எல்லோரும் வழிபடத்தக்க போப் பிரான்ஸிஸ்
— நாகேஸ்வரி அண்ணாமலை.
போப் பிரான்ஸிஸ் போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடனேயே மற்ற கார்டினல்களிடம் பின்வருமாறு கூறினாராம்: என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு இறைவன் உங்களை மன்னிக்கட்டும். அவர் அப்போது நகைச்சுவையாக அப்படிக் கூறினாலும் இப்போது சிலராவது அவரைத் தேர்ந்தெடுத்ததற்கு தங்கள் மனதிற்குள்ளேயாவது வருந்தக் கூடும். அவருடைய சிந்தனைகள், பேச்சுக்கள் இதுவரை எந்தப் போப்பும் சிந்திக்காதவை, பேசாதவை. ஆரம்பத்திலேயே இவர் வித்தியாசமானவர் என்று தெரியவந்தாலும் இத்தனை வித்தியாசமானவர் என்று தெரியவில்லை. சாதாரணமாக மதபோதகர்கள் மத சம்பந்தப்பட்ட விஷயங்களில்தான் கவனம் செலுத்துவார்கள்; மத போதனைகளைத்தான் மக்களுக்கு எடுத்துச் சொல்வார்கள். இவர் அந்த எல்லைகளை எல்லாம் தாண்டி உலக மக்கள் அனைவரின் நன்மைக்காகவும் உலக அமைதிக்காவும் தன் சிந்தனைகளையும் செயல்களையும் செலவிடுகிறார்.
இவர் ஒரு உண்மையான கிறிஸ்துவர். இயேசுவின் கொள்கைகளைத் தவறாமல் கடைப்பிடிக்கிறார். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஸ்பெயினில் சிலுவைப் போராளிகள் அப்போதைய போப்பின் ஆணையை சிரமேல் ஏற்று யூதர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இழைத்த கொடுமைகளுக்கு இப்போது இவர் கத்தோலிக்க மதத்தின் சார்பில் மன்னிப்புக் கோருகிறார். தான் செய்த தவறுகளுக்கே மன்னிப்பு கோராதவர்கள் இருக்கும் இவ்வுலகில் யாரோ எப்போதோ செய்த தவறுகளுக்குத் தான் மன்னிப்புக் கோருகிறார்.
இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காண வேண்டும் என்பதில் இவர் முன்னணியில் இருக்கிறார். இஸ்ரேல் அரசின் அழைப்பிற்கு இணங்கி இஸ்ரேலுக்குச் சென்றபோது நேரடியாக இஸ்ரேலுக்குச் செல்லாமல் வெஸ்ட் பேங்கில் பாலஸ்தீனர்களின் ஆளுகையில் இருக்கும் சிறிய நிலப்பரப்பு வழியாகச் சென்று பாலஸ்தீனர்களைச் சந்தித்துவிட்டுப் பின் இஸ்ரேல் சென்றார். பாலஸ்தீனர்கள் இஸ்ரேலுக்குள் எளிதாகச் செல்ல முடியாமல் இஸ்ரேல் அரசு எழுப்பிவரும் பிரமாண்ட சுவரில் பாலஸ்தீனர்கள் எழுதியிருக்கும் ‘போப் அவர்களே, எங்களுக்காக வாதாட ஒரு தூதரை அனுப்புங்கள்’ என்ற வரிகளைப் படித்துவிட்டு, தன் வாகனத்திலிருந்து இறங்கி சுவரின் மேல் தலையைச் சாய்த்து சிறிது நேரம் ஜபித்துவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார். இறைவனிடம் என்ன கேட்டிருப்பார்? இறைவா, நாடற்ற இந்த மக்களுக்கு நியாயமான முறையில் தங்களுக்கே என்று ஒரு நாடு கிடைக்க அருள் புரியுங்கள்’ என்பதாகத்தான் இருந்திருக்கும்.
தென் அமெரிக்காவில் உள்ள பராகுவே என்னும் சிறிய நாட்டில் பேசும்போது இப்போது உலகம் முழுவதும் பரவி வரும் முதலாளித்துவத்தை பகிரங்கமாகச் சாடியிருக்கிறார். இந்த வகையான முதலாளித்துவம் மனிதர்களிடம் பணப் பேராசையை மட்டுமின்றி மனிதர்களிடையே அந்தஸ்து பேதத்தை உண்டாக்குவதோடு சர்வாதிகார எண்ணத்தையும் உண்டாக்குகிறது என்கிறார். இந்தப் புது வகையான முதலாளித்துவத்தைச் சாத்தானின் சாணம் என்றும் குறிப்பிடுகிறார். இந்த வகையான உலக அளவிலான முதலாளித்துவம்தான் உலக அளவிலான அநீதிக்கும் பூமி வெப்பமடைவற்கும் முக்கிய காரணம் என்கிறார் இவர். இந்த உலக முதலாளித்துவத்தைப் புதிய காலனி ஆதிக்கம் என்கிறார் இந்தக் கத்தோலிக்க மதகுரு. இதை எதிர்த்துப் போரிட வேண்டும் என்று உலக மக்களுக்கு அறிவுறுத்தி ஒரு உலக அளவிலான சமூகப் புரட்சியை ஆரம்பிக்கச் சொல்கிறார்.
உலகில் நிலவும் நியாயமின்மைக்கும் சமத்துவமின்மைக்கும் ஏழைகளின் வறுமைக்கும் இந்த உலக முதலாளித்துவமே காரணம் என்று வாதாடும் போப் பொலிவியாவில் சமூக செயற்பாட்டாளர்கள் முன்னிலையில் பேசும்போது சமூக ஒருங்கிணைப்பாளர்கள் (community organizers) ஏழை மக்களை ஒருங்கிணைத்து சமூகப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்றார். சமூக மாற்றங்கள் சமூகத்தின் அடிமட்டத்திலிருந்துதான் வர வேண்டும் என்கிறார். பொருளாதாரத் தேக்கம் ஏற்பட்டிருக்கும் ஸ்பெயினிலும் கிரீஸிலும் இப்போது இடதுசாரிக் கொள்கைகள் முன்னிலை வகிக்கின்றன என்பதை இவர் கூறுவதற்கு உதாரணமாகக் கூறலாம். பொலிவியாவில் கூட்டுறவுச் சங்கங்களும் ஆங்காங்கே உள்ள தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து செயல்பட்டு ஏழைகளின் நிலையை உயர்த்தி இருப்பதைப் புகழ்ந்து பேசிய போப் இந்த ஏழைகளின் நிலைமைக்கும் முதலாளித்துவத்தால் பாதிக்கப்பட்டு அடிமைகளாக ஆக்கப்பட்ட ஏழைகளின் நிலைமைக்கும் உள்ள வித்தியாசத்தை நம்மை கண்டுகொள்ளச் சொல்கிறார்.
மதத்திற்கு அப்பால் சென்று தன் கருத்துக்களைக் கூறும் போப்பை சில வலதுசாரிகள் விமர்சிக்கிறார்கள். முதலாளித்துவத்தின் தலைமையகமான அமெரிக்காவிற்கு செப்டம்பரில் செல்லவிருக்கும் போப் அங்கு என்ன பேசுவார் என்கிறார்கள் இவர்கள். மதத்தின் எல்லையைத் தாண்டி முதலாளித்துவத்தின் எதிர்மறைகளை விமர்சிக்கும் போப், தடையற்ற சந்தைப் பொருளாதாரம் (free market economy) ஏழைகளுக்குச் செய்திருக்கும் நன்மைகளில் கவனம் செலுத்தினால் நல்லது என்கிறார்கள்.
இவர்கள் என்னவாவது கூறிவிட்டுப் போகட்டும். என்னைப் பொறுத்தவரை மதத்தின் எல்லையைத் தாண்டி உலக மக்களின் நன்மையைப் பற்றியும் உலக அமைதியைப் பற்றியும் சிந்தித்தும் செயலாற்றியும் வரும் போப் அவர்கள் என் வணக்கத்துக்கு உரியவர். அவர் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களுக்கு மட்டும் தலைவர் அல்ல; உலக மக்கள் அனைவருக்கும் தலைவர். அவர் இன்னும் நீண்ட நாட்கள் வாழ்ந்து உலகுக்கு வழி காட்ட வேண்டும்.
எல்லோரும் வழிபடத்தக்க போப் பிரான்ஸிஸ் என்ற கட்டுரையை எழுதிய நாகேஸ்வரி அண்ணாமலை அவர்களுக்கு பாராட்டுக்கள். போப்பின் நல்ல குணங்களை அழகாகப் பதிவு செய்திருக்கிறார். மிக்க மகிழ்ச்சி.
அன்பன்,
மீ.விசுவநாதன்