-சச்சிதானந்தம்

 

ஊருடன் கூடி இழுக்கும் போது,

தேருடன் சுழலும் சக்கரம் போல,

மாருத உயிர்த்தேர் சுழன்றிட முருகன்,

மானுட யாக்கைச் சக்கரம் செய்தான்!                                                                              71

 

வாகை மலரென எழிலுரு முருகனை,

வாழை மலரின் சிறுமடல் போன்ற,

வடிவுடை தீபம் ஏற்றிப் பணிந்து,

வாமன வடிவ மனதினை விரிப்போம்!                                                                          72

 

நோக்கத்தை மறந்து திசைமாறிப் பறக்கும்

நெஞ்சுக்கு உண்மையைத் திடமாக உணர்த்தி,

நல்வழிப் பாதையில் தொடர்ந்து நடத்திடும்,

நித்தியத் தெய்வமே, நாதனே போற்றி!                                                                            73

 

இடும்பன் சுமந்த மலையில் அமர்ந்து,

இடும்பை நீக்கி அருளும் கடம்பா,

நடுங்கும் நெஞ்சின் நரகத் துன்பம்,

ஒடுங்கும் படியென் உயிரைக் காப்பாய்!                                                                          74

 

அறுபடை வீடு என்பது உண்மையில்,

அருள் தரும் குகனின் குறியீடு,

அகிலம் தோறும் வாழும் மனிதரின்,

அகமே அவனின் பெரு வீடு!                                                                                              75

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “அறுமுகநூறு (15)

  1. ////அறுபடை வீடு என்பது உண்மையில்,
    அருள் தரும் குகனின் குறியீடு////
    மிகச் சரியான, பொருளார்ந்த வரிகள். அறுபடை வீடுகள் உணர்த்தும் சூக்கும செய்திகள் தான் எத்தனை.. எத்தனை..  உதாரணமாக, மூலாதாரத்தில் தொடங்கி, ஆதாரச் சக்கரங்கள் அனைத்தையும், அவற்றின் செயல்பாட்டையும்  ஒருங்கு உணர்த்துவதே அறுபடை வீடு. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். வாழ்த்துக்கள் சகோதரரே!!தொடர்ந்து படிக்க மிக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  2. தங்களது அழகான விளக்கத்திற்கும், வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி பார்வதி இராமச்சந்திரன் அவர்களே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *