மறுக்காது கீதைப்படி
சத்திய மணி
எதுவும் அறியாதது போலொரு குழந்தை
எனைப் பார்த்து சிரிக்கின்றது
அதில் ரகசியம் இருக்கின்றது
இதழோரம் இருக்கும் நவநீத வெளுப்பு
சிரிப்பினில் தெரிகின்றது
அதில் விஷமமும் புரிகின்றது()
கருவண்டு கண்களில் கசிந்திடும் கருணைக்கு
தேவர்கள் காத்திருந்தார் – அவன்
கால்பட்ட மண்ணுக்கு காலங்கள் தோறும்
புவிமகள் நோன்பிருந்தாள்
உரலிட்ட பின்னாலும் பலங் கொண்டுதவழும்
கண்காட்சி காண்பதற்கோ – பெரும்
முனிவரும் ஞானியரும் ஒருசேரவந்து
உண்ணாமல் நின்றிருந்தார்
அலைபாயும் கேசம் அசையாது செய்தால்
மழைமேகம் சுரக்காதடி – இவன்
கலைபேசும் குழலூதி களிப்போதைமுன்னாலே
கலிகாலம் செல்லாதடி()
தினந்தோறும் விளையாடி எனைத்தோற்க செய்து
அழவைத்து சுகமேற்றுவான் – என்
மனந்தோறும் உள்ளூடி எனைத்தேற்றி மன்றாடி
மறுபடியும் எனைச்சீண்டுவான்
அவனன்றி நானில்லை நானின்றி அவனில்லை
இதிலெங்கள் உடன்பாடுதான் – எந்தப்
பிறவியிலும் தொடர்கின்ற உறவுக்கு அச்சாரம்
புவியறியும் பிற்பாடுதான்
மனச்சாந்தி பெருவதற்கும் வீண்பிறவி விடுவதற்கும்
மாயனின் காலைப்பிடி – நீள்
தவக்கோலம் நிறைவதற்கும் தரிசனம் பெறுவதற்கும்
மறுக்காது கீதைப்படி()
“கருவண்டு கண்களில் கசிந்திடும் கருணைக்கு
தேவர்கள் காத்திருந்தார் – அவன்
கால்பட்ட மண்ணுக்கு காலங்கள் தோறும்
புவிமகள் நோன்பிருந்தாள்”
எதுவந்த போதும் எதிரில் எமன் வந்த போதும்
அதுவந்து மோதும் உயிரில் அரங்கன் நினைவது மோதும்
மதுஊறும் கண்களால் மயங்கிட செய்பவன் -வேணு குழ
லூதும் கண்ணனின் கருணையினைப் பெருக்கிடுதே!
அருள் நிறை அழகியக்கவிதை பகிர்விற்கு நன்றிகள்… அருள் கவிஞரே!
படிக்கப் படிக்க மனதில் இரம்மியமான உணர்வுகளை ஏற்படுத்தும் மிக அழகான கவிதை. வாழ்த்துக்கள் ஐயா!
////தினந்தோறும் விளையாடி எனைத்தோற்க செய்து
அழவைத்து சுகமேற்றுவான் – என்
மனந்தோறும் உள்ளூடி எனைத்தேற்றி மன்றாடி
மறுபடியும் எனைச்சீண்டுவான்////
வியக்க வைக்கின்றன இந்த வரிகள். எத்தனை அழகாக, ரத்தினச் சுருக்கமாக வாழ்க்கை தத்துவத்தைத் தந்து விட்டீர்கள்!!!. ஞானத் தேரேறி சத்திய தரிசனம் செய்ய வைக்கும் அற்புதமான பகிர்வு. சிரம் தாழ்ந்த நன்றி!!.
…மாயக் கண்ணனை..ரசித்தவரின் புகழ்ச்சியே கொடுத்தவனின் மகிழ்ச்சி
திரு Alasiam G , திரு சச்சிதானந்தம், திருமதி பார்வதி இராமச்சந்திரன்
அனைவருக்கும் நன்றி