Tag: அண்ணாகண்ணன்

  • படக் கவிதைப் போட்டி – 3இன் முடிவுகள்

    அண்ணாகண்ணன்

    சிலை வணக்கம் புரியும் சிறுவனின் மனத்தில் புகுந்து, கலை மணக்கும் கவிதை வடித்த அன்பர்களுக்கு வாழ்த்துகள். புதுவை சரவணன் எடுத்த நிழற்படத்தின் சாரத்தை நிஜப் படமாய் எழுத முயன்றீர்கள்.

    16720185552_5ebd517bcb_o

    தெய்வத்தை வணங்கும் தெய்வம் என்று முகநூலில் ராமன் ஜனனியும் ஒரு தெய்வம் கடவுளை வணங்குகிறது…! என்று வேலுச்சாமியும் வர்ணித்தது, இந்தப் படத்திற்கான அழகிய தலைப்பு.

    வீட்டுச் சிக்கல்களையும் நாட்டுச் சிக்கல்களையும் சொந்தச் சிக்கல்களையும் தீர்க்க, இந்தச் சிறுவன் கடவுளை வேண்டுவதாக, கவிஞர்கள் அடுக்கிய விதத்தைக் கண்டோம். அதில்

    எப்போதும் இதையே பேசிடாமல்
    என்னை அவர்கள் கொஞ்சிடணும்

    என எஸ்.பழனிச்சாமியும்

    உன்னை வேண்டுவேன் படைத்தவனே
    உலகினில் வேண்டாம் அனாதைகளே…!

    என செண்பக ஜெகதீசனும் தீட்டிய வரிகளை ரசித்தேன்.

    எனினும் ஒரு முழுக் கவிதை என்ற அளவில் பார்க்கையில், பி.தமிழ்முகிலின் படைப்பு என்னை அதிகம் கவர்ந்தது.

    ஓட்டின் இடுக்கில் சின்னஞ்சிறு கூட்டில்
    சிட்டுக்குருவியும் குஞ்சுகளும்
    சுகமாய் தான் வாழனும்
    பூனையிடமிருந்து காத்திடனும் சாமியே!

    கோழிக் குஞ்சையும் வாத்து குஞ்சையும்
    பருந்து காக்கையிடம் இருந்து
    பத்திரமா காக்க வேணும் – அவையும்
    என் கண் முன்னே சிறகடிச்சு பறக்கனும்!

    கன்றுக் குட்டியும் ஆட்டுக் குட்டியும்
    என்னைக் கண்ட மறு நொடியே
    துள்ளி ஓடி வந்திடனும்
    அன்புடன் நானும் அணைத்திடனும்!

    சின்னச் சின்ன ஆசைகளின்
    சின்னஞ்சிறு பட்டியலிது
    பட்டியல் வளரும் வேளைதனில்
    பட்டென்று சொல்லிடுவேன் உன்னிடமே!

    பொய் பொறாமை புரட்டும் தான்
    என் மனதை அண்டாது காத்திடனும்
    அன்பும் பண்பும் எந்நாளும்
    குறையாது நானும் வாழ்ந்திடனும்!

    நாளும் உன்னைச் சந்தித்தே
    நலமும் கேட்டு மகிழ்ந்திடுவேன்
    நலமும் வளமும் உலகமெலாம்
    நிலைத்திடவே வேண்டிடுவேன்!

    இவற்றைச் சின்னஞ்சிறு ஆசைகளாகப் பார்த்தாலும் அர்த்தம் உண்டு. அதே நேரம், குறியீடுகளாகப் பார்த்தாலும் பொருள் உண்டு. மேலும் கடவுளை நலம் கேட்பது ஓர் அழகு என்றால், தனக்காக வேண்டாமல், உலகமெலாம் நலமும் வளமும் நிலைத்திட வேண்டுவது, இன்னும் அழகு. வேண்டும் என்பதன் பேச்சு வழக்கு வேணும் என்றே இருக்க வேணும். மூன்று சுழியை இரண்டு சுழியாக்கினாலும், கவிதை அம்சத்துக்காக, இந்த வாரத்தின் சிறந்த கவிஞராகப் பி.தமிழ்முகிலைத் தேர்ந்தெடுக்கிறேன்.

    அத்தனை பேரும் கடவுளை வேண்டுகையில், கடவுளே குழந்தையிடம் உரையாடுவது போல் மாற்றி யோசித்ததோடு மட்டுமின்றி,

    குட்டிச்செல்லமே…!
    கூடவே நானிருப்பேன் – உன்
    குட்டித்தோழனாக…!

    எனக் கடவுளைக் குட்டித் தோழனாக்கிய தனுவை இந்த வாரத்தின் குறிப்பிடத்தக்க கவிஞராக அறிவிக்கிறேன்.

    தமிழ்முகிலுக்கும் தனுவுக்கும் பாராட்டுகள். பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

    Share
  • படக் கவிதைப் போட்டி – 2

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    Robins_click

    ராபின் ராஜ் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (07.03.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை முனைவர் அண்ணாகண்ணன் தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    Share
  • முதலாவது படக் கவிதைப் போட்டியின் முடிவுகள்

    அண்ணாகண்ணன்

    முதலாவது படக் கவிதைப் போட்டியில் உற்சாகமாகப் பங்கேற்ற படைப்பாளிகள் அனைவருக்கும் பாராட்டுகள். ஒரு படத்தைப் பார்த்தவுடன் உங்களுக்குள் இருக்கும் படைப்புத் திறன் வெளிப்படுகிறது எனில், நீங்கள் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறீர்கள் என்பது பொருள். அந்த ஒன்றுக்காகவே முதலில் உங்களைப் பாராட்டுகிறேன்.

    padakkavithai - 1

    அனிதா சத்யம் அவர்களின் அழகிய படம், சிறப்பான தூண்டுதலை அளித்துள்ளது. இதற்காக அனிதாவுக்கும் அவரது படத்தைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்த சாந்தி மாரியப்பனுக்கும் நம் நன்றிகள்.

    20 பேர்களின் 25 பின்னூட்டங்கள், ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளும் பங்கேற்ற சிலர், புதுக்கவிதை, வெண்பா, விருத்தம் என விதவிதமான வடிவங்கள், அதிலும் பல்வேறு வட்டார வழக்குகள், இரண்டு வரிகளிலிருந்து 50க்கும் மேற்பட்ட வரிகள் என வெவ்வேறு அளவுகள் என்று போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. கவிதைகளில் எழுத்துப் பிழைகளும் வரி ஒழுங்கமைவுக் குறைவுகளும் இருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல், சொன்ன செய்திகளையும் சொல்லிய விதத்தையும் மட்டுமே கவனத்தில் கொண்டேன்.

    ஒவ்வொருவரின் பார்வையும் ஒவ்வொரு வகையில் வித்தியாசமாக இருந்தது. அனைவருமே சிரிப்பை விரும்புகிறார்கள் என்பதே பொது ஒற்றுமை. சிரிப்பைத் தொலைத்த சூழ்நிலைகளை, வலிகளைச் சில கவிதைகள் நினைவுகூர்ந்தாலும் ஒரு சிரிப்புக்குப் பின் இருக்கும் சக்தியையும் அழகையும் வசீகரத்தையும் ஆளுமையையும் பற்பல கவிதைகளும் சிறப்பாக வெளிப்படுத்தின.

    இதில் ஏதாவது ஒன்றை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நிலையில், பல்வேறு கவிதைகளையும் பரிசீலித்ததில் புனிதா கணேசனின் கவிதையை இந்த வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கிறேன். அவரது கவிதை இங்கே-

    இயற்கையின் தூய சுவாசங்கள்
    இயம்பிய இனிய கூடுதல்
    பயத்திட்ட பழமை நட்புகள்
    வியந்து மகிழ்ந்ததில்
    தூய இதயங்கள் கொட்டின
    தூ வெண் முத்துக்கள்
    பரல்களாய் இதழ்களில் விரவின,
    அவை விரைந்து பரப்பின
    பிரபஞ்சம் முழுவதும் வரையற்ற மகிழ்வை!

    பாரங்கள் குறைந்ததால் துயரங்கள் பகிர்ந்ததால்
    இலகுவாய்ப் போன இதயங்கள் நெகிழ்ந்ததில்
    சிதறின சிரிப்புகள்!!
    சிட்டுகள் ஆயினர் பெண்கள்!

    இன்பத்தின் இறக்கைகள் கொண்டு துன்பத்தை மறந்தே..
    மனத்தில் இனிய பொழுதுகள் கனிந்து போயின…
    கனத்த பொழுதுகள் காற்றாய்க்… கரைந்ததில்
    இதழ்கள் முகிழ்த்தன முத்துப் பரல்கள்……
    கொத்துக் கொத்தாக சத்தமாய் சிரிப்பு…
    எங்கும் நிறைந்தது
    மனம் விட்டுச் சிரிக்கும் மங்கைகளாலே…

    சிட்டுகள் ஆயினர் பெண்கள்! என்ற ஒற்றை வரியில் அபாரமான கவித்துவம் வெளிப்படுகிறது.

    ரேவதி நரசிம்மனின்

    ஓடிய நரிக்கு ஒரு சிரிப்பு, பொங்கும் சோறுக்கு ஒரு சிரிப்பு.
    சிரித்தே வாழ்ந்திடுவீர் நலமாக

    என்ற வரிகளும் எனக்குப் பிடித்திருந்தன.

    புனிதா கணேசனை இந்த வாரத்தின் சிறந்த கவிஞராகவும் ரேவதி நரசிம்மனை குறிப்பிடத்தக்க கவிஞராகவும் தேர்ந்தெடுத்துப் பாராட்டுகிறேன்.

    பங்கேற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

    Share
  • ஐந்தாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

    முனைவர் அண்ணாகண்ணன்
    5_five

    சிந்தனை, செயல், முன்னேற்றம் என்ற மையக் கருவுடன், 2010 மே 16 அன்று தன் முதல் இடுகையை வல்லமை வெளியிட்டது. 4 ஆண்டுகளை நிறைவு செய்து, 2014 மே 16 அன்று, ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த 4 ஆண்டுகளில் வல்லமை ஒட்டுமொத்தமாக 5726 படைப்புகளை வெளியிட்டுள்ளது. இவற்றுக்கு 8204 பின்னூட்டங்கள் கிடைத்துள்ளன. பல நாடுகளிலிருந்து பல்லாயிரம் வாசகர்கள், இலட்சத்துக்கும் மேலான முறைகள், வல்லமையின் பக்கங்களை வாசித்துள்ளார்கள்.

    2013 மே 16 முதல் 2014 மே 15 வரையிலான இந்த ஓராண்டில் வல்லமை, முக்கியத்துவம் வாய்ந்த பல முத்திரைகளைப் பதித்துள்ளது. அவற்றுள் சிலவற்றை இங்கே காண்போம்.

    வல்லமையின் தொடர்கள்

    இந்த ஒரே ஆண்டில் வல்லமை, 30க்கும் மேற்பட்ட தொடர்களை வெளியிட்டுள்ளது.

    திரைப்படங்களின் மூலம் புகழ் பெற்ற நகைச்சுவை எழுத்தாளரும் நடிகருமான கிரேசி மோகன், வெண்பாவிலும் சந்தப் பாடல்களிலும் தமக்குள்ள தனித் திறனை வல்லமையில் வெளிப்படுத்தியுள்ளார். திருமால் திருப்புகழ் என்ற தலைப்பில் அவர் தினந்தோறும் இயற்றி வரும் துடிப்பான, வீச்சு மிகுந்த பாடல்கள், வாசகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன.

    பேராசிரியர் பெஞ்சமின் லெபோ எழுதிய சைவ சமயம் அறிவியல் மையம், ராமஸ்வாமி ஸம்பத் எழுதிய உத்தமன் அலெக்சாண்டர்!.., ராமன் வரும் வரை காத்திரு, தேமொழியின் பிக்கோலிம் புளுகு, மலர் சபாவின் நான் அறிந்த சிலம்பு, புவனேஷ்வரின் மகாபாரத முத்துகள், இவள் பாரதியின் சிறுகை அளாவிய கூழ், நாகேஸ்வரி அண்ணாமலையின் கென்யா பயணம், இஸ்ரேல் பயணம், சு.கோதண்டராமன் எழுதி வரும் பாரதியின் வேத முகம், ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ! உள்ளிட்ட தொடர்கள், நல்ல வரவேற்பைப் பெற்றன.

    சி.ஜெயபாரதனின் அணுவியல் – அறிவியல் கட்டுரைகள், பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள், காதல் நாற்பது, பவளசங்கரியின் வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! , சுபாஷிணி ட்ரெம்மலின் அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!, இன்னம்பூரானின் கனம் கோர்ட்டார் அவர்களே, சாகர் பொன்னியின் செல்வனின் அலெக்சாண்ட்ரியாவிலிருந்து அபு சிம்பல் வரை, சங்கர் ராமனின் நம்பிக்கை.. அதானே எல்லாம்!, செல்வனின் நாகரிக மனிதனின் உணவுகளும், காட்டுமிராண்டி வாழ்க்கைமுறையும்! கவியரசு கண்ணதாசன் குறித்த காவிரி மைந்தனின் தொடரும் சக்திதாசனின் இங்கிலாந்திலிருந்து ஒரு மடல், சச்சிதானந்தம் எழுதும் அறுமுகநூறு, பரம்பொருள் பாமாலை, கே.எஸ்.சுதாகரின் அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களும் தமிழினமும், செண்பக ஜெகதீசனின் குறளின் கதிர்கள், மேகலா இராமமூர்த்தி எழுதிய புறநானூற்று வழிப் புலனாகும் அரசியல் சிந்தனைகள், விசாலம் அவர்களின் இசையும் கோயிலும் உள்ளிட்ட தொடர்கள் மிகுந்த தரமும் நேர்த்தியும் கொண்டவையாய் அமைந்தன.

    மின்னூல்கள் பகுதியில் தேமொழியின் முயற்சியில், குன்றக்குடி அடிகளாரின் வாழ்க்கை நலம் என்ற 60 பகுதிகள் கொண்ட நூல், முழுமையாக இடம் பெற்றுள்ளது.

    போட்டிகள்

    இந்த ஓராண்டில் வல்லமை 4 போட்டிகளை நடத்தியுள்ளது.

    வல்லமை – ஐக்கியா டிரஸ்டு சிறுகதைப் போட்டி

    ஐக்கியா டிரஸ்டுடன் இணைந்து வல்லமை நடத்திய சிறுகதைப் போட்டியின் மே, ஜூன் மாதங்களிலும் தொடர, வெங்கட் சாமிநாதன் மாதந்தோறும் தேர்ந்தெடுத்த சிறுகதைகளிலிருந்து சிறந்த மூன்று சிறுகதைகளை நாஞ்சில் நாடன் தேர்ந்தெடுத்து அளித்தார். இதன் முடிவுகள் ஆகஸ்டில் வெளியாகின. முன்னர் அறிவித்தவாறு, வல்லமைச் சிறுகதைகள் என்ற தலைப்பில் இவற்றைத் தாரிணிப் பதிப்பகம் நூலாக வெளியிட்டது. இந்தப் போட்டியை எம்முடன் இணைந்து நடத்திய வையவன் அவர்களுக்கு நன்றி.


    புத்தக மதிப்புரைப் போட்டி

    தமிழில் புத்தக மதிப்புரைகளுக்கான போட்டி என்பது அரிதானது. அந்த வகையில் இந்தப் போட்டியை 11.10.2013 அன்று வல்லமையில் நாம் அறிவித்த போது, இதற்கு முன் இத்தகைய போட்டி நடந்ததில்லை என்ற எண்ணத்தில் இருந்தோம். ஆனால், அந்தரவெளிகள் குழுமத்திலும் (18.08.2010) முகநூலில் இயங்கும் டீக்கடைக் குழுமத்திலும் (02.02.2014) புத்தக மதிப்புரைக்கான சிறு முயற்சிகள் நடந்துள்ளன. இவையல்லாமல், தமிழின் எந்த நூலுக்கும் விமர்சனம் எழுதலாம் என்ற கூடுதல் சுதந்திரத்துடன், விரிந்த தளத்தில் பொதுவான புத்தக மதிப்புரைப் போட்டியை நடத்தியதில் வல்லமை முன்னோடியாக விளங்குகிறது. இந்தப் போட்டியை வல்லமையுடன் இணைந்து நடத்துவதில் உறுதியாக இருந்த கவிதாயினி மதுமிதா அவர்களுக்கும் சிறந்த மதிப்புரைகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்த மூத்த விமர்சகர் வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

    அறிவியல் தமிழ்ப் பேச்சுப் போட்டி

    வல்லமை வளர்தமிழ் மையமும் – மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளையும் இணைந்து முதல் இணையவழி சர்வதேச அறிவியல் தமிழ்ப் பேச்சுப் போட்டியை (First International Peer Reviewed Scientific Tamil Oration Competition For School Students) நடத்தின; கோவை, மேட்டுப்பாளையம் அருகில் அன்னூரில் அமைந்துள்ள கே.ஜி. சர்வதேசப் பள்ளி மாணவர்கள் 5 பேரின் அறிவியல் தமிழ்ச் சொற்பொழிவை ஒளிப்பதிந்து, யூடியூபில் ஏற்றினோம். 100 நாள்கள் அவற்றைப் பார்த்து மதிப்பிட அவகாசம் அளித்தோம். வல்லமைக் குழுவினர் அவற்றை மதிப்பிட்டு, நான் விரும்பும் வடிவியல் கருவி என்ற தலைப்பில் உரையாற்றிய சுமதியை முதல் பரிசுக்கு உரியவராகத் தேர்ந்தெடுத்தோம். இந்தத் திட்டத்தை அறிவித்த மருத்துவர் செம்மல் அவர்களுக்கும் கே.ஜி.சர்வதேசப் பள்ளி நிர்வாகி மகேஷ் துளசி அவர்களுக்கும் நம் நன்றிகள்.

    Vallamai_oratory_competitio

    கடித இலக்கியப் போட்டி

    அன்புள்ள மணிமொழிக்கு என்ற தலைப்பில், முனைவர் தேமொழி அறிவித்த கடித இலக்கியப் போட்டி, பெரும் வரவேற்பைப் பெற்றது. 2013ஆம் ஆண்டு மறைந்த அவர்தம் சகோதரி மணிமொழியின் நினைவாக நடத்தப் பெற்ற இந்தப் போட்டியில் 60க்கும் மேலான கடிதங்கள் வந்து சேர்ந்தன. பல புதிய கோணங்களில், நெகிழ்வூட்டும் தருணங்களுடன் இக்கடிதங்கள் அமைந்தன. முதலில் மூன்று பரிசுகள் என அறிவித்தோம். அடுத்து, கூடுதலாக மூன்று ஆறுதல் பரிசுகளைத் தேமொழி அளிக்க முன்வந்தார். நடுவர் பொறுப்பேற்ற இசைக்கவி ரமணன் அவர்கள், தம் பொறுப்பில் கூடுதலாக ஆறு பேருக்குச் சிறப்புப் பரிசுகளை அறிவிக்க, மொத்தம் 12 பேர் பரிசு பெற்றனர். இது, கடித இலக்கியத்திற்கு அழுத்தமான பங்களிப்பாகவும் அமைந்தது. அந்த வகையில் இந்தப் போட்டியை வல்லமையுடன் இணைந்து நடத்த முன் வந்த தேமொழி அவர்களுக்கு எங்கள் நன்றிகள்.

     
    வல்லமை.காம் ISSN: 2348 – 5531

    வல்லமை.காம், பன்னாட்டுத் தரநிலைத் தொடரியல் எண்ணைப் பெற்றுள்ளது. (International Standard Serial Number – ISSN: 2348 – 5531). இந்த எண்ணைப் பெற்றுள்ள மின்னிதழ்களில் வெளியாகும் ஆய்வுக் கட்டுரைகளுக்குக் கல்வித் துறையில் மதிப்பும் மதிப்பெண்ணும் உண்டு. கல்லூரி / பல்கலைக்கழகம் / ஆராய்ச்சி நிறுவனங்களில் உள்ள கல்வியாளர்கள், இத்தகைய இதழ்களில் ஆய்வுக் கட்டுரை எழுதியிருந்தால், ஒவ்வொரு கட்டுரைக்கும் பல்கலைக்கழக மானியக் குழு மதிப்பெண் வழங்குகிறது. இது, அவர்களின் பணி வாய்ப்புக்கும் பதவி உயர்வுக்கும் உதவும். இத்தகைய கல்விப் புல முக்கியத்துவத்தை வல்லமை மின்னிதழ் பெற்றுள்ளது. எனவே, ஆராய்ச்சியாளர்கள் இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அழைக்கிறோம்.

    ஃபேஸ்புக் & வாட்ஸ் அப் குழுமம்

    கூகுள் குழுமத்தைத் தொடர்ந்து, ஃபேஸ்புக்கிலும் வல்லமை புதிய குழுமத்தைத் தொடங்கியுள்ளது. https://www.facebook.com/groups/682321115112693/; வாட்ஸ் அப், செல்பேசி வலைப்பின்னலிலும் Vallamai – Tamil Minds என்ற புதிய குழுமத்தைத் தொடங்கியுள்ளது. வல்லமை அன்பர்கள், இவற்றில் இணைந்து கலந்துரையாடுமாறு அழைக்கிறோம்.

    ஆசிரியர் குழுவில் மேகலா, தேமொழி

    வல்லமை ஆசிரியர் குழுவில் அமெரிக்காவில் வசிக்கும் தமிழாசிரியர் மேகலா இராமமூர்த்தி, முனைவர் தேமொழி ஆகியோர் இணைந்துள்ளார்கள். மேகலா, திருக்குறள், புறநானூறு, பக்தி இலக்கியங்கள் உள்ளிட்ட பலவற்றில் வாசிப்பும் நேசிப்பும் கொண்டவர். முனைவர் தேமொழி, 25 ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்காவில் வசித்து, திட்ட ஆய்வாளராகவும் பணி புரிந்தவர்; கதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு ஆகியவற்றை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். சிறப்புகள் வாய்ந்த இந்த இருவரையும் வல்லமை ஆசிரியர் குழு சார்பில் இனிதே வரவேற்கிறேன். ஏற்கெனவே நம் ஆசிரியர் குழுவில் இணைந்துள்ள பெருவை பார்த்தசாரதி, பர்வதவர்த்தினி ஆகிய இருவரும் தொடர்ந்து தொண்டாற்றி வருகிறார்கள். இவர்களின் துணையுடன் வல்லமை மேலும் ஒளிரும்.

    கண்ணதாசன் – கட்டுரைப் போட்டி!

    வல்லமை இதழின் ஐந்தாம் ஆண்டுத் தொடக்கத்தை முன்னிட்டு, ‘என் பார்வையில் கண்ணதாசன்’ என்ற கட்டுரைப் போட்டியை அறிவித்துள்ளோம். கண்ணதாசனை எப்படிப் பார்க்கிறீர்கள்? அவரது பங்களிப்பு என்ன? உங்களுக்கு அவரிடம் பிடித்தவை என்னென்ன? உங்கள் வாழ்க்கையில் அவரது பாடல்கள், எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றன? இப்படியாக, எந்தக் கோணத்திலும் உங்கள் கட்டுரைகள் அமையலாம். மொத்தப் பரிசு, ரூ.4250. கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் (பம்மல்) சார்பாகக் காவிரி மைந்தன் மற்றும் கிரி ஐங்கரன், இதனை வல்லமையுடன் இணைந்து நடத்துகிறார்கள். வாசகர்கள் இதிலும் துடிப்புடன் பங்கேற்குமாறு அழைக்கிறோம்.

    புதிய தொடர்கள்

    வல்லமையின் ஐந்தாம் ஆண்டுத் தொடக்கத்தில் ‘இசைக்கவியின் இதயம்’ என்ற புதிய பகுதி பிறக்கிறது. இதில் இசைக்கவி இரமணன் அவர்களின் எண்ணங்களில் உதிக்கும் பல்வண்ணக் கிரணங்களின் ஒளி வீச்சினை நாம் தரிசிக்கலாம். இவர், பாரதி, இசை, இலக்கியம், பக்தி, யோகம், ஞானம்.. எனப் பல துறைகளில் ஆழ்ந்த ஈடுபாடும் ஆற்றலும் அர்ப்பணிப்பும் கொண்டவர். இவற்றையெல்லாம் ஒரே இடத்தில் பெறும் வாய்ப்பாக, இந்தப் புதிய பகுதி அமைகிறது. இது தவிர, கே.ரவியின் கவிதைகள், சு.ரவியின் கவிதை ஓவியங்கள், கேஷவ் ஓவியங்கள் எனப் பலவும் தொடர்ந்து வல்லமையை அலங்கரித்து வருகின்றன.

    புதிய முயற்சிகளுக்கு வல்லமை, சிறந்த களமாக உருவாகி வருகிறது. கருத்துச் சுதந்திரமும் இயல்பான நட்புறவும் ஆரோக்கியமான பின்னூட்டங்களும் இதனைத் தரமான மின்னிதழாக வளர்த்தெடுத்துள்ளன. இதனை இன்னும் உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்ல, அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறோம்.

    புதிய திட்டங்கள்

    வல்லமை வளர்தமிழ் மையத்தை அறக்கட்டளையாகப் பதிந்து, மேலும் அதிகப் பணிகளை ஆற்றத் திட்டமிட்டுள்ளோம். இதற்கு நேரம், நிதி, வளங்கள், தன்னார்வலர்களின் உழைப்பு.. எனப் பலவும் தேவை. எனவே, உங்களால் எந்த வகையில் எங்களுக்கு உதவ முடியும் எனத் தெரிவித்தால், அடுத்தடுத்துத் திட்டமிட வசதியாய் இருக்கும்.

    வல்லமையின் பணிச் சுமை அதிகரித்து வருவதால், புதிய தன்னார்வலர்களை வரவேற்கிறோம். இதழியல் ஆர்வமுள்ள மாணவர்களையும் இல்லத்தரசிகளையும் ஓய்வுபெற்ற ஆர்வலர்களையும் எழுத்தார்வமும் படைப்பூக்கமும் கொண்ட திறனாளர்களையும் ஆவலுடன் அழைக்கிறோம். நுட்பியல் திறனுள்ள அன்பர்கள் ஒத்துழைத்தால், வல்லமைக்கு என ஆண்டிராய்டு குறுஞ்செயலிகளை உருவாக்கலாம்.

    நன்றிகள்

    வல்லமையின் இந்த வளர்ச்சியில் பலருக்கும் பங்கு உண்டு. அர்ப்பணிப்பு மிகுந்த திருமதி பவளசங்கரி தலைமையிலான ஆசிரியர் குழு, எங்கள் ஆலோசகர்கள், வழங்கி நிர்வாகி ஆமாச்சு, தள மேலாளர் சீனிவாசன், ஏற்கெனவே நம் ஆசிரியர் குழுவில் பணியாற்றிய காயத்ரி பாலசுப்பிரமணியன், கவிநயா உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றிகள். வல்லமைக்குச் சிறப்பான படைப்புகளை அளித்து வரும் படைப்பாளர்கள், ஓவியர்கள், இவற்றைத் தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்கள், கூகுள் – ஃபேஸ்புக் – ஃபிளிக்கர் – வாட்ஸ் அப் குழுமங்களில் துடிப்பாக இயங்கி வரும் அன்பர்கள் யாவருக்கும் நன்றிகள். தொடர்ந்து இணைந்திருங்கள், இன்னும் வளர்வோம்.

    Share
  • ‘மறு வாசிப்பில் தேவன்’: கிரேசி மோகன்

    முனைவர் அண்ணாகண்ணன்

    இலக்கிய வீதியும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்சும் இணைந்து ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ என்ற தலைப்பில் சென்னை, தியாகராய நகர், கிருஷ்ண கான சபாவில் மாதந்தோறும் இலக்கிய நிகழ்ச்சியை நடத்தி வருகின்றன. அந்த வரிசையில் 02.05.2014 அன்று ‘மறு வாசிப்பில் தேவன்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் கிரேசி மோகன் உரையாற்றினார். மிக இயல்பாகவும் எளிமையாகவும் நகைச்சுவை மிளிர, அவரது உரை அமைந்திருந்தது.

    Ilakkiyaveedhi2_02052014

    “எனக்கு இலக்கியம் எல்லாம் தெரியாது; தெரிந்ததெல்லாம் கலக்கியம்தான்” என்றே பேச்சைத் தொடங்கினார். அவரது உரையிலிருந்து ஒரு சிறிய பகுதி இங்கே:

    “தேவனின் படைப்புகளிலிருந்து தாக்கம் பெற்றே இன்றும் நான் எழுதி வருகிறேன். அவருடைய கதை ஒன்றில், தன்னிடம் கண் ஆப்பரேஷன் செய்துகொண்ட ஒருவரிடம் டாக்டர் ரெண்டு விரலைக் காட்டி, இது எவ்வளவு என்பார்; அவர் ரெண்டு என்பார்; ரெண்டாயிரம் ரூபாய் கட்டணம் என்பதையும் அதில் மறைமுகமாகச் சுட்டுவார்; இது போன்ற இயல்பான நகைச்சுவையைத் தேவனிடம் காணலாம். அவரைத் தமிழின் பி.ஜி.வுட்ஹவுஸ் (P.G.Wodehouse) என்பார்கள்; நான், பி.ஜி.வுட்ஹவுஸை இங்கிலாந்தின் தேவன் என்பேன்.

    “அந்தக் காலத்து நடைமுறைகளைத் தேவன் எழுத்திலிருந்து நிறையக் கற்க முடிகிறது. தேவனின் அப்பா மறைந்த போது, ஆசாரம் மிகுந்த அவர் குடும்ப நண்பர் ஒருவர், தேவனிடம் துக்கம் விசாரிக்கவில்லை; விசாரித்தால் அந்தத் தீட்டு ஒட்டிக்கொள்ளும்; குளிக்க வேண்டும் என்பதால், தேவன் வரும்போதெல்லாம் ஓடி ஒளிந்திருக்கிறார். அவரைத் தேவன் ஒரு முறை நிறுத்தி, செத்துப் போனது எங்க அப்பாதான்; நான் இல்லை என நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறார்.

    Ilakkiyaveedhi1_02052014

    “தேவன், பிராமணத்துவமாக எழுதினார் எனச் சிலர் விமர்சிக்கிறார்கள்; அது, முழு உண்மை இல்லை; அவர், முதலியார் மொழியிலும் இதர பிரிவினரின் மொழியிலும் கூட எழுதியிருக்கிறார். அவர், அய்யராக இருந்தாலும் அய்யங்கார் பாத்திரங்களைச் சிறப்பாக எழுதியிருக்கிறார்; அய்யங்கார் பரிபாஷைகளை அவரிடமிருந்தே நான் கற்றேன். அப்படியே பிராமண நடையில் அவர் எழுதியிருந்தாலும் அது ஒன்றும் தவறு இல்லை. ஏனெனில் அது அவரோடு உடன் பிறந்தது. என்னை ரிக்‌ஷாக்காரன் வேடத்தில் நடிக்க வைத்தாலும் என்னால் பிராமண பாஷையில்தான் பேச முடியும்.

    “அவ்வை சண்முகியில் முதலியார் பாத்திரத்துக்காகத் தேவனின் கதைகளைப் படித்துக் குறிப்பெடுத்துக்கொண்டேன். சதிலீலாவதி படத்திற்கு முதலில் என் மொழியில் வசனங்களை எழுதிவிட்டு, அதன் பிறகு கோவை சரளாவுடன் உட்கார்ந்து, அதைக் கொங்குத் தமிழுக்கு மாற்றினேன். அது போல், தெனாலி படத்திற்கு என் மொழியில் வசனங்களை எழுதிவிட்டு, அதன் பிறகு அப்துல் ஹமீதுடன் உட்கார்ந்து, ஈழத் தமிழுக்கு மாற்றினேன்.

    Ilakkiyaveedhi3_02052014

    “நான் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த சைதை துரைசாமி கலந்துகொண்டார். அவரிடம் பேசும்போது, நான் உதய சூரியனையே பார்ப்பதில்லை என்றேன்; ஏனென்றால் நான் எழுந்திருப்பதே 9 மணிக்குத் தானே. அடுத்து, நானும் இரட்டை இலை தான் என்றேன். அவர் வியந்து பார்த்தார். வெற்றிலை, புகையிலை என்றேன்.

    “தேவனின் எழுத்துகளைத் தொடர்ந்து படியுங்கள். சிரித்து மகிழுங்கள்.”

    இவ்வாறாகக் கிரேசி மோகன் பேசினார்.

    அவரது ஒரு மணி நேரப் பேச்சின் ஒரு சிறிய பகுதியை என் நினைவில் பதிந்தவாறு இங்கே அளித்துள்ளேன். கிரேசி மோகன், சந்தர்ப்பத்துக்கு ஏற்ப உடனடி நகைச்சுவைகளும் உதிர்த்தார். “தேவன் படைப்புகளின் பட்டியலை நீங்கள் சொல்கிறீர்களா? நான் படிக்கட்டுமா?” என முன்னிலை வகித்த எழுத்தாளர் ஜே.எம்.சாலி கேட்க, நீங்களே சொல்லுங்க; கேட்கறது ஈஸியா இருக்கு என்றார். முனைவர் ப.சரவணன் தொகுப்புரை ஆற்றுகையில், கிரேசி மோகனின் சிறப்புகளை எடுத்துரைத்தார்; அடுத்துப் பேச வந்த கிரேசி மோகன், சரவணன் நன்றாக என்னைப் பற்றிச் சொன்னார்; அவையெல்லாம் நான் எழுதித் தந்தவை எனப் பொய்யாக வேடிக்கை செய்தார். அப்பப்ப தண்ணி போடுவேன் என்றபடி, இடையிடையே தண்ணீர் குடித்தபடியே பேசினார். இந்த நிகழ்ச்சிக்கு இலக்கிய வீதி இனியவன் அழைத்தபோது, எவ்வளவு நேரம் பேச வேண்டும் என மோகன் கேட்க, ஒரு மணி நேரம் என இனியவன் சொல்லியிருக்கிறார். அதற்கு, மேடை நாடகங்களில் நாங்கள் இருபது பேர் சேர்ந்து ஒரு மணி நேரம் பேசுவோம்; இங்கே நான் ஒருவனே ஒரு மணி நேரம் பேசணுமா எனக் கேட்டதாகச் சொன்னார். இப்படியாக இயல்பாக அவையைச் சிரிக்க வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் குமாரகிருஷ்ணன், இலக்கிய வீதியின் அன்னம் விருதினைப் பெற்றார். அவர் தன் உரையில், பரமார்த்த குரு கதைகளைத் தேவி வார இதழில் 100 வாரங்கள் எழுதிய அனுபவத்தை எடுத்துரைத்தார். குரு ஒருவர், சிஷ்யர்கள் ஐந்து பேர் என்ற வடிவில் சிஷ்யர்களின் முட்டாள்தனங்களைப் புதிது புதிதாக யோசித்து, தானே முட்டாள் ஆனதையும் கூறினார். முட்டாள்தன யோசனைகளை நண்பர்களிடம் கேட்க, அவர்கள் சமோசா வாங்கித் தரச் சொல்ல, இவரும் வாங்கித் தந்துள்ளார். சாப்பிட்ட பிறகு யோசனையைச் சொல்லும்படி கேட்க, இப்போதுதானே கேட்டிருக்கிறாய், யோசித்துச் சொல்கிறோம் என அவர்கள் சொன்னதைப் பகிர்ந்தார்.

    கிரேசி மோகன் நகைச்சுவையில் மட்டுமின்றி, வெண்பா, சந்தப்பா எழுதுவதிலும் அவர் வல்லவர். வல்லமை மின்னிதழில் திருமால் திருப்புகழ் என்ற தலைப்பில் தினந்தோறும் அழகிய சந்தப் பாடலை எழுதி வருவது, நாம் அனைவரும் அறிந்ததே. புகழின் வெளிச்சம் எவ்வளவு இருந்தாலும் குழந்தையைப் போல் உற்சாகத்துடன் பழகுகிறார். என் தமிழாசிரியர் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்களிடம் அவர் வெண்பா கற்றதால், என்னை அவரது சகா (colleague) எனக் கூறினார்.

    கிரேசி மோகனின் கலகலப்பான பேச்சினைக் கேட்க, அரங்கு நிறைய அன்பர்கள் திரண்டு, மனம் நிறைய மகிழ்ச்சியுடன் கரவொலி எழுப்பினர்.

    படங்கள்: அண்ணாகண்ணன்

    Share
  • தெனாலிராமன் – திரை விமர்சனம்

    அண்ணாகண்ணன்

    16ஆம் நூற்றாண்டில் கிருஷ்ணதேவராயரின் அரசவையில் விகடகவியாக இருந்தவர், தெனாலிராமன். நகைச்சுவை உணர்வும் மதிநுட்பமும் கொண்டவர். இவரைப் பற்றிய பல கதைகள், இந்தியா முழுவதும் உலவுகின்றன. தெனாலி ராமனாகச் சிவாஜி கணேசன் நடிக்க, 1956இல் இதே பெயரில் திரைப்படமாக எடுத்தனர். தெனாலி ராமன் கதைகள் என்ற தலைப்பில் நூற்றுக்கணக்கான நூல்கள், பல மொழிகளிலும் வெளிவந்துள்ளன. இவருடைய கதையை தி அட்வென்சர்ஸ் ஆஃப் தெனாலி ராமன் (The Adventures of Tenali Raman) என்கிற பெயரில் கார்ட்டூன் நெட் ஒர்க் தொலைக்காட்சி நிறுவனம் கி.பி.2001இல் படமாக்கியது.

    இந்தப் பிரபலமான பாத்திரத்தைத் தேர்ந்தெடுத்தது, வடிவேலுவின் சரியான முடிவு. மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அவர் நடிக்கும் படம்; இயல்பாகவே மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கும். ஆகவே, அதைத் திரை வடிவம் ஆக்கியதிலும் காட்சித் தொகுப்பிலும் இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். அதில் இயக்குநர் யுவராஜ் தயாளன், கோட்டை விட்டுள்ளார்.

    தெலுங்கு அமைப்புகளின் போராட்டத்தினால், இது, தெனாலி ராமன் கதைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு கற்பனைக் கதை என அறிவித்துள்ளார்கள். ஆனால், தெனாலி ராமனை எல்லோரும் அவரை அறிந்தது போல், சிறந்த புத்திசாலியாகப் படம் முழுக்கக் காட்டியிருந்தால், படம் இன்னும் சிறப்படைந்திருக்கும். ஆனால், இடையில் தேவையில்லாமல், அவரைப் போராளியாக்கி, சீனர் சதி, மக்கள் அவதி, கிளர்ச்சி என வீணடித்திருக்க வேண்டாம்.

    Tenaliraman-Movie-Latest-Stills-21

    (கிருஷ்ணதேவராயர்) மன்னர் வேடத்திலும் வடிவேலுவே நடிக்காமல் வேறு ஒருவரை நடிக்க வைத்திருக்கலாம்; அவரும் மன்னருக்கு உள்ள இயல்புகளுடன் இல்லாமல், பல நேரங்களில் நகைச்சுவையாக நடிப்பதால், தெனாலி ராமனின் முக்கியத்துவம் படத்தில் குறைந்துவிடுகிறது. அதுவும் நவரத்தின அமைச்சர்களில் எட்டுப் பேர்களை ஓரளவு புத்திசாலியாகக் காட்டாததால் தெனாலி ராமனுக்கு வலுவான சவால்கள் கிடைக்கவில்லை.அவர் தன் அறிவுத் திறத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பு குறைந்துவிட்டது.

    பானைக்குள் யானையைக் காட்டும் சவாலில், வடிவேலு குழந்தையாகத் தரையில் விழுந்து புரண்டு நடித்திருக்க வேண்டியதில்லை. வசனமாகவே பேசியிருக்கலாம். அல்லது, குழந்தையின் தாய் வந்து இந்தச் சிக்கலைச் சொல்வதாகவும் அதற்குத் தெனாலிராமன் தீர்வு சொல்வதாகவும் காட்டியிருந்தால் காட்சி இன்னும் சிறப்பாய் வந்திருக்கும். இது, தனக்கு வசதியில்லாத ஒரு காட்சி என்பதை வடிவேலு புரிந்துகொண்டு தவிர்த்திருக்க வேண்டும். ஒரு குழந்தையைப் போல் அப்படியே நடிப்பது, எந்த நடிகருக்குமே மிகக் கடினம்.

    தெனாலிராமனை மன்னன் மகள் மாதுளை (மீனாட்சி தீட்சித்), காதலிப்பது அவள் உரிமை; ஆனால், அதற்கு ஏற்ற வேதியியலும் உயிரியலும் (கெமிஸ்ட்ரி & பயாலஜி) படத்தில் சரிவர அமையவில்லை. மன்னனின் 36 மனைவியர்களும் 52 பிள்ளைகளும் இருக்க, சந்தையில் அவளது விளையாட்டுகள் குறித்தும் அரண்மனைக்குள் அவளது காதல் குறித்தும் யாருக்கும் தெரியவில்லை. இந்த 36 மனைவியர், 52 பிள்ளைகளை வைத்து, அவர்களுக்குள் உள்ள உறவுகள் குறித்து, இன்னும் நிறைய நகைச்சுவைக் காட்சிகளைக் கொண்டு வந்திருக்கலாம். இயக்குநர் இதிலும் தவறிவிட்டார்.

    படத்தில் சீனர்கள் தமிழில் பேசுகின்றனர்; ஆனால், தமிழர்களில் யாருமே சீன மொழி பேசவில்லை. இறுதியில் தெனாலிராமன் தேர்ந்தெடுத்த புதிய எட்டு அமைச்சர்களும் வேடிக்கையான தேர்வாகவே உள்ளனர். சரித்திர காலப் படத்தில் சரித்திரம் தவிர மற்ற எல்லாம் இருக்கிறது.

    மொத்தத்தில் இது தெனாலிராமனைக் காட்டுவதற்குப் பதிலாக, வடிவேலுவையே பெருமளவு காட்டியுள்ளதால், வடிவேலு ராமன் என்ற பெயரே படத்திற்குப் பொருந்தும்.

    Share
  • இணைய இதழாளர் நடையேடு

    முனைவர் அண்ணாகண்ணன்

    (annakannan@gmail.com | 9841120975)

     10150804_619889874774344_2540426917301829276_n

    தமிழில் பல்லாயிரம் வலைத்தளங்களும் வலைப்பதிவுகளும் தோன்றியுள்ளன. இலட்சக்கணக்கான தமிழ்ப் பக்கங்கள் கிடைக்கின்றன. சமூக ஊடகங்களில் துடிப்பாக இயங்கும் தமிழர்கள், பல இலட்சம் பேர் உள்ளனர். தமிழ்த் தரவுகள் பெருகி வரும் நிலையில், அவற்றில் பிழைகளும் குறைகளும் மலிந்துள்ளன. இந்நிலையில் இணைய இதழாளர்களுக்குச் சில அடிப்படைக் குறிப்புகளை அளித்தல், உதவிகரமாக இருக்கும்.

    இணையத்தில் எழுதுவோர் ஒவ்வொருவருக்கும் தனித் தனி நடை இருக்கலாம். ஆனால் இங்கு, செய்திகளையும் தரவுகளையும் எவ்வாறு பதியலாம் எனப் பொதுவான குறிப்புகளை அனுபவத்தின் அடிப்படையில் அளித்துள்ளேன். அவரவர் விருப்பத்திற்கும் தேவைகளுக்கும் ஏற்ப, இந்த நடை மாறுபடும் என்பதை நினைவில் கொள்வோம்.

    அச்சிதழில் எழுதுவதற்கும் இணையத்தில் எழுதுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அவற்றுள் முக்கியமான சிலவற்றை இங்கே காணலாம்.

    காலக் குறிப்புகள்

    இணையத்தில் காலத்தைக் குறிப்பிடும்போது கூடுதல் கவனம் தேவை. நாளிதழில் ‘இன்று’ எனக் குறிப்பிட்டு எழுதும்போது, அதைப் பெரும்பாலும் அந்த நாளில் மட்டுமே படிக்கிறார்கள். அடுத்த நாள் அது, பழைய ஏடாகி, பொட்டலம் மடிக்கவும் இன்னபிற பயன்பாடுகளுக்கும் சென்றுவிடுகிறது.

    ஆனால், இணையத்தின் இயல்பின்படி எந்த ஒரு தரவும் எந்த நேரத்திலும் எந்தக் காலத்திலும் படிக்கப்படலாம். இந்தச் செய்தியை அடுத்த ஆண்டோ, பத்து ஆண்டுகள் கழித்தோ ஒருவர் படிக்கும்போது அது எந்த நாள் என்ற குழப்பம் ஏற்படும். என்னதான் தானாகவே அந்தச் செய்தியுடன் நாள் விவரம் தெரிந்தாலும், கூடுதல் விவரத்திற்காக அந்த நாளை முழுவதுமாகக் குறிப்பிடுங்கள்.

    இணையத்தில் சம்பவங்களைக் குறித்து எழுதும்போது, ‘இன்று பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாயின’ என எழுதுவது சரியில்லை. ‘2009 மே 23ஆம் தேதி, பத்தாம் வகுப்பு முடிவுகள் வெளியாயின’ என்பது போல் எழுதுவது நல்லது. ‘இன்று கைது ஆனார்’, ‘நாளை விடுதலை ஆவார்’ என்றெல்லாம் எழுதாமல் நாள் குறிப்பிடுங்கள். ‘நேற்று முன்தினம்’, ‘நாளை மறுநாள்’ என எழுதுவதும் சரியில்லை. துல்லியமாக நாளைக் குறிப்பிட வேண்டும்.

    இதே போன்று கடந்த வாரம் என்பதும் மயக்கம் மிகுந்த சொல்லாட்சி. இறந்த காலத்தில் உள்ள எல்லா வாரங்களுமே கடந்த வாரம்தான். வரும் வாரத்தில் என எழுதுவதிலும் இதே சிக்கல் உண்டு. வரப்போகின்ற எல்லா வாரங்களுமே வரும் வாரம்தான். இதனை 2009 அக்டோபர் முதல் வாரத்தில், மூன்றாவது வாரத்தில் என எழுதுவது நல்லது. இது கடந்த மாதத்தில், கடந்த ஆண்டில்… என வரும் எல்லா வாக்கியங்களுக்கும் பொருந்தும்.

    இன்னும் கேட்டால் கி.பி. (கிறித்துவிற்குப் பிறகு), தி.பி. (திருவள்ளுவருக்குப் பிறகு) என எந்த ஆண்டு வரிசையினைக் குறிப்பிடுகிறோம் என்றும் குறிப்பிடுவது நல்லது. கிறித்து ஆண்டு முறை, பெருவழக்காக இருப்பதால், 2009 என்று குறிப்பிட்டாலே அது கிறித்து ஆண்டுதான் என நாம் எடுத்துக்கொள்கிறோம். திருவள்ளுவர் ஆண்டினைத்தான் தனியே குறிப்பிட வேண்டி இருக்கிறது. இப்பொழுது கிறித்து ஆண்டினைப் பொது ஆண்டு (CE – Common Era)1 எனக் குறிப்பிடுகிறோம்.

    காலத்தினைக் குறிப்பிடுவதில் இன்னும் ஒரு சிக்கலும் உண்டு. உலகம் முழுவதும் பொதுவான கால வரிசைகள் இல்லை. நீங்கள் இந்தியாவில் இருந்து எழுதும் போது, இன்று காலையில் என்று எழுதுவீர்கள். ஆனால், அமெரிக்காவில் அதைப் படிப்பவரும் இன்று காலையில் என்றுதான் படிப்பார். ஆனால், இருவரின் காலைகளும் வெவ்வேறானவை. இதைத் தவிர்க்க, 2009 மே 23ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு என எழுதுதல் வேண்டும். அதே போன்று அமெரிக்காவிலிருந்து எழுதுவோர், அமெரிக்க நேரப்படி இன்று மதியம் 2 மணிக்கு என எழுதுவது நல்லது.

    இடக் குறிப்புகள்

    இடத்தினைக் குறிப்பிடும்போதும் கூடுதல் கவனம் தேவை. ஒரே மாதிரியான உச்சரிப்பில் பல ஊர்ப் பெயர்கள் வரக்கூடும். Quanzhou, Guangzhou என இரண்டு இடங்கள் உள்ளன. Quanzhou2 என்பது சீனாவின் ஃபுஜியான் (Fujian) மாகாணத்தில் உள்ளது. Guangzhou3 என்பது சீனாவின் குவாங்டாங் (Guangdong) மாகாணத்தில், ஹாங்காங்கின் வடமேற்காக 120 கி.மீ. தொலைவில் கேண்டன் (Canton) பகுதியில் உள்ளது. குவான்சோ, குவாங்சோ என இவற்றைத் தமிழில் எழுதினால் போதாது. அடைப்புக் குறிக்குள் அந்த ஊரின் பெயரை ஆங்கிலத்திலும் கொடுப்பது நல்லது.

    மதுரை – மதுரா, கடலூர் – கூடலூர் போன்றவையும் எழுத்தளவில் நெருங்கிய தொடர்பு கொண்டவை. வெளிநாட்டுப் பெயர்களில் பல, இவ்வித தோற்ற மயக்கங்கள் கொண்டவை. தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் காட்டூர், கருப்பூர், புதூர்….. போன்ற ஏராளமான ஊர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் உள்ளன. இத்தகைய ஊர்களைக் குறிப்பிடும்போது, நமக்குத் தெரிந்த வரையில் துணை விவரங்களையும் அளிக்கலாம். திருவாரூருக்கு அருகில் உள்ள காட்டூரில் என எழுதலாம். நன்றாகத் தெரியுமானால் திருவாரூரிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள காட்டூரில் என எழுதலாம்.

    அடைமொழிகள்

    நபர் பெயர்களைக் குறிப்பிடும்பொழுது, ஒரே வகையான தரநிலைகளைப் பின்பற்ற வேண்டும். நிறைய மனிதர்களின் பெயர்களைக் குறிப்பிடும்பொழுது, ஒவ்வொருவருக்கும் திரு. என அடைமொழிகள் அளிக்க வேண்டியது இல்லை. திருவாளர்கள் என எல்லாப் பெயர்களையும் வரிசையாக அளித்து விடலாம். ஒருவருக்குத் திரு என அடைமொழி அளித்துவிட்டு, இன்னொருவருக்கு அளிக்காமல் விடுவது சரியாய் இருக்காது. மேலும், செல்வி, திருமதி ஆகிய சொற்களை அடுத்துப் புள்ளிகள் வைப்பதைப் பல இடங்களிலும் பார்க்கிறேன். முழுச் சொற்களாக எழுதிய இடங்களில் எல்லாம், புள்ளி வைக்கக் கூடாது. திருவாளர் என்ற முழுச் சொல்லைச் சுருக்குவதால் தான் திருவுக்குப் பக்கத்தில் புள்ளி வைக்கிறோம்.

    அவசியம் இல்லாவிடில், திருவாளர், செல்வி, திருமதி ஆகிய அடைமொழிகளைப் பெரும்பாலும் தவிர்க்கலாம். பெண்களைப் பொறுத்தவரை திருமணம் ஆனவரா, இல்லையா என்பதைக் காட்டவே இந்தச் செல்வி, திருமதி ஆகியவை பயன்படுகின்றன. குறிப்பாக, வெளிநாட்டுப் பெயர்கள் பல, ஆண் பெயரா – பெண் பெயரா எனக் குழப்பும் வகையில் உள்ளன. நமக்கு உறுதியாகத் தெரியுமானால், ‘யாங் என்ற பெண்’ எனக் குறிப்பிடலாம்.

    இது போன்றே பட்டப் பெயர்களிலும் கவனமாக இருக்க வேண்டும். கலைஞர் மு.கருணாநிதி எனக் குறிப்பிடுவதாக இருந்தால், புரட்சித் தலைவி ஜெ.ஜெயலலிதா எனக் குறிப்பிட வேண்டியிருக்கும். இப்படியாக ஒவ்வொருவருக்கும் உள்ள பட்டப் பெயர்களைக் குறிப்பிடுவது எவ்வளவு பெரிய வேலையாக மாறுகிறது என்பதை நினைத்துப் பாருங்கள். நடுநிலையாளர்கள், முதல்வர் மு.கருணாநிதி, எதிர்க் கட்சித் தலைவர் ஜெ.ஜெயலலிதா எனக் குறிப்பிடுவதே நல்லது.

    முனைவர் பட்டம் பெற்றவர்களை டாக்டர் என அழைப்பதை விடவும் முனைவர் என்றே அழைக்க வேண்டும். எழுதுகின்ற மூன்றாவது நபருக்கு, அவர் என்ன டாக்டர் என ஒருவேளை தெரியாவிட்டால் டாக்டர் என்று குறிப்பிடுவதைத் தவிர வேறு வழியில்லை. இந்தச் சிக்கலை உணர்ந்து, இனி தமிழில் எழுதுகின்ற முனைவர்கள், தங்களை முனைவர் என்ற அடைமொழியுடன் குறிப்பிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். ஆங்கிலத்தில் இவ்வாறு எழுதும்போது பின்னொட்டாக, பிஎச்.டி. எனக் குறிப்பிடலாம். தமிழில் அது குறைவாக இருப்பதால், அவரவரே தங்களை அடையாளம் காட்டுவது நல்லது.

    பின்னொட்டு என்றதும் ‘அவர்கள்’ நினைவுக்கு வருகிறார்கள். பெயர்களுக்குப் பிறகு ‘அவர்கள்’, ‘அவர்கள்’ என வரிசையாக எழுதுவது தேவையற்றது. பெயரைக் குறிப்பிட்டால் போதுமானது. குடியாட்சியில் அனைவரும் மதிப்பிற்கு உரியவர்களே. ஒருவரை ‘அவர்கள்’ என விளித்து, இதர பெயர்களை அவ்வாறு குறிப்பிடாவிடில் பேதம் மிகும். எனவே, மிகவும் முக்கியம் என்றால் தவிர, அவர்களைப் பயன்படுத்த வேண்டாம். இன்னும் சிலர் பட்டங்கள், திரு, டாக்டர் ஆகிய அனைத்தோடும் கல்வித் தகுதிகளையும் அவர்களையும் பின்னால் இணைத்து அழைத்து, மூச்சு வாங்க வைப்பார்கள். இவை போலித்தனமானவை. இதனைப் படிப்பவர்கள் உடனடியாக உணருவார்கள். எனவே, இத்தகைய வழக்கத்திலும் மாற்றம் வேண்டும்.

    பாலினம்

    இதே போன்று தலைவர் என்பது பொதுச்சொல். பெண்பாலுக்கு வருகையில் தலைவி என எழுதினால், ஆண்பாலுக்குத் தலைவன் என எழுத வேண்டியிருக்கும். எனவே இரு பாலருக்கும் பொதுவான சொற்களைப் பயன்படுத்துவது நல்லது. ஒரே தொடரில் ஒருவரைத் தோழர் என்றும் இன்னொருவரைத் தோழி எனவும் எழுதுவது சரியில்லை. இதனால்தான் ஆங்கிலத்தில் Chairman என்பதை விடுத்து, Chair Person4 என எழுதுகிறார்கள்.

    அலகுகள்

    வெவ்வேறு நாடுகளிலிருந்து, வெவ்வேறு துறைகளைச் சார்ந்த தரவுகளைப் பயன்படுத்தும்போது, பல்வேறு கூறுகளை நினைவில் கொள்ள வேண்டும். அந்தக் குறிப்பிட்ட மொழி பேசும் மக்களுக்கு எப்படிச் சொன்னால் புரியுமோ, அப்படி அந்தத் தரவுகளை அளிக்க வேண்டும். அவர்களிடம் பெருமளவு புழக்கத்தில் உள்ள அலகுகளையே அதற்குப் பயன்படுத்த வேண்டும்.

    அமெரிக்க டாலர், யூரோ, பவுண்டு, யென் என வேறு நாட்டு நாணயங்களை இந்திய ரூபாய்க்கு மாற்றி உரைக்க வேண்டும். இப்படியே மைல் என்பதைக் கிலோ மீட்டராகவும் காலன் என்பதை லிட்டராகவும் இது போன்றே இதர அலகுகளையும் மாற்ற வேண்டும். இதற்கு இலவச அலகு மதிப்பு மாற்றிகள், இணையத்தில் உண்டு.

    ஒருமையும் மதிப்புப் பன்மையும்

    சிறுவர்களை ஒருமையில் அழைப்பதையும் தவிர்க்கலாம். ‘ஏழாம் வகுப்பு மாணவன் குமார், பேச்சுப் போட்டியில் முதல் பரிசு வென்றான்’ என எழுதும் வழக்கம் உள்ளது. ‘மாணவர் குமார், முதல் பரிசு வென்றார்’ என எழுதுவது, உயர்வானது. மிகவும் உரிமையும் நெருக்கமும் உள்ளவரை மட்டும் சில நேரங்களில் ஒருமையில் அழைக்கலாம்.

    ‘திருடன் பிடிபட்டான்’, ‘விபசாரி பிடிபட்டாள்’ எனப் பாலினம் தெரியுமாறு ஒருமையில் எழுதுவதையும் தவிர்க்கலாம். சமூகத்தின் மனநிலையைக் காட்டுவதால், இது, பெரும் புழக்கத்திற்கு வந்துவிட்டது. ‘திருட்டு வழக்கில் ஒருவர் கைது’, ‘பாலியல் வழக்கில் பெண் கைது’ என எழுதுவது நல்லது. இன்னும் சொல்லப் போனால், கைது செய்யப்பெற்றவர் – குற்றம் சாற்றப்பெற்றவர், உண்மையான குற்றவாளியா என உறுதியாக நமக்குத் தெரியாது. அவர் நீதிமன்றத்தில் விடுதலை பெறலாம். கீழ் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றாலும் மேல் நீதிமன்றத்தில் விடுதலை பெறலாம். எனவே, அவசரப்பட்டு அவரது தன்மானத்திற்கு ஊறு விளைவிக்குமாறு எழுதுவது கூடாது.

    காவல் துறையினர் ஐயத்தின் பேரில்தான் பலரைக் கைது செய்கிறார்கள். சாட்சிகளின் பேரில்தான் வழக்குத் தொடுக்கிறார்கள். எனவே, குற்றம் சாற்றப்பெற்றவரைச் செய்திகளில் குறிப்பிடும்பொழுது மிகுந்த கவனம் தேவை.

    பெயர்கள்

    பெயர்களைக் குறிப்பிடும்பொழுது, அவரவர் தம் பெயர்களை எவ்வாறு எழுதுகிறார்களோ அவ்வாறே நாமும் எழுதுவது நல்லது. அண்ணன் – தம்பிகளான எஸ்.பி.முத்துராமன், சுப.வீரபாண்டியன் ஆகியோர் தம் முதலெழுத்துகளை எவ்வாறு எழுதுகிறார்கள் எனப் பாருங்கள். இதனை நாமும் அவ்வாறே எழுதுவது நல்லது. இங்கு சுப.முத்துராமன், எஸ்.பி.வீரபாண்டியன் என எழுதுவது அவர்களைக் குறிப்பிடாமல் போகலாம். இங்கு இன்னொரு முக்கிய குறிப்பு. S.P. முத்துராமன் என எழுதும் முறையை நாம் ஆதரிக்கக் கூடாது. எழுதுபவர், ஆங்கில எழுத்திலேயே எழுதினாலும் நாம் தமிழில் எஸ்.பி.முத்துராமன் என்றுதான் எழுத வேண்டும். அத்தகைய போக்கினை நாம் முற்றிலுமாக ஒழிக்க முடியாவிட்டாலும் கூடியமட்டிலும் இந்த வகையிலாவது முயல வேண்டும்.

    ஒரு பகுதிக்கு அறிமுகம் இல்லாத ஒருவரை முதன்முதலாகக் குறிப்பிடும்போது, அவரை ஓரளவு முழுமையாக அறிமுகப்படுத்த வேண்டும். எழுதுபவருக்குத் தெரிந்த அனைத்தும் படிப்பவருக்கும் தெரிந்திருக்கும் என நினைக்கக் கூடாது.

    யாருக்காக எழுதுகிறோம்?

    இன்று வாசகர்கள் பல்வகையினர்; பல்வேறு பின்புலங்களைக் கொண்டோர். எனவே ஒரு செய்தியை எழுதுபோது, மாணவர்கள் / சிறுவர்கள், நகரவாசிகள் / கிராமவாசிகள், பெண்கள், மூத்தோர்… எனப் பல கூறுகளாய் உள்ள வாசகர்களுள் எவரை முன்னிறுத்தி எழுதுகிறோம் என முடிவு செய்வது, ஒருவரின் எழுத்து நடையை அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது, அந்தந்தப் பிரிவு மக்களுக்கு ஏற்ற சொற்களைப் பயன்படுத்தவும் எடுத்துக் காட்டுகளைத் தரவும் உதவும்.

    இங்கு நாம் ஒரு செய்தியினை எழுதுகையில் நேரம், காலம், இடம், பாலினம், ஒருமை, பன்மை, சிறுவர் – பெரியவர், குற்றம் சாற்றப்பெற்றவர், முன்னொட்டு, பின்னொட்டு எனச் சிலவற்றை எவ்வாறு கையாளுவது எனக் கண்டோம். இவையெல்லாம் செய்திகளுக்கும் செய்திக் கட்டுரைகளுக்கும் மட்டுமே. கதை, கவிதை ஆகிய படைப்பிலக்கியங்களுக்குப் பொருந்தா.

    தரவு மூல நம்பகத்தன்மை & இணைப்பேற்றம்

    இணையத்தில் எழுதுவோர், ஒரு செய்தியை அல்லது தகவலை மேற்கோள் காட்டும்போது, அதற்கான சான்றினை அளிக்க வேண்டும். அந்தச் செய்தி, எந்தப் பக்கத்தில் / அச்சிதழில் / நூலில் வெளிவந்துள்ளது என்பதைச் சொல்ல வேண்டும். அந்தப் பக்கத்தின் சுட்டியை இணைப்பேற்றமாகவும் (Hyperlink) அளித்தல் வேண்டும். இந்த வசதி, அச்சிதழில் இல்லை; இணையத்தில் மட்டுமே சாத்தியமாக உள்ளது.

    அத்துடன் ஒரு தரவு, மூலத் தரவா? இரண்டாம் நிலை / மூன்றாம் நிலைத் தரவா என்பதையும் சொல்ல வேண்டும். மூலத் தரவு எனில், அது எந்த நாளில் / நேரத்தில் எங்கே நடந்தது; அதற்கு வேறு சாட்சிகள் இருக்கிறார்களா? எனச் சொல்வது நல்லது.

    கல்வெட்டு, ஓலைச் சுவடி, பட்டயம் போன்றவற்றை மேற்கோள் காட்டுவோர், அந்தக் கல்வெட்டு எங்கே உள்ளது என்பதுடன், அதனைப் படித்துப் பொருள் கூறியவர் யார் என்ற விவரத்தையும் அளிக்க வேண்டும்; ஏனெனில் ஒரே சொல்லுக்கு வெவ்வேறு ஆய்வாளர்கள் வெவ்வேறு பொருள்களைக் கூறும் வாய்ப்பைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    மொழிபெயர்ப்புத் தரவு எனில், மூல ஆசிரியரின் பெயருடன், மொழிபெயர்த்தவரின் பெயரையும் சுட்ட வேண்டும்.

    இவை ஒரு தரவின் உண்மைத் தன்மையை உணர்த்தப் பெரிதும் உதவும்.

    படங்களும் தொடர்புடைய செய்திகளும்

    ஒரு செய்தியை எழுதும்போது, அதற்குப் பொருத்தமான படங்களையும் தொடர்புடைய செய்திகளையும் இணைக்க வேண்டும். இந்தப் படங்கள், நிழற்படங்களாகவும் விழியங்களாகவும் இருக்கலாம். இதே செய்திக்குத் தொடர்புடையவாறு உள்ள முந்தைய செய்திகளின் இணைப்புகளைத் தொகுத்து அளிப்பது, படிப்பவருக்குப் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். இது, செய்தியை வெளியிடும் தளத்திற்கும் அதிகப் பக்கப் பார்வைகளைப் (Page views) பெற்றுத் தரும்.

    சிரிப்புருக்களும் உணர்நிலை அறிவிப்புகளும்

    இணையத்திலும் செல்பேசியிலும் ஒருவரின் உணர்வை வெளிப்படுத்த, சிரிப்புருக்கள் (smilies) பயன்படுகின்றன. மகிழ்ச்சியைத் தெரிவிக்க, கேலி செய்ய, இப்படியுமா என வியக்க, இன்னும் பற்பல செயல்களில் ஈடுபடுவதைத் தெரிவிக்க‌… எனப் பல வகைச் சிரிப்புருக்கள் உண்டு. இவற்றை இடத்துக்கேற்ப பயன்படுத்தினால், மிகச் சுருக்கமான எழுத்துகளில் அல்லது எழுத்தே இல்லாமல் கருத்துகளையும் உணர்வுகளையும் நம் நடவடிக்கைகளையும் பகிர முடியும்.

    அத்துடன் ஒருவர் தம் மனநிலையை ஒரே சொல்லால் அறிவிக்க‌லாம். முகநூலில் இந்த வசதி உள்ளது. எவ்வாறு உணர்கிறீர்கள் எனக் கேட்டு, மகிழ்ச்சியாக, கவலையாக, களைப்பாக, சிறப்பாக, அதிசயமாக, வெறுப்பாக, பயமாக, ஸ்பெஷலாக, செக்ஸியாக… என்றெல்லாம் தேர்ந்தெடுக்க வாய்ப்பு அளித்துள்ளது. பல சொற்களையும் தமிழாக்கிய முகநூல் குழுவினர், ஸ்பெஷல், செக்ஸி ஆகியவற்றை அப்படியே கொடுத்துள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும்.

    ஒரே சொல்லுக்குப் பல பொருள்கள் உள்ள நிலையில், இது, இணையத்தில் எழுதுபவரின் அப்போதைய‌ மனநிலையை வாசகர்கள் புரிந்துகொள்ள உதவுகிறது. இன்னொரு கோணத்தில் சொல்வதானால், எழுதுபவரின் மனநிலையைத் தவறாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பைக் குறைக்கிறது.

    தலைப்பும் குறிச்சொற்களும்

    இணையத் தேடுபொறிகளில் ஒரு செய்தியைத் தேடும்போது, அது, அந்தக் குறிச்சொல் (Keyword) எந்தப் பக்கத்தில், எவ்வாறு அமைந்துள்ளது என்பதைப் பொறுத்து, தேடல் முடிவுகளைத் தருகிறது. முக்கியமாக, அக்குறிச்சொல், தலைப்பில் அமைந்துள்ளதா? செய்தியின் உடற்பகுதியில் அதிக முறைகள் இடம்பெற்றுள்ளதா என்றும் தேடுபொறி ஆராய்கிறது. தேடுபொறி உகப்பாக்கம்5 என்பது (Search Engine Optimization – SEO), மிகப் பெரிய துறையாக வளர்ந்துள்ளது.

    எனவே செய்தியை எழுதுபவர், தகுந்த தலைப்பினையும் குறிச்சொற்களையும் தேர்ந்தெடுக்க வேண்டும். இது, அதன் பரவலுக்கும் வீச்சுக்கும் அச்செய்தியை எளிதில் கண்டறியவும் பெரிதும் உதவும்.

    எழுத்தைச் செம்மையாக்கல்

    கணினியில் எழுதி, இணையத்தில் வெளியிடுவோருக்குப் பற்பல வசதிகள் உள்ளன. எழுதியதைப் பிழை திருத்தல், எத்தனை சொற்கள் / பக்கங்கள் உள்ளன, ஒரே சொல் எத்தனை முறைகள் கையாளப்பெற்றுள்ளது… எனப் பலவற்றைக் காணலாம். இவற்றின் மூலம், பிழைகள் இருந்தால் அவற்றைத் திருத்திக்கொள்ள முடியும். ஒரே சொல், பல முறைகள் வந்தால், மாற்றிக்கொள்ள முடியும். படைப்பின் சில பகுதிகளை வெட்டி ஒட்டல், முன்பின் மாற்றல் எனப் பல வகை வசதிகளை மின்னணுக் கருவிகள் தருகின்றன.

    பல கருவிகளில் சொற்களை எழுதுகையில் இயன்முற்று (Auto completion) வசதி உள்ளது. இதில் சில சிக்கல்கள் இருப்பினும் கவனமாகப் பயன்படுத்தினால், இதன் மூலம் நேரத்தைச் சேமிக்க முடியும். அகராதி வசதி இருப்பதால், தமிழ்ச் சொல்லுக்கு வேற்று மொழிச் சொல்லையும் வேற்று மொழிச் சொல்லுக்குத் தமிழ்ச் சொல்லையும் எளிதில் காணலாம். இவற்றின் மூலம் சரியான சொற்களை, சரியான அளவில், சரியான நேரத்தில், உரிய பயனர்களிடம் கொண்டு சேர்க்க முடியும். இதற்கு இணையமும் கணினி நுட்பங்களும் பேரளவில் துணை புரிகின்றன.

    (இந்தக் கட்டுரை, 2009 அக்டோபர் 5ஆம் தேதி அண்ணாகண்ணன் வெளி6 என்ற வலைப்பதிவில் வெளியான ஆக்கத்தின் விரிவாக்கம்)

    அடிக்குறிப்புகள்:

    1. http://en.wikipedia.org/wiki/Common_Era

    2. http://en.wikipedia.org/wiki/Quanzhou

    3. http://en.wikipedia.org/wiki/Guangzhou

    4. http://en.wiktionary.org/wiki/chairperson

    5. http://www.vallamai.com/?p=3767

    6. http://annakannan.blogspot.in/2009/10/blog-post_5644.html

    (திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்க் கணினி & இணையப் பயன்பாடுகள் என்ற கருப்பொருளில் 28.03.2014 அன்று நடந்த பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பெற்றது)

    Share
  • உண்டுண்டு

     

    அண்ணாகண்ணன்

     
    பெண்டுண்டு மகவுண்டு பேருண்டு சீருண்டு உண்டுண்டு வண்ணம் உண்டு
    செண்டுண்டு வண்டுண்டு சீருண்டு சாறுண்டு உண்டுண்டு சாரம் உண்டு

    இதழுண்டு சுவையுண்டு இடையுண்டு இசைவுண்டு உண்டுண்டு இன்பம் உண்டு
    இதமுண்டு பதமுண்டு விதமுண்டு நிதமுண்டு உண்டுண்டு மோகம் உண்டு

    ஆணுண்டு பெண்ணுண்டு தோளுண்டு துணையுண்டு உண்டுண்டு ஆசை உண்டு
    வானுண்டு மண்ணுண்டு வளமுண்டு நலமுண்டு உண்டுண்டு மேன்மை உண்டு

    உரமுண்டு திறமுண்டு உளமுண்டு திடமுண்டு உண்டுண்டு வேகம் உண்டு
    கரமுண்டு களமுண்டு கவியுண்டு கனமுண்டு உண்டுண்டு கானம் உண்டு

    வரவுண்டு செலவுண்டு தவமுண்டு வரமுண்டு உண்டுண்டு யோகம் உண்டு
    இரவுண்டு பகலுண்டு இருளுண்டு ஒளியுண்டு உண்டுண்டு தாகம் உண்டு

    பஞ்சுண்டு தீயுண்டு முள்ளுண்டு மலருண்டு உண்டுண்டு பாடம் உண்டு
    நெஞ்சுண்டு நெறியுண்டு நிழலுண்டு நிஜமுண்டு உண்டுண்டு நீதி உண்டு

    வினையுண்டு விளைவுண்டு விழியுண்டு விடிவுண்டு உண்டுண்டு வெற்றி உண்டு
    முனையுண்டு கணையுண்டு முதலுண்டு பதிலுண்டு உண்டுண்டு காலம் உண்டு

     
    (பொதிகை தொலைக்காட்சியில் 05.01.2014 அன்று மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பான
    ’கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்’ நிகழ்ச்சியில் வாசிக்கப்பெற்றது)

    Share
  • நம்மாழ்வார்

    அண்ணாகண்ணன்

    படிமம்:Nammalvaar.jpg

    வேகமாக அறுவடை செய்யப்
    பலரும் துடித்தபோது,
    துடிப்புடன் விதைத்தாய்.

    தங்க வாத்தை அறுக்கப்
    பலரும் முயன்றபோது
    நல்ல வார்த்தை பகர்ந்தாய்.

    அஞ்சிப் பலர்
    பின்தங்கியபோது,
    நெஞ்சை நிமிர்த்தி
    முன்வந்தாய்.

    அலட்சியமாய்ப் பலர்
    மறந்தவற்றை
    இலட்சியமாய் ஏந்தி
    உழைத்தாய்.

    பசுமை காக்கப்
    போராட்டக் களம் புகுந்தாய்.
    எம் உளம் முழுதும்
    பசுமையாய் நிறைந்தாய்.

    நீயும் எங்கள் தாய்.

    நீ இறந்தாய் என்கிறது செய்தி.
    ஆனால், இருக்கின்றாய் என்றே சொல்லும்
    ஒவ்வொரு துளி நீரும்
    மலரும் ஒவ்வொரு துளிரும்
    ஊற்றும் தென்றல் காற்றும்
    இன்றும் என்றென்றும்.

    =============================
    படத்துக்கு நன்றி: தமிழ் விக்கிப்பீடியா
    Share
  • தமிழ் வளர்க்க ஒரு யோசனை – நீதிபதி மூ.புகழேந்தி குரல் பதிவு

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    Justice_Mu_Pugazenthiஓய்வுபெற்ற நீதிபதி மூ.புகழேந்தி அவர்களைக் கவிஞர் புதுகை மா.உதயகுமாரும் நானும் 27.12.2013 அன்று, தாம்பரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம். மூ.புகழேந்தி அவர்கள், 14 நூல்களை இயற்றியுள்ளார். கவிஞர். தமிழிலும் ஆங்கிலத்திலும் நாவல் எழுதியுள்ளார். சிறுகதைகளும் எழுதியுள்ளார்.

    இவருடன் உரையாடியபோது, தமிழை வளர்க்க, ஒரு யோசனை கூறினார். பள்ளி நிலையில் தமிழை ஒரு பாடமாக வைத்துள்ளது போல், கல்லூரி அளவிலும், அதிலும் கலை – அறிவியல் கல்லூரிகள் மட்டுமல்லாது, மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட இதர கல்லூரிகளிலும் இளங்கலை மட்டுமல்லாது முதுகலை மாணவர்களுக்கும் தமிழை ஒரு பாடமாக வைக்க வேண்டும். அப்போது தமிழ் தானாக வளரும் என்றார்.

    அவரது கருத்துகளை இங்கே கேளுங்கள் –

    http://www.4shared.com/mp3/mnYZEaci/Pugazenthi_judge_final.html

    நேர அளவு: 03.55 நிமிடங்கள்

    மெல்லிசை: வசந்தி சுப்பிரமணியன்

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    அண்ணா கண்ணன்

    சித்திரம் பேசுதடி என்றன் சிந்தை மயங்குதடி என்ற வரிகளுக்கு இணங்க, ஓவியமும் நிழற்படங்களும் நம் உள்ளத்தை என்றும் கொள்ளை கொள்ளக் கூடியவை. புதிய திறமைகளை ஊக்குவிப்பதில் வல்லமை எப்போதும் முன் நிற்கிறது. அவ்வகையில் சிறந்த நிழற்படக் கலைஞர்களைக் கவுரவிக்க உள்ளோம்.

    திவாகர் அவர்கள் பயணத்தில் இருப்பதால், இந்த வார வல்லமையாளரை வல்லமை பிளிக்கர் படக் குழும நிர்வாகி சாந்தி மாரியப்பன் (அமைதிச் சாரல்) தேர்ந்தெடுக்கிறார். அடுத்த இரண்டு வாரங்களும் சாந்தியே தேர்ந்தெடுக்க உள்ளார்.

    இனி, சாந்தியின் மடல் –

    முதல் தேர்வு: வனிலா பாலாஜி.

    இயற்கையான ஒளியை மிகச் சிறப்பாகக் கையாள்வது இவரது தனித் தன்மை. வீட்டினுள் எடுத்தவையாக இருந்தாலும் கூட அவரது படங்களில் காணப்படும் அழகு சொல்லி முடியாது.

    71516183@N03_r

    இந்தப் படத்தில் மரப்பாச்சிப் பொம்மைகளின் மேல் படிந்திருக்கும் மெல்லிய ஒளி ஒரு தெய்வீகத் தன்மையைக் கொடுக்கிறது. அருமையான காட்சியமைப்பு, முரண்பாடான வண்ணங்கள், nice arrangement, மிக மிகத் துல்லியமான படப்பிடிப்பு என்று எல்லாமும் இந்தப் படத்திலிருந்து கண்களை எடுக்க விடாமல் கட்டிப் போடுகின்றன.

    vanila balaji
    http://www.flickr.com/photos/vanilabalaji/11099741773/in/pool-1922937@N20

    மேலும் படங்களை இவரது ஃப்ளிக்கர் பக்கத்தில் கண்டு ரசிக்கலாம்.
    http://www.flickr.com/photos/vanilabalaji/with/11338932554

    சாந்தியின் தேர்வினை வழிமொழிந்து, வனிதா பாலாஜி அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கிறோம். அவரது திறனும் புகழும் மேன்மேலும் உயர வாழ்த்துகள். உரியவரைத் தேர்ந்தெடுத்த சாந்திக்குப் பாராட்டுகள்.

    கடைசி பத்தியில் விசாலம் அம்மா –

    தில்லியில் பஹுவாய் மந்திர் கட்டிருக்கும் விதம் மிக வியப்பைத் தருகிறது தாமரை மலர் போன்று அமைப்பு ஒரு இடத்திலும் மின்சாரம் இல்லை சுற்றி வாய்க்கால் போன்று நீரோடடம். உள்ளே தியானம் செய்ய ஏற்ற இடம் உள்ளே மிகவும் சில்லென்று ஏசி போட்டாற் போல் இருக்கிறது இது நல்ல வெயில் காலத்திலும் தான். எங்கும் பச்சைப்பசேர் என்ற புல் வெளி. இந்த வெளி சக்தியைச் சேமிக்கும் போது எனக்கொன்று தோன்றுகிறது .ஏன் நாம் நம்மிடம் இருக்கும் சக்தியையும் சேமிக்கக்கூடாது? படபடவென்று பேசி சக்தியை இழக்கிறோம் கோபத்தில் சக்தியை இழக்கிறோம் .அளவு கடந்த மோகத்திலும் அல்லது காமத்திலும் சக்தி விரயமாகிறது நம் உடலில் இருக்கும் சக்தியை விரயமாக்காமல் தக்க வைத்துக்கொள்ள அங்கு நல்ல விஷயங்களுக்கு வழி உண்டாகிறது, மௌனத்தில் தியானம் சீக்கரம் பலன் தருகிறது “.மௌனகுருவே நடராஜா நீலகண்டனே ” என்று அந்த ஞானகுரு தக்ஷிணாமூர்த்தியைத் தியானிப்போம்.

    Share
  • ‘செம்மை, முழுமை, மகத்தான ஆளுமை’

    முனைவர் அண்ணாகண்ணன்

    ஆசிரியர், யாஹூ தமிழ்த் தளம்,

    பெங்களூரு

    annakannan@gmail.com

    ——————————————————————————————————-

    இதோ, சிறந்த முன்மாதிரி!

    புலத்துறை முற்றிய கற்றுத் துறைபோகிய தென்மராட்சி அறிஞர் என்ற அடிப்படையில், மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்களுக்கு விருது வழங்கிப் பாராட்டிச் சிறப்பிக்கும் செய்தி அறிந்து மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.

    உலகளாவிய பார்வை கொண்ட சச்சி அவர்களை உலகத் தமிழர் எனப் பல்லோர் உவந்து போற்றுவர். ஐ.நா. நிறுவனத்தில் பணியாற்றியவர். உலகம் முழுதும் ஆழமும் விரிவுமான நட்புக் கொண்டவர். 60க்கும் மேலான நாடுகளுக்குப் பயணித்தவர். 23 அரசுகளுக்கு ஆலோசகராகத் திகழ்ந்தவர். இத்தகையவருக்கு, சொந்த மண்ணில் பாராட்டு. நாட்டுக்கு அரசர் ஆனாலும் தாய்க்குப் பிள்ளை அன்றோ!

    சச்சி அய்யா, நுண்மாண் நுழைபுலம் மிக்க ஈழத் தமிழறிஞர்; காந்தளகம் பதிப்பகத் தலைவர்; தனித்துவம் மிக்க தமிழ்நூல்.காம் (http://www.tamilnool.com), தேவாரம்.ஆர்க் (http://thevaaram.org) தளங்களின் நிறுவனர்; உலகம் முழுவதும் சைவத் திருமுறைகளை எடுத்துச் செல்லும் தமிழ்த் தூதர்; தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்குத் தமிழக அரசு ரூ.100 கோடி ஒதுக்கிட முக்கிய காரணர்களுள் ஒருவர், அன்பிற் சிறந்த சான்றோர்;

    ஒளி அச்சுக் கோப்பு, நிலவரை என்ற கலைச் சொற்களைப் புதிய பொருளுடன் அறிமுகப்படுத்தியவர்; இலங்கை அரசியல் நிகழ்வுகளின் நோக்கர்; சேது சமுத்திரத் திட்டம் என்கிற தமிழன் கால்வாய்த் திட்டத்தைப் பல முனைகளுக்கும் எடுத்துச் சென்ற கடலியல் வல்லுநர்; தமிழில் காசோலைகளை எழுதி, அதை ஏற்காத வங்கிகளுடன் சட்டபூர்வ – தனி நபர்ப் போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டவர்; தமிழால் அனைத்தும் முடியும் என்பதை நிலைநாட்டுவதில் உறுதி கொண்டவர்.

    ஆஸ்திரேலியாவில் பொங்கல் திருநாள் அன்று சச்சியை உரையாற்ற அழைத்தார்கள். புலம்பெயர் இளையோர் நிறைந்த அந்த அவையில் இவர் ஆற்றிய உரையின் தலைப்பு: The Photosynthesis Day என்பதாகும். எதையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகுவதில் இவர், சிறந்த முன்மாதிரி. புதிய சிந்தனைகள், ஆக்கப்பூர்வ செயல்திட்டங்கள், பொருள் செறிந்த நுணுக்கமான மொழி நடை….. ஆகியவற்றுடன் மகத்தான ஆளுமையாக நம் முன் நிற்கிறார்.

    எழுத்தாளருக்கும் பதிப்பாளருக்கும் இடையிலான உடன்பாடு எப்படி இருக்க வேண்டும்? பதிப்பாளருக்கும் விற்பனையாளருக்கும் இடையிலான உடன்பாடு எவ்வாறு அமைய வேண்டும்? எனப் பலவற்றைத் தமிழில் நேர்த்தியாக எழுதியவர். பதிப்புத் தொழில் உலகம் என்ற மாத இதழில் சீரிய முறையில் பதிப்பக நெறிகளை வரைந்து காட்டியவர். எந்தச் செயலிலும் செம்மையும் முழுமையும் வெளிப்படுமாறு பணியாற்றுபவர்.

    சீசெல்சுத் தீவில் பிள்ளையார் கோவிலைக் கட்டியதில் தொடங்கி, மறவன்புலவில் பொங்கல் விழாவை முன்னெடுப்பது வரை, பல்வேறு சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருபவர். முக்கியத்துவம் வாய்ந்த பல நூல்களின் ஆசிரியர். சிறந்த மொழிபெயர்ப்பாளர். இவருடன் இணைந்து ‘சிங்கள வரலாற்று நூல்களின் நம்பகத்தன்மை’ என்ற நூலை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கும் வாய்ப்பு, எனக்கு அமைந்தது. இவரது தூண்டுதலின் பேரில், ‘காந்தளகம் – 20 ஆண்டுகள்’, ‘தகத்தகாய தங்கம்மா’ ஆகிய நூல்களை இயற்றினேன். இவருடன் 1994 தொடக்கம் இன்று வரை நெருங்கிய நட்பும் உறவும் கொண்டிருப்பது, எனது பேறு.

    ஒருவரின் தகுதியை உணர்ந்து, அடையாளம் கண்டு பாராட்டுவது, உண்மையில் அவரை உற்சாகப்படுத்துவதற்காக இல்லை. அதனினும் அதிகமாக, அவரைப் போல நாமும் பணியாற்ற வேண்டும், முன்னேற வேண்டும் எனப் பிறரை ஊக்குவிப்பதற்கே. “தனி மனிதரின் ஆற்றலை முழுமையாக உணராமல், அதைச் சிறப்பாகப் பயன்படுத்தாமல் ஒரு சமுதாயம் இருக்குமானால், அதனால் ஏற்படும் இழப்பு, அந்தத் தனி மனிதருக்கு உரியதில்லை. அந்தச் சமுதாயத்திற்கே உரியது (அகமொழி 13)” என்ற எனது சிந்தனைத் துளியை இங்கே நினைவுகூர்கிறேன்.

    அறிஞர் சச்சிதானந்தன் அவர்களைப் பாராட்டுவதன் மூலம், தென்மராட்சி கல்விக் கழகம், தனது வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுகிறது. இதற்காக இந்தக் கழகத்தினருக்கு எனது பாராட்டுகள். சச்சி அய்யாவின் பணியும் புகழும் மேன்மேலும் வளர்ந்திட, எனது உளமார்ந்த வாழ்த்துகள்.

    Share
  • ‘ஏடிஎம் / ஃபோன் பேங்கிங்’ அபாயங்களும் தீர்வுகளும்

    அண்ணாகண்ணன்

    (‘ஏடிஎம் / போன் பேங்கிங்’ அபாயங்கள் என்ற தலைப்பில் 2009 ஜனவரி 30 தேதியிட்ட சென்னை டைஜஸ்ட் வார இதழில் இந்தக் கட்டுரை வெளியானது. அதன் திருத்திய, இற்றைப்படுத்திய வடிவம் இங்கே)

    பெங்களூருவில் 2013 நவம்பர் 19 அன்று கார்ப்பரேஷன் வங்கியின் ஏடிஎம் மையத்தில் 38 வயதுடைய ஜோதி என்ற பெண் தாக்கப்பட்டுள்ளார். ஜோதி உள்ளே நுழைந்த சிறிது நேரத்தில், அதே மையத்தில் நுழைந்த மர்ம நபர், சுருள் கதவினை (ஷட்டரை) இறக்கி, அரிவாளால் அவரைத் தாக்கிவிட்டு, அவரிடமிருந்தவற்றைப் பறித்துச் சென்றுள்ளார். அந்நேரத்தில் அங்கே காவலரும் இல்லை. இத்தகைய சிக்கல்களைத் தவிர்க்க, ஏடிஎம் மையங்களில் பற்பல சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

    bangalore_atm_attack_650

    அதற்கு முன், வேறு சிலவற்றைக் கவனிக்கலாம்.

    இந்தியா முழுவதும் ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணம் வழங்கு எந்திரங்கள் வேகமாக விரிவடைந்து வருகின்றன. அது தொடர்பான புகார்களும் நீள்கின்றன. பண அட்டையாளரை மிரட்டிப் பணம் எடுத்துக் கொள்ளை; ஏடிஎம்மில் கள்ள நோட்டுகள்; பண அட்டைகள், எந்திரத்தில் மாட்டிக்கொள்ளுதல்; ஒரு முறை விவரங்களை உள்ளிட்டுப் பணம் வராததால் அடுத்த முறை மீண்டும் விவரங்களை உள்ளிட்டால் கணக்கில் இரு முறை பணம் கழிந்தது…. எனப் பல வகைப் புகார்கள். இவை அல்லாமல் வேறு பல சிக்கல்களும் உள்ளன.

    ஏடிஎம் வங்கிச் சேவையைத் தொடங்கியதிலிருந்தே வங்கிகள் ஒர் எச்சரிக்கையை விடுத்து வருகின்றன. உங்கள் தனி அடையாள எண்ணை (PIN – Personnel Identification No.) எவரிடமும் சொல்லக் கூடாது. எங்கும் எழுதி வைக்கக் கூடாது… எனப் பல அறிவுரைகள்; பத்திரிகைகளில் விளம்பரங்கள். ஆனால், ஏடிஎம் மையங்களின் வடிவமைப்பு, அவர்களின் அறிவுரைகளுக்கு மாறாக உள்ளது.

    2008இல் ஐசிஐசிஐ வங்கி ஒன்றின் ஏடிஎம் மையத்திற்குச் சென்றேன். இந்த வங்கியின் மையங்களில் தொலைபேசி வங்கிச் சேவையும் வழங்கப்படுகிறது. சுவரில் சுமார் 5 அடி உயரத்தில் ஒரு தொலைபேசி நெடுக்குவாட்டில் பொருத்தப்பட்டிருந்தது. அதை எடுத்து ஒரு சேவை தொடர்பாக அவர்களை அழைத்தேன். தானியங்கிக் கருவி என்னைச் சோதிக்கும் முகமாக, என் பண அட்டையில் உள்ள 16 இலக்க எண்ணை உள்ளிடச் சொன்னது. உள்ளிட்டேன். அடுத்து, என் தனி அடையாள எண்ணை உள்ளிடச் சொன்னது. உள்ளிட்டேன். அப்போது அந்த அறையில் உள்ள மூன்று பண எந்திரங்களிலும் பணம் எடுக்க ஆட்கள் நின்றிருந்தார்கள். காசோலை இடுகிறேன் என இன்னும் இருவரும் நின்றிருந்தார்கள். காவலர் ஒருவரும் வாயிலில் நின்று கவனித்துக்கொண்டிருந்தார். கதவுக்கு வெளியே ஓர் இருபது பேருக்கும் மேலாக வரிசையாக நின்றிருந்தார்கள். கண்ணாடிக் கதவு. வெளியே நிற்பவரும் உள்ளே நடப்பதைத் துல்லியமாகக் கவனிக்க முடியும்.

    சுவரில் எல்லோரும் பார்க்கும் படியாக அமைந்திருந்த தொலைபேசியில் என் தனி அடையாள எண்ணை உள்ளிட்டுள்ளேன். அந்தக் கணத்தில் உள்நின்றவர்களும் கதவுக்கு வெளியே நின்றிருந்தவர்களும் என் தனி அடையாள எண்ணை எந்தச் சிரமமும் இல்லாமல் எளிதில் பார்த்திருக்க முடியும். அதன் பிறகே அந்த விபரீதத்தை உணர்ந்தேன்.

    தொலைபேசி வங்கிச் சேவையில் தானியங்கிக் கேள்விகளுக்கு இந்த 16 இலக்க எண்ணும் தனி அடையாள எண்ணும் போதுமானது. அடுத்து நான், வங்கியின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவு அதிகாரியிடம் பேச விரும்பினேன். அவர் தொடர்பில் வந்ததும் என்னைச் சோதிக்கும் முகமாக, என் பிறந்த நாள், என் விண்ணப்பத்தில் நான் அளித்த கமுக்கப் பதில்கள் சிலவற்றைக் கேட்டுப் பெற்றார். நான் கூறிய பதில்களை அந்நேரம் அங்கு இருந்த அனைவரும் கேட்டிருக்க முடியும். இதுவும் அபாயமானது.

    (இந்த ஆபத்து, ஏடிஎம் மையங்களில் மட்டுமின்றி, பொதுவாக எல்லா இடங்களிலும் உள்ளது. வீட்டில் நம் தனியறையில் இப்படி பேசலாம். அலுவலகத்திலோ, பொது தொலைபேசி மையங்களிலோ, இன்ன பிற பொது இடங்களிலோ தொலைபேசி வழி வங்கிச் சேவையைப் பயன்படுத்துவதில் ஆபத்துகள் உண்டு. இந்தக் கோணத்தில் வங்கிகள் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்).

    ஐசிஐசிஐ வங்கி, திடீரெனத் தன் ஏடிஎம் மையங்களில் உள்ள தொலைபேசி வசதியைத் திரும்பப் பெற்றுவிட்டது. இது குறித்து எந்தத் தகவலோ, விளக்கமோ இல்லை.

    ================================

    இது குறித்து ICICI வங்கியின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவுக்கு 28.9.2008 அன்று நான் எழுதிய மடல் இது:

    I want to know why u have disconnected all the telephone lines at ur ATMs?

    Why u didn’t informed about this to ur customers? Even ATM security person don’t know why it was disconnected?

    When u r going to give again?

    ================================

    இதற்கு 30.9.2008 அன்று Jagdish P., Customer Service Manager, ICICI Bank Limited அளித்த பதில் வருமாறு:

    Dear Mr. Kannan,

    We understand your concern.

    We are deeply concerned with the issues raised by you in your e-mail. We would like to assure you that all our customers are important to us and your feedback will aid us in introspection and improvements in our processes.

    Kindly note all the telephone lines are removed from ATM’s as the same is a business decision.

    Looking Forward to your co-operation in helping us to serve you better.

    ================================

    வேறு ஓர் ஆபத்தும் ஏடிஎம் மையங்களில் உள்ளது. அங்கு பணம் எடுக்க விரும்புவோர், வரிசையில் நிற்கிறார்கள். பெரும்பாலான மையங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட பண எந்திரங்கள் உள்ளன. வாயிற் காவலர், கண்ணாடி அறைக்குள் ஒரே ஒருவரை விடுகிறார் என்றே வைத்துக்கொள்வோம். ஒரு நேரத்தில் ஒரு கண்ணாடி அறைக்குள் மூவர் பணம் எடுக்கிறார்கள். பண எந்திரங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் அமைப்பின்படி ஒருவர் தன் தனி அடையாள எண்ணை உள்ளிடுவதை அடுத்தவரால் எளிதில் பார்த்துவிட முடியும்; அவர் தன் உடலால் மறைத்துக்கொண்டாலும்கூட ஓரங்கள் மூலம் அதைக் காண முடியும். காசோலை இடுவதற்காக வருபவர், சர்வ சாதாரணமாக இதைப் பார்க்க முடியும்.

    நடப்பில் கண்ணாடி அறைக்குள் பணம் எடுப்பவரும் அவர் உடன் வந்தவரும் அனுமதிக்கப்படுகிறார்கள். கணவன் – மனைவி, அப்பா/அம்மா – மகன்/மகள், பெரியவர்களுக்கு உதவ இளையவர்கள், நண்பர்கள், காதலர்கள்… என இருவர் தாராளமாக அந்த அறைக்குள் செல்கிறார்கள். ஒருவர் பணம் எடுக்கையில் அடுத்தவர் என்ன கண்ணை மூடிக்கொண்டோ, வேறு பக்கம் பார்த்துக்கொண்டோவா இருக்கிறார்கள். ஆக, உள்ளே சென்ற இன்னொருவருக்கும் தனி அடையாள எண் தெரிந்துவிடும்.

    கண்ணாடி அறைக்கு வெளியே இருப்பவரும் சற்று கூர்மையாகக் கவனித்தால் உள்ளே இருப்பவரின் விரலசைவுகளைக் கொண்டே அவரின் கமுக்க விவரங்களைக் கண்டுபிடித்துவிட முடியும். எல்லோரிடமும் செல்பேசி உள்ளது. பெரும்பாலான செல்பேசிகளில் புகைப்படக் கருவி உள்ளது. கண்ணாடி அறைக்குள் செல்பேசியில் பேசக் கூடாது என்ற விதி இருப்பினும் பல இடங்களில் இது மீறப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால், கண்ணாடி அறைக்குள் செல்பேசியில் பேசவே வேண்டாம். கையில் எடுத்துச் சென்றாலே போதும். உள்ளே செல்வதற்கு முன்பே செல்பேசியில் வீடியோவை ஆன் செய்துவிட்டுச் சென்று, உள்ளே சும்மா செல்பேசியைக் கையில் வைத்திருப்பது போலவோ, குழந்தையின் கையில் செல்பேசியைத் தந்தோ உள்ளே நடப்பதை, வாடிக்கையாளரின் பேச்சை, அவரின் விரலசைவுகளின் மூலமாக அவரின் கமுக்க எண்ணை எளிதில் பதிந்துவிட முடியும். கையில் செல்பேசி எடுத்துச் செல்வதைத் தடுத்தாலும் ஒருவர் தன் சட்டைப் பையில் செல்பேசியை வைத்தே இதைச் செய்ய முடியும்.

    இது சாதாரண செல்பேசியை மையப்படுத்திய அபாயம் மட்டுமே. Hidden camera எனப்படும் மறைவாக எடுத்துச் செல்லும் வீடியோ கருவிகளை ஓர் எழுதுகோல் வடிவத்திலோ, மூக்குக் கண்ணாடி வடிவத்திலோ எடுத்துச் சென்றும் பதிய முடியும். இந்த அளவுக்கு நம் குற்றவாளிகள் முன்னேறவில்லை என்றாலும் இதற்கான வாய்ப்புகளை மறுக்க முடியாது. ஏதும் பை, கைப்பை, பெட்டி… என எந்தப் பொருள் எடுத்துச் சென்றாலும் அதற்குள் மறைத்து எடுத்துச் சென்றும் இதைச் செய்ய முடியும்.

    கண்ணாடி அறைக்கு வெளியே இருப்பவரால் கூட, தன் அதிக சக்தி வாய்ந்த செல்பேசி வழியே உள்ளே நடப்பதைக் காட்சிகளாகப் பதிந்துவிட முடியும். ஏன், வரிசையில் கூட நிற்க வேண்டாம். தூரத்தில் நின்றபடியே கூட இதைச் செய்வது சாத்தியம்தான்.

    இத்தகைய பாதுகாப்பு குறைபாட்டுடன் ஏடிஎம் மையங்கள் இருப்பது, எவ்வளவு பெரிய ஆபத்து!! இன்று போலி பண அட்டைகள் தயாரிக்கப்படுகின்றன எனச் செய்திகள் வெளிவருகின்றன. இந்நிலையில், நம் தனி அடையாள எண்ணும் களவாடப்படுமானால் நாம் பாடுபட்டுச் சேர்க்கும் பணத்தைக் கண்ணிமைக்கும் நேரத்தில் இழப்போம்.

    ஏடிஎம் மையத்திலிருந்து வெளியே வரும் ஒருவரை மயக்கியோ, ஏமாற்றியோ, தாக்கியோ அவரின் பண அட்டையை ஒருவர் பறிக்கலாம். அவர் அறியாமலே அவரிடமிருந்து ஜேப்படி செய்துவிடவும் முடியுமே. அப்படி நடந்தால், ஏற்கெனவே கமுக்க எண்ணும் தெரிந்த நிலையில் பணத்தை எளிதில் கொள்ளையிட முடியுமே.

    பண அட்டை பயன்படுத்தும் புதியவர்கள், அதை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த வாயிற் காவலர்களோ, பக்கத்தில் பணம் எடுத்துக்கொண்டிருக்கும் வேறு புதிய நபரோ தான் உதவுகிறார். அட்டையைச் செருகுவது, தனி அடையாள எண்ணை அழுத்துவது, எவ்வளவு பணம் தேவை என எண்களை அழுத்துவது… என ஒவ்வொரு கட்டத்தையும் இவர்களே சொல்லித் தருகிறார்கள். சில நேரங்களில் பண அட்டையைப் பயன்படுத்தத் தெரிந்தவர்களும் தங்கள் விவரத்தை அடுத்தவரிடம் இழக்கிறார்கள். ஏடிஎம் எந்திரத்தில் ஏதும் குறைபாடு எனில், மீண்டும் மீண்டும் தன் விவரங்களை இட்டுச் சோர்வடைபவர், அடுத்தவரின் உதவியை நாடுகிறார். அப்போது, சிக்கல் தீர்கிறதோ, இல்லையோ, நமது கமுக்கத் தகவல், அடுத்தவருக்குத் தெரிந்துவிடுகிறது. இதுவும் அபாயமே.

    வங்கிகள், உங்கள் தனி அடையாள எண்ணை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருங்கள் என்று வேறு எச்சரிக்கின்றன. ஒவ்வொரு முறையும் புதிய எண்ணை நினைவில் வைத்துக்கொள்ள முடியுமா? எங்காவது எழுதி வைப்பதும் சிக்கலே.

    இத்தகைய சிக்கல்களைத் தீர்க்கச் சில வழிமுறைகள் இங்கே-

    முதலாவதாக, பண எந்திரத்தின் முன் நிற்பவரின் விரலசைவுகளைப் பின்னாலும் அருகிலும் இருப்பவர் பார்க்க முடியாத வகையில் ஒரு கூடு அமைக்க வேண்டும். எண்களை உள்ளிட வேண்டிய பகுதிக்கு மட்டுமாவது ஒரு கூடு போன்ற மறைப்பு தேவை. ஒவ்வொருவரின் கையின் பருமனும் வெவ்வேறு அளவில் இருக்கலாம் என்பதால், அந்தக் கூடு நெகிழ்வுத்தன்மை உடையதாக இருக்க வேண்டும். கைகள் மட்டும் உள்ளே செல்லும்படியாக, அதே நேரம் நாம் இடும் விவரங்களை நாம் மட்டுமே மேலிருந்து காணும் வகையில் ஒரு திறப்பும் இருக்க வேண்டும்.

    இது, தற்காலிமான தீர்வே. கமுக்க எண்ணை உள்ளிடுவது என்ற முறையையே மாற்றுவது அடுத்த தீர்வு. உலகின் பல பகுதிகளில் கைரேகைகளையே அவரின் கமுக்க அடையாளமாகப் பயன்படுத்துகிறார்கள். கட்டை விரலையோ, முழு உள்ளங்கையையோ இப்படிப் பயன்படுத்தும் விதத்தில் நம் ஏடிஎம் மையங்களை மாற்றியமைக்க வேண்டும். இது தொடர்பான ஆராய்ச்சியை விரைவுபடுத்தி, உடன் நடைமுறைக்குக் கொணர வேண்டும்.

    பெங்களூரு ஜோதி தாக்குதல் போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் தடுக்க என்ன செய்யலாம்?

    ஏடிஎம் மையத்தின் சுருள் கதவைத் திறந்ததும் அது, மேலே சென்று அங்கே பூட்டிக்கொள்ள வேண்டும். மீண்டும் சாவி போட்டுத் திறந்தால் மட்டுமே இறக்கும் வண்ணம் திருத்தி அமைக்க வேண்டும். வங்கிகளின் பணப் பெட்டகங்களுக்கு இரட்டைச் சாவி உண்டு. வாடிக்கையாளரிடம் ஒன்றும் வங்கி மேலாளரிடம் ஒன்றும் இந்தச் சாவி இருக்கும். இதே போன்று, ஏடிஎம் மையங்களின் சுருள் கதவுகளுக்கும் காவலாளியிடம் ஒரு சாவியும் வங்கியிடம் இன்னொரு கடவு எண்ணும் இருக்க வேண்டும். கதவைத் திறகும் நேரத்திலும் மூடும் நேரத்திலும் காவலாளி விண்ணப்பித்தால், அவருக்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தத் தகுந்த கடவு எண்ணை அனுப்பலாம். அந்தக் கடவு எண்ணை இட்டு, அதன் பிறகு சாவியையும் பயன்படுத்தினால் மட்டுமே கதவைத் திறக்க / மூட முடியும் என்ற நிலையை உருவாக்க வேண்டும். கதவுக்கு வெளியே ஒரு கண்காணிப்புத் தொலைக்காட்சியைப் பொருத்தி, கதவு திறக்கப்படுவதைக் கண்காணிக்க வேண்டும். சந்தேகத்துக்குரிய வகையில் ஏடிஎம் மையத்தில் ஏதும் நடந்தால், தொலைவிலிருந்தே கதவை மூடிவிடுவதற்கும் ஒரு வாய்ப்பினை அமைக்க வேண்டும்.

    அத்துடன், ஏடிஎம் அறைக்குள் மயக்கமூட்டும் மருந்து ஒன்றை மறைவிடத்தில் வைக்க வேண்டும். சந்தேகத்துக்கு உரிய நிலையில், மயக்கும் புகையை / நறுமணத்தை அங்கே செலுத்தி, அறைக்குள் இருப்பவர்களை மயக்கத்தில் ஆழ்த்த வேண்டும். அத்தகைய சூழலில் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கும் மருத்துவமனைக்கும் உடனடித் தகவல் அனுப்பி, அவசர உதவிகளைப் பெற வேண்டும்.

    ஏடிஎம் மையத்தின் வாசலிலும் உள்ளேயும் உள்ள கண்காணிப்புத் தொலைக்காட்சியை யாரும் சேதப்படுத்தினால், உடனடியாக ஒட்டுமொத்த மையமும் செயலிழந்திடும் வண்ணம் அமைக்க வேண்டும். அதாவது, கதவு தானாக மூடிக்கொள்ள வேண்டும். மின் இணைப்பு அறுந்து, அருகில் உள்ள காவல் நிலையத்துக்கும் உடனே தகவல் செல்ல வேண்டும்.

    மேலும், வாடிக்கையாளரின் பை, கைப்பை உள்ளிட்ட எந்தப் பொருளானாலும் வெளியே வைக்கச் சொல்ல வேண்டும். ஆலயங்களில் செருப்புகளைப் பாதுகாப்பது போல் ஏடிஎம் மையங்களின் வெளியேயும் பொருட் பாதுகாப்புப் பிரிவுகளை அமைக்க வேண்டும். அங்கு வைத்துவிட்டுச் செல்லுவோருக்குக் கட்டணம் விதிக்கலாம்.

    ஏடிஎம் மையங்களில் செல்பேசி உள்ளிட்ட மின்னணுப் பொருட்களை எடுத்துச் செல்லவே அனுமதிக்கக் கூடாது. விமான நிலையங்களில் மின்னணுப் பொருள்கள் உடலில் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா எனச் சோதனையிடுவது போல் இங்கும் சோதிக்க வேண்டும்.

    தொலைபேசி வங்கிச் சேவையை ஏடிஎம் மையங்களில் வழங்குவோர், அதற்கெனத் தனிக் கூண்டு வைப்பது நல்லது. பொது தொலைபேசி மையங்களில் (PCO) இருப்பது போல் தனி அறைகள் அமையலாம். அங்கும் அவரின் விரலசைவுகள் வெளியே தெரியாத வண்ணம் மறைப்பு இருக்க வேண்டும். மேலும் அவரின் குரலும் வெளியே கேட்கக் கூடாது.

    ஏடிஎம் மையங்களுக்கு வெளியிலும் பொதுவான செல்பேசி, தரை வழி தொலைபேசி ஆகியவற்றின் வழியே தொலைபேசி வழி வங்கிச் சேவை பெற முடிகிறது. இது குறித்தும், வங்கிகள் தீவிர அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். இன்று தொலைபேசி வழியே பல்வகைக் கட்டணங்களைக் கட்டவும் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ளவும் வங்கிகள் வசதி அளித்து வருகின்றன. செல்பேசியை ரீசார்ஜ் செய்யவும் வசதி உண்டு. இந்நிலையில் அந்தத் தொலைபேசி உரியவரால்தான் இயக்கப்படுகிறது என்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும்.

    ஏடிஎம் மையங்களில் ஒன்றுக்கு மேற்பட்டோரை அனுமதிக்கக் கூடாது. எவ்வளவு முக்கியமானவராக, அந்நியோன்யம் கொண்டவராக இருந்தாலும் வாடிக்கையாளர்களும் சரி; காவலர்களும் சரி; இதில் கண்டிப்பாக இருக்கவேண்டும்.

    பண அட்டை பயன்படுத்தும் புதியவர்களுக்காக, எல்லா ஏடிஎம்களிலும் ஒரு மாதிரிக்குப் பொம்மை எந்திரம் வைக்கலாம். பள்ளி மாணவர்களுக்கும் இதில் நேரடிப் பயிற்சி அளிக்கலாம். சரியாக விவரங்களை உள்ளிட்டால் ‘பாராட்டுகள்! நீங்கள் சரியாகப் பயன்படுத்துகிறீர்கள்’ எனத் திரையில் வருமாறு செய்யலாம். தவறாக விவரங்களை உள்ளிட்டால் ‘மன்னியுங்கள். தவறான பயன்பாடு. மீண்டும் முயலுங்கள்’ எனத் திரையில் வரச் செய்யலாம். அந்த எந்திரத்தில் புதியவர் நேரடியாகச் செய்து பழகலாம். கல்வியறிவு இல்லாத கோடிக்கணக்கானோர் வாழும் நாட்டில் அவர்களையும் சேர்த்து நம் வங்கியாளர்கள் சிந்திக்க வேண்டும்.

    இதை நீதிமன்றங்கள், நுகர்வோர் அமைப்புகள், வங்கிகள் அனைத்தும் உடனடி கவனத்தில் எடுத்துக்கொண்டு ஏடிஎம் மையங்களில் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். இதற்கென வல்லுநர் குழு அமைத்து மேலும் தீவிர ஆய்வு மேற்கொள்ள வேண்டும். வாடிக்கையாளரின் பணத்தை மட்டுமின்றி, அவரது உயிரையும் உடல்நலனையும் காப்பாற்றுவதிலும் வங்கிகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

    நன்றி: சென்னை டைஜஸ்ட்

    படத்திற்கு நன்றி :

    http://www.ndtv.com/article/cities/bangalore-woman-attacked-with-machete-inside-atm-suffers-severe-injuries-paralysis-448357

    Share
  • தொட்டுப் போகும்

    —ஆர்.எஸ்.மணி

    நாம் பிறந்ததிலிருந்து நம்மை எவ்வளவோ விஷயங்கள் ஒவ்வொரு கணத்திலும் தொட்டுச் செல்கின்றன. அவைகளில் சிலவற்றைக் கவனிக்கிறோம். சிலவற்றைப் பார்க்காமல் விட்டுவிடுகிறோம்.

    எதை நாம் கவனிக்கிறோம் என்பது, வாழ்க்கையில் எதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்திருக்கிறது.

    அதோடு மட்டுமல்ல. எந்த ஒரு பொருளையும் பார்க்கும்போது பார்ப்பவர் எல்லோருக்கும் ஒரே விதமான எண்ணம் எழுவதில்லை. ஒவ்வொருவர் மனதிலும் வேறுபட்ட எண்ணங்கள் எழும். கலைஞன் கலைக்கண்ணோடு பார்ப்பான். வியாபாரி விலைக்கண்ணோடு பார்ப்பான்.

    அண்ணாகண்ணனையும் பல பொருட்களும் காட்சிகளும் உணர்வுகளும் தொட்டுச் சென்றிருக்கின்றன. அவற்றில் சிலவற்றை அழகாகத் தொகுத்து ஒரு கவிதையாகப் புனைந்திருக்கிறார். என்னைத் தொட்ட அந்தக் கவிதையை இசையில் அமைத்து இங்கு இட்டிருக்கிறேன்.

    —ஆர்.எஸ்.மணி
    (கேம்ப்ரிட்ஜ், ஆன்டேரியோ, கனடா)

    காணொளி: http://youtu.be/JgArHotZTPE

    திரு.அண்ணாகண்ணனுடைய கவிதை:

     

    “தொட்டுப் போகும் – எனைத் தொட்டுப் போகும்”

    குரல் மின்னிடும் இசை உன்னதம்
    உரு எங்கிலும் உயிர் பொங்கிடும்
    கரு வண்டினம் வலம் வந்திடும்
    அரு மலர்வனம் அதன் நறுமணம்

    தொட்டுப் போகும் – எனைத் தொட்டுப் போகும்

    அருள் தூறிடும் அமுதூறிடும்
    பொருள் மீறிடும் புதையல் தடம்
    தலையாட்டிடும் மழலை மனம்
    தாலாட்டெனும் தனி மந்திரம்

    தொட்டுப் போகும் – எனைத் தொட்டுப் போகும்

    சிலை சித்திரம் நடை நாடகம்
    ஒளிர் கீர்த்தனம் ஒயில் நர்த்தனம்
    உரு மாறிடும் நிழல் ஓவியம்
    கலை மேவிடும் மலை மாருதம்

    தொட்டுப் போகும் – எனைத் தொட்டுப் போகும்

    கரை யாவையும் கரைத்தே எழும்
    சிறை யாவையும் மறுத்தே எழும்
    குறை யாவையும் அறுத்தே எழும்
    நிறை அன்பெனும் நிஜ சுந்தரம்

    தொட்டுப் போகும் – எனைத் தொட்டுப் போகும்

    விரல் தள்ளினும் விழி துள்ளிடும்
    சுழல் காற்றிலும் சுடர் பூத்திடும்
    மனம் ஆடிடும் குடை ராட்டினம்
    களி காதலின் துளிப் பாற்கடல்

    தொட்டுப் போகும் – எனைத் தொட்டுப் போகும்

    ——————————————————————————-

    Share
  • தமிழ் இணையத்தில் புதிய அலை

    முனைவர் அண்ணாகண்ணன்

    (annakannan@gmail.com)

    (மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மலாயா பல்கலையில் நடைபெற்ற 12ஆவது தமிழ் இணைய மாநாட்டில் வாசிக்கப்பெற்றது)

    தமிழ் இணைய வெளியின் பரப்பும் அடர்த்தியும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன; ஆழம் கேள்விக் குறியே ஆயினும், இதன் முக்கியத்துவம் பெருகி வருகின்றது.

    இணைய இதழ்களின் பரிணாம வளர்ச்சி

    இணையப் பக்கங்கள், இணைய இதழ்களாக வளர்ந்தன; இணைய இதழ்கள், ஒற்றைத் தன்மையிலிருந்து, பன்முகத்தன்மை கொண்டவையாக மாறின. அத்துடன் நில்லாமல், வலைப்பதிவுகளும் நுண் வலைப்பதிவுகளும் பிறந்தன. இந்த நுண் வலைப்பதிவுகள் பின்னர், சமூக ஊடகங்கள் எனப் பெயர் பெற்றன. இவை, தனி மனித இதழ்கள் எனக் கருதத் தக்கவை. எழுத்து மட்டுமே பெரும்பான்மையாக இருந்த இணையத்தில், நிழற்படங்களும் ஒலி – ஒளித் தரவுகளும் பெருகத் தொடங்கி, பல்லூடக உள்ளடக்கங்கள் வளர்ந்து வருகின்றன. இந்தப் பின்னணியில் இணைய இதழ்களை விரிவான கண்ணோட்டத்துடன் வரையறுத்தல் வேண்டும்.

    எவர் ஒருவர் உள்ளடக்கத்தை உருவாக்குகின்றாரோ, அவர் உள்ளடக்க உற்பத்தியாளர் எனக் கருதத் தக்கவர். இவற்றைப் பெறுவோர், பயனர் ஆவர். இந்த உள்ளடக்கம் வெளியாகும் இடங்கள், இணையத் தளங்களாகவோ, இணைய இதழ்களாகவோ, வலைப்பதிவுகளாகவோ, சமூக ஊடகங்களாகவோ அமைந்திருக்கலாம். பெயரளவுக்கு இவை வெவ்வேறாக இருப்பினும் இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஒன்றின் தொடர்ச்சியாக, இன்னொன்று தோன்றியவை. எனவே இவை அனைத்தையும் உள்ளடக்க வெளி எனக் குறிப்பிடுவது பொருந்தும்.

    தமிழ் இணையத்தில் புதிய அலை

    இந்தியாவில் உள்ள இணையப் பயனர்களின் எண்ணிக்கை, 15 கோடியாக உள்ளது. இது, 2013 இறுதிக்குள் 18 கோடியாக வளரக் கூடும் (2013 India Internet outlook – http://techcircle.vccircle.com/2013/02/01/2013-india-internet-outlook/). மேலும், ஃபேஸ்புக் தளத்தின் இந்தியப் பயனர்களின் எண்ணிக்கை, 7.8 கோடியாக உயர்ந்துள்ளது (Facebook India Active Users Up 50% To 78M In Q1-2013 – http://www.medianama.com/2013/05/223-facebook-india-78-million-users/). இந்தியப் பயனர்களின் எண்ணிக்கையில் சரி பாதிக்கும் மேல், ஃபேஸ்புக் தளத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இது, சமூக வலைத்தளங்களின் மீது மக்களுக்கு உள்ள ஈர்ப்பினைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது. இதில் தமிழர்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்க அளவு உள்ளது.

    இணைய வெளியில் பல்வேறு தேசிய, அரசியல், சமூக, தொழில், கல்விப் பின்புலங்களைக் கொண்ட படைப்பாளர்களும் பயனர்களும் தொடர்ந்து தோன்றிய வண்ணம் உள்ளனர். இதன் நல்விளைவாக, தமிழுக்குப் புதிய புதிய ஆக்கங்கள் அதிகம் கிடைத்து வருகின்றன. இது வரை வெளிப்படாத புதிய பார்வைகளும் அனுபவங்களும் நுணுக்கமான கருத்துகளும் பதிவாகி வருகின்றன. அன்றாட உலக நடப்புகளும் செய்திகளும் அவற்றின் மீதான விமர்சனங்களும் உடனுக்குடன் பதிவாகின்றன.

    தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள், கலைஞர்கள், அரசியல் புள்ளிகள் எனப் பலரும் இணையப் பரப்பிற்கு வந்துள்ளதோடு, தங்களுக்கெனத் தனித் தனி வலைப்பதிவுகளையும் இணையத்தளங்களையும் உருவாக்கி வருகின்றனர். இணையப் பரிச்சயம் இல்லாத மூத்த எழுத்தாளர்கள் பலருக்கும் அவர்கள் சார்பில் யாரேனும் அவர்களின் ஆக்கங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள். இது, இணையத்தில் தங்கள் இருப்பை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம், தமிழ்ப் படைப்பாளர்களுக்கு ஏற்பட்டிருப்பதை எடுத்துக் காட்டுகிறது.

    பிரபலமானவர்கள் மட்டுமின்றி, இதுவரை வெளியுலகிற்கு வராத பெண்களும் மாணவர்களும் எளிய பணிகளில் இருப்போரும் இணைய வெளிக்கு வந்துள்ளனர். இந்த வகையில் தமிழ் இணையம், இது வரை காணாத புதிய பயனர்களையும் புதிய துறைகளையும் காணத் தொடங்கியுள்ளது. இது, பல்வகையான பரிமாணங்களுடன் நாளும் விரிந்து வருகிறது.

    இலவசம் என்னும் கவர்ச்சி

    தமிழ் இணையப் பயனர்களிடையே இவ்வளவு ஆர்வமும் துடிப்பும் எழுந்துள்ளதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று, இணையத் தளங்களில் இலவசமாகக் கணக்குத் தொடங்கி, எவ்வளவு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்ற வாய்ப்பு.

    வலைப்பதிவுகள் தோன்றிய காலத்தில் பயனர்கள் பலரும் அதில் தங்களுக்கெனத் தனி வலைப்பதிவுகளை உருவாக்கினர். ஒருவரே பல வலைப்பதிவுகளை உருவாக்கினார். அந்த அலை, இப்பொழுது அப்படியே சமூக ஊடகங்களில் எழுந்துள்ளது. இணையத்திற்குப் புதிதாக அறிமுகமாகும் ஒருவர், மின்னஞ்சல் கணக்குத் தொடங்குவதோடு, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களிலும் கணக்குத் தொடங்குகின்றனர். செல்பேசிகளில் படங்கள் எடுத்து, அவற்றை ஃபிளிக்கர் போன்ற புகைப்படத் தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். விழியங்கள் எடுப்போர், அவற்றை யூடியூப் போன்ற விழியத் தளங்களில் வெளியிடுகின்றனர். இவ்வாறாக, எழுத்து, புகைப்படம், விழியம் ஆகிய கூறுகளில் பல்லூடக உள்ளடக்கம், இணையத்தில் பெரும் பாய்ச்சலைக் கண்டு வருகின்றது.

    புகழ் வேட்கை

    தமிழ் இணையப் பயனர்களைத் தொடர்ந்து உந்திச் செலுத்தும் முக்கிய விசைகளுள் ஒன்று,, அவர்களின் புகழ் வேட்கை. இணையத்தில் கிடைப்பது 15 நிமிடப் புகழ் என முன்பு எழுத்தாளர் சுஜாதா குறிப்பிட்டார். (“இப்போது புதிதாக பிலாக்ஸ் என்று வந்திருப்பது ஒரு விதத்தில் சின்ன வயசில் நாங்கள் எல்லோரும் நடத்திய கையெழுத்துப் பத்திரிகையின் மறுவடிவம்தான். ‘இதோ பார் என் கவிதை’ ‘இதோ பார் என் கருத்து’ ‘இதோ பார் உலகுக்கு என் உபதேசம்’ என நானும் இருக்கிறேன் நண்டுவளையில் என்று. ஒவ்வொரு தனிமனிதனும் தன்னைப் பிரகடனப்படுத்த கைகளைக் குவித்து ஏதோ ஒரு திசையில் குரல் கொடுத்துவிட்டு, யாராவது பதில் தருகிறார்களா என்று அவரவர் பதினைந்து நிமிஷப் புகழுக்குக் காத்திருப்பதுதான் இது! பிரபஞ்சத்தில் வேற்று கிரகங்களில் உயிரினங்கள் இருக்கிறதா என்பதை இப்படித்தான் தேடுகிறார்கள்” – சுஜாதா – http://agaramuthala.blogspot.in/2004/08/blog-post_24.html) அது, இப்போது, ஓரிரு நிமிடங்கள் தாக்குப் பிடிப்பதே அரிதாக இருக்கிறது. ஏனெனில் நொடிக்கு நொடி, புதிய புதிய உள்ளடக்கங்கள் பெருகி வரும்போது, ஒவ்வொன்றையும் ஆழ்ந்து படிப்பதற்குப் பயனர்களுக்கு நேரமும் பொறுமையும் இருப்பதில்லை. எனவே, அந்தந்தப் படைப்பாளர்களின் புகழ் ஈட்டும் அவகாசம் குறைந்துவிடுகிறது.

    ஆயினும், தான் கவனிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடையே வலுப்பெறுகிறது. இதுவே, அவர்கள் இணையத்தில் மிக அதிகமான நேரத்தைச் செலவிடத் தூண்டுகிறது. நட்பையும் உறவையும் புதிய செய்திகளையும் வாய்ப்புகளையும் தேடி வருகின்ற பயனர்கள், இயல்பாகவே, புகழை விரும்புகின்றனர். தாங்கள் கவனிக்கப்பட வேண்டும் என்பதில் இவர்களுக்கு உள்ள ஆர்வம், நாளுக்கு நாள் உச்சமடைந்து, ஒரு கட்டத்தில் இணைய வெளிக்கு இவர்களை அடிமையாக்கிவிடுகிறது.

    பயனராகத் தன் பயணத்தைத் தொடங்கும் ஒவ்வொருவரும் தாங்களே படைப்பாளராகப் பரிணமிக்கின்றனர். இதன் மறுபக்கமாக, உள்ளடக்கம் தீர்ந்துவிடுகிற நேரத்திலும் எதையாவது வெளியிட வேண்டிய உந்துதல் இவர்களுக்குப் பிறக்கிறது. இது, ஆழமற்ற உள்ளடக்கத்துக்கு இட்டுச் செல்வதோடு, மொக்கைகளும் மரண மொக்கைகளும் பின்னூட்டக் கும்மிகளுமாக வளர்ச்சி அடைகிறது.

    இணையத்திலிருந்து அச்சுக்கு

    அச்சில் வெளியானவற்றை இணையத்தில் ஏற்றுவது, ஒரு புறம் நடந்துகொண்டிருக்கிறது. அதே நேரம், இணையத்தில் வெளியானவற்றிலிருந்து தேர்ந்தெடுத்து, அச்சில் வெளியிடுவதும் பெருகி வருகிறது. ஆனந்த விகடன், குமுதம், குங்குமம், பாக்யா உள்ளிட்ட பல்வேறு அச்சிதழ்களில் இந்தப் போக்கினைக் காணலாம். அத்துடன் இணையத்தில் எழுதத் தொடங்கிய பலரும், அச்சிதழ்களிலும் எழுதி வருகின்றனர். மேலும் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் இணைய இதழ்களிலும் பலர் வெளியிடும் கருத்துகள், பரபரப்பை ஏற்படுத்துவதோடு, அச்சிதழ்களில் அவை செய்திகளாக இடம் பிடிக்கின்றன. இவை, இணையத்தளங்கள், சமுதாயத்தின் மீது செலுத்தும் தாக்கத்திற்கு ஒரு சான்றாகும்.

    குறையும் நம்பகத்தன்மை

    இணையப் பரப்பில் வெளியாகும் ஆக்கங்கள், பெரும்பாலும் தாங்கள் முன்வைக்கும் செய்திக்கும் தகவலுக்கும் உரிய சான்றுகளை முன்வைப்பதில்லை. அந்தச் செய்தியை வழங்கிய செய்தியாளர் யார், முகாமை நிறுவனம் எது, தகவலைத் தெரிவித்தவர் யார்? போன்ற அடிப்படைத் தகவல்கள் கிடைப்பதில்லை. எனவே, யூகத்தின் பேரிலும் கற்பனையாகவும் செவிவழி அறிந்தவையாகவும் செய்திகள் வெளியாகும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளன. நடுநிலைத் தன்மையுடன் செய்திகளை அணுகாமல், ஒரு செய்தியில் தங்களுக்குத் தேவையான பகுதியை மட்டும் வெளியிடும் வாய்ப்பும் உள்ளது. இதனால் வதந்திகள் பரவிடவும் சமூக இயல்பு நிலை கெடுவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன.

    அவதூறுகள் – தாக்குதல்கள்

    இணைய வெளியில் அவதூறுகளுக்கும் தாக்குதல்களுக்கும் அதிகப் பார்வையாளர்கள் கிடைக்கின்றனர். எனவே, பிரபலம் அடைய வேண்டும் என விரும்புவோரும் அடைந்த பிரபலத்தைத் தக்கவைக்க விரும்புவோரும் இவற்றில் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இது, பல்வேறு குழுக்களை உருவாக்கி வருவதோடு, நேரத்தைப் பெருமளவு வீணடிப்பதாகவும் மன உளைச்சலைப் பெருக்குவதாகவும் அமைகின்றது.

    கருத்துச் சுதந்திரத்துக்குப் பாதிப்பு

    இணையப் பரப்பில் வெளியாகும் பல்வகை ஆக்கங்களைப் பலரும் மவுனமாகத் துய்ப்பதோடு நின்றுவிடுவர். துய்த்த அனைவரும் பின்னூட்டம் இடுவதில்லை. ஆயினும் பயனருள் சிலர், சற்று சுதந்திர உணர்வுடன் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். சர்ச்சைக்கு உரிய ஆக்கங்களில் கார சாரமான பின்னூட்டங்கள் வரத் தொடங்கி, பின்னர் அது, பரவத் தொடங்குகிறது. இதன் நீட்சியாக, தரக் குறைவான, பொருத்தமில்லாத பின்னூட்டங்கள் மட்டுமின்றி, எரித (ஸ்பாம்) மறுமொழிகளும் மிகுதியாக வருகின்றன. இதனால், இணைய வெளியில் பின்னூட்டங்கள் பெரும்பாலும் மட்டுறுத்தப் பெறுகின்றன. மேலும் பல இணையத்தளங்களில் மறுமொழி இடும் வாய்ப்பு, முடக்கப்பெற்றுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள், இணைய இதழ்களில் கருத்துப் பரிமாற்றத்தை மட்டுப்படுத்துகின்றன. மேலும் வெளிப்படைத்தன்மை குறைந்து, வாசகர்களின் சுதந்திரம் குறைந்துவிடுகிறது. இணைய இதழ்கள், இருவழிப் பாதையாக இல்லாமல், ஒருவழிப் பாதையாகக் குறுகி வருகின்றன.

    பொதுவான இணைய இதழ்களிலும் பிறரின் வலைப்பதிவுகளிலும் பக்கங்களிலும் கருத்துகளைப் பதிவதற்குக் கட்டுப்பாடுகள் உள்ளன. எனவே, ஒருவர் தன் தளத்தில், வலைப்பதிவில், பக்கத்தில் தாம் விரும்புவதைப் பதிய முனைகின்றார். ஆனால், இங்கும் எதை வேண்டுமானாலும் எழுதலாம், பகிரலாம் என்ற நிலை இல்லை. பொய்யாகவும் அவதூறாகவும் அடுத்தவர் மனம் புண்படும் வகையிலும் பதிவாகின்ற உள்ளடக்கங்களை வெளியிடுவோர், வழக்குகளைச் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கென இந்தியாவின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் 66A என்ற திருத்தம் மேற்கொள்ளப்பெற்றது. இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தவண்ணம் உள்ளன.

    அறிவுச் சொத்துகளுக்கு ஆபத்து

    இணைய இதழ்களில் செய்திகள் தொடங்கி, பல்வகை படைப்பிலக்கியங்களும் புகைப்படங்களும் பல்லூடக உள்ளடக்கங்களும் இடம்பெற்று வருகின்றன. இவற்றைத் துய்க்கும் பயனர்கள், தங்கள் தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் அவற்றைப் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், மூலத் தரவுகளை எங்கிருந்து பெற்றோம் என்ற அடிப்படைத் தகவலைக் கூட அறிவிக்காமல், அவரவர் விருப்பத்துக்கு வெளியிடுகின்றனர். சிலர், அவற்றைத் தங்கள் பெயரிலேயே வெளியிடுவதும் நிகழ்கிறது. இதனால், இணையப் படைப்பாளிகளின் அறிவுச் சொத்துகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

    போலி அடையாளங்கள்

    இணையத்தில் பொய்யான பெயருடன், படத்துடன், போலி அடையாளத்துடன் வலம் வருவோர், அதிகரித்து வருகின்றனர். பெண்களின் பெயர்களில் / படங்களில் கணக்குத் தொடங்குவோர் பலர். திரை நட்சத்திரங்களின் பெயர்களில் உள்ள கணக்குகள் பலவும் அவர்களுடையவை அல்ல. இது தொடர்பாகப் பலரும் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். பண மோசடி உள்பட பல்வேறு குற்றங்களும் இணையத்தில் நடைபெற்று வருகின்றன. எனவே, பயனர்கள், இத்தகைய விவகாரங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தங்கள் தனிப்பட்ட விவரங்களை அளிப்பதற்கு முன், அவர்கள் நம்பகமானவர்களா என உறுதி செய்துகொள்ள வேண்டும்.

    பயனர்களின் கவனத்திற்கு

    ஆண்டுதோறும் மாதம்தோறும் நாள்தோறும் பொழுதுதோறும் இணையப் பயனர்கள் அதிகரித்து வருகின்றனர். முழு மக்கள் தொகையும் இணையத்தில் தங்களை இணைத்துக்கொள்ளும் காலம், வெகு தூரத்தில் இல்லை. இலவச மடிக்கணினிகளும் இணையக் கட்டணங்கள் குறைப்பும் இணைய வேகம் அதிகரித்து வருவதும் சமூகத்தில் பெரும் மாற்றங்களை விரைவில் நிகழ்த்த உள்ளன.

    இந்தச் சூழ்நிலையில், இணையப் பயனர்களின் உரிமைகளையும் கடமைகளையும் பொறுப்புணர்வையும் எச்சரிக்கை உணர்வையும் அவர்களுக்கு உணர்த்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. செய்யத் தக்கவை, செய்யத் தகாதவை ஆகியவற்றில் அவர்களுக்குத் தெளிவு தேவை. தங்கள் செயல்பாடுகள் ஏற்படுத்தக் கூடிய விளைவுகளை இணையப் பயனர்கள் அவசியம் உணர வேண்டும். இணையத்தில் தங்கள் நேரத்தை வீணடித்துவிடாமல், அதே இணையத்தைக் கொண்டு, தங்கள் நேரத்தைச் செம்மையாகப் பயன்படுத்துவது எப்படி என்பதை அவர்கள் கற்க வேண்டும்.

    இத்தகைய பண்புகள் கொண்ட தமிழர்கள், தமிழ் இணையத்திற்கு அளப்பரிய பங்காற்றிட முடியும். அதன் மூலம், தமிழ் மொழியும் தமிழ்ச் சமூகமும் புதிய உயரங்களை எட்ட முடியும். உலகம் முழுவதும் பெரும் மறுமலர்ச்சியையும் உயிரோட்டத்தையும் தோற்றுவிக்க முடியும். இவை அனைத்தும் அலை அலையாய்ப் புறப்படும் புதிய பயனர்களின் கைகளிலேயே உள்ளது.

    Share