Year: 2016

  • இலக்கியங்களில் காதுகுத்துதல்

    -முனைவா் பா.பொன்னி

    தன்னைச் சுற்றி வாழும் மனிதா்களின் செயல்களைக்கண்டு தானும் அதனைப் போன்றே செய்ய முற்படுவது மனிதனின் இயல்பு. மனிதா்களின் இந்த இயல்பே சடங்கு முறைகளுக்குக் காரணமாக அமைகிறது. காதுகுத்துதல் என்பது முதன் முதலில் பழக்கமாகிப் பின்னர்  வழக்கமாகிச் சடங்காக மாறியிருக்கிறது. சடங்குகள் இருவகைப்படும். அவை மங்கலச் சடங்கு மற்றும் அமங்கலச் சடங்கு. இவற்றுள் மங்கலச் சடங்குகளுள் ஒன்றான காது குத்துதல் குறித்து இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள கருத்துகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

    சங்க இலக்கியங்களில் காதணி அணிதல்

    சங்க இலக்கியங்களில் காது குத்துதல் ஒரு சடங்காகப் பதிவு செய்யப்பட வில்லை. ஆடவரும் மகளிரும் தம் காதுகளை மலா்களைக் கொண்டும் அணிகலன்களைக் கொண்டும் அலங்கரித்த தன்மை இலக்கியங்களில் காணப்படுகின்றது.
    சுடுநீா் வினைக் குழையின் ஞாலச் சிவந்த
    கடிமலா்ப் பிண்டி தன் காதில் செரீஇ
      (பரி 12: 87-88)

    இப்பாடலடிகளில் தலைவி அசோகின் சிவந்த புதுமலரை, தீயில் இட்டுச் சுட்டமையால் ஒளிமிக்க இயல்புடைய தொழிற் சிறப்புடைய காதணி போல் தொங்கும் படியாகத் தன் செவியில் செருகிக் கொண்டாள் என்று குறிக்கப்பட்டுள்ளது. இதன் வழி மகளிர் மலா்களைச் செவியில்சூடித் தம்மை அழகுபடுத்திக் கொண்டமையை அறியமுடிகிறது.

    சாய்குழை பிண்டித் தளிர் காதில் தையினாள்
    பாய் குழை நீலம் பகலாகத் தையினாள்
    குவளைக் குழைக்காதின் கோலச் செவி
    (பரி 11:  95-98)  
    என்ற பாடலடிகள் அசோகந் தளிரையும், குழையையும் அணிந்தமையைச் சுட்டுகின்றன.

    மகளிர் குழை அணிதல்

    மகளிர் அட்டிகை, இட்டடிக்கை, ஓலை, மாணிக்கஓலை, கடிப்பினை, கடுக்கன், கன்னப்பூ, குண்டலம், குணுக்கு, குதம்பை, குறடு, குழை, குவளை, கொப்பு, சன்னாவ தஞ்சம், சின்னப்பூ, செவிப்பூ, தடுப்பு, கொப்பு, சன்னாவ தஞ்சம், சின்னப்பூ, செவிப்பூ, தடுப்பு, தண்டட்டி, தாளுருவி, திரிசரி, தோடு, பொன்தோடு, மணித்தோடு, நவசரி, நவகண்டிகை, நாகபடம், பஞ்சசரி, பாம்படம், பாம்பணி, புகடி, மகரி, மஞ்சிகை மடல், மாத்திரை, முடுச்சு, முருகு, மேலீடு, வல்லிகை, வாளி போன்ற காதணிகளை அணிந்துள்ளனா்.  கடிப்பு என்னும் அணிகலனை தொடர்ந்து அணிந்து வர காதுமிக நீண்டதாக ஆகும் என்பா். இவற்றுள் குழை என்னும் அணிகலனே சங்க இலக்கியங்களில் பெரும்பான்மையான இடங்களில் குறிக்கப்பட்டுள்ளது.

    களிர் பல்வேறு வகையான குழைகளை அணிந்தமையை சங்க இலக்கியங்கள் வழி அறிலாகின்றது.

    ஊசல் ஒண்குழை உடை வாய்த்தன்ன (நற் 286 :1)

    கனங்குழைக்கு அமா்த்த சேயரி மழைக்கண் (நற் 16 : 9)

    கயல் ஏா் உண்கண் கனங்குழை (நற் 316 : 3)

    குழை மாண் ஒள் இழை (அகம் 6 : 7)

    கொடுங்குழைக்கு அமர்த்த நோக்கம் (அகம் 3 : 17)

    கொடுங்குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கை (அகம் 236 : 12)

    பனி பொலங் குழைத் தெறிப்ப (அகம் 351:12)

    என்ற அடிகள்  மகளிர் குழை அணிந்தமையை விளக்குகின்றன.

    ஒண்சூட்டு அவிர்குழை மலைந்த நோக்கே (அகம் 253 : 26)

    என்ற அடியில் மத்தகமணி அமைந்து விளங்கும் காதணி  சுட்டப்படுகிறது.

    செஞ் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர ( அகம் 86 : 27 )

    என்ற அடியில் சிவந்த ஒளி பொருந்திய குழை அணிந்தமை சுட்டப்படுகிறது.

    ஆடவா் குழை அணிதல்

    சங்க காலத்தில் ஆடவரும் குழை அணிந்தமையைக் காணலாகின்றது.

    பலதேவன்  ஒரு காதில் குழை அணிந்தவனாகச் சுட்டப்படுவதனை

    வாய் வாங்கும் வளை நாஞ்சில் ஒரு குழை ஒருவனை ( பரி 1: 5 ) என்ற அடியால் அறியலாகின்றது.

    குழையன் கோதையன் குறும் பைந் தொடியன் ( நற் 50 : 2 ) என்ற அடியும் ஆடவர் குழை அணிந்தமைக்குச் சான்றாக அமைகிறது.

    பாலியல் உணா்வு

    காதணி பாலியல் உணா்வின் வெளிப்பாடாகவும் அமைகிறது. தொல்காப்பியா் களவுக்கால மெய்ப்பாடுகளுள் ஒன்றாக காதொன்று களைதல் என்பதனைக் குறிப்பிடுகிறார். காதொன்று களைதல் என்பது, கூந்தலைப் போலன்றிக் காதிடைப்பெய்து அணியப்பெற்ற தோடு முதலிய அணிகளுள் ஒன்று நிற்ப மற்றொன்று நெகிழ்ந்து வீழ்தல். இதனைச் செவியில் பூட்டாது செருகிய தோடு ஒன்றைத் திருத்துவாள் போலக் கழற்றுதல்’ என்பர்.

    தலைவனின் மார்பில் உற்ற முயக்கத்திடை நெரிந்த குழையுடையவளாக பரத்தை திகழ்ந்தாள் என்பதனை

    மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர்குழை (நற் 20:9) என்ற பாடலடி விளக்குகின்றது.

    பக்தி இலக்கியத்தில் காதுகுத்துதல்

    சங்க காலத்தில் அழகிற்காக அணியப்பட்ட காதணி பக்திஇலக்கிய காலத்தில் சடங்காக மாற்றம் பெறுகிறது.

    காரிகை யார்க்கு முனக்கு மிழுக்குற்றென்
    காதுகள் வீங்கி யெரியில்
    தாரியா தாகில் தலைநொந்தி டுமென்று
    விட்டிட்டேன் குற்றமே யன்றே
    சேரியில் பிள்ளைக ளெல்லாரும் காது
    பெருக்கித் திரியவும் காண்டி
    ஏர்விடை செற்றிளங் கன்றெறிந் திட்ட
    இருடீகே சாஎன்றன் கண்ணே (பெரியாழ்வார் திருமொழி 2 : 3- 10) என்ற பாசுரம் காதுபெருக்குதல் என்ற பெயரில் குழந்தைகளுக்கு காதுகுத்தியமையை விளக்குகிறது.

    நாட்டுப்புறப்பாடல்களில் காதுகுத்துதல்

    ஆண்குழந்தையாக இருந்தாலும் பெண் குழந்தையாக இருந்தாலும் காதுகுத்தும் மரபு பிற்காலத்தில் தமிழரிடையே வளா்ச்சிபெற்றது. “குழந்தைக்குச் சிறுகாயம் ஏற்படாவிட்டால் எமன் குழந்தையைத் தூக்கிச் சென்றுவிடுவான் என்ற நம்பிக்கையின் காரணமாகக் காதுகுத்தும் வழக்கம் தமிழ்நாட்டில் தோன்றியிருக்க வேண்டும். காதுகுத்தும் வழக்கம் தமிழ்நாடு மட்டுமின்றி, ஆசியா, எகிப்து போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது. காதுகுத்தும்போது ஏதேனும்  உலோகத்தையும் அணிவிப்பா். தீமைதரும் ஆவிகள் தலை,வாய்,மூக்கு, காது ஆகிய உறுப்புகள் வழியாக எளிதில் புகுந்துவிடும் என்ற நம்பிக்கையில் ஏதேனும் ஓா் உலோகத்தை அணிவித்தால் காது வழியாகத் தீ ஆவி நுழைவதைத் தடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இப்பழக்கம் ஏற்பட்டிருக்கலாம். காதுகுத்தும் சடங்கிற்கு இத்தகைய நம்பிக்கைகள் அடிப்படைக் காரணமாக இருக்கலாம் என்று நம்பப் படுகிறது”. (சு.சக்திவேல் நாட்டுப்புற இயல் ஆய்வு ப. 195)

    மேலும் “குழந்தையின் உடலில் காயம் ஏற்படுத்துவதால் தீய ஆவிகளினால் துன்பம் உண்டாகாது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இச்சடங்கு தோன்றியது என்பா்” (ஞானசேகரன் மக்கள்வாழ்வில் மந்திரச் சடங்குகள் ப.23) தீய ஆவிகளின் தாக்குதலிலிருந்து குழந்தைகளைக் காக்க ஏற்பட்ட இச்சடங்கு காலமாற்றத்தால் பெண்ணுக்குப் பிறந்தவீட்டுடன் நெருக்கத்தினை ஏற்படுத்தும் நோக்கில் வீட்டில் நடத்தும் விழாவாக மாற்றம்பெற்றது எனலாம்.

    மாம்பிஞ்சு கொண்டு
    மதுரைசிமிக்கி கொண்டு
    காதுகுத்த வாராக
    கனகமுடி உங்களம்மான் (தமிழர் நாட்டுப்பாடல்கள் ப. 101) என்ற நாட்டுப்புறப்பாடலடிகள் காதுகுத்துவதில் மாமனின் சிறப்பிடத்தை அறியத் தருகின்றன.

    தற்காலத்தில் காதுகுத்துதல்

    தற்காலத்தில் காதுகுத்துதல் சடங்குமுறையாக மாற்றம் பெற்றாலும் அச்சடங்கிற்கு ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் கருத்துகள் கூறப்படுகின்றன. ஆன்மீக ரீதியாக ’ஓ’ என்னும் காதுவடிவில் ’ம்’ என்னும் புள்ளி குத்தப் பெறுவதால் இயக்கம் – புனிதத்தன்மை கிடைக்கிறது என்பதை உணர்த்தவே இந்தக் காதுகுத்தல் இந்து சமயத்தவரிடையே உள்ளது என்பா். அறிவியல்ரீதியாக தங்கம் போன்ற உலோகங்களின் வழியாகத் தண்ணீர் வந்து நம் உடலில் படும்போது நம் உடல் நலத்துக்கு உகந்தது என்பா். மேலும் காதுகுத்துவதால் ஹிரணியா, ஹைடிரோசல் முதலிய நோய்கள் வராது என்றும் குறிப்பிடுவா்.

    சங்ககாலத்தில் காதணிகள் அழகிற்கென அணியப்பட்டன. பக்தி இலக்கிய காலத்தில் அது சடங்காக மாற்றம் பெற்றது. பிற்காலத்தில் பெண்களுக்குப் பிறந்த வீட்டுடனான தொடர்பிற்காகவும் தாய்மாமனின் முதன்மைக்காகவும் நடத்தப்படும் சடங்காகவும், பெண்களுக்கான சீா்முறைகளில் இடம்பெறும் சடங்காகவும் மாறியது. இக்காதுகுத்துதல் அறிவியல் முறைப்படி உடல்நலனுக்கு ஏற்றதாகவும் அமைகிறது.

    *****

    -முனைவா் பா.பொன்னி
    உதவிப்பேராசிரியா் மற்றும் துறைத்தலைவா்

    எஸ்எஃப்.ஆா்.மகளிர் கல்லூரி (தன்னாட்சி)
    சிவகாசி.

     

    Share
  • வாழ்க்கை ஒரு ராகமாலிகை  

    க. பாலசுப்பிரமணியன்

     

    பூபாளம் காலையிலே, புன்னகையில் ஆனந்த பைரவியே

    பொலிவுடனே காம்போதி, பொழுதிறங்க நீலாம்பரி

    போதை தரும் மோகனமே; போற்றிடவே கல்யாணி

    புவனமெங்கும் ராகங்களே! புலன் போடும் தாளங்களே!

     

    மூச்சினிலே ஒரு ராகம், மூச்சிரைக்க ஒரு ராகம்,

    சிரிப்பினிலே ஒரு ராகம், சிங்கார நடையினிலே ஒரு ராகம்

    கொதிக்கும் உலையினிலும் கொழுந்து வடியும் நெருப்பினிலும்

    சுவைக்கும் நாவினிலும் சுகமான ராகங்களே!

     

    அருவியின் பாய்ச்சலிலும் அன்னத்தின் நடையினிலும்

    சிட்டுக்குருவியின் சிறகசைவிலும் சிங்கத்தின் கர்ஜனையிலும்

    மோதகன் களிறு மதமுண்டு பிளிறுகையிலும்

    மோகத்தின் முனகலிலும் மலர்ந்திடும் ராகங்களே !

     

    மணி ஓசையிலே ஒரு ராகம்,

    முத்துச்சிதறலிலே ஒரு ராகம்,

    மழலைச்சிரிப்பினிலே ஒரு ராகம்,

    மேகமுழக்கதிலும் ஓர் ராகம்!!

     

    அம்மாவென்பது கன்றின் ராகம்

    அமைதி என்பது ஆன்மாவின் ராகம்

    மனத்தின் உளைச்சலில் மடமையின் ராகம்

    மரணத்தின் வாயிலில் முகாரியே ராகம்!!

     

    வாழ்க்கைவீதியில் எத்தனை ராகங்கள்!!

    வாழ்வில் பொறிகள் ஐந்தும் போடும் தாளங்கள்

    வாழ்ந்து பார்த்தால் அத்தனையும் வேஷங்கள்

    வானும் நிலமும் சேர்ந்து பாடும் கீதங்கள்!

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 82-இன் முடிவுகள்

     

    -மேகலா இராமமூர்த்தி

     cockandhen

    கோழிச்சேவலின் பின்னே அதன் அளகு (பெட்டைக் கோழி) அழகுநடை பயிலும் கவின்காட்சியைத் தன் புகைப்படக்கருவிக்குள் அள்ளிவந்திருப்பவர் திரு. பிரேம்நாத் திருமலைசாமி; இவ்வாரப்போட்டிக்கு இதனைத் தேர்வுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் எம் நன்றி!

    அதிகாலை வேளையில் சேவல் எழுப்பும் கூவல், ”சோம்பல் விடுத்துச் செயலாற்றப் புறப்படு!” என்று மாந்தருக்கு  அதுவிடுக்கும் அறைகூவலாகும்!

    கண்ணைக்கவரும் இவ்வண்ணக்காட்சி நம் கவிஞர்களின் கற்பனைச் சிறகுகள் உயரப்பறக்க உத்வேகமளிக்கும் என நம்புகின்றேன்.

    இனி, கவிதைகளைப் பார்வையிடுவோம்!

    *****

    சேவலின்பின்னே அன்போடு நடைபயிலும் பேடையைப்போல் கணவனும் மனைவியும் ஒன்றுபட்டு (இல்)வாழ்ந்தால் அது நல்வாழ்வாய் மலரும் என்கிறார் திரு. ரா.பார்த்தசாரதி

    சேவல் கூவிதான் பொழுது விடியுது
    கோழி தன் இரையைத் தேடி அலையுது
    ஆண் சம்பாதித்தால்தான் குடும்பத்திற்கு விடிவு
    பெண் சம்பாத்தியம், பற்றாக்குறைக்கு ஓர் தீர்வு!
    சேவலும், நீர்நிலைக்குத் தன் பெட்டையுடன் செல்கின்றது,
    தாகம் தீர்க்கவும், இரைதேடவும் வழி காண்பிக்கின்றது
    […]
    ஆணும்
    பெண்ணும் பணத்திற்காக வேறிடம் செல்கின்றனரே
    குழந்தைகளிடம் அன்பைக் காட்ட நேரமில்லை என கூறுகின்றனரே!
    கூரை ஏறிக் கோழி கூவினாலும் ஓசையில்லை
    கோழி முட்டை இட்டாலும் சேவல் அடைகாப்பதில்லை
    ஆண்களும், பெண்களும்,பொருள்  ஈட்டாமலில்லை
    குழந்தைகளுக்கு நல்ல உணவும், கல்வியும் அளிக்காமலில்லை!
    சேவலுக்கு கொண்டை அழகு, மயிலுக்கு தோகை அழகு,
    சேவலுக்குப் பின் இரண்டடி பின்னே வீட்டுக் கொடுத்து செல்கிறதே
    ஆணும்,பெண்ணும் வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து வாழ்வதே அழகு…!

    *****

    ”உயிர்களைக் கொன்று புசித்தல் பாவம் என்று வள்ளுவர் சொன்னாலென்ன… சீவகாருண்ய வள்ளலார்தான் சொன்னாலென்ன? ’கொன்றால் பாவம் தின்றால் போச்சு’ எனும் மாந்தரின் சித்தாந்தம் மாறாதவரைத் தம் உயிருக்கு நாட்டில் உத்தரவாதமில்லை என்றுணர்ந்த கோழியும் சேவலும் காட்டைநோக்கிப் புறப்பட்டுவிட்டன!” என்று வேதனையோடு விளம்புகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    மனவருத்தம் கோழிகளுக்கு,
    மனிதன் மீது..

    இனவிருத்திக்கென்று முட்டையிட்டால்,
    இவன் விருந்தாக்கிவிடுகிறான்..

    சாமி பேரைச்சொல்லி
    பலியிட்டு எங்களைச்
    சாப்பாடாக்கிக் கொள்கிறான்..

    விருந்து இவனுக்கு வந்தால்,
    வருந்தவேண்டியது நாங்கள்
    அறுத்துவிடுகிறான் கழுத்தை..

    செல்லப் பிராணிகளாய்
    வளர்ப்பது,
    கொல்வதற்குத்தானோ..

    இனியும்
    இவனுடனிருந்தால் ஆகாதென,
    சேவலும் கோழியும்
    சேர்ந்தே கிளம்பிவிட்டன
    காட்டுக்கு…!
     

    *****

    நகரமயம் நல்லுயிர்களுக்கு நரகமாய் மாறிவிட்ட சூழலில், இன்பம்தரும் இயற்கையோடு, எழில்கொஞ்சும் பறவைகளும் விலங்குகளும் சேர்ந்தேஅழியும் அவலம் அரங்கேறிவருகின்றது. கிராமியச்சூழலை மீட்டாலன்றி இக்கொடுமைக்கு முடிவுகட்ட இயலாது! என்று எதார்த்தம் பேசுகின்றார் முனைவர். மா. பத்ம பிரியா.

    நாகரிகப் படையெடுப்பால்
    நசிந்து வரும் கிராமியச்சூழல்
    ஆறுகளும் குளங்களும் காடுகளும் சோலைகளும்
    ஆரோக்கியம் தரும் காற்றும் நீரும் கரைந்து போயின
    நாட்டுக் கோழி நாட்டுச்சேவல்
    நம் நாட்டின் பாரம்பரிய உணவு,உடை,கலாசாரம்
    நாட்டுணா்வு என அடுத்தடுத்த நன்மைகள்
    நலக்கேடாய் மரணப்படுக்கையில்
    நீரோடைகளும் சார்ந்திருக்கும் மரங்களும்
    ஆதரக்க ஆளின்றி
    நிழலின்றிக் கருகின
    எப்போதோ நம் புகைப்படப்பதிவுகளில்
    புதைந்திருக்கும் இயற்கை காட்சிகள்
    விழிகளுக்குப் புத்துணர்வு தருகின்றன
    வருங்காலத்தினர் இயற்கை காட்சிகளை
    ஆவணப்படங்களில் காணும் அவலம்…
    குறுகிய கால உற்பத்தியால்
    விலங்குகளும்,பறவைகளும் வளர்ந்தாலும்
    நமது பாரம்பரிய அடையாளம் தொலைந்து போவது
    நமக்கு ஏன் புரியாமல் போனது?
    நீரும் நிலனும் செழிக்க
    விலங்கும் பறவையும் காக்க
    நலம் பயக்கும் கிராமியச் சூழலை வளர்ப்போம்
    நாகரிக நஞ்சால் மாண்டு போவதை தடுப்போம்

    *****

    கொண்டைச்சேவலும் அதன் அண்டைநிற்கும் பேடையும் பத்திரமாய்வாழப் பாதுகாப்பான இடத்துக்கு அவற்றை அனுப்பிவிட்ட மகிழ்ச்சி கவிஞர் திருமிகு. சியாமளா ராஜசேகரின் கவிதையில் வழிந்தோடக் காண்கிறேன்.

    கொண்டை சேவல் போகுது
    ****
    கோழி பின்னே தொடருது!
    தண்ணீர்க் குளத்தைத் தேடியே
    ****
    தாகத் தோடு செல்லுது!
    மண்ணில் புழுக்கள் இல்லையோ
    ****
    மயங்கி இங்கே வந்ததோ?
    கெண்டை மீனைப் பிடிக்கவோ
    ****
    கிளம்பி இரண்டும் வந்தது!
    கண்ணில் பட்டால் காலிதான்
    ****
    கறியாய் மணப்பீர் வீட்டிலே!
    புண்ணாய் நெஞ்சம் வலித்திடும்
    ****
    புரிந்து விரைந்தே ஓடுவீர்!
    எண்ணம் அறிந்து செயல்பட
    ****
    என்னால் முடிந்த உதவியே!
    வண்ண உலகில் மகிழ்ச்சியாய்
    ****
    வாழ்க நீவிர் இருவரும்!!!

    *****

    சேவற்போர் புரிந்தும், அவற்றைக் கொன்றுதின்றும் உள்ளம் களிக்கின்றார் இரக்கமன்ற மனிதர். ”பிறருக்கு உணவாவதற்கென்றே பறவையினத்தைப் படைத்த இறைவன் கொடியவனே!” எனக் கடவுளைக் கடிகின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.

    ஆணுக்கு சேவல் என்றும்
    பெண்ணுக்குப்பேடு என்றும்
    பெயர் வைத்தார்
    மனிதனின் உணவுக்காக
    சேவலையும் பேடையும்
    வளர்த்திட்டார்
    மனம்கிழ்ச்சிக்காக
    சேவலையும் சேவலையும் மோதவிட்டு
    வெற்றிபெறும் சேவலை வளர்த்தவன்
    சேவல் வீரன் என்று மார்தட்டுவான்
    விவரம் புரியாத சேவல்
    கால நேரம் பார்த்து கூவிஎழுப்பும் மனிதனை
    காலம் ஆகப்போவது தெரியாமல்
    குப்பையைக்கிளறும் கோழிகள்
    கடைசியில் மனிதனின் வயிற்றுக்குள் போக
    இறக்கைகள் எல்லாம் குப்பையாய்போகும்
    பிறருக்கெனவேவாழ்ந்திடவே சேவலைப் படைத்த
    இறைவன் கொடியவனே!

    *****
    பறவையினத்துக்காகப் பாசத்தோடு உரிமைக்குரலெழுப்பியிருக்கின்றனர் நம் கவிஞர்கள். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    இந்தவாரத்தின் சிறந்த கவிதை அடுத்து நம் பார்வைக்கு!

    அக்கரையில் வளமிருக்கு கொக்கரக்கோ – நாம்
    அங்க போயி சீ(வி)ச்சுக்கலாம் கொக்கரக்கோ
    இக்கரையில் எதுவுமில்லக் கொக்கரக்கோ – நாம்
    எதுக்கு இங்க வாழ வேணும் கொக்கரக்கோ.

    சொந்த மண்ணு கெட்டியெண்ணு கொக்கரக்கோ – நீ
    சொகுசு தேடி அலையாத கொக்கரக்கோ
    இந்த மண்ணும் நல்லதுதான் கொக்கரக்கோ –கொஞ்சம் எறங்கிப்புட்டா பொழச்சுக்கலாம் கொக்கரக்கோ.

    பூச்சி புழு தேவையின்னா கொக்கரக்கோ – அங்க
    போயிச் சீச்சி எடுத்துக்கலாம் கொக்கரக்கோ
    ஏச்சிக் கூடப் பொழச்சுக்கலாம் கொக்கரக்கோ – உடன்
    என்னோட வந்துரு நீ கொக்கரக்கோ

    பொழப்புக் கெட்டு வாழுறது கொக்கரக்கோ – நமக்குப்
    பொருந்தாது திரும்பிடலாம் கொக்கரக்கோ
    ஒழச்சு வாழப் பழகிக்குவோம் கொக்கரக்கொ – நம்ம
    ஊரிலேயே இருந்திடுவோம் கொக்கரக்கோ.

    அக்கரைக்குச் சென்று பிழைக்கலாம் என்று அக்கறையோடு சேவல் சொல்வதும், அதனைக் கண்ணியமாய் மறுத்து, உழைத்தால் நாம் வாழும் மண்ணிலேயே கவுரவமாக வாழ வாழியிருக்கு என்று பேடை பதில் சொல்வதும் பறவைகளுக்கு மட்டுமல்ல மனிதருக்கும் கச்சிதமாய்ப் பொருந்தக்கூடியதே!

    பட்டணந்தான் போகலாமடி பொம்பளே பணங்காசு
    தேடலாமடிநல்ல கட்டாணி முத்தே
    என் கண்ணாட்டி நீயும் வாடி பொண்டாட்டி தாயே…!

    என்று கணவன் அழைக்க,

    டவுனு பக்கம் போகாதீங்க மாப்பிள்ளே டவுனாகிப் போயிடுவீங்கஅந்த
    டாம்பீகம் ஏழைக்குத் தாங்காது பயணம் வேண்டான்னா கேளு மாமா…!

    என்று மனைவி மறுத்துரைக்கும் (உடுமலை நாராயண கவியின்) திரைப்பாடலின் நவீன வடிவமாகவே இக்கவிதையை நான் கருதுகின்றேன். 

    சொந்த மண்ணைப் போற்றும் உயர்சிந்தனையைத் தன் கவிதையில் விதைத்திருக்கும் திரு. எஸ். கருணானந்தராஜாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வு செய்கிறேன். 

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி .. (83)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    14699821_1119456678108530_1064601304_n

    62059640n05_rகாயத்ரி அகல்யா எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை ( 22.10.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014-ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share
  • இலக்கியச்சித்திரம்- இனிய பிள்ளைத்தமிழ்-28

    -மீனாட்சி பாலகணேஷ்

    வடிவுடைப்பெண்ணுக்குப் பலவிதத் தொட்டில்கள்!

    pillai1குழந்தையை உறங்கவைக்கத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டுகின்றாள் அன்னை; உடன் நிற்கும் தோழியரும் தாதியரும் பல இன்னிசைப்பாடல்களை இசைக்கின்றனர். மிகவும் உயர்வான தெய்வக்குழந்தை இவள். செல்வந்தர் வீட்டுக் குழந்தை என்றால் கேட்கவா வேண்டும்? அவரவர்கள் தங்கள் பங்கிற்கு ஒரு அழகான தொட்டிலைக் குழந்தை உறங்கப் பரிசாகக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளனர்! தாதியரும் செவிலியரும் பொன்னாலான ஒருதொட்டிலில் அன்னத்தூவியின் மெத்தையிட்டு, இனிய ஓலியெழுப்பும் சிறுமணிகளையும் அதில்கட்டி குழந்தையைக் கண்வளர்த்துகின்றனர். குழந்தை உறக்கம் கொள்ளாமல் நெளிகிறாள்; புரளுகிறாள்; கண்களைக் கொட்டக்கொட்ட விழித்து நோக்குகிறாள். இவர்களுக்கு இப்போது ஒரு சந்தேகம் எழுகிறது. குழ்ந்தைக்கு இந்தத் தொட்டில் விருப்பமில்லையோ என்னவோ, வேறு தொட்டில் வேண்டுமோ என்று இவர்கள் குழந்தையிடம் (சின்னஞ்சிறிய மதலை- அவளுக்கென்ன தெரியும்?) கேட்கிறார்களாம்:

    “சரியை (முறையான ஒழுக்கம்கொண்ட உயர்ந்தோர்), கிரியை (செய்வன திருந்தச்செய்யும் பெரியோர்) இவற்றினைக் கடைப்பிடிப்பவர்களின் இதயம் என்பது உனக்கு ஒரு தொட்டிலாகும்.” அவர்கள் இதயத்தில் நீக்கமற நிறைந்து வாழ்பவள் அன்னை பராசக்தி எனப்பொருள் கொள்ளவேண்டும்.

    “யோகம் பயில்வோரின் ஆறாதாரம் எனும் மலர்ப்பூந்தொட்டிலிலும் (ஆறு ஆதாரங்கள்- மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்பனவாம்) கண்வளர்பவளல்லவோ நீ?”

    “பெருகும் அறிவினை  முறையாகப் பெற்றுயர்ந்தவர்கள், ‘உள்ளும் புறமும்’ வேறு வேறல்ல என மனவமைதி கொண்டு, குழப்பமடையாது தெளிவான சுத்தத்தொட்டிலில் கிடத்தித் தாலாட்டுவார்கள் உன்னை!” ‘பரம்பொருளை இன்னதென்று அறிவினால் முயன்று உணர்ந்து கொண்டவர்கள் அது உள்ளிலோ, வெளியிலோ எங்கும் உண்டென்று தெளிந்து, அவ்வண்ணம் வேற்றுமை பாராட்டிக் குழப்பமடையாது உள்ள தமது அறிவில் உன்னை இருத்தித் தொழுதேத்துவார்கள்,’ என்பது பொருள்.

    “இவர்கள் அனைவருக்குமே உரிமைபூண்ட மகளே! குழந்தாய்! இத்தனை உயர்வான தொட்டில்கள் பல உனக்கு உள்ளன. இருப்பினும் நாங்கள் உன்மீது கொண்ட தாயன்பால், இந்தப் பொற்தொட்டிலை மணிகளால் அலங்கரித்து உனக்காக வைத்துள்ளோம். இதனையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு விளையாடியபடியே கண்ணுறங்குவாய், கிளிபோன்ற மகளே! கருடன் மீது வரும் திருமாலின் சகோதரியே!” என்று ஆசைததும்பப் பாடுகின்றனர்.

    யாரிந்தக்குழந்தைப்பெண்? இவள் அரிய பெரிய pillai3பொருள்கள் பலவும் நிறைந்த திருவொற்றியூர் எனும் நகரின் அரசியானவள். அவளுக்கே இத்தாலாட்டு!

    இந்த ஈரேழு பதினான்கு உலகங்களையும் பிறப்பித்தவள்; வடிவுடையம்மை எனப்படும் திரிபுரசுந்தரி இவளே! ‘பெண்ணமுதே தாலோ தாலேலோ’ என அன்புபெருகப் பாடுகின்றனர்.

    நீலாம்பரி

    சரியை கிரியை இயற்றுனர்க டத்த மிதயத்
    தொட்டிலினும்
    தண்டா யோகத்தவராறா தார மலர்ப்பூந் தொட்டிலினும்
    விரியு மறிவை யறிந்தவர்கள் வெளியே யகமே யெனும்விகற்பம்
    விரவாச் சுத்தத் தொட்டிலினு மேவித் தினிது தாலாட்டு
    முரிய மகளே யாங்களிடு மொளிமா மணிப்பொற் றொட்டிலினு
    முவந்து விளையாட் டயர்கிளியே யுவண முயர்த்தோன் சகோதரியே
    அரிய பொருள்சே ரொற்றிநக ரரசே தாலோ தாலேலோ
    அகில முயிர்த்த வடிவுடைப் பெண்ணமுதே தாலோ தாலேலோ

    (ஆதிபுரி வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ்- தாலப்பருவம்)

    *********

    இந்த அருமையான பிள்ளைத்தமிழ் நூலினை இயற்றிய புலவர் வித்துவான் கனகசபைத் தம்பிரான் ஆவார். இது 19-ம் நூற்றாண்டில் வெளியிடப்பட்டுள்ளது. ஆதிபுரி, திருவொற்றியூர் எனவழைக்கப்படும் திருத்தலத்தில் உறைந்துவிளங்கும் திரிபுரசுந்தரி அம்மையின்மீது பாடப்பெற்றது. இவ்வம்மை வடிவுடையம்மை, வட்டப்பாறை அம்மன் எனவும் அழைக்கப்படுகிறாள். இது சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்றாகும். சிவபிரானின் திருநாமங்கள் இங்கு படம்பக்கநாதர், ஒற்றீஸ்வரர், ஆதிபுரீஸ்வரர், தியாகேசர், ஆனந்தத்தியாகர் எனப்பலவாம். சுந்தரமூர்த்தி நாயனார் இத்தலத்தில்தான் சங்கிலி நாச்சியாரை மகிழமரத்தடியில் மணந்துகொண்டார்.

    *********

    pillai2அழகான சிறுமி; பராசக்தி அன்னையே இச்சிறுமியாக அவதரித்துள்ளாள்; இவளை நீராட வேண்டியபடி செவிலித்தாயும் தோழியரும் சேடியரும் ஆடையணிமணிகள், வாசனைச் சுண்ணப்பொடி, மலர்மாலைகள் என அனைத்தையும் ஏந்திநிற்கின்றனர். சிறுகுழந்தைகள் அவ்வளவு எளிதில் நீராட வரமாட்டார்கள். ஏதாவது ஒன்று அவர்கள் சிந்தையைக் கவர்ந்திழுக்க, அதிலேயே முனைப்பாக இருப்பார்கள். தாயார்தான் பார்த்துப்பார்த்து அவர்களுக்கு உணவு அளிப்பதோ, நீராட்டுவதோ, உறங்க வைப்பதையோ செய்வாள்.

    இங்கு இவர்கள் விதம்விதமாக நீராடலுக்கு உகந்த பொருட்களை வைத்துக்கொண்டு, சிறுமியான வடிவுடையம்மையை நீராட ஊக்குவிக்கிறார்கள்: என்னவெல்லாம் கொண்டுவந்துள்ளனர் எனப் பட்டியலைப் பார்ப்போமா?

    தேன்சொரியும் பலவிதமான வாசமலர்கள்; அவற்றினை அவ்வாறே எடுத்து மலரிதழ்களைத் தேனோடு உதிர்த்துச் சுண்ணமாக்கியுள்ளனர். பொன்போலும் அன்னையின் மென்மையான மேனியில் தேய்த்து நீராட்டத்தான்! பலவிதமான வாசனைப்பொருட்களைச் சேர்த்துச் செய்த களபம் (கஸ்தூரி, சந்தனம், இன்னும்பல) எனும் சுண்ணமும் ஒருத்தி கையில் காத்துக்கிடக்கிறது! கருப்பூரங்கலந்த சுண்ணம் இன்னொருத்தியிடம்; பொன்துகள்களையும் சேர்த்துச் சுண்ணமிடிப்பார்கள் எனவும் அறிகிறோம். இவ்வாறு பலவிதமான வாசனைப்பொடிகளாகிய சுண்ணக்கலவைகளும்- அவரவர்கள் அன்னைக்கென்று தங்கள் எண்ணப்படியெல்லாம் வாசனைப்பொருட்களைச் சேர்த்துக் குழப்பிக் கலவையாக்கிச் சுண்ணங்களாக்கிக் கொண்டுவந்துள்ளனர். மலர்போலும் மங்கையர் சிலர் மலர்மாலைகளை ஏந்தி நிற்கின்றனர்- வண்டுகள் அம்மலர்களிலுள்ள தேனையுண்டு பாடி ரீங்காரமிடுகின்ற மலர்மாலைகள் அவையாம்! ‘புள்ளோடி ஆடி முரலும் செழுந்தொங்கல்’– அழகான சொற்பிரயோகம்! புள் எனில் வண்டு எனவும் ஒருபொருளாகும்.

    ‘இவையனைத்தையும் இவர்கள் உனக்காக ஏந்தி நிற்கின்றனர். நீ வா அம்மா! வந்து நீராடுக!’ எனும்போது எவ்வாறு நீராட வேண்டுமெனவும் அன்புடன் விவரிக்கின்றாள் தாய்.

    “அழகான உனது கைகளால் நீரினை அளைந்து, வாரிவீசி, விழிகள் சிவக்கும் வண்ணம் நீராடுக! மார்பினில் அணிந்துள்ள குங்குமச்சாந்து நீரில் கரைந்து அழியுமாறு நீராடுவாயாக! உனது கரிய கூந்தல் நீரில் அவிழ்ந்து தளரும்வண்ணம் நீராடுக! உடல் பூரிக்கும்படி நீராடுவாய்! பலவிதமாக இழைத்துச் செய்யப்பட்ட பொன் அணிகலன்கள் தொங்கி அசைந்தாடுமாறு நீராடுக!

    “இவ்வாறெல்லாம் நீ நீராடும்போது உனது நாயகனான சிவபெருமானின் மற்றொரு வடிவம் இந்த நீர்நிலை என்றெண்ணி அதனுடன் (அவனுடன்) கலந்தாட வேண்டும் தாயே! (சிவப்பரம்பொருளானது எங்கும் எல்லாமாகவும் இருக்கும் திறம்படைத்தது என்பதனை உணர்த்தவே இவ்வாறு கூறினார் போலும்!)

    “இருபுறங்களிலும் வெண்மைநிற அன்னங்கள் திரளாக ஒலிசெய்தபடி வரும் பாலாற்றின் (பாலிநதியின்) வெள்ளத்தில் நீராடியருளுவாயாக!” பாலாறு ஒருகாலத்தில் பால்போன்ற நீர்ப்பெருக்கில் சிறந்து அன்னங்கள் ஆடிவிளையாடும் ஆறாகவும் இருந்ததென அறிந்து ஆச்சரியத்திலும், ஆற்றாமையிலும் (அதன் தற்போதைய நிலை கண்டு ஆற்றாமை) மூழ்குகிறோம்.

    “வெற்றிநெரியன்  பணிகின்ற திருஒற்றியூரில் வாழும் வடிவுடையம்மையே! நீ நீராடி அருளுவாயாக!” என த் தாதியரும் தாயும் அம்மையை வேண்டுவதாகப் புலவனார் பாடியுள்ளார்.

    புன்னாகவராளி

    கள்ளோ டலர்ந்தநறு மென்மலர்ச் சுண்ணமும் களபப் பசுஞ்சுண்ணமும்
    கர்ப்புரச் சுண்ணமும் கலவையும் சுண்ணமும் கமழ்கின்ற பலசாந்தமும்
    புள்ளோடி யாடிமுர லுஞ்செழுந் தொங்கலும் பூவையர்க ளேந்திநிற்பப்
    பொற்பநின் கையா லெறிந்துவிழி சேப்பமென் பூண்முலைச் சாந்தமழிய
    நள்ளோதி சோரவுடல் பூரிப்ப நகைசெயிழை நான்றாட ஆடுந்தொறும்
    நாயகற் கிதுவுமொரு வடிவென்று கலவிநீ நண்ணுவது மானவிருபால்
    வெள்ளோதி மத்திர டழங்கவரு பாலிநதி வெள்ளநீ ராடியருளே
    வெற்றிநெரி யன்பணிகொ ளொற்றியூர் வடிவம்மை வெள்ளநீ ராடியருளே.

    (பொற்பு- அழகு; நள்- இரவு; இங்கு இரவுபோலும் கருமை எனப்பொருள்கொள்ள வேண்டும்; ஓதி- கூந்தல்; தழங்கல்- ஒலிசெய்தல்)

    (ஆதிபுரி வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ்- நீராடற்பருவம்)

    எண்ணற்ற வண்ணச் சொற்சித்திரங்கள்; சிந்தைகளிகூரக் கண்டு மகிழலாம்.

    *****

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக்கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

     

     

    Share
  • காதல்

    ராஜகவி ராகில் 

     

    பனித்துளிக்குள் 
    எரிகின்ற 
    நெருப்பு

    நித்திரையை
    பார்த்துக் கொண்டிருக்கும் 
    விளக்கு

    முள்ளை
    மலராக்கும் 
    பட்டாம் பூச்சி

    சில்லென 
    வீசுகின்ற 
    தீ

    ஓடையில் 
    மிதக்கின்ற 
    கடல்

    விறகினை 
    கரும்பாக்கும் 
    எறும்பு

    உரத்து 
    ஒலிக்கின்ற 
    மெளனம்

    வேடனை 
    வேட்டையாடும் 
    மான்

    முள்ளில் 
    சுரக்கின்ற 
    தேன்

    வண்டு தேடி 
    பறக்கின்ற 
    பூ

    தாஜ்மகாலை 
    விளம்பரப்படுத்தும் 
    தொலைக்காட்சி

    படகில் 
    பயணிக்கின்ற 
    நதி

    சிற்பியை 
    செதுக்கும் 
    உளி

    பூமியில் 
    வாழும் 
    ஆகாயம்

    காற்றில் 
    மிதக்கின்ற 
    வைரக் கல்

    மின்சாரமின்றி 
    எரிகின்ற 
    மின்குமிழ்

    நெருப்பு 
    பெய்கின்ற 
    மழை

    காதல் 
    ஒளியின் 
    நிழல் .

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 48

    க. பாலசுப்பிரமணியன்

    மூளையின் உள்ளே

    education

    கற்றலைப் பற்றிய ஆராய்ச்சிகளின் மூலம் எவ்வாறெல்லாம் மூளையின் பல பகுதிகள் நமக்கு மிகவும் உறுதுணையாக இருக்கின்றது என்பது மிகத் தெளிவாக விளங்குகின்றது. அது மட்டுமல்ல, மற்ற உயிரினங்களைவிட மனித மூளை எவ்வாறு மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றது, சிந்தனை, புத்திசாலித்தனம், மதிகூர்மை, மற்றும் திறனாய்வு செய்கின்ற மேலாண்மை ஆகியவை எவ்வாறு வெளிப்படுகின்றது என்பதும் நமக்குத் தெரிய வருகின்றது.

    மூளையின் வளர்ச்சியைப் பற்றி ஆராய்ச்சிகளில் ஈடுபாடுள்ள வளர்ச்சி உயிரியலாளர்கள் (Developmental Biologists) மூளையின் மூன்று விதமான வளர்ச்சி நிலைகளை நமக்கு எடுத்துரைக்கின்றனர். இவைகளை முறையாக

    1.Reptilian Brain (ஊர்வன சார் மூளை )

    2, Mammalian Brain (பாலூட்டிகள் சார் மூளை )

    3  Neo cortex (நவ-புறணி)

    என்றும் அழைக்கின்றனர்.

    இவற்றில் முதல் நிலையான ஊர்வனசார் மூளை, (Reptilian Brain ) மூளை வளர்ச்சியின் முதற்படியாக விளங்கியதாகவும், இதன் வளர்ச்சியில் பய உணர்வு அதிகமாக பாதித்ததாகவும் கூறப்படுகின்றது. அதனால் தான், மனிதர்களில் பயஉணர்வு பலருக்கு அடிப்படை உணர்வாக அமைந்து ஏதாவது ஒரு பொருளுக்கோ, கருத்துக்கோ, நிகழ்வுக்கோ மனம் அடிப்படையில் பயம் கொள்வதாகவும் மன இயல் நிபுணர்களிடையே ஒரு கருத்து நிலவி வருகின்றது. மனித இனத்தின் பல வேலைகளைக் கட்டுப்படுத்தும் இப்பகுதி, மூசசு விடுதல், அடிப்படை செயல்களை ஒழுங்குபடுத்தல் (Regulatory functions), மற்றும் தானியக்கமாக இருக்கின்ற (auto-response) பல நிகழ்வுகளை செம்மைப் படுத்துதல் ஆகையவற்றைச் செய்கின்றது.

    அதேபோல் பாலூட்டிசார் மூளை ( இதை உணர்வு செயலி mammalian brain  என்றும் அழைக்கலாம்) மனித உணர்வுகளை அறிந்து, புரிந்து, ஒருங்கிணைத்து, ஒழுங்குபடுத்தி வெளிப்படுத்தும் நிகழ்வுகளுக்கு மேலாண்மை வகிக்கின்றது. கோபம், பாலுணர்வு,  அதிசயம், மகிழ்ச்சி போன்ற பல உணர்வுகளை இந்தப் பகுதி பரிபாலிக்கின்றது. உணர்வுகளின் வேகம், தொடர், காலப் பரிமாணங்கள் போன்ற பல உணர்வின் பரிமாணங்களை இதுவே ஆசான்.! இது மூளை வளர்ச்சியில் இரண்டாவது படியாக அமைந்தது என்று வல்லுநர்கள் கருத்து.

    நவ-புறணி (Neo Cortex) வளர்ச்சியின் மூன்றாவது படிக்கல்லாக அமைந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இது மூளையின் மேல்பகுதியாகவும் மூளையின் உள்பகுதிகளுக்கு ஒரு மேலுறைபோலவும் அமைந்துள்ளது.. இதையே பலரும் மனிதமூளை என்றே அழைக்கின்றனர்.

    மனித மூளை (Neo Cortex) வளர்ச்சியின் மூன்றாவது படிக்கல்லாக அமைந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இது மூளையின் மேல்பகுதியாகவும் மூளையின் உள்பகுதிகளுக்கு ஒரு மேலுறைபோலவும் அமைந்துள்ளது. ஒரு பிறந்த குழந்தைக்கு விரிக்கப்படும் இரப்பர் விரிப்பின் அகல நீளத்திற்கு ஈடு கொடுக்கும் அளவில் உள்ள இந்த மேலுறை மனித மூளையின் பல செயல்களுக்குக் காரணமாக விளங்குகின்றது.

    பார்வைப்புறணி, (Visual Cotex)  செவிப்புலப் புறணி (auditory cortex) , மற்றும் உணர்ச்சிப்புறணி (sensory cortex)  இவற்றின் உள்ளீட்டுக்கள் இங்கே ஒருங்கிணைக்கப்பட்டு அலசப்பட்டு பொருள்சார் கருத்தாக நமக்கு அறிவிக்கப் படுகின்றது. மற்றும் நமது நினைவுகள் அனைத்தும் இங்கே பதிவு செய்யப்பட்டு நினைவலைகளாக காக்கப்பட்டு வருகின்றன.

    மூளையின் இந்த மூன்று பகுதிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு மனிதத்தின் சிறப்பை வெளிப்படுத்த மிகவும் உதவியாக அமைகின்றது. இதில் முக்கியமாக  மேலுறையாக விளங்கும் மனிதமூளை நமது பல முக்கிய சிந்தனைச்செயல்களுக்கு உதவியாக இருப்பது மட்டுமின்றி புதிய எண்ணங்களையும் புதிய கருத்துவண்ணங்களையும் உருவாக்குவதற்கு காரணமாக உள்ளது. இதனால் தான் தலையில் அடிபடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது . மூளைப்பகுதிகளில் ஏற்படும் சில சிறிய தாக்கங்கள் கூட அவற்றின் வேலைகளை பாதித்து அவற்றின் திறன்களையும் செயல்பாட்டு முறைகளையும் மாற்றி அமைந்துவிடுகின்றன. \இந்த மூன்று பகுதிகளை இணைத்து செயல்படுவதில் பல்லாயிரக்கணக்கான நியூரான்களும் அதனுடன் இணைந்த மின்வேதியில் செயல்பாடுகளும் தோள்கொடுக்கின்றன. இங்கு நடைபெறுகின்ற பல்லாயிரக்கணக்கான செயல்பாடுகள் நடப்பதற்கு எடுத்துக்கொள்ளப்படும் நேரமோ ஓர் வினாடியின் மிகச்சிறிய விழுக்காடுகள்தான். !

    மேலெழுந்தவாரியாகக் கற்றலைப் பார்க்கும் நாம் அதன் பின்னே நடக்கும் செயல்களை அறியும்போது அது ஆச்சரியமாகவும் இயற்கையின் இணையில்லா பேராண்மையை வெளிப்படுத்துவதாகவும் அமைகிறது.

    தொடரும்…

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – (26)

    நிர்மலா ராகவன்

    பிறரைப் புரிந்துகொள்ள..

    %e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-1

    கமலஹாசன் மிக நல்ல நடிகர் என்கிறோமே, ஏன்?

    நடிகை ராதிகா ஒரு மேடையில், `இவர் காதல் காட்சிகளில் நடிக்கும்போது, ஒவ்வொரு நடிகைக்கும், `இவருக்குத்தான் நம்மேல் எவ்வளவு காதல்!’ என்கிற பெருமிதம் ஏற்படும். ஆனால், `இப்போதுதான் புரிகிறது. ஓர் எருமையை இவர்முன் நிறுத்தினாலும், அப்படித்தான் பார்ப்பார்!’ என்றாரே, பார்க்க வேண்டும்! நடிகருக்கே சிரிப்பு வந்துவிட்டது.

    உணர்ச்சிகளை மாறிமாறிக் காட்டினால், நடிப்போ, நாட்டியமோ, பாத்திரங்களின் நுட்பமான உணர்வுகள் பார்ப்பவர்களைப் போய்ச்சேரும்.

    வட நாட்டு நடிகைகள் தமிழ் திரைப்படங்களில் நடிக்கும்போது, மொழியின் ஆழத்தை உணர்வதில்லை. அதனால் எந்த தருணத்தில் என்ன பாவம் காட்டவேண்டும் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை. அர்த்தத்தையெல்லாம் எதற்குப் புரிந்துகொள்ள வேண்டும், நம் உடலழகே போதாதா என்று மெத்தனமாக அவர்கள் இருப்பதுபோல்தான் தோன்றுகிறது. சமயாசந்தர்ப்பம் புரியாது சிரித்து வைக்கிறார்கள். (கஷ்டம்!)

    இயக்குனர் `சிரி’ என்கிற போதெல்லாம் சிரித்துவைத்தால் மட்டும் போதுமா? சிரிப்பில்தான் எவ்வளவு விதங்கள்! ஒரு குழந்தையைப் பார்த்து கண்களில் கனிவுடன் சிரிப்பது, கேலிச்சிரிப்பு, பிறர் நம்மை புகழும்போது வரும் பூரிப்புடன் கூடிய புன்னகை — இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். மொழியோ, கதையில் குறிப்பிட்ட சந்தர்ப்பமோ புரியாதவர்கள் ஒரே மாதிரி சிரித்து வைப்பார்கள். இதனால்தான் இவர்களது நடிப்பு எடுபடுவதில்லை. சில வருடங்களிலேயே காணாமல் போய்விடுகிறார்கள்.

    மொழி தெரியாவிட்டாலும், சில நடிகர்களும் நடிகையர்களும் ஒரு காட்சியின் ஆழத்தைப் பிறர் விளக்கப் புரிந்துகொண்டு, தம் தனித்துவத்திற்கேற்ப தேவையான உணர்ச்சிகளை தம் உடலாலும் முகத்தாலும் காட்டுவதும் உண்டு. (அப்பாடா!) எதிர்நீச்சல் படத்தில் வரும் கதாநாயகியின் தந்தை ஷரத் லோஹிதாஷ்வா, கபாலி படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்த ராதிகா ஆப்தே இருவரும் மராத்தி மொழியினராம். சொந்தக் குரலில் பேசாவிட்டாலும், தம் உணர்ச்சிகளைக் காட்ட மொழி அவர்களுக்கு ஒரு தடையாக இருக்கவில்லை என்பது பாராட்டுக்குரியது.

    பரதநாட்டியம் என்ற வார்த்தையின் முதல் எழுத்திலேயே `பாவம்’ என்றிருக்கிறது. பார்ப்பவரைப் பரவசப்படுத்த பாடல் வரிகளுக்கேற்ற உடலசைவு மட்டும் போதாது. என்ன ஆடுகிறோம் என்று புரிந்துகொண்டதற்கு அடையாளமாக நவரஸங்களையும் கொட்டும் முகபாவங்கள், அங்க அசைவுகள் ஆகியவை நாட்டியத்திற்கும் இன்றியமையாதவை.

    தமிழ் தாய்மொழியாக இருந்தாலும், அல்லது அதில் நன்கு உரையாடத் தெரிந்திருந்தாலும், எல்லாருமே தாம் ஆடும் பாடலைப் புரிந்துகொண்டு, முகபாவங்கள் காட்டுவர் என்று கூற முடியாது.

    சிறு பெண்கள் நடனமாடும்போது, முதல் சில வருடங்கள் சற்று பயந்தாற்போல் இருப்பார்கள். அடிக்கடி தாயின் பக்கம் கண்கள் அலையும். அவர்கள் ஆடி முடிந்ததும், `சிரிச்சபடி ஆடணும்!’ என்று ஆசிரியையும், அம்மாவும் கூறுவார்கள். கோரிக்கை மிரட்டலாகவோ, கொஞ்சலாகவோ வரக்கூடும். `சரிதான்,’ என்று அவர்களும் சிரித்த முகத்துடன் ஆட சில வருடங்கள் பிடிக்கும். ஆனால் அது போதாது.

    ஏன், அதுதான் பிறர் சொல்வதைக் கேட்டு, சிரித்தபடி ஆடுகிறார்களே என்கிறீர்களா?
    பாடல் முழுவதும் முகம் விகசித்தபடி இருக்கும்.

    இப்படி ஆடிய ஒரு பெண்ணிடம் நான் கேட்டேன், `ஏம்மா? `புலித்தோலை அணிந்த சிவன்’ என்னும் இடத்தில், நீ சிரித்தாயே! புலி சிரித்து பார்த்திருக்கிறாயா?’

    துர்கை அம்மனுக்கு அப்பெயர் வரக் காரணமாக இருந்த கதை: துர்க்காமா என்ற அசுரன் பல காலம் தவம் இருந்து, பிரம்மா அவன்முன் தோன்றியதும், `ஒரு வரம் வேண்டும்!’ என்று கேட்கிறான்.

    எப்படிக் கேட்பான்?

    ஒருவரை நாம் ஏதாவது வேண்டும்போது, மரியாதையாகக் கேட்போம். இல்லையா?

    சுயமரியாதையின்றி, குறுகிய காலத்தில் எதையும் சாதிக்க விரும்பும் காரியவாதிகள் கூனிக் குறுகுவார்கள். கூழைக் கும்பிடு போடுவார்கள். பல்லிளிப்பார்கள். ஆனால் அவர்களுக்குத் தெரியும், நினைத்தது நடந்துவிட்டால், அதற்குப்பின் எதிரிலிருப்பவரை மறந்துவிடுவோம், அலட்சியமாகப் பார்ப்போம் என்று. அந்த பொய்மை கண் சட்டென ஒரு பக்கம் அலைவதில் தெரியும். நினைத்தது கிடைத்தவுடன், உடல் நிமிர்ந்து, அதிலிருந்து ஒரு அலட்சியம் வெளிப்படும். இரண்டு வரிகள் திரும்பத் திரும்பப் பாடப்படும்போது, இவ்வளவையும் காட்டினால் பார்ப்பவரையும் அந்த உணர்ச்சி தொற்றிக்கொள்ளும்.

    துர்க்காமா பெற்ற வரத்தால் அகிலமே அவன் கைக்குள் வர, கொடுமைகள் பல புரிகிறான். நீர் வற்றிப்போய், மக்கள் அம்மனிடம் முறையிடுகிறார்கள்.

    தண்ணீர் கிடைக்காது வாடும் உயிரினங்களின் துயரம் அவர்கள் முகத்தில். `எங்களுக்கு வேறு வழியே இல்லை!’ என்ற கெஞ்சல். `ஏதாவது செய்யேன்!’ என்ற ஏக்கம்.

    அம்மனுக்கோ முதலில் ஆத்திரம், கேடுகெட்டவனுக்கெல்லாம் அதிகாரத்தைக் கொடுத்தால் இப்படித்தான் என்பதுபோல். மக்களின் பரிதவிப்பைக் கண்டு இரக்கம், கருணை முகத்தில். அவள் நீரைச் சொரியும்போது, தான் பெற்ற மகவிற்கு அமுதூட்டும் அன்னையைப்போல அன்பு.

    இறுதியில், துர்க்காமாவிடமிருந்து வேதங்களை மீட்டு, அவனையும் அழித்ததால் துர்கா என்ற பெயர் பெறுகிறாள்.

    நடிகர்கள, நடனமணிகள் மட்டுமின்றி, எழுத்தாளர்களும் தாம் சித்தரிக்கும் கதாபாத்திரங்களாகவே மாறிவிட வேண்டும். இதைத்தான் GETTING INTO THE SKIN OF OTHERS என்கிறார்கள். இம்முறையால் அவர்கள் உலவவிடும் பாத்திரங்களுக்கு உயிர் கொடுக்க முடியும்.

    பாலித் தீவில் தியானத்தால் இதைச் சாதிக்கிறார்கள். ஒரு நடனத்தில், (தேங்காய் உருமட்டையால்) கொழுந்து விட்டு எறியும் தீயை குதிரையாக மாறி, வெறுங்காலாலேயே அணைக்கிறார்கள். மயிர்க்கூச்செறிய வைக்கும் இடம் அது.

    இன்னொரு நடனத்தில் இருபது நிமிடங்கள் போர்வீரர்கள் `இறந்து’ விடுவார்கள். எந்தவித அசைவும் கிடையாது. மூச்சுவிடுவதற்கு அடையாளமாக அவர்கள் மார்பும் ஏறி இறங்கவில்லை. பார்த்தவர்கள் பயந்தேவிட்டோம். பிறகு, எதுவுமே நடவாததுபோல் அவர்கள் எழுந்தபோதுதான் எங்களுக்கு மூச்சு வந்தது.

    நிகழ்ச்சி முடிந்ததும், அவர்களின் தலைவரிடம் அணுகி விசாரித்தேன். அப்போதுதான் சொன்னார், `நாங்கள் தியானத்தால் எந்த மிருகமாகவும், மூச்சற்றவர்கள்போலும் மாறமுடியும்,’ என்று.

    இதையெல்லாம் புரிந்துகொள்ள அதிக வயது ஆகியிருக்க வேண்டும் என்பதில்லை. தியானம் மட்டுமின்றி, நிறையக் கதைகள் படித்து, கதாபாத்திரங்களுடன் நம்மைப் பொருத்திக்கொள்ள முயல வேண்டும். பேசுவதைக் குறைத்து, பிறரைக் கூர்ந்து கவனித்தால், பல்வேறு குணாதிசயங்கள் புலப்படும்.

    உற்று உற்றுப் பாருங்கள், அவர்கள் தர்ம சங்கடத்துடன் நெளியும்வரை. மனிதர்களின் மனப்போக்கு, வக்கிரங்கள் புரியும்.

    அதன்பின், பிறர் தாமே வலிய வந்து தம் கதைகளைப் பகிர்ந்துகொள்வார்கள். கருவிற்காக நாம் அலைய வேண்டியதில்லை.

    Share
  • குறளின் கதிர்களாய்…(141)

     –செண்பக ஜெகதீசன்

     

    காமக் கணிச்சி யுடைக்கும் நிறையென்னும்

    நாணுத்தாழ் வீழ்த்த கதவு.

           –திருக்குறள் –1251(நிறையழிதல்)

     

    புதுக் கவிதையில்…

     

    நிறை என்னும்

    கதவை அடைத்து,

    நாணமாம் தாழ்ப்பாள் போட்டு

    பாதுகாத்தாலும்,

    காமமெனும் கோடரி

    உடைத்துவிடும்…!

     

    குறும்பாவில்…

     

    கற்புக் கதவடைத்து நாணத்தாழ்ப்பாள்

    போட்டாலும் நிற்காது,   

    காமமாம் கோடரி உடைத்துவிடும்…!

     

    மரபுக் கவிதையில்…

     

    கற்பெனும் வலிய கதவடைத்து

         காட்டும் நாணமாம் தாழ்ப்பாளைப்

    பொற்புடன் போட்டுப் பூட்டிடினும்

       போதா ததற்குப் பாதுகாப்பு,

    அற்பமாய்த் தோன்றிடும் காமமெனும்

      ஆயுதம் கோடரி தாக்கிவிட்டால்,

    சொற்பமும் மீதி இல்லாமலே

      சுக்கு நூறாய் உடைந்திடுமே…!

     

    லிமரைக்கூ…

     

    நாணத்தாழ்ப்பாள் கற்புக்கதவை அடைக்கும்,     

    போதாது போதாது இதற்கிந்த பாதுகாப்பு,        

    காமமெனும் கோடரியதை உடைக்கும்…!

     

    கிராமிய பாணியில்…

     

    பொல்லாதது பொல்லாதது

    காமம் ரெம்பப் பொல்லாதது..

     

    வெக்கத் தாப்பாளப் போட்டேதான்

    கற்புக் கதவ

    பூட்டிவச்சாலும் பாதுகாப்பில்ல

    பெருசா பாதுகாப்பில்ல..

     

    காமக் கோடாலிவச்சி

    வெட்டுனாலே ஒடஞ்சிபோவும்

    துண்டுதுண்டா ஒடஞ்சிபோவும்..

     

    அதால,

    பொல்லாதது பொல்லாதது

    காமம் ரெம்பப் பொல்லாதது…!

     

    செண்பக ஜெகதீசன்

    Share
  • மார்கழி மணாளன்

    க. பாலசுப்பிரமணியன்

     

    மார்கழி மணாளன் திருக்காப்பு

     

    வாழிய வாழிய வலக்கை சக்கரம்

    வாழிய வாழிய மலர்க்கை சங்கம்

    வாழிய வாழிய துளசி மோகனன்

    வாழிய வாழிய மார்கழி மணாளன் !

     

    வண்ணங்கள் ஆயிரம் கண்களில் துள்ளும்

    கண்ணனின் நினைவில் காலங்கள் வெல்லும்

    விண்ணவர் அனைவரும் வாழ்த்திடும் வகையில்

    வைகறை நித்தம் மங்கலம் மலர்ந்திடும் !

     

    திருவருள் பொங்கிடும்  திருவடி சரணம்

    பொன்னிரு பாதம்  இன்னுயிர் காக்கும்

    கண்ணிரு விழியில் கண்ணனை வைத்தால்

    கருத்தில் காரிருள் நீங்கிக் கதிரொளி வீசும் !

     

    பூவிரித்  தாமரை பொற்பதச் செல்வி

    பூரணன் நெஞ்சினில் நித்தம் வேள்வி !

    போதுமென்ற மனம் புகுந்திட வருவாள்

    போதாதவர்க்குப் பொன்னும்  தருவாள் !

     

    அரங்கனின்  அயர்வினை நீக்கிடும் காலை

    ஆலயம் நெஞ்சினில் அமைந்திடும் வேளை !

    மார்கழிக் காலையில் மாதவன் போற்றி

    மங்கலம் தங்கிட வாழ்வினில் வெற்றி !

     

    மார்கழி மணாளன்  (1)

    திருவரங்கம்  -ஸ்ரீ ரங்கநாதர்

     

    அரங்கத்தான் திருமேனி துயிலுறங்கத் தான்

    அஞ்சுதலை ஆதிசேடன் குடைப் பிடித்தான் !

    அன்னை இலக்குமியும் அடி போற்றத்தான்

    அரங்கத்தான் தாள் அகிலமெல்லாம் காப்பு. !

     

    ஆதவன் சுடரெல்லாம் கார்மேனி கவர்ந்திருக்க

    அங்கமெல்லாம் புதுநிலவாய்ப்  பொலிந்திருக்க

    அரக்கன்தம்பி ஆள்திசைக்கும்  அருள்கிடைக்க

    அலையாழி துயில் செய்யும் அரங்கத்தான் காப்பு !

     

    விண்ணவரும் மன்னவரும் கண்விழியில் காத்திருக்க

    வேதமுடன் பாசுரங்கள் விண்வெளியில்  ஒலித்திருக்க

    விழிகாண ஆவினங்கள் விருப்பமுடன் காத்திருக்க

    விழிமூடி விளையாடும் வைகுந்தன்  அருள்காப்பு !

     

    துயிலுறங்கும் தூயவன் நினைவெல்லாம்

    துயர்துடைக்கச்  சென்றதுவோ அகிலமெல்லாம்?

    தூங்காமல் தூங்குகின்ற தோற்றமுற்றான்

    துளசி மாலையணி  துவாரகையான் திருக்காப்பு! !

     

    ஆழ்வார்கள் சாசனங்கள் அவன் கேட்டும்

    அமர்ந்திடவே  ஆசனங்கள் ஏற்கவில்லை !

    காவிரிக் கருணையில் கழனிப்பாசனம் போல்

    காதல் கொண்டோருக்குக் கண்ணன் காப்பு !

     

    நீலக்கடலிலே நீண்ட சேஷத்திலே

    நித்திரை காட்டும் முத்திரை மோனத்திலே

    நீர்மேகக் கண்ணனவன்  பாதத்தையே

    நினைத்தவருக்கெல்லாம் அருட்காப்பு !

     

     

     

     

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 225

    மதுரைக் காண்டம் – அழற்படு காதை

    வணிக பூதம்

    ama

    சிவந்த நிறம் கொண்ட
    பொன்போன்ற மேனியுடையவன்;
    நிலையான சிறப்பையும்,
    வீரம் மிகுந்த வேலையும்
    கையில் கொண்டவன்;
    அரசனின் அணிகலன்களில்
    மணிமுடி தவிர அனைத்தையும் அணிந்தவன்;
    வணிகர்க்கே உரித்தான் வணிகத் தொழிலால்
    இவ்வுலகம் முழுவதையும் காப்பவன்;

    கலப்பையும் துலாக்கோலும்
    கையில் கொண்டவன்;
    புகழ்வாய்ந்த பொன்னிற ஆடையை
    இடுப்பில் அணிந்தவன்;
    வெட்சி, தாழை, ஆம்பல்,
    சேடல், நெய்தல், பூளை, மருதம் ஆகிய
    பூக்களால் ஆன மாலையைத்
    தன் கழுத்தில் அணிந்தவன்;

    பொன்போன்ற
    நல்ல நிறம் கொண்ட சாந்தினை
    மின்னல் போல் ஒளிர்கின்ற
    மார்பிலே பூசியவன்;
    கொள், பயிறு, துவரை, உளுந்து
    ஆகியவற்றைக் கலந்து சமைத்த உணவை
    விரும்பி உண்ணும் இயல்பினன்;
    அகன்ற நெற்களம், பறவைகள் உள்ள கழனி,
    வணிக மேடை, காஞ்சி மரத்தின் அடர்த்தியான நிழல்,
    இந்த இடங்களில் முற்பகல் பொழுதில் உண்பவன்;

    Share
  • அமெரிக்க நகரங்களை ஆண்டுதோறும் நரகம் ஆக்கும் அசுர வல்லமைப் பேய்மழைச் சூறாவளிகள்

     

    -சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

     

    jaya1

     

    http://www.cnn.com/2016/10/06/us/hurricane-matthew-live-updates/index.html

    http://video.nationalgeographic.com/video/101-videos/hurricanes-101

    *****

    அழுதாலும் பயனில்லை!

    தொழுதாலும் பயனில்லை!

    கரைமதில் உடைந்து விட்டால்,

    காத தூரம் ஓட வேண்டும் அம்மா !

    குடியிருக்க இடம் ஏதம்மா ,

    கடல் தடுப்பு முறிந்து போனால்!

    உடைந்து போகும் பழைய மதில்

    ஓலமிட்டு மக்கள்

    துயரப்படவே  வைக்குதம்மா!

    ++++++++++

    லெட் ஸெப்பெளின் இசைப்பாடல் [Led Zeppelin Lyrics (1929)]

    jaya2

    பூம்புகார் சூறாவளிச் சுனாமி அடித்துக்

    கடல் மூழ்கிப் போன தம்மா!

    சுனாமிப் பேயலை மீண்டும்

    கடந்து போன ஆண்டில்,

    கடும் புயலாய் அடித்து

    மீனவர் குடிசைகளை விழுங்கிய தம்மா!

    ஒருநாட் பொழுதில் அடித்த

    சூறாவளி  பூதப் பேய்மழை

    நியூ ஆர்லீன்ஸ்

    பெருநகரை நரக மாக்கிய தம்மா!

    +++++++++++++++

    jaya3

    ஆண்டுதோறும் அமெரிக்காவில் அடிக்கும் சூறாவளிப் பேய்மழைகள். 

    ஹர்ரிக்கேன் எனப்படும் அசுரச் சூறாவளி பேய்மழை அடிப்புகள் பருவக் காலம் தவறாது, ஆண்டுதோறும் அமெரிக்கத் தென்னக மாநில நகரங்களைத் தாக்கி, நரகப் புழுதியாக்கி பேரளவு நிதிச் செலவை உண்டாக்கி வருகின்றன. அவற்றுக்கு விஞ்ஞானப் பின்புலமாய் உள்ள காரணங்கள் என்ன ?  ஒவ்வோர் ஆண்டிலும் அவற்றின் தாக்குதல்கள் தவிர்க்க முடியாததாய், எதிர்பார்க்க முடியாததாய், தடுக்க இயலாததாய் மக்களுக்குத் துயர் அளிப்பதாய்த் தெரிகின்றன.  மானிடர் வல்லவராய், அறிவுள்ளவராய், பொறிநுணுக்கத் திறமையாளராய் இருப்பினும், 21 ஆம் நூற்றாண்டில், சிறியவராய், அவற்றின் முன்னே ஆற்றலின்றிப் பின்வாங்கிப் போகும் மனித இயலாமை தெளிவாய்ப் புரிகின்றது.  சரி நமக்குப் பருவக் காலப் பேரிடர்களான சூறாவளிப் பேய்மழைத் தடுப்புகள் பற்றி என்ன தெரியும்?

    jaya4

    2004 அக்டோபரில் கூடிய அமெரிக்க விஞ்ஞானிகள் ஹர்ரிக்கேன் இடர்களை எப்படித் தவிப்பது, தடுப்பது என்று ஆய்வுகள் செய்ய முயன்ற போதிலும், 2016 இல் இதுவரை இந்தக் குறிக்கோள் நெருங்க முடியாதபடித் தூரமாய்ப் போய்விட்டது !  அடுத்த கேள்வி, எங்கே இந்த ஹர்ரிக்கேன்கள் உருவாகின்றன ?  1851 ஆண்டுமுதல் 2012 வரைப் பதிவு செய்தவை ஆக்டபஸ்போல் சுழிவடிவில் உருவானவையே.  2016 ஜூன் வரை அறிந்த விளைவுகளின்படி அவற்றைத் தவிர்க்க முடியாது, தடுக்கவும் முடியாது, திசை மாற்றவும் இயலாது என்பதே !  2016 அக்டோபரில் உருவான பூதச் சூறாவளிப் பேய்மழை “மாத்தியூ” அமெரிக்கத் தென்னக மாநிலங்களைத் [பிளாரிடா, அட்லாண்டா, தென் கரோலினா] தாக்கிப் பல நகரங்கள் நீரோடத்தில் மூழ்கின.  ஐந்தாம் தகுதியில் [Category : 5] அடித்து ஹெய்தித் தீவில் பேரளவு சேதாரம் விளைவித்தது, மாத்தியூ ஹர்ரிக்கேன்.

    +++++++++++++

    ‘ஹரிக்கேன் கேட்ரினா நியூ ஆர்லியன்ஸ் நகர்ப் புறங்களில் பேரளவு சூழ்நிலைச் சீர்கேட்டை விளைவிக்கப் போகிறது. நகர்ப் பாதுகாப்புக் கரைமதில் ஏற்பாடுகளைத் [The City Levee System] தகர்த்துக் கொண்டு நீர் வெள்ளம் கடல் கீழ்மட்டப் பகுதிகளை நிரப்பி, தெருக்களில் நீர்க்குளங்களை உண்டாகிக் குப்பை, நரகல் கழிவுகளுடன் சேர்ந்து, அபாய இரசாயனத் திரவங்களுடன் கலந்து மக்கள் தப்பி வெளியேற முடியாதபடி அடைத்து விடலாம். ‘

    இவார் வான் ஹீர்டென் [Ivor Van Heerden, Marine Scientist, Louisiana State University]

    jaya5

    ‘பொஞ்சாட்ர்டிரைன் ஏரியுடன் [Lake Pontchartrain] இணைக்கப்பட்ட கால்வாய் கரை மதில்களில் ஏற்பட்டுள்ள இரண்டு உடைப்புகளைச் செம்மைப் படுத்த முயல்கிறோம். அதற்காக வேண்டிய கல், பாறைகள், மணல் போன்றவையும், கட்டுவதற்குத் தேவையான மணல் மூட்டைகள், தூக்கி யந்திரங்கள், டிரக்குகள், ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றையும் தயாரித்து வருகிறோம். ‘

    வால்டர் பெளமி [Walter Baumy, Manager, Army Corps of Engineers (Aug 31, 2005)]

    ‘தேசீயப் பாதுகாப்பாளர் எண்ணற்ற மணற் சாக்குகளை இட்டு மதில் உடைப்பை மூட முயன்றார்கள். ஆனால் அவை யாவும் இருட்குழியில் விழுந்து மறைவன போல் காணாமல் போகின்றன. ‘

    காதிலீன் பிளான்கோ [Louisiana Governor (Aug 31, 2005)]

    jaya6

    உலகிலே நீளமான ஹரிக்கேன் பாதுகாப்புக் கரைமதில்கள்

    2300 ஆண்டுகளுக்கு முன்பு மலைப் பாம்புபோல் கற்களால் கட்டப்பட்ட, உலக விந்தைகளில் ஒன்றான சைனாவின் பெரும் நெட்டை மதில்சுவர் [The Great Wall of China] 1500 மைல் தூரம் நீண்டு செல்பவை. ஆனால் அமெரிக்காவின் மெக்ஸிகோ வளைகுடாக் கரையில் இருக்கும் நியூ ஆர்லியன்ஸ் நகரைச் சுற்றிலும் எழுப்பியுள்ள குட்டைக் கரை மதில்கள் [Levees] 340 மைல் [560 மி.மீ] தூரம் கட்டப்பட்டு, கடல் மட்டத்துக்குத் கீழாக இருக்கும் பெரும்பான்மையான பகுதிகளை நீர் பாய்ந்து நிரப்பாமல் பாதுகாத்து வருகின்றன. நீளத்திலே சைனாவின் பெரு மதிலுக்கு குறைந்த தாயினும், உலகிலே குட்டை மதில்களில் மிக நீண்டதாக இந்த கரை மதில்களைக் கூறலாம். நியூ ஆர்லியன்ஸ் நகரத்தின் வடக்கே பொஞ்சார்ட்டிரைன் ஏரி [Lake Pontchartrain], கிழக்கே போர்ன் ஏரி [Lake Borgne], தெற்கில் ஊடே செல்லும் மிஸ்ஸிஸிப்பி நதி, பிறகு சிதறிக் கிடக்கும் மெக்ஸிகோ வளைகுடாப் பகுதிகளால் சூழப்பட்டது! கால மாறுபாட்டாலும், எப்போதும் ஹரிக்கேன் சூறாவளிகள் படையெடுக்கும் பாதையில் இருப்பதாலும், அந்த பகுதிகளின் நீர் மட்டம் அடிக்கடி உயர்ந்து நகரின் கீழ்த்தளப் பரப்புகளில் பாய்ந்து நிரப்பா வண்ணம் பாதுகாப்பு மதில்கள் கட்டப் பட்டிருக்கின்றன.

    jaya7

    சென்ற நூற்றாண்டில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு 1965 செப்டம்பரில் தீவிரம்: 3-4 [Category: 3-4] கொண்ட ஹரிக்கேன் பெட்ஸி [Hurricane Betsy] கடைசியாக அடித்த சூறாவளிப் பேய்மழையில் நியூ ஆர்லியன்ஸ் நகரம் அதிர்ஷ்ட வசமாகப் பெருஞ் சேதத்திலிருந்து தப்பியது. ஆனால் பாதுகாப்பு மதில் தடுப்புகளிலும், சில உள்ளக நகராட்சிப் பகுதிகளிலும் [St. Charles, St. Bernard, Plaquemines Parishes] நீர் மட்டம் 23 அடி வரை உயர்ந்து விட்டது. மிகக் கடுமையான தீவிரம்: (4-5) கொண்டு நியூ ஆர்லியன்ஸ் நகரை மோதப் போகும் ஹரிக்கேன் கேட்ரினாவைப் பாதுகாப்பு மதில்கள் தாங்கிக் கொள்ள மாட்டா வென்று கேட்ரினா தாக்குவதற்கு முன்பே பல நிபுணர்கள் மீண்டும், மீண்டும் தமது எச்சரிக்கையை வெளிட்டனர். மதில்கள் சில மண் மேட்டாலும், சில இரும்புத் தட்டுகளாலும், சில காங்கிரீட் சுவர்களாலும் கட்டப் பட்டவை. ஆனால் அவை யாவும் தீவிரம்: 3 தாக்குதலுக்கே கட்டப் பட்டதால், கேட்ரினாவின் வேங்கை அடியைத் தடுத்துக் கொள்ள ஆற்றல் இல்லாதவை என்று முன்னெச்சரிக்கை செய்தது மெய்யாகவே இம்முறை நிகழ்ந்து விட்டது! புகழ் பெற்ற நியூ ஆர்லியன்ஸ் நகரைக் கடல் வெள்ளமும், புயலும் அடித்துக் கடல் நீரால் மூழ்க்கிப் பேரளவு நாசத்தை விளைவித்து விட்டது!

    jaya8

    நியூ ஆர்லியன்ஸ் கரைமதில்கள் சொல்லும் கதை

    சூறாவளிக் காற்று அடித்த ஒருநாள் கழித்து, 2005 ஆகஸ்டு 30 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை அன்று இரண்டு மதில் அணைகள் உடைக்கப்பட்டு, நகரின் 80% கடல் மட்டம் தாழ்ந்த பகுதிகளில், கடல் வெள்ளம் நிரம்பியது. முதலில் பேய்க்காற்று மணிக்கு 150 மைல் உச்ச வேகத்தில் தாக்கிக் கடல் வெள்ளத்தால் அடித்து, கரைமதிலில் 200 அடி அகலத்தைப் பெயர்த்து கடலே நகருக்குள் நுழைந்தது! அடுத்து காற்றின் வேகம் மணிக்கு 100 மைலாகத் தணிந்தாலும், கடல் நீரின் வலுவில் மதில் உடைப்பு 500 அடியாக அகன்று கடல்நீர் திமுதிமுவென நகருக்குள் அலை அலையாய் நுழைந்து தெருவெல்லாம் 20 அடி உயரத்துக்கு மேலாக நீர் நிரம்பியது. நாகரீகப் புராண நகரமான நியூ ஆர்லியன்ஸில் உள்ள மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், வாணிபக் கட்டடங்கள், வீடுகள், குடில்கள் யாவும் ஒருநாளில் மூழ்கிப் போயின!

    jaya9

    ஹரிக்கேன் மாத்தியூவின் போக்கு

    2003 ஆண்டு முதல் ஈராக் போருக்குப் பிறகு கரைமதில் புதுப்பிப்பு பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட அரசாங்க நிதித்தொகை [Federal Fund] குறைந்து கொண்டே வந்தது. அரசாங்க நிதிவளம் ஈராக் போரைத் தொடரவும், உள்நாட்டுப் பாதுகாப்புக்கும், வரிக் குறைப்பு ஈடுக்கும் பங்கிடவே பற்றாமல் குழி விழுந்தது. 2004 ஆம் ஆண்டில் பொஞ்சார்டிரைன் ஏரிக் கரைமதில்களை மேம்படுத்த புஷ் அதிகார வர்க்கம் 20% குறைந்த அளவு தொகையைத் தருவதாகச் சொன்னது.

    1. 2004 ஆண்டில் பொஞ்சார்டிரைன் ஏரிப் பகுதி ஹரிக்கேன் பாதுகாப்புக்கு ஒதுக்கிய நிதி யில்லாமையால் 20% [750 மில்லியன் டாலர்] மதிப்பளவே புஷ் அதிகார வர்க்கம் அளிப்பதாய் வாக்களித்தது.
    2. 2005 ஆண்டில் மேற்கண்ட திட்டத்துக்கு 20 மில்லியன் டாலர் தேவைப்பட்ட போது, புஷ் அரசாங்கம், பட்ஜெட்டில் 3.9 மில்லியன் டாலரே ஒதுக்க முன்வந்தது.
    3. காத்திருக்கும் காலம் நீடிக்க நீடிக்க, பிரச்சனைகள் பெருகி நிதிச் செலவை மிகையாக்கும். சில கரைமதில் செப்பனிடும் திட்டங்களை முடித்த கான்டிராக்டருக்கு, இன்னும் 5 மில்லியன் டாலர் தொகை கொடுக்கப் படாமலே இருக்கிறது.

    jaya10a

    நிரம்பிய வெள்ளத்தை வெளியேற்றுவதில் பிரச்சனைகள்

    அமெரிக்க இராணுவப் படையினர் கரைமதில்களில் உடைபட்ட பகுதிகளைச் செப்பனிட அரும்பாடு பட்டனர். இரட்டைச் சுழலிகள் சுழலும் CH-53 ஹெலிகாப்டர்களில் பறந்து கொண்டு 1360 கிலோ கிராம் சாக்கு மண் பைகளைத் தொப்பென இறக்கி உடைப்பை அடைக்க முயன்றார்கள். அது பலன் அளிக்கவில்லை! அடுத்து பெரும் இரும்புத் தொட்டிகளில் கற்களை நிரப்பி இடைவெளியை மூட முற்பட்டார்கள். அம்முறையும் பலன் தரவில்லை! நகரின் கடல்மட்டத் தணிவுப் பகுதிகளின் தேக்கு வெள்ளத்தை வெளியேற்ற ஆற்றல் மிக்க 22 பூத பம்பு நிலையங்கள் இருந்தாலும், அவை யாவும் நீரில் மூழ்கிப் போனதால் அவற்றை நீர்ப் பாதிப்பிலிருந்து முதலில் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தற்போது மூன்று பம்பு நிலையங்கள் செம்மை யாக்கப்பட்டு நீரை வெளியேற்றி வருகின்றன. அத்துடன் அபாய கால தற்காலிய பம்புகளை நிறுவி, நீர்நீக்கம் செய்யப்பட்டு வருகிறது. கடல் மட்டத்துக்குத் தணிவான பூதத் தொட்டி போல் நீர் கட்டிக் கிடக்கும் நியூ ஆர்லியன்ஸ் வெள்ளத்தையும், மற்றுமுள்ள சுற்றுப்புறப் பகுதிகளின் தேக்க நீரையும் வெளியேற்ற 24 முதல் 80 நாட்கள் ஆகலாம் என்று ஊகிப்படுகிறது.

    jaya-10

    கரைமதில்களைச் செப்பனிடும் பணிகள்

    நியூ ஆர்லியன்ஸ் நகரின் பெரும்பகுதிகள் கடல் மட்டத்திற்குச் சராசரி 6 அடித் தணிவாக உள்ளன. எல்லாவற்றிலும் கீழான தளம் 20 அடி தணிவாகவும், மேலான தளம் ஓரடி தணிவாகவும் இருப்பதாக அறியப்படுகிறது. ஏறக்குறைய நகரின் பாதிப்பகுதி [907 சதுர கி.மீடர்] நீர் மயமாகவும், மீதிப் பாகம் மட்டுமே நில மயமாகவும் இருக்கின்றது. இயற்கையாகவே உண்டாகும் நீர் வெள்ளத் தாக்குதலை நியூ ஆர்லியன்ஸ் தவிர்க்க முடியாததால், எஞ்சினியர்கள், கால்வாய்கள், கரை மதில்கள், நீர் வெளியேற்றுப் பம்புகள் கொண்ட மிகவும் சிக்கலான சில முறைகளை அமைத்து, நகரின் வெள்ளத் தேக்கங்களைக் கையாள கட்டி யுள்ளனர். குறைந்த அளவு [2.5 செ.மீ] மழைகூட சில பகுதிகளில் சிறிது நீர்த் தேக்கத்தை உண்டாக்கித் தொல்லை கொடுத்து விடும். நகரின் சராசரி ஆண்டு மழைப் பொழிவு 90 செ.மீ.

    jaya11

    நியூ ஆர்லியன்ஸ் நகரை உருவாக்கிய பிரெஞ்ச் நிபுணர்கள் 1718 ஆம் ஆண்டு முதல் கரை மதில்களைக் கட்டி நகரின் கடல் மட்டத் தணிவுப் பகுதிகளைப் பாதுகாத்தனர். அதுமுதல் பிற்காலச் சந்ததிகளும் நகரின் கரை மதில்களைச் செம்மைப் படுத்தி அவற்றின் நீளம், உயரம், வலு போன்றவற்றைத் தொடர்ந்து விருத்தி செய்து வந்துள்ளனர். 1965 இல் ஹரிக்கேன் பெட்ஸி நியூ ஆர்லியன்ஸ் கடற்கரைப் பகுதியைத் தாக்கி நீர் வெள்ளம் தேங்கிப் பாதகம் விளைந்த போது, கரைமதில்களின் உயரம் பல மீடர்கள் அதிகமாக்கப் பட்டன. ஆயினும் தீவிரம்: (4-5) கொண்ட ஹரிக்கேன்களின் அடியைத் தாங்கிக் கொள்ளும் ஆற்றல் அம்மதில்களுக்கு அறவே இல்லை. நியூ ஆர்லியன்ஸ் நகரைச் சுற்றியுள்ள குட்டைக் கரைமதிகள், நாளுக்கு நாள் புதைந்து போய் அவற்றின் உயரங்கள் குன்றி வருகின்றன. அவற்றைத் தொடர்ந்து கண்காணித்து எஞ்சினியர்கள் செம்மைப் படுத்தினாலும், எடுத்த பணிகள் முழுவதும் இதுவரை முடிவடைய வில்லை.

    jaya12

    பெருநகரைப் பெருநரக மாக்கிய ஹரிக்கேன் கேட்ரினா

    நியூ ஆர்லியன்ஸ் நகரம் சுமார் 480,000 பேர் வாழ்வதற்குரிய இல்லங்களைக் கொண்டது. ஆனால் அதன் வாணிபத் தொழில் துறைகளுக்கு வந்து போகும் மக்கள் தொகையையும் சேர்த்தால் 1.3 மில்லியனுக்கு மேற்பட்டது என்று யூகிக்கப் படுகிறது. இப்போது ( செப் 7, 2005) அடித்த கேட்ரினாவில் 10,000 பேருக்கு மேலாக இறந்திருக்கலாம் என்று அறியப் படுகிறது. ஆரம்பத்தில் 80% பரப்பாக இருந்து ஒரு வாரம் கழித்து நீர் மட்டம் குறைந்து தற்போது நகரின் 60% பரப்பில் மாசுகள் படிந்த வெள்ளம் சூழ்ந்து, விஷப் பண்டங்கள் கலந்து, பாக்டாரியா பெருகிப் பாதுகாப்புக்குப் மேல் 45,000 மடங்கு கூடி விட்டது என்று அறிவிக்கப் படுகிறது. நீர் வெளியேற்றிப் பம்புகள் நகரின் அசுத்த வெள்ளத்தை நீக்க இன்னும் பல வாரங்கள் ஆகலாம் என்று எஞ்சினியர்கள் கூறுகிறார்கள்.

    jaya13

    நியூ ஆர்லியன்ஸ் நகர் முழுவதும் நாசமாகிப் பெரும்பான்மையான நகர மக்கள் வெளியேறி விட்டதால், 400,000 பேர்கள் உழைப்பும், ஊதியமும் இழந்து, மாநில அரசாங்கத்தின் வருமானம் பெருத்த அளவில் சிறுத்து விட்டது. நீர்த் தேக்கங்களை வெளியேற்றி, கழிவு நீர் ஏற்பாடுகளைச் சீராக்கி, நகரத்தைச் சுத்தீகரித்துப் புத்துயிர் உண்டாக்கவும் குடிநீர், மின்சாரம், எரிவாயு, போக்குவரத்து, தகவல், வசதிகளைச் செப்பனிடவும் நிதித்தொகை (50-60) பில்லியன் டாலர் ஆகலாம் என்று தற்போது எதிர்பார்க்கப் படுகிறது. இனிவரும் அடுத்த 10 ஆண்டுகளில் எஞ்சினியர்கள் [Army Corps of Engineers] ஸேலா நீர் தேக்கக் கட்டுப்பாடுத் [Southeast Louisiana Urban Flood Control Unit (SELA)] திட்டத்தில் 430 மில்லியன் டாலர் செலவு செய்து, கரைமதில்களின் உயரம், ஆற்றலை அதிகரிக்கவும், புது பம்பு நிலையங்கள் கட்டவும் நகராட்சியில் வழிகள் வகுக்கப் பட்டுள்ளன. ஆயினும் உயிரில்லாத நியூ ஆர்லியன்ஸ் நகரம், நகர நடப்பு உள்ளமைப்புகளை [Infrastructure] மீண்டும் உருவாக்கி ஓரளவு இயங்க மூன்று அல்லது ஐந்தாண்டுகள் கூட ஆகலாம்.

    +++++++++++++++++++++++++++++++++

    தகவல்:

    1. New Orleans Levees No Match for Katrina By: David Crary [AP National Writer (Aug 31, 2005)]
    2. Why the Levee Broke By: Will Bunch, Attytood [www.alternet.org/story/24871/] (Sep 1, 2005)
    3. New Orleans Levees Patched, Army Starts Pumping Water, [Update: 2 & 6] (Sep 6, 2005)
    4. Law Enforcement May Forcibly Remove New Orleans Residents By: Scott Gold & Lianne Hart [www.Newsday.com] [Times Staff Reporters (September 7, 2005)]
    5. When the Levee Breaks By: Bill Diskoch, CTV.ca News Writer (Sep 5, 2005)
    6. Mayor of New Orleans Orders Forced Evaquations By: CTV.ca News Staff (Sep 7, 2005)
    7. An American Tragedy, Time Magazine Special Report (Sep 2, 2005) Picture Courtesy: Time.
    8.  http://www.nhc.noaa.gov/[USA Hurricane Center]
    9.  http://environment.nationalgeographic.com/environment/natural-disasters/hurricane-profile/
    10.  https://en.wikipedia.org/wiki/Tropical_cyclone[October 13, 2016]
    11. https://en.wikipedia.org/wiki/Effects_of_Hurricane_Katrina_in_New_Orleans [October 14, 2016]
    12. https://en.wikipedia.org/wiki/Hurricane_Matthew[October 15, 2016]
    13. https://blogs.scientificamerican.com/sa-visual/visualizing-hurricanes/?print=true[September 1, 2016]

    *****************************

    jayabarathans@gmail.com [S. Jayabarathan] (October 15, 2016)

     

     

    Share
  • அ  கலாம்  ஆகலாம்!

    – சித்ரப்ரியங்கா ராஜா,  திருவண்ணாமலை

     

    apj

     

    அழகிய மழலையாய் அவதரித்தாய்
    அக்னிச் சிறகு நாயகனே இன்று
    ஆனந்தத்திற்கோ அளவில்லை
    அ கலாம் நீ எங்களுடனே என்று
    அன்னை உனையும் ஈன்றிருக்கலாம்
    அள்ளி உச்சி தான் முகர்ந்திருக்கலாம்
    அல்லல் மறந்துனை வளர்த்திருக்கலாம்
    ஆ! என் மகனென வியந்திருக்கலாம்
    அயராது நீயும்  உழைத்திருக்கலாம்
    அணுஆற்றலை நீ அசைத்திருக்கலாம்
    அகிலமும் அதனால் அதிர்ந்திருக்கலாம்
    அய்யனே நீ தானே எங்கள் அ  கலாம்!
    ஆகாயத்திற்கு நீயும் விண்கலன் அனுப்பி
    அணு விஞ்ஞானியாய் உயர்ந்த கலாம்
    அவனியில் பலரும் வியந்திடத் தானே
    அறிவழகனாய் பவனி வந்த கலாம்
    அ கலாமாய் நாங்களும் ஆகிடத் தானே
    ஆர்வம் பலருக்கும்  நீ அறிவாய்  ஐயா
    அன்று நீ எங்களுக்கு இயம்பிய சொல்லே
    ஆழமாய்ப் பசுமரத்தாணி போல் மனதுள்
    அண்ணலே உன் பிறந்த நாளில் தானே
    ஆவலுடன் உறுதி பூணுவோமே நாங்கள்
    அன்னை பாரதமுமே வல்லரசாய் மாற
    ஆற்றுவோம் பணி உன் வழியில் எனவே
    அய்யனே உன் பிறப்பு அழகிய சரித்திரமே!

     

     

    Share
  • சக்தியின் பித்திலிருந்து தப்புவது கடினம்!

    -கவியோகி வேதம்

    அப்பனே! மெத்தக் கடினம்! – தியான
      –ஆளுகைச் சுற்றில்நீ வந்தாலே! (அப்பனே)
    வெப்பமும் ஆவியும் போலே – சக்தி
     –விரலுக்குள் உன்னைப்பிடிப் பாளே!

    நித்தமும் மூச்சைப் பிடிப்பாய்! — சக்கர
     –நீள்சுகம் அங்க னுபவிப்பாய்! – அவள்
    கொத்தாய்உன் மேனி  பிடிப்பாள்! – பேசிக்
     –கொஞ்சியே சித்தும் வடிப்பாள்!  (அப்பனே)

    உனக்குள் பரவசம் தந்தே — மூளை
      –உச்சியில் நின்றே சிரிப்பாள்! – அவள்
    தினமும் சிலரை அனுப்பி- வினைத்
     –தினவைஉன் மூலமே தீர்ப்பாள்!  (அப்பனே)

    சக்தியின் பித்தில் இருந்தே – உன்னால்
     –தப்பவே ஒண்ணாது! – சொன்னேன்! — ஆக
    பக்தியும் த்யானமும் வேண்டின் — சக்திப்
     –பரப்புக்குள் போகும்முன் யோசி!  (அப்பனே)

     

     

    Share
  • அரிய பரிசு

     
    மீ. விசுவநாதன்

    sri
    போக்கிடம் காணாத போது
    புகலிடம் தந்தவரைப் போலே
    பூக்களைத் தூவியொரு பாதை
    போட்டவர் பேரென்ன தோழி !
    தாக்கிடும் வன்பசியைப் போக்கத்
    தாய்யெனக் கைக்கொண்டு சேர்த்து
    ஆக்கிய நல்லுணவு தந்த
    அன்பினைப் போற்றுகிறேன் வாழி!

    மூடனாய் ஊர்சுற்றி வந்த
    முகத்தினை நேசமுடன் பார்த்துச்
    சூடனாய்க் கல்விதனைக் காட்டிச்
    சோதியாய்க் காட்டியதார் தோழி !
    பாடநான் வாய்திறந்த போது
    பளிச்சென வார்த்தைகளைக் கொட்டிப்
    போடுநீ உன்கவிக்குள் என்றே
    சொன்னவள் “சாரதாவே” வாழி !
    (14.10.2016 01.56 am)

    Share