Tag: நாகேஸ்வரி அண்ணாமலை

  • ஒபாமாவின் ஜப்பான் விஜயம்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    1941-லிருந்து 1945 வரை நடந்த இரண்டாவது உலகப் போரில் ஜப்பானைப் பணியவைக்க அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா என்னும் ஊரின் மீது அணுகுண்டை வீசியது.  மனித வரலாற்றிலேயே முதல் முதலாக வீசப்பட்ட அணுகுண்டு இது.  (அமெரிக்கா வெடித்த இரண்டு அணுகுண்டுகளைத் தவிர அதன் பிறகு எந்த நாடும் மற்ற எந்த நாட்டின் மீதும் அணு குண்டு வெடிக்கவில்லை.)  இந்த அணுகுண்டு அந்நகரின் எழுபது சதவிகிதம் மக்களைக் கொன்றது அல்லது காயப்படுத்தி முடமாக்கியது.  அப்போது ஏற்பட்ட அணுக் கதிர் வீச்சினால் அதன் பிறகு ஒரு தலைமுறை மக்கள் பாதிக்கப்பட்டனர்.  ஹிரோஷிமாவில் போட்டது போதாதென்று மூன்று நாட்களுக்குப் பிறகு கொகுரா என்னும் ஊரைக் குறிவைத்து அங்கு காலநிலை சரியில்லாததால் நாகசாகி மீது இன்னொரு முறை அணுகுண்டை அமெரிக்கா வீசியது.  முதலில் மூன்று ஊர்களைத் தேர்ந்தெடுத்து, காலநிலைக்குத் தகுந்தாற்போல் இரண்டில் அணுகுண்டை வீச முடிவுசெய்ததாம் அமெரிக்கா.

    குண்டுவீச்சால் தாக்கப்பட்ட இடங்களில் ஒன்றை அப்படியே வைத்திருக்கிறார்கள்.  1996-இல் ஜப்பானுக்குச் சென்றிருந்த எங்கள் குடும்பமும் அதைப் பார்வையிட்டது.  அதற்கு அருகிலேயே அந்தக் கொடூர சம்பவத்தால் நிகழ்ந்த கோரக் காட்சிகளைக் கொண்ட ஒரு காட்சியகமும் இருக்கிறது.

    அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மே மாதம் 27-ஆம் தேதி ஹிரோஷிமா செல்லவிருக்கிறார்.  அங்கு நடக்கப் போகும் ஜி-8 நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ளப் போகிறார்.  ஹிரோஷிமாவில் போரில் நாசமடைந்த பகுதியில் இருந்த ஒரு கட்டடத்தை நினைவுச் சின்னமாக ஜப்பான் வைத்திருக்கிறது.  ஒபாமா அங்கு விஜயம் செய்ய விரும்புகிறார்.  பதவியில் இருக்கும்போது ஹிரோஷிமாவுக்குப் போகும் முதல் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாதான்.  ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்டபோது தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்திலேயே ஒபாமா அணு ஆயுதங்கள் இல்லாத உலகை உருவாக்கப் பாடுபடுவேன் என்று அமெரிக்க மக்களுக்கு வாக்களித்தார்.  பதவிக்கு வந்த பிறகும் அம்மதிரியான முயற்சிகளில் அவர் இறங்கியதற்காக 2009-இல் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.  (இன்னொரு அணு ஆயுதப் போரை அவர் தொடங்காமல் இருப்பதற்காகவும் நோபல் பரிசு வழங்கப்பட்டதாகக் கூறுவோரும் உண்டு.)

    ஒபாமா ஜப்பானுக்குச் சென்றாலே அமெரிக்கா ஹிரோஷிமாவில் குண்டு போட்டது தவறு என்று ஒப்புக்கொள்ளுவதாக இருக்கிறது என்று சில அமெரிக்கர்கள் ஒபாமா அங்கு போவதை ஆட்சேபிக்கிறார்கள்.  மேலும் அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ட்ரூமன் ஜப்பான் மீது அணுகுண்டு வீச எடுத்த முடிவு சரியானதல்ல என்று அமெரிக்கா இப்போது நினைப்பதாகவும் கொள்ளலாம் என்று ஒபாமாவின் ஹிரோஷிமா விஜயத்தை எதிர்ப்பவர்கள் கூறுகிறார்கள்.  ஆனால் வெள்ளை மாளிகையோ, ‘ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே 1945-இல் அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டு வீசியதற்கு இப்போது அமெரிக்காவிடமிருந்து எந்தவித வருத்தம் தெரிவிப்பதையும் எதிர்பார்க்கவில்லை என்றும் அதில் இறந்தவர்களுக்கு மரியாதை தெரிவிக்கும் பொருட்டுத்தான் சாமாதான விரும்பியான ஒபாமா அங்கு போக விரும்புகிறார் என்றும் உலகில் ஹிரோஷிமாவில் நடந்தது போன்ற கொடூரங்கள் இனியும் நிகழும் வாய்ப்பு இல்லையென்று சொல்ல முடியாது என்று உலகிற்கு உணர்த்துவதற்காகவும் போகிறார்’ என்று ஒரு அறிக்கை வெளியிட்டது.

    அமெரிக்கா ஜப்பான் மீது குண்டுவீச எடுத்த முடிவு சரிதானா என்ற வாதம் இப்போதும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.  1995-இல் அந்தக் கொடூர சம்பவம் நடந்து ஐம்பது ஆண்டுகள் நடந்ததை நினைவூட்டும் வகையில் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்கடனில் உள்ள ஸ்மித்ஸோனியன் மியுசியத்தில் குண்டுவீசப் பயன்படுத்தப்பட்ட எனோலா கே (Enola Gay)  என்னும் பி-29 விமானத்தை பொதுமக்கள் பார்வைக்கு வைப்பதில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, பின் அதனுடைய சில பகுதிகள் மட்டும் வைக்கப்பட்டனவாம்.  அப்படி அமெரிக்கா குண்டு வீசாமல் இருந்திருந்தால் அமெரிக்கா ஜப்பானின் ஒகினாவா பகுதியை முற்றுகையிட்டிருக்கும், அதனால் பல அமெரிக்க வீரர்களும் ஜப்பானின் குடிமக்கள் பலரும் இறந்திருப்பார்கள், அதைத் தவிர்ப்பதற்காக குண்டு வீசப்பட்டது சரியே என்று இரண்டாவது உலகப் போரில் கலந்துகொண்ட ராணுவ வீரர்கள் அபிப்பிராயப்பட்டார்களாம்.  அதனால் அந்த விமானத்தை ஸ்மித்ஸோனியன் மியுசியத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கும் எண்ணத்தைக் கைவிட்டார்களாம்.  (எனோலா கே என்ற பெயர் அந்த விமானத்திற்கு எப்படி வைக்கப்பட்டது தெரியுமா?  அதை ஓட்டிக்கொண்டு போய் குண்டைப் போட்ட விமானி தைரியசாலியான தன் தாயின் பெயரை அதற்குத் தேர்ந்தெடுத்தாராம்.)

     அந்த விமானம் ஸ்மித்ஸோனியன் மியுசியத்திற்குப் பதில் டல்லாஸ் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு மியுசியத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.  குண்டு வீசியதால் ஏற்பட்ட விளைவுகளைப் பற்றிச் சரியாக விவாதிப்பதில்லை என்றும் குண்டு வீசியதின் சரித்திரப் பின்னணியையே மாற்றிவிட்டார்கள் என்றும் ஒரு சிலர் வாதிக்கிறார்கள்.  குண்டு வீசுவதாக முடிவு எடுக்கப்பட்டதும் ஏன் முதலில் மனிதர்கள் யாரும் இல்லாத பகுதியில் வெடித்து புதிய ஆயுதமான அணுகுண்டினால் ஏற்படப் போகும் விபரீத விளைவுகளை ஜப்பானியர்களுக்கு உணர்த்தியிருக்கலாமே என்கிறார்கள் இவர்கள்.  (அமெரிக்காவில் மனிதர்கள் இல்லாத இடத்தில் அணுகுண்டை வெடித்து அமெரிக்கா அதனால் ஏற்படும் விளைவுகளைச் சோதித்துப் பார்த்தது.  ஆனால் ஜப்பானியர்களுக்கு அது பற்றித் தெரிவிக்கவில்லை.)   ஜப்பான் சரணடைந்துவிடும் என்பது தெரிந்த பிறகும் நாகசாகி மீதும் அமெரிக்கா குண்டு வீசியது எந்த விதத்தில் நியாயம் என்கிறார்கள் இவர்கள்.

    ஜப்பானிலும் அமெரிக்கா குண்டு போடுவதற்கு ஜப்பானின் எந்தச் செய்கை தூண்டுகோலாக அமைந்தது என்று சொல்வதில்லை.  அமெரிக்கா குண்டு வீசியதற்கு முன் ஜப்பான் அரசு போரில் செய்த கொடும் செயல்களைப் பற்றி பள்ளிப் பாடங்களில் சரியாகச் சொல்லிக் கொடுப்பதில்லையாம்.  ‘இரண்டாவது உலக யுத்தத்தின்போது ஆசியாவில் ஜப்பான் இழைத்த கொடுமைகள் பற்றியோ அமெரிக்காவின் பெர்ள் துறைமுகத்தை ஜப்பான் முற்றுகை இட்டதைப் பற்றியோ ஹிரோஷிமாவில் உள்ள நினைவுச் சின்னத்திற்கு அருகில் உள்ள மியுசியத்தில் எதுவும் கூறப்படவில்லை. ஒபாமா அந்த இடத்திற்கு விஜயம் செய்தால் போரில் கொடூரமாகத் தண்டிக்கப்பட்டதும் கஷ்டப்பட்டதும் ஜப்பான்தான் என்று கூறும் ஜப்பானின் வலதுசாரிகளின் கூற்று சரியாகிவிடும் என்று அமெரிக்காவிலுள்ள ஒபாமா எதிர்ப்பாளர்கள் கூறுகிறார்கள்.

    இந்தக் கொடூர சம்பவம் நடந்து முடிந்த சில ஆண்டுகளிலேயே அமெரிக்காவும் ஜப்பானும் நண்பர்கள் ஆகிவிட்டன.  துயரங்களுக்கு ஆளானவர்கள் அப்பாவிப் பொதுமக்கள்தான்.  சமாதான விரும்பியான ஒபாமா தன்னுடைய பதவிக் காலத்தில் எந்தப் புதிய படையெடுப்பையும் (ட்ரோன் மூலம் பயங்கரவாதிகளோடு பாமர குடிமக்களையும் அமெரிக்கா கொன்று வருகிறது ஏன்பது வேறு விஷயம்) தொடங்கவில்லை.  ஈரான் மீது படையெடுக்கும்படி எத்தனையோ நிர்பந்தங்கள் வந்தும் ஒபாமா அந்த நாட்டோடு பேச்சுவார்த்தையின் மூலம் சமாதானம் செய்துகொண்டார்.  ஒபாமாவிற்குப் பதில் வேறு யார் ஜனாதிபதியாக இருந்திருந்தாலும் இதற்குள் அமெரிக்கா இன்னும் இரண்டு யுத்தங்களையாவது தொடங்கியிருக்கும்.  நல்லவேளை, ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கிறார், உலகம் யுத்த பயத்திலிருந்து ஒருவாறு தப்பித்துக்கொண்டிருக்கிறது.

    சமாதான விரும்பியான ஒபாமா யுத்தத்தின் கொடூரச் சின்னமான ஹிரோஷிமாவிற்குப் போவது சரியே.  உலகம் யுத்தத்தின் கோரத்தை மறந்துவிடக்கூடாது.  இதை அமெரிக்கா தவறே செய்யாது என்று மார்தட்டும் ஒபாமா எதிர்ப்பாளர்கள் ஒப்புக்கொண்டேயாக வேண்டும்

    Share
  • கியூபாவுக்குப் பயணம் – 3

    நாகேஸ்வரி அண்ணாமலை.

    கியூபாவில் பத்து வருடங்களுக்கு முன்னால் சுற்றுலாப் பயணிகளுக்குத் தங்குவதற்கு வாடகைக்கு விடும் அளவிற்குப் பெரிய வீடுகள் வைத்திருப்பவர்கள் பயணிகளுக்கு வாடகைக்கு விடலாம் என்ற சட்டத்தை கியூபா அரசு கொண்டுவந்தது. இம்மாதிரி வீடுகளை காஸா (Casa) என்று அழைக்கிறார்கள். ஸ்பானிஷ் மொழியில் காசா என்றால் வீடு என்று அர்த்தம். நாங்கள் இம்மாதிரி வீடுகளில் ஒன்றில் தங்க முடிவுசெய்தோம். மின்னஞ்சல் மூலம் அந்த வீட்டின் சொந்தக்காரர்களோடு தொடர்புகொண்டு அந்த காஸாவை முடிவுசெய்தோம். நாங்கள் அந்த வீட்டை அடையும்போது மாலை ஐந்து மணி ஆகிவிட்டது.

    அந்த வீடு வெளிநாட்டுப் பயணிகளைத் தங்கவைக்க ஏதுவான வீடு. பயணிகள் தங்குவதற்காக நான்கு அறைகளை ஒதுக்கிவைத்திருக்கிறார்கள். அதில் மூன்று அறைகளை நாங்கள் வாடகைக்கு எடுத்துக்கொண்டோம். எல்லா அறைகளுக்கும் தனித்தனி குளியல் அறைகள் இருந்தன. வீட்டுச் சொந்தக்காரர்கள் தங்கும் பகுதியும் சமையலறையும் வீட்டின் பின் பகுதியில் இருந்தன. இப்படி தங்களின் பகுதியை வாடகைக்கு விடுபவர்கள் அரசிடம் அனுமதி வாங்குவதோடு யார், எப்போது அங்கு வந்து தங்குகிறார்கள் என்ற விபரங்களையும் அரசுக்குத் தெரிவிக்க வேண்டுமாம். மேலும் தனிப்பட்டவர்கள் வாடகைக்கு விடும் திட்டத்தில் இவர்கள் சேர்ந்துவிட்டால் மாதாமாதம் அரசுக்கு ஒரு தொகையைக் கொடுத்துவிட வேண்டுமாம். அநேகமாகப் பயணிகள் வந்து தங்கிக்கொண்டே இருப்பதால் இவர்களுக்கு வருமானம் வந்துகொண்டிருக்கும்.

    நாங்கள் தங்கியிருந்த வீட்டில் கணவனும் மனைவியும் மட்டும்தான். கணவருக்கு 70 வயது, மனைவிக்கு 65. இவர்களுடைய மூன்று குழந்தைகளில் ஒரு மகன் அமெரிக்காவில் சிறு வியாபாரம் செய்கிறான். இன்னொரு மகன் ஸ்பெயினுக்குக் குடிபெயர்ந்திருக்கிறான். கியூபாவில் அங்கு வாழ்ந்துவந்த பழங்குடிகள், ஸ்பெயினிலிருந்து வந்து குடியேறியவர்கள், அடிமைகளாகக் கொண்டுவரப்பட்ட ஆப்பிரிக்கர்கள் ஆகிய எல்லா இனத்தவர்களிடையேயும் நிறையக் கலப்பு ஏற்பட்டிருக்கிறது. கியூபாவுக்கு ஸ்பெயின் நாட்டுத் தொடர்பு இருப்பதால் படித்தவர்கள் வேலை தேடிக்கொண்டு அங்கு குடியேறிவிடுகிறார்கள். வீட்டுச் சொந்தக்காரரின் மகள் கியூபாவிலேயே கணவரோடு வசித்துவருகிறாள். கியூபாவில் பெரிய ஓட்டல்கள் சில இருந்தாலும் ஐந்து ஸ்டார், மூன்று ஸ்டார் ஓட்டல்கள் என்று அவர்கள் முத்திரை எதுவும் குத்தியிருப்பதாகத் தெரியவில்லை. நாங்கள் தங்கியிருந்த வீடு மிகவும் சுத்தமாகவும் வசதியாகவும் இருந்தது. மேலும் உறவினர் ஒருவர் வீட்டில் தங்குவதுபோல் இருந்தது. தனியாகக் கட்டணம் பெற்றுக்கொண்டு காலை உணவும் இரவு உணவும் கொடுத்தார்கள். நாங்கள் அனைவரும் சைவமாதலால் அவர்கள் வீட்டிலேயே சைவ உணவைச் சமைத்துக் கொடுத்தது மிகவும் வசதியாக இருந்தது. அதுவும் நாங்கள் கேட்ட நேரத்திற்குத் தவறாமல் கொடுத்தது மிகவும் வசதியாக இருந்தது. நாங்கள் வெளியே சென்றுவிட்டுத் திரும்பியதும் எங்கள் அறைகளுக்குத்தான் செல்ல வேண்டுமென்ற கட்டாயமில்லை. முன்னால் இருக்கும் வீட்டின் வரவேற்பறையில் உட்கார்ந்து பொழுதைக் கழிக்கலாம். வீட்டுச் சொந்தக்காரர்களுக்கு வேலை இல்லாதபோது அவர்களும் எங்களுடன் அமர்ந்து உரையாடுவார்கள். இவர்களோடு தங்கியதில் எங்களுடைய ஒரே பிரச்சினை என்னவென்றால் அவர்கள் இருவருக்கும் ஆங்கிலம் தெரியவில்லை. அதிலும் கணவருக்கு ஸ்பானிய மொழியைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை. மனைவிதான் கொஞ்சம் ஆங்கிலம் பேசினார். எங்களில் ஒருவரைத் தவிர யாருக்கும் ஸ்பானீஷ் தெரியாது. அவரும் பள்ளியில் ஓரிரு வருடங்கள் படித்ததோடு சரி. ஸ்பானீஷ் மொழியைக் கொஞ்சமாவது கற்றுக்கொண்டு வந்திருக்கலாமோ என்று தோன்றியது. இருந்தாலும் மிகவும் சிரமப்பட்டு அவர்களோடு உரையாடி எங்களுக்கு வேண்டியவற்றை அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டோம். ஒரு முறை எனக்கும் என் மகளுக்கும் தொண்டையில் சிறிது கரகரப்பு இருந்ததால் குடிக்க வெந்நீர் கேட்டோம். முதல் முறை கேட்ட பிறகு இரண்டாவது முறை அவராக ஃப்ளாக்ஸில் கொண்டுவந்துவிடுவார். இம்மாதிரி வசதிகளை ஓட்டல்களில் எதிர்பார்க்க முடியாது.

    வீட்டுக்காரர்களுக்கு வீட்டு வேலைகளில் உதவுவதற்கு ஒரு பெண் தினமும் வந்தார். அவர் காலை எட்டரைக்கெல்லாம் வந்துவிடுகிறார். அவருக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள முடியாவிட்டாலும் அந்தப் பெண்ணை அவர்கள் நடத்திய விதம் நம் நாட்டில் வேலைக்காரப் பெண்களை நடத்துவதிலிருந்து வேறுபட்டிருந்தது. அவர் வந்ததும் வீட்டுக்காரப் பெண்ணும் அவரும் மேஜையில் உட்கார்ந்து சேர்ந்து காலை உணவை உண்டார்கள். இருந்தாலும் கியூபாவில் கூட – வர்க்க பேதத்தை ஒழிக்க புரட்சிக் காலத்திலிருந்து ஃபிடல் காஸ்ட்ரோ முயன்றுகொண்டிருந்தும் – ஒரு பெண் மற்றவர்கள் வீட்டிற்குப் போய் வேலைசெய்து பிழைக்க வேண்டுமா என்ற எண்ணம் என்னுள் எழாமல் இல்லை.

    வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி இருந்தது. ஆனால் தினமும் சில மணி நேரங்கள்தான் நிகழ்ச்சிகள் இருந்தன. ஒபாமா கியூபா விமான நிலையத்தில் இறங்கியதைத் தொலைக்காட்சியில் காட்ட ஆரம்பித்ததும் அப்போது நாங்கள் வீட்டில் இருந்ததால் எங்களிடம் அந்தச் செய்தியை வீட்டுக்கார அம்மாள் கூறினார். மொழி தெரியாவிட்டாலும் ஒபாமா குடும்பம் விமானத்திலிருந்து இறங்கியதையும் அவர்கள் பழைய ஹவானவில் சில இடங்களுக்குச் சென்றதையும் புரிந்துகொள்ள முடிந்தது. ஒபாமாவும் கியூபா ஜனாதிபதி ராவுல் காஸ்ட்ரோவும் நிகழ்த்திய உரைகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒபாமா ஆற்றிய உரையை மௌனமாக்கி அதனுடைய ஸ்பானீஷ் மொழிபெயர்ப்பை மட்டும் கேட்கும்படி செய்தார்கள். காஸ்ட்ரோவின் பேச்சு ஸ்பானீஷ் மொழியிலேயே இருந்தது.

    ஆங்கிலச் செய்தித் தாள்கள் கிடைக்குமா என்று தேடினோம். ஒரு இடத்தில் வாரத்திற்கு ஒரு முறைதான் ஒரு ஆங்கில இதழ் வெளியிடுவதாகக் கூறினார்கள். ஒரு வகையில் உலகிலிருந்து தனிப்பட்டுப் போன மாதிரி இருந்தது. உலகின் எந்தச் செய்தியையும் தெரிந்துகொள்ள முடியவில்லை. வீட்டில் கணினி இருந்தது. அதில் மின்னஞ்சல் பார்க்க விரும்பியபோது கணினியைத் திறந்து யாஹு மெயில் பார்க்க உதவினார்கள். ஆனால் இன்டெர்னெட் இருந்தாலும் மிகவும் மெதுவாக இருந்தது. அதற்குக் கட்டணம் வேறு அதிகமாக இருந்ததால் வீட்டுக்காரர்களுக்கு அதிகம் செலவாகும் என்று எண்ணி மின்னஞ்சல் பார்ப்பதை நிறுத்திவிட்டோம். அமெரிக்கா திரும்பிய பிறகுதான் உலகில் என்ன நடக்கிறது என்பதை முழுமையாகத் தெரிந்துகொள்ள முடிந்தது. ஸ்பானிஷ் மொழி தெரிந்திருந்தால் அந்தப் பத்திரிக்கைகளைப் படித்துத் தெரிந்துகொண்டிருக்கலாம்.

    நாங்கள் கியூபாவில் இருந்த ஐந்து நாட்களில் மூன்று நாட்கள் ஒபாமா கியூபாவிற்கு விஜயம் செய்ததால் பல சாலைகள் அடைக்கப்பட்டுப் பல மியூசியங்கள் மூடப்பட்டு நாங்கள் எளிதாக அந்த இடங்களுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பத்திரிக்கையாளர்கள், உதவியாளர்கள் என்று ஆயிரம் பேருக்கு மேல் ஒபாமாவுடன் வந்ததாகக் கூறினார்கள். அவர்கள் தங்குவதற்கென்று பல ஓட்டல்களை எடுத்துக்கொண்டார்கள். பல சுற்றுலாப் பேருந்துகளையும் ஒபாமா டீம் எடுத்துக்கொண்டது. பல பெரிய சாலைகளை மூடிவிட்டதால் நாங்கள் போக விரும்பிய இடங்களுக்குச் சுற்றி வளைத்துக்கொண்டு போக வேண்டியிருந்தது. சில இடங்களில் அதுவும் முடியவில்லை. ஒபாமா எப்போது கியூபாவுக்கு வருகிறார் என்பதை மிகவும் ரகசியமாக வைத்திருந்தார்கள். அமெரிக்க ஊடகங்களில் மார்ச் 21-ஆம் தேதிதான் ஒபாமா கியூபாவுக்குப் போவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால் அவர் கியூபாவிற்கு வந்தது 20-ஆம் தேதி மதியம் மூன்று மணிக்கு. 19-ஆம் தேதி மதியமே சாலைகளை அடைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அமெரிக்க ஃப்ளோரிடா டீமுக்கும் கியூபா டீமுக்கும் இடையே நடந்த பேஸ் பால் விளையாட்டைப் பார்த்துவிட்டு 22-ஆம் தேதி மதியம் ஒபாமா கியூபாவிலிருந்து அர்ஜென்டைனாவுக்குக் கிளம்பியவுடன் சாலைகளைத் திறந்தார்கள்.

    ஹவானா பதினெட்டாம் நூற்றாண்டில் பாஸ்டன், நியூயார்க் நகரம் தோன்றுவதற்கு முன்பே பெரிய நகரமாக விளங்கியிருக்கிறது. பல நாட்டுக் கப்பல்கள் வந்து தங்கும் இடமாகப் பெயர் பெற்று விளங்கியிருக்கிறது. இருபதாம் நூற்றாண்டில் புரட்சி ஏற்படும்வரை அமெரிக்கப் பணக்காரர்கள் பலர் ஹவானாவிற்கு வந்து பல வகையான கேளிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றனர். அமெரிக்காவில் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபதுகளில் மதுவிலக்கு அமலில் இருந்தபோது கியூபாவிலிருந்து ரம் அமெரிக்காவிற்குக் கடத்தப்படுமாம். பல பெரிய அமெரிக்கக் கார்கள் இப்போதும் ஹவானா தெருக்களில் ஓடிக்கொண்டிருக்கின்றன. பல டாக்சிகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. எஞ்சின் தவிர மற்றப் பாகங்களை வைத்துக்கொண்டு எஞ்சினை மட்டும் மாற்றிக்கொண்டு அந்தக் கார்களைத் தொடர்ந்து உபயோகிக்கிறார்கள். கியூபா மக்களுக்கு கார் மிகவும் பிடிக்குமாம். பழைய அமெரிக்கக் கார்களோடு புதிய வகை கார்களும் ஹவானா வீதிகளை வலம் வருகின்றன. டூரிஸ்ட் பேருந்துகளும் நகரைச் சுற்றி ஓடும் பேருந்துகளும் சீனாவால் தயாரிக்கப்பட்டவை. டாக்சிகளோடு நம் ஊரில் இருக்கும் ஆட்டோவோடு ஒப்பிடக் கூடிய வாகனங்களும் நம் சைக்கிள் ரிக்‌ஷா போன்ற வாகனங்களும் இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் வெளிநாட்டுப் பயணிகள் குக்குகளில்தான் பணம் கொடுக்க வேண்டும்.

    US President Barack Obama (C) attends a wreath-laying ceremony at Jose Marti monument in the Revolution Palace of Havana next to the Vice-President of the Cuban Council Salvador Valdes Mesa (C-R) on March 21, 2016. US President Barack Obama and his Cuban counterpart Raul Castro met Monday in Havana's Palace of the Revolution for groundbreaking talks on ending the standoff between the two neighbors.  AFP PHOTO/ STR / AFP / STR        (Photo credit should read STR/AFP/Getty Images)
    US President Barack Obama (C) attends a wreath-laying ceremony at Jose Marti monument in the Revolution Palace of Havana next to the Vice-President of the Cuban Council Salvador Valdes Mesa (C-R) on March 21, 2016. US President Barack Obama and his Cuban counterpart Raul Castro met Monday in Havana’s Palace of the Revolution for groundbreaking talks on ending the standoff between the two neighbors. AFP PHOTO/ STR / AFP / STR (Photo credit should read STR/AFP/Getty Images)

    ஹவானாவின் நடுவில் புரட்சிச் சதுக்கம் இருக்கிறது. அர்ஜென்டைனாவில் பிறந்து காஸ்ட்ரோவோடு கியூபாவின் புரட்சியில் கலந்துகொண்ட சே குவேராவின், இரும்புக் கம்பிகளால் வரையப்பட்ட ஒரு ஓவியம் ஒரு உயர்ந்த பல மாடிக் கட்டடத்தை அலங்கரிக்கிறது. ஊரின் பல பகுதியிலிருந்து இந்த ஓவியத்தைக் காணலாம். புரட்சிக்கு முன் கடைசியாக கியூபாவில் பதவி வகித்த பதீட்ஸாவின் மாளிகையில் புரட்சி மியூசியம் அமைந்திருக்கிறது. இங்கு காஸ்ட்ரோவும் அவருடைய கூட்டாளிகளும் பதீட்ஸா அரசை எதிர்த்துச் செய்த புரட்சியின் வரலாறு சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இதில் மூன்று மாடிகள் இருக்கின்றன. இரண்டாவது மாடிக்கும் மூன்றாவது மாடிக்கும் செல்ல லிப்ட் இருக்கிறது. ஆனால் நாங்கள் சென்ற அன்று லிப்ட் வேலைசெய்யவில்லை. படிகளில் ஏற முடியாதவர்கள் இரண்டாவது மாடிக்கும் மூன்றாவது மாடிக்கும் போகவே முடியாது. இவ்வளவு முக்கியமான மியூசியத்தில் லிப்ட்டை ஒழுங்காக வேலைசெய்ய வைப்பதில் ஏன் அக்கறை காட்டவில்லை என்று தெரியவில்லை.

    ஹவானாவில் புரட்சிக்கு முன் கட்டப்பட்ட பல பிரமாண்ட கட்டடங்கள் இருக்கின்றன. அவற்றில் பல பழுதாகிப் புதுப்பிக்கப்படாமல் இருக்கின்றன. சில பழைய வீடுகளும் அழுக்குப் படிந்து பெயின்ட் மங்கிக் காட்சியளிக்கின்றன. இந்தக் கட்டடங்களைப் புதுப்பித்துக் கட்டப்போதுமான பணம் இல்லாததோடு தேவையான கட்டுமானப் பொருள்களும் கிடைப்பதில்லையாம். எல்லாம் அமெரிக்கத் தடைகளால் ஏற்பட்ட விளைவுகள். அமெரிக்க நண்பர் ஒருவரிடம் இதைக் கூறியபோது ‘இரண்டு ஹோம் டிப்போக்களை (அமெரிக்காவின் பெரிய டிபார்ட்மெண்ட் கடைகளில் Home Depot–வும் ஒன்று; கட்டடக் கட்டுமான சாமான்கள் விற்கும் கடை) அங்கு திறந்துவிட்டால் இந்தக் கட்டடங்களை எல்லாம் புதுப்பித்துவிடலாம்’ என்று ஜோக்கடித்தார்.

    ஹவானாவின் தெருக்களில் நடமாடும் பெண்கள் உடைச் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதுபோல் தெரிகிறது. கியூபாவில் எப்போதும் மிதமான வெப்பநிலை நிலவுவதால் பெண்கள் குறைந்த உடைகளையே அணிகிறார்கள். திருமணமானவர்களுக்கு அரசு சில சலுகைகள் வழங்கினாலும் பலர் திருமணம்செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்வதையே விரும்புகிறார்களாம். கியூபாவில் பிறக்கும் 60 சதவிகிதம் குழந்தைகள் திருமணமாகாத பெற்றோர்களுக்குப் பிறந்தவர்களாம். இம்மாதிரி விஷயங்களில் கியூபா மேற்கத்திய நாடுகளின் பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவதுபோல் தெரிகிறது.

    ஹவானாவில் இருந்த சில சிறிய மார்க்கெட்டுகளுக்குச் சென்றோம். மார்க்கெட்டுகள் என்று அழைக்கப்பட்டாலும் அங்கு ஓரிரண்டு கடைகள்தான் இருந்தன. இவை நம் நாட்டு ரேஷன் கடைகள் போன்றவை. அங்கு மிகக் குறைந்த அளவிலேயே காய்கறிகள், பழங்கள் இருந்தன. கியூபா மக்கள் எங்கிருந்து தங்களுக்கு வேண்டிய காய்கறி, பழங்களை வாங்குகிறார்கள் என்று தெரியவில்லை. நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்காரர் அதிகாலையில் கடைக்குச் சென்று சாமான்கள் வாங்கி வருவார் என்று அவருடைய மனைவி கூறினார். அவர் கடைக்குச் செல்லும்போது நான் அவருடன் வருவதாகக் கூறினேன். ஏதாவது சாக்குப்போக்குச் சொல்லி என்னை அழைத்துப் போகவே இல்லை. இம்மாதிரி சாமான்களுக்கு கருப்பு மார்க்கெட் இருப்பதாகக் கூறுகிறார்கள். அது சரியாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. ராவுல் காஸ்ட்ரோ கைக்கு ஆட்சி வந்ததும் கிராமப்புறத்தில் மக்களுக்குச் சிறிதளவு நிலம் கொடுத்து விவசாயம் செய்யலாம் என்றார். தனிப்பட்டவர்கள் விளைவிக்கும் பொருள்கள் இந்த மாதிரிக் கடைகளுக்கு வருகின்றனவோ என்று சந்தேகம். அங்குதான் போய் வாங்கி வந்தாரோ என்னவோ. எங்களுக்குக் காலை உணவிலும் இரவு உணவிலும் நிறையப் பழங்களும் காய்கறிகளும் பரிமாறினார்கள். அவர்களுடைய குளிர்சாதனப் பெட்டியில் இருந்த மாதிரி அழகாகப் பழுத்த தக்காளிப் பழங்களையும் வாழைப்பழங்களையும் அன்னாசிப் பழங்களையும் நாங்கள் எந்தக் கடைகளிலும் பார்க்கவில்லை.

    2014 டிசம்பரில் கியூபாவுடனான உறவைச் சீர்செய்து புதுப்பித்துக்கொள்ள ஒபாமா முயன்றதும் பல அமெரிக்கக் கம்பெனிகள் அங்கு போய் தங்கள் கடையை விரிக்க ஏற்கனவே பல முயற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன. ஆனால் கியூபா அரசு எளிதில் இவர்களுடைய விருப்பம் நிறைவேற அனுமதிக்குமா என்று தெரியவில்லை. இதுவரை அமெரிக்க வணிக நிறுவனங்களின் அதிகாரிகள் 500 முறையும் அமெரிக்க அரசு அதிகாரிகள் 150 முறையும் கியூபாவிற்குச் சென்றிருந்தும் இதுவரைக் கைகூடியிருக்கும் வணிக ஒப்பந்தங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு கட்டுரை புலம்புகிறது. அமெரிக்க நிறுவனங்களில் பல உலகம் முழுவதும் தங்கள் கிளைகளைப் பரப்பியிருப்பதுபோல் கியூபாவிலும் செய்யலாம் என்று நினைக்கின்றன. நல்ல வேளையாக கியூபா அரசு அவ்வளவு எளிதாக அவர்களுக்கு வளைந்து கொடுக்கும் என்று தோன்றவில்லை. மேலே குறிப்பிட்டுள்ள பத்திரிக்கைக் கட்டுரையில், ‘நாம் கொடுப்பதற்குச் சமமானதைப் பெறலாம்’ என்ற விதியை கியூபா விஷயத்தில் பின்பற்ற முடியாது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. கியூபா போடும் நிபந்தனைகளுக்கு நம்மால் ஈடு கொடுக்க முடியாது என்று முடித்திருக்கிறார்கள்.

    ராவுல் காஸ்ட்ரோ அளவிற்குக் கூட ஃபிடல் காஸ்ட்ரோவிற்கு அமெரிக்க – கியூபா உறவைப் புதுப்பித்துக்கொள்வதில் விருப்பம் இருப்பதுபோல் தெரியவில்லை. ‘நடந்த பழைய விஷயங்களை மறந்துவிட்டுப் புது உறவைத் தொடர்வோம்’ என்று ஒபாமா சொன்னதை ஃபிடல் காஸ்ட்ரோவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அமெரிக்கா கியூபாவிற்குக் கொடுத்த தொந்தரவுகளையும் வணிகத் தடைகளையும் அவரால் எளிதாக மறக்க முடியவில்லை. இவற்றையெல்லாம் குறிப்பிட்டு ‘அமெரிக்க ஏகாதிபத்தியத்திடமிருந்து நாங்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை. கியூபா கடின உழைப்பால் முன்னேறி கல்வி, கலை, விஞ்ஞானம் மூலம் அடைந்திருக்கும் ஆன்மீக வளத்தையும் கண்ணியத்தையும் பெருமையையும் இழந்துவிடும் என்று யாரும் நினைக்க வேண்டாம்’ என்று கியூபாவின் கம்யூனிஸ்ட் பத்திரிக்கையான Granma-விற்கு எழுதிய ஒரு கட்டுரையில் ஃபிடல் காஸ்ட்ரோ குறிப்பிட்டிருக்கிறார்.

    புரட்சியை வழிநடத்திய தலைவர் இப்படிக் கூறினாலும் கியூபா மக்களின் வாழ்க்கை வசதிகளை அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்ற கனவுகள் ஓரளவாவது நிறைவேற வேண்டும் என்பதுவும் அதே சமயம் அமெரிக்காவின் தலையீடு கியூபாவில் அதிகம் இருக்கக் கூடாது என்பதுவும் என்னுடைய விருப்பம். இது அமெரிக்கத் தேர்தலுக்குப் பிறகு வரும் அடுத்த ஜனாதிபதியையும் ராவுல் காஸ்ட்ரோவுக்குப் பிறகு ஏற்படும் தலைமையையும் பொறுத்திருக்கிறது. என்னுடைய நியாயமான விருப்பம் நிறைவேறும் என்று நம்புவோம்.

    Picture from – http://dailycaller.com/2016/03/21/obama-snaps-pics-in-front-of-che-guevara-mural-twitter-explodes-photos/

    Share
  • கியூபாவுக்குப் பயணம் – 2

    –நாகேஸ்வரி அண்ணாமலை.

    கியூபாவைப் பற்றி அமெரிக்காவில் தெரிந்துகொண்ட நாள் முதலே கியூபாவிற்குச் செல்ல வேண்டும் என்ற ஆவல் என்னுள் தோன்றத் தொடங்கியது. என்னுடைய இந்த ஆசையை ஒரு அமெரிக்க நண்பரிடம் கூறியபோது ‘கியூபாவில் ஒரு கொடுங்கோலன் அல்லவா ஆட்சி செய்கிறார்? அங்கு போய் என்ன பார்க்கப் போகிறீர்கள்?’ என்றார். அமெரிக்க மக்கள் பலர் இப்படித்தான் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள். அமெரிக்க ஜனநாயகமும் அமெரிக்க முதலாளித்துவப் பொருளாதாரமும்தான் உலகிலேயே சிறந்தவை என்று பல அமெரிக்கர்கள் எண்ணுகிறார்கள். இவர்களுக்கு கியூபா பற்றியோ கியூபா மீது அமெரிக்கா விதித்திருக்கும் வர்த்தகத் தடைகள் பற்றியோ சரியாகத் தெரியாது. கியூபாவில் ஒரு சர்வாதிகாரி அரசியல் நடத்துகிறார் என்பது மட்டும்தான் அவர்களுக்குத் தெரியும். அவர் சர்வாதிகாரி என்றே வைத்துக்கொண்டாலும் அவர் எப்படிப்பட்ட சர்வாதிகாரி, அவருடைய அரசியல் பின்னணி என்ன, மற்ற சர்வாதிகாரிகளைப்போல் தனக்காக அவர் சொத்து சேர்த்திருக்கிறாரா என்பது பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது. அமெரிக்கர்கள் இப்படியிருந்தாலும் எங்களைப் போன்றவர்களுக்கு கியூபா மீது ஒரு தனி அக்கறை உண்டு.

    சென்ற வருடம் வரை அமெரிக்காவிலிருந்து இன்னொரு நாட்டிற்குச் சென்று அங்கிருந்துதான் கியூபாவிற்குச் செல்ல வேண்டும். இன்னொரு நாட்டின் வழியாக கியூபா சென்று திரும்பும் அமெரிக்கர்களுக்கு அபராதம் உண்டு. கியூபாவிலிருந்து திரும்பி வந்ததும் ‘அங்கு எதற்குப் போனீர்கள்?’ என்று அமெரிக்கக் குடிபுகல் பகுதியில் அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களுக்குத் திருப்தி அளிக்கும் வகையில் பதில் கூறாவிட்டால் அபராதம் விதிக்கலாம். அமெரிக்காவிலிருந்து கியூபாவிற்கு சென்ற ஒரு வருடம் வரை நேரடியான விமானப் போக்குவரத்தோ கப்பல் போக்குவரத்தோ இல்லை. கியூபாவிலிருந்து அமெரிக்காவில் குடியேறியிருக்கும் கியூபா மக்கள் (காஸ்ட்ரோவின் புரட்சிக்குப் பிறகு கியூபாவில் இருக்கப் பிடிக்காமல் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தவர்கள்) கியூபாவில் இருக்கும் தங்கள் உறவினர்களுக்குப் பணம் அனுப்பத் தடை இருந்தது. ஒபாமா இந்தத் தடையை நீக்கினார். ஓராண்டிற்கு முன்னால் குழுக்களாக சுற்றிப் பார்க்கும் பயணத்தை அமெரிக்கர்கள் மேற்கொள்ளலாம் (as tourists by chartered flights) என்ற ஒரு விதியை ஒபாமா அமலாக்கினார். அதுவரை இன்னொரு நாட்டிற்குச் சென்று அங்கிருந்துதான் கியூபாவிற்குப் போக முடியும் என்ற நிலை இருந்தது. புதிய விதி அமலுக்கு வந்த பிறகு சில அமெரிக்கர்கள் கியூபா சென்று வந்தனர். இப்போது வரும் ஜூலை மாதத்திலிருந்து அமெரிக்காவிலிருந்து கியூபாவிற்கு நேரடியான விமானப் போக்குவரத்தை ஆரம்பிக்கப் போகிறார்கள்.

    நாங்கள் பல மாதங்களாக கியூபா போகும் திட்டத்தை வைத்திருந்ததால் இதற்கு மேல் காத்திருக்காமல் சார்ட்டர்ட் விமானம் மூலம் கியூபா போகத் திட்டமிட்டோம். மேலும் அமெரிக்காவிற்கும் கியூபாவிற்கும் இடையே உறவு மேம்பட்டு அதிக அமெரிக்கர்கள் அங்கு போக நேரிட்டால் அதிகக் கூட்டம் சேர்ந்துவிடும். அமெரிக்கக் கம்பெனிகள் அங்கு தோன்ற ஆரம்பித்தால் கியூபாவின் தோற்றமே, சமூகமே மாறிவிடலாம் என்பதற்காகவும் கியூபா கியூபாவாக இருக்கும்போதே அந்த நாட்டைப் பார்த்துவிட வேண்டும் என்று திட்டம் போட்டோம்.

    குழுக்களாக கியூபாவை சுற்றிப் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யும் கம்பெனிகள் இருக்கின்றன. அவர்கள் ஒரு பயணிக்கு ஐயாயிரம் டாலர்வரை வசூலிக்கிறார்கள். மேலும் அவர்களோடு சென்றால் அவர்கள் அழைத்துச் செல்லும் இடங்களுக்குத்தான் போக முடியும்; அவர்கள் தங்கவைக்கும் இடங்களில்தான் தங்க முடியும். நாங்களாகச் சென்றால் இந்தக் கெடுபிடி இருக்காது என்பதால் சார்ட்டர்ட் விமானத்தில் சென்றாலும் குழுக்களோடு போகும் பயணத்தில் சேர்ந்து போகவில்லை.

    எங்கள் மகள் மெல்லி சார்ட்டர்ட் விமானத்தில் பயணச் சீட்டு வாங்குவதிலிருந்து கியூபாவில் தங்குவதற்கு இடம் பிடிப்பதுவரை எல்லா ஏற்பாடுகளையும் செய்தாள். ஒபாமா கியூபா பற்றிப் பேச ஆரம்பித்ததும் ஒரு சில அமெரிக்கர்களுக்காவது அந்த நாட்டைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறது. நாங்கள் கியூபா போவதாகக் கூறியதும் பலர் ஆச்சரியப்பட்டனர். நிறைய புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு வாருங்கள் என்றனர். திரும்பி வந்ததும் கியூபா பற்றி உரை நிகழ்த்துமாறு சிலர் என் கணவரிடம் கூறினர்.

    எங்கள் மகள்கள் குடும்பங்களும் நாங்களும் அவரவர் ஊர்களிலிருந்து ஃப்ளோரிடா மாநில டாம்ப்பாவில் கூடினோம். கியூபாவிற்குச் செல்லும் சார்ட்டர்ட் விமானம் மதியம் 12 மணிக்குத்தான் டாம்ப்பாவை விட்டுக் கிளம்பினாலும் எட்டு மணிக்கே விமானநிலையத்திற்கு வந்துவிடுமாறு கூறியிருந்தனர். அதனால் முந்தின நாளே டாம்ப்பாவிற்குச் செல்ல வேண்டியதாயிற்று. சார்ட்டர்ட் விமானத்தைச் சேர்ந்த ஒரு பெண் எல்லோருடைய பாஸ்போர்ட், விசா (சார்ட்டர்ட் விமான சேவையை நடத்துபவர்களே எல்லாப் பயணிகளுக்கும் விசா பெற்றுத் தந்தனர்.) முதலிய ஆவணங்களைச் சரிபார்த்து விமானத்தில் ஏறுவதற்குத் தயாராக இருக்கும்படி கூறினார். நாங்கள் இன்னும் அமெரிக்காவில்தான் இருந்தோம். எல்லாம் ஒழுங்காக நடந்தது. பயணிகளில் சிலர் கியூபா மக்களின் உறவினர்கள்.

    சரியாகப் பன்னிரெண்டு மணிக்கு விமானம் கிளம்பியது. பயண நேரம் ஒன்றரை மணி. விமானம் ஹவானாவை நெருங்கும்போது கடைசியாக கியூபாவிற்கு வந்துவிட்டோம் என்று மகிழ்ச்சியாக இருந்தது. விமானம் தரையைத் தொட்டதும் சிலர் சந்தோஷத்தில் கைதட்டி ஆரவாரித்தனர்.

    விமானத்திலிருந்து இறங்குவதற்கு விமானத்தை விமான நிலையத்தோடு இணைக்கும் (ஏரோஃப்ளோட்) வசதி இல்லை. எல்லோரும் விமானத்தை விட்டு இறங்கி விமான நிலையத்தை நோக்கி நடந்தோம். விமான நிலையம் மிகவும் சிறியதாகவும் எளிமையானதாகவும் இருந்தது. ஒரு நாட்டின் தலைநகரின் விமான நிலையம் இத்தனை சிறியதாகவும் எளிமையானதாகவும் இருக்க வேண்டுமா என்ற எண்ணம் எழாமல் இல்லை. அத்தனை பயணிகள் இந்த விமான நிலையத்திற்கு வந்து போகாததால் குடிபுகல் பகுதியில் அவ்வளவு கூட்டம் இல்லை. கழிப்பிட அறைகள் இருந்தாலும் சுத்தமாக இல்லை. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஒவ்வொருவராகத்தான் குடிபுகல் பகுதியில் இருக்கும் அதிகாரியிடம் போக வேண்டும் என்றார்கள். பாஸ்போர்ட்டையும் விசாவையும் சரிபார்த்த அதிகாரி அங்கு வந்ததற்குரிய முத்திரையை பாஸ்போர்ட்டில் குத்தலாமா என்று எங்களிடம் கேட்டுக்கொண்டு நாங்கள் சரி என்றதும் குத்திக் கொடுத்தார். அமெரிக்காவின் தண்டனைக்குத் தப்ப நினைப்பவர்கள் முத்திரையைக் குத்த வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள்.

    அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் விமானத்தைப் பார்த்து கியூபா மக்கள் மிகுந்த வியப்புக்குள்ளாவார்கள் என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை நக்கலாக ஒரு கட்டுரையில் கூறியிருந்தது. ஏனெனில் இவ்வளவு பெரிய விமானத்தை அவர்கள் பார்த்திருக்க மாட்டார்கள். அது ஒன்றும் உண்மைக்குப் புறம்பான வார்த்தை இல்லையோ என்று தோன்றுகிறது. அத்தனை சிறிய விமான நிலையத்தில் அத்தனை பெரிய விமானம் வந்து இறங்குவது மிகவும் வியப்புக்குரிய விஷயம்தான்.

    Scenes_of_Cuba_(K5_02551)_(5978552313)

    விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததுமே நேரடியாகச் சாலைகளில்தான் வந்து சேர்கிறோம். இடையில் பெரிய இடைவெளி எதுவும் இல்லை. அமெரிக்க விமான நிலையங்களைப் பார்த்திருந்த எங்களுக்கு ஹவானா விமான நிலையம் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. டாக்சி பிடித்து நாங்கள் தங்கப் போகும் இடத்திற்குப் போவதற்கு முன் எங்களிடம் இருந்த டாலர் பணத்தை கியூபா கரன்சியாக மாற்ற வேண்டியிருந்தது. கியூபா நாணயத்திற்குப் பெயர் பிஸோ (peso). இது உள்நாட்டில் புழங்கும் நாணயச் செலாவணி. கியூபாவில் சுற்றுலாப் பயணிகளுக்காக இன்னொரு நாணயம் இருக்கிறது. இதற்குப் பெயர் திரும்ப மாற்றக் கூடிய பிஸோ; ஆங்கிலத்தில் குக் (CUC – Cuban convertible currency) என்கிறார்கள். இதனுடைய சின்னம் CUC$. பயணிகள் நூறு டாலர் கொடுத்தால் நூறு குக்குகள்தான் கொடுக்கிறார்கள். நாங்கள் ரூபாயில் கொடுத்ததாக வைத்துக்கொண்டால் நூறு ரூபாய்க்கு ஒன்றரை குக்குகள் கொடுத்திருப்பார்கள். ஏனென்றால், 65 ரூபாய்க்கு ஒரு டாலர்தானே. ஒரு குக் ஒரு டாலருக்குச் சமம். டாலரைக் கொடுத்து குக்குகள் வாங்குவதற்கு நிறைய நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. ஏனெனில் கரன்சியை மாற்றும் இடத்தில் ஒரே ஒருவர்தான் இருந்தார். அதனால் காத்திருந்த அத்தனை பேருக்கும் அவர் ஒருவர்தான் கரன்சி மாற்றும் வேலையைச் செய்ய வேண்டியதிருந்தது. கியூபாவில் எல்லா இடங்களிலும் இப்படித் தாமதம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் ஆட்கள் போதாமைதான். அரசிடம் எல்லா இடங்களிலும் நிறைய ஆட்களை நியமிப்பதற்குப் போதிய பணம் இல்லை.

    வெளிநாட்டுப் பயணிகள் கியூபாவில் செய்யும் செலவுகளுக்கு குக்குகளில்தான் பணம் செலுத்த வேண்டும். இப்படிப் பயணிகளிடமிருந்து பெறும் பணத்தை கியூபா மக்கள் அவர்களுடைய வங்கிகளில் கொடுத்து அவர்களுடைய உள்ளூர் கரன்சியான பிஸோவாக மாற்றிக்கொள்ள வேண்டும். ஒரு அமெரிக்க டாலருக்கு உலக நாணயமாற்றின் (foreign exchange) கணக்குப்படி 24 பிஸோக்கள். வெளிநாட்டுப் பயணிகளிடமிருந்து குக்குகள் பெறும் கியூபா மக்களுக்கு ஒரு குக்கிற்கு 24 பிஸோக்கள் கிடைக்கும். இதில் வங்கி சில பிஸோக்களை கமிஷனாக எடுத்துக்கொள்ளும். வங்கி கமிஷன் எடுத்த பிறகும் அவர்களுக்கு ஒரு கணிசமான தொகை கிடைத்துவிடுகிறது. இப்படிப் பணம் அதிகம் கிடைப்பதால் வெளிநாட்டுப் பயணிகள் அதிகமாக வரும் இடங்களில் டாக்சி ஓட்டுநர்கள், ஆட்டோக்காரர்கள், சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுபவர்கள் அதிகமாகக் கூடுகிறார்கள். ஆம், கியூபாவில் டாக்சிகளோடு நம் நாட்டில் இருப்பதுபோல் ஆட்டோ ரிக்‌ஷாக்களும் (நம் நாட்டு ஆட்டோ ரிக்‌ஷாக்களிருந்து உருவத்தில் சிறிது மாறுபட்டவை) மனிதர்கள் மிதித்து ஓட்டிச் செல்லும் சைக்கிள் ரிக்‌ஷாக்களும் இருக்கின்றன. போகும் தூரத்தைப் பொறுத்து இவற்றில் ஒன்றை நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

    எல்லா நாடுகளிலும் வெளிநாட்டுப் பயணிகளிடம் அந்நாட்டு டாக்சி ஓட்டுநர்கள், ஆட்டோக்காரர்கள் அதிகமாகவே வசூலிப்பார்கள். நாங்கள் வெளிநாட்டிற்குச் செல்லும்போது அங்கு வசிக்கும் நண்பர்களிடமோ மற்றவர்களிடமோ டாக்சி ஓட்டுநர்கள் துருவமாக எவ்வளவு கேட்பார்கள் என்று கேட்டுவைத்துக்கொள்வோம். அல்லது பயண வழிகாட்டிப் புத்தகத்திலிருந்து இம்மாதிரி விஷயங்களைத் தெரிந்துகொள்வோம். கியூபாவிலும் நாங்கள் தங்கவிருந்த இடத்திற்குப் போவதற்கு 40 குக்குகள் டாக்சி ஓட்டுநர் கேட்டார். இந்தத் தொகை அதிகம் என்று தோன்றினாலும் மொழி தெரியாத காரணத்தால் பேரம் பேச முடியவில்லை. கியூபாவில் ஒரு சிலரைத் தவிர யாருக்கும் ஆங்கிலம் தெரியவில்லை. அமெரிக்காவோடு சண்டை என்பதால் அமெரிக்காவில் பேசப்படும் மொழியான ஆங்கிலத்தையும் அவர்கள் புறக்கணிப்பதுபோல் எனக்குத் தோன்றியது. ஆங்கிலம் சர்வதேச மொழி, அதைத் தெரிந்துகொள்ளாமல் இருப்பது கியூபா மக்களுக்குத்தான் நஷ்டம் என்பதை உணர்ந்திருப்பதுபோல் இப்போது பள்ளியில் அதைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்களாம். இதுவரை ஆங்கிலமே பள்ளிகளில் கற்பிக்கப்படவில்லை.

    தொடரும்…

    படம் உதவி: விக்கிபீடியா

    https://commons.wikimedia.org/wiki/File:Scenes_of_Cuba_(K5_02551)_(5978552313).jpg

    Share
  • கியூபாவுக்கு ஒரு பயணம் – 1

    –நாகேஸ்வரி அண்ணாமலை.

    கியூபா (இந்த நாட்டு மக்கள் தங்கள் நாட்டை கூபா என்று உச்சரிக்கிறார்கள்) என்ற சிறிய நாடு எங்கிருக்கிறது என்றே பலருக்குத் தெரியாது. ஆனால் அமெரிக்காவில் வாழும் பலருக்கும் அமெரிக்கா அந்த நாட்டைப் படுத்திய பாட்டால் அதைப் பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும். அமெரிக்காவைப் பற்றி எழுத ஆரம்பித்தபோதுதான் நானும் முழுமையாக கியூபா பற்றித் தெரிந்துகொண்டேன். பல தென்னமெரிக்க நாடுகள் ஸ்பெயின் நாட்டின் காலனி ஆதிக்கத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம்வரை இருந்தன. கியூபாவோ அந்நூற்றாண்டின் கடைசிவரை இருந்தது. தென்னமெரிக்க நாடுகள் ஒவ்வொன்றாக ஸ்பெயினின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு சுதந்திரம் அடைந்ததைப்போல கியூபாவும் தன்னுடைய சுதந்திரத்திற்காகப் போராடிச் சுதந்திரம் பெற்றது. வட அமெரிக்கக் கண்டத்தின் பெரும் பகுதியைப் பிடித்துக்கொண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்று தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்ட அமெரிக்காவுக்கும் எப்போதும் கியூபாவின் மேல் ஒரு கண் இருந்தது. எப்படியாவது அதைத் தன் வசமாக்கிக்கொள்ள வேண்டும் என்று சமயம் பார்த்துக் காத்துக்கொண்டிருந்தது. தன் கப்பலைத் தாக்கியதாகப் பொய்ச் சாக்குச் சொல்லி ஸ்பெயினிடமிருந்து கியூபாவைப் பறித்துக்கொண்டு, அதற்கு சுயாட்சி கொடுப்பதாக மக்களுக்கு வாக்குக் கொடுத்துவிட்டு, பின் தனக்கு வேண்டியவர்களை, தன் சொல்படி நடப்பவர்களைப் பதவியில் அமர்த்தித் தன் நலன்களைப் பாதுகாத்துக்கொண்டது. இதைத்தான் ஃபிடல் காஸ்ட்ரோவும் அவரோடு சேர்ந்து புரட்சி செய்தவர்களும் எதிர்த்தனர். கியூபாவை ஒரு ஜனநாயக நாடாக மாற்றித் தாங்களே ஆண்டுகொள்ள வேண்டும் என்றனர். உலகம் முழுவதும் ஜனநாயகத்தைப் பரப்புவதாகப் பறைசாற்றிக்கொள்ளும் அமெரிக்கா தன் நலன்களுக்குப் பாதகம் வந்தால் எந்த நாட்டிலும் ஜனநாயகம் தழைக்காமல் பார்த்துக்கொள்ளும் என்பதற்கு கியூபா ஒரு நல்ல உதாரணம். உலகில் உள்ள ஜனநாயக நாடுகளுள் உண்மையான ஜனநாயகத்தைப் பின்பற்றும் அமெரிக்காவின் ஜனநாயகக் கொள்கைகள் எல்லாம் உள்நாட்டைப் பொறுத்தவரைதான். மற்ற நாடுகள் என்று வரும்போது அந்த நாட்டின் ஜனநாயகத்தைவிட அமெரிக்காவின் நலன்தான் அமெரிக்காவிற்கு முக்கியம்.

    President Obama's trip to Cuba is the first time a sitting U.S. President has visited the island nation since Calvin Coolidge in 1928.

    அமெரிக்காவின் இந்தக் கொள்கைக்கு கியூபாவும் விலக்கல்ல. காஸ்ட்ரோவும் அவருடைய தோழர்களும் கியூபா அமெரிக்க ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தியபோது அமெரிக்கா அதை விரும்பவில்லை. ‘ஒரு சிறிய நாடு தன்னை எதிர்ப்பதா?’ என்று வெகுண்டெழுந்தது. அப்போது அமெரிக்காவின் கைப்பாவையாக விளங்கிய பதீட்ஸா கியூபாவின் ஜனாதிபதியாக இருந்தார். அவரை எதிர்த்துப் போராடி ஒரு முறை சிறையில் அடைக்கப்பட்டு, பின் பொதுமக்களின் கிளர்ச்சியை அடக்கமுடியாமல் விடுவிக்கப்பட்டு, கடைசியாக நாட்டின் ஆட்சியை ஆயுதப் புரட்சி மூலம் 1959 ஜனவரி ஒன்றாம் தேதி கைப்பற்றிய காஸ்ட்ரோவை அன்று முதல் தன் முழு எதிரியாகப் பாவிக்கத் தொடங்கியது அமெரிக்கா. ஒரு சிலரைப் பணக்காரர்களாக உருவாக்கி நாட்டில் சமத்துவமின்மையை உண்டாக்கும் முதலாளித்துவப் பொருளாதாரத்தைத் தவிர்த்து எல்லோருக்கும் அடிப்படைத் தேவைகள் கிடைப்பதற்காக கம்யூனிசக் கொள்கையைப் பின்பற்றிய காஸ்ட்ரோவை 600 தடவைகளுக்கு மேல் கொலைசெய்ய முயன்று தோற்றது அமெரிக்கா. கியூபா மீது தன் பழிவாங்கும் படலத்தைப் பத்து அமெரிக்க ஜனாதிபதிகளின் கீழ் தொடர்ந்தது. கியூபா மீது பல வணிகத் தடைகளைப் போட்டதோடு தன்னோடு வணிகத் தொடர்புகள் வைத்துக்கொள்ளும் எந்த நாடும் கியூபாவோடு வணிகத் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தது. உலகிலேயே பணக்கார நாடாகவும் பலம் பொருந்திய நாடாகவும் விளங்கும் அமெரிக்காவை எதிர்க்க அமெரிக்காவின் எதிரியான சோவியத் யூனியனைத் தவிர எந்த நாடும் முயலவில்லை. சோவியத் யூனியனின் உதவியை நாடுவதைத் தவிர காஸ்ட்ரோவிற்கு வேறு வழி இருக்கவில்லை. அதுவும் அமெரிக்காவிற்குப் பிடிக்கவில்லை. தனக்கு மிக அருகில் இருக்கும் (அமெரிக்க தென் கிழக்கு மாநிலமான ஃப்ளோரிடாவிற்கும் கியூபாவிற்கும் இடையில் 90 மைல்கள்தான்) ஒரு சிறிய நாட்டில் தன் எதிரியின் செல்வாக்கும் தாக்கமும் இருப்பதை அமெரிக்காவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் பனிப் போர் நடந்துகொண்டிருந்த காலம் அது. 1962-இல் கியூபாவில் சோவியத் ஏவுகணைகளை வைத்து இரு நாடுகளும் மோதிக்கொள்ளவிருந்தது தவிர்க்கப்பட்டு உலகமும் மூன்றாம் உலகப் போர் மூளாமல் நிம்மதிப் பெருமூச்சு விட்டது.

    அமெரிக்காவும் அமெரிக்காவைச் சார்ந்திருந்த மற்ற நாடுகளும் கியூபா மீது வர்த்தகத் தடைகளை விதித்தபோதிலும் காஸ்ட்ரோ தைரியமாக கியூபாவை வழிநடத்திச் சென்றார். தன்னுடைய சோஷலிஸக் கொள்கையிலிருந்து மாறவும் இல்லை. இன, வர்க்க பேதங்களை நாட்டிலிருந்து களைய முற்பட்ட காஸ்ட்ரோவிற்கு 1990-இல் சோவியத் யூனியன் உடைந்தது ஒரு சோதனையாக அமைந்தது. கியூபாவிற்குத் தேவையான மூலப்பொருள்களும் இயந்திரங்களும் கிடைக்காததால் கியூபா மக்கள் பழைய முறைப்படி வேளாண்மை செய்ய வேண்டியதாயிற்று. தேவையான ரசாயன உரங்கள் இல்லாமல் விளைச்சல் பாதிக்கப்பட்டது. உணவுப் பண்டங்களுக்கு ரேஷன் கொண்டுவரப்பட்டது.

    காஸ்ட்ரோ ஆட்சியைப் பிடித்ததும் நிலங்கள் யாவற்றையும் தேசிய உடைமையாக்கினார். தன் குடும்பத்திற்குச் சொந்தமான நிலங்களையும் அரசிடம் ஒப்படைத்ததற்கு இவருடைய தாய் கடைசிவரை இவரை மன்னிக்கவில்லை என்பார்கள். தென்னமெரிக்க நாடுகளிலும் கியூபாவிலும் கம்யூனிஸம் பரவி அமெரிக்காவிற்கும் வந்துவிடுமோ என்று அமெரிக்கா பயந்தது. கியூபாவின் மீதான கிடுக்கிப் பிடியைக் கொஞ்சமும் தளர்த்தவில்லை. ஐ.நா.வில் கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளைத் தளர்த்தும்படி தீர்மானம் வரும்போதெல்லாம் அமெரிக்கா தன் வீட்டோ சக்தியால் அதை முறியடித்து வருகிறது. அமெரிக்கா விதித்த தடைகளால் கியூபாவின் பொருளாதாரம் மிகவும் நசித்துப் போயிருக்கிறது.

    அமெரிக்கா பல நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட்டு அந்நாடுகளின் அரசுகளைக் கவிழ்த்ததாலும், ஜனநாயகம் பற்றிப் பேசிக்கொண்டு பல சர்வாதிகாரர்களின் நண்பனாக விளங்கியதாலும் உலக நாடுகளிடையே அமெரிக்காவின் படிமம் மிகவும் தாழ்ந்துபோயிருக்கிறது. 2009-இல் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பாரக் ஒபாமா அமெரிக்காவின் இந்தப் படிமத்தை மாற்ற நினைத்தார். அமெரிக்காவின் எதிரிகளாகக் கருதப்பட்ட ஈரான், கியூபா ஆகிய இரண்டு நாடுகளோடும் அமெரிக்காவின் உறவைப் புதுப்பித்துக்கொள்ள ஒபாமா முயன்றார். ஈரான் அணு ஆயுத சோதனை நடத்தி அணு ஆயுதங்கள் தயாரித்தால் அது இஸ்ரேலை அழித்துவிடும் என்று பயந்து இஸ்ரேலுக்கு உதவுவதற்காக ஈரான் மீது அமெரிக்கா படையெடுக்க வேண்டும் என்று குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்டர்கள் தீவிரமாக வாதிட்டபோதிலும் ஒபாமா ஈரானோடு பேச்சுவார்த்தை நடத்தி ஈரான் அணு ஆயுத சோதனை நடத்துவதை நிறுத்த ஏற்பாடு செய்தார்.

    அதன் பிறகு அவருடைய கவனம் கியூபா மீது திரும்பியது. போப் பிரான்ஸிஸ் போன்ற நடுவர்கள் மூலம் ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடத்தி கியூபாவுடன் தூதரகத் தொடர்பு ஏற்படுத்தினார். 2014 டிசம்பரில் வாஷிங்டனில் கியூபாவின் தூதரகமும் கியூபாவின் தலைநகரான ஹவானாவில் அமெரிக்கத் தூதரகமும் தொடங்கப்பட்டன. கியூபாவிற்கு ஒரு முறை நேரில் சென்று அந்நாட்டு மக்களையும் ஜனாதிபதியாக இருக்கும் ஃபிடல் காஸ்ட்ரோவின் தம்பி ராவுல் காஸ்ட்ரோவையும் (இவர் ஃபிடல் காஸ்ட்ரோவின் தம்பி மட்டுமல்ல; அவரோடு தோளோடு தோள் நின்று புரட்சியில் பங்குகொண்டவரும் கூட) சந்தித்து அமெரிக்காவிற்கு கியூபாவுடனான உறவைச் செம்மைப்படுத்த விரும்பினார். 1928-க்குப் பிறகு – அதாவது 88 வருடங்களுக்குப் பிறகு – அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் கியூபாவிற்கு விஜயம் செய்கிறார். ஒபாமாவும் ராவுல் காஸ்ட்ரோவும் நடத்திய பேச்சுவார்த்தையில் (ஒபாமாவும் ஃபிடல் காஸ்ட்ரோவும் சந்தித்துக்கொள்ளவில்லை) கியூபாவில் மனித உரிமைகளுக்கு இன்னும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று ஒபாமாவும் கியூபா மீதான வர்த்தகத் தடைகளை நீக்கவேண்டும் என்று காஸ்ட்ரோவும் வற்புறுத்தினர். அமெரிக்க செனட் உறுப்பினர்கள், குறிப்பாக குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கியூபா மீதான வர்த்தகத் தடைகளை நீக்குவதற்கு தங்கள் பங்கிற்கு எதிர்ப்புத் தெரிவிப்பார்கள். ஆனாலும் ஒபாமா எடுத்திருக்கும் இத்தனை முயற்சிகளுக்குப் பிறகு அவருடைய முயற்சிகளுக்குப் பலன் கிடைக்கும். 2009-இல் வெளிவந்த என்னுடைய ‘அமெரிக்காவின் மறு பக்கம்’ என்ற நூலில், ‘2009, ஜனவரி 1ஆம் தேதியன்று கியூபாவில் புரட்சி ஏற்பட்டு ஐம்பது ஆண்டுகள் ஆயின, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பிறப்பதற்கு முன்பே கியூபா மீது அமெரிக்கா விதித்த தடைகள் இவர் காலத்திலாவது நீங்கும் என்று நம்புவோம்’ என்று எழுதியிருந்தேன். அந்த நம்பிக்கை நிறைவேறும் என்பதற்கு இப்போது அறிகுறிகள் தோன்றியிருக்கின்றன.

    (தொடரும் … )

    படம் உதவி: http://www.haaretz.com/world-news/1.709928

    Share
  • அமெரிக்க உச்சநீமன்றத்தில் நீதிபதிகளின் கொள்கைகளும் தீர்ப்புகளும்

    — நாகேஸ்வரி அண்ணாமலை.

    நான் சிறு வயதில் நீதிமன்றங்கள் (இந்திய நீதிமன்றங்கள் உட்பட) உண்மையின் உறைவிடங்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அதிலும் எல்லாம் சட்டப்படி நடக்கும் அமெரிக்காவில் அமெரிக்க உச்சநீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் எப்போதும் நியாயத்தையே கடைப்பிடிக்கும் என்றும் அது உண்மையான நியாயமாக (absolute truth) இருக்கும் என்றும் நினைத்திருந்தேன். உண்மை என்பது பன்முகங்கள் கொண்டது என்பதும், அந்த உண்மையைப் பார்ப்பவர்களைப் பொறுத்து அதன் முகம் மாறும் என்பதும் இப்போது தெளிவாகியிருக்கிறது. அமெரிக்காவில் சில வருடங்கள் வாழ்ந்த பிறகுதான் புரிகிறது அங்குள்ள நீதிபதிகளின் கொள்கைகளைப் (ideology) பொறுத்து அவர்களுடைய தீர்ப்புக்களும் அமையும் என்பது.

    supreme court judges

    தற்சமயம் அமெரிக்க உச்சநீதிமன்றத்தைப் பொறுத்தவரை ஒரு பெரிய போராட்டம் இரண்டு அரசியல் கட்சிக்குள்ளும் நடந்துவருகிறது. அன்டோனின் ஸ்காலியா என்னும் 79 வயது நீதிபதி திடீரென்று பிப்ரவரி மாதம் விடுமுறையைக் கழிக்கச் சென்ற இடத்தில் உயிர் துறந்தார். அவர் தனிமையில் இறந்து கிடந்ததால் அவர் இறந்து சில மணி நேரங்கள் கழித்துத்தான் அவர் இறந்த விஷயம் தெரியவந்தது. அவர் மரணம் பலருக்குத் தெரியவந்து அவருடைய இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் முடிவதற்குள் அவருடைய இடத்திற்கு யாரை நியமிப்பது என்ற சர்ச்சை இரண்டு கட்சிகளைச் சேர்ந்த செனட் அங்கத்தினர்களுக்கிடையே ஆரம்பித்துவிட்டது.

    அமெரிக்கா பிரிட்டனிடமிருந்து சுயேச்சையாக விலகித் தனி நாடாகத் தன்னைப் பிரகடனப்படுத்துக்கொண்ட பிறகு முதன் முதலாக தனக்கு ஒரு அரசியல் அமைப்புச் சட்டத்தை 1776-இல் எழுதிக்கொண்டது. புதிய அரசாங்கத்தின் சட்டங்கள் இயற்றும் அங்கத்தையும் அவற்றை அமல்படுத்தும் அங்கத்தையும் உண்டாக்கிய பிறகு, அதிகாரம் இந்த இரண்டு துறைகளின் கைகளில் மட்டும் இருக்க வேண்டாமென்று கருதி அமெரிக்க நாட்டை நிர்மாணித்தவர்கள் அமெரிக்க உச்சநீதிமன்றத்தையும் 1789-இல் உருவாக்கினார்கள். அதில் ஆறு நீதிபதிகள் இருப்பார்கள் என்றும் முடிவு செய்யப்பட்டது. அந்த எண்ணிக்கை பல சமயங்களில் வேறுபட்டாலும் பொதுவாக அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகள் இருந்து வருகிறார்கள். உச்சநீதிமன்ற நீதிபதிகள் அவர்களுடைய ஆயுள் வரை அந்தப் பதவியில் நீடிக்கலாம். அவர்கள் விரும்பினால் ஓய்வு பெறலாம். (வெஸ்லி பிரவுன் என்னும் யு. எஸ். மாவட்ட நீதிபதி தன்னுடைய 104– வது வயது வரை, தூக்கத்திலேயே தன் உயிர் பிரியும் வரை, நீதிபதியாக வேலை பார்த்தார். என் ‘ஆயுளையோ, நன்னடத்தையையோ எதை முதலில் இழக்கிறேனோ அதுவரை பதவியில் நீடிப்பேன்’ என்றும் ‘நாட்டிற்குச் சேவை செய்வதற்காக வந்தேன். அதைச் செய்ய முடியும் வரை செய்வேன்’ என்றும் கூறியிருக்கிறார்.)

    இந்தியாவில் பிரிட்டனிடமிருந்து நாம் சுதந்திரம் பெற்ற பிறகு மொழிவாரி மாநிலங்களாக இந்தியாவைப் பிரித்துக்கொண்டோம். அமெரிக்காவில் புதிய கண்டத்தில் காலனிகளாக உருவானவை ஒன்று சேர்ந்து அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்ற நாட்டை உருவாக்கிக்கொண்டன. பழைய காலனிகள் அந்த நாட்டின் மாநிலங்களாக உருவாகின (அதனால் மாநிலங்களுக்குள் எல்லைத் தகராறு எழுவதில்லை!.) இந்த நாட்டிற்கு அரசியல் சாசனம் எழுதி எல்லாக் காலனிகளுக்கும் அந்த காலனிகளின் சம்மதம் கேட்டு அனுப்பினார்களாம். அப்போது சில காலனிகள் தங்களுக்கு இன்னும் அதிக உரிமைகள் வேண்டுமென்று கேட்டதால் Bill of Rights என்றவற்றைப் புதிதாக உருவாக்கிச் சேர்த்தார்களாம். இப்போதும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு அரசியல் சாசனம் உண்டு. அதைப் பாதுகாக்க ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு உச்சநீதிமன்றம் உண்டு. அந்த மாநிலத்துக்கே உரியப் பிரச்சினைகளை இந்த உச்சநீதிமன்றங்கள் தீர்த்துவைக்கும். நாடு முழுவதையும் பற்றிய பிரச்சினை என்றால் அது அமெரிக்க உச்சநீதிமன்றத்திற்கு வரும்.

    அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்த்துவைத்த முக்கியமான வழக்குகளில் முக்கிய இடம் வகிக்கும் சிலவற்றைப் பார்ப்போம். ஜனாதிபதி லிங்கன் கறுப்பர்களுக்கு சுதந்திரம் கொடுத்த பிறகும் அவர்களுக்கு முழு உரிமைகளும் வழங்கப்படவில்லை. ஒரு வழியாக அவர்களுக்குச் சில உரிமைகள் வழங்கப்பட்டாலும் அவர்களும் வெள்ளையர்களும் பொது இடங்களில் ஒன்றாக இருக்க முடியாது. பள்ளிகள், கல்லூரிகள், ஓட்டல்கள் என்று எல்லா இடங்களிலும் கறுப்பர்களும் வெள்ளையர்களும் தனித்தனி இடங்களில்தான் உட்கார வேண்டும். வெள்ளை மாணவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களில் கறுப்பர்களுக்கு இடமில்லை. கருப்பர்களும் வெள்ளையர்களும் இருவரும் அரசியல் சாசனப்படி சமமானவர்கள் என்றாலும் வேறு வேறு இனத்தவர்; ஆகவே தனித்தனியாக வைப்பது சரியே என்ற அடிப்படையில் மேலே சொன்ன ஒதுக்கல் கொள்கை அமலில் இருந்தது. இது பெரும்பான்மையினரான வெள்ளை இனத்தவர் செய்த சட்டம். தன் மகளை வெள்ளைக் குழந்தைகள் மட்டுமே படிக்கும் பள்ளியில் சேர்க்க மறுத்த கல்விக் குழுவின் (Board of Education) முடிவை எதிர்த்து பிரவுன் என்னும் கறுப்பர் 1953-இல் வழக்குத் தொடர்ந்தார். ‘வேறு இனத்தவர்கள் என்ற முறையில் ஒதுக்கல் கொள்கையில் அவர்களுக்குச் சம உரிமைகள் வழங்கப்படவில்லை, அதனால் அது சட்டப்படி செல்லாது’ என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அமெரிக்க உச்சநீதிமன்றம் வழங்கியது. அன்றுவரை இரு இனத்தவர்களுக்கும் தனித்தனி இடம் என்ற நிலைமை போய், ஒன்றாக வாழும், படிக்கும், பணிபுரியும் நிலை ஏற்பட்டது. இந்த வழக்கில் ஒன்பது நீதிபதிகளுக்கிடையே கொள்கை வேறுபாடு இல்லை. தீர்ப்பு ஒரு மனதாக இருந்தது.

    அடுத்ததாக 1973-இல் பெண்களுக்கு கருச்சிதைவு செய்யும் உரிமை மறுக்கப்படுவதை எதிர்த்து ஒரு பெண் வழக்குத் தொடர்ந்தார். கருச்சிதைவு செய்துகொள்வது பெண்களுக்குரிய உரிமை என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும், குழந்தையின் உயிருக்கோ தாயின் உயிருக்கோ ஆபத்து என்றால் கருச்சிதைவை அனுமதிக்கும் உரிமையை அந்தந்த மாநிலங்கள் முடிவுசெய்யும் என்றும் அறிவித்தது. இந்த முடிவை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு சில மாநிலங்கள் பல நிபந்தனைகளை விதித்து பெண்கள் கருச்சிதைவு செய்துகொள்ளாமல் பார்த்துக்கொள்கிறது. மாநிலங்களுக்கென்று சில உரிமைகள் இருப்பதால் உச்சநீதிமன்றமும் இம்மாதிரி விஷயங்களில் இந்த மாதிரியான தீர்ப்பை வழங்குகிறது. இந்த வழக்கில் ஏழு நீதிபதிகள் சார்பாகவும் இரண்டு நீதிபதிகள் எதிராகவும் தீர்ப்பளித்தனர். இந்த வேறுபாடு நீதிபதிகளின் கருச்சிதைப்புப் பற்றிய கொள்கைகளிலிருந்து பிறந்தது.

    சமீப காலத்தில் உச்சநீதிமன்றத்திற்கு வந்த இன்னொரு முக்கியமான வழக்கு ஒபாமா 2010-இல் கொண்டுவந்த எல்லோருக்கும் கிடைக்கக் கூடிய மருத்துவ வசதிச் சட்டம் பற்றியது. அந்தச் சட்டப்படி எல்லோரும் மருத்துவ இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும், அப்படி எடுக்காதவர்கள் அபராதம் கட்ட வேண்டும். இதை எதிர்ப்பவர்கள் வழக்குத் தொடுத்ததால் உச்சநீதிமன்றத்திற்கு வழக்கு வந்தது. இப்போது தலைமை நீதிபதியாக ஜான் ராபர்ட்ஸ் இருக்கிறார் (இவர் இரண்டாவது புஷ் காலத்தில் அப்போதிருந்த தலைமை நீதிபதி இறந்ததால் நியமிக்கப்பட்டவர். இவர் புஷ்ஷைப்போல் பழமைவாதி. மத்திய அரசின் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்கும் உரிமை ஜனாதிபதிக்கு உண்டு. ஜனாதிபதி அவருக்கு வேண்டியவரை முன்மொழிந்தாலும் செனட் அங்கத்தினர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்.) ராபர்ட்ஸ் பழமைவாதி என்பதால் கட்டாய இன்சூரன்ஸ் சட்டத்தை அரசியல் சட்டத்திற்குப் புறம்பானது என்று தீர்ப்பு வழங்கலாம் என்று பலர் பயந்தனர். ஆனால் அம்மாதிரி நடக்கவில்லை. இன்சூரன்ஸ் எடுக்கும்படி குடிமக்களை அரசு கட்டாயப்படுத்த முடியாது என்று சிலர் கூறிய மறுப்புகளை எதிர்த்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நியாயப்படுத்த இப்படி வாதாடியது: திருமணம் செய்துகொள்ளாதவர்களுக்கும் திருமணம் செய்துகொண்ட பிறகு துணையை விட்டுப் பிரிந்து தனித்து வாழ்பவர்களுக்கும் சட்டத்தில் அதிக வரி வசூலிக்கப்படுகிறது. அது மாதிரி இன்சூரன்ஸ் எடுத்துக்கொள்ளாதவர்களுக்கும் அதிக வரி வசூலிக்கப்படுகிறது. சட்டத்தை எப்படியும் அர்த்தப்படுத்த முடியும் என்பதற்கு இரு ஒரு உதாரணம். இந்த வழக்கில் தீர்ப்பு 6:3 என்ற விகிதத்தில் இருந்தது. இந்தப் பிளவும் நீதிபதிகளின் அரசாங்கத்தின் அதிகாரம் பற்றிய கொள்கைகளைப் பிரதிபலித்தது.

    உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிக்கும்போது ஜனாதிபதிகள் தங்கள் கொள்கைகளுக்கு ஏற்றவர்களாக இருப்பவர்களை நியமிக்கிறார்கள். இப்போது உச்சநீதிமன்றத்தில் இருப்பவர்களில் நான்கு பேர் பழமைவாதிகள்; மூன்று பேர் தாராளவாதிகள் (liberals); ஒருவர் இரண்டிலும் சேராதவர். ஒபாமா ஒரு தாராளவாதியை நியமித்தால் எதிர் காலத்தில் வரும் வழக்குகளில் தாராளவாதிகளின் கை ஓங்கி தீர்ப்புகள் இவர்கள் வழங்கும் தீர்ப்புகளாக அமைந்துவிடலாம் என்பதற்காக குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இது ஒபாமாவின் கடைசி வருடம் என்பதால் அவர் நியமிக்கக் கூடாது என்கிறார்கள். தன் ஆட்சிக் காலம் முடிவதற்குள் ஒரு தாராளவாதியை நியமித்துவிட வேண்டும் என்பதில் ஒபாமா குறியாக இருக்கிறார். இதை நிறுத்துவதற்கு என்னென்னவோ முட்டுக் கட்டைகள் போடுகிறார்கள் எதிர்க் கட்சிக்காரர்கள். இப்போது செனட்டில் ஜனநாயகக் கட்சியின் சிறுபான்மைத் தலைவராக இருக்கும் ஹேரி ரீட் என்பவர் பல வகை உத்திகளைக் கையாண்டு ஒபாமா தேர்ந்தெடுக்கும் நபரை நியமிக்கவைத்துவிடுவார் என்கிறார்கள். அவருக்கு இது செனட்டில் கடைசி ஆண்டு. மறுபடியும் செனட் பதவிக்குப் போட்டியிடப் போவதில்லை என்று அவர் அறிவித்துவிட்டார். அரசியலில் இது அவருக்குக் கடைசி ஆண்டாதலால் தன்னுடைய பங்கிற்கு இதைச் செய்துவிட்டுப் போக வேண்டும் என்று நினைக்கிறார்.

    அரசியல் காரணங்களுக்காகக் குடியரசுக் கட்சியினர் மறுக்க முடியாத, அதே சமயம் தாராள மனப்பான்மை உடைய, ஒருவரை நியமித்து குடியரசுக் கட்சி அங்கத்தினர்களைச் சம்மதிக்க வைத்துவிடலாம் என்று ஒபாமா நம்பிக்கொண்டிருக்கிறார். இதில் இவர் வெற்றி பெற்றால் இனி வரும் வழக்குகளில் அமெரிக்க உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகள் ஒரு வகையாக இருக்கும். இல்லையென்றால் தேர்தலுக்குப் பிறகு அடுத்த ஜனாதிபதியாக வருபவரின் கொள்கையைப் பொறுத்து நீதிபதி நியமிக்கப்படுவார். தீர்ப்புகளும் வேறு வகையாக இருக்கும்.

    Share
  • ரசாயனக் கலவைகளால் ஏற்படும் கேடுகள்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    கம்பெனிகள் பல பொருள்களில் பல ரசாயனக் கலவைகளை உபயோகிக்கின்றன.  இவற்றை இரண்டு வகையாகப் பிரித்திருக்கிறார்களாம்.  முதல் வகை அமெரிக்காவில் 1976-ஆம் ஆண்டு நச்சுப் பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டம் (Toxic Substances Control Act)  கொண்டுவரும் முன் உபயோகத்தில் இருந்தவை; 60,000-க்கும் மேற்பட்ட இந்த ரசாயனங்களின் உபயோகத்தை அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் (Environment Protection Agency) கண்காணித்து வருகிறது.  1976-க்குப் பிறகு இன்னும் 20,000 ரசாயனங்கள் சந்தைக்கு வந்திருக்கின்றன.  இவற்றையும் கண்காணிக்க வேண்டியது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தின் பொறுப்பு.  கட்டுப்பாடுகள் இருந்தும் டுபான்ட் (DuPont) என்னும் நிறுவனம் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக PFOA (perfluorooctanoic acid) என்னும் மனிதனுக்கும் மிருகங்களுக்கும் கேடு விளைவிக்கும் ரசாயனத்தை உபயோகித்து வந்திருக்கிறது.

    மேற்கு வர்ஜீனியா மாநிலத்திலுள்ள பார்க்கர்ஸ்பர்க் என்னும் ஊரில் டெனன்ஸ் சகோதரர்கள் நான்கு பேர் தங்களுடைய தந்தை விட்டுச்சென்ற 600 ஏக்கர் நிலத்தில் 200 மாடுகளை வளர்த்து வந்தனர்.  டெனன்ஸ் சகோதரர்களில் ஒருவரான ஜிம் டெனன்ஸும் அவரது மனைவியும் தங்கள் பங்கான 66 ஏக்கர் நிலத்தைப் பணத் தேவை  ஏற்பட்டதால் டுபான்ட் நிறுவனத்திற்கு விற்றுவிட்டனர்.  அந்த நிறுவனம் தன்னுடைய தொழிற்சாலைக் கழிவுகளைக் கொட்டுவதற்குரிய இடமாக அதை ஆக்கிக்கொண்டது.  அந்தக் கழிவுகளிலிருந்து PFOA (இது ஒரு ரசாயனக் கலவை; ஃப்ளோரின் (Florine) என்னும் தனிமத்திலிருந்து தயாரிக்கப்பட்டது) கசிந்து அருகிலுள்ள நிலத்தடி நீரில் கலந்தது.  இது தெரியாமலேயே இந்த இடத்தைச் சுற்றியுள்ள பல ஊர்களில் வாழ்ந்த ஒரு லட்சம் பேர் இந்த ரசாயனம் கலந்த தண்ணீரைக் குடித்து வந்தனர்.

    1951-இல் டுபான்ட், 3M கம்பெனியிலிருந்து (இது செய்யும் பல பொருள்களில் ஸ்காட்ச் டேப்பும் ஒன்று) PFOA-ஐ வாங்கி, சமைக்கும் பாத்திரங்களில் உணவு ஒட்டாமல் இருப்பதற்காக டெஃப்லான் (Teflon) என்னும் பொருளைச் சேர்க்கும்போது இதையும் சேர்த்து உபயோகிக்கத் தொடங்கியது.  3M இதற்கு நான்கு வருடங்களுக்கு முன் PFOA-ஐ கண்டுபிடித்திருந்தது.  டுபான்ட்டும் 3M-உம் சேர்ந்து நடத்திய ஆராய்ச்சிகளில் PFOA மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் அவர்களுடைய உடலில் கேடு விளைவிக்கக்கூடிய மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும் என்று கண்டறியப்பட்டது.  ஆனாலும் இரண்டு கம்பெனிகளும் இதை வெளியில் சொல்லவில்லை.  தொண்ணூறுகளில் PFOA-க்குப் பதில் இன்னொரு ரசாயனத்தை டுபான்ட் கண்டுபிடித்தது.  ஆனாலும் டுபான்ட் அதை உபயோகிக்க விரும்பவில்லை.  அதனுடைய உற்பத்திப் பொருள்களில் PFOA-னின் பங்கு அவ்வளவு.  அதனால் கிடைக்கும் நூறு கோடி டாலர் லாபத்தை அந்தக் கம்பெனி இழக்க விரும்பவில்லை.

    பார்க்கர்ஸ்பர்க் ஊரைச் சேர்ந்த டெனன்ஸ் சகோதரர்கள் வளர்த்துவந்த கால்நடைகளும் PFOA கலந்த நீரைக் குடித்துவந்ததால் பல நோய்களுக்கு ஆளாகின.  டெனன்ஸ் சகோதரர்கள் டுபான்ட் மீது வழக்குத் தொடர முயன்றபோது அந்த ஊரில் உள்ள எந்த வழக்கறிஞரும் அவர்களுக்கு உதவ முன்வரவில்லை.  பல நெருங்கிய நண்பர்கள் கூட அவர்களிடம் பேச விரும்பவில்லை.  அந்த ஊரில் பலருக்கு டுபான்ட் நிறுவனம் வேலைவாய்ப்புக் கொடுத்ததே இதற்குக் காரணம்.  கடைசியில் பெரிய வணிக நிறுவனங்களுக்குச் சட்ட ஆலோசகராக இருந்த பலாட் என்னும் வழக்கறிஞரை டெனன்ஸ் சகோதரர்கள் அணுகினர்.   எவ்வளவோ முயன்றும் PFOA கலந்த நீரைக் குடித்ததால்தான் டெனன்ஸ் சகோதரர்களின் கால்நடைகள் இறந்துகொண்டிருந்தன என்று அவரால் வாதிட்டு ஜெயிக்க முடியவில்லை.  டுபான்டும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையும் சேர்ந்து நியமித்த கால்நடை மருத்துவர்கள் குழு டெனன்ஸ் சகோதரர்களுக்குக் கால்நடை பராமரிப்புப் பற்றி தெரியாதலால் அவர்களுடைய கால்நடைகள் இறந்துகொண்டிருந்தன என்று அறிக்கை அளித்தனர்.  தற்செயலாக பலாட் டுபான்ட் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புத் துறைக்கு அனுப்பிய ஒரு கடிதத்தைப் படிக்க நேர்ந்தது.  அதில் அவர் இதுவரை கேள்விப்பட்டிராத PFOA என்ற பெயரைக் கண்டார்.  அது பற்றி தெரிந்துகொள்ள டுபான்ட் நிறுவனத்திடம் இந்த வழக்குப் பற்றிய ஆவணங்களைக் கேட்டார்.  அவர்கள் மறுத்தும் நீதிமன்றத்தின் மூலம் கேட்டு வாங்கி டுபான்ட் நிறுவனத்தின் ரகசிய ஆவணங்களை வாங்கிப் பரிசீலித்தார்.

    டுபான்ட் அனுப்பிய நூற்றுக் கணக்கான ஆவணங்களைப் பரிசீலித்த பலாட் முதல் முதலாக PFOA என்ற ரசாயனக் கலவையைப் பற்றித் தெரிந்துகொண்டார்.  டுபான்ட் கம்பெனிக்கு PFOA பற்றித் தெரிந்திருந்தும் அது தொடர்ந்து தங்கள் கம்பெனி தயாரிக்கும் பொருள்களில் அதை உபயோகிப்பது பற்றியும் பலாட்டிற்குத் தெரிய வந்தது.  பார்க்கர்ஸ்பர்க் ஊரில் நிலத்தடி நீர் PFOA-வினால் மாசுபட்டிருப்பதையும் விவரித்து 972 பக்க அறிக்கை ஒன்றைத் தயாரித்து 2001-இல் அதை அமெரிக்கச் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறைக்கும் அமெரிக்க உள்துறை அமைச்சகத்துக்கும் அனுப்பிவைத்தார்.  இது அரசுக் கொள்கையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.  பலாட் இந்த உண்மைகளை வெளிக்கொண்டுவரும்வரை, ‘கேடு விளைவிக்கும் ரசாயனம் இருந்தால் அதை அரசு கட்டுப்படுத்தியிருக்கும்’ என்று மக்கள் நம்பிக்கொண்டிருந்ததால், கேள்வி கேட்பாரின்றி கார்ப்பரேட் நிறுவனங்கள் தடையில்லாமல் ரசாயனங்களை உபயோகித்து வந்தன.  உண்மை என்னவென்றால் குறிப்பிட்ட ரசாயனம் கேடு விளைவிக்கும் என்று ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டாலொழிய அவற்றை அரசு தடை செய்யாது.  கம்பெனிகளே கேடு விளைவிக்கும் ரசாயனங்களை உபயோகிக்காது என்று நினைத்து அரசு கட்டுப்பாட்டைக் கொண்டுவரவில்லை.  1976-இல் நச்சுப்பொருள்கள் கட்டுப்பாட்டுச் சட்டம் இயற்றப்பட்டபோது அப்போது புழக்கத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ரசாயனங்களில் ஐந்திற்கு மட்டுமே அரசு தடை விதித்திருந்தது.

    கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாக 3M-உம் டுபான்டும் ஆராய்ச்சிகளின் மூலம் அவர்களுடைய ஆய்வுக் கூடங்களில் எலி போன்ற மிருகங்களுக்கு ஏற்பட்ட உடல் கோளாறுகள் பற்றியும் அவர்கள் தொழிற்சாலைகளில் வேலைபார்ப்பவர்களுக்கு ஏற்பட்ட கோளாறுகள் பற்றியும் தெரிந்திருந்தும் அந்த முடிவுகளை ரகசியமாக வைத்திருந்து தொடர்ந்து PFOA-வை தங்கள் உற்பத்திப் பொருள்களில் உபயோகித்து வந்தனர்.  இப்போது பலாட் எடுத்த நடவடிக்கைகளால் டுபான்ட்டின் ஊழல் வெளியானதும் அது சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையோடு ஒன்றரை கோடி டாலருக்கு ஒப்பந்தம் செய்துகொண்டது.  இருப்பினும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை டுபான்ட்டை அந்தத் தவறுகளுக்குப் பொறுப்பேற்கும்படி கூறவில்லை.  அமெரிக்க அரசு எப்போதுமே கார்ப்பரேட்டுகளைப் பகைத்துக்கொள்ளத் தயங்கும்.

    இதையடுத்து டுபான்ட் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்பட்ட PFOA கலந்த கழிவுகளால் மாசுபட்ட நீரைக் குடித்தவர்கள் டுபான்ட் மீது வழக்குத். தொடர விரும்பினர்.  அவர்கள் குடித்துக்கொண்டிருந்த தண்ணீரில் டுபான்டே ஆராய்ச்சி மூலம் கூறியிருந்த அளவைவிட அதிகமாக PFOA இருந்தது.  பைலாட் வழக்குத் தொடரலாம் என்று அறிந்ததும் டுபான்ட்டின் விஞ்ஞானிகளும் மேற்கு வர்ஜீனியா மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை விஞ்ஞானிகளும் சேர்ந்து ஆராய்ச்சி செய்து நீரில் அனுமதிக்கப்பட்ட பாதுகாப்பான PFOA அளவை அதிகரித்துக்கொண்டனர்.  அதாவது முதலில் நூறு கோடி துகள்களில் PFOA ஒரு துகளுக்கு மேல் இருந்தால் அது மாசுபடுத்தப்பட்ட நீர் என்று கணக்கிடப்பட்டது.  இப்போது நூறு கோடி துகள்களில் PFOA 150 துகள்கள்வரை இருக்கலாம் என்று டுபான்ட் கூறிக்கொண்டது.

    பலாட் விடவில்லை.  அவர் நியமித்த நச்சுப்பொருள் ஆராய்ச்சியாளர்கள் (toxicologists) நூறு கோடி துகள்களில் 0.2 துகள்கள் மட்டுமே இருக்கலாம் என்று முடிவுசெய்தனர்.  ஆனால் மேற்கு வர்ஜீனியா மாநிலமோ டுபான்ட் வழக்கறிஞர்கள் மூவரை மாநிலச் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறைக்கு நியமித்தது.  அதில் ஒருவர் அந்தத் துறைக்கே அதிகாரப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.  டுபான்ட் ஆராய்ச்சியாளர்கள் முடிவுசெய்த 150 துகள்களையே மேற்கு வர்ஜீனியா மாநிலம் பாதுகாப்பான அளவாக எடுத்துக்கொண்டது.

    பலாட் இன்னொரு யுத்தியைக் கையாண்டார்.  இம்மாதிரி மாசுபட்ட நீரைக் குடித்துக்கொண்டிருந்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு தாங்கள் அந்த நீரைக் குடித்துக்கொண்டிருந்ததாக நிரூபித்தால் வாதியின் எல்லா வகை மருத்துவ சோதனைகளுக்கும் பிரதிவாதி பணம் கொடுக்க வேண்டும் என்று ஒரு சட்டத்தை மேற்கு வர்ஜீனியா நிறைவேற்றியிருந்தது.  மேலும், பின்னால் அந்த வாதி நோய்வாய்ப்பட்டாலும் பிரதிவாதியிடமிருந்து நஷ்ட ஈடு பெறலாம் என்றும் அந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.  இந்தச் சட்டத்தின் உதவியால் பலாட் பலர் சேர்ந்து வழக்குத் தொடுக்கும் முறையில் (class-action suit) டுபான்ட் மீது மாநில நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

    இதற்கிடையில் பலாட்டின் ஆராய்ச்சியைத் தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை தன்னுடைய சொந்த ஆராய்ச்சியை PFOA பற்றி நடத்தியது.  2002-இல் அது வெளியிட்ட அறிக்கையில் PFOA கலந்த நீரைக் குடிப்பவர்களுக்குத் தீமை விளையும் என்பதோடு (PFOA அதிலும் கலந்திருக்கிறது என்பதால்) டெஃப்லான் பாத்திரங்களை உபயோகிப்பவர்களுக்கும் கேடு விளையலாம் என்றும் கூறியிருந்தது.  ஒவ்வொரு அமெரிக்கனின் ரத்தத்திலும் ஐந்து துகள்கள் PFOA இருப்பதாகவும் கண்டுபிடித்தது.  இந்த உண்மை டுபான்ட்டிற்கும் 3M கம்பெனிக்கும் 1976-லேயே தெரிந்திருந்தது.  2000-த்திலேயே 3M PFOA தயாரிப்பதை நிறுத்திவிட்டது.  டுபான்டோ வட கரோலினா மாநிலத்தில் தனக்கென்று ஒரு சொந்தத் தொழிற்சாலை ஆரம்பித்து PFOA தயாரிப்பைத் தொடர்ந்தது.  இன்னொரு ரசாயனத்தை மாற்றாக உபயோகிக்க விரும்பவில்லை.  ஆனாலும் இறுதியாக டுபான்ட் ஏழு கோடி டாலர் இழப்பீட்டுத் தொகை கொடுக்க மட்டும் ஒப்புக்கொண்டது.

    சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை மூலம் PFOA கலந்த நீரைக் குடித்த 70,000 பேர்களின் உடல் நலத்தை ஆராய்ந்து அவர்கள் குடித்த நீருக்கும் PFOA –க்கும் சம்பந்தம் இருக்கிறதா என்பதை ஆராய ஒரு விஞ்ஞான ஆராய்ச்சிக் குழு நியமிக்கப்பட்டது.  ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் குழு சம்பந்தம் இருப்பதாக அறிவித்தது.  அந்த முடிவிற்குப் பின் டுபான்ட் 2013-இல் PFOA-வை உபயோகிப்பதை நிறுத்தியது.  PFOA-விற்கு மாற்றாக டுபான்ட் உபயோகிக்க ஆரம்பித்த ரசாயனக் கலவையிலும் மனிதர்களுக்குக் கேடு விளைவிக்கும் தன்மை இருக்கிறதாம்.

    ஃப்ளோரின் என்னும் தனிமத்திலிருந்து தயாரிக்கப்படும் ரசாயனக் கலவைகள் அனைத்திலும் மனிதர்களிடம் பல வியாதிகளை உண்டுபண்ணும் தன்மை இருப்பதாக 2015 மே மாதம் ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட 200 விஞ்ஞானிகள் ஒப்புக்கொண்டனர்.  அமெரிக்காவிலும் சரி, உலகின் மற்ற நாடுகளிலும் சரி எத்தனை மக்களுக்கு PFOA பற்றியோ அம்மாதிரியான ரசாயனங்கள் பற்றியோ அவை மனிதனுக்கு எவ்வளவு கேடு விளைவிக்கலாம் என்பது பற்றியோ தெரியும் என்று தெரியவில்லை.

    அடிப்படைத் தனிமங்கள் 120 தான்.  அவற்றிலிருந்து பல வகையான ரசாயனக் கலவைகள்  தயரிக்கிறார்கள்.  இவற்றில் பல மனிதர்கள் உபயோகிக்கும் பல பொருள்களில்  உபயோகப்படுத்தப்படுகின்றன.  மேலே சொன்னபடி பல கட்டுப்பாடுகள் இருக்கும் அமெரிக்காவிலேயே 60,000 ரசாயனப் பொருள்களில் ஐந்து மட்டும்தான் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.  இந்தியாவில் இந்த அளவுகூட கட்டுப்பாடுகள் கிடையாது.  அப்படி இருந்தாலும் லஞ்சம் கொடுத்து அரசு அதிகாரிகளை விலைகொடுத்து வாங்கிவிடுவார்கள்.

    11-1436596887-4-non-stick-cookware

    நான் வல்லமை வாசகர்களுக்குக் கூற விரும்புவதெல்லாம் டெஃப்லான் பாத்திரங்கள் எதையும் உபயோகிக்காதீர்கள் என்பதே.  அவை நமக்குத் தெரியாமலே நம் உடம்பில் பல வியாதிகளை உண்டுபண்ணக் கூடியவை.  தொண்ணூறுகளுக்கு முன்புவரை டெஃப்லான பாத்திரங்கள் புழக்கத்திற்கு வரவில்லை.  இப்போது பல கம்பெனிகள் உணவுப் பண்டங்கள் ஒட்டாத பாத்திரங்களை உற்பத்தி செய்கின்றன.  அவற்றையெல்லாம் வாங்கும் பழக்கத்தை நிறுத்துங்கள்.  மண் பாத்திரங்களும் இரும்புப் பாத்திரங்களும் மட்டுமே மனிதனுக்குக் கேடு விளைவிக்காதவை.  மண் பாண்டங்கள் உபயோகிப்பது நடைமுறை சாத்தியமல்ல.  ஆனால் இரும்புப் பாத்திரங்களையும் எவர்சில்வர் பாத்திரங்களையும் உபயோகிக்கலாமே.

     

    Share
  • மனிதனுக்குள் மிருகம்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    மனிதன் மிருகங்களிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்றதனாலோ என்னவோ மனிதனுக்குள் நிறைய மிருக உணர்வுகள் உள்ளன என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள்.  மனிதன் ‘நாகரிகம்’ பெற்றுப் படிப்படியாக வளர்ந்து அவனுக்குள் இருந்த மிருக உணர்வுகள் ஒவ்வொன்றாக அவனை விட்டுப் போய்விட்டதாக எல்லோரும் நினைத்தாலும் அவை இன்னும் மனிதனுக்குள் இருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். வெகு ஆழமாக மனிதனின் மனதிற்குள் போய்விட்டது என்று வேண்டுமானால் சொல்லலாம்.  அவ்வப்போது அந்த மிருக உணர்வுகள் வெளியே வரத்தான் செய்கின்றன.

    கால்பந்து. ஃபேட்மிண்டன் டென்னிஸ், ஹாக்கி போன்ற எத்தனையோ விளையாட்டுக்கள் இருக்கின்றன.  இருவரோ பலரோ இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து விளையாடி யாரோ ஒருவர் அதில் வெற்றி பெறுகிறார்.  அதில் இரண்டு கட்சிகளும் ஒருவரை ஒருவர் உடலளவிலோ மனதளவிலோ துன்புறுத்துவதில்லை.  அந்த விளையாட்டுக்களைக் கண்டு பலர் மகிழ்ச்சி அடைகின்றனர்.  அதில் தவறு ஏதும் இல்லை.  ஆனால் இரு மனிதர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும், துன்புறுத்தும் குத்துச்சண்டை, மல்யுத்தம் போன்ற விளையாட்டுக்களில் மனிதர்கள் என்ன சந்தோஷம் காண்கிறார்கள் என்று எனக்கு எப்போதும் புரிந்ததில்லை.  நான் சிறுமியாக இருந்தபோது எங்கள் நெருங்கிய உறவினர் ஒருவர் எங்கள் ஊரில் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் குத்துச்சண்டையைத் தவறாமல் பார்த்து வருவார்.  அவருக்கு அது மிகவும் பிடித்த பொழுதுபோக்கு.  அப்போதே இதில் என்ன சந்தோஷம் காண்கிறீர்கள் என்று கேட்டுவிட வேண்டும் என்று எனக்குத் தோன்றும்.  ஆனால் அவர் வயதில் பெரியவர்.  அவரிடம் அப்படிக் கேட்கும் தைரியம் ஒருபோதும் எனக்கு வந்ததில்லை.  தொலைக்காட்சிப் பெட்டியில் பல சானல்களை மாற்றிக்கொண்டிருக்கும்போதோ விளம்பரங்களிலோ குத்துச்சண்டை என் கண்களில் பட்டுவிட்டால் சில வினாடிகள் கூட அதை என்னால் சகிக்க முடியாது.  அந்த அளவிற்கு ஒரு மனிதன் இன்னொரு மனிதனை உடல் அளவில் துன்புறுத்துவதை என்னால் பார்க்க முடியாது.

    அதே மாதிரி மாமிசபட்சிணிகளான புலி, சிங்கம் போன்ற மிருகங்கள் அப்பாவி மான்களையோ ஆடுமாடுகளையோ அடித்துக் கொல்லுவதையும் என்னால் படங்களில்கூட பார்க்க முடியாது.  எப்படித்தான் மனிதன் மிருகங்களை வேட்டை ஆடுகிறானோ.  அவை துடித்து உயிர்விடுவதைப் பார்க்கும் மனிதனுக்கு மிருக உணர்வு இல்லையென்று எப்படிக் கூறுவது?

    இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் அரசர்கள் ஆண்டுகொண்டிருந்தபோது சில காட்டுப் பன்றிகளை பயிர்கள் உள்ள விளைநிலத்திற்குள் விரட்டிப் பின் அவர்கள் வளர்க்கும் நாய்களை அவற்றின் பின்னால் ஓடவிட்டு அந்த நாய்கள் அந்தக் காட்டுப் பன்றிகளைக் குதறுவதைப் பார்த்து ரசிப்பார்களாம்.. இப்போதும் அந்த அரசர்களின் வழியில் வந்தவர்கள் இம்மாதிரி விளையாட்டுக்களில் ஈடுபடுகிறார்களாம்.  மனிதன் எந்த அளவிற்கு மிருகம்போல் நடந்துகொள்கிறான்.  மிருகங்கள்கூட தங்கள் உணவுக்காகவும் பாதுகாப்பிற்காகவும்தான் மற்ற மிருகங்களைத் துன்புறுத்துகின்றன.  மனிதனைப்போல் அந்த துன்பத்தில் இன்பம் காணுவதாகத் தெரியவில்லை.

    2014-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் ‘தமிழர்களின் வீரவிளையாட்டான’ ஜல்லிக்கட்டைத் தடைசெய்திருந்தது.  ஆனால்,  மத்திய அரசு அந்தத் தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தது.  ‘வீரர்கள்’ எல்லோருக்கும் ஒரே மகிழ்ச்சி.  காளைகளை அந்த ’வீரர்கள்’ துன்புறுத்தப் போவதை வேடிக்கை பார்க்கப் பலர் ஆவலோடு காத்திருந்தார்கள்!  அந்த வீரவிளையாட்டில் அவர்கள் காளைகளின் வாலை முறுக்குவதையும் அவற்றின் தலையைத் திருகுவதையும் அவற்றின் முதுகில் குத்துவதையும் பார்ப்பதில் என்ன சந்தோஷம் இருக்கிறது?  காளைகள் மட்டுமல்ல, பல ‘வீரர்’களும் அல்லவா காயமடைகிறார்கள்?  அதையும் பார்த்து மகிழ ஒரு கும்பல் இருக்கிறது என்றால் இது மிருக உணர்வு அல்லாமல் வேறு என்ன?

    தமிழகத்தில் தொன்றுதொட்டே ஏறு தழுவுதல் என்ற மரபு இருந்தது என்று இலக்கியம் கூறுகிறது..  இப்போதைய ஜல்லிக்கட்டின் முன்னோடி என்கிறார்கள் இதை.  வசதி படைத்த சீமான்கள்  காளைகளை வளர்த்து அவற்றை அடக்குபவர்களுக்குத்தான் தங்கள் மகள்களைத் திருமணம் செய்துகொடுப்பார்களாம்.  அப்படிப்பட்டவனை மணக்கத்தான் பெண்ணும் விரும்புவாளாம்.  அவன் அறிவிலியாகவோ முரடனாகவோ இருந்துவிட்டால் அவளுடைய கதி என்ன?  அப்படி இருந்தாலும் வீரனாக – அதாவது காளையை அடக்குபவனாக – இருந்தால் மட்டும் போதும் என்று பேசாமல் இருந்துவிடுவாளா?  அப்படியே இந்த மரபு அப்போது இருந்திருந்தாலும் இப்போதைய கணினி யுகத்தில் எந்தப் பெண் இப்படி காளையை அடக்குபவனை விரும்பி மணந்துகொள்வாள்?

    பழைய ரோம சாம்ராஜ்ஜியத்தில் குற்றம் புரிந்தவர்களை உயிரோடு பசியோடு இருக்கும் சிங்கத்திற்கு இரையாக்குவார்களாம்.  இதை ரசித்துப் பார்க்க ஊரே கூடுமாம்.  இன்னும் அந்த மனோபாவத்தில்தான் நாம் இருக்கிறோமா?  மனிதன் எவ்வளவோ வளர்ச்சி பெற்று நாகரிகம் அடைந்துவிட்டதாகக் கூறிக்கொள்வதெல்லாம் உண்மை இல்லையா? மிருக உணர்விலிருந்து அவன் எப்போதுமே விடுதலை பெறப் போவதில்லையா?

    தினம் தினம் மனிதன் மற்ற உயிரினங்களைக் கொன்று தன் பசியைப் போக்கிக்கொள்கிறானே அது எப்படி சரியாகும் என்று சிலர் கேட்கலாம்.  அதுவும் சரியல்ல, இதுவும் சரியல்ல.  மனிதனால் மிருகங்களை அடக்கி ஆள முடியும் என்ற ஒரே காரணத்தால் அவற்றை மனிதன் கொன்று தின்பது மிகவும் கொடியது.  அமெரிக்காவை எதிலும் பின்பற்ற வேண்டும் என்று நினைக்கும் நாம் கோழிகளை அமெரிக்காவில் போல் ஈவு இரக்கமில்லாமல் அவற்றிற்கு வேதனை ஏற்படுத்தும் வகையில் குறுகிய காலத்திலேயே கொழுக்கவைத்து உண்கிறோம்.  அமெரிக்காவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது.  தேவை இல்லாததை விட்டுவிட்டு தேவையானதை கற்றுக்கொள்ளலாமே.  இப்போது அமெரிக்காவில் மிருகங்களை எந்த விதத்திலும் துன்புறுத்தக் கூடாது, அதனால் பால், வெண்ணெய் போன்ற பதார்த்தங்களையும் விட்டுவிடும் கூட்டம் பெருகி வருகிறது.

    மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று நிர்வாக ஆணைப் பிறப்பித்து, அதை பீட்டா போன்ற மிருக ஆர்வலர்கள் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, நீதிமன்றம் அந்த ஆணையை ரத்துசெய்து, அதன் பிறகு தமிழக இளைஞன் ஒருவன் தீக்குளித்து இப்போது எல்லாம் முடிவடைந்தது என்று கொள்ளலாம்.  ஜல்லிக்கட்டு நடத்தத் தடை விதிக்கப்பட்டதால் தமிழ்நாட்டில் சிலர் ஏமாற்றமடைந்திருக்கிறார்கள்.  என்னைப் பொறுத்தவரை பல காளைகள் மனிதனின் துன்புறுத்தலுக்கு இலக்காகாமல் தப்பின என்ற விஷயம் மனதுக்கு ஒரு நிம்மதியையே கொடுக்கிறது..

    Share
  • நடக்காத குற்றத்திற்கு மூவருக்குத் தண்டனை

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அமெரிக்கா சட்டம், ஒழுங்கைக் காப்பாற்றுவதில் உலகிலேயே முதல் இடம் வகிக்கிறது என்பது எல்லோரும் அறிந்தது.  எவ்வளவு பெரிய பணக்காரர்கள் என்றாலும், எவ்வளவு பெரிய அரசியல்வாதிகள் என்றாலும் தவறு செய்தால் சட்டம் அவர்களை விட்டுவைப்பதில்லை.  இது மிகவும் பாராட்டுக்குரியது.  யாரோ செய்த குற்றத்திற்கு அதில் சம்பந்தப்படாதவர்களைத் தண்டிப்பதும் அமெரிக்காவில் நடக்கிறது.  இந்தியாவில் முன்னையது நடக்கவில்லை என்றாலும் பின்னையது நடக்கிறதா என்று தெரியவில்லை.  அது பற்றிப் பத்திரிக்கைகளில் அதிகம் செய்திகள் வருவதில்லை.  மேலும், தவறாகத் தண்டிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்க வழக்கை மறுபரிசீலனை செய்யும் அமைப்பு எதுவும் அமெரிக்காவில் போல் இந்தியாவில் இல்லை.

    குற்றமே நடந்திராதபோது குற்றம் புரிந்ததாகப் பழிசுமத்தப்பட்டு மூவர் தண்டிக்கப்பட்டு முப்பத்து மூன்று வருஷங்களுக்கு மேல் அந்த மூவரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது பற்றிச் சமீபத்தில் படித்தபோது அமெரிக்காவில் மட்டும்தான் இம்மாதிரி நடக்கும் போலும் என்று எண்ணத் தோன்றியது.

    1980-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நியுயார்க் நகரின் புருக்லின் பகுதியில் இருந்த ஒரு மூன்று மாடி வீட்டில் தீப்பிடித்து மூன்றாவது மாடியில் குடியிருந்த ஒரு தாயும் அவருடைய ஐந்து குழந்தைகளும் அந்த விபத்தில் உயிர் இழந்தனர்.  அந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்த அந்த வீட்டின் சொந்தக்கார அம்மாள் மேலே குறிப்பிட்ட மூன்று பேர்தான் அந்த வீட்டிற்குத் தீவைத்ததாகச் சாட்சியம் சொன்னார்.  இவர் சட்டவிரோதமாகப் போதைப் பொருள் விற்பவர்.  தனக்கும் அவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அவர்களில் ஒருவர் ‘நான் திரும்பி வந்து அந்த வீட்டிற்குத் தீவைக்கப் போகிறேன்’ என்று கூறியதாகவும் தன்னுடைய சாட்சியத்தில் கூறினார்.  தீ விபத்து ஏற்படுவதற்குச் சற்று முன்பு அவர்கள் மூவரும் பேசியதைத் தான் கேட்டதாகவும் தீ விபத்து நடந்த பிறகு அவர்கள் மூவரும் அந்த வீட்டை விட்டு வெளியேறியதாகவும் சொன்ன சாட்சியத்தை வைத்து அந்த மூவருக்கும் தீ விபத்தை ஏற்படுத்தியதற்கும் ஆறு பேர் இறப்பதற்குக் காரணமாக இருந்ததற்கும் ஆயுள் முழுவதும் சிறைவாசம் என்று தீர்ப்பாகியது.  ஒருவர் மட்டும் கூறிய சாட்சியத்தை வைத்து தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

    தாங்கள் நிரபராதிகள் என்று எத்தனை முறை கூறியும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை.  இவர்கள் மூவர் மேலும் வழக்கு நடந்துகொண்டிருந்தபோது வில்லலோபஸின் மனைவியும் வாஸ்கஸின் மனைவியும்  தங்கள் கணவன்மார் குற்றம் நடந்த அன்று தங்களுடன் இருந்ததாகக் கூறிய சாட்சியத்தை நீதிமன்றம் ஒத்துக்கொள்ளவில்லை.

    ரேமாண்ட் மோரா என்பவர் 1989-இல் சிறையிலேயே மாரடைப்பால் காலமானார்.  வில்லியம் வாஸ்கஸ், அமௌரி வில்லலோபஸ் ஆகிய மற்ற இருவரும் சிறையில் உழன்றனர்.  வாஸ்கஸ் சிறையில் இருக்கும்போது  கண்களில் ஏற்படும் கண்திரவ அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு சிறை அதிகாரிகள் அவருக்குச் சரியான மருத்துவ சிகிச்சை அளிக்காததால் பார்வையை இழந்தார்.  வில்லலோபஸ் பல முறை தன்னைப் பரோலில் விடுமாறு கேட்டும் அதிகாரிகள் அவருக்குப் பரோல் வழங்கவில்லை.  சிறையில் இருக்கும் கைதிகள் பல ஆண்டுகள் சிறையில் இருந்த பிறகு அவர்களுடைய நன்னடைத்தைக்காக அவர்களுக்குப் பரோல் வழங்கப்படும்.  ‘தான் செய்த தவறுக்கு’ அவர் ஒருபோதும் வருந்தவில்லை என்ற காரணம் காட்டி அவருக்கு பரோல் கொடுக்க மறுத்து வந்தனர்.  33 வருடங்களுக்கு மேல் சிறையில் இருந்த பிறகு பரோல் கிடைத்து வெளியில் வந்த வில்லலோபஸ் நியுயார்க் சட்டக் கல்லூரியை அணுகித் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டியிருக்கிறார்.  அந்தக் கல்லூரியின் ‘தண்டிக்கப்பட்ட பிறகு நியாயத்திற்காகப் போராடும் பிரிவின்’ (Post-conviction Innocence Clinic) தலைவரும் அவருடைய சட்டம் படிக்கும் மாணவர்களும் இவருடைய வழக்கைத் திரும்ப எடுத்து ஆராய்ந்திருக்கின்றனர்.  சட்டக் கல்லூரிகளில் வேலைபார்க்கும் சில சட்டப் பேராசிரியர்கள் இந்த மாதிரிச் சில வழக்குகளைத் திரும்ப எடுத்து ஆராய்ந்து தவறாகத் தண்டிக்கப்பட்டவர்களை விடுவித்திருக்கிறார்கள்.

    தீ விபத்து நடந்த வீட்டின் முதல் தளத்தில் சில நேரங்களில் போதை மருந்திற்கு அடிமையானவர்கள் தீ மூட்டி போதை மருந்தைத் தயார்செய்வார்களாம்.  அப்படிச் செய்த ஒரு சமயத்தில் தீப்பொறி ஒரு மின்சாரக் கம்பியில் பற்றித் தீப்பிடித்துக்கொண்டிருக்கிறது.  இப்படிப் பற்றிக்கொண்ட தீ யாராலும் வேண்டுமென்றே மூட்டப்படவில்லை.  அப்படி ஏற்பட்டது ஒரு தீ விபத்தே. ஆனால், இதைக் காவல் துறை அப்போது ஒத்துக்கொள்ளவில்லை. நெருப்பு எப்படிப் பற்றுகிறது, அதன் பிறகு எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படுகின்றன என்ற விபரங்கள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் அப்போது ஏற்பட்டது விபத்துதான் என்று இப்போது முடிவுசெய்திருக்கிறார்கள்.

    மேலும், இவர்கள் மூவர் மேலும் குற்றம் சுமத்திய அந்த வீட்டின் உரிமையாளர் இறக்கும் தறுவாயில் தன் மகளிடம் தனக்கும் அந்த மூவருக்கும் போதைப் பொருள் விற்பனை சம்பந்தமாக ஏற்பட்ட தகராறினால் தான் அவர்களைக் குற்றவாளிகள் என்று காட்டிக் கொடுத்ததாகக் கூறி மனம் வருந்தியிருக்கிறார்.  அமெரிக்காவில் வீடுகள் உட்பட எல்லாக் கட்டடங்களிலும் நெருப்புப் புகையைக் கண்டுபிடித்து அலாரம் அடிக்க ஒரு கருவி இருக்க வேண்டும்.  இந்தப் பாதுகாப்பை வீட்டுக்கார அம்மாள் செய்யவில்லை.  அதனால் தன் மீது குற்றம் சுமத்தப்படலாம் என்று நினைத்து அது விபத்தில்லை என்று நம்பவைப்பதற்காக மூவர் மீதும் பழியைப் போட்டார்.

    இந்த வழக்கு எப்படி நீதிமன்றத்தால் முதலில் எடுத்துக்கொள்ளப்பட்டது என்று புரியவில்லை என்று இப்போது வழக்கை நடத்திய பப்ளிக் பிராசிக்யூட்டர் கூறியிருக்கிறார்.  பப்ளிக் பிராசிக்யூட்டரின் தலையீட்டால் விடுவிக்கப்பட்டிருப்போரில் அதிக ஆண்டுகளைச் சிறையில் கழித்தவர்கள் இவர்கள்தானாம்.

    2015 டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி இந்த மூவரும் குற்றமற்றவர்கள் என்று நீதிபதி கூறிய பிறகு நீதிமன்றத்திற்கு வந்திருந்த, சிறையில் இறந்துபோன மோராவின் மகளும் மனைவியும் ‘இது எங்களுக்குக் கிடைத்த சிறந்த கிறிஸ்துமஸ் பரிசு’ என்று கூறி ஒருவரையொருவர் ஆரத் தழுவிக்கொண்டனர்.  வாஸ்கஸ், ‘நான் இழந்த வருடங்களை யாராலும் எவ்வளவு பணத்தாலும் திருப்பிக் கொடுக்க முடியாது.  முப்பது வயதில் சிறைக்குச் சென்றேன்.  இப்போது 65 வயது ஆகிறது’ என்று கூறிக்கொண்டு பார்வையற்ற தன் கண்களிலிருந்து வழிந்த நீரைத் துடைத்திருக்கிறார்.  பல முறை தான் ‘மனம் திருந்தி’ வருத்தப்படாததைக் காரணம் காட்டி (செய்யாத தவறுக்கு யார் வருத்தம் தெரிவிப்பார்கள்?)  பரோல் மறுக்கப்பட்ட வில்லலோபஸ், ‘அவர்கள் எனக்குப் பெரிய தீங்கு இழைத்தார்கள்.  ஆனாலும் எனக்குக் கோபம் இல்லை.  எல்லாவற்றுக்கும் இறைவன் இருக்கிறார்’ என்று கூறியிருக்கிறார்.  இத்தனைக்குப் பிறகும் அவருக்கு இறை நம்பிக்கை இருக்கிறது!

    குற்றம் புரியாதவர்கள் தண்டிக்கப்படுவதும் அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து அவர்கள் அந்தப் பழியிலிருந்து விடுதலை பெறுவதும் அப்போது லட்சக் கணக்கில் தவறான தண்டனையை அனுபவித்தற்கு நஷ்டஈடாகப் பணம் பெறுவதும் அமெரிக்காவில் நடக்காத ஒன்றல்ல.  இதற்காகவே குற்றமின்மையை நிரூபிக்கும் அமைப்பு ஒன்று (Innocence Project) அமெரிக்காவில் இயங்கி வருகிறது.  இப்படி ஒன்று இல்லாவிட்டால் தவறாகத் தண்டிக்கப்பட்டவர்களின் கதி என்ன ஆகியிருக்கும் என்று யோசிக்கவே பயமாக இருக்கிறது.

    Share
  • மனிதனுக்கு மதம் தேவையா?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    மனிதனுக்கு மதம் தேவையா இல்லையா என்ற வாதம் எப்போதுமே நடந்துகொண்டிருக்கிறது.  இப்போது பல மதங்களைச் சேர்ந்தவர்களும் தாங்கள் செய்யும் அராஜகச் செயல்களுக்குத் தங்கள் மத நூல்களில் கூறப்பட்டிருக்கும் அறவுரைகளைத் தவறாகப் புரிந்துகொண்டு தங்களுடைய செயல்களுக்கு நியாயம் கற்பிக்கிறார்கள்.

    1995 நவம்பர் மாதம் நான்காம் தேதி இஸ்ரேல் பிரதம மந்திரியாக இருந்த இட்சக் ரபீன் என்பவரை யூத மத வெறியன் இகால் அமீர் சுட்டுக் கொன்றான்.  இந்தக் கொடிய சம்பவம் நடந்து இருபது வருடங்கள் ஆகின்றன.  அவனுக்கு அந்தக் கொலையில் உடந்தையாக இருந்த அவனுடைய சகோதரன் பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து விடுதலை ஆகியிருக்கிறான்.  அவனோ அவனுடைய சகோதரனோ இன்றளவும் தாங்கள் செய்த தவறுக்கு மனம் வருந்தவில்லை.  தங்கள் யூத மத வேதமான தோராவின் விளக்க உரையான டால்முடில்  (Talmud)  யூதர்களுக்குத் தீங்கு செய்பவர்களின் உயிர்களைப் பறிப்பதற்கு யூதர்களுக்கு உரிமை இருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறதாம்.  ஆஸ்லோ ஒப்பந்தத்தில் ரபீன் கையெழுத்திட்டதால் பாலஸ்தீனர்களுக்குச் சொந்தமான வெஸ்ட் பேங்கில் குடியமர்த்தப்பட்ட இஸ்ரேலிய யூதர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவதன் மூலம் கஷ்டத்திற்கு உள்ளாவார்களாம்.  அதனால் அதற்குக் காரணமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ரபீன் இந்த மதவாதிகளால் கொல்லப்படுவது தவறில்லையாம்!  இது இந்த இரண்டு சகோதரர்களின் வாதம்.  அதே தோராவில்தான் ‘நீ மற்றவர்கள் உன்னை எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறாயோ அப்படி மற்றவர்களை நீ நடத்த வேண்டும்’ என்று கூறியிருக்கிறது.  இந்த இரண்டு சகோதரர்களும் அதை மறந்துவிட்டார்கள்.  தோராவின் விளக்க உரையான டால்முடில் அப்படிக் கூறியிருக்கிறதா என்று தெரியவில்லை.  விளக்க உரை எழுதுபவர்கள் மூலத்தில் உள்ளதைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கலாம்.  அந்த விளக்க உரைகளை எப்படி அப்படியே எடுத்துக்கொள்ள முடியும்?  யூத மத வெறியர்களின் குருட்டுப்புத்திக்கு இது ஒரு உதாரணம்.

    சிரியாவிலும் ஈராக்கிலும் சுன்னி பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு ஒரு ராஜ்ஜியம் உருவாக வேண்டும் என்று ஐ.எஸ்.ஐ.எஸ். பலரைப் பலிவாங்கிக்கொண்டிருக்கிறது.  அல்லாவின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் எல்லோரும் நிரீஸ்வரவாதிகள் என்று கூறிக்கொண்டு இஸ்லாம்மதத்தைச் சேராதவர்களைக் கொல்லுவதுதான் அந்த மதத்திற்குத் தாங்கள் செய்யும் சேவை என்று நினைக்கிறது.  மதத்தின் பெயரால் இவர்கள் செய்யும் அராஜகச் செயல்களுக்கு மதத்தைக் காரணம் காட்டுகிறார்கள்.  டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி கலிஃபோர்னியாவில் கொலைவெறியில் ஆடிய இருவரில் மனைவி ஐ.எஸ்.ஐ.எஸ்ஸுக்கு சமூக வலைதளம் ஒன்றில் தன் விசுவாசத்தைத் தெரிவித்து எழுதியிருக்கிறார்.  அவர்களுடைய மதத்திற்கு அவர்கள் இப்படிச் சேவை செய்கிறார்களாம்.  இது எவ்வளவு பெரிய மத மடமை!

    சென்ற நவம்பர் மாதக் கடைசியில் அமெரிக்க மாநிலமான கொலராடோவில் உள்ள கொலராடோ ஸ்ப்ரிங்க்ஸ் (Colorado Springs) என்னும் நகரிலுள்ள ‘திட்டமிடும் பெற்றோர்’ (Planned Parenthood) என்ற அமைப்பைச் சேர்ந்த ஒரு கட்டடத்திற்குள் நுழைந்து ஒருவன் சரமாரியாகச் சுட்டதில் மூன்று பேர் உயிர் இழந்திருக்கிறார்கள், ஏழு பேர் காயமடைந்திருக்கிறார்கள்.  காவல்துறை அதிகாரிகள் அந்த இடத்திற்கு வந்தவுடன் அவர்களிடம் சரணடைந்திருக்கிறான்.

    இவனுக்கு ஏன் அந்த அமைப்பின் மீது அத்தனை கோபம்?  இந்த அமைப்பு பெண்களுக்குத் திட்டமிட்டுக் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு ஆலோசனைகள் வழங்குவதோடு பெண்கள் விரும்பினால் அவர்கள் கருச்சிதைவு செய்துகொள்வதற்கும் உதவுகிறது.  இந்த அமைப்பு கிறிஸ்தவர்களின் வேதப் புத்தகமான பைபிளில் கூறப்பட்டிருப்பதற்கு மாறாகப் பெண்களுக்குக் கருச்சிதைவு செய்வதாகவும் அப்படிச் செய்த கருக்களின் பகுதிகளை ஆராய்ச்சிக்குப் பயன்படுத்துவதற்கு விற்பதாகவும் கூறி ‘இனி சிசுக்களின் உடல் பகுதிகள் விற்பனைக்கு கிடைக்காது’ என்று கூவியிருக்கிறான்.  பைபிளில் தடைசெய்யப்பட்டிருக்கும் விஷயங்களை ஆதரிப்பதாகத் தன்னைக் கூறிக்கொள்ளும் இவன் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் மூன்று பெண்களை மணந்திருக்கிறான்; அவர்களைப் பல வகையாகத் துன்புறுத்தியிருக்கிறான்; அவர்களோடு குடும்பம் நடத்திக்கொண்டிருக்கும்போதே மற்றப் பெண்களோடு உறவு வைத்துக்கொண்டு குழந்தை பெற்றுக்கொண்டிருக்கிறான்.  உலகம் சீக்கிரமே அழியப் போவதாகவும் தான் யேசுவின் மேல் அழியாத பற்றும் நம்பிக்கையும் வைத்திருப்பதால் உலகம் அழிந்த பிறகு தான் எப்போதுமே யேசுவின் அருகில் இருக்கப்போவதாகவும் கூறிக்கொண்டிருந்திருக்கிறான்.  என்னே இவனுடைய அறியாமை!

    இந்தியாவில் இந்து மத சாமியார்களும் அவர்களுடைய ஆதரவாளர்களும் இந்து மத நம்பிக்கைகளைப் பின்பற்றுபவர்கள்தான் மோட்சம் பெறுவார்கள் என்பதுபோல் பேசுவதைப் பார்த்தால் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. இதில் பசுவைக் கும்பிடுவதும் ஒன்று.  பசுவைக் கொல்லக் கூடாது என்று கூறுபவர்கள் எருமைகளைக் கொல்வது பாவம் இல்லை என்கிறார்கள்.  எருமை என்ன பாவம் செய்தது?  அதைக் கொல்லும்போது அதற்கு மட்டும் வலிக்காதா?  அதுவும்தானே மனிதனுக்குத் தேவையான பாலைக் கொடுக்கிறது?

    எல்லா மதங்களும் எந்த உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது என்றுதான் கூறும்.  மனிதர்களில் ஏற்றத்தாழ்வு இல்லை என்றுதான் எல்லா மதங்களும் போதிக்கும்.  ‘அடித்துப் புசி’ என்று பைபிளில் கூறியிருப்பதாக என்னுடைய கிறிஸ்தவப் பள்ளித்தோழி ஒருத்தி கூறுவாள்.  அன்பே உருவானவராக, இடையனாகச் சித்தரிக்கப்படும் யேசு மிருகங்களை அடித்துப் புசிக்கச் சொல்லியிருப்பாரா?  நிச்சயமாகச் சொல்லியிருக்க மாட்டார்.

    அமைதி தவழும் புத்தர் சிலையைப் பார்த்தாலே அவர் கற்பித்த கொல்லாமைதான் நம் நினைவிற்கு வருகிறது.  அவர் பெயரில் வழங்கும் மதத்தைப் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொண்டு மியான்மாரில் அங்கு  வாழும் முஸ்லீம்களுக்கு எதிராகச் செய்யும் வன்முறைச் செயல்களும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அங்கு வாழும் புத்த மதத்தைத் தழுவும் சிங்களர்கள் செய்யும் அராஜகச் செயல்களும் புத்தரை உண்மையிலேயே பின்பற்றுகிறார்களா என்று நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது.

    மத போதனைகள், மதக் கோட்பாடுகள், மதச் சடங்குகள் இல்லாமலேயே இறைவனை வழிபடலாம்.  மனிதர்களிடையே நல்லிணக்கத்திற்கு உதவாத மதங்களை மனித இனம் தூக்கி எறிந்துவிட்டு இறைவனை வழிபடலாம்.  ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பார்கள்.  அந்த தேவனை வழிபடுவதற்கு மதங்கள் ஏன், மதச் சடங்குகள் ஏன்?,

    Share
  • மாமனிதர் கலாம்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    images (2)

    உலகில் எத்தனையோ மனிதர்கள் பிறக்கிறார்கள், இறக்கிறார்கள்.  எல்லோரும் பெரிய மனிதர் என்ற பெயர் வாங்குவதில்லை.  ஆனால் கலாம் போன்ற மிகச் சிலரே இறந்த பிறகும் பலராலும் போற்றப்படுகிறார்கள்.  அவர் இறந்த சமயம் நான் தமிழ்நாட்டில் இருந்தேன்.  தமிழ்நாட்டில் பல இடங்களுக்கும் சென்றபோது அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, மதங்களுக்கு அப்பாற்பட்டு, ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு அவர் சிறப்பாக வாழ்ந்ததற்கு ஆதாரமாக எல்லா அலுவலகங்கள் முன்பும் சாலை ஓரங்களிலும் அவர் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து உருக்கமாகக் கீழே எழுதியிருந்த வாசகங்கள் அந்த மனிதகுல மாணிக்கத்தின் பெருமையைப் பறைசாற்றிக்கொண்டிருந்தன.  அவற்றில் சில:

    சரித்திரம் சரிந்தது.

    உன் பிறப்பு தற்செயலாக இருக்கலாம்.  உன் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்.

    மண்ணுக்குச் செய்த சேவை போதுமென்று விண்ணுக்குப் போய்விட்டாயா?

    உன் கனவு தூக்கத்தில் காணும் கனவு அல்ல; தூங்காமல் விழித்திருந்து செய்ய வேண்டிய கனவு.

    அவர் பள்ளிப் படிப்பை முடித்தது எங்கள் ஊரில் (இராமநாதபுரம்) உள்ள சுவார்ட்ஸ் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில்.  அங்கு பெரிய பேனர் வைத்திருந்தார்கள்.  எங்கள் வீட்டிற்கு மிகவும் அருகில் உள்ள அந்தப் பள்ளியைக் கடந்து செல்லும்போது மனதில் பெருமை தாண்டவமாடியது.  அவரின் பூதஉடலை அருகில் சென்று பார்க்க வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றாலும் மதுரையிலிருந்து அதைச் சுமந்துகொண்டு இராமேஸ்வரத்திற்குச் சென்ற ஹெலிகாப்டரைக் காண முடிந்தது.  அதுவே அவருடைய பூத உடலுக்குச் செய்த மரியாதையாக நினைத்துக்கொண்டேன்.

    சிறு வயதிலேயே இந்தியாவை விஞ்ஞானம் மூலம் உயர்த்தி உலகிலேயே வல்லரசு நாடாக ஆக்க வேண்டும் என்பதே அவருடைய ஆசை.  எந்தப் பள்ளிக்குச் சென்றாலும் கல்லூரிக்குச் சென்றாலும் அங்கு மாணவர்களிடம் உரையாடி அவர்களை கல்வியில் ஊக்குவிப்பதே அவருடைய செயல்.  சதாசர்வ காலமும் எந்தவித தன்னலமும் இன்றி இந்தியாவின் முன்னேற்றமே அவருடைய மூச்சாக இருந்தது.  டாக்டர்கள் தடுத்தும் ஷில்லாங்கில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவர்களிடையே பேசும் வாய்ப்பை ஏற்று அப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே உயிரை விட்ட அம்மாமனிதரின் விருப்பத்தை – மாணவர்களிடம் உரையாடிக்கொண்டிருக்கும்போதே – இறைவன் எப்படி நிறைவேற்றி வைத்திருக்கிறான்!

    1998-இல் வாஜ்பாய் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட அப்போதைய பி.ஜே.பி. அரசு கலாமை ஜனாதிபதியாக நியமித்தது.  ஐந்து வருடங்கள் ஆன பிறகு அவருடைய முதல் பதவிக்காலம் முடிந்தபோது அவரையே இன்னொரு ஐந்து வருடங்கள் ஜனாதிபதி பதவியில் தொடரவிடலாமா என்ற எண்ணம் எழுந்தபோது ஊழலிலே ஊறிப் போன லாலு பிரசாத் யாதவ் போன்றவர்கள் கலாம் பதவி இறங்குவதுதான் அவர் செய்யக் கூடிய கண்ணியமான செயல் என்பதுபோல் பேசினார்கள்.  யார் யாரைப் பார்த்து என்ன பேசுவது என்ற விவஸ்தையே இல்லாமல் போயிற்று.  தான் ஜனாதிபதியாகப் பதவியேற்றதைக் காண வந்த அவருடைய உறவினர்கள் எல்லோரையும் டில்லிக்கு தன் சொந்த செலவில் வரவழைத்தார்  கலாம்.  தன்னலம் கருதாது நாட்டின் வருங்காலத்தைப் பற்றியே கனவுகண்டுகொண்டிருந்த கலாம் எங்கே?  ஊழலைத் தவிர வேறு ஒன்றையும் அறியாத லாலு எங்கே?  இந்தியாவில் மட்டும்தான் இந்த மாதிரியான விமர்சனங்கள் நடக்கும்.  இன்னும் ஐம்பது வருஷங்கள் கழித்து லாலுவும் ஜெயலலிதாவும் வாழ்ந்த காலத்தில் கலாம் போன்றவர்கள் வாழ்ந்தார்களா என்ற ஐயம் மக்களுக்கு எழுந்தாலும் எழலாம்.

    பதவியில் இருந்தபோதும் இல்லாதபோதும் மிக எளிமையாக வாழ்க்கை நடத்தியவர் கலாம்.  இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சுத்த சைவ உணவையே உண்டு வந்தவர்.  தமிழ்நாட்டில் டாக்சியில் போய்க்கொண்டிருந்தபோது ‘இவ்வளவு சீக்கிரம் கலாம் இறந்துவிட்டாரே.  மருத்துவப் பரிசோதனைகள் எல்லாம் செய்துகொண்டாரா’ என்று நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது டாக்சி டிரைவர் ‘முஸ்லீம்கள் எல்லோரும் நிறைய மாமிசம் சாப்பிடுபவர்கள்.  திடீரென்று கொழுப்பு அடைத்து இறந்துவிடுவார்கள்’ என்றான்.  எப்படிப்பட்ட அறியாமை!  அவர் சுத்த சைவம் என்றதும் வாயடைத்துப் போய்விட்டான்.

    இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர் என்றாலும் வீணை வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவர்.  இசைக்கு ஷெனாய் போன்ற வாத்தியத்தைத் தேர்ந்தெடுக்காமல் கர்நாடக சங்கீதத்தின் முக்கிய அங்கமாகிய – சரஸ்வதியின் இசைக் கருவியான – வீணையைத் தேர்ந்தெடுத்தார்.  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகிலுள்ள கலசலிங்கம் பல்கலைக்கு ஒரு விழாவிற்குச் சென்றவரை அங்குள்ள ஸ்ரீஆண்டாள் கோவிலுக்கு அழைத்துச் சென்றனர்.  கோவில் அதிகாரிகள் அவருக்குப் பரிவட்டம் கட்டி மரியாதை செய்தார்கள்.  அதை எந்தவிதத் தயக்கமும் இன்றி ஏற்றுக்கொண்டார் கலாம்.  அவரைப் பொறுத்தவரை எல்லா மதங்களும் சமம்.  அவர் மதங்களுக்கு அப்பாற்பட்டவர்.

    அறிவு, எளிமை, நாணயம், தேசப்பற்று, தொண்டுணர்வு இவையெல்லாம் ஒரு சேர ஒரு மனிதரிடம் பார்ப்பது அரிது.  கலாம் ஒரு அரிய மனிதர்.

    Share
  • வீட்டு வேலை செய்பவர்களுக்கு விமோசனம்?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    மோதி அரசு வீடுகளில் வேலைசெய்வர்களுக்கு சில பாதுகாப்புச் சட்டங்களை இயற்றவிருக்கிறது.  நாடு முழுவதும் வீட்டு வேலை செய்யும் மூன்று கோடிப் பேரின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் வகையில் தேசிய அளவில் கொள்கை வகுக்க மத்திய தொழில்துறை நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறதாம்.  அதன்படி வீட்டு வேலைக்கு ஆட்களை அமர்த்தும்போது சட்டப்படி வழங்க வேண்டிய சம்பளம் மற்றும் இதர சலுகைகளைக் கட்டாயமாக்கப் போகிறதாம்.  கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது.  எந்தவித ஓய்வும் இன்றி எந்நேரமும் வீட்டு வேலை செய்து உழல்பவர்களைப் பற்றி நான் பல காலமாக, பல விதமாக வேதனைப்பட்டதுண்டு.  இப்போது அவர்களுக்கும் ஒரு வழி பிறக்கப் போவதுபோல் தெரிகிறது.  இவர்களைப் பற்றி மத்திய அரசு நினைக்க ஆரம்பித்திருப்பதே ஒரு நல்ல அறிகுறி என்றாலும் இந்தத் திட்டத்தை எப்படி நிறைவேற்றப் போகிறார்கள் என்பதை நினைத்தால் நம்பிக்கை பிறக்கவில்லை.

    பள்ளிகளில் மதிய உணவு திட்டம் தமிழ்நாடு அரசால் பல ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்டபோது அப்போதைய ஆளும் கட்சியின் தொண்டர்களின் பைகளை நிரப்புவதற்காகவும் அத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறுவார்கள்.  அது ஓரளவு உண்மையாயிற்று.  ஒரு முறை ஒரு பெண் என்னிடம் அவளுடைய உறவினப் பெண் ஒருத்திக்குச் சத்துணவு மையத்தில் வேலை கிடைத்திருப்பதாகவும் அவள் பாடு இனி கவலையில்லாமல் இருக்கும் என்றும் சொன்னாள்.  அவளுக்கு ஒரு வேலை கிடைத்திருக்கிறது என்பதல்ல அதற்குக் காரணம்.  இனி அவள் தனக்கு வேண்டிய உணவுப் பதார்த்தங்களை மையத்திலிருந்து எடுத்துக்கொள்ளலாம் என்பதால்.

    மத்திய அரசின் இந்தத் திட்டமும் இதைப் போன்று முடியுமோ என்றுதான் சந்தேகமாக இருக்கிறது.  இந்தத் திட்டத்தின் அம்சங்களைப் பார்த்தால் அப்படிப்பட்ட சந்தேகம் ஏற்படுகிறது.  வீட்டு வேலைக்கு ஆட்களை எடுக்க அரசு ஒப்புதலுடன் ‘ப்ளேஸ்மெண்ட்ஏஜென்சி’ எனப்படும் வேலை அளிக்கும் அமைப்பு ஏற்படுத்தப்படுமாம்.  அதில் வேலை கோருபவர்களும் வேலைக்கு ஆட்கள் தேடுபவர்களும் பதிவு செய்துகொள்ள வேண்டுமாம்.  இந்த அமைப்பின் மூலம் செல்லாமல் தாங்களாக வேலைக்கு ஆட்களை வைத்துக்கொண்டால் அரசு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாம்.

    இரண்டாவதாக வேலை செய்யும் இடத்தில் சுமுக சூழ்நிலை, வாரம் ஒரு நாள் விடுமுறை, வருடத்திற்கு ஒரு மாதம் சம்பளத்துடன் விடுமுறை, மகப்பேறு விடுமுறை போன்றவை கட்டாயமாக்கப்படுமாம்.

    மூன்றாவதாக வேலை கொடுப்போரும் வேலை தேடுவோரும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்து இட வேண்டுமாம்.  இதில் வேலை அளிக்கும் அமைப்பும் மூன்றாம் தரப்பாக கையெழுத்துப் போடுமாம்.

    நான்காவதாக வேலை நேரம், வேலையின் தன்மை குறித்து ஒப்பந்தத்தில் இரு சாராரும் கையெழுத்து இட வேண்டுமாம்.  வீட்டிலேயே தங்கி வேலை செய்வோர்களுக்கு தங்குவதற்கு இட வசதி அளிக்க வேண்டுமாம்.  அரசு ஊழியர்கள் தங்கள் வீடுகளில் வேலை பார்ப்பவர்களுக்கு உணவு வழங்க வேண்டுமாம்.  இதற்கு மேல் அவர்களுக்கு மருத்துவ இன்சூரன்ஸ், ஓய்வு காலத்திற்கு வேண்டிய சேமிப்பு நிதி (P.F.) போன்ற வசதிகளும் செய்துகொடுக்க வேண்டுமாம்.

    படிப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது; இதை இப்படியே அமுலுக்குக் கொண்டுவந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.  ஆனால் அரசு இதை எப்படி நிறைவேற்றப் போகிறது என்பதுதான் கேள்வி.  ஊழல்கள் மலிந்திருக்கும் நம் நாட்டில் இதை எப்படி அமுல்படுத்தப் போகிறார்கள்?  வீட்டு வேலை செய்ய வரும் அத்தனை பேரும் சரியாக விபரம் தெரியாதவர்கள்.  இப்படி ஒரு சட்டம் இருப்பதே அவர்களுக்குத் தெரிய வழியில்லை.  (வீட்டு) வேலை கிடைத்தாலே போதும் என்று நினைப்பவர்கள் எஜமானர்கள் சரியாக நடத்தவில்லையென்றால் வேலை அளிக்கும் அமைப்பிடம் சென்று புகார் கொடுக்கவா போகிறார்கள்?  அப்படிக் கொடுத்தாலும் வேலை கொடுக்கும் மற்றவர்களிடமும் அவர்களுடைய மவுசு குறைந்துவிடும் என்று நினைப்பார்கள்.  வேலை கொடுப்பவர்களும் வேலை தேடுபவர்களும் இப்போது போல் நேரடியாக தொடர்புகொள்ளலாமே.  இதில் மத்தியில் வேலை அளிக்கும் அமைப்பு எதற்கு?

    இப்போதுள்ள நிலைமையையே வைத்துக்கொண்டு வீடுகளில் வேலை பார்ப்பவர்களைச் சரியாக நடத்துகிறார்களா என்று கண்காணிக்கலாமே.  அதிலும் நிறையச் சிக்கல்கள் இருக்கின்றன. ஊழல்கள் மலிந்த நம் நாட்டில் கண்காணிக்கும் அரசு ஊழியர்கள் நியாயமாக நடந்துகொள்வார்களா?  ஊழல்களை ஒழிக்கப் பாடுபடுவோம் என்று கூறிப் பதவிக்கு வந்த மத்திய அரசு ஊழல் புரிந்தவர்களைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது.  இவர்கள் எப்படி வேலை வழங்கும் அமைப்பை ஊழலில்லாமல் நிர்வகிக்கப் போகிறார்கள்?

    பிறரின் வீடுகளில் வேலை பார்த்துச் சொற்ப சம்பளம் பெற்றுக்கொள்ள மூன்று கோடி ஏழை ஜனங்கள் நாட்டில் இருக்கும்வரை இவர்களுக்கு எந்த அரசாலும் நியாயம் வழங்க முடியாது.  அவர்களை அவர்களின் நிலையிலிருந்து உயர்த்துவதன் மூலம்தான் அவர்களுக்கு நியாயம் வழங்க முடியும்.  எந்தச் சந்தையும் ‘சப்ளை அண்ட் டிமாண்ட்’ மூலம்தான் இயங்குகிறது.  பிறர் வீடுகளில் சொற்ப சம்பளத்திற்கு வேலை செய்யத் தயாராக இருப்பவர்களின் எண்ணிக்கையை அரசு குறைத்தால் இவர்களுக்கு டிமாண்ட் கூடிவிடும்.  பின் அவர்கள் கண்ணியமாகவும் நடத்தப்படுவார்கள்; உரிய சம்பளமும் பெறுவார்கள்..

    ஒரு முறை எனக்கு வீட்டைச் சுத்தம் செய்வதில் உதவிய பெண்ணுக்கு நான் ஞாயிறு விடுமுறை கொடுத்தேன்.  பக்கத்து வீட்டிலும் வேலை செய்த அந்தப் பெண் ஞாயிறன்று அவர்கள் வீட்டிற்கும் வரவில்லை.  மறு நாள் திங்கட்கிழமை வேலைக்கு வந்ததும் அந்தப் பெண்ணை பக்கத்து வீட்டு அம்மாள் ‘ஞயிறன்று ஏன் வேலைக்கு வரவில்லை’? என்று கேட்டார்.  அதற்கு அந்தப் பெண் ‘பக்கத்து வீட்டில் ஞாயிறன்று விடுமுறை’ என்றார்.  அந்த அம்மணிக்கு அப்படி ஒரு கோபம் வந்தது.  ‘விடுமுறை பக்கத்து வீட்டில்தான், இங்கல்ல’ என்று கத்தித் தீர்த்துவிட்டார்.  இவர்களை எல்லாம் எப்படி வழிக்குக் கொண்டுவருவது?  வேலைக்கு எளிதில் ஆட்கள் கிடைக்க மாட்டார்கள் என்ற நிலை வந்தால்தான் இவர்கள்  வழிக்கு வருவார்கள்.

    வீட்டில் வேலை செய்பவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும் என்பவற்றிற்குக் கடுமையான சட்டங்கள் இருக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளிலேயே கோப்ரகடே போன்றவர்களே – இவர் மெத்தப் படித்தவர்; பெண்களின் நலனைப் பாதுகாக்கும் துறையில் வேலை பார்த்தவர் – இப்படி நடந்துகொண்டால் சாதாரண ஜனங்களைப் பற்றி என்ன சொல்ல?

    முதலில் அரசு இந்த ஏழைகளின் நிலையை உயர்த்தட்டும்.  அமைப்புசாரா தொழிலாளர்களின் (Unorganized labourers) நிலை அமைப்புசார் தொழிலாளர்களைப் போல் (Organized labourers) உயரட்டும்.  அப்போது அவர்களின் சப்ளை குறைந்துவிடும்.  அவர்களுக்கு டிமாண்டும் கூடிவிடும்.  தங்களின் நலனைப் பாதுகாத்துக்கொள்ளும் பக்குவமும் அவர்களுக்குக் கிடைக்கும்.  கொடுக்கும் ஊதியத்திற்கு அதிகமாக அவர்களை வேலைவாங்கும் வர்க்கமும் இருக்காது.  அப்போது இருவருக்கும் இடையே மத்தியஸ்தம் செய்து ஊழல் புரிபவர்களுக்கும் வேலை இல்லாமல் போய்விடும்.

    Share
  • எல்லோரும் வழிபடத்தக்க போப் பிரான்ஸிஸ்

    — நாகேஸ்வரி அண்ணாமலை.

    Pope-Francis

    போப் பிரான்ஸிஸ் போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடனேயே மற்ற கார்டினல்களிடம் பின்வருமாறு கூறினாராம்: என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு இறைவன் உங்களை மன்னிக்கட்டும். அவர் அப்போது நகைச்சுவையாக அப்படிக் கூறினாலும் இப்போது சிலராவது அவரைத் தேர்ந்தெடுத்ததற்கு தங்கள் மனதிற்குள்ளேயாவது வருந்தக் கூடும். அவருடைய சிந்தனைகள், பேச்சுக்கள் இதுவரை எந்தப் போப்பும் சிந்திக்காதவை, பேசாதவை. ஆரம்பத்திலேயே இவர் வித்தியாசமானவர் என்று தெரியவந்தாலும் இத்தனை வித்தியாசமானவர் என்று தெரியவில்லை. சாதாரணமாக மதபோதகர்கள் மத சம்பந்தப்பட்ட விஷயங்களில்தான் கவனம் செலுத்துவார்கள்; மத போதனைகளைத்தான் மக்களுக்கு எடுத்துச் சொல்வார்கள். இவர் அந்த எல்லைகளை எல்லாம் தாண்டி உலக மக்கள் அனைவரின் நன்மைக்காகவும் உலக அமைதிக்காவும் தன் சிந்தனைகளையும் செயல்களையும் செலவிடுகிறார்.

    இவர் ஒரு உண்மையான கிறிஸ்துவர். இயேசுவின் கொள்கைகளைத் தவறாமல் கடைப்பிடிக்கிறார். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஸ்பெயினில் சிலுவைப் போராளிகள் அப்போதைய போப்பின் ஆணையை சிரமேல் ஏற்று யூதர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இழைத்த கொடுமைகளுக்கு இப்போது இவர் கத்தோலிக்க மதத்தின் சார்பில் மன்னிப்புக் கோருகிறார். தான் செய்த தவறுகளுக்கே மன்னிப்பு கோராதவர்கள் இருக்கும் இவ்வுலகில் யாரோ எப்போதோ செய்த தவறுகளுக்குத் தான் மன்னிப்புக் கோருகிறார்.

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காண வேண்டும் என்பதில் இவர் முன்னணியில் இருக்கிறார். இஸ்ரேல் அரசின் அழைப்பிற்கு இணங்கி இஸ்ரேலுக்குச் சென்றபோது நேரடியாக இஸ்ரேலுக்குச் செல்லாமல் வெஸ்ட் பேங்கில் பாலஸ்தீனர்களின் ஆளுகையில் இருக்கும் சிறிய நிலப்பரப்பு வழியாகச் சென்று பாலஸ்தீனர்களைச் சந்தித்துவிட்டுப் பின் இஸ்ரேல் சென்றார். பாலஸ்தீனர்கள் இஸ்ரேலுக்குள் எளிதாகச் செல்ல முடியாமல் இஸ்ரேல் அரசு எழுப்பிவரும் பிரமாண்ட சுவரில் பாலஸ்தீனர்கள் எழுதியிருக்கும் ‘போப் அவர்களே, எங்களுக்காக வாதாட ஒரு தூதரை அனுப்புங்கள்’ என்ற வரிகளைப் படித்துவிட்டு, தன் வாகனத்திலிருந்து இறங்கி சுவரின் மேல் தலையைச் சாய்த்து சிறிது நேரம் ஜபித்துவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார். இறைவனிடம் என்ன கேட்டிருப்பார்? இறைவா, நாடற்ற இந்த மக்களுக்கு நியாயமான முறையில் தங்களுக்கே என்று ஒரு நாடு கிடைக்க அருள் புரியுங்கள்’ என்பதாகத்தான் இருந்திருக்கும்.

    தென் அமெரிக்காவில் உள்ள பராகுவே என்னும் சிறிய நாட்டில் பேசும்போது இப்போது உலகம் முழுவதும் பரவி வரும் முதலாளித்துவத்தை பகிரங்கமாகச் சாடியிருக்கிறார். இந்த வகையான முதலாளித்துவம் மனிதர்களிடம் பணப் பேராசையை மட்டுமின்றி மனிதர்களிடையே அந்தஸ்து பேதத்தை உண்டாக்குவதோடு சர்வாதிகார எண்ணத்தையும் உண்டாக்குகிறது என்கிறார். இந்தப் புது வகையான முதலாளித்துவத்தைச் சாத்தானின் சாணம் என்றும் குறிப்பிடுகிறார். இந்த வகையான உலக அளவிலான முதலாளித்துவம்தான் உலக அளவிலான அநீதிக்கும் பூமி வெப்பமடைவற்கும் முக்கிய காரணம் என்கிறார் இவர். இந்த உலக முதலாளித்துவத்தைப் புதிய காலனி ஆதிக்கம் என்கிறார் இந்தக் கத்தோலிக்க மதகுரு. இதை எதிர்த்துப் போரிட வேண்டும் என்று உலக மக்களுக்கு அறிவுறுத்தி ஒரு உலக அளவிலான சமூகப் புரட்சியை ஆரம்பிக்கச் சொல்கிறார்.

    உலகில் நிலவும் நியாயமின்மைக்கும் சமத்துவமின்மைக்கும் ஏழைகளின் வறுமைக்கும் இந்த உலக முதலாளித்துவமே காரணம் என்று வாதாடும் போப் பொலிவியாவில் சமூக செயற்பாட்டாளர்கள் முன்னிலையில் பேசும்போது சமூக ஒருங்கிணைப்பாளர்கள் (community organizers) ஏழை மக்களை ஒருங்கிணைத்து சமூகப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்றார். சமூக மாற்றங்கள் சமூகத்தின் அடிமட்டத்திலிருந்துதான் வர வேண்டும் என்கிறார். பொருளாதாரத் தேக்கம் ஏற்பட்டிருக்கும் ஸ்பெயினிலும் கிரீஸிலும் இப்போது இடதுசாரிக் கொள்கைகள் முன்னிலை வகிக்கின்றன என்பதை இவர் கூறுவதற்கு உதாரணமாகக் கூறலாம். பொலிவியாவில் கூட்டுறவுச் சங்கங்களும் ஆங்காங்கே உள்ள தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து செயல்பட்டு ஏழைகளின் நிலையை உயர்த்தி இருப்பதைப் புகழ்ந்து பேசிய போப் இந்த ஏழைகளின் நிலைமைக்கும் முதலாளித்துவத்தால் பாதிக்கப்பட்டு அடிமைகளாக ஆக்கப்பட்ட ஏழைகளின் நிலைமைக்கும் உள்ள வித்தியாசத்தை நம்மை கண்டுகொள்ளச் சொல்கிறார்.

    மதத்திற்கு அப்பால் சென்று தன் கருத்துக்களைக் கூறும் போப்பை சில வலதுசாரிகள் விமர்சிக்கிறார்கள். முதலாளித்துவத்தின் தலைமையகமான அமெரிக்காவிற்கு செப்டம்பரில் செல்லவிருக்கும் போப் அங்கு என்ன பேசுவார் என்கிறார்கள் இவர்கள். மதத்தின் எல்லையைத் தாண்டி முதலாளித்துவத்தின் எதிர்மறைகளை விமர்சிக்கும் போப், தடையற்ற சந்தைப் பொருளாதாரம் (free market economy) ஏழைகளுக்குச் செய்திருக்கும் நன்மைகளில் கவனம் செலுத்தினால் நல்லது என்கிறார்கள்.

    இவர்கள் என்னவாவது கூறிவிட்டுப் போகட்டும். என்னைப் பொறுத்தவரை மதத்தின் எல்லையைத் தாண்டி உலக மக்களின் நன்மையைப் பற்றியும் உலக அமைதியைப் பற்றியும் சிந்தித்தும் செயலாற்றியும் வரும் போப் அவர்கள் என் வணக்கத்துக்கு உரியவர். அவர் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களுக்கு மட்டும் தலைவர் அல்ல; உலக மக்கள் அனைவருக்கும் தலைவர். அவர் இன்னும் நீண்ட நாட்கள் வாழ்ந்து உலகுக்கு வழி காட்ட வேண்டும்.

    Share
  • நூல் அறிமுகம் & கலந்துரையாடல்

    அழைப்பு

    நூல் அறிமுகம் & கலந்துரையாடல்

    நூல்: பாலஸ்தீன-இஸ்ரேல் போர்: ஒரு வரலாற்றுப் பார்வை
    நூலாசிரியர்: நாகேஸ்வரி அண்ணாமலை
    கலந்துரையாடல்: பாலஸ்தீனத்தில் வரலாற்று அநீதியும் உரிமைப் போரும்

    சிறப்பு விருந்தினர் & உரையாடல் நெறியாளர்

    பத்திரிகையாளர் & எழுத்தாளர் ஞாநி

    காலம்: ஜூலை 26 (ஞாயிறு) மாலை 5.30

    இடம்: பனுவல் புத்தக நிலையம்,112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை-41 (ஸ்ரீவிஸ்வதாரா துணிக்கடை மாடியில்)

    தொடர்புக்கு: தொலைபேசி-044-43100442.
    அலைபேசி-8939967179.
    https://www.facebook.com/events/405090023015337/

    Share
  • ஜாதி இரண்டல்ல, வேறும் உண்டு

    நாகேஸ்வரி அண்ணாமலை.

    மனித இனத்தில் ஆண், பெண் என்ற பாகுபாட்டைத் தவிர வேறு ஜாதிப் பிரிவுகள் இல்லை என்ற கருத்து தொன்றுதொட்டு வழக்கில் இருப்பது. ஆனால் இப்போது முன்னர் குறிப்பிட்ட இரண்டு பிரிவுகளைத் தவிர இன்னும் ஐந்து பிரிவுகள் (LGBTQ) வந்துவிட்டன. இவர்கள் ஆண் இனத்திலும் சேர முடியாதவர்கள்; பெண் இனத்திலும் சேர முடியாதவர்கள். இதைக் காலத்தின் கோலம் என்பதா அல்லது மனிதன் செய்த தவறுகளால் வந்த விளைவுகள் என்பதா? எது எப்படியாயினும் இவர்கள் தங்கள் உரிமைகளுக்காக வெகுவாகப் பாடுபட வேண்டியதாயிருக்கிறது.

    தன்பால் ஈர்ப்பினர்களுக்கு இப்போது அமெரிக்காவில் அவர்களுக்குரிய உரிமைகள் கிடைத்திருக்கின்றன. ஒரு வழியாக அமெரிக்க உச்சநீதிமன்றம் தன்பால் ஈர்ப்ப்பினர்கள் தங்களுக்குள் திருமணம் செய்துகொள்வதைச் சட்டமாக்கியிருக்கிறது. பல தசாப்தங்களாக இதற்குத் தீர்வு வேண்டியும் இத்தகைய திருமணங்களை எதிர்த்தும் அமெரிக்கர்கள் போராடி வந்தனர். உச்சநீதிமன்றம் வரை இந்தப் போராட்டம் சென்றது. இப்போது உச்ச்நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகளில் ஆறு பேர் தன்பால் ஈர்ப்பினர்கள் திருமணம் என்ற பந்தத்தில் இணையலாம் என்று கூறியிருப்பதால் இம்மாதிரியான சேர்க்கையை அமெரிக்கா சட்டப்படி ஒப்புக்கொண்டுள்ளது என்று உறுதியாகக் கூறலாம்.

    எத்தனை போராட்டங்களுக்குப் பிறகு தன்பால் ஈர்ப்பினர்கள் தங்களுக்குரிய உரிமையைப் பெற்றிருக்கிறார்கள்! இரண்டாவது உலக யுத்தத்தின்போது ஜெர்மானியப் படைகளின் நடமாட்டத்தைக் கண்டறிய பிரிட்டனைச் சேர்ந்த ஆலன் டூரிங் (Alan Turing) என்னும் பெரிய கணித மேதை ‘ஜெர்மானியர்களின் சங்கேத மொழியை உடைத்தார். இதற்கென்று ஒரு எந்திரத்தை உருவாக்கினார். இவருடைய இந்த முயற்சியால்தான் பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா போன்ற நேச நாடுகள் ஜெர்மன் படைகளின் முன்னேற்றத்தை முறியடிக்க முடிந்தது. இவருடைய இந்தக் கருவிதான் பின்னால் கணினியை விஞ்ஞானிகள் உருவாக்கக் கருவாக அமைந்தது. இவர் மனித குலத்திற்கு இவ்வளவு பெரிய சேவை செய்திருந்தாலும் அரசு இவர் ஒரு தன்பால் ஈர்ப்பினராக இருந்ததால் இவர் சாதனையை அங்கீகரிக்கவில்லை. அது மட்டுமல்ல, இவரை சிறையில் அடைப்பதற்கும் தயாராக இருந்தது. அவர் சிறை செல்வதைத் தவிர்க்க வேண்டுமென்றால் ஹார்மோன் சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தது.

    ஹார்மோன் சிகிச்சையினால் அவருக்கு நிறையப் பக்க விளைவுகள் உண்டாயின. இவற்றின் துன்பம் தாங்காமல் அவர் தற்கொலை செய்துகொண்டார். என்ன கொடுமை பாருங்கள் (ஒரு ஆப்பிள் பழத்தில் விஷத்தைத் தட்விச் சாப்பிட்டு இறந்தார்; இதனாலேயே கடிபட்ட ஆப்பிளை ஆப்பிள் கம்பெனி தன் சின்னமாக வைத்துக்கொண்டது என்று யாரோ சொல்லிக் கேட்டிருக்கிறேன்). மனித குலத்திற்கு அவர் செய்த சேவைக்கு அவருக்குக் கிடைத்த வெகுமதி சிறைவாசம் அல்லது கட்டாய ஹார்மோன் சிகிச்சை. அப்போதுள்ள மனிதர்களுக்கிருந்த இந்த விஷயங்கள் பற்றிய குறைந்த அளவு அறிவால் ஆலன் டூரிங் போன்றவர்கள் பல இன்னல்களுக்கு ஆளாயினர். ‘பூமியை சூரியன் சுற்றவில்லை. பூமிதான் சூரியனைச் சுற்றிவருகிறது’ என்ற மகத்தான கண்டுபிடிப்பை உலகுக்கு வழங்கிய கோப்பர்னிகஸுக்குக் கிடைத்த தண்டனை பற்றி நம் எல்லோருக்கும் தெரியுமல்லவா?

    ஆழமான மதநம்பிக்கை உள்ள பல அமெரிக்கர்களுக்கு திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் நடப்பதான உறவே தவிர இரு ஆண்களுக்கும் இரு பெண்களுக்கும் இடையே நடக்கும் உறவல்ல என்பது வேதவாக்கு. ஏனென்றால் கிறிஸ்தவர்களின் வேதப் புத்தகமான பைபிளில் இப்படிக் கூறப்பட்டிருக்கிறதாம். காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஏன் மனிதன் நினைப்பதில்லை? முதலில் பைபிளில் கூறப்பட்டிருப்பதெல்லாம் இறைவன் இட்ட கட்டளைகள் என்று ஏற்றுக்கொள்வதற்கில்லை. இயேசு காலத்திற்குப் பிறகு அவருடைய சிஷ்யர்கள் எழுதியவற்றின் தொகுப்புதான் பைபிள். இந்த வரலாற்று உண்மையை ஏற்க மறுப்பவர்களும் காலத்திற்கேற்ப மனிதன் மாற வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டேயாக வேண்டும். அந்தக் காலத்தில் இருந்த சமூக அமைப்புகள், அரசுகள், உணவு முறைகள் இப்போது இல்லை. அந்தக் காலத்திலும் தன்பால் ஈர்ப்பினர்கள் ஒரு சிலர் இருந்திருக்கலாம். இப்போது பெரிய சதவிகிதத்தினர் தன்பால் ஈர்ப்பினர்களாக இருக்கிறார்கள். இதற்கு மனிதன் இப்போது உபயோகப்படுத்தும் பல ரசாயனப் பொருட்கள் காரணமாக இருக்கலாம் என்று நான் திடமாக நம்புகிறேன்.

    இதற்கு விஞ்ஞான ரீதியாக இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை ஆயினும் பலர் இதில் உண்மை இருப்பதாக ஒப்புக்கொள்கிறார்கள். நாம் உண்ணும் உணவிலும் சுவாசிக்கும் காற்றிலும் நிறைய வேதியல் பொருள்கள் கலந்திருப்பதால் மனித உடம்பில் ஹார்மோன்களின் விகிதம் வேறுபடுகிறது. இதுதான் ஆண், பெண் என்ற பாகுபாட்டிற்கு மேலும் சில பாகுபாடுகள் தோன்றக் காரணமாக இருக்கிறது.

    தன்பால் ஈர்ப்பினர்கள் தங்களுக்குள் திருமணம் செய்துகொள்ளலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புப்படி அவர்கள் பல உரிமைகளைப் பெறுவதற்கு வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. மனிதன் ஒரு சமூகமாக வாழ விரும்புவதற்கு மனிதன் தனி மரமல்ல என்பார்கள். அதுபோல் அவன் வாழ்க்கையை நடத்திக்கொண்டு போவதற்கும் துணை தேவைப்படுகிறது. இதை ஏன் சமூகம் அவர்களுக்கு மறுக்க வேண்டும்? அவர்களால் குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடியாதாகையால் குழந்தைகளைத் தத்து எடுத்து வளர்க்கிறார்கள். இரண்டு ஆண்களே அல்லது இரண்டு பெண்களே பெற்றோர்களாக இருக்கும் பட்சத்தில் குழந்தைகள் சிறப்பாக வளர முடியாது என்பது சிலரின் வாதம். ஆணான தந்தையும் பெண்ணான தாயும் பெற்றோர்களாக இருக்கும் குடும்பங்களில் வளரும் குழந்தைகளில் எத்தனை பேர் சிறப்பான வாழ்க்கையைப் பெறுகிறார்கள்? ஆண் ஆதிக்கம் செலுத்தும் குடும்பங்கள் பலவற்றில் குழந்தைகள் திசைமாறிப் போகின்றனவே. பெற்றோர் இருவரும் ஒற்றுமையாக இருந்து அன்போடும் பாசத்தோடும் குழந்தைகளை வளர்க்க வேண்டும். அதுதான் முக்கியம்.

    தன்பால் ஈர்ப்பினர்கள் தங்களுக்கென்று ஒரு துணையைத் தேடிக்கொள்வதால் அவர்களுக்கு வாழ்க்கையில் பலவிதத்தில் தார்மீக ஆதரவு கிடைக்கிறது. வாழ்க்கையில் சோதனைகள் ஏற்படும் போதெல்லாம் அவற்றைத் தாங்கிக்கொள்ள, அவற்றைப் பகிர்ந்துகொள்ள ஒரு துணை இருக்கிறது. கடைசிக் காலத்தில் அவர்களின் வயோதிகத்தில் பங்கு பெற ஒரு துணை இருக்கிறது. தன்பால் ஈர்ப்பினர்களின் திருமணங்களை எதிர்ப்பவர்கள் இதை எல்லாம் ஏன் எண்ணிப் பார்ப்பதில்லை? அவர்களும் நம்மைப்போல் மனிதர்கள்தானே. நமக்கிருக்கும் இந்த உரிமைகளை அவர்களுக்கு ஏன் மறுக்க வேண்டும்?

    அமெரிக்க உச்சநீதிமன்றம் காட்டிய பாதையை மற்ற நாடுகளும் – இஸ்லாம் மதத்தைப் பின்பற்றும் நாடுகள் உட்பட – பின்பற்றும் என்று மனமார நம்புவோம்.

     

    Share
  • என்று மடியும் அமெரிக்காவின் இனதுவேஷம்?

    நாகேஸ்வரி அண்ணாமலை.

     

    என்று மடியும் அமெரிக்காவின் இனதுவேஷம்?

    துப்பாக்கி மூலம் நடக்கும் வன்முறைச் சம்பவங்களும் கருப்பு இன அமெரிக்கர்களை வெள்ளை இனக் காவல் அதிகாரிகள் தேவையில்லாமல் சுட்டுக் கொல்வதும் அதிகமாக இப்போது அமெரிக்காவில் நடந்து வருகின்றன. ஜூன் மாதம் 15-ஆம் தேதியன்று இன்னொரு கொடிய சம்பவம் இங்கு நடந்திருக்கிறது. தென் கரோலினா மாநிலத்தைச் சேர்ந்த சார்ல்ஸ்டன் என்னும் ஊரில் கருப்பர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தேவாலயத்தில் அம்மாநில செனட்டரும் அந்த தேவாலயத்தின் போதகருமான கெலெமென்டா பிங்க்னி (Clementa Pinckney) உரையாற்றிக்கொண்டிருக்கும்போது இருபத்தி ஒன்று வயதே ஆன ஒரு வெள்ளை இன வெறியன் தேவாலயத்திற்குள் புகுந்து ஒரு மணி நேரம் அவருடைய உரையைக் கேட்டுவிட்டுத் திடீரென்று துப்பாக்கியை எடுத்து அவரைச் சேர்த்து ஒன்பது பேரைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றிருக்கிறான். அந்த அராஜகச் செயலைச் செய்துகொண்டிருக்கும்போதே ‘கருப்பர்களாகிய நீங்கள் அதிக எண்ணிக்கையில் வளர்ந்து வருகிறீர்கள். நாட்டை (அமெரிக்காவை) எங்களிடமிருந்து அபகரிக்கப் பார்க்கிறீர்கள்’ என்று கூவியிருக்கிறான். அவன் தன்னுடைய ஃபேஸ் புக் பக்கத்தில் ஆப்பிரிக்காவின் ரொடீஷியாவிலும் (இன்றைய ஜிம்பாவ்வே) தென் ஆப்பிரிக்காவிலும் வெள்ளையர் ஆட்சி நடந்த சமயத்தில் இருந்த கொடிகளைத் தன் சட்டையில் அணிந்துகொண்டு இருக்கும் படத்தை வெளியிட்டிருக்கிறான். வெள்ளை இனத்தவர்களின் ஆதிக்கம் இவனுடைய தாரகமந்திரம்.

    சார்ல்ஸ்டன் ஊரில் உள்ள கிறித்துவ தேவாலயம் மிகவும் பழமை வய்ந்தது; அமெரிக்க சரித்திரத்தில் முக்கியத்துவம் பெற்றது. ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டவர்கள் அமெரிக்காவில் வெள்ளையர்களால் பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். ஆடுமாடுகளைப் போலவும் வெள்ளையர்களின் உடமைகள் போலவும் நடத்தப்பட்டனர். ஆப்பிரிக்கர்களுடைய மதங்களிலிருந்து அவர்களை முழுவதுமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றிய பிறகு இறைவனின் சன்னிதானமான தேவாலயங்களில் அவர்களுக்கு சம அந்தஸ்து கொடுக்காமல் அவர்களுக்கென்று தனி இடம் ஒதுக்கினார்கள். அடிமைகள் தங்களுக்கென்று தனித் தேவாலயங்கள் கட்டிக்கொள்ளவும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இவர்களுக்கு விடுதலை கொடுப்பதா வேண்டாமா என்ற சர்ச்சையில் 1861-இல் உள்நாட்டுப் போர் ஏற்பட்டது.

    இதற்கு முன்பே ஆப்பிரிக்க அடிமைகளின் விடுதலைக்காக 1822-லேயே புரட்சி ஏற்படுத்தச் சிலர் முனைந்தனர். இவர்கள் இந்தத் தேவாலயத்தில்தான் ரகசியமாகக் கூடுவார்களாம். இவர்களின் முயற்சியை அறிந்துகொண்ட அரசு அதிகாரிகள் இவர்களில் 313 பேரைக் கைதுசெய்து 35 பேரைத் தூக்கிலிட்டனர். வெள்ளை இன வெறியர்கள் இந்தத் தேவாலயத்திற்குத் தீவைத்து இதை அழித்தனர். 1863-இல் ஜனாதிபதி லிங்கன் எல்லா அடிமைகளுக்கும் விடுதலை அளித்து அறிக்கை வெளியிட்ட பிறகு எல்லாக் கருப்பர்களுக்கும் விடுதலை அளிக்கப்பட்டாலும் அவர்கள் தொடர்ந்து வெள்ளையர்களின் கொடுமைக்கு ஆளாகினர். கருப்பர்கள் தாங்கள் வழிபடுவதற்கு ஏதுவாக தனித் தேவாலயங்கள் கட்டிக்கொண்டனர். 1891-இல் சார்ல்ஸ்டன் தேவாலயம் மறுபடி புதுப்பித்துக் கட்டப்பட்டது. கருப்பர்களின் விடுதலை முயற்சிகளுக்குத் தலைவராக இருந்தவருக்கு இந்தத் தேவாலயத்தில் ஒரு நினைவாலயம் இருக்கிறது. இது போன்ற பல தேவாலயங்கள் அமெரிக்காவின் தெற்குப் பகுதி முழுவதும் கட்டப்படுவதற்கு இதுதான் முன்னோடியாகத் திகழ்ந்தது. இப்படிப்பட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேவாலயத்தை இந்த வெள்ளை இன வெறியன் நிறையக் கருப்பர்களைக் கொல்வதற்கு ஏற்ற இடமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறான்.

    சார்ல்ஸ்டனில் வெள்ளையர்கள், யூதர்கள், கருப்பர்கள் என்று பல இனத்தவர் வாழ்ந்தாலும் கருப்பர்கள்தான் அதிகம். இந்த தேவாலயத்திற்கு வருபவர்களில் பெரும்பாலானோர் கருப்பர்கள். பல அப்பாவி நிராயுதபாணி கருப்பர்களைச் சுட்டுக் கொன்ற பல வெள்ளைக் காவல் அதிகாரிகள் போதிய ஆதாரங்கள் இல்லாதால் தண்டிக்கப்படாமல் தப்பித்துக்கொண்டனர். இவர்களைத் தண்டிக்கத் தேவையான ஆதாரங்களைச் சேகரிக்க அவர்கள் தங்கள் உடம்பில் காமராக்களைப் பொருத்திக்கொள்ள வேண்டும் என்ற சட்டம் தென் கரோலினா மாநிலத்தில் இயற்றப்படக் காரணமாக இருந்த மாநில செனட்டர் பிங்க்னி இங்குதான் மதபோதகருமாக இருந்தார். இந்தத் தேவாலயத்தைத் தாக்குவதன் மூலம் கருப்பர்களின் மேல் தனக்கிருந்த வெறுப்பை கொலைக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ரௌஃப் காட்டிக்கொண்டான்.

    i am with stupidஇந்தச் சம்பவம் நடந்துவுடனேயே தென் கரோலினா மாநில ஆளுநர் நிக்கி ஹேலி (இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்) மாநில சட்டமன்ற வளாகத்திற்குள் இருந்த கான்பிடரேட் கொடியை அகற்றிவிட வேண்டும் என்ற தன் விருப்பத்தைத் தெரிவித்தார். கான்பிடரேட் கொடி பற்றி ஒரு சிறிய விளக்கம். அடிமைகளுக்கு விடுதலை கொடுக்கக் கூடாது என்று வாதாடிய தென் மாநிலங்கள், கான்பிடரேட் என்ற ஒரு நாடாகத் தங்களை அமைத்துக்கொண்டு, அடிமைகளுக்கு விடுதலை கொடுக்க வேண்டும் என்று விரும்பிய வட மாநிலங்கள் சேர்ந்து அமைத்துக்கொண்ட யூனியனைத் தாக்கின. கான்பிடரேட் சார்ல்ஸ்டனில்தான் முதன் முதலில் பீரங்கியை வெடித்துப் போரைத் துவக்கியது. பதிமூன்று மாநிலங்கள் அடங்கிய அமெரிக்காவிலிருந்து பிரிந்து தனி நாடாக இயங்கி தொடர்ந்து ஆப்பிரிக்கர்களை அடிமைகளாக வைத்திருக்க வேண்டும் என்று திட்டமிட்ட பிரிவினைவாதிகள் இவர்கள். கான்பிடரேட் கொடி இன்னும் சில தென்மாநிலத் தலைநகரங்களில் முக்கியமான இடங்களில் வைக்கப்பட்டிருக்கிறது. இது போன்று மற்ற சில கான்பிடரேட் சின்னங்களும் இன்னும் இம்மாநிலங்களில் இருப்பதால் கருப்பர்கள் வெள்ளையர்களுக்கு அடிமை என்னும் எண்ணத்தை உருவாக்கிக்கொண்டிருப்பதாகவும் அவற்றை அகற்றுவதன் மூலம் இப்போது ஒன்பது கருப்பர்களைக் கொலைசெய்த ரௌஃப் போன்றவர்களின் மனதிலிருந்து அந்த எண்ணத்தை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை பல வெள்ளையர்கள் உட்பட பலரிடம் தோன்றியிருக்கிறது. இந்தக் கொடிய சம்பவத்திற்குப் பிறகு எல்லா இனத்தவர்களும் இந்தத் தேவாலயத்தில் கூடி தாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருப்பதாக உலகுக்குக் காட்டியிருக்கிறார்கள்.

    கருப்பர்களுக்கு அடிமைத்தளையிலிருந்து விடுதலை கிடைத்து 150 ஆண்டுகளும் அவர்களுக்கு குடிமையுரிமைகள் கிடைத்து ஐம்பது ஆண்டுகளும் ஆகியிருந்தும் இன்னும் அவர்களைத் தங்களுக்குச் சமமாக நினைக்காதவர்கள் வெள்ளையர்களிடையே இருக்கிறார்கள். இவர்கள் மனதில் தாங்கள் உயர்ந்த இனத்தவர்கள் என்ற எண்ணம் நன்றாகவே ஊறிப்போயிருக்கிறது. இப்படிப்பட்டவர்களில் ஒருவன்தான் இப்போது சார்ல்ஸ்டனில் ஒன்பது பேரைக் கொன்ற வெள்ளை இன வெறியன். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய பண்ணைக்காரன் கருப்பர்கள் அடிமைகளாக இருந்தபோது எவ்வளவோ சந்தோஷமாக இருந்தார்கள் என்று திருவாய் மலர்ந்திருந்தான். எத்தனை தூரம் கருப்பர்களை வெறுத்தால் இப்படிக் கூறியிருப்பான்?

    2001, செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதிக்குப் பிறகு அல்கொய்தாவின் செல்வாக்குக்கு உட்பட்ட இஸ்லாமியத் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட அமெரிக்கர்களின் எண்ணிக்கையைவிட இரண்டு மடங்கு அமெரிக்கர்கள் வெள்ளை இன வெறியர்களாலும் அமெரிக்க அரசை எதிர்க்கும் தீவிரவாதிகளாலும் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது.

    இந்தியாவில் காலம் காலமாக உயர் ஜாதிகளால் கொடுமைப்படுத்தப்பட்ட தலித்துகளுக்கு வழங்கப்படும் சலுகைகளைக் கண்டு குமுறும் உயர்ஜாதி மக்களைப்போல் அமெரிக்காவிலும், அவர்களின் இஷ்டத்திற்கு மாறாக அவர்களின் இருப்பிடங்களிலிருந்து வலுக்கட்டாயமாகக் கொண்டுவரப்பட்டு அடிமைகளாக வாழ்ந்த கருப்பர்களின் மேல் இன்னும் வன்மம் பாராட்டும் வெள்ளை இன வெறியர்களுக்கு கருப்பர்களை அடிமைகளாக வைத்திருக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருந்த கான்பிடரேட் நாட்டுக் கொடியை அகற்றுவதில் விருப்பம் இல்லை. ஏதோ ஒரு தனிப்பட்டவன் செய்த கொலைக்கும் கான்பிடரேட் கொடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இவர்கள் வாதிடுகிறார்கள். அது மட்டுமல்ல, கொடியை அகற்றுவதைத் தொடர்ந்து கான்பிடரேட்டின் மற்ற சில அடையாளங்களையும் நீக்குவதற்கு இது வழிகோலும் என்றும் கான்பிடரேட் ராணுவத்தில் பணிபுரிந்த தங்கள் மூதாதையர்களின் தியாகங்கள் எல்லாம் மறக்கப்படுவதோடு அவர்கள் எல்லோரும் கொலை வெறியர்கள் என்று சித்தரிக்கப்படுவதை எப்படித் தங்களால் ஒப்புக்கொள்ள முடியும் என்றும் கேட்கிறார்கள். இவர்களைப் பொறுத்தவரை கான்பிடரேட் நாட்டை உருவாக்கப் பாடுபட்டவர்கள் அமெரிக்கர்களின் மனதில் எப்போதும் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பதே.

    இன்னொரு வெள்ளையர் கான்பிடரேட் நினைவுகளையே மக்களிடமிருந்து அகற்றுவதன் மூலம் தங்கள் சுதந்திரம் பாதிக்கப்படுவதாகவும் கம்யூனிஸ கொள்கைகள் பரவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

    கருப்பர்களின் மேல் இத்தனை வெறுப்பும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி அப்படியொன்றும் பெரியதல்ல என்றும் நினைக்கும் வெள்ளையர்களிடையே இனி கான்பிடரேட் கொடியைத் தங்கள் கடையில் விற்கப் போவதில்லை என்று சில பெரிய கார்ப்போரேட் நிறுவனங்கள் முடிவுசெய்திருப்பதும் தென் கரோலினாவோடு டென்னஸி, வட கரோலினா, மிஸிஸிபி, அலபாமா போன்ற மற்ற தென் மாநிலங்களும் கான்பிடரேட்டோடு தங்களுக்கிருக்கும் எல்லாத் தொடர்புகளையும் துண்டித்துக்கொள்ளப் போவதாக அறிவித்திருப்பதும் – தங்கள் மாநிலக் கொடிகளிலிருந்து கான்பிடரேட் கொடியின் அடையாளத்தை அகற்றுவது, கான்பிடரேட் கொடிகள் விற்பனையை நிறுத்துவது போன்றவை – பெரிய ஆறுதலைத் தருகிறது. பத்து வருஷங்களுக்கு முன் கான்பிடரேட் கொடியைத் தன் கையில் பச்சை குத்திக்கொண்ட ஒருவர் அதைத் தன் கையிலிருந்து அகற்றிவிட முடிவுசெய்து ஒரு பியூட்டி பார்லருக்கு வந்திருக்கிறார் அங்கிருந்த ஊழியரிடம் சார்ல்ஸ்டன் தேவாலயத்தில் நடந்த கொடிய சம்பவத்திற்குப் பிறகு ஒரு கருப்பினப் பெண்ணின் முகத்தில் இருந்த சோகத்தைப் பார்த்து தான் அதை அகற்றிவிட முடிவுசெய்ததாகக் கூறியிருக்கிறார். இவரை முன்மாதிரியாகக் கொண்டு மற்ற வெள்ளையர்களும் மனம் மாறினால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

    Share