kutralam-niagara1

சி. ஜெயபாரதன், கனடா

 z

இறை வணக்கம்

அண்டத் தலைவனை, ஆதி முதல்வனைத்
தொண்டன் வணங்கித் துணிகின்றேன் ! – பண்டைமுதல்
குற்றாலத் தேனருவி கொட்டுவதை நானெழுத
வற்றாத் தமிழூட்ட வா !

***********

கற்றேன் கடுகளவு ! கற்க உலகளவு !
ஒற்றைப் பிறப்பெனக்கு ஒவ்வாது ! – முற்றிலும்
தாரணியைக் காணத் தருணம் கிடைப்பதில்லை !
ஓரளவு தேறிடவே ஓது !

***********

குற்றால அருவி எப்படி உள்ளது என்றொரு பெருங் கவிதை புனைவதை விட, அது எப்படி இருக்க வில்லை என்றும் நான் சொல்ல விழைகிறேன். அப்போதுதான் அதன் முழுத் தோற்றத்தை நாம் விழுமையுடன் காண முடிகிறது.
ஒரு கல்லில் அடிப்பேன்
இரு மாங்காய் !
இரு நீர்வீழ்ச்சி வடிப்பேன்
ஒரு மூச்சில் !

******************

குற்றால அருவி !

 

குற்றாலச் சிற்றருவி !
குதித்தோடும் தேனருவி !
முத்தான நீரருவி !
முகிலெட்டும் வானருவி !

குற்றாலம் வெண்ணருவி !
கொட்டுகின்ற தண்ணருவி!
சிற்றாறுக் குன்றருவி !
சிரித்தோடும் பொன்னருவி !

 

நயாகரா அருவி !

 

புவியிலே பேரருவி !
பூத உடல் நீரருவி !
கவிழ்ந்து விழும் கீழருவி !
கழுத்தொடிக்கும் பேயருவி !

முற்றிலும் மண்ணருவி !
முதலிரவுப் பெண்ணருவி !
குற்றாலம் விண்ணருவி !
குறைவாகும் சின்னருவி !

தோற்றம் கீழே உனக்கு ! வானத்
தோரணம் ஏது உனக்கு ?
போற்றிப் புகழ்ந்தாலும் சேரும்
நாற்றச் சாக்கடை தான் !

 

குற்றால அருவி !

 

குற்றாலம் குளியருவி !
குடிமக்கள் தேனருவி !
நெற்றி நிமிர் மேலருவி !
நெளிதோடும் கானருவி !

குரங்காடும் நீரருவி !
கூடுகட்டும் ஊர்க்குருவி !
மரமாடும் பேரருவி !
மானோடும் வானருவி !

குற்றாலம் சிற்றருவி ! மழைக்
குன்றின் வெற்றருவி !
நயாகரா பேரருவி !
நல்வணிகர் பேருதவி !

 

குற்றால அருவி !

எளியவர் கண்டு களிக்கலாம் !
எல்லாரும் இனிதாய்க் குளிக்கலாம் !
துர்நாற்றம் இல்லா நீரது !
தூய்மை யான மழையது !

குற்றாலச் சூழ் மேடை
சூழ்ந்து வரும் பூவாடை !
நயாகரா நதி ஓடை
நாகரீகச் சாக்கடையே !

 

நயாகரா அருவி !

ஆறாக ஓடி வரும் !
ஆத்திரமாய்ப் பாய்ந்து விழும் !
மாறாகக் கீழ் ஓடுது !
மண்ணைப் போய்த் தாவுது !

குரங்கில்லை ! குன்றில்லை !
மரமில்லை ! மானில்லை !
இயற்கை வனப்பழியும் ! எங்கும்
செயற்கை மினுப்படிக்கும் !

ஒரு நதி இடையில் பிரியுது !
இரு நீர் வீழ்ச்சியாய்த் தெரியுது !
பிரமிப் பான காட்சிதான் !
பேரிடி கேட்கும் மூச்சிதான் !

 

குற்றால அருவி !

 

வெள்ளிக் கதிர் எழுமருவி !
வேகமாய் விழுமருவி !
துள்ளி வரும் நீரருவி !
தூங்கி விடும் ஓரருவி !

ஆன்மீக நாட்டருவி !
ஆடிவரும் காட்டருவி !
நான் விழையும் நீரருவி
நாத எழும் தூயருவி !
நயாகரா அருவி !

 

வாணிபச் சந்தை அது !
வஞ்சிப்போர் மந்தை அது !
தோணியிலே சென்றாலும்
துட்டுத்தான் கரையுதடா !

காசிருந்தால் நீர் வீழ்ச்சி !
காசுரிக்க ஓர் சூழ்ச்சி !
காசிருந்தால் சூதாட்டம் !
காசிழந்தால் போராட்டம் !

பகலிரவாய் நீர் பாயும் !
பார்த்தாலே குடல் சாயும் !
மகத்தான நீர்வீழ்ச்சி !
மாறான கண்காட்சி !

மின்சக்தி உருவாக்கும் !
மின்வெளிச்சம் நிற மூட்டும் !
வானூர்தி வட்டமிட்டு
வானிருந்து நதி காட்டும் !’

 

குற்றால அருவி !

 

பசுமை மரமுண்டு !
பாடும் குயிலுண்டு !
அசையும் இலையுண்டு !
அத்தனைக்கும் உயிருண்டு !

பட்டப் பகலில் பரிதி ஒளி !
பறவை பாடும் பண்ணின் ஒலி !
எட்டும் இரவில் நிலவின் வெளி !
என்றும் மாறா வண்ண ஒளி !

 

நயாகரா அருவி !

 

நயாகரா நீர்வீழ்ச்சி
நாணயப் படக்காட்சி !
உயிரில்லை !
உணர்வில்லை
ஒப்பனையாய்க் கவர்ந்தாலும் !

நயாகரா காதலர்க்கு !
நாடிவரும் வாணிபர்க்கு !
வயாகரா மானிடர்க்கு !
வாடிக்கை மாதருக்கு !

 

சிற்றருவியா ? பேரருவியா ?

 

டாலர் வாழும் நயாகாரா !
டாலர் ஆளும் நயாகரா !
டாலர் கூடும் நயாகரா !
டாலர் நாடும் நயாகரா !

குபேரச் சாக்கடையில் முங்கிக்
குளிப்பது யார் தற்காலம் ?
குசேலக் குற்றாலம் பொங்கிக்
குளிப்பது நம் பொற்காலம் !

 

***********

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “சிற்றருவி ! பேரருவி !

  1. அருமை! அருமை! ஐயா! இறைவணக்கம் தொடங்கி ஒவ்வொரு வரியையும் ரசித்துப் படித்தேன். கவிதையின் தொடக்கம் முதல் இறுதிவரை சந்தநயம் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.

  2.  பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பர் சச்சிதானந்தம்.

    சிற்றருவி குற்றாலம்
    சிரித்தோடும் ஊரருவி ! 
    கொட்டி முழக்குவது
    நயாகரா பேரருவி !

    சி. ஜெயபாரதன்

  3. குற்றாலத்தினைப் பற்றிய வரிகள் மனத்தைக் கொள்ளை கொண்டன ஜெயபாரதன் ஐயா, மிகவும் அருமை.

    வெள்ளிக் கதிர் எழுமருவி !
    வேகமாய் விழுமருவி !
    துள்ளி வரும் நீரருவி !
    தூங்கி விடும் ஓரருவி !

    ஆன்மீக நாட்டருவி !
    ஆடிவரும் காட்டருவி !
    நான் விழையும் நீரருவி
    நாத எழும் தூயருவி !

    எளிய வரிகளும் வார்த்தைகளும் போதுமே அழகை வர்ணிக்க என்று காண்பித்துள்ளீர்கள்.

  4. தேனருவித் திரையெழுந்து
    வானின்வழி ஒழுகும்
    திருக்குற்றால அருவிகளை,
    வணிகப்பொருளாகி
    வானின்வழி பாயும்
    நயாகராவுடன் ஒப்பிடும் கவிதை
    அருமை…!

  5. அருவிகள்  ஒப்பீடு  கவிதை  கலக்குது 
    அமெரிக்கத் தப்போடு  ஆடம்பரம் வழுக்குது
    இந்திய எழிலின்  சிறப்பினை  உரைக்குது
    சிந்திய தமிழில் உண்மைகள் கிடைக்குது

    அங்கே  டாலர்  வாழ்ந்ததும் எவரால்
    இங்கே  ரூபாய் வீழ்ந்ததும்   எவரால்
    ஆய்வுகள் செய்யென அருவிகள் சிரிக்குது
    அறிந்தால் கயவரைத் தள்ளவும் அழைக்குது

  6. பாராட்டுக்கு நன்றி நண்பர்

    வெள்ளை மாளிகை ஒரு வைர யானை !
    விற்கும் சுதந்திரம் விடுதலை பறித்து !
    கொள்ளை ஆயில் வேண்டி ஈராக் சென்றது !
    குவலய ராஜா ! பெரிய சோதரர் அடிபணி !

    சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.