திருப்புமுனைத் திருப்பதி!
கோதை நாராயணன்
அமர்க்கள
ஆரம்பம் எங்கள்
திருப்பதிப் பயணம்…!
பெருமாளின் திருவடிப்
பெருமை உணர்ந்த
பரவசம் அனைவரிடமும்…!
சந்திப்புகள் வந்தும்
சலிக்காமல் சென்ற ரயிலின்
வேகத்தை நட்பு கொண்டு
விவேகமாய் இறங்கியதும்
புரிந்தது தைரியத்தின் விலை…
ஆவலாய்ப் பயணித்த எங்களின்
அடுத்த கட்டமோ அம்பாளை நோக்கி…
என் தாய் திருவடி தேடிய யாவரும்
மெய் மறந்த அவ்வேளை,
ரோஜா மணக்க
பட்டு ஜொலிக்க
தெய்வீகம் திணறச் செய்ய
அலங்காரத்தில் அம்சமாய் அம்பாள்
அன்பால் எங்களை ஆட்கொள்ள…
பிரார்த்தனைக்கு வார்த்தையின்றித் தேடப்
பிள்ளையின் பசி அறியாத தாயாயென்ன ?
இன்னும்
இனிமையாய் ரோஜா மணம் …!
இன்முகமாய் நாங்கள்…
அவளின் கண்கள் பேசியதோ
பெருமாளைக் காணக் காத்திருந்த
பக்த கண்களோடு ரகசிய மொழி…
அவளின் அருள் தித்திப்பில்
திகைப்பாய் நகர்ந்தோம் திருவடி காண…
வகை வகையாய் வரிசைகள்…
வான் முழுதும் கலந்த
என்பெருமாளின் அருள் சுகந்தம்…
இடர்களை இடித்து
இன்பம் தரும் நம்பிகையொளி…
ஆம்…தந்தார் தரிசனத்தை அமைதியாய்…
மெய்சிலிர்க்கக் காணக் கண்கள் கோடி…
சில்லென்று உணர்ந்த தருணம்
சிங்காரமாய் தெய்வமே…ஏழுமலையானே…ஸ்ரீனிவாசா…
தங்க மேனியில் தணலாய் ஜொலிக்கக்
குவிந்த எங்கள் கரங்கள்
குறை தீர்ந்த திருப்தியில்…!