விவேகானந்தர் 150 -ஆம் ஆண்டுப் பிறந்த நாள் விழாவும் பேராசிரியர் பெஞ்சமின் லெபோவுக்குப் பாராட்டு விழாவும்.

0

கடந்த மாதம் 29 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை மதியம் 3 மணி அளவில் விவேகானந்தர் விழா பாரீஸ் 14 -ஆம் வட்டத்தில் உள்ள Maison de l’Inde என்னும் கட்டிடத்தில் நடைபெற்றது.

DSC_0034

பிரான்சு சிவன் கோவில் தலைவர் திருமிகு அருட்செல்வர் சுகுமாறன் முருகையன் அவர்கள் தலைமை ஏற்க, ஆசிரியர் ப. சின்னப்பா, M.A, B.Ed தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடினார். இந்திய இல்லம் என்ற பொருள் கொண்ட ‘Maison de l’Inde’ -இன் இயக்குநர் திரு பிக்காஸ் சானியால் வரவேற்புரை நிகழ்த்தினார்.

சுவாமி விவேகானந்தரைப் பற்றி இளம்பெண்கள் இருவரும் இளைஞர் ஒருவரும் சிற்றுரை ஆற்றினர். அவர்களுள் செல்வி கரின்லட்சுமி ஆங்கிலத்திலும் செல்வி சாரா கோதண்டம் பிரஞ்சிலும் செல்வன் ராமு பாலாஜி தமிழிலும் தம் உரைகளை அளித்தார்கள். செல்வன் ராமு பாலாஜி, விவேகானந்தர் போலவே வேடம் பூண்டு அனைவரையும் கவர்ந்தார்.

பின்னர், பேராசிரியர் பெஞ்சமின் லெபோ தலைமையில் சிறப்புரைகள் நடந்தன . ஆசிரியர் ப. சின்னப்பா, M.A, B.Ed அவர்கள் ‘சிக்காகோவில் விவேகானந்தர்’ என்ற தலைப்பில் பேசினார் . பேராசிரியர் தளிஞ்சான் முருகையா அவர்கள் ‘பாரிசும் விவேகானந்தரும்’ என்ற தலைப்பில் உரையாற்றும் போது இதுவரை நமக்குத் தெரியாத பல செய்திகளை எடுத்துரைத்தார். இப்போது Maison de l’Inde இருக்கும் தெருவுக்குப் பக்கத்தில் உள்ள வீதியில்தான் விவேகானந்தர் தங்கி இருந்தார் என்ற செய்தி அனைவருக்கும் வியப்பை அளித்தது.விவேகானந்தர் பற்றிய பல தவல்களைப் புலவர் பொன்னரசு தம் உரையில் பரிமாறினார். ‘விவேகானந்தரும் தமிழர்களும்’ என்னும் தலைப்பில் இறுதியாக உரையாற்றிய பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, விவேகானந்தர் ஞான ஒளி பெற்றது கன்னியாக் குமரிக் கடல் பாறையில், அவரை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தவர் இராமநாதபுர அரசர் சேதுபதி, அவர் திரும்பி வந்தபோது முதல் வரவேற்பு அளித்தது தமிழகம், அவர் ஆற்றிய ஆங்கில உரைகளை முதல் முதலில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர்கள் தமிழர்கள்… என வரிசையாக அடுக்கி அவரை உலகின் உச்சிக்குக்கொண்டு சென்றவர்கள் தமிழர்களே என நிலை நாட்டினார்.

DSC_0083

அதன் பின் மேடை ஏறிய முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திருமிகு கோவிந்தசாமி செயராமன், பேராசிரியர் பெஞ்சமின் லெபோ எழுதி அண்மையில் புதுவைக் கம்பன் கழகம் வெளியிட்ட ‘கம்பன் களஞ்சியம் தொகுதி 1 ‘ என்னும் நூலைப் பாராட்டிப் பேசினார். பேராசிரியருக்கும் அவர் துணைவியாருக்கும் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்த சிவன் கோவில் தலைவர் திருமிகு அருட்செல்வர் சுகுமாறன் முருகையன், அவர் துணைவியார் இருவரும் சேர்ந்து பாராட்டுப் பத்திரத்தை வழங்கினார்கள். அந்த நூலுக்காகவும் பேராசிரியர் இத்தனை ஆண்டுகள் பிரான்சில் தமிழுக்கு ஆற்றிய அளப்பரும் தொண்டுகளுக்காகவும் வழங்கப்பட்ட அதில் பாராட்டுரை வெண்பாவில் அமைந்திருந்தது. திருவாளர்கள் கோவிந்தசாமி செயராமன், தமிழியக்கன் தேவகுமாரன், ஆசிரியர் சின்னப்பா, புலவர் பொன்னரசு, பேராசிரியர் தளிஞ்சன் முருகையா… எனப் பலரும் பொன்னாடை போர்த்திப் பேராசிரியரைப் பாராட்டினார்கள் .

DSC_0088

இதற்கிடையில் பிரான்சு நாட்டின் இந்தியத் தூதர் மேதகு அருண் குமார் சிங், தம் பரிவாரங்களுடன் வந்து சேர்ந்தார். அவர் முன்னிலையில் செல்விகள் சாரா கோதண்டம், ழுலியா கோதண்டம் பரத நாட்டிய விருந்து அளித்தனர். இந்தியத் தூதர் தம் உரையை நிகழ்த்திய பின்னர், பங்கு கொண்ட செல்வியர், செல்வனுக்குப் பரிசு வழங்கினார். பின், இந்திய இராமகிருஷ்ண மடத்தின் பொதுச் செயலர் சுவாமி சுத்திதானந்தா, பாரீசு இராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி வீத்மோகானந்தா உரையாற்றினார்கள். இறுதியாகத் தமிழியக்கன் தேவகுமாரன் நன்றி உரைக்க விழா இனிதே நிறைவு பெற்றது. அனைவரும் சிற்றுண்டி அருந்திச் சென்றனர். இவ்விழாவிற்காக முன்னின்று உழைத்தவர்கள் – திருமிகு கோவிந்தசாமி செயராமன், திருமிகு தமிழியக்கன் தேவகுமாரன் –நம் பாராட்டுதல்களுக்கு உரியவர்களே!

வருணனை : புதுவை எழில்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *