ஐந்தாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்
சிந்தனை, செயல், முன்னேற்றம் என்ற மையக் கருவுடன், 2010 மே 16 அன்று தன் முதல் இடுகையை வல்லமை வெளியிட்டது. 4 ஆண்டுகளை நிறைவு செய்து, 2014 மே 16 அன்று, ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த 4 ஆண்டுகளில் வல்லமை ஒட்டுமொத்தமாக 5726 படைப்புகளை வெளியிட்டுள்ளது. இவற்றுக்கு 8204 பின்னூட்டங்கள் கிடைத்துள்ளன. பல நாடுகளிலிருந்து பல்லாயிரம் வாசகர்கள், இலட்சத்துக்கும் மேலான முறைகள், வல்லமையின் பக்கங்களை வாசித்துள்ளார்கள்.
2013 மே 16 முதல் 2014 மே 15 வரையிலான இந்த ஓராண்டில் வல்லமை, முக்கியத்துவம் வாய்ந்த பல முத்திரைகளைப் பதித்துள்ளது. அவற்றுள் சிலவற்றை இங்கே காண்போம்.
வல்லமையின் தொடர்கள்
இந்த ஒரே ஆண்டில் வல்லமை, 30க்கும் மேற்பட்ட தொடர்களை வெளியிட்டுள்ளது.
திரைப்படங்களின் மூலம் புகழ் பெற்ற நகைச்சுவை எழுத்தாளரும் நடிகருமான கிரேசி மோகன், வெண்பாவிலும் சந்தப் பாடல்களிலும் தமக்குள்ள தனித் திறனை வல்லமையில் வெளிப்படுத்தியுள்ளார். திருமால் திருப்புகழ் என்ற தலைப்பில் அவர் தினந்தோறும் இயற்றி வரும் துடிப்பான, வீச்சு மிகுந்த பாடல்கள், வாசகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன.
பேராசிரியர் பெஞ்சமின் லெபோ எழுதிய சைவ சமயம் அறிவியல் மையம், ராமஸ்வாமி ஸம்பத் எழுதிய உத்தமன் அலெக்சாண்டர்!.., ராமன் வரும் வரை காத்திரு, தேமொழியின் பிக்கோலிம் புளுகு, மலர் சபாவின் நான் அறிந்த சிலம்பு, புவனேஷ்வரின் மகாபாரத முத்துகள், இவள் பாரதியின் சிறுகை அளாவிய கூழ், நாகேஸ்வரி அண்ணாமலையின் கென்யா பயணம், இஸ்ரேல் பயணம், சு.கோதண்டராமன் எழுதி வரும் பாரதியின் வேத முகம், ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ! உள்ளிட்ட தொடர்கள், நல்ல வரவேற்பைப் பெற்றன.
சி.ஜெயபாரதனின் அணுவியல் – அறிவியல் கட்டுரைகள், பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள், காதல் நாற்பது, பவளசங்கரியின் வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! , சுபாஷிணி ட்ரெம்மலின் அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!, இன்னம்பூரானின் கனம் கோர்ட்டார் அவர்களே, சாகர் பொன்னியின் செல்வனின் அலெக்சாண்ட்ரியாவிலிருந்து அபு சிம்பல் வரை, சங்கர் ராமனின் நம்பிக்கை.. அதானே எல்லாம்!, செல்வனின் நாகரிக மனிதனின் உணவுகளும், காட்டுமிராண்டி வாழ்க்கைமுறையும்! கவியரசு கண்ணதாசன் குறித்த காவிரி மைந்தனின் தொடரும் சக்திதாசனின் இங்கிலாந்திலிருந்து ஒரு மடல், சச்சிதானந்தம் எழுதும் அறுமுகநூறு, பரம்பொருள் பாமாலை, கே.எஸ்.சுதாகரின் அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களும் தமிழினமும், செண்பக ஜெகதீசனின் குறளின் கதிர்கள், மேகலா இராமமூர்த்தி எழுதிய புறநானூற்று வழிப் புலனாகும் அரசியல் சிந்தனைகள், விசாலம் அவர்களின் இசையும் கோயிலும் உள்ளிட்ட தொடர்கள் மிகுந்த தரமும் நேர்த்தியும் கொண்டவையாய் அமைந்தன.
மின்னூல்கள் பகுதியில் தேமொழியின் முயற்சியில், குன்றக்குடி அடிகளாரின் வாழ்க்கை நலம் என்ற 60 பகுதிகள் கொண்ட நூல், முழுமையாக இடம் பெற்றுள்ளது.
போட்டிகள்
இந்த ஓராண்டில் வல்லமை 4 போட்டிகளை நடத்தியுள்ளது.
வல்லமை – ஐக்கியா டிரஸ்டு சிறுகதைப் போட்டி
ஐக்கியா டிரஸ்டுடன் இணைந்து வல்லமை நடத்திய சிறுகதைப் போட்டியின் மே, ஜூன் மாதங்களிலும் தொடர, வெங்கட் சாமிநாதன் மாதந்தோறும் தேர்ந்தெடுத்த சிறுகதைகளிலிருந்து சிறந்த மூன்று சிறுகதைகளை நாஞ்சில் நாடன் தேர்ந்தெடுத்து அளித்தார். இதன் முடிவுகள் ஆகஸ்டில் வெளியாகின. முன்னர் அறிவித்தவாறு, வல்லமைச் சிறுகதைகள் என்ற தலைப்பில் இவற்றைத் தாரிணிப் பதிப்பகம் நூலாக வெளியிட்டது. இந்தப் போட்டியை எம்முடன் இணைந்து நடத்திய வையவன் அவர்களுக்கு நன்றி.
தமிழில் புத்தக மதிப்புரைகளுக்கான போட்டி என்பது அரிதானது. அந்த வகையில் இந்தப் போட்டியை 11.10.2013 அன்று வல்லமையில் நாம் அறிவித்த போது, இதற்கு முன் இத்தகைய போட்டி நடந்ததில்லை என்ற எண்ணத்தில் இருந்தோம். ஆனால், அந்தரவெளிகள் குழுமத்திலும் (18.08.2010) முகநூலில் இயங்கும் டீக்கடைக் குழுமத்திலும் (02.02.2014) புத்தக மதிப்புரைக்கான சிறு முயற்சிகள் நடந்துள்ளன. இவையல்லாமல், தமிழின் எந்த நூலுக்கும் விமர்சனம் எழுதலாம் என்ற கூடுதல் சுதந்திரத்துடன், விரிந்த தளத்தில் பொதுவான புத்தக மதிப்புரைப் போட்டியை நடத்தியதில் வல்லமை முன்னோடியாக விளங்குகிறது. இந்தப் போட்டியை வல்லமையுடன் இணைந்து நடத்துவதில் உறுதியாக இருந்த கவிதாயினி மதுமிதா அவர்களுக்கும் சிறந்த மதிப்புரைகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்த மூத்த விமர்சகர் வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
அறிவியல் தமிழ்ப் பேச்சுப் போட்டி
வல்லமை வளர்தமிழ் மையமும் – மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளையும் இணைந்து முதல் இணையவழி சர்வதேச அறிவியல் தமிழ்ப் பேச்சுப் போட்டியை (First International Peer Reviewed Scientific Tamil Oration Competition For School Students) நடத்தின; கோவை, மேட்டுப்பாளையம் அருகில் அன்னூரில் அமைந்துள்ள கே.ஜி. சர்வதேசப் பள்ளி மாணவர்கள் 5 பேரின் அறிவியல் தமிழ்ச் சொற்பொழிவை ஒளிப்பதிந்து, யூடியூபில் ஏற்றினோம். 100 நாள்கள் அவற்றைப் பார்த்து மதிப்பிட அவகாசம் அளித்தோம். வல்லமைக் குழுவினர் அவற்றை மதிப்பிட்டு, நான் விரும்பும் வடிவியல் கருவி என்ற தலைப்பில் உரையாற்றிய சுமதியை முதல் பரிசுக்கு உரியவராகத் தேர்ந்தெடுத்தோம். இந்தத் திட்டத்தை அறிவித்த மருத்துவர் செம்மல் அவர்களுக்கும் கே.ஜி.சர்வதேசப் பள்ளி நிர்வாகி மகேஷ் துளசி அவர்களுக்கும் நம் நன்றிகள்.
அன்புள்ள மணிமொழிக்கு என்ற தலைப்பில், முனைவர் தேமொழி அறிவித்த கடித இலக்கியப் போட்டி, பெரும் வரவேற்பைப் பெற்றது. 2013ஆம் ஆண்டு மறைந்த அவர்தம் சகோதரி மணிமொழியின் நினைவாக நடத்தப் பெற்ற இந்தப் போட்டியில் 60க்கும் மேலான கடிதங்கள் வந்து சேர்ந்தன. பல புதிய கோணங்களில், நெகிழ்வூட்டும் தருணங்களுடன் இக்கடிதங்கள் அமைந்தன. முதலில் மூன்று பரிசுகள் என அறிவித்தோம். அடுத்து, கூடுதலாக மூன்று ஆறுதல் பரிசுகளைத் தேமொழி அளிக்க முன்வந்தார். நடுவர் பொறுப்பேற்ற இசைக்கவி ரமணன் அவர்கள், தம் பொறுப்பில் கூடுதலாக ஆறு பேருக்குச் சிறப்புப் பரிசுகளை அறிவிக்க, மொத்தம் 12 பேர் பரிசு பெற்றனர். இது, கடித இலக்கியத்திற்கு அழுத்தமான பங்களிப்பாகவும் அமைந்தது. அந்த வகையில் இந்தப் போட்டியை வல்லமையுடன் இணைந்து நடத்த முன் வந்த தேமொழி அவர்களுக்கு எங்கள் நன்றிகள்.
வல்லமை.காம், பன்னாட்டுத் தரநிலைத் தொடரியல் எண்ணைப் பெற்றுள்ளது. (International Standard Serial Number – ISSN: 2348 – 5531). இந்த எண்ணைப் பெற்றுள்ள மின்னிதழ்களில் வெளியாகும் ஆய்வுக் கட்டுரைகளுக்குக் கல்வித் துறையில் மதிப்பும் மதிப்பெண்ணும் உண்டு. கல்லூரி / பல்கலைக்கழகம் / ஆராய்ச்சி நிறுவனங்களில் உள்ள கல்வியாளர்கள், இத்தகைய இதழ்களில் ஆய்வுக் கட்டுரை எழுதியிருந்தால், ஒவ்வொரு கட்டுரைக்கும் பல்கலைக்கழக மானியக் குழு மதிப்பெண் வழங்குகிறது. இது, அவர்களின் பணி வாய்ப்புக்கும் பதவி உயர்வுக்கும் உதவும். இத்தகைய கல்விப் புல முக்கியத்துவத்தை வல்லமை மின்னிதழ் பெற்றுள்ளது. எனவே, ஆராய்ச்சியாளர்கள் இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அழைக்கிறோம்.
ஃபேஸ்புக் & வாட்ஸ் அப் குழுமம்
கூகுள் குழுமத்தைத் தொடர்ந்து, ஃபேஸ்புக்கிலும் வல்லமை புதிய குழுமத்தைத் தொடங்கியுள்ளது. https://www.facebook.com/groups/682321115112693/; வாட்ஸ் அப், செல்பேசி வலைப்பின்னலிலும் Vallamai – Tamil Minds என்ற புதிய குழுமத்தைத் தொடங்கியுள்ளது. வல்லமை அன்பர்கள், இவற்றில் இணைந்து கலந்துரையாடுமாறு அழைக்கிறோம்.
ஆசிரியர் குழுவில் மேகலா, தேமொழி
வல்லமை ஆசிரியர் குழுவில் அமெரிக்காவில் வசிக்கும் தமிழாசிரியர் மேகலா இராமமூர்த்தி, முனைவர் தேமொழி ஆகியோர் இணைந்துள்ளார்கள். மேகலா, திருக்குறள், புறநானூறு, பக்தி இலக்கியங்கள் உள்ளிட்ட பலவற்றில் வாசிப்பும் நேசிப்பும் கொண்டவர். முனைவர் தேமொழி, 25 ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்காவில் வசித்து, திட்ட ஆய்வாளராகவும் பணி புரிந்தவர்; கதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு ஆகியவற்றை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். சிறப்புகள் வாய்ந்த இந்த இருவரையும் வல்லமை ஆசிரியர் குழு சார்பில் இனிதே வரவேற்கிறேன். ஏற்கெனவே நம் ஆசிரியர் குழுவில் இணைந்துள்ள பெருவை பார்த்தசாரதி, பர்வதவர்த்தினி ஆகிய இருவரும் தொடர்ந்து தொண்டாற்றி வருகிறார்கள். இவர்களின் துணையுடன் வல்லமை மேலும் ஒளிரும்.
வல்லமை இதழின் ஐந்தாம் ஆண்டுத் தொடக்கத்தை முன்னிட்டு, ‘என் பார்வையில் கண்ணதாசன்’ என்ற கட்டுரைப் போட்டியை அறிவித்துள்ளோம். கண்ணதாசனை எப்படிப் பார்க்கிறீர்கள்? அவரது பங்களிப்பு என்ன? உங்களுக்கு அவரிடம் பிடித்தவை என்னென்ன? உங்கள் வாழ்க்கையில் அவரது பாடல்கள், எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றன? இப்படியாக, எந்தக் கோணத்திலும் உங்கள் கட்டுரைகள் அமையலாம். மொத்தப் பரிசு, ரூ.4250. கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் (பம்மல்) சார்பாகக் காவிரி மைந்தன் மற்றும் கிரி ஐங்கரன், இதனை வல்லமையுடன் இணைந்து நடத்துகிறார்கள். வாசகர்கள் இதிலும் துடிப்புடன் பங்கேற்குமாறு அழைக்கிறோம்.
புதிய தொடர்கள்
வல்லமையின் ஐந்தாம் ஆண்டுத் தொடக்கத்தில் ‘இசைக்கவியின் இதயம்’ என்ற புதிய பகுதி பிறக்கிறது. இதில் இசைக்கவி இரமணன் அவர்களின் எண்ணங்களில் உதிக்கும் பல்வண்ணக் கிரணங்களின் ஒளி வீச்சினை நாம் தரிசிக்கலாம். இவர், பாரதி, இசை, இலக்கியம், பக்தி, யோகம், ஞானம்.. எனப் பல துறைகளில் ஆழ்ந்த ஈடுபாடும் ஆற்றலும் அர்ப்பணிப்பும் கொண்டவர். இவற்றையெல்லாம் ஒரே இடத்தில் பெறும் வாய்ப்பாக, இந்தப் புதிய பகுதி அமைகிறது. இது தவிர, கே.ரவியின் கவிதைகள், சு.ரவியின் கவிதை ஓவியங்கள், கேஷவ் ஓவியங்கள் எனப் பலவும் தொடர்ந்து வல்லமையை அலங்கரித்து வருகின்றன.
புதிய முயற்சிகளுக்கு வல்லமை, சிறந்த களமாக உருவாகி வருகிறது. கருத்துச் சுதந்திரமும் இயல்பான நட்புறவும் ஆரோக்கியமான பின்னூட்டங்களும் இதனைத் தரமான மின்னிதழாக வளர்த்தெடுத்துள்ளன. இதனை இன்னும் உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்ல, அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறோம்.
புதிய திட்டங்கள்
வல்லமை வளர்தமிழ் மையத்தை அறக்கட்டளையாகப் பதிந்து, மேலும் அதிகப் பணிகளை ஆற்றத் திட்டமிட்டுள்ளோம். இதற்கு நேரம், நிதி, வளங்கள், தன்னார்வலர்களின் உழைப்பு.. எனப் பலவும் தேவை. எனவே, உங்களால் எந்த வகையில் எங்களுக்கு உதவ முடியும் எனத் தெரிவித்தால், அடுத்தடுத்துத் திட்டமிட வசதியாய் இருக்கும்.
வல்லமையின் பணிச் சுமை அதிகரித்து வருவதால், புதிய தன்னார்வலர்களை வரவேற்கிறோம். இதழியல் ஆர்வமுள்ள மாணவர்களையும் இல்லத்தரசிகளையும் ஓய்வுபெற்ற ஆர்வலர்களையும் எழுத்தார்வமும் படைப்பூக்கமும் கொண்ட திறனாளர்களையும் ஆவலுடன் அழைக்கிறோம். நுட்பியல் திறனுள்ள அன்பர்கள் ஒத்துழைத்தால், வல்லமைக்கு என ஆண்டிராய்டு குறுஞ்செயலிகளை உருவாக்கலாம்.
நன்றிகள்
வல்லமையின் இந்த வளர்ச்சியில் பலருக்கும் பங்கு உண்டு. அர்ப்பணிப்பு மிகுந்த திருமதி பவளசங்கரி தலைமையிலான ஆசிரியர் குழு, எங்கள் ஆலோசகர்கள், வழங்கி நிர்வாகி ஆமாச்சு, தள மேலாளர் சீனிவாசன், ஏற்கெனவே நம் ஆசிரியர் குழுவில் பணியாற்றிய காயத்ரி பாலசுப்பிரமணியன், கவிநயா உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றிகள். வல்லமைக்குச் சிறப்பான படைப்புகளை அளித்து வரும் படைப்பாளர்கள், ஓவியர்கள், இவற்றைத் தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்கள், கூகுள் – ஃபேஸ்புக் – ஃபிளிக்கர் – வாட்ஸ் அப் குழுமங்களில் துடிப்பாக இயங்கி வரும் அன்பர்கள் யாவருக்கும் நன்றிகள். தொடர்ந்து இணைந்திருங்கள், இன்னும் வளர்வோம்.
ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் வல்லமை இதழுக்கும் அதனைத் திறம்பட நடத்திச்செல்லும் நிர்வாகக் குழுவினருக்கும் வளர்ச்சியில் பங்கேற்கும் வாசகர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் இனிய வாழ்த்துக்கள். இக்குறுகிய காலத்தில் பல தரமான, பலதரமான அற்புத வாழ்வியல், இலக்கிய, உளவியல், சமூக சிந்தனைகளை வழங்கிய வல்லமை இதழ் மென்மேலும் வளர்ந்து சிறப்புற மனங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.
ஐந்தாம் ஆண்டை தொட்ட வல்லமைக்கும் அதன் வலிமைக்கு காரணமான அண்ணா கண்ணன் அவர்களுக்கும் அவர் குறிப்பிட்ட அத்தனை படைப்பாளர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.
ஐந்தாம் ஆண்டில் வல்லமை.
மகிழ்ச்சி.
வாழ்த்துகள்.
– இப்னு ஹம்துன், ரியாத்
ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள வல்லமைக்கும, இதனைத் திறம்பட நடத்திச் செல்லும் திரு. அண்ணா கண்ணன் மற்றும் ஆசரியர் குழுவினர் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
ஐந்தாம் ஆண்டுக்குழந்தையான மிக அற்புதமான வல்லமைக்கும், நிறுவனர் ஆன என் மிக அருமை நண்பர் அண்ணாகண்ணனுக்கும் வாழ்த்துக்கள்..
மிக விரைவில் யானும் இதன் படைப்பாளர்களில் ஒருவனாக உலா வருவேன் என் நண்பன் ரவி…யை ஒட்டி. நன்றி,
கவியோகி யார்
ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வல்லமைக்கும் நிறுவனர் மற்றும்
ஆசிர்யர் குழுவினருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் –சரஸ்வதி ராசேந்திரன்
தொடரட்டும் பணி!