உண்டுண்டு
அண்ணாகண்ணன்
பெண்டுண்டு மகவுண்டு பேருண்டு சீருண்டு உண்டுண்டு வண்ணம் உண்டு
செண்டுண்டு வண்டுண்டு சீருண்டு சாறுண்டு உண்டுண்டு சாரம் உண்டு
இதழுண்டு சுவையுண்டு இடையுண்டு இசைவுண்டு உண்டுண்டு இன்பம் உண்டு
இதமுண்டு பதமுண்டு விதமுண்டு நிதமுண்டு உண்டுண்டு மோகம் உண்டு
ஆணுண்டு பெண்ணுண்டு தோளுண்டு துணையுண்டு உண்டுண்டு ஆசை உண்டு
வானுண்டு மண்ணுண்டு வளமுண்டு நலமுண்டு உண்டுண்டு மேன்மை உண்டு
உரமுண்டு திறமுண்டு உளமுண்டு திடமுண்டு உண்டுண்டு வேகம் உண்டு
கரமுண்டு களமுண்டு கவியுண்டு கனமுண்டு உண்டுண்டு கானம் உண்டு
வரவுண்டு செலவுண்டு தவமுண்டு வரமுண்டு உண்டுண்டு யோகம் உண்டு
இரவுண்டு பகலுண்டு இருளுண்டு ஒளியுண்டு உண்டுண்டு தாகம் உண்டு
பஞ்சுண்டு தீயுண்டு முள்ளுண்டு மலருண்டு உண்டுண்டு பாடம் உண்டு
நெஞ்சுண்டு நெறியுண்டு நிழலுண்டு நிஜமுண்டு உண்டுண்டு நீதி உண்டு
வினையுண்டு விளைவுண்டு விழியுண்டு விடிவுண்டு உண்டுண்டு வெற்றி உண்டு
முனையுண்டு கணையுண்டு முதலுண்டு பதிலுண்டு உண்டுண்டு காலம் உண்டு
(பொதிகை தொலைக்காட்சியில் 05.01.2014 அன்று மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பான
’கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்’ நிகழ்ச்சியில் வாசிக்கப்பெற்றது)
தரமுண்டு, சுவையுண்டு
தங்கள் கவிதையில் செறிவுண்டு..
அதனால்,
உண்டு உண்டு
என்
வாழ்த்தும் உண்டு…!
தேனுண்டு ,சுவையுண்டு ,லயமுண்டு , திறமுண்டு
சுகமுண்டு , அழகுண்டு,நடையுண்டு ,பலனுண்டு ……..
அன்பு அண்ணா கண்ணன் மிக அழகான கவிதை மிகவும் பெருமையடைகிறேன்
வாழ்த்துகள்
இந்தப் பாடலை என் குரலில் இங்கே கேட்கலாம் – https://www.youtube.com/watch?v=ywcu2BBvcwo&t=3s