போட்டு ஊரைக்கூட்டியதும் அவன் பயந்து கொண்டு ஓடிவிட்டதாகவும் கதை அளந்தாள். நடந்த முழு விவரங்களையும் அவள் சொல்லப்போவதில்லை என்று தெரிந்து கொண்ட பையன் உடனே தன் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு சாமிநாதன் வீட்டுக்கு விரைந்தான். அங்கு போய் தன் மைத்துனனை விசாரித்தால் நடந்த விவரம் தெளிவாகத் தெரியும். மனைவியோ அழுதுகொண்டு பேச மறுக்கிறாள். அவன் மாமனார் வீடு நோக்கிப் போனான். அங்கு சாமிநாதன் தன் மகன், மனைவியோடு இவர்கள் வீட்டுக்குக் கிளம்பி வந்து கொண்டிருந்தார். மாப்பிள்ளையைப் பார்த்ததும் வீட்டுக்குத் திரும்ப அழைத்துக் கொண்டு போய் நடந்த விவரங்களை ஒன்று விடாமல் சொன்னார்கள்.

    “என்னதான் அவங்க மரியாதைக் குறைவா பேசியிருந்தாலும், நீ அவரை அடித்திருக்கக்கூடாது. அவங்க பேசினது, நடந்தது எல்லாம் தப்புத்தான். அதே போல நீ அவரை அடிச்சதும் தப்புத்தான், சரி என்ன செய்யணுமோ அதைச் செய்யறேன். நீங்க இப்போ அங்கே வந்து பேசினா சண்டை இன்னும் பெரிசாகும். அதனால நான் மட்டும் போறேன்” என்றார் மாப்பிள்ளை.

    “இல்லை மாப்பிள்ளை, நானும் வரேன். என் பிள்ளை செஞ்ச தப்புக்கு நான் அவர் கிட்டே மன்னிப்பு கேட்டுக்கறேன். என்ன இருந்தாலும் சின்ன பையன், இவன் அவரை கைநீட்டி அடித்திருக்கக்கூடாது, மகா தப்பு” என்றான் சாமிநாதன்.

    “வேண்டாம். சொன்னா கேளுங்க. உங்க பெண்ணுக்கு நான் பாதுகாப்புக் கொடுத்துப் பார்த்துக்கறேன். தயவு செஞ்சு நீங்க இப்போ வந்து புதுசா எந்த பிரச்சினையும் ஏற்படக் காரணமா இருக்க வேண்டாம்” என்று சொல்லிவிட்டு அவர் மட்டும் போய்விட்டார். சாமிநாதன், அவன் மனைவி, சுரேஷ் ஆகியோருக்கு வருத்தம், பசியில்லை, தூக்கம் இல்லை, கவலை அவர்கள் மனதைப் பாறாங்கல் போல அழுத்திக் கொண்டிருந்தது.

    அங்கே வீடு திரும்பிய மாப்பிள்ளை நேரே திவானாவிடம் போய், “அவன் அப்பாவை அடிச்சது தப்புத்தான். அவன் அதுக்காக அவர்கிட்டே மன்னிப்பு கேக்கறேங்கறான். அவா அப்பாவும் மன்னிப்புக் கேட்கறேங்கறார். ஆனா, இவ்வளவுக்கும் நீ பேசினதுதான் காரணம்னு தெரியறது. உனக்கு அவள் மருமகளா எதிரியா. ஏன் எப்போ பார்த்தாலும் அவளைப் போட்டு ரணப்புடுங்கல் புடுங்கறே” என்றார்.

    “ஓகோ, மாமனார் மாமியார் சொல்லிக் கொடுத்து இங்க வந்து என் மேலயே குத்தம் சொல்லறியா. போ, போ உன் மாமனார் வீட்டுக்கே உன் பொண்டாட்டியையும் அழைச்சுண்டு போ. அப்பா அடிபட்டுட்டார்னு கவலை இல்லாம, மச்சினனுக்கும், பொண்டாட்டிக்கும் பரிஞ்சுண்டு பேச வந்துட்டியா” என்று கத்திக் கொண்டிருக்கும்போதே உள்ளேயிருந்து தில் திடீரென்று தோன்றி, தன் மகனிடம் ஆத்திரத்தோடு, “பொண்டாட்டிக்குப் பரிஞ்சு பேசிண்டு இங்கே இருக்க வேண்டாம். போகச்சொல்லு அவனை வெளில. இந்த வீட்டிலே அவாளுக்கு இடம் இல்லை. இது என் வீடு. என் சம்பாத்தியத்துல கட்டினது. அவன் மச்சினனை மட்டும் ‘கெட் அவுட்’னு சொல்லல. இவனையும்தான் சொல்றேன். போகச்சொல்லு, ‘கெட் அவுட்” என்று கத்தினார்.

    மாப்பிள்ளை ஒரு நிமிஷம் மெளனமாக நின்றார். ஏதோ முடிவுக்கு வந்தது போல சரியென்று தலையாட்டிவிட்டுத் தன் அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டார். அங்கு தன் மனைவியுடன் ஏதோ ஆலோசித்துவிட்டு ஒரு மணி நேரத்துக்குப் பிறகு கையில் பெட்டி, பைகளோடு இருவரும் வெளியே வந்தனர். தில்லும் திவானாவும் தங்கள் அறைக்குள் உட்கார்ந்து கொண்டு என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

    மாப்பிள்ளை மட்டும் பெட்டியோடு ஒருவரிடமும் ஒன்றும் பேசாமல் வாயில்புறம் போனார். சாமிநாதனின் மகள் மட்டும் தில், திவானா இருக்கும் அறைக்குப் போய் மாமனார் மாமியாருக்கு ஒரு நமஸ்காரத்தைச் செய்துவிட்டு எழுந்து, அவர் எங்கேயோ அழைச்சிண்டு போராராம். அங்கேதான் நாங்க இருக்கப் போறோம். நான் வரேன்” என்று சொல்லிவிட்டு அவர்கள் பதிலுக்கு எதிர்பாராமல் விறுவிறுவென்று வந்து மாப்பிள்ளையுடன் அவர் ஸ்கூட்டரில் உட்கார்ந்துகொண்டு போய்விட்டாள்.

    இருவரும் மாப்பிள்ளையின் நெருங்கிய நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றார்கள். அவர்கள் கோடம்பாக்கம் அருகில் ஒரு பலமாடிக் கட்டடத்தில் ஒரு ஃபிளாட்டில் குடியிருந்தனர். அவரிடம் சென்று நடந்ததெல்லாம் சொல்லி தங்களுக்கு ஒரு வீடு தேவை என்று கேட்டனர். அதற்கு அவர் ‘நல்ல காலம் இப்போ வந்தே. நம்ம எதிர் பிளாட் இப்போ காலியாத்தான் இருக்கு. அதன் ஓனர் எங்கிட்டே சொல்லி, நல்ல டெனண்ட் வந்தா குடிவைக்கச் சொல்லியிருக்கார். நீங்க ரெண்டு பேரும் இங்கேயே இருக்கலாம். நீங்க நன்னா செட்டில் ஆற வரைக்கும் நீங்க ரெண்டு பேரும் எங்காத்துல கெஸ்ட்” என்றார் அவர்.

    மாப்பிள்ளை அவரிடம் சொன்னார். “ரொம்ப நன்றி. உன்னை நம்பித்தான் வெளியே போன்னு அவர் சொன்னதும் பெட்டியோடு வந்துட்டேன். எனக்கு நெற்குன்றத்துல ஒரு இடம் இருக்கு. நாளைக்கே போயி அந்த இடத்தைப் பார்த்துட்டு பாங்க் லோன் போட்டு வீட்டை கட்டிடறேன். ஒரு ஆறுமாசத்துல கட்டிட முடியாதா?” என்றார்.

    “நல்ல கண்ட்டிராக்டர்னா ஆறுமாசத்துல முடிச்சுக் கொடுத்துடுவார். தாராளமா செஞ்சுடலாம். நீ கவலைப்படாதே. உனக்கு என்ன உதவின்னாலும் நான் செய்யறேன். என்னால முடியாவிட்டாலும் எனக்கு வேண்டியவங்ககிட்டே சொல்லி ஏற்பாடு செய்யறேன். நீ கவலைப்படாதே. நீ உன் காலில் நிற்கறதுன்னு முடிவு பண்ணின உன் துணிச்சலைப் பாராட்டறேன். உன் மனைவி சின்னப் பொண்ணூ. அதுக்குள்ள அவளுக்கு இத்தனை துன்பம் கூடாதுடா. அவளைக் கண்கலங்காமப் பாத்துக்கறது உன் கடமை. நான் இருக்கேன் உனக்கு வீடு கட்டறதுக்கு என்ன வேணுமோ எல்லாம் செய்யறேன் ” என்றார் நண்பர்.

    அதன்பின் நெற்குன்றத்தில் தனிவீடு கட்டிக்கொண்டு இவர்கள் குடிபோனபோது மரியாதைக்காக மாப்பிள்ளை அவருடைய பெற்றோர்கள் தில், திவானாவையும் அழைத்தனர். அவர்களும் ஒன்றுமே நடக்காதது போல வந்து வாயில்படிக்கு சந்தனம் குங்குமம் இட்டு, மாவிலைத் தோரணம் கட்டி, அருகிலிருந்த ஒருவரிடமிருந்து பசுமாடு கன்றை ஓட்டிக்கொண்டு வந்து சாமிநாதனிடமும், அவன் மனைவியிடமும் சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டு கிரஹப்பிரவேசம் நடந்தது. சாமிநாதனின் மகன் மட்டும் இவர்கள் பக்கம் பார்க்காமல் நின்றிருந்து விட்டுப் போய்விட்டான். அதன் பின் தில் திவானா மாம்பலம் திரும்பினர். சாமிநாதனின் மகளும் மருமகனும் நெற்குன்றத்தில் தனியாகக் குடித்தனம் செய்தனர்.

    அப்பாடா விட்டது தொல்லை என்று இருக்கமுடியவில்லை. தில் திவானாவின் விஷமம் தொடர்ந்து கொண்டிருந்தது.

    (​தொடரும்)

    Share