க. பாலசுப்பிரமணியன்

 

பூபாளம் காலையிலே, புன்னகையில் ஆனந்த பைரவியே

பொலிவுடனே காம்போதி, பொழுதிறங்க நீலாம்பரி

போதை தரும் மோகனமே; போற்றிடவே கல்யாணி

புவனமெங்கும் ராகங்களே! புலன் போடும் தாளங்களே!

 

மூச்சினிலே ஒரு ராகம், மூச்சிரைக்க ஒரு ராகம்,

சிரிப்பினிலே ஒரு ராகம், சிங்கார நடையினிலே ஒரு ராகம்

கொதிக்கும் உலையினிலும் கொழுந்து வடியும் நெருப்பினிலும்

சுவைக்கும் நாவினிலும் சுகமான ராகங்களே!

 

அருவியின் பாய்ச்சலிலும் அன்னத்தின் நடையினிலும்

சிட்டுக்குருவியின் சிறகசைவிலும் சிங்கத்தின் கர்ஜனையிலும்

மோதகன் களிறு மதமுண்டு பிளிறுகையிலும்

மோகத்தின் முனகலிலும் மலர்ந்திடும் ராகங்களே !

 

மணி ஓசையிலே ஒரு ராகம்,

முத்துச்சிதறலிலே ஒரு ராகம்,

மழலைச்சிரிப்பினிலே ஒரு ராகம்,

மேகமுழக்கதிலும் ஓர் ராகம்!!

 

அம்மாவென்பது கன்றின் ராகம்

அமைதி என்பது ஆன்மாவின் ராகம்

மனத்தின் உளைச்சலில் மடமையின் ராகம்

மரணத்தின் வாயிலில் முகாரியே ராகம்!!

 

வாழ்க்கைவீதியில் எத்தனை ராகங்கள்!!

வாழ்வில் பொறிகள் ஐந்தும் போடும் தாளங்கள்

வாழ்ந்து பார்த்தால் அத்தனையும் வேஷங்கள்

வானும் நிலமும் சேர்ந்து பாடும் கீதங்கள்!

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *