மாதவன் இளங்கோ

 

இரைச்சல் விழுங்கிய

இசையின் அமைதி..

பெரும்கூட்டத்தில் சிக்குண்ட

தனிமைவிரும்பியின் அமைதி..

மூடத்தனங்களுக்கு இடையே

மேதைமையின் அமைதி..

இருட்டுக்குள் ஒளிந்துகொண்ட

ஒளியின் அமைதி..

ஆணவச்செருக்கு அதிகார போதைகளுக்கிடையே

அடக்கமானவனின் அமைதி..

உயர்குலத்து சிரிப்புகளுக்கிடையே

ஒடுக்கப்பட்டவனின் அமைதி..

துரோகிகளுக்கு இடையே

தூயநட்பின் அமைதி..

பொய்புரட்டுகளுக்குள் புதையுண்ட

உண்மையின் அமைதி..

குறைகுடங்களின் தளும்பல்களுக்கிடையே

நிறைகுடத்தின் அமைதி..

பேரியந்திறங்களின் பெருஞ்சத்தங்களுக்கிடையே

இயற்கையின் பேரமைதி..

வீண் வம்பு, வெட்டிப்பேச்சுகளுக்கிடையே

உழைப்பின் அமைதி..

ஆடம்பர பகட்டு வாழ்க்கையின் இடையே

எளிமையின் அமைதி ..

 

பிற சத்தங்கள் அனைத்துமென்

செவிப்பறையை கிழித்து

செவிடனாக்கிவிட,

அத்தனை

அமைதிகளின் சத்தங்களும்

தெளிவாகக் கேட்கத்தொடங்கின..

‘அமைதியடைந்தேன் நான்’!

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “அமைதிகளின் சத்தங்கள்..

  1. ///வீண் வம்பு, வெட்டிப்பேச்சுகளுக்கிடையே
    உழைப்பின் அமைதி..///

    ஒவ்வொரு அலவலக டீம் மீட்டிங்கிலும் இதைப்பார்க்கலாம். எனக்குப் பிடித்தவரிகள் எவை எனக் குறிப்பிட வேண்டும் என்றால் மீண்டும்உங்கள் கவிதை முழுவதையுமே இங்கு ஒத்தி ஒட்ட வேண்டியிருக்குமே!!!!! நல்லதொரு கவிதை, நன்றி இளங்கோ.

    ….. தேமொழி

  2. இரைச்சல், அமைதி 
    அநிரந்தரம், நிரந்தரம் 

    ஒளிமங்கிப் போனதால் 
    பிறந்ததிந்த இருட்டு…
    இல்லாத ஒன்றை இருப்பதாகக்
    காட்டும் இந்த மாய இருட்டு….

    “நிரந்தரம் எதுவோ அது அமைதியாலே பிறக்கும்…
    பிற சத்தங்கள் அனைத்துமென்
    செவிப்பறையை கிழித்து
    செவிடனாக்கிவிட,
    அத்தனை
    அமைதிகளின் சத்தங்களும்
    தெளிவாகக் கேட்கத்தொடங்கின..
    ‘அமைதியடைந்தேன் நான்’!”

    முத்தாய்ப்பாய் வந்த வரிகள்
    முழுமையாக்கின எந்தன் இனிமையை!

    பகிர்விற்கு ன்றி! 

  3. அற்புதம், கவிஞரே!
    எல்லா வரிகளும் அசத்தல். குறிப்பாகச் சொல்ல நினைத்தால்…….

    //குறைகுடங்களின் தளும்பல்களுக்கிடையே
    நிறைகுடத்தின் அமைதி..//

    எந்த மன்றத்திலும், வகுப்பறைகளிலும், மடலாடல் குழுமங்களிலும் இதை நாம் காணலாம்.

    அருமை!

    பணிவன்புடன்,
    புவனேஷ்வர்

  4. அருமையான கவிதை இளங்கோ. குறிப்பாக இறுதி வரிகள் முத்தாய்ப்பாக இருக்கின்றன. மொத்தத்தில் வாசிப்பவர் மனதில் ஒரு சலனத்தை ஏற்படுத்தி விடுகிறது உனது அமைதிகளின் சத்தங்கள்.

  5. அமைதிகளின் சத்தங்கள்
    கேட்கிறது
    அருமைக் கவிதையாய்…!

  6. படிக்கும் போதே, வரிகளினூடாக நாம் வாழ்வது முடிகிறது. தங்கள் எழுதுகோல்,கவிதை எனும் கடலில்,  சத்தமில்லா உணர்வலைகளை எழுப்பி, அவற்றை மனதின் கரைகளைத் தழுவி உட்புகச்செய்கிறது. இது,  தங்கள் கவிதைகளின் சிறப்பியல்புகளுள் ஒன்று என நினைக்கிறேன்.  கவிதையின் கடைசி வரிகள் எங்கோ கொண்டு சென்று விட்டன. பாராட்ட வார்த்தைளில்லை. பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி சகோதரரே!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.