-மேகலா இராமமூர்த்தி

 cockandhen

கோழிச்சேவலின் பின்னே அதன் அளகு (பெட்டைக் கோழி) அழகுநடை பயிலும் கவின்காட்சியைத் தன் புகைப்படக்கருவிக்குள் அள்ளிவந்திருப்பவர் திரு. பிரேம்நாத் திருமலைசாமி; இவ்வாரப்போட்டிக்கு இதனைத் தேர்வுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் எம் நன்றி!

அதிகாலை வேளையில் சேவல் எழுப்பும் கூவல், ”சோம்பல் விடுத்துச் செயலாற்றப் புறப்படு!” என்று மாந்தருக்கு  அதுவிடுக்கும் அறைகூவலாகும்!

கண்ணைக்கவரும் இவ்வண்ணக்காட்சி நம் கவிஞர்களின் கற்பனைச் சிறகுகள் உயரப்பறக்க உத்வேகமளிக்கும் என நம்புகின்றேன்.

இனி, கவிதைகளைப் பார்வையிடுவோம்!

*****

சேவலின்பின்னே அன்போடு நடைபயிலும் பேடையைப்போல் கணவனும் மனைவியும் ஒன்றுபட்டு (இல்)வாழ்ந்தால் அது நல்வாழ்வாய் மலரும் என்கிறார் திரு. ரா.பார்த்தசாரதி

சேவல் கூவிதான் பொழுது விடியுது
கோழி தன் இரையைத் தேடி அலையுது
ஆண் சம்பாதித்தால்தான் குடும்பத்திற்கு விடிவு
பெண் சம்பாத்தியம், பற்றாக்குறைக்கு ஓர் தீர்வு!
சேவலும், நீர்நிலைக்குத் தன் பெட்டையுடன் செல்கின்றது,
தாகம் தீர்க்கவும், இரைதேடவும் வழி காண்பிக்கின்றது
[…]
ஆணும்
பெண்ணும் பணத்திற்காக வேறிடம் செல்கின்றனரே
குழந்தைகளிடம் அன்பைக் காட்ட நேரமில்லை என கூறுகின்றனரே!
கூரை ஏறிக் கோழி கூவினாலும் ஓசையில்லை
கோழி முட்டை இட்டாலும் சேவல் அடைகாப்பதில்லை
ஆண்களும், பெண்களும்,பொருள்  ஈட்டாமலில்லை
குழந்தைகளுக்கு நல்ல உணவும், கல்வியும் அளிக்காமலில்லை!
சேவலுக்கு கொண்டை அழகு, மயிலுக்கு தோகை அழகு,
சேவலுக்குப் பின் இரண்டடி பின்னே வீட்டுக் கொடுத்து செல்கிறதே
ஆணும்,பெண்ணும் வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து வாழ்வதே அழகு…!

*****

”உயிர்களைக் கொன்று புசித்தல் பாவம் என்று வள்ளுவர் சொன்னாலென்ன… சீவகாருண்ய வள்ளலார்தான் சொன்னாலென்ன? ’கொன்றால் பாவம் தின்றால் போச்சு’ எனும் மாந்தரின் சித்தாந்தம் மாறாதவரைத் தம் உயிருக்கு நாட்டில் உத்தரவாதமில்லை என்றுணர்ந்த கோழியும் சேவலும் காட்டைநோக்கிப் புறப்பட்டுவிட்டன!” என்று வேதனையோடு விளம்புகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

மனவருத்தம் கோழிகளுக்கு,
மனிதன் மீது..

இனவிருத்திக்கென்று முட்டையிட்டால்,
இவன் விருந்தாக்கிவிடுகிறான்..

சாமி பேரைச்சொல்லி
பலியிட்டு எங்களைச்
சாப்பாடாக்கிக் கொள்கிறான்..

விருந்து இவனுக்கு வந்தால்,
வருந்தவேண்டியது நாங்கள்
அறுத்துவிடுகிறான் கழுத்தை..

செல்லப் பிராணிகளாய்
வளர்ப்பது,
கொல்வதற்குத்தானோ..

இனியும்
இவனுடனிருந்தால் ஆகாதென,
சேவலும் கோழியும்
சேர்ந்தே கிளம்பிவிட்டன
காட்டுக்கு…!
 

*****

நகரமயம் நல்லுயிர்களுக்கு நரகமாய் மாறிவிட்ட சூழலில், இன்பம்தரும் இயற்கையோடு, எழில்கொஞ்சும் பறவைகளும் விலங்குகளும் சேர்ந்தேஅழியும் அவலம் அரங்கேறிவருகின்றது. கிராமியச்சூழலை மீட்டாலன்றி இக்கொடுமைக்கு முடிவுகட்ட இயலாது! என்று எதார்த்தம் பேசுகின்றார் முனைவர். மா. பத்ம பிரியா.

நாகரிகப் படையெடுப்பால்
நசிந்து வரும் கிராமியச்சூழல்
ஆறுகளும் குளங்களும் காடுகளும் சோலைகளும்
ஆரோக்கியம் தரும் காற்றும் நீரும் கரைந்து போயின
நாட்டுக் கோழி நாட்டுச்சேவல்
நம் நாட்டின் பாரம்பரிய உணவு,உடை,கலாசாரம்
நாட்டுணா்வு என அடுத்தடுத்த நன்மைகள்
நலக்கேடாய் மரணப்படுக்கையில்
நீரோடைகளும் சார்ந்திருக்கும் மரங்களும்
ஆதரக்க ஆளின்றி
நிழலின்றிக் கருகின
எப்போதோ நம் புகைப்படப்பதிவுகளில்
புதைந்திருக்கும் இயற்கை காட்சிகள்
விழிகளுக்குப் புத்துணர்வு தருகின்றன
வருங்காலத்தினர் இயற்கை காட்சிகளை
ஆவணப்படங்களில் காணும் அவலம்…
குறுகிய கால உற்பத்தியால்
விலங்குகளும்,பறவைகளும் வளர்ந்தாலும்
நமது பாரம்பரிய அடையாளம் தொலைந்து போவது
நமக்கு ஏன் புரியாமல் போனது?
நீரும் நிலனும் செழிக்க
விலங்கும் பறவையும் காக்க
நலம் பயக்கும் கிராமியச் சூழலை வளர்ப்போம்
நாகரிக நஞ்சால் மாண்டு போவதை தடுப்போம்

*****

கொண்டைச்சேவலும் அதன் அண்டைநிற்கும் பேடையும் பத்திரமாய்வாழப் பாதுகாப்பான இடத்துக்கு அவற்றை அனுப்பிவிட்ட மகிழ்ச்சி கவிஞர் திருமிகு. சியாமளா ராஜசேகரின் கவிதையில் வழிந்தோடக் காண்கிறேன்.

கொண்டை சேவல் போகுது
****
கோழி பின்னே தொடருது!
தண்ணீர்க் குளத்தைத் தேடியே
****
தாகத் தோடு செல்லுது!
மண்ணில் புழுக்கள் இல்லையோ
****
மயங்கி இங்கே வந்ததோ?
கெண்டை மீனைப் பிடிக்கவோ
****
கிளம்பி இரண்டும் வந்தது!
கண்ணில் பட்டால் காலிதான்
****
கறியாய் மணப்பீர் வீட்டிலே!
புண்ணாய் நெஞ்சம் வலித்திடும்
****
புரிந்து விரைந்தே ஓடுவீர்!
எண்ணம் அறிந்து செயல்பட
****
என்னால் முடிந்த உதவியே!
வண்ண உலகில் மகிழ்ச்சியாய்
****
வாழ்க நீவிர் இருவரும்!!!

*****

சேவற்போர் புரிந்தும், அவற்றைக் கொன்றுதின்றும் உள்ளம் களிக்கின்றார் இரக்கமன்ற மனிதர். ”பிறருக்கு உணவாவதற்கென்றே பறவையினத்தைப் படைத்த இறைவன் கொடியவனே!” எனக் கடவுளைக் கடிகின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.

ஆணுக்கு சேவல் என்றும்
பெண்ணுக்குப்பேடு என்றும்
பெயர் வைத்தார்
மனிதனின் உணவுக்காக
சேவலையும் பேடையும்
வளர்த்திட்டார்
மனம்கிழ்ச்சிக்காக
சேவலையும் சேவலையும் மோதவிட்டு
வெற்றிபெறும் சேவலை வளர்த்தவன்
சேவல் வீரன் என்று மார்தட்டுவான்
விவரம் புரியாத சேவல்
கால நேரம் பார்த்து கூவிஎழுப்பும் மனிதனை
காலம் ஆகப்போவது தெரியாமல்
குப்பையைக்கிளறும் கோழிகள்
கடைசியில் மனிதனின் வயிற்றுக்குள் போக
இறக்கைகள் எல்லாம் குப்பையாய்போகும்
பிறருக்கெனவேவாழ்ந்திடவே சேவலைப் படைத்த
இறைவன் கொடியவனே!

*****
பறவையினத்துக்காகப் பாசத்தோடு உரிமைக்குரலெழுப்பியிருக்கின்றனர் நம் கவிஞர்கள். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்!

இந்தவாரத்தின் சிறந்த கவிதை அடுத்து நம் பார்வைக்கு!

அக்கரையில் வளமிருக்கு கொக்கரக்கோ – நாம்
அங்க போயி சீ(வி)ச்சுக்கலாம் கொக்கரக்கோ
இக்கரையில் எதுவுமில்லக் கொக்கரக்கோ – நாம்
எதுக்கு இங்க வாழ வேணும் கொக்கரக்கோ.

சொந்த மண்ணு கெட்டியெண்ணு கொக்கரக்கோ – நீ
சொகுசு தேடி அலையாத கொக்கரக்கோ
இந்த மண்ணும் நல்லதுதான் கொக்கரக்கோ –கொஞ்சம் எறங்கிப்புட்டா பொழச்சுக்கலாம் கொக்கரக்கோ.

பூச்சி புழு தேவையின்னா கொக்கரக்கோ – அங்க
போயிச் சீச்சி எடுத்துக்கலாம் கொக்கரக்கோ
ஏச்சிக் கூடப் பொழச்சுக்கலாம் கொக்கரக்கோ – உடன்
என்னோட வந்துரு நீ கொக்கரக்கோ

பொழப்புக் கெட்டு வாழுறது கொக்கரக்கோ – நமக்குப்
பொருந்தாது திரும்பிடலாம் கொக்கரக்கோ
ஒழச்சு வாழப் பழகிக்குவோம் கொக்கரக்கொ – நம்ம
ஊரிலேயே இருந்திடுவோம் கொக்கரக்கோ.

அக்கரைக்குச் சென்று பிழைக்கலாம் என்று அக்கறையோடு சேவல் சொல்வதும், அதனைக் கண்ணியமாய் மறுத்து, உழைத்தால் நாம் வாழும் மண்ணிலேயே கவுரவமாக வாழ வாழியிருக்கு என்று பேடை பதில் சொல்வதும் பறவைகளுக்கு மட்டுமல்ல மனிதருக்கும் கச்சிதமாய்ப் பொருந்தக்கூடியதே!

பட்டணந்தான் போகலாமடி பொம்பளே பணங்காசு
தேடலாமடிநல்ல கட்டாணி முத்தே
என் கண்ணாட்டி நீயும் வாடி பொண்டாட்டி தாயே…!

என்று கணவன் அழைக்க,

டவுனு பக்கம் போகாதீங்க மாப்பிள்ளே டவுனாகிப் போயிடுவீங்கஅந்த
டாம்பீகம் ஏழைக்குத் தாங்காது பயணம் வேண்டான்னா கேளு மாமா…!

என்று மனைவி மறுத்துரைக்கும் (உடுமலை நாராயண கவியின்) திரைப்பாடலின் நவீன வடிவமாகவே இக்கவிதையை நான் கருதுகின்றேன். 

சொந்த மண்ணைப் போற்றும் உயர்சிந்தனையைத் தன் கவிதையில் விதைத்திருக்கும் திரு. எஸ். கருணானந்தராஜாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வு செய்கிறேன். 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 82-இன் முடிவுகள்

  1. மேற்படி படக்கவிதைப்போட்டியில் என்னைச் சிறந்த கவிஞராகத் தெரிவு செய்துள்ளமையை இன்றுதான் கண்ணுற்றேன். அதையிட்டு எனதுமகிழ்வையும் நன்றியையும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெரிவிக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *