எத்தனை புண்ணியம் தெரியுமோ?

தஞ்சை வி. கோபாலன்
அலுவலகம் சென்றுவிட்டு தினமும் இரவு எட்டு மணிக்கு மேல் வீடு திரும்பும் ரமணன் அன்று ஆறு மணிக்கே உற்சாகமாக வீடு திரும்பினான். அவன் மனைவி ரமாவுக்கு ஆச்சரியம். இன்று சம்பள தேதிகூட இல்லையே, ஏன் இவர் இப்படி அரக்க பரக்க வந்திருக்கிறார் என்று அதிசயித்தாள்.

அவனே சொல்லட்டும் என்று காத்திருந்தாள். வழக்கம் போல் உடைகளைக் களைந்து மாற்றுடை தரித்துக் கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, “ரமா, கொஞ்சம் காபி கிடைக்குமா?” என்று கேட்பவன் இன்று உற்சாகம் குறையாமலே சொன்னான், “ரமா! சீக்கிரம் புறப்படு. பஜனோத்சவம் போகணும்னு சொன்னியே, இரண்டு டிக்கெட் இலவசமா கிடைச்சுது, வா, போகலாம். எங்க மேனேஜருக்கு வந்தது, அவருக்கு வேற ஏதோ வேலை இருக்காம், நீதான் உன் மனைவியை கூட்டிண்டு போயிட்டு வாயேன் என்று கொடுத்தார், வா போகலாம். இப்போ புறப்பட்டா தான் சரியான நேரத்துக்குப் போய்ச்சேர முடியும்” என்றான்.

கடந்த நான்கு நாட்களாக அருகில் இருந்த பெரிய சபா ஹாலில் பஜனோத்சவம் என்ற பெயரில் மிகவும் பிரபலமான பஜனை கோஷ்டிகள் வந்து பஜனை பாடிக் கொண்டிருந்தார்கள். ரமாவுக்கு அந்த நிகழ்ச்சிகளில் ஏதானும் ஒன்றுக்காவது போய் பஜனை கேட்டுவிட்டு வரவேண்டுமென்று ஆசை. அவள் குடியிருந்த ஒரு கூட்டுக் குடித்தன வீட்டில் பலரும் இந்த பஜனை நிகழ்ச்சிகளுக்குப் போக ஆர்வம் கொண்டிருந்தாலும், அவர்களது வசதி அதற்கு இடம் கொடுத்தபாடில்லை.

ஆனால் பெரிய சபாவில் உறுப்பினராக ஆகி, மாதாமாதம் கணிசமான தொகையைக் கட்டணமாகச் செலுத்தி கச்சேரிகளுக்குச் செல்லும் வசதி அந்த தம்பதியருக்கு இல்லை. அரசாங்க அலுவலகம் ஒன்றில் கீழ்நிலை கிளார்க்காகப் பணியாற்றும் ரமணனுக்கு வருமானத்துக்கும் குடும்பச் செலவுக்குமே திணறலாக இருந்த நிலையில் சினிமா, கச்சேரி என்றெல்லாம் போக வாய்ப்பு ஏது?

யார் செய்த புண்ணியமோ, அவர்களுக்கு இலவசமாக அரசாங்கம் கொடுத்த தொலைக்காட்சிப் பெட்டியொன்று கிடைத்தது. ரமாவுக்குப் பகல் பொழுதில் அதில் வரும் மெகா சீரியல்களில் மனதைச் செலுத்தி, அந்த சீரியல் கதைகளோடு மானசீகமாக ஒரு உறவை ஏற்படுத்திக் கொண்டுவிட்ட படியால், கச்சேரி, சினிமா போன்ற வெளியுலக பொழுது போக்குகளில் எல்லாம் அவளுக்கு ஆசை ஏற்படவில்லை. போதாக்குறைக்கு அவளது இரண்டு வயது பெண் குழந்தையோடு பொழுதும் மகிழ்ச்சியாகவே போய்க்கொண்டிருந்தது.

போன வாரம் தொலைக்காட்சிகளில் அறிவிப்பு செய்த அந்த பஜனோத்சவம் அவளுக்கு மனதில் ஒரு ஆவலைத் தூண்டிவிட்டது. பெரிய கோஷ்டிகளின் பஜனைகள், அதிலும் பாண்டுரங்க விட்டல பஜனை என்றால், அந்தப் பாடல்கள், அவற்றின் துரித கதி, தாளகதி இவைகளில் எல்லாம் அவளுக்கு ஒரு ஈடுபாடு ஏற்பட்டிருந்தது. இன்றைய தேதியில் தமிழகத்தில் மிகப் பிரபலமான பஜனைப் பாடகர்கள் இந்த விழாவில் வந்து பாடுகிறார்கள். அவர்கள் எல்லாம் அவள் மனதில் நிழலாடினார்கள்.

அவள் பிறந்த ஊருக்கு ஒரு முறை சென்றிருந்த நேரத்தில் அங்கு அருகில் கோவிந்தபுரத்தில் நடந்த ஒரு பஜனைக்குச் சென்றிருந்தாள். அடடா! அந்த பஜனையைக் கேட்ட பிறகு நீண்ட நாட்கள் அந்த பஜனைப் பாடல்களின் தாளமும், பாண்டுரங்கனை நினந்து பாடப்பட்ட அந்தப் பாடல்களில் தவழ்ந்த பக்தி உணர்வும் அவள் மனதை விட்டு அகலவேயில்லை. அப்படிப்பட்ட பஜனை கோஷ்டிகள் பஜனை அவள் வீட்டுக்கு மிக அருகில் இப்போது நடைபெற்றாலும் அங்கு போய்ப் பார்க்கவும், கேட்கவும் அனுமதிக் கட்டணம் உண்டு என்பதால் அவள் ஆசை அடங்கிப் போயிற்று.

அந்த நிலையில்தான் தன் கணவன் இன்று பஜனோத்சவம் போகிறோம், நுழைவுச் சீட்டு இலவசமாகக் கொடுத்திருக்கிறார்கள் என்ற செய்தியைச் சொன்னதும் மிகுந்த மகிழ்ச்சியோடு கிளம்பத் தயாரானாள். அவர்களுடைய இரண்டு வயதுப் பெண் அமிர்தா அந்தக் கூட்டுக் குடியிருப்பின் வாயிலில் மற்ற குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்து, அவளை இழுத்துக் கொண்டு வந்து முகத்தைத் துடைத்து ஆடை அணிவித்து அலங்காரம் செய்து, தானும் தயாராகப் புறப்பட்டு நின்றாள்.

ரமணன் ஆபீசிலிருந்து வந்த உடையைக் களைந்துவிட்டு பெரிய கரை போட்ட வேட்டியை அணிந்து கொண்டு முழுக்கைச் சட்டையும், நெற்றி நிறைய குழைத்துப் பூசிய திருநீறுமாகத் தயாராக இருந்தான். பஜனை கேட்பது என்றால் கச்சேரிக்குப் போவதைப் போல போகமுடியுமா; சற்று பக்தி பரவசமாக, அதற்கேற்ற உடையணிந்து கொண்டல்லவா போகவேண்டும்.

இவர்கள் அடிக்கடி இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்குப் போகிறவர்கள் என்றால் பழக்க தோஷத்தில் குழந்தைக்குப் பசித்தால் ஏதாவது ஆகாரம், குடிக்க குடிநீர் போன்றவற்றை ஒரு பிளாஸ்டிக் கூடையில் வைத்துக் கொண்டு எடுத்துப் போவார்கள். என்றுமில்லாத வழக்கமாக இன்று திடீரென்று வந்து வா சபாவுக்குப் போகலாம், பஜனை கேட்கலாம் என்று சொன்னதும் அதுபோன்ற எந்த தயாரிப்பும் இல்லாமல் குழந்தையைத் தூக்கிக் கொண்டு கணவனுடன் வெறும் கையுடன் புறப்பட்டுவிட்டாள் ரமா.

இவர்கள் சென்று சபாவுக்குள் நுழைந்து தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வரிசையில் குறிப்பிட்ட எண்கள் உள்ள ஆசனங்களில் அமர்ந்து கொண்டனர். குழந்தையை ரமா மடியில் வைத்துக் கொண்டாள். இவர்கள் உட்கார்ந்த சில மணித்துளிகளில் பஜனை தொடங்கியது. மேடையில் ஏழெட்டு பேர் அமர்ந்து கொண்டிருந்தனர். ஒரு கோடியில் மிருதங்கம், மறு கோடியில் வயலின். மற்ற பலரும் பாடுபவர்கள். நடுநாயகமாக உட்கார்ந்திருந்தவர் பஞ்சகச்சம் அணிந்து இடையில் ஒரு வஸ்த்திரத்தை அணிந்துகொண்டு மேல்சட்டை அணியாமல் நெற்றியில் குழைத்துப் பூசிய திருநீறு, சந்தனம், குங்குமம் திகழ கண்களை மூடிக்கொண்டு சிறிது தியானம் செய்துவிட்டு மெல்ல பஜனையைத் துவக்க, மற்றவர்கள் உடன்பாட, எடுத்த எடுப்பிலேயே பஜனை களைகட்டத் தொடங்கிவிட்டது.

பாட்டு ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து மேடையில் இருந்த ஒவ்வொருவராகப் அடியெடுத்துக் கொடுக்க மற்றவர்கள் தொடர்ந்து பாட, பாடகர்கள் தங்கள் முழுத் திறமையையும் காட்டிப் பாடிக் கொண்டிருந்தனர். நேரம் ஓடினதே தெரியவில்லை.

ரமா பிறந்து வளர்ந்தது எல்லாம் தஞ்சை மாவட்டத்தில் ஒரு சாதாரண ஊர். அங்குள்ள பஜனை மடத்தில் அவ்வப்போது ஸ்ரீராமநவமி, ஸ்ரீஜெயந்தி போன்ற நாட்களில் பஜனைகள் நடக்கும். அங்கெல்லாம் இதுபோன்ற பெரிய கூட்டமோ, பாடுவதற்கு புகழ்பெற்ற பாகவதர்களோ வருவது கிடையாது. அவரவர்க்குத் தெரிந்த பாடல்களைப் பாடுவார்கள். எந்த வரிசையில் எந்தெந்த சுவாமிகள் பெயரில் பாடவேண்டுமோ, பாடிவிட்டுக் கடைசியில் அனுமன் வணக்கத்தோடு பஜனை முடியும், பிரசாதங்கள் வழங்கப்படும்.

இங்கு பாடும் பாகவதர்களோ புகழ்பெற்றவர்கள். ஒவ்வொருவரும் தத்தமது திறமை வெளிப்படும் வண்ணம் பாடிக் கொண்டிருந்தார்கள். அதிலும் ரமா கிராமத்தில் கேட்டபடி சாதாரண பஜனைப் பாட்டுக்கள் இல்லை. இங்கே புதிதாக பண்டரீபுரம் விட்டலனின் புகழ் போற்றும் அபங் எனும் தனிவகை வேகம் நிறைந்த பாடல்கள். அந்த பாடல்கள் ஒவ்வொன்றுக்கும் கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் கைகளைத் தலைக்கு மேல் தூக்கி தாளமிட்டுத் தாங்களும் பின்பாட்டுப் பாடிக் கொண்டிருந் தார்கள். இந்த அற்புதமான சூழ்நிலைக்குச் சற்றும் பொருந்தாத வகையில் ரமாவின் குழந்தை முனக ஆரம்பித்தது.

“என்னம்மா வேணும்? ஏன் முனகறே?” என்று குழந்தையை வினவினாள் ரமா.

குழந்தை பதில் சொல்லாமல், வலது கை விரல்களை மடக்கி, கட்டைவிரலை மட்டும் நீட்டி வாய்க்குக் கொண்டு போய் தனக்குக் குடிக்கத் தண்ணீர் வேண்டும் என்று ஜாடை காட்டியது.

ரமா தன் கணவனிடம் கேட்டாள், “குழந்தைக்குக் குடிக்கத் தண்ணீர் வேண்டுமாம், பாருங்கோ, எங்கேயாவது இருக்கா என்று” என்றாள்.

அவனுக்கோ பஜனை சுவாரசியம். “இப்போ தண்ணீருக்கு எங்கே போறது. வரும்போதே கையிலே கொஞ்சம் பாட்டிலில் பிடித்துக் கொண்டு வந்திருக்கணும்.” என்றான்.

அப்போது தங்களுக்கு முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு அம்மாள் கையில்லாத ரவிக்கையும், கழுத்து நிறைய நகைகளுமாக அமர்ந்து பஜனைக்கு ஏற்ப தாளமிட்டுக் கொண்டிருந்தாள். அவள் மடியில் ஒரு பிளாஸ்டிக் கூடை. அதில் ஒரு எவர்சில்வர் டப்பா, அதனோடு ஒரு பாட்டிலில் குடிநீர். அந்த அம்மாளைக் கேட்டுக் கொஞ்சம் தண்ணீர் வாங்கி குழந்தைக்குக் கொடுக்கலாமே என்று எண்ணமிட்டு, அதை ரமணனிடம் சொன்னாள் ரமா.

அவன் மெல்லா அந்த அம்மாளிடம், “மாமி! குழந்தை தாகம் என்று அழுகிறாள். உங்க பாட்டில் தண்ணீரைக் கொஞ்சம் கொடுங்களேன். துளி கொடுத்துட்டு தந்துடறேன்” என்றான்.

அந்த அம்மாளுக்கு பஜனை கேட்பதை இடையூறு செய்த கோபமோ என்னவோ, சட்டென்று திரும்பி “அதெல்லாம் இல்லை. எனக்கு வேணுன்னு கொண்டு வந்திருக்கேன். வேணும்னா நீங்க கையிலே கொண்டு வந்திருக்க வேண்டியதுதானே. வெளிலே டிரம்ல வச்சிருப்பான் போய் கொண்டு வந்து கொடுங்கோ” என்று பட்டென்று சொல்லிவிட்டுத் திரும்பிக் கொண்டாள்.

ரமணனுக்கு அதிர்ச்சி. குடிக்க அவசரத்துக்குத் தண்ணீர் கொடுக்கக்கூட மறுப்பா. கிராமங்களில் சொல்வார்கள். கஞ்சனைப் பற்றி சொல்ல, அவன் தவிச்ச வாய்க்குத் தண்ணீர் தரமாட்டான் என்று. அதனை இன்று நேரடியாகப் பார்க்கவும், கேட்கவும் சந்தர்ப்பம் ஏற்பட்டுவிட்டதே.

கூசிக் குறுகிப் போனான் ரமணன். இப்படியும் மனிதர்களா? இவர்கள் பஜனை கேட்டதாலோ, அல்லது தாளமிட்டுக் கொண்டு விட்டலனைப் பாடியதாலோ இவர்களுக்கு என்ன புண்ணியம் வந்துவிடப் போகிறது. சே! என்ன மனிதர்கள் என்று மனதில் குமுறினான்.

தன் மனதில் ஏற்பட்ட அவமானத்தை, எரிச்சலை அடக்கமுடியாமல் அடக்கிக் கொண்டாள் ரமா. பெண் ஜன்மம் இரக்கம் உள்ளது என்பார்களே. இந்த ‘ரவிக்’ அதெல்லாம் இல்லாத ஜென்மம் போலிருக்கிறது. தாகத்தில் தவிக்கும் ஒரு குழந்தைக்குத் தன்ணீர் தர மறுத்துவிட்டு எனக்கு வேணும் என்று சொல்லும் அவள் பெரிய இடத்துப் பெண் என்பது தோற்றதிலிருந்தே தெரிகிறதே. இவர்களுக்கு மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் சக்திகூட இல்லாமல் போய்விட்டதே. இவர்களுக்கெல்லாம் பஜனை ஒரு கேடா என்று நினைத்தாள் ரமா.

ஒரு வழியாக குழந்தையை சமாதானம் செய்யவும் பஜனை முடியவும் சரியாக இருந்தது. கூட்டம் எழுந்து அந்த மண்டபத்தைவிட்டு வெளியேறத் தொடங்கியது. வாயிற்படியைத் தாண்டி மண்டபத்தின் முகப்புக்கு வரும் போது அந்த ‘ரவிக்’ பெண்மணி யாரிடமோ பேசிக்கொண்டு போவது கேட்டது ரமாவுக்கு.

அவள் சொல்கிறாள், “இந்த பஜனையைக் கேட்டது எத்தனை புண்ணியம் தெரியுமோ? என்ன புண்ணியம் பண்ணினோமோ, இன்னிக்கு இதுபோல ஒரு பஜனையைக் கேட்க முடிஞ்சுது. அடடா! என்ன பாட்டு! மனசை அப்பிடியே உருக்கிட்டா” என்று.

ரமாவின் மனம் உரக்கக் கூவியது, இவர்களுக்குக் கிடைத்த புண்ணியம் இவர்களது எண்ணத்தாலா அல்லது செயலினாலா? என்று. “என்ன முணுமுணுக்கிறே?” என்றான் ரமணன். “ஒண்ணுமில்லே சீக்கிரமா வாங்கோ, வீட்டுக்குப் போய் குழந்தைக்குக் குடிக்க ஜலம் கொடுக்கணம்” என்று நடையைக் கட்டினாள் ரமா.

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “எத்தனை புண்ணியம் தெரியுமோ?

 1. தண்ணீர் தர மறுத்த அந்த பெண்மனி கர்நாடகத்துக்காரராக இருப்பாரோ (ச்சும்மா..தமாசுக்கு).

  பெரும் புண்ணியம் சுமந்து செல்லும் அந்தப்பெண்மனியின் செயலைவிட அந்தப்பெண்ணை வெளிச்சம் போட்டு கான்பித்தது அவரின் உரையாடலே. கதையின் மறைவில் வரும் நீதி நல்ல சிந்தனையை நமக்கு உண்டாக்குகிறது.

  கோபாலன் ஐயா அவர்கள் தொடர்ந்து தம் ஆக்கங்களை இங்கு வெளியிட வேண்டுகிறேன்.

 2. மிகவும் யதார்த்தமான ஆனால் ஆழமான இன்றைய “மனிதர்களின்” (பெரிய்ய்ய்ய மனிதர்களின்) போக்கை சொல்லோவியமாக படம் பிடித்துள்ளீர்கள் ஐயா.

  உதவி எனக் கேட்டு, தெரிந்தவர்கள் வந்தாலே ஆறாம் விரலைப் போல ஒதுக்கும், ஒதுங்கும் மனிதர்கள் நிறைந்த உலகம். இன்றைய பெரிய மனுஷர்கள் பெரும்பாலானோர் மனிதாபிமானம் அற்றவர்கள். நிழலில் இருப்பதால் வெயிலின் கொடுமையே இல்லை என்று சாதிப்பவர்கள்.

  நிற்க.

  நாம் பூர்வ ஜன்மாவிலே பிறத்தியாருக்கு உதவி பண்ணி இருந்தால் தானே இப்போ நமக்கு வேண்டிய உதவி வேண்டிய நேரத்தில் வரும்? வங்கிக் கணக்கில் பணமில்லாதவன் ATM அட்டைக்கு ஆசைப் படக்கூடாது. இது நமக்கு நாமே சொல்லித் தேற்றிக் கொள்ளும் உத்தி.

  உதவி என்று ஒருத்தர் வரும் போது இதை நினைத்தால், ஆறுதலாக நாலு வார்த்தையாவது தரத் தோன்றும். நாளைக்கு நமக்கும் இந்த நிலை வரலாம் என்று உரைக்கும்.

 3. ஒரு குழந்தையின் மீதேறி நின்று கொன்(ண்டு )று கோபுரத்தை ரசிப்பது எத்தனைப் புண்ணியமோ! அத்தனைப் புண்ணியம் தான் இது.

  மனித நேயமில்லாமல் திரியும் இவர்களுக்கு மகேசன் தான் எப்படி அருளுவானோ!
  பாவ புண்ணியத்தின் வித்தியாசம் தெரியாமல் இன்னும் இப்படி எத்தனை பேரோ!

  மனித நேயம் தான் புண்ணியம் என்பதைக் கூறிய கதை. பகிற்விற்கு நன்றிகள் ஐயா!

 4. பிப்ரவரி 1980 ராணி முத்து பத்திரிகை (முத்து #134), பக்கம் 19இல் சிறந்த எழுத்தாளர் டாக்டர். லக்ஷ்மி அவர்களின் “முருகன் சிரித்தான்” என்ற கதை வெளிவந்தது.

  முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வெளி வந்த அக்கதையில் ஒரு வரி வரும்: “ஒருவருடைய உண்மை உருவம் தெரிய வேண்டுமென்றால் அவருடன் நெருங்கிப் பழக வேண்டும். தொலைவில் இருக்கும் பொழுது மிகவும், தூயவர்கள் போல் தோன்றுகிறவர்களை நெருங்கினால் உண்மை நம்மை அதிசயக் கனவாக்கும்”.

  இந்த வரிகளை மீண்டும் நினைவுபடுத்திய கதை.

  வணக்கங்கள், ஐயா.

  பணிவன்புடன்,
  புவனேஷ்வர்

 5. எதார்த்தம் என்ன வெனில் இன்று ரயில் பஸ் பயணம், சினிமா தியேட்டர் ஆகிய பொது இடங்களில் தண்ணீர் குடிக்க முடியாத அளவுக்கு மாசு படிந்துள்ளது. எனவே லிட்டர் 15,20 தொகை கொடுத்துவாங்கியவர்கள் பிறருடன் தண்ணீரைப் பகிர மறுக்கிறார்கள். சில ஆஸ்துமா போன்ற நோயாளிகள் கொதிக்க வைத்த நீரைக்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கும் அதனைப் பகிரத் தயக்கம் இருக்கிறது.

  ரமா குழந்தையுடன் செல்லும் இடங்களுக்கு பால், தண்ணீர், பிஸ்கோத்து ஆகியவற்றை சுமந்து செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.  

  கதை நன்றாக உள்ளது. தொடருங்கள் கோபாலன்ஜி!

 6. இப்போதைய காலகட்டத்துக்குத் தேவையான, மிக அருமையான பகிர்வு!!. பஜனை கேட்பதால் மட்டுமா பகவான் புண்ணியக் கணக்கை  அதிகரிக்கிறான்?!!. நம் உள்ளே அந்தர்யாமியாய் இருந்தல்லவோ படியளக்கிறான்!!. தொடர்ந்து பல பதிவுகள் தர தங்களை வேண்டுகிறேன். மிக்க நன்றி!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *