இலக்கியம்கவிதைகள்

குறவன் பாட்டு-24

குறத்தி நகரப்பெண் உரையாடல்

 

நகரப்பெண்:

கோடைக்கு இதமாய்க் குளிரூட்டப்பட்டு, இஞ்சிச்

சுவையேற்றப்பட்ட மோர்கொண்டு வரட்டுமா குறத்தி?

குறத்தி:

ஏழைக்கு இறங்கும் இறைவனைப் போல,

என்தாகம் தீர்க்கும் அன்பானதாயே, வணக்கம்!                                                                                   199

நகரப்பெண்:

என்னில்லம் தேடி வருவோரின் தாகம்,

தீர்ப்பதென் கடமை, மனமார மோர்பருகு பெண்ணே!

குறத்தி:

இன்முகம் கொண்டு, இஞ்சிமணம் கொண்டு,

வஞ்சமனம் இன்றி மோர் தந்ததால்,

என் தாகம், கவலை தீர்ந்ததம்மா!                                                                                                 200

நகரப்பெண்:

காய் என்ன காயோ? சுவைக்கக்

கனி என்ன கனியோ? சூட

மலர் என்ன மலரோ கொண்டுவந்தாய்?

குறத்தி:

சமைக்கச் சுவையான கோவைக்காய் கொண்டுவந்தேன்,

வனக்கத் தோதாகச் செங்கீரை சுமந்துவந்தேன்,

வற்றலுக்கு ஏற்ற சுண்டைக்காய் கொண்டு வந்தேன்,

விற்றிடல் எளிதென்று விரும்பிக் கொண்டு வந்தேன்!

 

மணக்கும் மாம்பழங்கள் மறக்காமல் எடுத்துவந்தேன்!

இனிக்கும் நெல்லிக்கனிகள் உங்களுக்குப் பிடிக்குமென,

இடையில் வைத்துக் கட்டி வந்தேன்!

 

மாம்பழம் போல் நிறம்கொண்டு, சமயத்தில்

அதனை விஞ்சும் சுவை கொண்டு,

மிளகைப் போல விதை கொண்டு ,

மலிவான விலை கொண்ட பப்பாளி கொண்டு வந்தேன்!                                                           201

 

நகரப்பெண்:

இடையில் இருக்கும் நெல்லிக் கனியை,

முதலில் முழுதாய் எடுத்துத் தந்திடு!

 

சிறு நெல்லிக் கனி அளவு,

பெரு உருவம் பெற்றிருக்கும் சுண்டைக்காயை,

இரு கைகள் இணைத்தள்ளி இட்டுவிடு!

 

கோவைக் காயின் வாசம் எனது,

கணவருக் கென்றும் பிடிக்காது, எனைக்

கோபிப்பாரே அதை நான் சமைத்தால்,

அதனால் எனக்கது வேண்டாம் குறத்தி!

 

வனக்கத் தோதாய் இருக்கும் கீரையில்,

எனக்கு எட்டுக் கட்டுகள் கொடுத்திடு!

 

உடனே அறுத்துச் சுவைக்கும் நிலையில்,

உள்ள மாம்பழங்கள் மூன்று கொடுத்திடு!

நாளை மறுநாள் பழுக்கும் நிலையில்,

இருக்கும் மாம்பழம் இரண்டு கொடுத்திடு!

 

தப்பாமல் உண்ண வேண்டும் என்றாலும்,

பப்பாளிப் பழம் கொண்ட பெரும்சுவையை,

எப்போதும் விரும்பாத பிள்ளைகளால்,

இப்போது ஒன்று மட்டும் போதும்பெண்ணே!                                                                                       202

Print Friendly, PDF & Email
Share

Comments (2)

 1. Avatar

  குறத்தி கூடையில்
  காய் கனிகள்..
  நமக்கு-
  நல்ல கவிதைக் கனி…!

 2. Avatar

  @@திரு.செண்பக ஜெகதீசன்

  பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்தியமைக்கு மிக்க நன்றி நண்பரே!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க