‘மறு வாசிப்பில் தேவன்’: கிரேசி மோகன்

2

முனைவர் அண்ணாகண்ணன்

இலக்கிய வீதியும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்சும் இணைந்து ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ என்ற தலைப்பில் சென்னை, தியாகராய நகர், கிருஷ்ண கான சபாவில் மாதந்தோறும் இலக்கிய நிகழ்ச்சியை நடத்தி வருகின்றன. அந்த வரிசையில் 02.05.2014 அன்று ‘மறு வாசிப்பில் தேவன்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் கிரேசி மோகன் உரையாற்றினார். மிக இயல்பாகவும் எளிமையாகவும் நகைச்சுவை மிளிர, அவரது உரை அமைந்திருந்தது.

Ilakkiyaveedhi2_02052014

“எனக்கு இலக்கியம் எல்லாம் தெரியாது; தெரிந்ததெல்லாம் கலக்கியம்தான்” என்றே பேச்சைத் தொடங்கினார். அவரது உரையிலிருந்து ஒரு சிறிய பகுதி இங்கே:

“தேவனின் படைப்புகளிலிருந்து தாக்கம் பெற்றே இன்றும் நான் எழுதி வருகிறேன். அவருடைய கதை ஒன்றில், தன்னிடம் கண் ஆப்பரேஷன் செய்துகொண்ட ஒருவரிடம் டாக்டர் ரெண்டு விரலைக் காட்டி, இது எவ்வளவு என்பார்; அவர் ரெண்டு என்பார்; ரெண்டாயிரம் ரூபாய் கட்டணம் என்பதையும் அதில் மறைமுகமாகச் சுட்டுவார்; இது போன்ற இயல்பான நகைச்சுவையைத் தேவனிடம் காணலாம். அவரைத் தமிழின் பி.ஜி.வுட்ஹவுஸ் (P.G.Wodehouse) என்பார்கள்; நான், பி.ஜி.வுட்ஹவுஸை இங்கிலாந்தின் தேவன் என்பேன்.

“அந்தக் காலத்து நடைமுறைகளைத் தேவன் எழுத்திலிருந்து நிறையக் கற்க முடிகிறது. தேவனின் அப்பா மறைந்த போது, ஆசாரம் மிகுந்த அவர் குடும்ப நண்பர் ஒருவர், தேவனிடம் துக்கம் விசாரிக்கவில்லை; விசாரித்தால் அந்தத் தீட்டு ஒட்டிக்கொள்ளும்; குளிக்க வேண்டும் என்பதால், தேவன் வரும்போதெல்லாம் ஓடி ஒளிந்திருக்கிறார். அவரைத் தேவன் ஒரு முறை நிறுத்தி, செத்துப் போனது எங்க அப்பாதான்; நான் இல்லை என நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறார்.

Ilakkiyaveedhi1_02052014

“தேவன், பிராமணத்துவமாக எழுதினார் எனச் சிலர் விமர்சிக்கிறார்கள்; அது, முழு உண்மை இல்லை; அவர், முதலியார் மொழியிலும் இதர பிரிவினரின் மொழியிலும் கூட எழுதியிருக்கிறார். அவர், அய்யராக இருந்தாலும் அய்யங்கார் பாத்திரங்களைச் சிறப்பாக எழுதியிருக்கிறார்; அய்யங்கார் பரிபாஷைகளை அவரிடமிருந்தே நான் கற்றேன். அப்படியே பிராமண நடையில் அவர் எழுதியிருந்தாலும் அது ஒன்றும் தவறு இல்லை. ஏனெனில் அது அவரோடு உடன் பிறந்தது. என்னை ரிக்‌ஷாக்காரன் வேடத்தில் நடிக்க வைத்தாலும் என்னால் பிராமண பாஷையில்தான் பேச முடியும்.

“அவ்வை சண்முகியில் முதலியார் பாத்திரத்துக்காகத் தேவனின் கதைகளைப் படித்துக் குறிப்பெடுத்துக்கொண்டேன். சதிலீலாவதி படத்திற்கு முதலில் என் மொழியில் வசனங்களை எழுதிவிட்டு, அதன் பிறகு கோவை சரளாவுடன் உட்கார்ந்து, அதைக் கொங்குத் தமிழுக்கு மாற்றினேன். அது போல், தெனாலி படத்திற்கு என் மொழியில் வசனங்களை எழுதிவிட்டு, அதன் பிறகு அப்துல் ஹமீதுடன் உட்கார்ந்து, ஈழத் தமிழுக்கு மாற்றினேன்.

Ilakkiyaveedhi3_02052014

“நான் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த சைதை துரைசாமி கலந்துகொண்டார். அவரிடம் பேசும்போது, நான் உதய சூரியனையே பார்ப்பதில்லை என்றேன்; ஏனென்றால் நான் எழுந்திருப்பதே 9 மணிக்குத் தானே. அடுத்து, நானும் இரட்டை இலை தான் என்றேன். அவர் வியந்து பார்த்தார். வெற்றிலை, புகையிலை என்றேன்.

“தேவனின் எழுத்துகளைத் தொடர்ந்து படியுங்கள். சிரித்து மகிழுங்கள்.”

இவ்வாறாகக் கிரேசி மோகன் பேசினார்.

அவரது ஒரு மணி நேரப் பேச்சின் ஒரு சிறிய பகுதியை என் நினைவில் பதிந்தவாறு இங்கே அளித்துள்ளேன். கிரேசி மோகன், சந்தர்ப்பத்துக்கு ஏற்ப உடனடி நகைச்சுவைகளும் உதிர்த்தார். “தேவன் படைப்புகளின் பட்டியலை நீங்கள் சொல்கிறீர்களா? நான் படிக்கட்டுமா?” என முன்னிலை வகித்த எழுத்தாளர் ஜே.எம்.சாலி கேட்க, நீங்களே சொல்லுங்க; கேட்கறது ஈஸியா இருக்கு என்றார். முனைவர் ப.சரவணன் தொகுப்புரை ஆற்றுகையில், கிரேசி மோகனின் சிறப்புகளை எடுத்துரைத்தார்; அடுத்துப் பேச வந்த கிரேசி மோகன், சரவணன் நன்றாக என்னைப் பற்றிச் சொன்னார்; அவையெல்லாம் நான் எழுதித் தந்தவை எனப் பொய்யாக வேடிக்கை செய்தார். அப்பப்ப தண்ணி போடுவேன் என்றபடி, இடையிடையே தண்ணீர் குடித்தபடியே பேசினார். இந்த நிகழ்ச்சிக்கு இலக்கிய வீதி இனியவன் அழைத்தபோது, எவ்வளவு நேரம் பேச வேண்டும் என மோகன் கேட்க, ஒரு மணி நேரம் என இனியவன் சொல்லியிருக்கிறார். அதற்கு, மேடை நாடகங்களில் நாங்கள் இருபது பேர் சேர்ந்து ஒரு மணி நேரம் பேசுவோம்; இங்கே நான் ஒருவனே ஒரு மணி நேரம் பேசணுமா எனக் கேட்டதாகச் சொன்னார். இப்படியாக இயல்பாக அவையைச் சிரிக்க வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் குமாரகிருஷ்ணன், இலக்கிய வீதியின் அன்னம் விருதினைப் பெற்றார். அவர் தன் உரையில், பரமார்த்த குரு கதைகளைத் தேவி வார இதழில் 100 வாரங்கள் எழுதிய அனுபவத்தை எடுத்துரைத்தார். குரு ஒருவர், சிஷ்யர்கள் ஐந்து பேர் என்ற வடிவில் சிஷ்யர்களின் முட்டாள்தனங்களைப் புதிது புதிதாக யோசித்து, தானே முட்டாள் ஆனதையும் கூறினார். முட்டாள்தன யோசனைகளை நண்பர்களிடம் கேட்க, அவர்கள் சமோசா வாங்கித் தரச் சொல்ல, இவரும் வாங்கித் தந்துள்ளார். சாப்பிட்ட பிறகு யோசனையைச் சொல்லும்படி கேட்க, இப்போதுதானே கேட்டிருக்கிறாய், யோசித்துச் சொல்கிறோம் என அவர்கள் சொன்னதைப் பகிர்ந்தார்.

கிரேசி மோகன் நகைச்சுவையில் மட்டுமின்றி, வெண்பா, சந்தப்பா எழுதுவதிலும் அவர் வல்லவர். வல்லமை மின்னிதழில் திருமால் திருப்புகழ் என்ற தலைப்பில் தினந்தோறும் அழகிய சந்தப் பாடலை எழுதி வருவது, நாம் அனைவரும் அறிந்ததே. புகழின் வெளிச்சம் எவ்வளவு இருந்தாலும் குழந்தையைப் போல் உற்சாகத்துடன் பழகுகிறார். என் தமிழாசிரியர் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்களிடம் அவர் வெண்பா கற்றதால், என்னை அவரது சகா (colleague) எனக் கூறினார்.

கிரேசி மோகனின் கலகலப்பான பேச்சினைக் கேட்க, அரங்கு நிறைய அன்பர்கள் திரண்டு, மனம் நிறைய மகிழ்ச்சியுடன் கரவொலி எழுப்பினர்.

படங்கள்: அண்ணாகண்ணன்

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “‘மறு வாசிப்பில் தேவன்’: கிரேசி மோகன்

  1. அன்பின் திரு அண்ணாகண்ணன்,

    நிகழ்ச்சியை நேரில் கண்டது போல நிறைவாக உள்ளது. நல்லதொரு பகிர்விற்கு நன்றி. சகோதரர் கிரேசி மோகன் அவர்களின் நிகழ்ச்சி சுவையாக இருக்கும் என்பதை அறிந்திருந்தாலும், குறிப்பிட்ட இந்த நிகழ்ச்சி, ‘வாய் விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்’ என்பது போல அனைவரையும் மனமார சிரிக்க வைத்து அனுப்பியிருக்கிறார் என்று புரிகிறது! பாராட்டுகள் திரு கிரேசி மோகன் சார். 

    அன்புடன்
    பவள சங்கரி

  2. மிக்க நன்றி! கட்டுரை வடிவில் இருந்தால், முழுப் பேச்சையும் இங்கிடலாமே?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *