சத்தியமணி

 

கண்ணாடி தன்னைத் தேடி கடைசியில்

தலையில் கண்டது கண்கள்

வெட்டி பேச்சில் பாதைமறந்து

வெளுத்துப் போனது கால்கள்

ஆத்திரம் வந்து அடுக்களை தன்னில்

பொங்கி வழிந்தது பாலாறு

சூத்திரம் கற்றும் மனம் தள்ளாடி

தூங்குகின்றது…கோளாறு

தானாய்ப்பேசி பைத்தியமென்றனை

ஆக்கவிட்டது கைபேசி

கற்சிலையாக ஓரிடச்சிறையாய்

கட்டிப் போட்டது கணினி

தடவித் தடவி கடவுச் சொல்லை

தேடிஅயர்ந்தது  *வங்கியியங்கி

குருவி போல கொத்திப்போட்டும்

கிடைக்கவில்லை புத்தாடை

ஆங்கிலக் கெட்ட வார்த்தையில் வாயும்

ஐயோ   என்றது தமிழில்

தங்கைப் பெயரில் தவறாய் அழைக்க‌

தடியடி யானது வீட்டில்

மாத்திரை என்று உறையுடனிட்டு

மாட்டி கொண்டது  வாயிலே

பயணச்சீட்டைக் கேட்டதும் தெரிந்தது

அதுவும் வீட்டு பையிலே

தாமதமாக வாழ்த்துகள் சொல்வது

தரணியில் இன்று நிகழ்வது

ஓட்டை போட்டப்  பின்னால் வந்து

ஊழல்  அரசை இகழ்வது

விமானம் கிளம்பிய வேகத்திலே

வந்தது வீட்டைப்பூட்ட மறந்தது

தன்மானம் தான்விட்டுவிடாது

மறதியில் மட்டும் வளர்ந்தது

எங்கே வைத்தோம் என்றே நினைத்து

திகிலடைந்த சிலநேரம்

எங்கோ வைத்தோம் என்றே மறந்து

வாழ்க்கை சென்றது வெகுதூரம்

 

*வங்கியியங்கி==ATM

 

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “மறதி!

 1. சமாளிக்கத் தெரிவதால் இன்று மறதியை யாரும் பெரிதாய் எடுத்துக்கொள்வதில்லை. கவிதையில் உள்ளது அனைத்தும் இன்று சராசரி மனிதனின் வாழ்க்கையாகிவிட்டது.

  /////தாமதமாக வாழ்த்துகள் சொல்வது
  தரணியில் இன்று நிகழ்வது///

  இந்த வரிகள் ஒரு இரண்டு வாரம் முன்புக்கு அழைத்து சென்றுவிட்டது. நல்ல கவிதை.

 2. சத்தியமணி அவர்களின் மறதியில்
  சத்தான கவிதை…!

 3. செப்பனிட்ட துணை ஆசிரியர், வல்லமை கவிநயா  அவர்களுக்கு முதல் நன்றி . படித்து மறதிக்கு விட்டுவிடாது உடன்வாழ்த்தளித்த திரு தனுசு ,திரு செண்பக ஜெகதீசன்,திரு பி.தமிழ்முகில் நீலமேகம் அனவருக்கும் நன்றி. மறதி ஒரு பலவீனமென்றாலும் சிலசமயம் பலமாக காக்கும் கவசமும் தான். வாழிய தமிழ்

 4. மறதி பற்றிய கவிதை அருமை. மறதியால் இழப்புகளைச் சந்திக்கும் அதே நேரம், மறதியால் பல நன்மைகளையும் அடைகிறோம். தேர்ந்த வார்த்தைகளால் மனம் தொட்ட வலியதொரு கவிதை. பாராட்டுகள்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *