இப்படியும் சில மனிதர்கள்! – 8

தஞ்​சை ​வெ. ​கோபாலன்

தில்லும் திவானாவும் நெற்குன்றத்திலிருந்து புறப்பட்டு சைதாப்பேட்டையிலிருந்த தங்கள் மகள் வீட்டுக்குச் சென்றார்கள் அல்லவா? அங்கு மகள் வீட்டில் மாடி போர்ஷனில் இவர்கள் இருவரும் தனிக் குடித்தனம் செய்து கொண்டிருந்தார்கள். அந்த வீடு மகளுக்குச் சொந்தமானது. மாடி போர்ஷன் கட்டுவதற்கு தில் பணம் கொடுத்திருந்தார் போலிருக்கிறது. ஆகவே அவர்களே அங்கு குடிபோய்விட்டார்கள். மாடியில் பெற்றோர்களும், கீழ் வீட்டில் மகள் குடும்பமும் இருந்தன. மகளுக்கு மாமனார் மாமியார் ஆகியோரும் இருந்ததால் இவர்கள் தனியாக இருக்க வேண்டியதாக போயிற்று. எனினும் அனேகமாக இரண்டு குடும்பத்துக்கும் மகள் வீட்டில்தான் சாப்பாடு நடக்கும்.

தில் திவானா இருவரும் மகனையும் மருமகளையும் பார்ப்பதற்காக நெற்குன்றம் வருவதில்லை. இந்த நிலையில் மகனுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்புக்காக ஒரு பயிற்சி வகுப்பில் சேர்ந்து ஓராண்டு காலம் படிக்க வேண்டியிருந்தது. அந்த ஒரு வருஷமும் சாமிநாதனின் மகள் நல்ல காலமாக வேலப்பன்சாவடியில் ஒரு கல்லூரியில் வேலை செய்து வந்ததால் குடும்பத்தை ஓரளவு நன்றாக நடத்த முடிந்தது. மேலும் அவளுக்கு நிறைய டியூஷன் படிக்க மாணவ மாணவியர் வந்தனர். அது ஏதோ ஒரு குருகுலம் போல சதாகாலமும் மாணவர்கள் கூட்டம் மொய்த்துக் கொண்டிருக்கும். அதனால் அவசரமாக கடைக்குப் போகவேண்டுமென்றாலோ, அல்லது யாராவது விருந்தினர் வருவது, பேருந்துக்குக் கொண்டு விடுவது போன்றவற்றுக்கு இவர்கள் உதவிகரமாக இருந்தனர்.

பயிற்சி முடிந்து தில்லின் மகன் அமெரிக்காவுக்குச் செல்லத் தயாரானார். மனைவி வேலையில் இருந்ததால் அவளுக்குத் துணையாக சைதாப்பேட்டையிலிருந்த பெற்றோர்களை வந்து பார்த்துக் கொள்ள முடியுமா என்று கேட்டார். ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர். சைதாப்பேட்டைதான் எங்களுக்குச் சரியாக இருக்கும். நெற்குன்றத்துக்கு வருவது என்றால் வெளியூர் பயணம் போல இருக்கிறது என்று மறுத்துவிட்டனர். சரி இவர்களை எதிர்பார்த்தால் உதவ மாட்டார்கள், நான் மட்டும் முதலில் போய் அங்கு வீடு பார்த்துக் கொண்டு உன்னையும் வரவழைத்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு தில்லின் மகன் புறப்பட்டு விட்டார்.

சாமிநாதனும் அவன் மனைவி, மகன் ஆகியோர் அடிக்கடி சென்று மகளைப் பார்த்துக் கொண்டனர். அமெரிக்காவில் நியு ஜெர்சி மாகாணத்தில் வேலையில் அமர்ந்த மகன் ஆறு மாத காலத்துக்குள் மனைவியையும் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று விட்டார். அவர்கள் அமெரிக்கா போனதும் நெற்குன்றம் வீடு காலியாக இருக்கிறது, நீங்கள் இங்கு வந்து தங்கிக் கொள்ளுங்கள் என்று கேட்டதற்கும் தில் திவானா மறுத்து விட்டனர். சில காலம் வீட்டை வாடகைக்கு விட்டு வைத்திருந்தனர். ஆனால் வீட்டை அவர்கள் சரியாக வைத்துக் கொள்ளவில்லை. ஆகையால் வீட்டை விலைபேசி விற்றுவிட்டனர். எதிர் வீட்டில் இருந்த மகாலக்ஷ்மியின் உறவினர் அந்த வீட்டை வாங்கிக் கொண்டனர்.

அமெரிக்கா சென்ற சில காலத்துக்குள் அவர்கள் சாமிநாதனையும் அவன் மனைவியையும் நியு ஜெர்சிக்கு வரும்படி கேட்டுக் கொண்டனர். இவனும் ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு அமெரிக்காவுக்கு மனைவியையும் அழைத்துக் கொண்டு சென்றான். இரண்டு மாதம் அங்கு தங்கியிருந்த போது இவர்கள் இருவரையும் பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று காட்டினார்கள். வட அமெரிக்காவில் கனடா எல்லையில் இருந்த நயாகரா நீர்வீழ்ச்சிக்குச் சென்றது இவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. தன் மகன் அவனுடைய மாமனார் மாமியாரை மட்டும் அமெரிக்காவுக்குக் கூட்டிச் சென்று பல இடங்களுக்கும் அழைத்துப் போனது தில்லுக்கும் திவானாவுக்கும் வயிற்றில் தீயை மூட்டிவிட்டது.

தாங்களும் அமெரிக்காவுக்கு வரவேண்டும் தங்கள் இரண்டு பேருக்கும் டிக்கெட்டுகள் வாங்கி அனுப்பச் சொல்லி கேட்டுவிட்டு, சென்னை அமெரிக்கன் கான்சலேட் அலுவலகத்துக்குப் போய் தங்களுக்கு விசாவுக்கும் ஏற்பாடு செய்து கொண்டார்கள். விசாவுக்காக அவர்கள் மகனுடைய கடிதம், வங்கி பாஸ் புத்தகத்தின் நகல் ஆகியவற்றைக் கொண்டு போய் கொடுத்து அலைந்து திரிந்து விசாவை வாங்கிவிட்டார்கள். ஒரு நல்ல நாளில் தில்லும் திவானாவும் முதன் முறையாக வான ஊர்தியில் அமெரிக்காவுக்குப் பயணமானார்கள்.

அமெரிக்கா சென்றடைந்த இருவருக்கும் அவ்வூரின் குளிர் பொறுக்கவில்லை. மேலும் தில் தனக்கு சந்தி, ஜபம் இவையெல்லாம் செய்வதற்கு இங்கு போதிய வசதி இல்லை. இங்கெல்லாம் மடி தீட்டு ஒருவரும் பார்ப்பதில்லை. இப்படி பல குறைகளைச் சொல்லி ஒரு மாதத்தில் தான் ஊர் திரும்புவதாகச் சொல்லி இருவரும் இந்தியா திரும்பி விட்டனர். இவர்களுக்குத் தெரியும் அங்கு இவர்களுக்குச் சரிவராது என்று, என்றாலும் கூட தன் பிள்ளை மாமனாரை வரவழைத்து விருந்தினராக உபசரித்தது இவர்கள் இருவருக்கும் பொறுக்க வில்லை. வீம்புக்குச் சென்று திரும்பி விட்டனர். பாவம், மகனுக்கு அனாவசியமான செலவு. ஆனாலும் தில் சென்னைக்கு விரைவில் திரும்புவதற்கு வேறொரு காரணமும் இருந்திருக்கிறது. அது மற்றவர்களுக்கு அப்போது புரியவில்லை.

தில் சென்னையில் ஒரு பெரிய கம்பெனியில் வேலையில் இருந்த போது தனது தூரத்து உறவுப் பெண்மணி ஒருவருக்கு அதே கம்பெனியில் வேலை வாங்கிக் கொடுத்திருந்தார். அப்படி அந்தப் பெண் தன் கூட வேலை செய்து வந்த நாளில் இருவருக்கும் நெருக்கம் அதிகரித்து ஒரு நல்ல நாளில் திருநீர்மலைக்குச் சென்று அவளுக்கும் தில்லுக்கும் பொதுவான சில உறவினர்களை அழைத்துச்சென்று மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டு விட்டனர். இது மிகவும் ரகசியமாக நடந்ததால் அவரது முதல் மனைவியான திவானாவுக்கு இந்த விவரங்கள் தெரிந்திருக்க வில்லை. பொதுவான உறவினர்களும் தங்களுக்கு எதுவும் தெரியாதது போல கடப்பரையை விழுங்கியவர்களைப் போல வாயைத் திறக்காமல் இருந்து விட்டனர். புது திருமணமான பெண்ணுக்குப் போரூரில் தனியாக இடம் பார்த்து குடிவைத்து விட்டார் தில். வாரத்தில் சில நாட்கள் அங்கும் சில நாட்கள் திவானாவுடனும் குடித்தனம் செய்யத் தொடங்கியிருந்தார்.

இரண்டு பெண்களும், ஒரு மகனும் இருந்த நிலையில் தில் இப்படியொரு செயலைச் செய்திருந்தது பிள்ளைகளுக்கு பலகாலம் கழித்துத்தான் தெரிய வந்தது. இதன் காரணமாக தில்லோடு அவரது மகள், மகன் ஆகியோர் கடுமையாக சண்டையிட்டாலும், திவானா மட்டும் அதீதமான பதிபக்தி காரணமாக அதை அவ்வளவு தீவிரமாக எதிர்க்கவில்லை. மேலும் இதனால் திவானா தன் பதி மீது வைத்திருந்த அன்பு, இல்லை இல்லை அப்படிச் சொல்லக்கூடாது, பக்தி எல்லை கடந்திருந்தது. எனவே அவர் செய்யும் தவறுகளைக் கூட தன் மக்களிடம் ஏதாவது சப்பைக்கட்டுக் கட்டி சமாதானம் செய்துவிடுவதோடு, தானும் சமாதானமாகிவிட்டாள். இப்படி இரு பெண்டாட்டிக்காரராக தில் இருப்பது மெல்ல மெல்ல மற்ற உறவினர்களுக்கும் பரவியிருந்தாலும், அவர்கள் இரண்டு கட்சியாகப் பிரிந்து தில் சார்பில் பரிவு காட்டுபவர்களாகச் சிலரும், அதை எதிர்க்க திராணியின்றி சிலரும் இருந்தனர். ஆனாலும் சாமிநாதனின் மாப்பிள்ளையும், அவரது இரு சகோதரிகளும் இதில் மிகவும் உறுதியாக இருந்து தில்லின் இரண்டாவது திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இவர்கள் சம்மதம் இருக்கிறதோ இல்லையோ, பல ஆண்டுகள் தில் தனது இரண்டாவது மனைவியோடு அன்போடு வாழ்க்கை நடத்தி அங்கும் ஒரு மகனை ஈன்றெடுத்து அவர்களுக்குச் சொந்தமாக ஒரு வீட்டையும் வாங்கிக் கொடுத்து திறம்பட இரண்டு வீட்டையும் பாலன்ஸ்டாக நடத்தி வந்ததைப் பாராட்டியே ஆக வேண்டும்.

இப்போது தில் ஏன் அப்படி அடித்துப் பிடித்துக் கொண்டு அமெரிக்காவிலிருந்து திரும்பினார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறதல்லவா. இந்த நிலையில் தில் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அவருக்கு சஷ்டியப்த பூர்த்தி நடைபெறுவதாக இருந்தது. முதல் மனைவியின் மகனுடன் உறவு கெட்டிருந்த நிலையில் தன் இரண்டாம் மனைவியின் மகனை விட்டு ஒரு பத்திரிகை அடித்து தனக்கு மணிவிழா கொண்டாட ஏற்பாடு செய்தார். இதனை அறிந்து அப்போது நெற்குன்றம் வீட்டிலிருந்த சாமினாதனின் மருமகன் ஒரு வழக்கறிஞரை விட்டு நோட்டீஸ் விட்டு இரண்டாம் திருமணம் செல்லுபடியாகாது. அந்த மகனுக்கு எந்த சட்டப்படியான உரிமையும் கிடையாது. அவன் தில்லின் சஷ்டியப்த பூர்த்தி விழாவைக் கொண்டாட அனுமதிக்கக்கூடாது என்று நோட்டீஸ் விட்டுவிட்டார். அவர்கள் தங்களுடைய வக்கீலை கலந்து ஆலோசித்துவிட்டு அந்த விழாவை நிறுத்தி வைத்து விட்டனர்.

இப்போது அமெரிக்காவில் இருக்கும் தில்லின் மகனும் மருமகளும் பல ஆண்டுகளுக்கு முன்பு தில் தனது சஷ்டியப்த பூர்த்தியைக் கொண்டாட முடியாமல் போய்விட்டது; அதற்குத் தனது வக்கீல் நோட்டீஸ்தான் காரணம் என்பதால் இப்போது தங்கள் செலவில் அவருக்கும் திவானாவுக்கும் தில்லுக்கும் சதாபிஷேகம் எனும் எண்பதாவது ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடலாம் என்று முடிவு செய்தார்கள். அது குறித்து தில்லுக்கு செய்தி கொடுத்து அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்து அதற்கான ஏற்பாடுகளை சென்னையில் தானே செய்துவிடுவதாகவும், அதற்கான பணத்தைத் தனக்கு அனுப்பி விடுமாறும் தில் கேட்டுக் கொண்டார். தில்லின் மனைவி அதற்குள் விழாவுக்கான பட்ஜெட்டையும் போட்டுவிட்டாள். உறவினர்கள் எல்லோருக்கும் துணிமணிகள், மண்டபம், சாப்பாடு போன்ற செலவுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை முன்னதாக அனுப்பும்படி மகனுக்கு திவானா கேட்டாள். மகன் அவர்கள் சொல்லும் திட்டத்தைப் பார்த்து பயந்து போனார்.

மாப்பிள்ளை தன் மாமனாரான என் நண்பன் சாமிநாதனிடம் கேட்டார் என்ன செய்யலாம் என்று. சாமிநாதன் சொன்னார் அவர்கள் பட்ஜெட்டில் கால்பகுதிக்குள் இந்த விழாவை மிகவும் சிறப்பாகச் செய்ய முடியும் என்றும், அதை சென்னையில் இல்லாமல் ​வேறொரு சிறப்பு வாய்ந்த நகருக்கு வெளியேயுள்ள ஆலயத்தில் தனது நண்பர்கள் மூலம் செய்து விட முடியும் என்று சொல்லவே, தில்லின் மகன் அப்படியே ஏற்பாடுகளைச் செய்யலானார். தில்லுக்கு போன் செய்து நான் எல்லா ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்து விடுகிறேன். நான் சொல்லுமிடத்துக்கு நீங்கள் வந்து விழாவை ஏற்றுக் கொண்டு போனால் போதும் என்று சொல்லிவிட்டார். இதனால் தில்லுக்கும் திவானாவுக்கும் அதிர்ச்சி, மகன் மீது அளவிடமுடியாத கோபம். இதற்கெல்லாம் சாமிநாதனின் மகள்தான் காரணம் என்று அவள் மீது அவர்களுக்கு தீராத ஆத்திரம் ஏற்பட்டது.

தாங்கள் கேட்டபடி தில்லின் மகன் பணம் கொடுக்காததல் திவானா அடிக்கடி தன் மருமகளுக்குப் போன் செய்து இதுபோன்ற விசேஷங்கள் என்றால் எல்லா உறவுக்காரர்களும் வருவார்கள், அத்தனை பேருக்கும் ஆண்களுக்கு வேஷ்டி துண்டும், பெண்களுக்குப் புடவையும் வாங்கித் தருவதோடு தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் புதிய உடைகள் வாங்க வேண்டும். அதற்காக தேவையான அளவு பணம் கொடுத்தால்தான் சதாபிஷேகம் சிறப்பாக அமையும் என்று மீண்டும் மீண்டும் வற்புறுத்தினாள். மருமகள் தன் மாமியாரிடம் இதையெல்லாம் உங்கள் மகனிடம் பேசிக்கொள்ளுங்கள் அவர்தான் இவற்றைக் கவனித்துக் கொள்ளவும் பணம் செலவு செய்யவும் செய்கிறார், தனக்கு இதில் ஒரு பங்கும் இல்லை. அவர் சொல்வதைச் செய்வதுதான் தன் கடமை என்று அவர்களுக்கும் தனது பதிபக்தியைத் தெளிவாக எடுத்துக் கூறினாள். இது என்ன, இவள் தன்னைக் காட்டிலும் பதிபக்தியோடு இருக்கிறாளே, நிஜமாகவேதானா அல்லது தனக்கு ஏட்டிக்குப் போட்டியாக இப்படிப் பேசுகிறாளா என்று திவானாவுக்குக் குழப்பம்.

இறுதியாக தில்லும் திவானாவும் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்த போதும் அவர்கள் விரும்பியபடி எதுவும் நடக்கவில்லை. நண்பன் சாமிநாதன் என்னுடைய உதவியை நாடினான். எனக்குப் பழக்கமான என்னுடைய ஊரையடுத்த மிகப் பிரபலமான ஓர் சிவத் தலத்தில் அவ்வூர் ஆலய விழா மண்டபத்தில் ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தேன். அங்கு எனக்கு நிறைய நண்பர்கள் இருந்ததால் எல்லா ஏற்பாடுகளும் சிறப்பாக நடந்தது. அவ்வூர் ஆலயத்தில் சதாபிஷேகம் செய்துகொள்ள ஏற்ற இடம் என்று அவ்வூர் தலபுராணம் கூறுவதையும் எடுத்துச் சொல்லி, அது குறித்த ஒரு சிறு புத்தகத்தையும் வெளியிட ஏற்பாடுகள் நடந்தன. இவை பற்றிய எந்த செய்தியையும் தில் போன் மூலமாகக் கூட சாமிநாதனிடம் கேட்கவில்லை; சாமிநாதனும் என்ன ஏற்பாடுகள் செய்கிறோம் என்று அவரோடு பேசவில்லை. பேச்சு வார்த்தை முழுவதும் சாமிநாதனுக்கும் மருமகனுக்கும் இடையேதான் நடந்தது. நீங்கள் யார் ஆலோசனைகளையும் கேட்க வேண்டாம். நீங்கள் விழாவைச் சிறப்பாக நடத்தக் கூடியவர், உங்கள் நண்பரும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார் என்று எனக்குத் தெரியும். ஆகவே இந்த விழாவை நான் சிறப்பாக நடத்தி முடித்து விட்டால் என் கடமை முடிந்து விடும். அவர்கள் அதற்கு மேல் என்னிடம் எதையும் எதிர் பார்க்கமுடியாது. ஏனென்றால், பல லட்சம் பெறுமான அவர்களது மாம்பலம் வீட்டை விற்ற போது என்னிடம் ஒரு வார்த்தைகூட கேட்கவில்லை. விற்ற பணத்தில் ஒரு பைசா கூட என் கண்களில் காட்டவில்லை. அவர் மனமுவந்து கொண்டு வந்து கொடுத்த சிறு தொகைக்கான முதலீட்டுப் பத்திரத்தைத் தூக்கி எறிந்து விட்டேன், என் கடமை முடிந்தது என்றார் அவர்.

சாமிநாதனின் மனச்சாந்திக்காகவும், அவன் மருமகனின் நோக்கம் நிறைவேற வேண்டியும் நான் இந்த விழா குறித்து சிறப்பு கவனம் செலுத்தி மிக அற்புதமாக ஏற்பாடுகளைச் செய்தேன். இதில் ஏதாவது குறை காண வேண்டுமென்று விடாப்பிடியாக தில்லும், திவானாவும், அவரது நெருங்கிய உறவினர்கள் சிலரும் காத்துக் கொண்டிருந்தனர். நகரத்தை விட்டு வெகு தூரத்தில் ஒரு கிராமக் கோயிலில் நடந்தால் அங்கு யார் வருவார்கள்? என்றார்கள். அப்படி வந்தாலும் அவர்கள் தங்குவதற்கு அங்கு வசதியான இடம் இருக்கிறதா. குளிக்கவும் மற்ற தேவைகளுக்கும் அங்கு வசதிகள் எப்படி? என்றெல்லாம் கேள்விக் கணைகள் பிறந்தன. எல்லாம் இருக்கும் வசதிக்குள் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். அங்கு ஒருநாள் தங்க இத்தனை கேள்விகளா, என்னவோ வாழ்நாள் முழுவதும் அங்கேயே இருக்கப்போகிறோம் என்கிற மாதிரி என்று அவர்களுக்குப் பதில் சொல்லியாயிற்று.

இருந்தாலும் அவர்களுக்கு எந்த விவரங்களையும் தெரியாமலே அவர்கள் எல்லாம் தங்குவதற்கு ஒரு திருமண மண்டபம், அங்கேயே இரண்டு நாட்கள் டிபன், காபி, சாப்பாடு எல்லாவற்றுக்கும் சமையல்காரர்களை நியமித்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திருமண மண்டபத்தில் நிறைய பேர் தங்க முடியுமா. எங்கள் கம்பெனியிலிருந்து பெரிய உத்தியோகஸ்தர்கள் எல்லாரும் காரில் வருவார்கள். அவர்களுக்கு எப்படி ஏற்பாடு என்றெல்லாம் கேள்வி பிறந்தது. அவர்கள் விழாவன்று காலையில் வந்துவிட்டு பகல் உணவுக்குப் பிறகு போய்விடுவார்கள். இங்கேயேவா தங்கப் போகிறார்கள். அப்படி அவர்கள் ஓரிரு நாட்கள் தங்குவதாயிருந்தால் அதற்கும் நாங்கள் ஏற்பாடு செய்து விடுவோம் என்று சாமிநாதன் கூறிவிட்டான்.

விழாவுக்கு முதல் வாரம் சாமிநாதனின் மகள் அமெரிக்காவிலிருந்து வந்து சேர்ந்தாள். நேராக அவள் சாமிநாதன் வீட்டுக்கு வந்து விட்டாள். பின்னர் அங்கிருந்து சைதாப்பேட்டை போய் மாமனார் மாமியாரைப் பார்த்துவிட்டு திரும்ப வந்து விட்டாள். அவளிடம் செய்யப்பட்டிருக்கிற ஏற்பாடுகள் குறித்து சொல்லப்பட்டது. அவளுக்கும் அவள் கணவருக்குத் தெரிவித்த போது அவருக்கும் இதில் முழு திருப்தி ஏற்பட்டது. திங்கட்கிழமை சதாபிஷேகம். முதல்நாள் ஞாயிறன்று ருத்ர ஏகாதசி எனும் ஜபம் முதலானவை. இருந்தது. இவர்கள் வெள்ளிக்கிழமையே அவ்வூருக்கு வந்து விட்டார்கள். அவர்களை திருமண மண்டபத்தில் தங்க வைத்தோம். அங்கு சாப்பாடு முதலான ஏற்பாடுகள் மிக அருமையாக இருந்தது. குறை ஒன்றும் சொல்ல முடியவில்லை. ஆனால் திவானாவின் வழக்கம் போல சமையல் காரர்களிடம் சென்று தனக்கும் தில்லுக்கும் வெங்காயம், புடலங்காய் சேர்க்கக்கூடாது சாப்பட்டில் அவைகளை நீக்கிவிடுங்கள் என்று சொன்னாள். நான் சென்று, நீங்கள் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ள வேண்டாம். அவர்களுக்கு வேண்டுமானால் அவைகளை பரிமாற வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.

ஞாயிறன்று ருத்ர ஏகாதசி தொடங்கியது. தான் காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருப்பதால் தன்னால் மணையில் கீழே அமர முடியாது, நாற்காலியில்தான் உட்காருவேன், கொண்டுவா நாற்காலிகளை என்றார் தில். உடனே எங்கள் நண்பர்கள் ஓடிப்போய் சில நாற்காலிகளை வாடகைக்கு வாங்கி வந்து கோயில் மண்டபத்தில் போட்டார்கள். மண்டபம் மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு தூணிலும் குழல் விழக்குகள் எரிந்தன. கோயில் பதாகைகள் வாயிலிலும் மண்டபத்தின் நுழைவுப் பாதையிலும் கட்டப்பட்டிருந்தன. இதையெல்லாம் பார்க்கப் பார்க்க இது ஏது குறையொன்றும் சொல்லமுடியாது போல இருக்கிறதே என்று தில்லும் திவானாவும் கவலைப் பட்டனர்.

மறுநாள் நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடந்தேறின. கஜ பூஜை, கோ பூஜை என்று யானைக்கும், பசுவுக்கும் பூஜைகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன. ஆலய மரியாதைகள் இவர்களுக்குக் கொடுக்கப்பட்டன. கோயில் நாதஸ்வர வித்வான்கள் வந்திருந்து நாதஸ்வர இசை எழுப்பினார்கள். புகைப்படங்களும், வீடியோ படங்களும் எடுக்கப்பட்டன. இவர்கள் உறவினர்கள் ஐம்பது பேர் இருக்குமென்றால், எங்கள் நண்பர்கள் வகையில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் இருந்தனர். எங்கள் நண்பர்கள் வீட்டில் குளிர்சாதன வசதி இருந்த விடங்களில் உறவினர்கள் சிலர் படுக்க வைக்கப்பட்டனர். கல்யாண மண்டபத்துக்கு அருகில் ஒரு சங்கத்தின் கட்டடம், அதையும் திறக்கச்சொல்லி அங்கும் சிலர் தங்க வைக்கப்பட்டனர். அப்படி அங்கெல்லாம் தங்கியவர்கள் என்னிடமும் சாமிநாதனிடமும் ஏகமாகப் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தனர். இதையெல்லாம் பார்த்து தில் திவானா வாயடைத்துப் போய்விட்டனர்.

அந்த மாவட்டத்திலேயே சிறந்த வேத பண்டிதர்கள் வந்து விழாவை நடத்தி வைத்தனர். மிகச் சிறந்த சமையல்காரர்கள் முதல் நாள் தொடங்கி விழாவின் மதியம் வரை சுவையான சாப்பாட்டை பரிமாறி அசர வைத்துவிட்டனர். இப்படி அவர்கள் எதிர்பார்ப்பையும் மீறி, இப்படியும் நடத்த முடியுமா என்று அதிசயிக்கத் தக்க வகையில் சதாபிஷேகத்தை சாமிநாதன் முடித்து வைத்தார். எல்லோரும் ஊருக்குத் திரும்பி விட்டனர். தில் திவானா இருவரும் மட்டும் விழாவில் தங்களுக்கு பரிசாக வந்த வேஷ்டிகள், புடவைகள் இவற்றைப் பிரித்து பெட்டிக்குள் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் கொண்டு வந்த பெட்டிகளில் இடம் போதாததால் சாமிநாதனிடம் கேட்டுப் பெட்டி, பை முதலானவற்றை வாங்கி அதிலும் நிரப்பிக் கொண்டனர். அவர்கள் தனி அறையில் இதையெல்லாம் பெட்டிக்குள் அடைத்துக் கொண்டிருக்கும் போது சாமிநாதன் எதேச்சையாக அந்த அறைக்குள் சென்று விட்டான்.

அப்போதுதான் தில் மனம் குளிர்ந்து, சம்பந்தி, விழாவை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தி விட்டீர்கள். இவ்வளவு அருமையாக நகரத்தில் எங்களால் ஏற்பாடு செய்ய முடியாது. என் மைத்துனன் மகன் கூட சொன்னான், கஜ பூஜைக்கும், கோ பூஜைக்கும் சென்னையில் எங்கே போவது, இங்கு இதையெல்லாம் கண்குளிர பார்க்கும் வாய்ப்பும், கோயிலில் தரிசிக்கும் வாய்ப்பும் ஒருசேர கிடைத்ததற்கு பாக்கியம் செய்திருக்கிறோம் என்றான். உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை என்று சொல்லிவிட்டு, திவானாவை நோக்கி, ஏய்! அந்த வேஷ்டி துண்டை எடு என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே சாமிநாதன் காதில் வாங்காதது போல வெளியே வந்து விட்டான். அங்கு திவானா என்ன ஜாடை காண்பித்தாளோ தெரியவில்லை தில்லும் அதன் பிறகு வேஷ்டி துண்டு சாமிநாதனுக்குக் கொடுப்பது பற்றி வாயையே திறக்கவில்லை. இவனுக்கும் கவலையில்லை. அவர்கள் கொடுக்கக்கூடாதே என்றுதான் வேண்டிக் கொண்டிருந்தான்.

எல்லாம் முடிந்து அவரவர் வீடுகளுக்குச் சென்று விட்டனர். தில் தன் மகனிடம் கேட்டார். நீ எங்களை கவனிப்பதில்லை. மாதாமாதம் எங்களுக்குப் பணம் அனுப்ப வேண்டும் என்றார். திவானா மகனிடமும் மருமகளிடமும், தங்களுக்கு வயது ஆகிவிட்டதால் இனி எங்களால் தனியாக இருக்க முடியாது. ஆகையால் நீ மட்டும் அமெரிக்காவுக்குப் போ, உன் மனைவியை இங்கு விட்டுவிட்டுப் போ. எங்களைப் பார்த்துக் கொள்ள வேறு யார் இருக்கிறார்கள். இவள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூசாமல் கேட்டார்கள்.

மகனுக்கு அதுவரை அடக்கி வைத்திருந்த கோபம் வெடித்து வெளிவந்தது. ஆதிமுதல் அவர்கள் நடத்தைகளையெல்லாம் சுட்டிக் காட்டிப் பேசினார். மாம்பலம் வீட்டை பல லட்சம் ரூபாய்க்கு விற்ற பணம் என்ன ஆகியது. அது விற்பது குறித்து எனக்கு ஏதாவது தகவலாவது கொடுத்தீர்களா. உங்கள் பணமெல்லாம் என்ன ஆயிற்று. அதற்கெல்லாம் கணக்கு எங்கே. உங்கள் பணமெல்லாம், வீடு விற்ற பணமெல்லாம் செலவாகி யிருந்தால் எந்த வகையில் செலவு ஆனது எல்லாவற்றையும் எழுதிக் கொடுங்கள். உங்களுக்குத் தேவையென்றால் நான் மாதாமாதம் அனுப்புகிறேன். என் மனைவியை இங்கே உங்களுக்கு சேவை செய்ய விட்டுவிட்டுப் போ என்கிறீர்களே, அங்கு வெளிநாட்டில் நான் சாப்பாடுக்கு என்ன செய்வேன். இங்கு உங்களுக்கு அண்ணன் பிள்ளை, அண்ணன் பெண், அத்தான், அம்மாஞ்சி என்று ஊர் முழுவதும் உறவுக் காரர்கள். அங்கு எனக்கு தலைவலி என்றால்கூட கவனிக்க யார் இருக்கிறார்கள். இதுவரை அவளா உங்களைப் பார்த்துக் கொண்டாள். இனி அந்தப் பேச்சையே எடுக்காதீர்கள். அவளுக்கும்தான் உடல்நலம் இல்லை. அவள் தன்னைப் பார்த்துக் கொள்வாளா உங்களுக்கு சேவை செய்வாளா என்றார்.

நீ செய்வது பாவமில்லையா என்றார் தில். ஆம் பாவம் தான். ஆனால் அந்த பாவம் தீருவதற்காக நான் பல தர்ம காரியங்களைச் செய்து கொண்டு வருகிறேன். நீங்கள் நான் செய்ய வேண்டிய உதவிகளுக்கு அருகதை உள்ளவர்களாக இருந்திருந்தால் உங்களுக்குச் செய்திருக்கலாம். நீங்கள் அந்த அருகதையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. உங்களுக்கு நான் உதவி செய்வது என்பது தேவையில்லாதது. அது பாவம் என்றால் அந்தப் பாவம் தீர நான் பல தான தர்மங்களைச் செய்து கொண்டுதான் இருக்கிறேன். அதுவே போதும் என்றார். தில்லுக்கும் திவானாவுக்கும் பேசுவதற்கு வாய் இல்லை. அதுவரை அவர் பக்கம் நின்று மகன் மருமகளை கரித்துக் கொட்டியவர்கள் மெதுவாக ஒதுங்கிக் கொண்டனர். ஒருவருக்கும் பேச வாய் இல்லை. ஒரு வழியாகத் தங்கள் கடமைகளைச் செவ்வனே செய்து விட்டு ஊருக்குப் புறப்பட மகனும் மருமகளும் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.

அவர்கள் புறப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்பிருந்து தில் வீட்டில் காணப்படவில்லை. திவானாவிடம் கேட்டதற்கு அவர் அங்கே போயிருப்பார் என்றாள். எங்கே என்று சொல்லவில்லை. மகனும் புரிந்து கொண்டு கேட்கவில்லை. இருவரும் விமான நிலையத்துக்குக் கிளம்பும் வரையில் தில் வீடு திரும்பவில்லை. ஒரு வழியாக இங்கு விழாவுக்காகச் செலவழித்த ஒரு வார காலத்தை ஈடுகட்டும் வகையில் போரூரில் தன் துணைவி வீட்டில் கழித்துவிட்டு வீடு திரும்பியதாக அமெரிக்கா திரும்பிய மகனுக்குத் தகவல் கிடைத்தது. அப்பாடா! இனி தில்லின் தொல்லையும் , திவானாவின் தொந்தரவும் இருக்காது என்று அமைதி அடைந்தனர்.

முற்றும்

1 thought on “இப்படியும் சில மனிதர்கள்! – 8

  1. as the story goes it is passable; you have covered the human emotions in very broad strokes. so many characters left dangling. it is wee better than a Rajesh Kumar monthly novels; thanks.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க