Tag: சு. ரவி

  • ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

    வணக்கம், வாழியநலம்

    கார்த்திகை முதல்நாள்.

    கோடானுகோடி ஐயப்ப பக்தர்கள் ஐயனின் தரிசனம் விழைந்து
    பரவசத்தோடு துளசிமணிமாலை தரித்து விரதம் தொடங்கும் தினம்!

    இந்நன்னாளில் ஐயப்பன் மீது இயற்றப்பட்ட பஞ்சகமும், ஐயனின் எண்ணெய்வண்ண ஓவியமும் இணைப்பாக..

    Ayiappan Finished Oil on Canvass 2

    அடியொன்றுக்கு ஒற்றெழுத்து நீங்கலாக 21 எழுத்துகள் என்று அமைந்த விருத்தப் பாக்கள்…

    பார்க்க, படிக்க, ரசிக்க..

    நடைவழி தொடரும்…

    சு.ரவி

    ஐயப்பன் பஞ்சகம்

    சீலமுயர் வாழ்வை யொரு யோகமெனவே பயிலும் சாதகர்தமைக்
    காலனொருபோதும் அணுகாதபடி நாளுமவன் காத்தருளுவான்!
    நீலமுகி லாடுமலை சோலைபல சூழுமலை நீலிமலையாம்
    வாலியணுகாதமலை வாழுமிறை பாதமலர் வாழ்த்துமனமே!

    யானெனதிலாத நிலையோடுபல காடுமலை ஏறிவருவார்
    தானவர்தம் காவலென வீடுமனை வாசலவன் காத்தருளுவான்!
    யானைகள் உலாவுமலை, வானரமி லாதமலை யாளுமரசன்
    தேனமர் துழாய் புரளும் தோளழகன் பாதமலர் தேடுமனமே!

    எண்ணிய எலாமருளும் ஏழைபங்காளான் சிவபாலன் இவனை
    நண்ணும் அடியார்களொருபோதும் நலியாதபடி காத்தருளுவான்
    திண்ணிய மரங்கள் உயர் கானகம் அடர்ந்தமலை காந்தமலைமேல்
    விண்ணிலெழு ஜோதிமல ரானபர தேவனை விரும்பு மனமே

    பூரணை மணாளனவன், புஷ்கலையின் காதலனைப் போற்றுமடியார்
    தாரணியில் பேறு,புகழோடு பல காலமுறக் காத்தருளுவான்!
    நாரணியும், ஆறணியும் நாயகனும் கூட உருவாகி மலை மேல்
    பூரண நிலாவென உலாவும் அவன் பொன்னடிகள் எண்ணு மனமே!

    மேதினியில் ஏதிலிகள் தோழனவன் மாமலையைத் தேடுமடியார்
    சோதனையுறாதபடி, சோர்வு தழுவாதபடி காத்தருளுவான்!
    வேதஒலி சூழுமலை,வேடுவரில் யோகியவள் வாழுமலை மேல்
    நாதவடிவானவனை, பூதகண நாயகனை நண்ணு மனமே!

    சு.ரவி

    Share
  • சச்சின் டெண்டுல்கர் – இந்தியக் கிரிக்கெட்டின் ஒரு சகாப்தம்

    சு. ரவி

    SACHIN TENDULKAR

    இச்சிறு  பாலகன் தான்

    இந்திய  நாட்டைப் புகழின்

    உச்சியில் ஏற்றிவைத்தான்

    உண்மையில் கிரிக்கெட்டுக்கே

    அச்சினைப் போலே நிற்பான்;

    ஆணிவேர் போலே ஆவான்

    சச்சினைப் போலே இங்கே

    சகாப்தமாய் நிற்பார்  யாரே?

     

    எத்தனை சதங்கள்? மொத்தம்

    எத்தனை  ஆயிரங்கள்?

    எத்தனை களங்கள் ? மற்றும்

    எத்தனை சாதனைகள்?

    அத்தனை  உயரம் கண்டும்

    அணுவள வேனும் கருவம்

    சச்சினைத் தொட்டதாகச்

    சரித்திரம் சொன்ன தில்லை!

     

    சாதனை நிகழ்த்தும் போதும்

    சட்டென வீழ்ந்த போதும்

    சோதனையாக நடுவர்

    சொதப்பிடும் தீர்ப்பின்போதும்

    யாதொரு சலனம் தோன்றா

    ஓவியத் தலர்ந்த பூவாய்

    மேதகு கம்பன்  வாக்கின்

    மெய்ப்பொருள் போலே நிற்பான்!

     

    கறங்கெனச் சுழலும்  மட்டை

    கையிலே தாங்கும் வீரன்

    விறல்மிகும் ஆட்டம் கண்டு

    வியந்தவர், பந்து வீச

    மறந்தவர், களத்தில் நிற்க

    மருண்டவர், பந்து வீச்சைத்

    துறந்தவர்,துரத்திசென்று

    துவண்டவர்-எத்தனைபேர்?

     

    நிருத்தனப்  பாதம்  வைத்து

    நீவிளையாடி உந்தன்

    குருத்திளம்   தோள்கள் மீது

    குன்றெனச் சுமந்தாய்! உனபோல்

    ஒருத்தரும் இருந்த தில்லை!

    ஓய்வினை விருப்பம் கொண்டாய்!

    வருத்தமாய்  விழிநீர் சோர

    விடைகொடுக் கின்றோம்! வாழி!

    Share
  • சூரன் முக்தி

    சு. ரவி

    034

    பாடல் ஒலி வடிவில்:

    அண்டம் பகி ரண்டம் பொடிபட,அலை
    பொங்கும் கடல் சுண்டும் படியெரியழல்
    எங்கும் எழ கங்குல் பகலறயுக
    அந்தம் என மின்னொளிர் வேலாடும்

    கட்டற்றிடும் எட்டுத் திசைகளும், ஒளி
    வெட்டித் தறிகெட்டுச் சுழலுற,முகில்
    சட்டச்சட சட்டச் சடசடவென
    வெற்றிப் பறை கொட்டி யிடித்தாடும்

    பண்டஞ்சிய நெஞ்சங் களில் ஒளிவர
    பண்பஞ்சிய நெஞ்சங் களில் இருளுற
    விண்கொண்டெழு க்ரௌஞ்சம்சிறு துகளுற
    எங்கெங்கும் எழுந்தது போர்மேகம்

    பற்றற்ற மனத்துத் தவமுனிவரின்
    பக்திக்கனல் பற்றிக் கணகணவென
    நெற்றிப் பொறியுற்றுச் சிவனருளிய
    சக்திக் கனல் சீரலைவாய் மேவும்!

    மண்ணஞ்சிய சிங்கன் தலையொருபுறம்
    துண்டம்பட அங்கம் புழுதியில் விழ
    கந்தன்படை விஞ்சும் ரணகளமதில்
    பொங்கும் செங்குருதியின் ஆறோடும்

    மட்டற்ற மகிழ்ச்சிக் களியொடு இரை
    தட்டற்று கிடப்பக் கழுகலகைகள்
    நிர்த்தத்தொடு சப்தக் குலவைகளிட
    சுற்றத்தொடு தாரகன் தான்வீழும்

    மண்டும்துயர் நெஞ்சம் தனில்புரையுற
    தன்னந்தனி நின்றும் தனதகம்எழ
    சின்னஞ்சிறுவன்என் றொருநினைவுடன்
    செந்தில்புரம் சூரனின் தேர்மேவும்

    முத்துச் சுடர் வெட்கக் குறுநகையொடு
    சக்திப் படைதொட்டுச் சரவணபவன்
    முக்திப் பதம் வைக்க ஜெய ஜெயவென
    எத்திக் கிலும் முருகனின் பேர்பாடும்!

    Share
  • கலைமகள் தினம்

    சு. ரவி

     

    வணக்கம், வாழியநலம்

    1979ஆம் ஆண்டு. சென்னை அசோக்லேலண்ட் நிறுவனத்தில் பணிபுரிந்த தினங்கள். உடன் பணியாற்றிய ராமகிருஷ்ணன் அற்புதமான குரல்வளம் உடையவர் – ஹிந்தித் திரை இசையின் அந்நாள் மெலடிகளைப் பாடுபவர் – அவரது விருப்பத்திற்காக

    (Senior- Late) திரு ரோஷன் அவர்களின் இசையில் அமைந்த ” Oh Re Taal Mile Nadi Ke Jal Mein”  ( காணொலி :▶ Oh Re Taal Mile Nadi Ke Jal Mein Mukesh Film Anokhi Raat (1968) Roshan / Indeewar – YouTube  http://www.youtube.com/watch?v=eUq7jDt_sgc ) பாடலின் மெட்டில் ஆஃபீஸ் சரஸ்வதி பூஜையில் அவர் பாட,  எழுதிய கலைமகள் துதி இதோ:

    Sarasvathi Finished 1

     

    படகே போல் உயிர் வாழ்வெனும் நதிமேல்

    விரைந்திடும் ஆறங்கே

    கரையிலா ஆழியில் விழுமுன்

    கலாதேவிவா!                                            ( படகே)

     

    அறிவெனுமோர் தீபம் ஒளிர்ந்தால்

    உடலம் இதோர் கோவிலாம்

    உடலம் இதோர் கோவிலாம்

     

    அறிவருள்வாய் கோவிலில் நானும்

    உனதுருவம் காண்கிறேன்!
    உனதுருவம் காண்கிறேன்!

    என்கலைவாணீ !

    தாமரைமேல் மேவிடும் தாயே!

    காலமெலாம் போகுதே!

    வாழ்வில்நான் அறியாமையினால்

    வருந்தலாமா?                                      (படகே)

     

    இசையெனும் ஓர் தேரில் இவர்ந்தால்

    இக உலகோர் தூசியாம்

    இக உலகோர் தூசியாம்

    இசையருள்வாய் ஒருகணமேனும்

    மன்னவனாய் வாழ்கிறேன்

    மன்னவனாய் வாழ்கிறேன்!

    என் கலைவாணீ !

    நான்மறைகள் ஓதிடும் தாயே

    நாட்கள்விரைந் தேகுதே!

    தேவிநீ அருள்புரியாமல்
    வருத்தலாமா?                                       ( படகே)

    Share
  • வடமுல்லை வாயில் பதிகம்!…3

    சு.ரவி

     

    வணக்கம், வாழியநலம்,

     

    உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பது மறந்து,தாழ்மையுற்று

    வாழ்ந்தநாட்களுக்காக மனம் வருந்தி முறையிட்ட பாடல் இது..

     

    ராகம்: திலங்

     

    பழுதுபட்டேன், நெஞ்சில் வஞ்சமும் கோபமும்

    வளரவிட்டேன், பொய்ம்மையைப்

    படரவிட்டேன், ஈன நெறிகளில் சிந்தையைப்

    புரளவிட்டென்; வினையெனும்

    விழுதுவிட்டேன், இம்மை, மறுமையென் றிரண்டையும்

    நழுவவிட்டேன்; தீய்த்திடும்

    விரகெனும் ஜ்வாலையில் கண்மூடி நித்தமும்

    விறகையிட்டேன்; நின்பதம்

    தொழுது நெக் குருகாமல்  தூயவாழ் நாளெலாம்

    தொலைத்துவிட்டேன்; இறுதியில்

    துணையென்று நின்னையே சார்ந்துவிட்டேன், எந்தன்

    துயர்மாற்றி அருளுவாயே!

    அழுதுநிற்கும் பிள்ளை அருமறைத் தமிழ்பாட

    அமுதம் கொடுத்த் தாயே!

    வடமுல்லை வாயிலில் படர்முல்லையே என்னை

    வாழ்விக்க வரும் அன்னையே!

    இணைப்பில் கர்ப்பரக்ஷாம்பிகை ஓவியம்- close up

     

     

    Share
  • அம்பாள் நவ வெண்பா!…

    சு.ரவி

     

    AKILANDESWARI FINISHED 2

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    வணக்கம், வழியநலம்

     

    இம்மாதம்  ஐந்தாம் தேதிமுதல் நவராத்திரி தொடங்குகிறது.

    நாள்களும் கோள்களும் நலமருள வேண்டும்

    அம்பாள் நவ வெண்பாவும், அன்னை அகிலாண்டேஸ்வரி எண்ணெய் வண்ண ஓவியமும் இணைப்பில்

    பார்க்க, படிக்க, ரசிக்க…

     

    அம்பாள் நவவெண்பா

     

    இரவி,மதி, செவ்வாய், புதன், வெள்ளி, மந்தன்,

    சுரகுருவும், சுற்றும் நிழலுருவாம்-அரவினிரு

    கூறும்   நலம்சேர்க்கத்   தேவியவள்  மீதுநயம்

    ஊறும்   கவிதை   உரை.

     

    குவலயம்    யாவும்  குளிர்விழி     யாலே

    சிவலயம்  ஆக்கிச் சிலிர்ப்பாள் – அவளருளால்

    சுற்றிவரும் கோள்கள்  சுகமளிக்கும்; பாதமலர்

    பற்றிவிடு   பாரமிலை   பார்!

     

    கோள்களொரு  நாலைந்தும்  கோடி நலமருளத்

    தாள்கள்  பணிந்தேன்  தயாபரீ!-  நாளுமென்

    நாவீணை   மீட்டிக் கவிதை  இசைபொழிவாய்

    தேவீ,  பரதேவ  தே!

     

    ஞானப்பால்  உண்டசிசு  பாடும்  பதிகத்தால்

    வானத்துக் கோள்கள்  வணங்கினவே! -நானுமுன்

    பிள்ளையடீ,  பிச்சி!  பிறகெனக்குக் கோளகளினால்

    இல்லையடீ  அச்சம்  இனி!

     

    மேருவா   சம்செய்யும்  மின்னற் கொடியாளைப்

    பேரவா கொண்டு  கவிபாடக் – காருவா

    வெள்ளுவா ஆகும்  விரிவானின்  கோள்களெலாம்

    உள்ளுவார்க் கென்றும் உறவு!

     

    பெம்மானைப் பாடியவள்  பேரண்டக் கோளையெலாம்

    அம்மானை  ஆடி  அகமகிழ்வாள் – அம்மானை

    எண்ணும் அடியாரை  நட்பாய்   நவகோளும்

    நண்ணும், புரியும்  நலம்.

     

    கவிதா   மயமாய்க்   கனலும்  மலரை

    பவதா  ரிணியைப்  பணிவாய் – நவகோளும்

    ராசியே  தானாலும்  ராஜயோ  க்ம்கூட்டி

    ஆசி   அருளும்   அறி!

     

    நீள்வட்டப்  பாதை  நியதியொடு  சுற்றிவரும்

    கோளெட்டும்,   ஒன்றும்   நலமருளத் – தாள்தொட்டேன்

    தர்க்காதி  சாத்திரங்கள்   தேடி  அறியவொணா

    துர்க்கா  பரமேஸ் வரீ!

     

    மேடமுதல்  மீனம்  இடையிட்ட பன்னிரண்டு

    வீடுலவும்   கோள்கள்  நலமருளும் -காடுலவும்

    காபாலி  மீதடங்காக்  காதலுறும்  கற்பகக்

    பாபாதம்  நீபணிந்தக்  கால்.

     

    வெற்றி  கொடுப்பாள்   வினைதீர்ப்பாள், கோளகளுமைச்

    சுற்றிவரச்  செய்வாள்  சுகமளிப்பாள்-  நெற்றித்

    திலகம்  இறைக்கும் திருவொளியால்  இந்த

    உலகம்  புரக்கும்  உமை.

     

    Share
  • ஈஸ்வர அல்லா தேரே நாம்!

    சு. ரவி

    வணக்கம்,வாழியநலம்

    அண்ணல் காந்திஜியின் ஜயந்திக்கான பகிர்வு.

     MK Gandhiji Meditating Dec 6th 2

    தியானநிலையில் அமர்ந்திருக்கும் காந்திஜியின் இந்த ஓவியத்தை வரைந்ததும், மேலே அவருக்குப் பிடித்தமான “ரகுபதி ராகவ ராஜாராம்” பாடல் வரிகளை எழுதும் போது என்னை அறியாமல் ஏனோ அப்பாடலின் இரண்டாம் வரியான் “ஈஸ்வர அல்லா தேரே நாம்” என்ற வரிகளை எழுதிக் கையொப்ப்ம் இட்டு வரைந்த தேதியைப் பதிவு செய்தேன்..

    என் மனைவி வஸந்தியிடம் அதைக்காட்டிய போது அவள் சுட்டிக் காட்டிய தேதிப் பொருத்தம் கண்டு வியந்தேன்.

    ஆம், வரைந்த தேதி DEC 6th…

    சு.ரவி

    பார்க்க,ரசிக்க…

    Share
  • சுவாமி விவேகானந்தர் 150 வது ஜயந்தி நினைவாஞ்சலி

    சு. ரவி 

    Gnaana Suuriyan  2

    தன்வலி அறியா தாமச நிலையில்Swamiji 31 july 09 2
    ஆன்ம பலத்தை அறவே இழந்து
    மேனாட்டு மோகம் தானாட்டுவிக்க
    வேத மதத்தின் வேர்கள் வெம்பி
    மூட மேகங்கள் மூடிக் கவிந்து
    “பாரதம் என்றால் பாமர தேசம்
    பாம்புகள் நெளியும், பட்டினி மலியும்”
    என்றே உலகம் நம்பிய நேரம்-

    வங்கதே சத்தில் கங்கையை விஞ்சிப்
    பொங்கும் அருட்புனல் ஆகப் பெருகி
    பவதா ரிணியின் பரம பக்தராய்
    அவதார புருஷராய்ப் பரமஹம்ஸராய்
    விளங்கிய முனிவரின் விவேகக் கொழுந்தாய்

    தங்கச் சூரியன் தகதக வென்று
    கீழை வானில் கிளர்ந்து எழுந்தது!
    வேத மதத்தை மூடியிருந்தSwamiji 30 july09 2
    தூசினை எல்லாம் துலக்கி அழித்து
    இந்த மதத்துக் கீடிலை என்றது.

    சோம்பிக் கிடந்த இந்திய இளைஞரைத்
    தட்டி எழுப்பித் தன்னிலை உணர்த்தி
    “எழுமின், விழிமின், இலக்கினை முயன்று
    தொடுமின்” என்று தோள்தட்டிச் சொன்னது!

    தெய்வங்கள் என்று தேங்கிய மதத்தை
    மனிதம் வாழ மடைமாற்றி விட்டது!

    உண்மை என்றுதான் உணர்ந்ததை மட்டும்
    உலகினுகெல்லாம் உரக்கச் சொன்னது!
    சொல்லினுக்குளே சோதியை ஏற்றிக்
    கேட்பவர் உள்ளே ரசவாதம் செய்து
    துவண்டு கிடந்த தசைநரம்பெல்லம்
    இரும்பாய் எஃகாய் முறுக்கேற வைத்தது!

    ஒருநூ றாண்டுகள் உருண்டோடி னாலும்Vivekananda 2
    அல்லிக் கேணி அளசிஙக னுக்கு
    எழுதிய மடலின் ஒவ்வொரு எழுத்தும்
    இன்று படிப்பவர் எவர் நெஞ்சினிலும்
    பரவசத் தீயைப் பற்றவைத்திடும்!

    வேதாந்த சிம்மமாய் கர்ஜித்த போதும்
    அந்தர ங்கத்தில் அன்னைமாகாளிமேல்
    ஆழ்ந்த பக்தியில் தோய்ந்திடும் இதயம்!
    பரம ஹம்ஸராம் பேரருள் ஏற்றிய
    ஞான சூரியன், ஞாலம் போற்றும்
    வீரத் துறவி விவேகாநந்தரின்
    பாதத் தாமரை பணிந்து வணங்குவாம்!

    சு.ரவி

     

     

     

    Share
  • வடமுல்லைவாயில் பதிகம் 2

    SivakaamaSundhari
    வணக்கம், வாழியநலம்,

    பொன்னோ,பொருளோ, பெயரோ, புகழோ- எதிலும் நாட்டமில்லமல், அவளையே நினைந்த தினங்களில்
    அவளோடு ஒரு உரையாடல்…

    இணைப்பில், சிவகாமசுந்தரி கோட்டோவியம்

    பார்க்க,  படிக்க, ரசிக்க…

    ராகம்: ஆபேரி

    பொருள்தேடி வாழாமல்  பொழுதெலாம் வாழ்க்கைக்குப்
    பொருந்துமோர் பொருள்தேடினேன்
    பொன் தேடி அலையாமல், பெயர்,பேறு விழையாமல்
    புரியாமல் உனைநாடினேன்!
    இருள்மூடும் இகவாழ்வில் எனைஆழ்த்த முடியாமல்
    இதமான ஒளிதேடினேன்
    இதமான ஒளிகாண முடியாமல் மனமெங்கும்
    துயர்சூழ மிக வாடினேன்!
    சுருளோடும்  சடையோனின் இடபாக வடிவே உன்
    சுந்தரப்   பாதங்களில்
    சுவையான கவிகோடி மலர்தூவ நீமகிழும்
    சுகமெனக் கருளுவாயே!
    அருள்கூடும் விழிகளாம் ஆனந்த வாரிதியில்
    ஐயனை ஆழ்த்தும் அழகே!
    வடமுல்லைவாயிலில் படர் முல்லையே எனை
    வாழ்விக்க வரும் அன்னையே!

