U Ve Sa 2
வணக்கம், வாழியநலம்

இன்று 5/9/13 (வியாழன்) ஆசிரியர் தினம்.

எனக்கு எழுத்தும் எண்ணும் அறிவித்த என் அனைத்து ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் என்

சிரம்தாழ்ந்த வணக்கங்கள்!

உபாத்யாயர்களுக்குள் உயர்ந்தவர் மஹோபாத்யாயர்…

அவர்களுக்குள்ளும் உயர்ந்தவர் மஹாமஹோபாத்யாயர்…

இந்நன்னாளில், தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்களைத் தமிழ் உலகின்

சார்பாக நினைவு கூர்ந்து அன்னாரின் ஓவியத்தை இணைத்து வணங்குகிறேன்.

சு.ரவி

 

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!..

  1. தமிழ்த்தாத்தா ஓவியத்துடன் கூடிய ஆசிரியர் தினத்துக்கான சிறப்பான பகிர்வு அருமை!.  ஏணி போல் இருந்து நம்மை ஏற்றி விட்ட ஆசிரியப் பெருமக்களை வணங்கும் தினமான இன்று, நானும் ஆசிரியப் பெருந்தகைகள் அனைவரையும் வணங்குகின்றேன். பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி!

  2. ஆசிரியர் தினம் என்றதும் எனக்கு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்த ஜெய்சிங்ராஜ் எனும் ஆசிரியப் பெருந்தகையின் நினைவு வந்து கண்களில் நீர் சுரக்கும். காரணம் உண்டு. 1954ஆம் ஆண்டு நான் அப்போதைய எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். வட ஆற்காடு என அப்போது சொல்லப்பட்ட வேலூர் மாவட்டத்தில் ஒரு நகரம். எங்கள் வகுப்பில் 42 பேர் இருந்தனர். அதில் என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ‘மாசிலாமணி’ எனும் மாணவர் அருகிலுள்ள கிராமத்திலிருந்து வருபவர், படிப்பில் ஒன்றும் சிறப்பு இல்லை எனினும் பேச்சு அதிகம். அப்போது சோஷல் ஸ்டடீஸ் என்றொரு பாடம். அந்த வகுப்புக்கு ஜெய்சிங்ராஜ் என்பவர் வருவார். நாற்பது வயதிருக்கும் அவருக்கு. நல்ல திடகாத்திரமான நபர். அமைதியாகவும், இறை உணர்வோடும் இருப்பவர். நன்றாக பாடம் நடத்துபவர். ஒழுங்கு கட்டுப்பாட்டை விரும்புபவர். ஒருநாள், அவர் வகுப்பு நடந்து கொண்டிருந்தது, மாசிலாமணி கவனம் தவறி வேறு ஒருவனிடம் பேசி அமைதியைக் குலைத்துக் கொண்டிருந்தான். ஆசிரியர் பெருந்தகை திரும்பி அவனைப் பார்த்து கண்டித்தார். மீண்டும் அதே நிலைமை. ஆசிரியர் கரும்பலகையில் ஒரு தேசப்படத்தை மாட்டி விளக்கிக் கொண்டிருந்தவர் கையிலிருந்த சாக்பீசை அவன் மீது வீசி மறுபடியும் கண்டித்தார். மாசிலாமணி எழுந்து நின்று அவரை முறைத்தான். அப்போது அமைதியானவரான அந்த ஆசிரியர்கூட கோபமடைந்து அவன் அருகில் வந்து கன்னத்தில் அடிக்க கையை ஓங்கினார். அடி விழக்கூட இல்லை, ஆனால் அவனோ தற்காப்புக்காக கையை ஓங்கி அவர் முகத்தில் அடித்துவிட்டான். அவர் திகைத்து ஒன்றும் சொல்லாமல் தன் நாற்காலியில் உட்கார்ந்துவிட்டார். மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டனர். வகுப்பு முடியும் வரை அமைதியாக உட்கார்ந்திருந்த ஆசிரியர் எழுந்து போய்விட்டார். ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குப் பெயர்போன பள்ளி அது. இவர் போய் தலைமை ஆசிரியரிடம் புகார் சொன்னால் போதும் மாசிலாமணி வீட்டுக்குப் போகவேனண்டியதுதான். அடுத்த வகுப்பு தொடங்கியது. எந்த நேரமும் பியூனின் வரவை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். மாசிலாமணி திருட்டு விழி விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். எல்லோரும் அவனைத் திட்டித் தீர்த்தார்கள். ஆனால் அன்று முழுவதும் ஒன்றும் நடக்கவில்லை. மறுநாளும், மறு வாரமும், மறு மாதமும் ஓடியது எதுவுமே நடக்கவில்லை. கடைசியில் பொதுத்தேர்வுக்கு முன்னதாக விடுமுறைக்கு முந்திய நாள். எல்லோரும் மகிழ்ச்சியோடு இருந்தோம். வகுப்பில் ஜெய்சிங்ராஜ் எல்லோருடனும் கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்தார். ஒருவன் அவரிடம் கேட்டான், மாசிலாமணி விவகாரம் புகார் செஞ்சீங்களா சார் என்று. சற்று அமைதியாக இருந்துவிட்டு அவர் சொன்னார், “நான் புகார் செய்திருந்தால் அவன் வாழ்க்கை நாசமாகியிருக்கும். ஒருவனுக்கு முடிந்தால் நன்மை செய்ய வேண்டுமே தவிர கெடுதல் செய்யக்கூடாது. அவன் அறியாமையால் செய்த பிழையை நான் அன்றே மறந்து விட்டேன், ஒருவரிடமும் புகார் அளிக்கவில்லை” என்றார். வகுப்பில் ஒரே அமைதி. மாசிலாமணி அழுதுவிட்டான். நாங்கள் அந்த ஆசிரியர் பெருந்தகையை இன்றுவரை மறக்கவே இல்லை.

  3. தமிழின் இளமையை உலகுக்குப் பறைசாற்றிக் கூறிய தமிழ் தாத்தாவின் ஓவியம் அருமை. அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

  4. நான் (ஒருவேளை எல்லோரும் அப்படியாகவும் இருக்கணும்) அதிகமாக அசைபோடுவது எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர்களைப் பற்றிய நினைவுகளையும். அவர்கள எல்லாம் மீண்டும் நேரில் சென்றுப் பார்ப்பேனா.. என்றும்; ஊருக்கு செல்லும் போது அவசியம் அனைவரையும் ஒவொவொரு ஊராகப் போய் தேடித் பார்த்து அவர்களின் கால்களிலே குடும்பத்தோடு விழுந்து வணங்கி ஆசிர் வதிக்கச் சொல்லணும் என்று எப்போதும் நினைப்பதுண்டு…

    எழுத்து அறிவித்தவன் இறைவன்… அந்த தெய்வங்களை எப்படி மறக்க முடியும். 

    அவர்கள் யாவரும் மகிழ்வோடு நீடோடி வாழ இறைவன் அருள வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். இந்த வலைப் பூவிற்கு வரும் ஆசிரிய பெருமக்களுக்கு எனது வாழ்த்துக்களும், வணக்கமும்!

    கோபாலன் ஐயா அவர்கள் கூறியக் கதையைக் கேட்கும் போது நல்ல ஆசிரியர் மிக உயர்ந்த மனிதர் என்பது புரிகிறது. பகிர்விற்கு நன்றிகள் ஐயா!

  5. குரு தினம் சிறப்பு பதிவுக்கு நன்றி. எனக்கு உடனே நினைவுக்கு வந்தவர் என் தமிழ் ஆசிரியர் புங்கனேரியான் (நடராசன்). அவர் தமிழ் செய்யுளை நடத்தும் முறையில் தான் எனக்கு தமிழ் மீது காதல் வரவே ஆரம்பித்தது. அடுத்து +2 வின் போது வேறு பள்ளியின் கணக்காசிரியர் மணி. எனக்கு கணக்கு என்றாலே கசப்பாய் இருக்கும் மதிப்பென்னும் சராசரிக்கும் கீழே தான் எடுப்பேன். இவரிடம் டியுஷன் சேர்ந்த பின் இரண்டு மூன்று மாதத்தில் ஏறுமுகமாகி பின் தொடர்ந்து 100 சதவீதம் மதிப்பென் பெற்று பள்ளி இறுதியிலும் 100 சதவீதம் எடுத்தேன்.

    இன்று அவர்களை நினைவுக்கு தந்த இந்த கட்டுரைக்கும் கட்டுரையை தந்த ரவி அவர்களுக்கும் மிக்க நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *