ஒபாமாவின் ஜப்பான் விஜயம்
நாகேஸ்வரி அண்ணாமலை
1941-லிருந்து 1945 வரை நடந்த இரண்டாவது உலகப் போரில் ஜப்பானைப் பணியவைக்க அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா என்னும் ஊரின் மீது அணுகுண்டை வீசியது. மனித வரலாற்றிலேயே முதல் முதலாக வீசப்பட்ட அணுகுண்டு இது. (அமெரிக்கா வெடித்த இரண்டு அணுகுண்டுகளைத் தவிர அதன் பிறகு எந்த நாடும் மற்ற எந்த நாட்டின் மீதும் அணு குண்டு வெடிக்கவில்லை.) இந்த அணுகுண்டு அந்நகரின் எழுபது சதவிகிதம் மக்களைக் கொன்றது அல்லது காயப்படுத்தி முடமாக்கியது. அப்போது ஏற்பட்ட அணுக் கதிர் வீச்சினால் அதன் பிறகு ஒரு தலைமுறை மக்கள் பாதிக்கப்பட்டனர். ஹிரோஷிமாவில் போட்டது போதாதென்று மூன்று நாட்களுக்குப் பிறகு கொகுரா என்னும் ஊரைக் குறிவைத்து அங்கு காலநிலை சரியில்லாததால் நாகசாகி மீது இன்னொரு முறை அணுகுண்டை அமெரிக்கா வீசியது. முதலில் மூன்று ஊர்களைத் தேர்ந்தெடுத்து, காலநிலைக்குத் தகுந்தாற்போல் இரண்டில் அணுகுண்டை வீச முடிவுசெய்ததாம் அமெரிக்கா.
குண்டுவீச்சால் தாக்கப்பட்ட இடங்களில் ஒன்றை அப்படியே வைத்திருக்கிறார்கள். 1996-இல் ஜப்பானுக்குச் சென்றிருந்த எங்கள் குடும்பமும் அதைப் பார்வையிட்டது. அதற்கு அருகிலேயே அந்தக் கொடூர சம்பவத்தால் நிகழ்ந்த கோரக் காட்சிகளைக் கொண்ட ஒரு காட்சியகமும் இருக்கிறது.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மே மாதம் 27-ஆம் தேதி ஹிரோஷிமா செல்லவிருக்கிறார். அங்கு நடக்கப் போகும் ஜி-8 நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ளப் போகிறார். ஹிரோஷிமாவில் போரில் நாசமடைந்த பகுதியில் இருந்த ஒரு கட்டடத்தை நினைவுச் சின்னமாக ஜப்பான் வைத்திருக்கிறது. ஒபாமா அங்கு விஜயம் செய்ய விரும்புகிறார். பதவியில் இருக்கும்போது ஹிரோஷிமாவுக்குப் போகும் முதல் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாதான். ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்டபோது தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்திலேயே ஒபாமா அணு ஆயுதங்கள் இல்லாத உலகை உருவாக்கப் பாடுபடுவேன் என்று அமெரிக்க மக்களுக்கு வாக்களித்தார். பதவிக்கு வந்த பிறகும் அம்மதிரியான முயற்சிகளில் அவர் இறங்கியதற்காக 2009-இல் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. (இன்னொரு அணு ஆயுதப் போரை அவர் தொடங்காமல் இருப்பதற்காகவும் நோபல் பரிசு வழங்கப்பட்டதாகக் கூறுவோரும் உண்டு.)
ஒபாமா ஜப்பானுக்குச் சென்றாலே அமெரிக்கா ஹிரோஷிமாவில் குண்டு போட்டது தவறு என்று ஒப்புக்கொள்ளுவதாக இருக்கிறது என்று சில அமெரிக்கர்கள் ஒபாமா அங்கு போவதை ஆட்சேபிக்கிறார்கள். மேலும் அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ட்ரூமன் ஜப்பான் மீது அணுகுண்டு வீச எடுத்த முடிவு சரியானதல்ல என்று அமெரிக்கா இப்போது நினைப்பதாகவும் கொள்ளலாம் என்று ஒபாமாவின் ஹிரோஷிமா விஜயத்தை எதிர்ப்பவர்கள் கூறுகிறார்கள். ஆனால் வெள்ளை மாளிகையோ, ‘ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே 1945-இல் அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டு வீசியதற்கு இப்போது அமெரிக்காவிடமிருந்து எந்தவித வருத்தம் தெரிவிப்பதையும் எதிர்பார்க்கவில்லை என்றும் அதில் இறந்தவர்களுக்கு மரியாதை தெரிவிக்கும் பொருட்டுத்தான் சாமாதான விரும்பியான ஒபாமா அங்கு போக விரும்புகிறார் என்றும் உலகில் ஹிரோஷிமாவில் நடந்தது போன்ற கொடூரங்கள் இனியும் நிகழும் வாய்ப்பு இல்லையென்று சொல்ல முடியாது என்று உலகிற்கு உணர்த்துவதற்காகவும் போகிறார்’ என்று ஒரு அறிக்கை வெளியிட்டது.
அமெரிக்கா ஜப்பான் மீது குண்டுவீச எடுத்த முடிவு சரிதானா என்ற வாதம் இப்போதும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. 1995-இல் அந்தக் கொடூர சம்பவம் நடந்து ஐம்பது ஆண்டுகள் நடந்ததை நினைவூட்டும் வகையில் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்கடனில் உள்ள ஸ்மித்ஸோனியன் மியுசியத்தில் குண்டுவீசப் பயன்படுத்தப்பட்ட எனோலா கே (Enola Gay) என்னும் பி-29 விமானத்தை பொதுமக்கள் பார்வைக்கு வைப்பதில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, பின் அதனுடைய சில பகுதிகள் மட்டும் வைக்கப்பட்டனவாம். அப்படி அமெரிக்கா குண்டு வீசாமல் இருந்திருந்தால் அமெரிக்கா ஜப்பானின் ஒகினாவா பகுதியை முற்றுகையிட்டிருக்கும், அதனால் பல அமெரிக்க வீரர்களும் ஜப்பானின் குடிமக்கள் பலரும் இறந்திருப்பார்கள், அதைத் தவிர்ப்பதற்காக குண்டு வீசப்பட்டது சரியே என்று இரண்டாவது உலகப் போரில் கலந்துகொண்ட ராணுவ வீரர்கள் அபிப்பிராயப்பட்டார்களாம். அதனால் அந்த விமானத்தை ஸ்மித்ஸோனியன் மியுசியத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கும் எண்ணத்தைக் கைவிட்டார்களாம். (எனோலா கே என்ற பெயர் அந்த விமானத்திற்கு எப்படி வைக்கப்பட்டது தெரியுமா? அதை ஓட்டிக்கொண்டு போய் குண்டைப் போட்ட விமானி தைரியசாலியான தன் தாயின் பெயரை அதற்குத் தேர்ந்தெடுத்தாராம்.)
அந்த விமானம் ஸ்மித்ஸோனியன் மியுசியத்திற்குப் பதில் டல்லாஸ் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு மியுசியத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. குண்டு வீசியதால் ஏற்பட்ட விளைவுகளைப் பற்றிச் சரியாக விவாதிப்பதில்லை என்றும் குண்டு வீசியதின் சரித்திரப் பின்னணியையே மாற்றிவிட்டார்கள் என்றும் ஒரு சிலர் வாதிக்கிறார்கள். குண்டு வீசுவதாக முடிவு எடுக்கப்பட்டதும் ஏன் முதலில் மனிதர்கள் யாரும் இல்லாத பகுதியில் வெடித்து புதிய ஆயுதமான அணுகுண்டினால் ஏற்படப் போகும் விபரீத விளைவுகளை ஜப்பானியர்களுக்கு உணர்த்தியிருக்கலாமே என்கிறார்கள் இவர்கள். (அமெரிக்காவில் மனிதர்கள் இல்லாத இடத்தில் அணுகுண்டை வெடித்து அமெரிக்கா அதனால் ஏற்படும் விளைவுகளைச் சோதித்துப் பார்த்தது. ஆனால் ஜப்பானியர்களுக்கு அது பற்றித் தெரிவிக்கவில்லை.) ஜப்பான் சரணடைந்துவிடும் என்பது தெரிந்த பிறகும் நாகசாகி மீதும் அமெரிக்கா குண்டு வீசியது எந்த விதத்தில் நியாயம் என்கிறார்கள் இவர்கள்.
ஜப்பானிலும் அமெரிக்கா குண்டு போடுவதற்கு ஜப்பானின் எந்தச் செய்கை தூண்டுகோலாக அமைந்தது என்று சொல்வதில்லை. அமெரிக்கா குண்டு வீசியதற்கு முன் ஜப்பான் அரசு போரில் செய்த கொடும் செயல்களைப் பற்றி பள்ளிப் பாடங்களில் சரியாகச் சொல்லிக் கொடுப்பதில்லையாம். ‘இரண்டாவது உலக யுத்தத்தின்போது ஆசியாவில் ஜப்பான் இழைத்த கொடுமைகள் பற்றியோ அமெரிக்காவின் பெர்ள் துறைமுகத்தை ஜப்பான் முற்றுகை இட்டதைப் பற்றியோ ஹிரோஷிமாவில் உள்ள நினைவுச் சின்னத்திற்கு அருகில் உள்ள மியுசியத்தில் எதுவும் கூறப்படவில்லை. ஒபாமா அந்த இடத்திற்கு விஜயம் செய்தால் போரில் கொடூரமாகத் தண்டிக்கப்பட்டதும் கஷ்டப்பட்டதும் ஜப்பான்தான் என்று கூறும் ஜப்பானின் வலதுசாரிகளின் கூற்று சரியாகிவிடும் என்று அமெரிக்காவிலுள்ள ஒபாமா எதிர்ப்பாளர்கள் கூறுகிறார்கள்.
இந்தக் கொடூர சம்பவம் நடந்து முடிந்த சில ஆண்டுகளிலேயே அமெரிக்காவும் ஜப்பானும் நண்பர்கள் ஆகிவிட்டன. துயரங்களுக்கு ஆளானவர்கள் அப்பாவிப் பொதுமக்கள்தான். சமாதான விரும்பியான ஒபாமா தன்னுடைய பதவிக் காலத்தில் எந்தப் புதிய படையெடுப்பையும் (ட்ரோன் மூலம் பயங்கரவாதிகளோடு பாமர குடிமக்களையும் அமெரிக்கா கொன்று வருகிறது ஏன்பது வேறு விஷயம்) தொடங்கவில்லை. ஈரான் மீது படையெடுக்கும்படி எத்தனையோ நிர்பந்தங்கள் வந்தும் ஒபாமா அந்த நாட்டோடு பேச்சுவார்த்தையின் மூலம் சமாதானம் செய்துகொண்டார். ஒபாமாவிற்குப் பதில் வேறு யார் ஜனாதிபதியாக இருந்திருந்தாலும் இதற்குள் அமெரிக்கா இன்னும் இரண்டு யுத்தங்களையாவது தொடங்கியிருக்கும். நல்லவேளை, ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கிறார், உலகம் யுத்த பயத்திலிருந்து ஒருவாறு தப்பித்துக்கொண்டிருக்கிறது.
சமாதான விரும்பியான ஒபாமா யுத்தத்தின் கொடூரச் சின்னமான ஹிரோஷிமாவிற்குப் போவது சரியே. உலகம் யுத்தத்தின் கோரத்தை மறந்துவிடக்கூடாது. இதை அமெரிக்கா தவறே செய்யாது என்று மார்தட்டும் ஒபாமா எதிர்ப்பாளர்கள் ஒப்புக்கொண்டேயாக வேண்டும்