    சு.ரவி

    Share
  • வடமுல்லைவாயில் வைஷ்ணவி

     

    சு. ரவி

    வணக்கம், வாழியநலம்,

    வடமுல்லைவாயில் தலத்து வைஷ்ணவி என்னைப் பலவேறு தருணங்களில் தன்பால் ஈர்த்துக்கவிதை கேட்பவள்.

    அவளோடு கவிதையாடிய சிலவற்றைப் பகிர்ந்துகொள்கிறேன்:

    இணைப்பாக வைஷ்ணவியின் கோட்டோவியம் ஒன்று
    பார்க்க, ( பாட) ரசிக்க,,,

     

    ராகம்: பூபாளம்


    VAISHNAVI  2
    ஈரைந்து மாதங்கள் தாய்கொண்ட சூலெனும்

    இருட்சிறை வாசத்திலும்
    இளமைப் பிராயத்தை எடுப்பார்கைப் பிள்ளையாய்
    இகவுலக நேசத்திலும்
    ஓரைந்து புலன்வழியி லேநைந்துருக்குலைந்
    தேதளர்ந்தேன் அம்மணீ!
    ஓசைகளாய்க் கவியும் ஆசை அலைக் கடலில்
    உள்மறையின் ஒலிகேட்கிலேன்!
    சீரைந்தெழுத் தோதி ஜீவன் கடைத்தேற
    சிறிதும் முயன்றதில்லை
    சிவனிலொரு பாதியே அவனியிதன் ஆதியே
    சிங்கார அகராதியே!
    வார்குழலில் மலர் சூடி மலரில்வண் டினம்பாடி
    வாழ்த்திசைக்கும் வண்ணமே,
    வடமுல்லைவாயிலில் படர்முல்லையே எனை
    வாழ்விக்க வரும் அன்னையே

    சு.ரவி

    Share
  • ஆனந்த விநாயகன்!

     

    சு.ரவி

    வணக்கம், வாழியநலம்

    நமக்குத் தெற்கில் நவராத்திரி போல, மஹாராஷ்ட்ராவில் குறிப்பாக புனே நகரின் நாயகன் விநாயகன் தான். விநாயக சதுர்த்தி தொடங்கி 10 நாட்கள், காணும் திசையெல்லாம் கணபதி!

    Dancing-Binayakar rotated

    பிறந்தநாள்கொண்டாட்டத்தில் குஷியாக ஆடிக்களிக்கும் இந்த விநாயகரையும் ரசிப்போமா…?

     

    Share
  • மஹாகவி பாரதியாருக்கு அஞ்சலி

    சு.ரவி

    வணக்கம், வாழியநலம்

    இன்று மஹாகவி பாரதியார் நினைவு தினம்.

    தமிழ் இலக்கியத்திற்குப் புத்துயிர் கொடுத்த கலைமகளின் தவப்புதல்வனை வணங்குவோம்!

    பாரதியின் பாதமலர் போற்றும் கவிதையும், அன்னாரின் திரு உருவ ஓவியமும் காண்க!

    பார்க்க, படிக்க, ரசிக்க…

    Mahakavi Bharathiyar 1

    மஹாகவி சுப்ரமண்ய பாரதியார்

    உலைப்பாகை ஊற்றியது போலே என்றும்

    ஒளிர்கின்ற விழிச்சுடர்கள், அதற்கு மேலே

    தலைப்பாகை கம்பீரம், தரைகா ணாத

    தருக்கோடு வான்நோக்கும் மீசை, நாட்டைக்

    குலைப்பார்கை ஒடித்தெறியத் துடித் தெழுந்த

    குமுறல்கள் ஊற்றெடுக்கும் நெஞ்சம்; அந்தக்

    கலைப்பாவை தவமிருந்து பெற்றுத் தந்த

    கவிச் செல்வம் பாரதியின் கழலே போற்றி!

    கடவுளிடம் வரம்கேட்டபோதும் கூடக்

    கைகட்டிக்கேட்காத தன்மானத்தன்

    இடர்களையும், தடைகளையும் இமைப்போதில் தன்

    இடர்களையும் கவிதைகளால் தகர்க்க வல்லான்

    சுடர்கின்ற சொற்களுக்குச் சொந்தக் காரன்

    ஸ்வரங்களிலே கவிதொடுத்த பாட்டுக் காரன்

    மடமைகளும், பழமைகளும் மலிந்த நாட்டை

    மலர்வனமாய் மாற்றவந்த தோட்டக் காரன்

    அரசியலோ, அறிவியலோ, ஆன்மீகத்தின்

    அடிவேரோ, அயல்மொழியில் கவிஞர் செய்த

    அரியபல இலக்கியமோ ஏதானாலும்

    அவன் தொட்டுப் பார்க்காத களமே இல்லை!

    விரல்தடவி வாணியவள் மீட்டிப் பாடும்

    வீணையவன்; கண்ணன் கைக் குழலும் ஆவான்!

    வரகவியாய் வந்துதித்த ஸுப்ரஹ் மண்ய

    பாரதியின் பாதமலர் போற்றி! போற்றி!

    Share
  • விநாயக சதுர்த்தி!…

    சு.ரவி

    Birth of Mahabharatham

    வணக்கம்,வாழியநலம்

    வேழமுகத்து விநாயகனை,
    ஏழிசை அருளிய இறையவனை,
    பனிமாமலை மேவிய சிவன் மகனை,
    இளையவன் சினமுறக் கனிவென்று,
    பின் அவன் மனம் மகிழ்வுற
    அருள்செய்தானை,
    வளைமுறி எயிறொடு வடமலையில்
    வளர் பாரதம் எழுதிய மதகளிற்றை
    அரக்கரினத்தை அழித்த களத்தில்
    ஆடிய நாயகி பாலகனை- மலர்
    நிகர்த்த பதத்தை மனத்தில் இருத்தி வணங்குவோம்!

    கற்பனை வளம் கொழிக்கக் காவியம் பாடும் வியாசமுனிவர் முன், ஒரு பள்ளிமாணாக்கனைப்போல் பணிவுடன் அமர்ந்து பாரதத்தை எழுதிப் பதிவு செய்யொம் கணபதியின் எண்ணெய்வண்ண ஓவியம் இணைப்பில்…

    கீழ்க்கண்ட இணைப்பில் சொடுக்கி, விநாயகர் மீது நான் எழுதி, நண்பர் ராஜகோபால் பாடிய 8 இசைப்பாடல்களைக் கேட்கலாம்.

    பார்க்க, கேட்க, ரசிக்க…

    Share
  • ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!..

    U Ve Sa 2
    வணக்கம், வாழியநலம்

    இன்று 5/9/13 (வியாழன்) ஆசிரியர் தினம்.

    எனக்கு எழுத்தும் எண்ணும் அறிவித்த என் அனைத்து ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் என்

    சிரம்தாழ்ந்த வணக்கங்கள்!

    உபாத்யாயர்களுக்குள் உயர்ந்தவர் மஹோபாத்யாயர்…

    அவர்களுக்குள்ளும் உயர்ந்தவர் மஹாமஹோபாத்யாயர்…

    இந்நன்னாளில், தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்களைத் தமிழ் உலகின்

    சார்பாக நினைவு கூர்ந்து அன்னாரின் ஓவியத்தை இணைத்து வணங்குகிறேன்.

    சு.ரவி

     

    Share
  • கோகுலாஷ்டமி சிறப்புப் பகிர்வு

     

    சு.ரவி

    வணக்கம் வாழியநலம்

    Gokulashtami 1

     

    “இதழ்த்தா மரைக்குள் கரத்தா மரையால்
    பதத்தா மரைசுவைக்கும் பாலன்- மிதக்கின்றான்
    ஆலிலைப் பாய்மேல்; அவனுங்கள் இல்லத்தில்
    காலிணை வைப்பன் கனிந்து.”

     

     

     

     

     

     

     

     

     

    Yasodai krishna

     

     

    “பண்வாய் இடைச்சி பரவசமாய்க் கண்ணனைக்
    கண்ணம்மா ஆக்கிக் களிக்கின்றாள்!- எண்ணில்
    இகம்பரம் கடந்த பரம்பொருள் இங்கே
    திகம்பரமாய் நிற்கின்ற தே!”

     

     

     

     

     

     

     

     

    Share