சச்சிதானந்தம்

குறத்தி புலிக் குட்டிகளைக் கொஞ்சுதல்

 

தாய்ப்புலி யொன்று குட்டிகள் தன்னை,

யாரும் காணாப் புதரில் விட்டு,

தாய் நாட்டைப் பிரியும் தமிழன்போல,

மனமின்றி இரைகொள்ளச் சென்றது ஒவ்வொருநாளும்!                                             118

 

அவ்வொருநாளில் அவ்வழிவந்த அழகிய குறத்தி,

புதரை விட்டு வெளியேவந்த குட்டிகள் கண்டு,

பாசத்தோடு தாயைப்போல அள்ளிக் கொஞ்சிப்,

புதரில் விட்டுத் தன்வழி சென்றாள்!                                                                                           119

 

குறவன் குறத்தி சந்திப்பு

 

கச்சை குறைவாய்க் கட்டியதாலே, கூடையிலிட்ட,

கனிகளை மலர்களை சுமந்திட மலர்களை,

சுருட்டிப் பந்தாய் உருட்டித் தலையில்,

சும்மாடாக்கிக் கூடை சுமந்தாள் குறத்தி!                                                                 120

 

கிளிகளும் குறத்தியும்

 

கூடை சுமந்து நடந்த குறத்தியை

கிளிகள் மேலே சுற்றிப் பறந்தன,

குறத்தியின் அழகோ! கனிகளின் மனமோ!

கிளிகளை ஈர்த்தது இரண்டினில் எதுவோ!                                                                              121

 

சீருடை அணிந்த மழலைகள் போலே,

பசுமையில் செம்மை வார்த்த கிளிகள்,

கூடை என்னும் கிரீடம் சுமந்த,

குறத்தியின் முடியில் மரகதம் ஆயின!                                                                                    122

 

சிறகை விரித்துக் கிளிகள் அடிக்க,

கூடையி லிருந்த மலர்கள் தெறிக்க,

நடந்திடும் குறத்தியின் அடியினை நிறைத்து,

வழியெங்கும் மலர்கள் பூசனை செய்தன!                                                                              123

 

குறத்தி இருக்குமிடம் அறிதல்

 

மலர்கள் சிந்திய தடத்தினைக் கொண்டு,

குறத்தி நடந்த வழியினைக் கண்டு

குறவனும் தொடர்ந்து மலர்மேல் நடந்து,

ஒருவரை ஒருவர் சோலையில் கண்டனர்!                                                                            124

 

பாதம் போல வாயும் சிவந்து,

கனிகள், மலர்கள் மட்டும் இன்றிக்,

கிளிகளும் சுமந்த குறத்தியைக் கண்டு,

குறவன் சிரித்தான் கடகட வென்று!                                                                                              125

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “குறவன் பாட்டு – 15

  1. குறத்திக்குக் கிரீடமாய்க்
    கூடை,
    கவிஞருக்கு-
    கவிதை…!

  2. ஈரமுள்ள குறத்தியை காட்டிய பாங்கு அழகு.

    ///மலர்கள் சிந்திய தடத்தினைக் கொண்டு,
    குறத்தி நடந்த வழியினைக் கண்டு
    குறவனும் தொடர்ந்து மலர்மேல் நடந்து,///

    சீதையை தேடும் போது அனுமான் கையாண்ட உக்தி நினைவுக்கு வந்தது. பாராட்டுக்கள் கவிஞரே.

  3. கவிதைகளைப் படித்து தொடர்ந்து கருத்துகளைப் பகிர்ந்துவரும் நண்பர்கள் திரு.செண்பக ஜெகதீசன் மற்றும் திரு.தனுசு அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *