பள்ளி நினைவு!
-றியாஸ் முஹமட்
பாதி ராத்திரியில்
பாதிக் கனவுகளோடு,
எழுந்து விடுகிறேன்
ஒரு
பரதேசியாக….
உடலில் ஒரு
இறுக்கம்.
மனதில் ஒரு
ஏக்கம்…
கண்டது
கனவுதானே என்றதும்
கண் கலங்கிப்
போனேன்.
கண்ட கனவு,
பள்ளிக் கனவு.
பனிக் கட்டியாக
உறைந்து விடுகிறது
என்னிதயம்.
கலையாத கனவுடன்
கனத்த இதயத்தோடு
பள்ளி வளாகத்தில்
நுழைந்து விடுகிறேன்.
அதுதான்
என் பள்ளி,
ஓட்டமாவடி தேசியப்
பள்ளி…
புதிய கட்டிடங்களின்
குறுகுறுப் பார்வை
என்னை உரசி விளையாட,
அடையாளம் கண்டு
ஆரவாரத்தோடு,
அணைத்துக் கொண்டது
ஹிஜ்றா அரங்கும்,
அஷ்ரப் மண்டபமும்.
நுழைந்து விடுகிறேன்
பள்ளி வளாகத்தில்.
பள்ளி மண்ணை
அள்ளித் தின்றேன்,
பள்ளி அறையில்
படுத்துப் புரண்டேன்,
பள்ளித் தண்ணீரை
வயிறு முட்டக்
குடித்தேன்.
தீர வில்லை
அந்தத் தாகம்,
தாங்க முடியவில்லை
இந்தச் சோகம்.
சிறிய மாணவர்கள்
செய்யும் சிறு
குறும்புகளை
நான் செய்து
பழைய மாணவன்
என்பதை மறந்தே
போனேன்…
அன்றைய
வகுப்பறைகள்தான்
இன்றும்…
கலர் மாறியதே
தவிர
உருவம் மாறவில்லை.
நாங்கள் அடித்த
பந்துகளின் தடமும்
விட்ட ராக்கெட்டும்
எழுதிய எழுத்தும்
வரைந்த ஓவியங்களும்
காதல் கதைகளும்
அன்று போல்
இன்றும்
பேசிக் கொண்டுதான்
இருக்கின்றன
மெளனமாக
அஜந்தா ஓவியங்களாக….
கலங்கிப் போன
என் கண்கள்.
வகுப்பறையை
மேய்ந்தது…
என் மேசையைத்
தேடுகின்றது…
என் பெயர்
அடையாளம்
இடப்பட்ட மேசை
இன்றும் இருக்கலாமோ
என்று!
அடங்காத
ஆசையை
அடக்க முடியாது
தேட முற்படுகையில்
அந்தப் பிஞ்சு
மாணவ முகங்கள்
சொல்லாமலே சொன்னது
இது உங்கள்
நேரமல்ல
எங்கள் நேரம்
என்று….
கனத்த இதயத்தோடு
வெளியே வர
நாட்டிய மரங்கள்
நடனமாட
அதே வேப்பையும்
பனையும்
அங்கேயே இருக்க
எங்கே
போனார்கள் என்
பள்ளி தோழர்கள்
மட்டும்…?
கலங்கிப் போன
கண்கள் தேட
நிஜத்தை நினைக்க
இரத்த நாளங்கள்
இறுக்கமாக…
அமர்ந்து விடுகின்றேன்
புதிய வகுப்பறையில்
பழைய மாணவனாக!
சிணுங்கி நிற்கும்
சின்ன மாணவனுக்கு
எங்கே போய் – நான்
வாங்கிக் கொடுப்பேன்
சீனி மாமாவின்
சீனி முட்டாசியும்
சீவல், வடையும்!
தாங்க முடியவில்லை
இந்த வேதனை
ஏன் இந்தச்
சோதனை?
நான் பிறக்க
வேண்டும்
என் தாயின்
வயிற்றுக் கூடத்தில்
அவள் (மீண்டும்)
சேர்க்க வேண்டும்
இதே என்
பள்ளிக்கூடத்தில்!