Month: March 2015

  • உழைப்புக்குத் தேவை துடிப்பு!

    -ஆர். எஸ். கலா

    எடுத்த காரியத்தை இறுதிவரை
    தொடர்ந்திட உறுதி பூண்டு விடு
    எதிர்காலத்தில் எதிலும் வெற்றி                       தொழிலாளி
    பெறுவேன் என்று நெஞ்சில்
    நிறுத்திவிடு!

    செய்வன திருந்தச் செய்
    கவலையை விட்டொழி
    காலத்தை வென்று நிரந்தர
    வெற்றியைக் கண்டிடு!

    முன்னேற்றத்தையே விரும்பு
    முறையுடன் அதை நிறைவேற்றிடு
    கல்விக் கண்ணோடு பெரியோர்
    சொல்லையும் கேட்டிடு, ஒளி
    விளக்காய்ச் சுடர்விடு நின்று!

    சோம்பேறியாகாதே
    துவண்டு விடாதே
    எதிர்காலக் கனவை
    கலைய விடாதே தொலை
    நோக்கி போல்  துல்லியமாகக்
    கணித்திடு உன் வெற்றியை
    புத்தியின் துணையோடு!

    உழைப்பில் முன்னேறு
    உழைப்பை முழுமையாக நம்பு
    உடல் வருத்தி உழைத்திடு
    உனக்குள் இருக்கும் திறமையை
    மடமை என்னும் திரையால்
    மூடாதே!

    உன் தொழிலை நம்பு
    அதையே நேர்வழியில்
    தொடங்கு, வரும் வருவாயை
    விரையம் செய்யாதே
    கறைபடிவது  கையானாலும்
    சிறைவாசம் செல்லாத்
    தொழிலைத் தேர்ந்தெடு!

    மேலே மேலே உயர்ந்திடு
    குணத்திலும் தொழிலிலும்
    தினமும் மேலோங்கும்
    சிந்தனையை வளர்த்திடு!

    சிகரம் தொட்டிடு சிறப்பாக
    வாழ்ந்திடு  தட்டிப் பறிக்காதே
    பிறரிடம்
    விட்டுக் கொடுக்காதே
    உன் நியாயமான கோரிக்கையை!
    கேளிக்கை வாழ்வை ஒதுக்கிடு
    வாழி வாழி என்று வாழ்ந்திடு
    உன் துடிப்பான உழைப்பைக்
    கொண்டு!

    பெற்றோர் போற்ற மற்றோர்
    வாழ்த்த உலகில் உன் புகழ்
    பறக்கட்டும், நீ சிந்திய வியர்வைத்
    துளிகளும் புகழாக மணம் பரப்பட்டும்
    உண்மையான உன்னதமான
    உழைப்பையே நம்பித் துடிப்போடு
    நீயும் இறங்கு!

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

     

    ”வெல்வெட்டு வண்ணத்தில், வேய்ங்குழல் ஊதுகிறான்
    கல்வெட்டுச் சிற்பம்போல் கண்ணபிரான், -புள்கொட்டும்(பறவைகள் கூவும்)
    போததி காலையில் பூபாள பூபாலன்,
    யாதவனைக் காண எழு”….கிரேசி மோகன்….

     

    Share
  • மாற்றம் மக்களிடமே தேவை

    ஞா.ஜார்ஜ்
    ஆராய்ச்சியாளர்
    அரசியல் அறிவியல் மற்றும் வளர்ச்சி நிர்வாகத் துறை
    காந்திகிராம பல்கழைக் கழகம்
    காந்திகிராமம்
    திண்டுக்கல்

    images (1)

    இந்தியா சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் பொருளாதாரம் கலாச்சாரம் மற்றும் அறிவியல் துறையில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. உலக அரங்கில் இந்தியா ஓர் தனிப்பெரும் நாடாகவும் மக்கள் ஆட்சிக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது. பல சாதனைகள் ஒருபுறம் இருக்க மக்கள் சாதி மதம் இனம் மற்றும் மொழி ஆகிய காரணங்களால் வேறுபட்டும் இருக்கின்றனர். பலதரப்பட்ட மக்களைக் கொண்டு உருவாகும் அரசு மக்களை முதன்மைப்படுத்துவதாகவும் மக்களை முன்னேற்றப்பாதைக்கு இட்டுச்செல்வதாகவும் இருப்பது அவசியம். மக்களால் உருவாக்கப்படும் அரசுக்கும் அதன் செயல்பாட்டிற்கும் எப்படி மக்கள் பங்கேற்பை அளிக்கின்றனர் என்பதுதான் நாம் இன்று சிந்திக்க வேண்டியது. அதுவல்லாது வெறும் வாக்கை அளித்துவிட்டதன் மூலம் தங்கள் ஜனநாயக கடமை முடிந்து விட்டது என்று எண்ணாமல் அரசுக்கும் அதன் செயல்பாட்டிற்கும் ஆதரவாக தங்களுடைய பங்கேற்பை அளிப்பதுதான் நமது முதற்கடமை. இது அனைத்துதரப்பு மக்களுக்கும் பொருந்தும். வெறுமனே அரசு சரியில்லை அரசு செயல்பாடு சாமானியமக்களை சென்றடையவில்லை அரசு அதிகாரிகள் சரியில்லை அரசியல்வாதிகள் சுயநலவாதிகள் என்று குறைகூறுவது முட்டாள் தனமான ஒன்று. அரசு அரசியல்வாதி மற்றும் அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளிலும் திட்டமிடுதலிலும் சுயநலம் கலந்து இருப்பதாக கூறும் மக்கள் தங்களின் பங்கேற்பும் செயல்பாடுகளும் எப்படி சமூக முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கிறது என்பதை சற்றே சிந்தித்துப்பார்க்க வேண்டும். சமூக வளர்ச்சிக்கும் அதன் முன்னேற்றத்திற்கும் மக்களின் பங்களிப்பு என்பது அவசியமான ஒன்று. ஆனால் இன்றைய சூழலில் மக்களின் பங்களிப்பு மற்றும் பங்கேற்பு என்பது மிகவும் குறைவாக காணப்படுகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதற்கு என்னுடைய இரயில் பயணத்தில் நான் கண்ட சில உதாரணங்கள் நான் மதுரையில் இருந்து இராமேசுவரம் வரையில் பயணித்த போது என்னுடன் பயணித்த சில நூறு பயணிகளை நான் நன்கு கவனித்தேன். அவர்களில் அதிகமானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள். இரயில்வேத் துறை சார்பில் ஓர் அறிவிப்பு பலகை இருந்தது அதில் இரயில்வண்டி நிற்கும் போது கழிவறை பயன்படுத்துவதை தவிர்கவும் என்று. ஆனால் அதிகப்படியான மக்கள் இரயில் வண்டி நிறுத்தத்தில் கழிவறையைப் பயன்படுத்துவதைக் காணமுடிந்தது. இப்படி படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரையிலும் அனைத்துத் தரப்புமக்களும் இரயில் வண்டி நிறுத்தத்தில் கழிவறையைப் பயன்படுத்துவது என்பது சமூகத்தின் மீது கொண்டுள்ள அக்கரையின்மையை காட்டுவதாக இருப்பதுடன் அரசு செயல்பாட்டில் குறுக்கிடுவதாகவும் உள்ளது. சமூக அக்கரையின்மையின் காரணமாக இவர்கள் செய்யும் செயல் தாழ்த்தப்பட்ட சமூகத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அடிமை வேலை செய்யப் பணிக்கிறது. அடிமைத் தனமான வேலையை தலித் மக்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காகச் செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். மக்கள் தங்களின் அவசரத்திற்காகச் செய்யும் இந்த இழிவான செயலால் வரும் விளைவை மலத்தை அகற்றுபவர் என்ற முறையில் தலித்துக்கள் இந்த கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட மனிதக் கழிவு அகற்றும் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கான சட்டத்திருத்தம் 2013-ன் படி மனிதக் கழிவு அகற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவர்கள் வேறுதொழிலில் ஈடுபட கடனுதவி அவர்களுடைய குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது முதலியன இந்தச் சட்டத்திருத்தத்தின் பிரதான நோக்கமாக உள்ளது. அத்துடன் மனிதக் கழிவகற்றும் தொழிலாளர்களை பணி அமர்த்துவதும் அவர்களை மனிதக் கழிவகற்ற பணிப்பதும் சட்டப்படி குற்றம் அதைமீறினால் அபதாரம் மற்றும் சிறை தண்டனை என்பன இச்சட்டத்தின் சிறப்பு. ஆனால் இன்றைக்கும் மனிதக்கழிவு அகற்றும் பணியாளர்கள் அனைவரும் தலித்துக்களாக இருந்து வருகின்றனர். இந்தப் பணி பலரையும் முகம் சுழிக்கவைக்கக்கூடிய மற்றும் அருவறுக்கத்தக்க செயலாக இருந்து வருகின்றது. இதற்குக் காரணம் சமூக ஏற்றத்தாழ்வு மற்றும் மக்களிடம் இருக்கும் சுயநலம் தான் காரணமே தவிர அரசு இதற்கு பொறுப்பு என்று கூறுவது தவறு. மக்களுக்கான அரசு மக்களின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையான சட்டங்களை இயற்றுவது திட்டங்கள் தீட்டுவது ஓர் அரசின் கடமை. அதுபோல் மக்களும் அரசின் திட்டங்களுக்கும் சட்டங்களுக்கும் அதன் செயல்பாட்டிற்கு உறுதுணையாகவும் அதில் பங்கேற்பையும் அளிப்பது மக்களின் கடமை. ஆதலால் தான் சமூகத்தில் உள்ள பிரச்சனைகளை களைய அரசு கொண்டுவரும் திட்டங்கள் சரியாகவே இருந்தாலும் அதை நடைமுறையில் மக்கள் ஏற்காதவரை அது இந்திய அரசியல் அமைப்பு புத்தகத்தில் எழுதப்பட்ட திட்டமாகவே தான் இருக்குமே தவிர நடைமுறையில் அதன் செயல்பாடுகள் மக்கள் மத்தியிலும்சரி சமூகத்திலும்சரி எந்த வளர்ச்சியையும் மாற்றத்தையும் கொண்டுவர இயலாது. எனவே பொது இடங்களில் மலம் கழிப்பது இரயில் நிலையங்களில் நிற்கும் இரயில் வண்டிகளில் உள்ள கழிப்பறையைப் பயன்படுத்துவது ஆகிய சமூகச் சீர்கேடுகளைக் குறைப்பதும் அதைச் சமூகத்தில் முற்றிலும் அகற்றுவதும் என்பது அரசு மற்றும் மக்களின் ஒருமித்த செயல்பாட்டில்தான் உள்ளது. இதற்கான முயற்சியாக அரசு தனிமனித சுகாதாரம் எவ்வளவு முக்கியமோ அது போல சமூகத்தின் சுகாதாரமும் முக்கியம் என்பதை உணர்த்தும் விதமாக சமூக விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டும். இது போன்ற சமூக விழிப்புணர்வின் மூலம் மக்களின் மனங்களில் ஏற்படும் உள்ளார்ந்த மாற்றம்தான் ஒரு மேம்பட்ட சமுதாயத்தை உருவாக்க வழிகோலிடும்.

    மற்றொரு நிகழ்வு என்னவென்றால் இராமேசுவரம் என்பது இந்துக்களின் புண்ணியத் தலங்களில் ஒன்று. அதுமட்டுமல்லாமல் பிற மதத்தவரும் வந்து செல்லும் சுற்றுலாத்தலமாகவும் திகழ்கிறது. இப்படிப்பட்ட இராமேசுவரத்தில் இந்துக்களின் கலாச்சாரப்படி இறந்தவர்களுக்கு அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி கர்மகாரியங்கள் நடத்துவது பின்பு கடலில் புனித நீராடுவதும் வழக்கம், அத்துடன் நின்றுவிடாமல் அவர்கள் உடுத்திவந்த உடைகளை கடலில்விடுவதும் வழக்கம். ஆனால் இந்தச் செயலால் கடலில் துணிகள் மிதப்பதுடன் புனிதநீர் என்று கருதப்படும் கடல்நீர் மாசுபடுகிறது. கடல் நீர் மாசுபடுவதால் மீன் வளத்தைகுறைவிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இச்செயலால் கடற்கரை ஓரத்தில் மீன் உற்பத்தி குறைகிறது. இதனால் கரைஓர மீன்பிடிதொழில் செய்யும் மீனவர்கள் பாதிப்படைகின்றனர். கரையில் இருந்து சுமார் 1.5 கி.மீ தொலைவுவரை துணிகள் கடலுக்கடியில் படிந்தும் மிதந்தும் காணப்படுகின்றது. கோயில் நிர்வாகம் அறிவிப்பு பலகைகள் வைத்தும் துணிகளை போடுவதற்கான தொட்டிகள் அமைத்து இருந்தாலும் மக்கள் அதை பின்பற்றுவது இல்லை. இதைப்பற்றி சில சமூக ஆர்வலர்கள் மற்றும் மீனவர்களிடம் கேட்டபோது என்னதான் அறிவிப்பு பலகை மற்றும் துணியைப் போடுவதற்கு தொட்டிகள் அமைத்துத்தந்தாலும் வரும் பக்தர்கள் துணிகளை விடுவதை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறுகின்றனர். இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் உள்ளாட்சி நிர்வாகமும் கோயில் நிர்வாகமும் செயலற்ற நிலையில் இருப்பதை நம்மால் காணமுடிகிறது. உள்ளாட்சி அமைப்பும்சரி கோயில் நிர்வாகமும் சரி வெறும் அறிவிப்புப் பலகையுடன் நில்லாமல் அதற்கான விழிப்புணர்வை கொடுக்கவும் முன்வரவில்லை அதற்கான செயல்பாட்டை எடுத்ததாகவும் தெரியவில்லை. இது போன்ற நிகழ்வு உள்ளாட்சி அமைப்புகளின் சமூக அக்கறையின்மையை காட்டுவதாக உள்ளது. சுற்றுலாத் துறையும் அதன் துறைசார்ந்த செயல்பாட்டில் ஒரு குறைபாட்டுடன் தான் செயல்படுகிறது. இது போன்று அரசுத்துறைகளில் உள்ள குறைபாடுகளைப் பற்றி மக்கள் பேசுவதை விடுத்து முதலில் தங்களிடம் உள்ள குறைபாடுகளைக் களைய முயற்சிக்க வேண்டும். இதற்கானத் தீர்வாக கலாச்சாரம் என்ற பெயரில் பாவங்களில் இருந்து தங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டு பொதுஇடம் அதிலும் புண்ணியத்தலத்தை அசுத்தம் செய்வதை ஒவ்வொரு மக்களும் சிந்திக்க வேண்டும். அவ்வாறு சிந்தித்து அவர்களுக்குள்ளாக வரும் மாற்றம் தான் இப்போது தேவை.

    சமூக வளர்ச்சியையும் அதன் முன்னேற்றத்தையும் பாதிக்கும் பிரச்சனைகளான சாதியப் பாகுபாடு மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை சமூகத்தில் இருந்து களைய, படித்தவர் படிக்காதவர் மற்றும் பணக்காரன் ஏழை என்ற பாகுபாடுகள் இன்றி அனைத்துத் தரப்பு மக்களுக்குள்ளும் வரும் ஓர் சீரிய மாற்றம் தான் சமூகப் பிரச்சனைகளைக் குறைத்து ஒரு மேம்பட்ட சமூகம் உருவாக வழிவகுக்குமே தவிர சட்டங்களைக் கடுமையாக்குவது புதிய திட்டங்கள் தீட்டுவதினால் ஒருமாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது. ஆகவே முதலில் மக்கள் மனங்களில் தான் மாற்றம் தேவை என்பது தான் என் கருத்தாக முன்வைக்க விரும்புகிறேன்.

    Share
  • முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே …

    –கவிஞர் காவிரிமைந்தன்.

    aahaa1

    aahaaவாலிபக்கவிஞர் வாலி அவர்களின் வசந்த வரிகளில் இதோ மற்றுமொரு பாடல்! திரைப்படத்தின் பெயர் கூட “ஆஹா” என்கிறது! இப்பாடலைத்தான் சொல்கிறதோ? இசையமைப்பாளர் தேவா அவர்களின் ரம்மியமான இசையில் இளம்பாடகர் ஹரிகரன் குரலில் ஒலிக்கும் காதல் பாடல்!

    இளம் உள்ளத்தின் பருவ வாசலில் தோன்றும் அத்தனை உணர்ச்சிகளையும் ஒட்டுமொத்தமாக கவிஞனால் மட்டும் அப்படியே படம்பிடித்துக்காட்ட முடிகிறது! காவியக்கவிஞருக்கு அது கைவந்த கலையாக!

    பாடலின் தொடக்கம் முதல் தொய்வில்லாத ஒரு உந்துதல்… மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடுகிறது பாருங்கள்… கேளுங்கள்! ஆனந்தம் அலைமோதும் எண்ணங்களில் வார்த்தைகள் வந்துவிழாதா என்ன? சுவையான கீதம் நம்மை இனிமையான சூழலுக்கு அழைத்துச் செல்வதும்… மதுரமான இசையில் ஆழ்த்துவதும் சராசரி பாடலுக்கே சாத்தியப்படும்போது… வார்த்தைகளை கவிஞர் சர்க்கரை, தேன்பாகு போல் கொட்டிக்கவிழ்த்திருக்கும் இப்பாடல் ஈர்க்கமாலிருக்குமா?

    ஆழ்ந்த சிந்தனையிலிருந்து அற்புத வரிகள் தோன்ற பாய்ந்துவரும் வெள்ளமென பாடல் பிறக்கிறது… எளிமையெனும் ரதமேறி குரல்வழியே நாம் அந்தக் குதூகலத்தை அடையலாம்..

    நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்
    அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்
    முதற்பார்வை நெஞ்சில் என்றும் உயிர் வாழுமே!

    நல்லவளே அன்பே உன்னால்தான்
    நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்

    இவை என்ன காதலுக்கு எழுதிவைக்கப்பட்டிருக்கும் வேதவரிகளா?

     

    முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
    எனை மறந்து எந்தன் நிழல் போகுதே
    என்னில் இன்று நானே இல்லை
    காதல் போல ஏதும் இல்லை
    என்னில் இன்று நானே இல்லை
    காதல் போல ஏதும் இல்லை
    எங்கே எந்தன் இதயம் அன்பே வந்து சேர்ந்ததா?
    (முதன் முதலில்…)

    நந்தவனம் இதோ இங்கேதான்
    நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன்
    நல்லவளே அன்பே உன்னால்தான்
    நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்

    நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்
    அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்
    நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்
    அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்
    முதற்பார்வை நெஞ்சில் என்றும் உயிர் வாழுமே
    உயிர் வாழுமே
    (முதன் முதலில்…)

    உத்தரவே இன்றி உள்ளே வா
    நீ வந்த நேரத்தில் நான் இல்லை என்னில்
    அந்த நொடி அன்பே என் ஜீவன்
    வேறெங்கு போனது பாரடி உன்னில்
    உன்னைக் கண்ட நிமிஷத்தில் உறைந்து நின்றேன்
    மறுபடி ஒரு முறை பிறந்து வந்தேன்
    உன்னைக் கண்ட நிமிஷத்தில் உறைந்து நின்றேன்
    மறுபடி ஒரு முறை பிறந்து வந்தேன்
    என் சுவாசக் காற்றில் எல்லாம்
    உன் ஞாபகம் உன் ஞாபகம்
    (முதன் முதலில்…)
    ____________________________________________
    படம்: ஆஹா (1998)
    பாடல்: வாலி
    இசை: தேவா
    பாடியவர்: ஹரிஹரன்
    காணொளி: https://www.youtube.com/watch?v=OqC-Y9YGNxE&spfreload=10

     

     

    https://youtu.be/XCggs6WA9Nk

    Share
  • சிவபிரதோஷம்

    மீ.விசுவநாதன்

    images
    சின்னஞ் சிறிய வயதினிலே சிட்டாய்ப் பறந்து திரிகையிலே
    என்னுள் இருந்து விழிகாட்டி இருந்தாய் சிவனே வழிகாட்டி !
    கன்னம் குழித்துச் சிரிக்கின்ற கரும்புச் சுவையாம் சரவணனின்
    சின்னம் நெருப்புச் சுவைவண்ணா ! சிறுவன் எனக்கருள் செய்நன்னா !

    உயரே பரந்த ஒலிவானம் உதிரும் மொழியோ சிவநாமம் !
    பயனை நினைத்துப் பணியாத பனிபோ லிருப்போ னுருவாகும் !
    நயனம் இரண்டும் ஒளிவீச நடக்கும் வடிவில் குருவாகும் !
    அயனும் அரியும் அறியாத அவனே அருமை அரனாகும் !

    (18.03.2015)
    (அறுசீர் விருத்தம் வாய்பாடு: மா, மா, காய் , மா, மா, காய் ,)

    Share
  • ஐந்து கை ராந்தல் (4)

    வையவன்

    “அகத்து வரூ”

    க்வார்ட்டர்ஸின் கதவுக்கு மாட்டியிருந்த பச்சை ஸ்கிரீனை’த் தள்ளிக் கொண்டு வெளிப்பட்டாள் பிரீதா. கதவுக்கு வெளியே வாசற்படியருகில் சிவா நின்றான். கையில் குக்கர் வைத்த அட்டைப் பெட்டி.
    “எந்தா குக்கரோ?” என்றாள். அவள் புன்னகையில் ஒரு பசுமைக் குளிர்ச்சி இருந்தது.
    வெளியே வாட்டிய வெய்யிலில் அவளைப் பார்ப்பதே குளிர்ச்சியாக இருந்தது.

    ட்யூட்டி முடித்துக் குளித்திருந்தாள். தலை ஈரம் ஆறும் முன் போட்ட மலையாளக் கொண்டை. பூசினாற் போன்று பருத்த அவளது செம்மஞ்சள் மேனிக்கு இந்த பச்சை நைலக்ஸ் மட்டுமல்ல எந்த உடையும் பொருத்தம்தான்.
    விளக்கு வைத்த மாதிரி ஒரு பார்வை. அந்த குறுஞ்சிரிப்பில் கண்களின் சுடர் தெறித்தது.

    சிவா காம்பவுண்ட் கேட்டைத் திறந்து கொண்டு படியேறினான். நடுவே ஓடிய காங்க்ரீட் பாதையின் இரு பக்கமும் தண்ணீருக்குத் தவிக்கும் சின்னத் தோட்டம்.

    “இண்டர்வ்யூ கழிஞ்ஞோ?” என்ஙறு அவன் கையிலிருந்த குக்கர் பெட்டியை வாங்கிக் கொண்டே கேட்டாள்.
    பிரீதாவிடமிருந்து ஒரு பெர்ஃப்யூம் வாசனை வந்தது.

    “இவ்விட இரீ” என்று ஒரு பிரம்பு நாற்காலியைக் காட்டி ஆதுரமாகப் புன்னகைத்தாள்.
    பிரீதாவின் புன்னகையிலும் சிரிப்பிலும் கண்கள் ஒளிவிட்டன. இவளுக்கும் பாவங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று அவள் முகத்தின் நேர்மை கேட்டது.

    எவ்வளவு சுருக்கமாக இவள் தன் பிரியத்தை வெளியிடுகிறாள்!
    “இதோ வருந்து” என்று பிரீதா மீண்டும் உள்ளே போனாள்.

    பக்கத்திலிருந்த டீப்பாயில் ஒரு மலையாள தினசரி மடிந்து கிடந்தது. புழுக்கத்திற்கு விசிறிக் கொள்ள எடுத்தான். கீழே நந்தவனம். அந்த வாரத்து இதழ். பிரதா தமிழ் கற்று வருகிறாள் என்று நினைவு வந்தது.
    எந்த இடத்தில் அவனது கதை பார்க்கக் கிடைக்கிறது!

    பத்திரிகையை எடுக்கும் போது கை லேசாக நடுங்கிற்று. அட்டைப்பட ஓவியத்தைப் பார்க்கும் போது அவனுக்கு மறுபடியும் அம்மா நினைவு வந்தது. கண்கள் ஊற்றெடுத்தன-பார்வை மறையுமளவு.
    ‘மனமே இன்பத்திலும் துன்பத்திலும் சமமாயிரு.’ தாமுவின் முதல் கதை பிரசுரமாயிருந்தால் அவன் இவ்வளவு கிளர்ச்சியுறுவானா? வெற்றிவேல்?

    ‘லகானை’ இழுத்த மாதிரி அவனுக்குள் ஒரு தன்வசம் கிட்டியது.
    ‘டபிள் ஸ்ப்ரெட்’டாக அட்டையின் முன்னும் பின்னும் ஏழு வண்ணத்தில் பரவியிருந்த ஓவியம்.
    பிரித்தான். அவனது கண்ணீரும் கண் விழிப்பும் உதிரமும் பெருமூச்சும் சிதறியிருந்த வரிகள்; பொடிப் பொடியான ஒவ்வோர் எழுத்தும் அவனது வெற்றியைச் சிற்றுளியால் கொத்திய ஒவ்வொரு கொத்து போன்று சிரித்தன.
    பிரீதா ஒரு கண்ணாடித் தம்ளரோடு திரும்பி வந்தாள். லெமன் ஜூஸ்.

    “கழிக்கூ”
    பிரீதா நீட்டியதை வாங்கிக் கொண்டான். ‘பிரிஜ்’ஜிலிருந்து வந்ததால் டம்ளர் சில்லென்றிருந்தது.
    “இண்டர்வ்யூ எந்தாயி?”
    ஒரு விழுங்கு குளிர்ச்சியில் வெய்யில் பரவசம் எல்லாமே மட்டுப்பட்டன.
    “மாமூல்”

    “மாமூலென்னு பரஞ்ஞால்?”
    “ஜஸ்ட் ஃபர் நேம் ஸேக். ஆளை ஏற்கெனவே தீர்மானிச்சாச்சு. பத்தாயிரம் ரூபாய்.”
    “ஆ லெட்டரினெ கொடுத்தோ?”

    அது மாதிரி நூறு கடிதங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். பெரிய துண்டும் பைலுமாக பருத்த மனிதர்கள் நாலைந்து பேர் இண்டர்வியூ ஹாலுக்கு வெளியே திரிந்தார்கள்.
    “அதுக்கு அவசியமே ஏற்படலே”

    அவன் அவளிடம் உண்மையை மறைக்க விரும்பவில்லை. பிரீதாவின் முகத்தில் வருத்தம் ஏடு கட்டியது.
    ‘இவளிடம் சொல்லலாமா?”

    தனக்கு ஒரு வேலை கிடைக்க வேண்டுமென்று நிஜமாய் விரும்பும் இவளுக்கு இது தெரிய வேண்டுமே!
    சிவா பத்திரிகையை அந்தப் பக்கத்தின் நடுவில் கை வைத்து அவள் முன்பு நீட்டினான்.
    “எந்தாணு?” அவள் வாங்கி எழுத்துக் கூட்டினாள்..

    “எதிரெலியே நீ எங்கே?”
    சிவா சிரித்து விட்டான்.
    “தெற்றாணோ?” தப்பு செய்த குழந்தை மாதிரி அவள் ரசமாக விழித்தாள்.

    “எதிரொலியே நீ எங்கே?”
    அவன் திருத்திப் படித்தான். அவன் விரல் கீழே எழுதியிருந்த பெயரைச் சுட்டிக் காட்டியது.
    “சிவா…’ அவள் விழிகள் ஒரு கணம் நிலை குத்தின. இமைகள் படபடத்துக் கொண்டே அவன் மீது மொய்த்தன.
    “ஹாய்.. நிண்டேதோ?”

    “ஆம்” அவன் அடக்கப் புன்முறுவலுடன் தலையாட்டினான்.
    புது வியப்புடன் பார்த்தாள். பக்கங்களைப் புரட்டினாள் படங்களைப் பார்த்தாள். கவர்ஸ்டோரி என்று எழுதியிருந்ததை எழுத்துக் கூட்டிப் படித்தாள்.

    அட்டைப் படத்தைத் திருப்பிப் பார்த்தாள்.
    மீண்டும் அவன் மீது ஒரு பார்வை. அதில் ஒரு புது மரியாதை பிறந்திருந்தது.
    இனி அவளுக்குத் தான் பழைய சிவா இல்லை.

    வேலை தேடுகின்ற, தங்க நிழல் தந்தவர்களுக்குச் சமைத்துச் சேவகம் புரியும், பரிவிற்குரிய பழைய சிவா இல்லை.
    “கங்ராஜூலேன்ஸ்.. க்ளாட். ஐ’ம் வெரி க்ளாட். எனிக்கு எத்ர சந்தோஷமென்னு பரயாம்பாடில்ல”
    அவளது கரிய இமைகளில் பருத்துச் சிவந்த உதடுகளில் துளும்பிய களிப்பிலே ஒரு தூய்மை இருந்தது. அது ஒரு கன்று மரமாகிக் கனி குலுங்கக் கண்ட மகிழ்ச்சி.
    சிவாவுக்குச் சிலிர்த்தது.

    இவள் பார்வைக்கு தான் ஒரு வேலைக்காரன். தன் வெற்றியில் இவள் என்னமாய் பூரிக்கிறாள்!
    அந்தத் தூய்மையான களிப்பும் உற்சாகமும் கண்ணுக்குத் தெரியாத ட்யூப் இணைப்புக்களில் சொட்டுச் சொட்டாய் தனக்குள் நிரம்புவதை உணர்ந்தான் சிவா.

    “இங்ஙன நீ வல்யவனாயி”
    நீ பெரிய மனிதனாய் விட்டாய் என்று அவனது உலகம் ஒரு சங்கீத மலையாளத்தில் முதன் முறையாக அவனுக்கே எடுத்துக் கூறியது.

    “ஞான் இன்னு நினக்கு ஸ்வீட் தரும்”
    சிவா தடுக்குமுன் பிரீதா பச்சைத் திரையின் உள்ளே மறைந்து விட்டாள்.
    வெய்யிலில் பசி நடையாய் நடந்த கால் வலி எல்லாம் மறந்து விட்டது.
    ஸ்க்ரீனுக்கு மாட்டியிருந்த உலோக வளையங்கள் நகர்ந்து விலகியதால் ரீங்கரித்தன. திரையை ஒதுக்கிவிட்டு பிரீதா வந்தாள்.

    “அகத்துவரூ”
    அவன் இதுவரை அந்த வீட்டினுள் நுழைந்ததில்லை. தயங்கினான்.
    “கம் ஆன்… டோன்ட் பி ஷை!”
    லெமன் ஜூஸ் தீர்ந்த காலி டம்ளருடன் அவன் எழுந்தான்.
    “தரூ” அதை அவள் வாங்கிக் கொண்டாள்.
    நுழைந்தவுடனே ஒரு குளுமை. இள நீல டிஸ்டெம்பர் அடித்த சுவர்கள். மொசைக் தரை; லாமினேட் ஒட்டிய மேஜை நாற்காலிகள்.

    எதிரில் சுவற்றில் ஒரு சிறிய கண்ணாடிப் பெட்டியில் குருவாயூரப்பனின் பளிங்குச் சிலை. அதற்கு வெளியே ஊதுவத்தி ஸ்டாண்டில் சந்தன ஊதுவர்த்தி மென்மையாகப் புகைந்தது.
    ரூமை ஒட்டி சிறு நடை; வலப்புறம் படுக்கையறையில் நீல நைலான் கொசுவலை கட்டிலுக்கு மேலே தூக்கி விடப்பட்டிருந்தது.

    உள்ளே நீண்ட நடை வழி. சமையலறையும் பாத்ரூமும் டைனிங் ஹாலும் உள்ளே இருக்க வேண்டும்.
    சிவாவை மேஜையருகே உட்கார வைத்துவிட்டு அவள் நேரே உள்ளே போனாள். இரண்டு கைகளிலும் இரு பீங்கான் ‘ஸாஸர்’களை ஏந்தித் திரும்பினாள்.

    மேஜையின் மீது வைத்தாள். ரஸகுல்லாவும், வறுத்த முந்திரியும்.
    “நீங்க?”

    “நீயாணு ‘கஸ்ட்.’ கதா க்ருத்தாய கஸ்ட்”
    அவன் ஸ்வீட்டை விண்டு வாயில் போட்டதும் வயிறு பசித்தது.

    அவள் அவனுக்கு எதிரில் நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு மேஜை மீது ஊன்றிய இரு கரங்களாலும் மோவாயைத் தாங்கிக் கொண்டு அவனை உற்றுப் பார்த்தாள்.
    அவனுக்குக் கூச்சமாக இருந்தது.

    ‘உச்சய்க்கு எந்தெங்கிலும் கழிச்சோ?”
    மத்தியானம் ஒன்றும் சாப்பிடவில்லை. அந்த தகவல் இவளுக்கு எதற்கு.
    “கழிச்சு” அவன் மலையாளம் பேசினான்.

    “எந்த கழிச்சு?”
    “சோறு”
    “நுண”
    “இல்லை. மெய்தான்.”

    பிரீதா நம்பினாள். மலையாளத்தில் விடுவிடென்று பேசிக் கொண்டு போனாள். அவள் கண்களில் இளமை நினைவுகள் தலையெடுக்கும் மெல்லிய துயர் படர்ந்தது.

    “சிவா, எனக்கு ஓர் இளம் பருவத் தோழன்இருந்தான். செரு துருத்தியில். செருதுருத்தி கேள்விப்பட்டிருக்கிறாயா? ஷோரனூர் ஜங்ஷனுக்குப் பக்கத்தில்…”
    “மகாகவி வள்ளத்தோல் பிறந்த ஊர்…”
    “அதேதான். கேரள கலாமண்டலி பிரசித்தி ஆச்சே”
    “கேள்விப்பட்டிருக்கிறேன்.”

    “அங்கே கதகளி பயில்வதற்காக கொடுங்கல்லூரிலிருந்து அவன் வந்திருந்தான். செக்கச் செவேலென்று ஒரு பெண் மாதிரி… உன் சாயலில் இருப்பான்.”

    “என் சாயல் என்பது எது? பெண் மாதிரியா… சிவப்பா?” சிவா சிரித்துக் கொண்டே கேட்டான்.
    “உன் முகம்… உன் நடை… உன் உயரம்”

    “அப்போது அவனுக்கு பதின்மூன்று வயது. கவிதை எழுதுவான். பாடுவான்”
    “பெண் குரலா?”

    “இல்லை… கம்பீரமான ஆண் குரல். உச்ச ஸ்தாயிக்குப் போனால் மனசை அடிமை கொள்ளும் பௌருஷம், முகத்துக்கும் இயல்புக்கும் பொருந்தாத கம்பீரமான குரல்.”
    அவனை இவள் காதலித்திருப்பாளோ!
    பிரீதாவே சொன்னாள்.

    “என்னை அவன் காதலித்தான். நானும்…”
    சிவா வாய்க்குக் கொண்டு போன ஸ்பூனை நிறுத்தினான்.
    “இட்ஸ் எ காஃப் லங்… கன்றுக்குட்டிக்காதல். கற்பூரம் எரியற மாதிரி, காட்டுக் குயில் பாடற மாதிரி.. மாசுமறு வில்லாத களிப்பு.. எனக்கும் பதின்மூன்று வயது”

    அவன் என்னவானான்? ஏமனுக்கோ துபாய்க்கோ தினாரோ ரியாலோ சம்பாதிக்கப் போய் விட்டானா…
    பிரீதாவே தொடர்ந்தாள்.

    “ஒரு நாள் என் கண்ணெதிரில்.. நான் பார்த்துக் கொண்டு நிற்கும்போதே அந்த பிரபாகர் செருதுருத்தியில் ஓடும் பாரதப்புழா நதியில் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டான்.. நாலாவது மைலில் அவன் பிரேதம் மறுநாள் கண்டுபிடிக்கப்பட்டது.”

    சமையலறையில் ஒரு டப்பா உருண்டது. பூனையோ! பிரீதா அசையவில்லை.
    “சிவா… அதுதான் என் வாழ்வில் நான் சந்தித்த முதலாவது மரணம்!”
    வெண்டிலேட்டர் மீது வெய்யில் தாளாமல் வந்து உட்கார்ந்த இரண்டு சிட்டுக் குருவிகள் கீச்சிட்டன.

    “உன்னைப் பார்க்கும் போது பிரபாகர் ஞாபகம் வருகிறது. உன் மாதிரியே, அவனும் கம்பீரமாக நிமிர்ந்து நிற்பான். ராஜவம்சம், அவன் முழுப் பெயர் ஆனப்பாலம் பிரபாகர வர்மா”
    இதை ஏன் சொல்கிறாள்? இன்று.. இந்த வேளையில்…

    “மாத்ருபூமியில் அவன் எழுதிய முதல் கவிதை பிரசுரமாகியிருந்தது… ஆனால்…”
    “ஆனால் என்ன?”

    “அது அவன் மறைந்த பத்தாம் நாள்தான் அந்தப் பத்திரிகையில் பிரசுரமாயிற்று”
    சிவா அவள் கண்களில் நீர் துளிர்த்ததைப் பார்த்து தலை கவிழ்ந்தான்.
    “அப்புறம் மரணம் அடுத்தடுத்து வந்து முகம் காட்டி விட்டுப் போயிற்று. அம்மா.. தம்பி.. அக்கா… ஒவ்வொருவராய் சட்டுச் சட்டென்று மறைந்து போனார்கள்… ஐம் ஸாரி…” அவள் முகத்தைத் துடைத்துக் கொண்டே புன்முறுவல் செய்தாள்.
    “ஏன்?”

    “என்னவோ பேசிக்கிட்டே போய் உன்னை வருத்தப்படுத்திட்டேன். ஒரு சந்தோஷத்தை நாம் கொண்டாட வேண்டிய சந்தர்ப்பத்திலே இதைச் சொல்லறேன்…”
    “இட்ஸ் ஆல் ரைட்”
    “தாமுவுக்குத் தெரியுமோ?…
    “இல்லே”

    “ரொம்ப சந்தோஷப்படுவார்”
    “ஆமாம்”
    “சாப்பிடு”
    “மதனபள்ளியிலிருந்து தந்தி வந்தது. ஊருக்குப் போயிருக்கார். அப்பா ஸீரியஸாம்…”

    “அறியாம், போன் செய்து”
    அவன் முந்திப் பருப்பைத் தின்று முடித்துக் கையலம்ப எழுந்தான். அறை மூலையிலிருந்த வாஷ் பேஸினைக் காட்டினாள் பிரீதா.

    பேஸின் அருகே சின்ன நாப்கின் தொங்கியது. கழுவியதும் கை துடைத்து கொண்டான்.
    “வீடு ரொம்பத் துப்புரவா இருக்கு. பர்ஃபெக்ட்லி க்ளீன்.”
    அவள் நாணத்தோடு சிரித்தாள்.

    “தாங்க்யூ”
    நாற்காலியில் அவன் வந்து உட்கார்ந்தான்.
    “சிவா… இனி வேலை தேட வேண்டாம். எழுதணும். அற்புதமாய்… உன்னதமாய் எழுதணும்.”

    அவன் அவளை வரம் வழங்கும் தேவதையைப் பார்ப்பது போல் நோக்கினான்.
    “ஜீவிதம் அநித்தியமாணு. ஒவ்வொரு நிமிஷமும் அநித்தியமாணு.”
    அழகும் ஆரோக்கியமும் இளமையும் பொலிந்து நின்ற அவளிடமிருந்து இந்த வாக்கு வருவது அதிசயமாக இருந்தது.

    அவன் பிரீதாவையே உற்றுப் பார்த்தான். அவள் மலையாளத்தில் சொல்லிக் கொண்டே போனாள்.
    “ஆனால் இந்த வாழ்க்கையின் மீது நீ நேசம் வைத்தால் அது நிலைத்து நிற்கும். அதற்கு அர்த்தமுண்டு. இந்த ஜனங்கள் மீது நீ அன்பு வைத்தால் நீ காவியங்களைப் படைக்கலாம்…”

    சிவாவின் கண்களுக்குள் ஊடுருவியது போன்று அவள் பேசினாள்.
    “ஆனா அந்த அன்பு பரிசுத்தமா இருக்கணும். லவ் ஃபர் லவ் ஸேக்”

    சிவாவுக்கு இன்னும் சற்று நேரம் அங்கே உட்கார்ந்திருக்க வேண்டும் போல் தோன்றிற்று. ஆனால் அதிக நேரம் இருந்து விட்டோம் என்று நினைத்தான். உடனே விடை பெற்றுக் கொண்டான்.

    Share
  • நிதர்சனம்

    —சரஸ்வதி ராஜேந்திரன்.

    வெளியூரிலிருந்து திரும்பி வந்த குடும்பத்தினர் வீடு திறந்து கிடப்பதைக் கண்டு பதறினர்.

    மகன் ஒருபக்கம், மகளொருபக்கம், தந்தை ஒரு பக்கம் என ஓடியதைக்கண்ட தாய்,
    “ச்சே … என்ன ஒரு சுய நலம்… அதது பொருட்களை பார்க்க ஓடுதுகள்” என அலுத்துக்கொண்டே தன் பீரோவை செக் பண்ணினாள்.

    நல்லவேளை என் லேப்டாப் இருக்கு என்றாள் மகள்.
    நல்ல வேளை என் பாஸ்போர்ட், விசா இருக்கு என்றான் மகன் .
    நல்லவேளை என் ஏ.டி.எம். கார்டு இருக்கு என்றார் தந்தை.

    முன் ஜாக்கிரதையா நகை, பண த்தையெல்லாம் லாக்கரில் வைத்தது நல்லதாப் போச்சு என்று சொன்ன அப்பா அம்மாவைக் கேட்டார், “உன்னுது ஏதாவதுபோச்சா?”

    “ஆமாம், மேஜையில் இருந்த டைஜின் மாத்திரை அட்டையைக் காணோம்”

    “அப்பா, எதற்கும் நம்ம ஏரியா போலீஸ்கிட்ட சொல்லிவைக்கலாமா?”என்று மகன் கேட்க …

    “வேண்டாம், இதைக் காரணம் காட்டிஅவர் தினமும் என்கிட்ட நூறு ரூபாய் கறக்கிறதுக்கா?” என்றார் அப்பா.

    Share
  • அவ்வளவுதான் விளக்கம்!

    நாகினி

     

    மனமது புரியவில்லை
    உண்மை மனிதமெது விளங்கவில்லை
    வெற்று வாய் வார்த்தை
    வெறுமை துயரதை துடைப்பதில்லை

    தன் நிலை புரியவில்லை
    குழம்பும் மனமது தெளியவில்லை
    மதியில் தெளிவு இருந்தும்
    விளம்பும் பொய்யதை கழற்றவில்லை

    தினம் தேடியும் கிடைக்கவில்லை
    பால்வெண்மை மனதினோர் உயிர்க்கவில்லை
    முகம் பார்த்து பேசிடுவோர்
    அகம் காண விழையவில்லை

    வானளக்கும் வாயோரத்திலில்லை
    அகங்குளிரும் அன்யோன்யம் எனுமுணர்வில்லை
    போலி முகமணியா மனிதமெது
    விளக்கம் தெளியும் விளக்கமில்லை!!

    … நாகினி

    Share
  • சிந்தனையில் சிகரம் தொடு!

    -ஆர். எஸ். கலா

    மண்ணில் போட்ட விதை
    அத்தனையும் முளை
    விடுவதில்லை

    முளையிட்ட விதை அத்தனையும்                   fruit tree
    பிழைப்பதும் இல்லை

    முளைத்த விதை அத்தனையும்
    விரிச்சமாவதும் இல்லை

    விரிச்சமான விதை அத்தனையும்
    பூத்துக் குலுங்கி காய்ப்பதுமில்லை

    காய்த்த  காய் அத்தனையும்
    கனியாவதும் இல்லை

    கனிந்த காய் அத்தனையும்
    புசிக்க உதவுவதும் இல்லை

    சுவைத்த கனியில் இருந்து
    கிடைத்த விதை அத்தனையும்
    மீன்டும் மண்ணில் புதைவதும்
    இல்லை

    குளம் குட்டை குப்பையில்
    பாதி, மீதி பாதையில் மிதி
    பட்டு உடைந்து வீணாகவே
    போகின்றது

    இச் சிறு விதையிலே
    இத்தனை ஏமாற்றங்கள்
    என்றால்…

    மனிதன் தன் வாழ்க்கையைக்
    கடக்கும்  ஒவ்வொரு நொடிப்
    பொழுதும்  எத்தனை ஏமாற்றங்களை
    அவன்  பார்க்க வேண்டி இருக்கும்

    அந்த ஏமாற்றமே அவனின்
    ஏற்றமான படி என்று துணிந்தால்
    விரைந்து விழும் வெற்றிக் கனி
    அவன் கையில்

    கல்லிலும் முளையிடும் விதை உண்டு
    மண்ணிலும் மடிந்து விடும்
    விதை உண்டு

    துணிந்து வெற்றி காணும் மனிதனும்
    உண்டு சோர்ந்து தோல்வி காணும்
    மனிதனும் உண்டு

    சிறு விதையில் விரிச்சம்  காணும்
    விதை போல் சிறந்த சிந்தனையில்
    வெற்றி காண முயற்சிசெய் மானிடனே!

     

    Share
  • திருப்புமுனைத் திருப்பதி!

    கோதை நாராயணன்

    அமர்க்கள 
    ஆரம்பம் எங்கள் 
    திருப்பதிப் பயணம்…!
    பெருமாளின் திருவடிப்                               balaji
    பெருமை உணர்ந்த 
    பரவசம் அனைவரிடமும்…!

    சந்திப்புகள் வந்தும் 
    சலிக்காமல் சென்ற ரயிலின் 
    வேகத்தை நட்பு கொண்டு 
    விவேகமாய் இறங்கியதும் 
    புரிந்தது தைரியத்தின் விலை…

    ஆவலாய்ப் பயணித்த எங்களின் 
    அடுத்த கட்டமோ அம்பாளை நோக்கி…
    என் தாய் திருவடி தேடிய யாவரும் 
    மெய் மறந்த அவ்வேளை,
    ரோஜா மணக்க 
    பட்டு ஜொலிக்க 
    தெய்வீகம் திணறச் செய்ய 
    அலங்காரத்தில் அம்சமாய் அம்பாள் 
    அன்பால் எங்களை ஆட்கொள்ள…
    பிரார்த்தனைக்கு வார்த்தையின்றித் தேடப் 
    பிள்ளையின் பசி அறியாத தாயாயென்ன ?
    இன்னும் 
    இனிமையாய் ரோஜா மணம் …!

    இன்முகமாய் நாங்கள்… 
    அவளின் கண்கள் பேசியதோ 
    பெருமாளைக் காணக் காத்திருந்த 
    பக்த கண்களோடு ரகசிய மொழி…

    அவளின் அருள் தித்திப்பில் 
    திகைப்பாய் நகர்ந்தோம் திருவடி காண…
    வகை வகையாய் வரிசைகள்…
    வான் முழுதும் கலந்த 
    என்பெருமாளின் அருள் சுகந்தம்…
    இடர்களை இடித்து 
    இன்பம் தரும் நம்பிகையொளி…

    ஆம்…தந்தார் தரிசனத்தை அமைதியாய்…
    மெய்சிலிர்க்கக் காணக் கண்கள் கோடி…
    சில்லென்று உணர்ந்த தருணம் 
    சிங்காரமாய் தெய்வமே…ஏழுமலையானே…ஸ்ரீனிவாசா…
    தங்க மேனியில் தணலாய் ஜொலிக்கக் 
    குவிந்த எங்கள் கரங்கள் 
    குறை தீர்ந்த திருப்தியில்…!

     

    Share
  • நாணயமானவளே…!

    -பிச்சினிக்காடு இளங்கோ

    நீ துணையிருந்தால்
    எனக்கு
    யானைபலம்

    அன்றாடம்
    எல்லாம் எளிதாகிவிடுகிறது                     one-rupee
    இல்லையேல் அரிதாகிவிடுகிறது

    துக்கம்கூடத்
    துக்கமாயில்லை

    கைகுலுக்கக் காத்திருக்கிறார்கள்
    இல்லையேல்
    கவனிக்கத் தவறிவிடுகிறார்கள்

    நீ இல்லாதபோதும்
    நிம்மதி இருக்கிறது
    கூட இருந்தால்
    அது கூடிவிடுகிறது

    நீ இல்லாதபோதும்
    எனக்கு
    முகவரியிருக்கிறது

    என் முகவரி
    என்னால் வந்தது
    அதன் ஒவ்வொரு
    அங்குல உயர்விற்கும்
    நானே காரணம்

    எனினும் என்னுடன்
    நீயும் இருந்துவிட்டால்
    பிறரைத்தேட வைக்கிறது

    இதுவரை
    என்னிடமிருந்தாலும்
    என்னிடம் வந்தாலும்
    உனக்குப் பெருமை
    இனி
    உன்னால் எனக்கும்பெருமை

    வாழ்க்கை
    பொருளுடையதாய் விளங்க
    நீதான் அடிப்படை

    நீயா நானா
    என்பதைவிட
    நீயும் நானும்
    சேர்ந்திருப்பதே
    தேவையானது
    நியாயமானது
    நாணயமானது

    நாணயமான
    வாழ்க்கைதானே
    நாகரீகமானது?

     

    Share
  • நினைக்கத் தெரியாத மனமே

    – ரா.பார்த்தசாரதி.

     

    ராகவன் மும்பையில் உள்ள ஒரு பெரிய நிறுவனத்தின் பொது மேலாளர். அவருக்கும் அவர் பிள்ளைக்கும் வலது கையில் ஆறு விரல்கள். அவருக்கு அதிர்ஷ்டமாகவே எல்லாம் நடந்தது. அவர் பிள்ளை முரளி இவருக்கு நேர்மாறாக ஓர் ஊதாரி. ஒரே பிள்ளையாக இருந்ததால் அவன் அம்மா நிர்மலா அவனுக்குச் செல்லம் கொடுத்து, கணவனுக்குத் தெரியாமல் பணம் கொடுத்து அவனைக் கெடுத்தாள். ஒரு நாள் ராகவன் கோபமாக பேசிவிட, முரளி யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்தான். ஒரு கம்பெனியில் காப்பி, டீ சப்பிளையராக மூன்று வருடங்களாக வேலை செய்து அவனால் மும்பையில் கைவிடப்பட்ட வடநாட்டுப் பெண்ணிற்கும், தனது மகனிற்கும் மாதம் ஒரு சிறுதொகை அனுப்புவான். அவனுக்கு அவன் அம்மாவிடம் ரொம்ப பாசம். அவளை நினைக்காத நாள் இல்லை. ஆனாலும் வீட்டிற்கு நாள் கிழமையில் கூட செல்வதில்லை. வருடா வருடம் ஐய்யப்பன் கோவிலுக்கு மட்டும் போய்வருவான்.

    ஒரு நாள் ராகவன் சென்னையில் உள்ள தன் கம்பெனியின் இன்ஸ்பெக்க்ஷனுக்கு வந்தார். அவரது மேனேஜரும் அவருக்கு காப்பி வரவழைத்தார். காப்பியுடன் வந்தவன் முரளி. தாடியுடன் வந்த முரளியை ராகவனுக்கு அடையாளம் தெரியவில்லை. முரளி ராகவனுக்கு காப்பி கொடுக்கும் போது கை நடுங்கி அவரது காலில் கொட்டிவிட்டான். உடனே தனது கைகுட்டையால் அதைத்  துடைக்கும் போது ராகவன் அவனது கையில் இருந்த  ஆறாவது விரலை பார்த்துவிட்டார். உடன் இருந்த மேனேஜர் முரளியை முட்டாள் என்று திட்டி அன்றைக்கே வேலையை விட்டுப் போகச் சொன்னார்.

    தாடி இருந்ததால் முரளியை ராகவனுக்கு அடையாளம் தெரியாவிட்டாலும் மேனேஜர் முரளி என்று அவன் பெயரைச் சொல்லி திட்டியதால்அவனை தனது மகன் எனத் தீர்மானித்தார். ராகவன் மேனேஜரிடம் நல்ல டெஷிஷன் எடுத்திங்க அன்றார். பிறகு முரளியை தனிமையில் அழைத்து கம்பெனிக்கு வெளியே நிற்கச் சொன்னார். அவனை தனது காரில் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். ரூமிற்குச் சென்றதும் முரளி அவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். அப்பா உங்களுக்கு காப்பி கொடுக்கும் போதே உங்க விரலை பார்த்தேன். ராகவனும் தானும் முரளி அவரது காலை துடைக்கும்போதே பார்த்துவிட்டதாகச் சொன்னார்.

    அன்று இரவே அவனை மும்பைக்கு அழைத்துச் சென்றார். முரளி அம்மா எப்படி இருக்கிறார்கள் என்று அவரிடம் கேட்டான். நீயே வந்து பார் என்றார் ராகவன் தனது மனதின் துக்கத்தை வெளிக்காட்டாமல். மும்பை சென்றதும் அம்மா என்று ஆசையுடன் அழைத்தவாறு உள்ளே நுழைந்த முரளி அதிர்ச்சி அடைந்தான். அவனது அம்மாவின் படத்திற்கு மாலை போடப்பட்டு இருந்தது. மிகவும் கண்கலங்கினான். கடைசி காலத்தில் என்னையும், உங்க அம்மாவையும் மதுமிதாதான் கவனித்தாள். நானும் என் மகளைப் போல அவளைப் பார்த்துக் கொள்கிறேன். மதுமிதாவின் பையனும் நல்லா படிக்கின்றான். அவன் நம்ம வீட்டில் சின்ன, சின்ன வேலை செய்கின்றான் என்றார். மது காப்பி கொண்டுவா என்று உள்நோக்கி குரல் கொடுத்தார். முரளி காபியுடன் வந்தவளைப் பார்த்ததும் அவன் மனைவியே அங்கிருப்பதைக் கண்டு திடுக்கிட்டான். ராகவனிடம் அப்பா மன்னித்து விடுங்க, இவள் உங்க மகள் இல்ல, மருமகள் என்றான். அத்துடன், இவளை என் மனம் ஒரு நாள் கூட நினைக்கத் தெரியாமல் இருந்து விட்டதே. எல்லாம் ஐய்யப்பன் அருள் என்று மனதில் நினைத்து கொண்டான்.

    Share
  • பள்ளி நினைவு!

    -றியாஸ் முஹமட்

    பாதி ராத்திரியில்
    பாதிக் கனவுகளோடு,
    எழுந்து விடுகிறேன்
    ஒரு
    பரதேசியாக….

    உடலில் ஒரு
    இறுக்கம்.
    மனதில் ஒரு
    ஏக்கம்…

    கண்டது
    கனவுதானே என்றதும்
    கண் கலங்கிப்
    போனேன்.

    கண்ட கனவு,
    பள்ளிக் கனவு.
    பனிக் கட்டியாக
    உறைந்து விடுகிறது
    என்னிதயம்.

    கலையாத கனவுடன்
    கனத்த இதயத்தோடு
    பள்ளி வளாகத்தில்
    நுழைந்து விடுகிறேன்.

    அதுதான்
    என் பள்ளி,
    ஓட்டமாவடி தேசியப்
    பள்ளி…

    புதிய கட்டிடங்களின்
    குறுகுறுப் பார்வை
    என்னை உரசி விளையாட,
    அடையாளம் கண்டு
    ஆரவாரத்தோடு,
    அணைத்துக் கொண்டது
    ஹிஜ்றா அரங்கும்,
    அஷ்ரப் மண்டபமும்.

    நுழைந்து விடுகிறேன்
    பள்ளி வளாகத்தில்.
    பள்ளி மண்ணை
    அள்ளித் தின்றேன்,
    பள்ளி அறையில்

    படுத்துப் புரண்டேன்,
    பள்ளித் தண்ணீரை
    வயிறு முட்டக்
    குடித்தேன்.

    தீர வில்லை
    அந்தத் தாகம்,
    தாங்க முடியவில்லை
    இந்தச் சோகம்.

    சிறிய மாணவர்கள்
    செய்யும் சிறு
    குறும்புகளை
    நான் செய்து
    பழைய மாணவன்
    என்பதை மறந்தே
    போனேன்…

    அன்றைய
    வகுப்பறைகள்தான்
    இன்றும்…
    கலர் மாறியதே
    தவிர
    உருவம் மாறவில்லை.

    நாங்கள் அடித்த
    பந்துகளின் தடமும்
    விட்ட ராக்கெட்டும்
    எழுதிய எழுத்தும்
    வரைந்த ஓவியங்களும்
    காதல் கதைகளும்
    அன்று போல்

    இன்றும்
    பேசிக் கொண்டுதான்
    இருக்கின்றன
    மெளனமாக
    அஜந்தா ஓவியங்களாக….

    கலங்கிப் போன
    என் கண்கள்.
    வகுப்பறையை
    மேய்ந்தது…
    என் மேசையைத்
    தேடுகின்றது…
    என் பெயர்
    அடையாளம்
    இடப்பட்ட மேசை
    இன்றும் இருக்கலாமோ
    என்று!

    அடங்காத
    ஆசையை
    அடக்க முடியாது
    தேட முற்படுகையில்
    அந்தப் பிஞ்சு
    மாணவ முகங்கள்
    சொல்லாமலே சொன்னது
    இது உங்கள்
    நேரமல்ல
    எங்கள் நேரம்
    என்று….

    கனத்த இதயத்தோடு
    வெளியே வர
    நாட்டிய மரங்கள்
    நடனமாட
    அதே வேப்பையும்
    பனையும்
    அங்கேயே இருக்க

    எங்கே
    போனார்கள் என்
    பள்ளி தோழர்கள்
    மட்டும்…?

    கலங்கிப் போன
    கண்கள் தேட
    நிஜத்தை நினைக்க
    இரத்த நாளங்கள்
    இறுக்கமாக…
    அமர்ந்து விடுகின்றேன்
    புதிய வகுப்பறையில்
    பழைய மாணவனாக!

    சிணுங்கி நிற்கும்
    சின்ன  மாணவனுக்கு
    எங்கே போய் – நான்
    வாங்கிக் கொடுப்பேன்
    சீனி மாமாவின்
    சீனி முட்டாசியும்
    சீவல், வடையும்!

    தாங்க முடியவில்லை
    இந்த வேதனை
    ஏன் இந்தச்
    சோதனை?

    நான் பிறக்க
    வேண்டும்
    என் தாயின்
    வயிற்றுக் கூடத்தில்
    அவள் (மீண்டும்)

    சேர்க்க வேண்டும்
    இதே என்
    பள்ளிக்கூடத்தில்!

     

    Share
  • அண்ணா!

    நாகினி

    images

    நடுத்தர குடும்பத்து நெசவாளர்
    நடராஜன் பங்காருஅம்மை பெற்ற மகவாளர்

    காஞ்சி தந்த பேச்சாளர்
    அண்ணா! திராவிட இயக்க மூச்சாளர்

    தமிழ் ஆங்கில எழுத்தாளர்
    மேடை நாடகப் புகழாளர்

    ராணி மங்கை மணவாளர்
    அண்ணா! அரசியல் வாழ்க்கைப் பயணாளர்..

    விடுதலை குடியரசு இதழாசிரியப் பொறுப்பாளர்
    திராவிட நாடு இதழ் தொடங்கிய மேலாளர்

    சுபப்பெலோஷிப் விருதுடன் யேல் பல்கலைக்கழகப் போற்றாளர்
    அண்ணா! மதராஸை தமிழ்நாடு ஆக்கிய பேற்றாளர்

    இறுதி ஊர்வலத்திலும் கின்னஸ் சாதனையாளர்
    அண்ணாசதுக்கத்தில் அஞ்சலிக்காகத் துயிலாளர்..

    அரசியல் இலக்கியம் இரு கண்ணாளர்
    அண்ணா! அடுக்குமொழி மேடைப்பேச்சின் மூச்சாளர்

    கடமை கண்ணியம் கட்டுப்பாட்டின் வித்தாளர்
    இருமொழிக் கொள்கையைச் சட்டமாக்கிய விந்தையாளர்

    அண்ணாநூற்றாண்டு நூலகம் உருவாக்கப் பெயராளர்
    அண்ணா! பல்நூற்றாண்டிற்கும் மறையாத புகழாளர்..!!

    .. நாகினி

    Share
  • பண்டரி தரிசனம்!

    கிரேசி மோகன்

    ஸ்ரீமத் பாண்டுரங்க பக்த விஜயம் வாசித்துக் கொண்டிருக்கிறேன்….வெண்பாவில் எழுத வழக்கம் போல் ஆசை வந்தது….காப்புச் செய்யுள் எழுதி கணபதியிடம் முடித்துத் தரும் பொறுப்பை விட்டு விட்டேன்….பார்க்கலாம் என்ன ஆகிறதென்று….

    images

    காப்புச் செய்யுள்
    ———————

    “பண்டரி நாதரின் பக்த விஜயத்தை,
    சுண்டெலி தாங்கும் சிவக்கொழுந்தே -விண்டுரைக்க
    வாராய் விநாயகா வாக்கில் அமர்ந்தெனக்கு
    தாராயுன் தம்பியின் தமிழ்”…..கிரேசி மோகன்…

    “வனிதை பதுமா வதியை வரித்து
    புனிதமண வாழ்வில் புகுந்தார்;-இனிதான
    பாரியா ளோடு பிணைந்தாலும், போக்கினார்
    பூரியானில் பூரித்து போது”

    “விரகதா பத்தால் வெயிலாய் தலையில்,
    கரகமாடும் சூட்டைக் குறைக்க, -உருகுமுந்தன்,
    பாதப் பனிமலரை ராதேவை” என்பதாய்
    கீதகோ விந்தக் கவி”

    “பதிவிரதா தர்மம் பழகிடும் பத்மா
    வதிவழி பாடு ,விரதம் -துதியென்று
    கஷ்டப் படாமலே கண்டாள் கணவனாய்,
    அஷ்டபதி நாயகனை அன்று”….

    —————————————————————————

    images (1)
    நாமடைதல் சிற்றின்பம் நாமாதல் பேரின்பம்
    நாமாதல் நாமடைய நாடுவீர் -நாமா
    வளிசொல்லி பண்டரி விட்டலனை வாழ்த்தி
    களிகொள் அடியார்தம் கூட்டு….

    இல்லா ததைத்துரத்தி செல்லா ததைச்சேர்த்து
    பொல்லா தவனென்ற பேர்வாங்கி -நில்லாது
    விட்டிலென மாயா வெளிச்சத்தில் வீழாது
    விட்டலிருள் வண்ணன்தாள் வீழ்.

    தொட்டால் சுடுவான் தொடாமல் இருப்போரை
    கொட்டோகொட் டென்று குளிர்விப்பான் -விட்டலன்
    சுட்டபழம் ஏற்பான் சுடாத பழங்களை
    பட்டறையில் வைப்பான் புதைத்து

    வாழை யடிவாழை வந்தோர் வளத்துடன்
    வாழ அடிவைப்பாய் வீட்டுக்குள் -ஏழை
    சகாயா ஏபாண்டு ரங்கா என்னுள்
    புகாயோ புகல்வாய் பதில்.

    வண்டரி யென்றரி யாமலே வந்திரு
    புண்டரி காட்ஷத்தைப் பார்க்கின்ற -பண்டரி
    விட்டலா செங்கலை விட்டுவா வெவ்வினை
    கொட்டுதே தேளாய்க் கடுத்து.

    சேணம் பிடித்தைவர் சேனை ஜெயித்திட
    வானத்து வைகுண்டம் விட்டகன்ற -ஓணத்தன்
    வாத புரீசன் வடமதுரா மன்னவன்
    கீதகோ விந்தந்தாள் காப்பு.

    “விட்டலை(விட்டு அலை) பாற்கடல், வீர மராத்தியர்
    கட்டளைக்கு கல்லேறி காத்திருக்கும்- விட்டலை,
    பாண்டுரங்க நாதனை, பண்டரி தேவனை
    வேண்டுவோர்க்கு வாழ்விலென்றும் WIT”….

    Share