Featuredஇலக்கியம்கட்டுரைகள்

பட்டினத்தடிகளின் பாடல்கள் – 6ம் பகுதி

தஞ்​சை ​வெ. ​கோபாலன்

வேதத்தின் உட்பொருள் மண்ணாசை மங்கையை விட்டுவிடப்
போதித்த வன்மொழி கேட்டிலையோ செய்த புண்ணியத்தான்
ஆதித்தன் சந்திரன் போலே வெளிச்சம தாம் பொழுது
காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே. 1.

பெரியோர்கள் நமக்கு எத்தனையோ உபதேசங்களைச் சொல்லி வைத்தார்கள்; எதைத்தான் கேட்டு அதன் வழி நடந்தோம்? நான்கு வேதங்கள் கூறுகின்ற நற்கருத்துக்களைக் கேட்டுப் பின்பற்றினோமா? இல்லை, மண்ணாசையை, பெண்மீதான ஆசையை விட்டுவிடு என்றார்கள் சிவ நேசச் செல்வர்கள், அவர்கள் சொல்லியபடியாவது அவற்றை விட்டுத் தொலைத்தோமா? இல்லையே! ஏதோ நல்ல காலம், நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த புண்ணியங்களின் பலனாக நம்முடைய ஆன்மா இவ்வுடலை விட்டு நீங்கிச் செல்லுங்கால், சூரியனும் சந்திரனும் போல ஒளிபடைத்ததாக வெளியேறும், அப்படி வெளியேறிய ஆன்மா செல்ல வேண்டிய மார்க்கத்தில் வேறெதுவும், ஒரு காதற்ற ஊசியும் கூட அதன் கூட வராது என்பதை உணர்வாயாக.

மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் தன் வாயில் மட்டே
இனமான சுற்றம் மயான மட்டே, வழிக்கேது துணை
தினையா மளவு எள் அளவாகினும் முன்பு செய்த தவம்
தனை ஆளவென்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே. 2.

ஒருவன் வாழ்ந்து முடிந்து இறந்து போகும்போது, அவனோடு நெடுங்காலம் வாழ்ந்த அவன் மனைவியும், அவனுடைய பிள்ளை குட்டிகளும், அவன் பாடுபட்டுத் தேடிச் சேர்த்து வைத்த செல்வமும், இவை அனைத்தும் வீடு வாயில் வரையிலும் தான் கூட வரும். வாசலைத் தாண்டிவிட்டால் அவனுடைய இனத்தார், உறவினர், நண்பர்கள் இவர்கள் எல்லாம் மயானம் மட்டும் வருவர். இதைத் தாண்டி அவன் ஆன்மாவானது உடலைவிட்டுப் பிரிந்து தனிவழி போகும்போது அது கூட வருவோர் எவருமின்றி தனித்தே போகுமே, வாழ்ந்தபோது இருந்த மனைவி, மக்கள், உறவு, நட்பு இவர்களில் எவரும் அப்போது உடன் வருவதில்லையே. அதனால்தான் வாழுகின்ற காலத்தில் ஒரு சிறு தினை அளவாவது, அல்லது எள் அளவிலாவது முன்பு நல்ல காரியம், தர்ம காரியம் செய்திருந்தால் அதன் பலன்கள் அப்போது துணை வரும், ஆன்மாவும் சிவலோகம் சென்றடையும், ஆம்! இது நிச்சயம்.

அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே விழியம் பொழுக
மெத்திய மாதரும் வீதி மட்டே, விம்மி விம்மி யிரு
கைத்தல மேல் வைத்து அழும் மைந்தரும் சுடுகாடுமட்டே
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே. 3.

பாடுபட்டுத் தேடிய செல்வமும், செறுக்கான வாழ்வும் வீட்டோடு சரி; கண்களில் கண்ணீர் ஆறாய்ப் பெருக ஓவென கட்டி அழும் மனைவி முதலான வீட்டுப் பெண்கள் வீட்டின் வாசலோடு சரி; இரு கரங்களைத் தலையில் தாங்கிக் கொண்டு விம்மி அழும் பிள்ளைகள் சுடுகாட்டுக்கு வந்து எரியேற்றுவதோடு சரி; அப்படியானால் நீ இறந்த பின் உன் ஆன்மா தனிவழிச் செல்லும்போது துணைக்கென்று யார் வருவர்? அப்போது கூட வரக்கூடியவை நீ செய்த புண்ணியங்களும் பாவங்களும் தான். பலன்களும் பண்ணிய பாவ புண்ணியங்களுக்கேற்ப அமைந்திடும்.

சீதப் பனிக்கு உண்டு சிக்கெனக் கந்தை, தினம் பசித்தால்
நீ துய்க்கச் சோறு மனைதோறும் உண்டு, நினைவெழுந்தால்
வீதிக்குள் நல்ல விலை மாதருண்டு இந்த மேதினியில்
ஏதுக்கு நீ சலித்தாய் மனமே யென்றும் புண்படவே. 4.

பனிக் காலத்தில் கடுமையான குளிர் அடிக்கும்போது கதகதப்பாக இருக்க நிறைய கந்தல்கள் உண்டு; தினமும் பசியெடுக்கும் போதெல்லாம் உனக்குப் பசியாற வீடுதோறும் சோறு உண்டு; காம உணர்வு மனதில் எழுமானால் வீதிகளில் பல விலைமாதர்கள் உண்டு; அப்படி நினைத்ததெல்லாம் கிடைக்க மார்க்கம் இருக்கையில் எதற்காக மனம் வருந்தி சலிப்புறுகிறாய்?

ஆறு உண்டு, தோப்பு உண்டு, அணி வீதி அம்பலம்தானும் உண்டு
நீறுண்டு கந்தை நெடுங் கோவணமுண்டு நித்த நித்தம்
மாறுண்டு உலாவி மயங்கு நெஞ்சே மனைதோறும் சென்று
சோறுண்டு தூங்கிப் பின் சும்மாயிருக்கச் சுகமுண்டே. 5.

உறுதியான நிலையின்றி சஞ்சலத்தால் உலவி பேதலிக்கும் மனமே! உடலைத் தூய்மை செய்து கொள்ள நதிகள் இருக்கின்றன; வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பி களைப்பு தீர ஓய்வெடுக்க பசுமையான நல்ல தோப்புகள் இருக்கின்றன; அங்கு மன நிறைவோடு உலாவி வர இடமும் உண்டு; அழகழகான வீதிகளும், வீதிதோறும் அற்புதமான வீடுகளும் இருக்கின்றன; மக்கள் கூடியிருக்க பொதுவிடங்களும் இருக்கின்றன; நெற்றியில் ஐந்தெழுத்தோதி பூசிக்கொள்ள திருநீறும் இருக்கிறது; இடையில் அணிந்திட கந்தைத் துணியும் கெளபீனமும் உண்டு; போதாதற்கு வீடுவீடாகச் சென்று பிட்சை பாத்திரம் ஏந்தி அதில் கிடைக்கும் உணவை உண்டு, உண்ட களைப்பு தீர் நன்கு படுத்துறங்கி சும்மாயிருக்கும் சுகமும் இருக்கிற பொது எதற்காக வீணில் மனம் சஞ்சலிக்கிறாய்.

உடுக்கக் கவிக்க குளிர்காற்று வெயில் ஒடுங்கி வந்தால்
தடுக்கப் பழைய ஒரு வேட்டியுண்டு, சக முழுதும்
படுக்கப் புறந்திண்ணை எங்கெங்கும் உண்டு, பசித்து வந்தால்
கொடுக்கச் சிவனுண்டு, நெஞ்சே நமக்குக் குறைவில்லை. 6.

கவலைப்படும் என் நெஞ்சே! கேள் நமக்கு எந்தக் குறைவும் இல்லை. ஏன் தெரியுமா? குளிர் காற்றினாலும் வெயிலினாலும் துன்பப்பட்டு உண்டாகும் களைப்பைத் தீர்க்க உடுத்திக் கொள்ளவும், குளிருக்குப் போர்த்திக் கொள்ளவும் பழைய துணியிருக்கிறது. படுத்து உறங்க வேண்டுமானால் திரும்பிய பக்கமெல்லாம் வீட்டின் வாசற் புறத்தில் திண்ணைகள் உண்டு; பசித்த உயிர்களுக்கு உணவளிக்க உலகையாளும் சிவபிரான் இருக்கிறார், அப்படியிருக்க நாம் ஏன் வருந்த வேண்டும்.

மாடுண்டு கன்றுண்டு மக்கள் உண்டென்று மகிழ்வதெல்லாம்
கேடுண்டு எனும்படி கேட்டுவிட்டோம் இனிக் கேள் மனமே
ஓடுண்டு கந்தை உண்டு உள்ளே எழுத்து ஐந்தும் ஓத உண்டு
தோடுண்ட கண்டன் அடியார் நமக்குத் துணையும் உண்டே. 7.

மனமே! இன்னும் கேள்! நமக்குப் பால் தரவும், உழைக்கவும் மாடுகள் உண்டு, அவற்றுக்குக் கன்றுகளும் உண்டு, நம் குலம் தழைக்க மக்கள் உண்டு என்று மனம் மகிழ்ந்திருப்பதெல்லாம் பின்னாளில் அவைகள் எல்லாம் இல்லாமல் போய் மனம் துன்பப்படவும் நேரிடும் என்பதைப் பெரியோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். ஆகவே நிலையற்ற மேற்சொன்ன செல்வங்களில் மனத்தைச் செலுத்தாமல் உண்ண உணவுக்கு பிட்சைப் பாத்திரம் உண்டு, உடுக்க கந்தை உண்டு, ஓதுவதற்கு பஞ்சாட்சர மந்திரம் உண்டு, தோடுடைய செவியன், விடையேறிய சிவனுடைய அடியார்களின் துணை உண்டு என்பதை நிச்சயப் படுத்திக் கொள்.

மாத்தான வத்தையும் மாயாபுரியின் மயக்கத்தையும்
நீத்தார் தமக்கொரு நிட்டை உண்டோ நித்தனன்பு கொண்டு
வேர்த்தால் குளித்துப் பசித்தால் புசித்து விழி துயின்று
பார்த்தால் உலகத்தவர் போலிருப்பர் பற்றற்றவரே. 8.

சொர்க்கத்தைப் போல சுகானுபவங்களையும், மாயையால் கிடைக்கும் அற்புதப் பொருட்களின்பால் ஏற்படுகின்ற மயக்கத்தையும் நீக்கிவிட்டவர்கள் தங்களுக்கென்று பிறர் காணும்படியாக செய்யக்கூடிய தவம் எனும் புறத் தோற்றங்கள் என்று ஏதாவது இருக்கிறதா என்ன? ஞானத்தை அடைந்து விட்ட அவர்களும் மற்றவர்களைப் போலவே வியர்த்தால் குளித்தும், பசித்தால் உணவை உண்டும், உறக்கம் வந்தால் படுத்து உறங்கியும் உலகில் வாழுகின்ற மற்றவர்களைப் போலத்தான் காணப்படுவர். யோகியர்கள் தங்கள் வெளித் தோற்றத்தால் சாதாரண மக்களினின்றும் மாறுபட்டுத் தோன்றுவதில்லை.

ஒன்றென்று இரு, தெய்வம் உண்டென்று இரு, உயர் செல்வமெல்லாம்
அன்றென்று இரு, பசித்தோர் முகம் பார் நல்லறமும் நட்பும்
நன்றென்று இரு, நடு நீங்காமலே நமக்கு இட்டபடி
என்றென்று இரு மனமே உனக்கே உபதேசம் இதே. 9.

ஏ மனமே! உனக்கு உபதேசம் இது. தெய்வம் ஒன்று என்று இரு. அந்த தெய்வம் என்றும் இருக்கும் என்பதை உணர்ந்து கொண்டு இரு. உயர்ந்த செல்வங்கள் எல்லாமே நிச்சயமற்றவை என்பதை உணர்ந்து கொண்டு இரு. பசித்தவர்களின் முகம் கண்டு இரக்கம் கொண்டு இரு. அறவழி நடப்பவர்களோடும், உத்தமர்களோடும் நட்பு கொண்டு இரு. அப்படிப்பட்டவர்கள் நட்பு நன்மை தரும் என்பதை உணர்ந்து கொண்டு இரு. நடுநிலை மாறாமல் நடந்து கொண்டு நமக்கு விதித்தது இவ்வளவுதான் என்று மனதைத் தேற்றிக் கொண்டு இரு.

நாட்டமென்றே இரு, சற்குரு பாதத்தை நம்பு, பொம்மல்
ஆட்டமென்றே இரு, பொல்லா உடலை அடர்ந்த சந்தைக்
கூட்டமென்றே இரு, சுற்றத்தை வாழ்வைக் குடங்கவிழ் நீர்
ஓட்டமென்றே இரு, நெஞ்சே உனக்கு உபதேசம் இதே. 10.

உன் வாழ்வின் குறிக்கோளை உணர்ந்து கொண்டிரு; நல்வழிகாட்டும் உத்தமமான குருவின் பாதங்களை நம்பு; வாழ்க்கை ஒரு பொம்மலாட்டம் என்பதை உணர்ந்து கொள், சுற்றம் நட்பு இவைகள் உன்னைச் சுற்றியுள்ள அடர்ந்த சந்தைக் கூட்டம் என்பதை தெரிந்து கொள், குடத்தைக் கவிழ்த்த நீர் போலத்தான் வாழ்க்கை என்பதை உணர்ந்து கொள், இதுவே உனக்கு உபதேசமாகும்.

(இன்னும் உண்டு)

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க