மழை
இசைக்கவி இரமணன்
சிலநேரம் மழைவலுக்கும்
சிலநேரம் கவிபொழியும்
சிலநேரம் வலுவிழக்கும்
சிலநேரம் களையிழக்கும்
செப்பாமல் வருவதில்லை
என்றாலும், ஆச்சரியம்
தப்பாமல் பெய்வதில்லை
தமிழ்போலத் தான்மழையும்!
செல்லுங்கால் செப்பாமல்
செல்கிறதே! விதியிலே
நின்றேங்க வைக்கிறதே!
நீளவிழி வழிகிறதே!
வெட்டவெளியை ஒரு
வேல்கடைந்து போட்டதுபோல்
திரள்திரளாய்க் கருமேகம்
வையத்தைச் சூழ்ந்துகொள்ளும்
விழியிமைக்காதுற்று நிற்கும்
தாங்கவொண்ணா அமைதியிலே
தாரணி ஸ்தம்பிக்கும்
தேவலோக மேகத்தைத்
தென்னைமரப் பறவையொன்று
சாவகாசமாய்ப் பார்த்தபடி
சாம்பலற்ற வெண்சிறகால்
சற்றே கிசுகிசுத்துச்
சடுதியில் மறையுங்கால்
மூடிவைத்த சங்கீதம்
மொத்தமும் கவிழ்ந்துகொள்ளும்
ஆயிரம்பல்லாயிரம்
ஆனந்தப் பதங்கள்
அத்தனையும் ஒவ்வொன்றாய்
ஆச்சரியக் குறிகளாய்
மண்தொட்டுச் சற்றே
விண்ணெழுந்து மண்கலந்து
விதியென்னும் மடைமாறி
விரைந்து செல்லும்..
கவிதையோ
மண்ணிருந்து விண்சென்று
மண்ணுக்கே திரும்பிவரும்
சித்தக் கடலையாரோ
சிலுப்பியது மூண்டெழும்
சிறுபுத்தி தூளாகும்
சிறுமனம் அல்லாடும்
மொத்த உடலுமொரு
மூர்க்கப்பேய் வசமாகும்
விவரிக்க முடியாத
வினோதத் தருணத்தில்
உயிரைப் பலியாக்கி
உலகின்பால் சென்றுவிழும்
உதிர்ந்த உயிர் மீண்டும்
உடலுக்குள் சென்று நெகிழ்ந்து
அடுத்து பலியாக
அண்ணாந்து காத்திருக்கும்
மழையும் கவிதையும்
மகாசக்தி அருட்கொடை
மழையிலே மண்மகிழும்
கவியிலே விண் நெகிழும்
இரண்டுமே மானிடத்தில்
இறைமையைக் காட்டிநிற்கும்
மழைவந்து சென்றது
கவிமுத்தம் பெறவேண்டி
மனம் திறந்து கிடக்கிறது….
02.06.2013/ஞாயிறு/21.00
படத்திற்கு நன்றி:
http://www.todanceintherain.com/about-the-author/
///வெட்டவெளியை ஒரு
வேல் கடைந்து போட்டதுபோல்
திரள்திரளாய்க் கருமேகம்
வையத்தைச் சூழ்ந்து கொள்ளும்
விழியிமைக் காதுற்று நிற்கும்///
///ஆயிரம் பல்லாயிரம்
ஆனந்தப் பதங்கள்
அத்தனையும் ஒவ்வொன்றாய்
ஆச்சரியக் குறிகளாய்
மண்தொட்டுச் சற்றே
விண்ணெழுந்து மண்கலந்து
விதியென்னும் மடைமாறி
விரைந்து செல்லும்..///
தமிழ்க் காளிதாசரின் மழைக் கவிதை நம்மை எல்லாம் நனைக்குது. இந்த வெள்ளம் நம் காவிரியில் பாயட்டும்.
பாராட்டுகள் நண்பரே.
சி. ஜெயபாரதன்
பொழிந்து தள்ளிவிட்டீர்கள்!
”மழையும் கவிதையும்
மகாசக்தி அருட்கொடை
மழையிலே மண்மகிழும்
கவியிலே விண் நெகிழும்
இரண்டுமே மானிடத்தில்
இறைமையைக் காட்டிநிற்கும்”
அருமையான வரிகள்.
அன்புடன்
ஸம்பத்
//கவிதையோ
மண்ணிருந்து விண்சென்று
மண்ணுக்கே திரும்பிவரும்//
//கவிமுத்தம் பெறவேண்டி
மனம் திறந்து கிடக்கிறது….//
ஒவ்வொரு வரியும் எடுத்துக் காட்டினால் கவிதையை இங்கே மீள்பதிவு செய்யணும்! அருமை அண்ணா… நலந்தானே?