க. பாலசுப்பிரமணியன்

மூளையின் உள்ளே

education

கற்றலைப் பற்றிய ஆராய்ச்சிகளின் மூலம் எவ்வாறெல்லாம் மூளையின் பல பகுதிகள் நமக்கு மிகவும் உறுதுணையாக இருக்கின்றது என்பது மிகத் தெளிவாக விளங்குகின்றது. அது மட்டுமல்ல, மற்ற உயிரினங்களைவிட மனித மூளை எவ்வாறு மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றது, சிந்தனை, புத்திசாலித்தனம், மதிகூர்மை, மற்றும் திறனாய்வு செய்கின்ற மேலாண்மை ஆகியவை எவ்வாறு வெளிப்படுகின்றது என்பதும் நமக்குத் தெரிய வருகின்றது.

மூளையின் வளர்ச்சியைப் பற்றி ஆராய்ச்சிகளில் ஈடுபாடுள்ள வளர்ச்சி உயிரியலாளர்கள் (Developmental Biologists) மூளையின் மூன்று விதமான வளர்ச்சி நிலைகளை நமக்கு எடுத்துரைக்கின்றனர். இவைகளை முறையாக

1.Reptilian Brain (ஊர்வன சார் மூளை )

2, Mammalian Brain (பாலூட்டிகள் சார் மூளை )

3  Neo cortex (நவ-புறணி)

என்றும் அழைக்கின்றனர்.

இவற்றில் முதல் நிலையான ஊர்வனசார் மூளை, (Reptilian Brain ) மூளை வளர்ச்சியின் முதற்படியாக விளங்கியதாகவும், இதன் வளர்ச்சியில் பய உணர்வு அதிகமாக பாதித்ததாகவும் கூறப்படுகின்றது. அதனால் தான், மனிதர்களில் பயஉணர்வு பலருக்கு அடிப்படை உணர்வாக அமைந்து ஏதாவது ஒரு பொருளுக்கோ, கருத்துக்கோ, நிகழ்வுக்கோ மனம் அடிப்படையில் பயம் கொள்வதாகவும் மன இயல் நிபுணர்களிடையே ஒரு கருத்து நிலவி வருகின்றது. மனித இனத்தின் பல வேலைகளைக் கட்டுப்படுத்தும் இப்பகுதி, மூசசு விடுதல், அடிப்படை செயல்களை ஒழுங்குபடுத்தல் (Regulatory functions), மற்றும் தானியக்கமாக இருக்கின்ற (auto-response) பல நிகழ்வுகளை செம்மைப் படுத்துதல் ஆகையவற்றைச் செய்கின்றது.

அதேபோல் பாலூட்டிசார் மூளை ( இதை உணர்வு செயலி mammalian brain  என்றும் அழைக்கலாம்) மனித உணர்வுகளை அறிந்து, புரிந்து, ஒருங்கிணைத்து, ஒழுங்குபடுத்தி வெளிப்படுத்தும் நிகழ்வுகளுக்கு மேலாண்மை வகிக்கின்றது. கோபம், பாலுணர்வு,  அதிசயம், மகிழ்ச்சி போன்ற பல உணர்வுகளை இந்தப் பகுதி பரிபாலிக்கின்றது. உணர்வுகளின் வேகம், தொடர், காலப் பரிமாணங்கள் போன்ற பல உணர்வின் பரிமாணங்களை இதுவே ஆசான்.! இது மூளை வளர்ச்சியில் இரண்டாவது படியாக அமைந்தது என்று வல்லுநர்கள் கருத்து.

நவ-புறணி (Neo Cortex) வளர்ச்சியின் மூன்றாவது படிக்கல்லாக அமைந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இது மூளையின் மேல்பகுதியாகவும் மூளையின் உள்பகுதிகளுக்கு ஒரு மேலுறைபோலவும் அமைந்துள்ளது.. இதையே பலரும் மனிதமூளை என்றே அழைக்கின்றனர்.

மனித மூளை (Neo Cortex) வளர்ச்சியின் மூன்றாவது படிக்கல்லாக அமைந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இது மூளையின் மேல்பகுதியாகவும் மூளையின் உள்பகுதிகளுக்கு ஒரு மேலுறைபோலவும் அமைந்துள்ளது. ஒரு பிறந்த குழந்தைக்கு விரிக்கப்படும் இரப்பர் விரிப்பின் அகல நீளத்திற்கு ஈடு கொடுக்கும் அளவில் உள்ள இந்த மேலுறை மனித மூளையின் பல செயல்களுக்குக் காரணமாக விளங்குகின்றது.

பார்வைப்புறணி, (Visual Cotex)  செவிப்புலப் புறணி (auditory cortex) , மற்றும் உணர்ச்சிப்புறணி (sensory cortex)  இவற்றின் உள்ளீட்டுக்கள் இங்கே ஒருங்கிணைக்கப்பட்டு அலசப்பட்டு பொருள்சார் கருத்தாக நமக்கு அறிவிக்கப் படுகின்றது. மற்றும் நமது நினைவுகள் அனைத்தும் இங்கே பதிவு செய்யப்பட்டு நினைவலைகளாக காக்கப்பட்டு வருகின்றன.

மூளையின் இந்த மூன்று பகுதிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு மனிதத்தின் சிறப்பை வெளிப்படுத்த மிகவும் உதவியாக அமைகின்றது. இதில் முக்கியமாக  மேலுறையாக விளங்கும் மனிதமூளை நமது பல முக்கிய சிந்தனைச்செயல்களுக்கு உதவியாக இருப்பது மட்டுமின்றி புதிய எண்ணங்களையும் புதிய கருத்துவண்ணங்களையும் உருவாக்குவதற்கு காரணமாக உள்ளது. இதனால் தான் தலையில் அடிபடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது . மூளைப்பகுதிகளில் ஏற்படும் சில சிறிய தாக்கங்கள் கூட அவற்றின் வேலைகளை பாதித்து அவற்றின் திறன்களையும் செயல்பாட்டு முறைகளையும் மாற்றி அமைந்துவிடுகின்றன. \இந்த மூன்று பகுதிகளை இணைத்து செயல்படுவதில் பல்லாயிரக்கணக்கான நியூரான்களும் அதனுடன் இணைந்த மின்வேதியில் செயல்பாடுகளும் தோள்கொடுக்கின்றன. இங்கு நடைபெறுகின்ற பல்லாயிரக்கணக்கான செயல்பாடுகள் நடப்பதற்கு எடுத்துக்கொள்ளப்படும் நேரமோ ஓர் வினாடியின் மிகச்சிறிய விழுக்காடுகள்தான். !

மேலெழுந்தவாரியாகக் கற்றலைப் பார்க்கும் நாம் அதன் பின்னே நடக்கும் செயல்களை அறியும்போது அது ஆச்சரியமாகவும் இயற்கையின் இணையில்லா பேராண்மையை வெளிப்படுத்துவதாகவும் அமைகிறது.

தொடரும்…

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *