அழகிய சிங்கர் அருள் மலர்ந்தான்!

4

 

சத்தியமணி

 

(நரசிம்மர் பிறந்ததினம் முன்னிட்டு ஓம் நமோ நாராயணா )

 

அரக்கனின் மகனாய்        இருந்தாலும்

அன்புடன்    பக்தியும்       செய்ததனால்

அவனது      துயர்தனை   துடைத்திடவே

அழகிய சிங்கர் அருள் மலர்ந்தான்

 

தூணிலும்     இருப்பது    அவன்வலிமை

துரும்பிலும்  மறைவது  அவன்மகிமை

துன்பங்கள்   துடைக்கும்  அவன்பெருமை

அழகிய சிங்கர் அருள் மலர்ந்தான்

 

வெம்மையின்  சீற்றமும் தணியும்வரை

செம்மையின்  குருதியும் குளிரும்வரை

தம்மையும்       கவசமாய்  உள்ளம்வரை

அழகிய சிங்கர் அருள் மலர்ந்தான்

 

அரக்கரின் வரங்களை    மாற்றிடுவான்

அசுரரின்    வன்மங்கள்   போக்கிடுவான்

அன்பரின்   சேமங்கள்      அறிந்திடுவான்

அழகிய சிங்கர் அருள் மலர்ந்தான்

 

உக்கிர விளம்ப     வீரமுகம்

குரோத அகோர    கோபமுகம்

யோக   சுதர்ஸன லஷ்மியென‌

அழகிய சிங்கர் அருள் மலர்ந்தான்

 

தூணிலிருந்து         பிளந்த    முகம்

தானாயிருந்து        வள‌ர்ந்த முகம்

தவிக்கஅசுரனை     இழுத்த‌ முகம்

அழகிய சிங்கர் அருள் மலர்ந்தான்

 

அசுரக்குடல்  தனைஅறுத்த முகம்

அவனுயிர்     அழித்துகளித்த முகம்

அன்புடன்       கோபம்தணிந்த முகம்

அழகிய சிங்கர் அருள் மலர்ந்தான்

 

தானெனும் இரணியர் உடற்கிழித்து

கூனெனும் நஞ்சினை உடன்குடித்து

நானெனும் மமதைத்  தான் அழித்து

அழகிய சிங்கர் அருள் மலர்ந்தான்

 

தாயாய்    நம்மைக் காத்திடுவான்

சேயாம்    நமக்குள்  சேர்ந்திடுவான்

நோயாம்  பிணிகளைப் போக்கிடுவான்

அழகிய சிங்கர் அருள் மலர்ந்தான்

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “அழகிய சிங்கர் அருள் மலர்ந்தான்!

  1. நரசிம்மன் புகழ் நவிலும் அழகான வரிகள். வாழ்த்துக்கள் திரு.சத்தியமணி அவர்களே!

  2. அழகியசிங்கர் தங்கள் அருமையான கவிதையில் அழகாக அவதரித்து அருள்மலர்ந்து அருள்கிறார்!

    சு.ரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *