Tag: சத்தியமணி கவிதைகள் தமிழ் அவ்வை

  • செம்பொன் சோதீசன் பதிகம்

    (இலாலாப்பேட்டை, குளித்தலை கரூர் இணைக்கும் சாலையில் உள்ளது. எனது இளம்பிராயம் அங்கு தான் அனுபவிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைப் பணியில் கோயில் இடம்மாறி புதுபிக்கப்பட்டுள்ளது. இயற்கை வளம் கொட்டிகிடக்கும் இக்கிராமத்தில் அருள்வல நாயகனை கண்டு தரிசனம் செய்ய இப்பதிக காணிக்கை.)

    நாமம்

    அகண்ட காவிரியின் தென்கரைச்    சீலமாக்க‌

    உகந்த     நிலமென்று  உமையோடு குடியமர‌

    முகர்ந்த மலர்கதம்ப  மல்லிகை      மாலைசூடி

    சகண்டை நாதமோடு செம்பொன்   சோதீபோற்றி

     

    நிலம்

    கீழ்திக்கில்        கடம்பராக‌     தென்கீழ்     ரத்தினக்கிரி

    தென்திக்கில்    சொக்கனாய் தென்மேல் நாமகிரி

    மேற்திக்கில்      கொடுமுடி    வடமேற்கு ஞானகிரி

    வடதிக்கில் கொள்ளிசித்தன் ஈசானம்  மரகதகிரிவாழி

     

    தலம்

    வாழைதன் தோட்டமோடு தென்னைசூழ்  பச்சையாக‌

    தாழையின் வாசம்சேர்     தளிர்வெற்றி    லைப்பாக்கு

    பேழைவயி ற்றெடுத்த     பெரும்பிள்ளை வேலனோடு

    மாழையாய் செம்பொற்   சோதியான்  பாதம்போற்றி

     

    தீர்த்தம்

    தவமுடை முனிவரோடு     சித்தரும் குழுமிநிற்க‌

    சிவசிவ       நாதமோடு          நந்தியும்  ஓதிநிற்க‌

    புவனமும் பொன்னியோட‌   செம்பொன்  துறைசேர்

    ப‌வனமும் அணியுமாக    பல்வினைப் போகுமாமே

     

    விருட்சம்

    பொன்னியில் தலைமூழ்கி புதுகுட நீரெடுத்து

    பொன்னீசன்   குளிரவென   அபிடேகம் செய்வித்து

    பொன்மஞ்   சற்மலரோடு    வில்வத்தால் பூசித்து

    பொன்சடை யேற்றிபாடு குலம்வாழச் செய்யுமாமே

     

    அருள்

    நம்பிக்கை பக்திநேச‌ம்    தருமமொடு   வாய்மையுமே

    கும்பிடும்  அன்புநேயம்  குறைகாணா  பிறைசூடன்

    அம்பரத் தாடுவான்முன் அனைத்தோடு துதிசெய்யாய்

    பம்பர  மனதடங்கி பல்காலம் நலங்காண்பாய்

     

    மகிமை

    திருநீறு தரித்துவரின்     அறிவோடு நலமேறும்

    திருநீறு அணிந்துவரின்  கேடுதசை மாறிவிடும்

    திருநீறு பூசிவரின்    பெருநோயும் ஓடிவிடும்

    திருநீறு குளித்துவரின் தீராதவினைத் தீறும்

     

    வாழ்த்து

    வாழியச் செம்போற்சோதி வாழிய தருமவர்த்தனி

    வாழியத் தொண்டர்குழாம் வாழிய தருமநெறி

    வாழிய    வையகமும்   வாழிய இந்நிலமும்

    வாழிய   கங்கையென வற்றாமல் பொன்னியுமே!!

    Share
  • மகாகவி பாரதியும் மெகா தொடர் பாரதமும் (பண்டார பாட்டு – 2013)

    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    இலவசங்கள் பெற்றும் மாற்றி ஓட்டுபோட்ட போதிலும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    வாக்குறுதி அத்துனையும் மறந்து விட்ட போதிலும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    வரிக்குமேல் வரிகள் போட்டு வசூலித்த போதிலும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    சேதுசிதைத்து ஈழம்பிரிந்து வாடுகின்ற‌ போதிலும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    பெரும்பாண்மை பெற்றும்பின்னர் சிதறுகின்ற‌ போதிலும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    இலஞ்சமென்று ஆயிரந்தான் தெரிந்துவிட்ட போதிலும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    காவிரியா கங்கையுமே காயவைத்த போதிலும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    சாதிகள் சொல்லி கட்சி கூட்டம் சேர்க்கும் போதிலும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    தங்கத்தாலி பறிகொடுத்து தவிக்குங்குரல் கேட்கினும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    ஒற்றுமைக்கு வேட்டு வைத்து ஒழுக்கம்வீழும் போதிலும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    டாலர்ஏற ரூபாயிங்கு சரியவைக்கும் போதிலும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    மின்வெட்டு விலைகளிங்கு வானைத்தொட்ட போதிலும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    அடிக்கடி தேர்தல் என்று அசிங்கம் பட்ட போதிலும்
    மிச்சமில்லை வெட்கமில்லை சொல்வதற்கு இல்லையே?

     

     

    Share
  • கண்டேன் கண்டேன் காண்கின்றேன்

    கண்டேன் கண்டேன் காண்கின்றேன்
    கண்களுக்கினியானய் காதற்பெருக்கினால்()

    வண்டுகள் விழியத‌னாற் மனங்குடைந்தான்
    உண்டுகள் அதரங்கள் வழிந்திட அழைக்கிறான்
    கண்டுமுன் காணாமல் நடிக்கிறான்
    நண்டுதன் கொடுக்குபோல் வாரியே அணைக்கிறான் ஆகா ()

    அசைந்திடும் மயிற்பீலி வசமிடதொடுத்தான்
    இசைத்திடும் குழல்ராகம் மயக்கிட சிரித்தான்
    பசையினில் என்னுடன் கலந்து களிக்கிறான்
    விசையெனும் பக்தியில் என்னையும் இயக்கினான் ஆகா ()

    தேடிடும் போதெதிர் வந்தெழில்ரசிக்கிறான்
    ஏடிடும் முன்இவனே கவிதைப் படிக்கிறான்
    கூடிடும் தாளமும் தட்டிதலை அசைக்கிறான்
    பாடிடும் என்னோடு கண்ணனும் இருக்கிறான் ஆகா ()

    Share
  • அணிந்தே ஆடடி “தீபாவளி”

    வல்லமையாளர்களுக்கு எம் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    பட பட பட்டாசு இடபுறம்

    படபடப்புடன் பலர் வலபுறம்

    வெடி வெடி வெடியென இடபுறம்

    வெடியால் செவிடர்கள் வலபுறம்

    புகைந்திடும் சூழல் இடபுறம்

    இருமலில் இரைப்பவர் வலபுறம்

    கலகலச் சக்கரம் இடபுறம்

    கடனுக்கு கஞ்சி வலபுறம்

    இளைஞராய் குதிப்பவர் ஒருபுறம்

    இயலாமையில் சிலர் மறுபுறம்

    ந‌ரகாசுரர்க‌ள் எதிர் புற‌ம்

    நார‌ணண் ந‌ம்பி ந‌ம்புற‌ம்

    குய‌வ‌ரின் விள‌க்குக‌ள் எரிந்திடவே

    க‌ய‌வ‌ரின் இன‌ங்களும் குறைந்திடவே

    பிணிக‌ளும் பேய்க‌ளும் நீங்கிட‌வே

    அணிக‌ளும் வாழ்த்தும் சேர்ந்திட‌‌வே

    அன்புட‌ன் இனிப்பாய் ! புத்தாடை

    அணிந்தே ஆட‌டி “தீபாவ‌ளி”

     

    Share
  • குடியரசின் தீபாவளி

    தீபமெல்லாம் ஒன்றாய் சேர்ந்த தீபாவளி வருக
    தெய்வமெல்லாம் ஒன்றாய் சேர்ந்து அருளாசி தருக
    விலைவாசிகளும் விஷதூசிகளும்
    வரிவேசிகளும் அரசாணைகளும்
    நாட்டிற்கு சாதகமாக்கும் நம்பிக்கை ஒளிதருக    (   )

    எண்ணைவிலை ஏறினாலும்
    விளக்கேற்றி காண்போம்
    வெண்ணைவிலை ஏற்றினாலும்
    முறுக்கேற்றி திண்போம்
    தங்கவிலை தொங்கவைத்தாலும்
    பொன்னாரம் சேர்ப்போம்
    மங்களங்கள் வழங்கும் ஆட்சி
    காணவகைச் செய்வோம்.  (   )
    இரவுகளை பகலாய் மாற்றும்
    அரசனையும் காட்டு
    மரபுகளை மதிப்பாய் ஏற்கும்
    அரியணையை யேற்று
    உறவுகளை இனிப்பாய் மாற்றும்
    இல்லற முங் கூட்டு
    வரவுகளை நட்பாய் சேர்க்கும்
    தமி ழியிசையை ஆற்று (   )

    இதனை இசையுடன் கேட்க………http://www.youtube.com/watch?v=TvgPNm8u83o&feature=youtu.be

    Share
  • சுவாமி விவேகானந்தர் வழியேற்போம்

     

    சத்திய மணி

     

    தேசத்தை நேசித்தான் பாசத்தை சுவாசித்தான்Swamiji_Wallpaper03_1920X1080

    வாசத்தில் வாசம் கொண்டு சத்சங்கம்  போதித்தான் ()

     

    புவனியின் மைந்தனாக பிறந்திடினும் சிங்கம்தான்

    பவனிவரும் போதினிலோ உரமேற்றும் வங்கம்தான்

    இவனுரையைக் கேட்டாலே பலமேற்றும் அங்கம்தான்

    அவன்கருத்தை ஏற்றாலே இளங்கன்றும் பொங்கும்தான்()

     

    குருவான ராமகிருஷ்ண பதங்கண்டு கற்றிட்டான்

    கருவானக் காவியங்களை உரையிட்டு முற்றிட்டான்

    தருவாக மடங்களென்னும் பள்ளிகளை கட்டிட்டான்

    உருவாக இளையபாரதம் எழுகவென்று தட்டிட்டான்()

     

     

    பூமியிலே சொர்க்கம் எங்கள் நாடென்று சாதித்தான்

    காவியிலே இருந்தாலும் தான் கற்பூரம் ஆகிட்டான்

    ஆன்மீக  ஆற்றினில் வெள்ளப் பெருக்காக ஓடிட்டான்

    வான்போல‌  நினைவு திறனால்  புவியோரை மயக்கிட்டான்()

     

    வேகத்தின் வலிமை பேச்சில் விவேகன் ஆனந்தம்

    மேகத்தை முடியில் தரித்த நரேந்தர மாணிக்கம்

    யோகமுடன் தேகவலிமை நீதிநெறி தனைக்காப்போம்

    ஆகமுடன் தேசபக்தி போதித்த வழியேற்போம்()

     

    படத்திற்கு நன்றி: http://www.sv150.info/wp-content/uploads/2011/11/Swamiji_Wallpaper03_1920X1080.jpg

     

    Share
  • மறுக்காது கீதைப்படி

    சத்திய மணி

     

    எதுவும் அறியாதது போலொரு குழந்தை
    எனைப் பார்த்து சிரிக்கின்றது
    அதில் ரகசியம் இருக்கின்றது
    இதழோரம் இருக்கும் நவநீத வெளுப்பு
    சிரிப்பினில் தெரிகின்றது
    அதில் விஷ‌ம‌மும் புரிகின்றது()

    கருவண்டு கண்களில் கசிந்திடும் கருணைக்கு
    தேவர்கள் காத்திருந்தார் – அவன்
    கால்பட்ட மண்ணுக்கு காலங்கள் தோறும்
    புவிமகள் நோன்பிருந்தாள்
    உரலிட்ட பின்னாலும் பலங் கொண்டுதவழும்
    கண்காட்சி காண்பதற்கோ – பெரும்
    முனிவரும் ஞானியரும் ஒருசேரவந்து
    உண்ணாமல் நின்றிருந்தார்
    அலைபாயும் கேசம் அசையாது செய்தால்
    மழைமேகம் சுரக்காதடி – இவன்
    கலைபேசும் குழலூதி களிப்போதைமுன்னாலே
    கலிகாலம் செல்லாதடி()
    தினந்தோறும் விளையாடி எனைத்தோற்க செய்து
    அழவைத்து சுகமேற்றுவான் – என்
    மனந்தோறும் உள்ளூடி எனைத்தேற்றி மன்றாடி
    மறுபடியும் எனைச்சீண்டுவான்
    அவனன்றி நானில்லை நானின்றி அவனில்லை
    இதிலெங்கள் உடன்பாடுதான் – எந்தப்
    பிறவியிலும் தொடர்கின்ற உறவுக்கு அச்சாரம்
    புவியறியும் பிற்பாடுதான்
    மனச்சாந்தி பெருவதற்கும் வீண்பிறவி விடுவதற்கும்
    மாயனின் காலைப்பிடி – நீள்
    தவக்கோலம் நிறைவதற்கும் தரிசனம் பெறுவதற்கும்
    மறுக்காது கீதைப்படி()

    Share
  • கல்யாணமோ கல்யாணம்

    சத்திய மணி

     

    கல்யாணமோடு கச்சேரி வருமே கலகலப்பு
    கல்யாணமோடு கலாட்டா த‌ருமே சலசலப்பு
    இதில் கண்காட்சி அணிகளும் அணிவகுக்கும்
    இதைக் கண்டுக்காத‌ அணிகளும் பலயிருக்கும்()

    கெட்டிமேளம் கொட்டச் சொல்லி மாமனாரு பறக்க‌
    பெட்டிநகைப் போட்டுகிட்டு மாமியாரு மினுக்க‌
    முட்டி தாலி முடிச்சிட நாத்தனாரு நுழைய‌
    பட்டி கட்டி மாடுபோல மாப்பிள்ளை குழைய‌
    தட்டு களில் அசத்திடும் சீருகளைப் பாத்து
    எட்டு கட்டி போடுதம்மா ஊருகதை சேத்து()
    பந்திக்கு முந்திவரும் பசியோடு கூட்டம்
    தொந்தி க்குமேல்முழுங்கி ஏந்திரிக்க ஆட்டம்
    சந்திக்க வந்தவர்க்கோ வம்புகதை யூட்டம்
    சிந்திக்க வேளையின்றி பொட்டியுடன் ஓட்டம்
    மண்ணுலகில் இன்றும் இந்தக் கல்யாணம்வாழ‌
    கண்ணுபடப் போவுதென‌ சூடம் சுத்தி போடும்()

    Share
  • ராதை பிறந்தாள் !கோதை பிறந்தாள்!

    சத்திய மணி

     

    (ஸ்ரீஜெயந்தி வருமுன்னர் அவசரமாய் ராதைப் பிறந்தாளா?…ஆம் ராதை எங்கே
    கண்ணன் அங்கே…..)
    ராதை பிறந்தாள் குட்டி ராதை பிறந்தாள்images (1)
    புதுக் கீதங்கள் பிறந்ததம்மா
    கோதை பிறந்தாள் கிளிக் கோதை பிறந்தாள்
    இனிக் கண்ணனுக்கு சந்தோஷமா? ()

    கன்னித் தமிழோ இல்லை நெல்லைத் தமிழோ
    சென்னித் தமிழோ இல்லைச் சென்னைத் தமிழோ
    ஆசைத் தமிழோ இல்லை ஓசைத் தமிழோ
    பூசைத் தமிழோ இல்லைப் பாசத் தமிழோ
    கேட்கும் இனிமேல் அதைச் சேர்க்கும் கவிமேல்
    பூக்கும் மடிமேல் தம்பி பாடப் பழகு()
    ராக்கன் இசையோ இல்லை ஜாக்ஸன் இசையோ
    காக்கும் ரங்கனின் திருப் பாவை இசையோ
    நாக்கில் உதிர்க்கும் கண்ண தாசன் இசையோ
    நாட்டை எழுப்பும் மீசைக்காரன் இசையோ
    கேட்கும் மழலை இனி சேர்க்கும் குழலை
    தூக்கம் மடிமேல் தாலாட்டப் பழகு

     

     

    Share
  • எங்கே போகிறது காலம்-சுதந்திரதின நல் வாழ்த்துகள்

    சத்தியமணி

     

    சுதந்திரதின நல் வாழ்த்துகள்
    வாழிய பாரதம்!வாழியத் தமிழ்!

    எங்கே போகிறது காலம்

    இங்கே யேன‌லங் கோலம்

    மேலே எழுகிறது நாசம்

    கீழே  விழுகிறது தேசம்….ஓ..()

     

    குழிகள்பறித்து   முடமானார்

    விழிகளிருந்தும் குருடானார்

    செவிகளிருந்தும் செவிடானார்

    அறிவுசெழித்திருந்தும் ஊமையானார் ஓ..()

     

    கற்ற    கல்வி  தரும் பட்டம்

    உற்ற  வேலை யின்றி கட்டம்

    வரிகள் போக வருமானம்-அவ

    மானம் இங்கு வெகுமானம் ……ஓ..()

     

    மதங்கள்  பிரித்து பெறும் ஓட்டு

    மதிக்கும் பெரியவர்கள்   கூட்டு

    சாதி பெயரில் வாக்கு சீட்டு

    மதச்சார்பின்மை என்றும் பாட்டு ……ஓ..()

     

    நீதிநியாயம் வெறும் பேச்சு

    பாதிதர்மம் எங்கு போச்சு

    வாய்மைவெல்லுமெனும் சிங்கம்

    என்று தீர்க்கும் இந்த அசிங்கம்……ஓ..()

    Share
  • வாலி – வாழி

    வாலி

    கவிதை வரிகளில் கலந்து வாழி

    தமிழின் அழகினில் நிறைந்து வாழி

    அரங்கனோடு  நீ உரங்கப்பா -உன்

    அடிகள் சேருமென் இரங்கற்பா  (வாலி)

     

    அமுத வரிகளில்     இசையக்   கல‌ந்தாய்

    அரியக்கருத்துகள்   இழையச்  சுரந்தாய்

    இருந்த போதினில் பாதி உணர்ந்தேன்

    இழந்தப் போதினில் யாவும் இழந்தேன்

    வாலி பெயரதின் மகிமையோ இது   (வாலி)

     

    செவிலித்தாயெனச் சேய்க்கு கிடைத்தாய்

    செவியில் ஓய்வினில் தமிழைக் கொடுத்தாய்

    தூங்கச் செல்லுமுன் துயரம் அழித்தாய்

    இன்று தூங்கியேன் துக்கம் அளித்தாய்

    வாலி பெயரதின் அருமையோ இது (வாலி)

     

    நதியின் புதரினில் தாடிக் காண்பேன்

    கதிரைப் பொட்டுடை நெற்றி காண்பேன்

    விதியின் வெகுண்டெழும் கோபம் காண்பேன்

    மதியில்  குளிர்ந்திடும் சிரிப்பும் காண்பேன்

    வாலி பெயரனில் உரிமையோ இது (வாலி)

    Share
  • மறதி!

     

    சத்தியமணி

     

    கண்ணாடி தன்னைத் தேடி கடைசியில்

    தலையில் கண்டது கண்கள்

    வெட்டி பேச்சில் பாதைமறந்து

    வெளுத்துப் போனது கால்கள்

    ஆத்திரம் வந்து அடுக்களை தன்னில்

    பொங்கி வழிந்தது பாலாறு

    சூத்திரம் கற்றும் மனம் தள்ளாடி

    தூங்குகின்றது…கோளாறு

    தானாய்ப்பேசி பைத்தியமென்றனை

    ஆக்கவிட்டது கைபேசி

    கற்சிலையாக ஓரிடச்சிறையாய்

    கட்டிப் போட்டது கணினி

    தடவித் தடவி கடவுச் சொல்லை

    தேடிஅயர்ந்தது  *வங்கியியங்கி

    குருவி போல கொத்திப்போட்டும்

    கிடைக்கவில்லை புத்தாடை

    ஆங்கிலக் கெட்ட வார்த்தையில் வாயும்

    ஐயோ   என்றது தமிழில்

    தங்கைப் பெயரில் தவறாய் அழைக்க‌

    தடியடி யானது வீட்டில்

    மாத்திரை என்று உறையுடனிட்டு

    மாட்டி கொண்டது  வாயிலே

    பயணச்சீட்டைக் கேட்டதும் தெரிந்தது

    அதுவும் வீட்டு பையிலே

    தாமதமாக வாழ்த்துகள் சொல்வது

    தரணியில் இன்று நிகழ்வது

    ஓட்டை போட்டப்  பின்னால் வந்து

    ஊழல்  அரசை இகழ்வது

    விமானம் கிளம்பிய வேகத்திலே

    வந்தது வீட்டைப்பூட்ட மறந்தது

    தன்மானம் தான்விட்டுவிடாது

    மறதியில் மட்டும் வளர்ந்தது

    எங்கே வைத்தோம் என்றே நினைத்து

    திகிலடைந்த சிலநேரம்

    எங்கோ வைத்தோம் என்றே மறந்து

    வாழ்க்கை சென்றது வெகுதூரம்

     

    *வங்கியியங்கி==ATM

     

    Share
  • இமயம் – ஓர்துயரம்

     

    சத்தியமணி

     

    முகில் குளிர்ந்தால் வரும் மழை யின்பம்
    முக்கி வெடித்தால் அது பெருந்துன்பம்
    இமயம் நிமிர்ந்த கம்பீரம்
    இன்று அதற்கும் ஓர்துயரம்
    சுற்றுலா சென்ற சிலக்கூட்டம்
    சுழற்றி போட்டது காட்டாறு
    பக்தியில் சென்ற சிலக்கூட்டம்
    பாதியிழந்தது கூட்டாறு
    கேதாரம் தான் ஆதாரம்
    வெள்ளத்தால் பெரும் சேதாரம்
    பொங்கி பெருகிடும் கங்கையிலே
    புண்ணியம் சேர்ப்பதும் இப்படியா
    தங்கி தரிசனம் தரும் எழிலில்
    பயங்கரம் தெரிவதும் ஒருமுறையா
    மலைநாட்டவரின் மந்தாகினி
    கொலையாட்டமும் கண்டதனால்
    பயமும் வெறுமையும் உடன்தாக்க‌
    பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டாய்
    ஆறுதல் தந்தவர் வாழ்வினுக்கு
    வல்லமையாளர்கள் வலுவமைப்போம்
    அள்ளி தருபவர் வள்ளல்யென்போம்
    உள்ளம்தந்திடின் வாழ்த்திடுவோம்

     

    Share
  • வேண்டச்செய்வதும் தமிழன்றோ!!

     

    சத்தியமணி

    பார்க்க பார்க்க பரவசமாய்

    படிக்க  படிக்க  நவரச‌மாய்

    ருசிக்க  ருசிக்க   மதுரசமாய்

    ரசிக்க    ரசிக்க     தமிழ்வசமாய் ()

     

    நினைக்க நினைக்க கருத்தூறும்

    சலிக்க     சலிக்க  சொல்சேரும்

    பழிக்க  பழிக்க    படைப்பாகும்

    களிக்க களிக்க    பிறப்பாகும் ()

     

    குதிக்க குதிக்க ஆடற்கலை

    பதிக்க  பதிக்க  காதற்கலை

    உதிர்க்க உதிர்க்க மழலைகளாய்

    இனிக்கச் சேரும் செவியலையாய்

     

    வலிக்க வலிக்க விரல்யாழில்

    இழைக்க இழைக்க இசையாகும்

    கொதிக்க கொதிக்க அனல்மீதில்

    குழம்பும் ரசமும் மணமேற்கும்

     

    பறக்க  பறக்க  பறவைகள்போல்

    கறக்க கறக்க  பசுபால்போல்

    சிறக்க  சிறக்க  இவைச்செல்லும்

    சிரிக்க சிரிக்க   கதைசொல்லும்

     

    படைப்பவன்  என்பவன் தாயானான்

    படிப்பவன்      தன‌க்கோ  தருவானான்

    கவியாய் இசையாய் உண்டானான்

    கவியால் தமிழுடன்  ஒன்றானான்

     

    புகழ்தனை வாங்கா தமிழுண்டோ!

    போற்றியும் சேர்க்கா தமிழுண்டோ!

    வேண்டாதவரையும் முத்த‌மிட்டு

    வேண்டச்செய்வதும் தமிழன்றோ!!

     

     

    Share
  • அழகிய சிங்கர் அருள் மலர்ந்தான்!

     

    சத்தியமணி

     

    (நரசிம்மர் பிறந்ததினம் முன்னிட்டு ஓம் நமோ நாராயணா )

     

    அரக்கனின் மகனாய்        இருந்தாலும்

    அன்புடன்    பக்தியும்       செய்ததனால்

    அவனது      துயர்தனை   துடைத்திடவே

    அழகிய சிங்கர் அருள் மலர்ந்தான்

     

    தூணிலும்     இருப்பது    அவன்வலிமை

    துரும்பிலும்  மறைவது  அவன்மகிமை

    துன்பங்கள்   துடைக்கும்  அவன்பெருமை

    அழகிய சிங்கர் அருள் மலர்ந்தான்

     

    வெம்மையின்  சீற்றமும் தணியும்வரை

    செம்மையின்  குருதியும் குளிரும்வரை

    தம்மையும்       கவசமாய்  உள்ளம்வரை

    அழகிய சிங்கர் அருள் மலர்ந்தான்

     

    அரக்கரின் வரங்களை    மாற்றிடுவான்

    அசுரரின்    வன்மங்கள்   போக்கிடுவான்

    அன்பரின்   சேமங்கள்      அறிந்திடுவான்

    அழகிய சிங்கர் அருள் மலர்ந்தான்

     

    உக்கிர விளம்ப     வீரமுகம்

    குரோத அகோர    கோபமுகம்

    யோக   சுதர்ஸன லஷ்மியென‌

    அழகிய சிங்கர் அருள் மலர்ந்தான்

     

    தூணிலிருந்து         பிளந்த    முகம்

    தானாயிருந்து        வள‌ர்ந்த முகம்

    தவிக்கஅசுரனை     இழுத்த‌ முகம்

    அழகிய சிங்கர் அருள் மலர்ந்தான்

     

    அசுரக்குடல்  தனைஅறுத்த முகம்

    அவனுயிர்     அழித்துகளித்த முகம்

    அன்புடன்       கோபம்தணிந்த முகம்

    அழகிய சிங்கர் அருள் மலர்ந்தான்

     

    தானெனும் இரணியர் உடற்கிழித்து

    கூனெனும் நஞ்சினை உடன்குடித்து

    நானெனும் மமதைத்  தான் அழித்து

    அழகிய சிங்கர் அருள் மலர்ந்தான்

     

    தாயாய்    நம்மைக் காத்திடுவான்

    சேயாம்    நமக்குள்  சேர்ந்திடுவான்

    நோயாம்  பிணிகளைப் போக்கிடுவான்

    அழகிய சிங்கர் அருள் மலர்ந்தான்

    Share