-முனைவர் இராம. இராமமூர்த்தி

முன்னுரை: புறத்திணைகள் ஏழெனத் தொல்காப்பியமும், பன்னிரண்டெனப் பன்னிருபாட்டியலும், புறப்பொருள் வெண்பாமாலையும் சுட்டுகின்றன. தொல்காப்பியங் கூறிய ஏழுதிணைகளைப் பன்னிரண்டாகப் பகுத்துரைப்பதோடு சில திணைவிளக்கங்களிலும் புறப்பொருள் வெண்பா மாலை வேறுபடுகின்றது. குறிப்பாகக் காஞ்சித் திணையமைதியில் தொல்காப்பியமும் புறப்பொருள் வெண்பா மாலையும் பெரிதும் வேறுபடுகின்றன.

காஞ்சிதானே பெருந்திணைப் புறனே
பாங்கருஞ் சிறப்பிற் பன்னெறி யானும்
நில்லா வுலகம் புல்லிய நெறித்தே.
  (தொல்: பொருள்: 67)

என நிலையாமை குறித்துத் தொல்காப்பியங்கூற,

வேஞ்சின மாற்றான் விடுதர வேந்தன்
காஞ்சிசூடிக் கடிமனை கருதின்று.  (புறப்: 61) 

எனப் பகை எதிர்நிலையைப் புறப்பொருள் வெண்பா மாலை கூறும். மேலும், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணைப் படலங்கள் புறப்பொருள் வெண்பா மாலையான் திணைகளாக வகுக்கப்பெற்றன. இந்நிலையில் இப்பாடல்களுக்கு உரைவகுத்த உரைகாரர், அவர் தாம் மேற்கொண்ட மதத்திற்கேற்பத் (கொள்கை) திணை, துறை வகுப்பர். இதனாற் சில பாடல்கட்கு இரண்டு மூன்று துறைகள் வகுக்கப்படுவதுமுண்டு. இந்நிலை அகப்பாடல்கட்கும் விலக்கன்று.

புறநானூற்றுப் பாடல்கட்கு வகுக்கப்பெற்றுள்ள திணை, துறைகள், பெரும்பாலும் தொல்காப்பியம், பன்னிருபாட்டியல், புறப்பொருள் வெண்பா மாலை போன்ற நூல்களில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றி யிருப்பதைக் காணலாம். இந்நூல்களுள் கூறப்படாத துறைகளும் இருக்கலாம். அங்ஙனம் காணப்படுகின்ற ஒரு துறையே ’துணைவஞ்சி.’ இதனைக் குறித்தே இக்கட்டுரையாளர் ஈண்டுச் சிந்திக்கின்றார்.

துணைவஞ்சித் துறையில் அமைந்துள்ள பாடல்களாகப் புறநானூற்றில் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அவை, 36, 45, 46, 47, 57, 213 என்ற எண்களில் அமைந்துள்ளன. 36-ஆம் புறப்பாடல் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது. 45-ஆம் பாடல் சோழன் நலங்கிள்ளியையும், நெடுங்கிள்ளியையும் கோவூர் கிழார் பாடியது. 46-ஆம் பாடல் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் கோவூர் கிழார் பாடியது.  47-ஆம் பாடல் இளந்தத்தன் எனும் புலவரைக் காப்பான்வேண்டி, நெடுங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது. 57-ஆம் பாடல் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய பாண்டிய நன்மாறனைக் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது. 213-ஆம் பாடல் கோப்பெருஞ்சோழனைப் புல்லாற்றூர் எயிற்றியனார் பாடியது. இவ்வகைப் பாடல்களின் பொருளமைதியைக் காணப் புகுமுன் துணைவஞ்சியின் இலக்கணத்தைக் காண்டல் இன்றியமையாதது.

துணைவஞ்சி: இப்பெயர் மாத்திரையானே, இத்துறை வஞ்சித்திணையின் பாற்படும் என்பதனை நன்கறியலாம். ஆனால், துணைவஞ்சி எனும் துறைப்பெயர், தொல்காப்பியப் புறத்திணை நூற்பாக்களில் ஒன்றிற்கூட இடம்பெறவில்லை. தொல்காப்பியர் ‘இயங்குபடை அரவம்’ முதலாக ‘அழிபடை தட்டோர் தழிஞ்சி’யொடு துறை பதின்மூன்றே என வஞ்சித்திணையின் துறையாமாறு சுட்டுவர். ஈண்டுத் துணைவஞ்சி என்ற பெயரான் துறையொன்றும் இடம்பெறவில்லை.

’வாடா வஞ்சி’ முதலாக ’நல்லிசை வஞ்சி’ யீறாக இருபத்தொரு துறைகளையே புறப்பொருள் வெண்பா மாலை சுட்டுகின்றது. இவ்வாசிரியரும் துணைவஞ்சியெனத் துறையொன்றையும் வகுக்கவில்லை. இஃதிவ்வாறாக, துணைவஞ்சி குறிக்கப்பெறும் இடத்தைக் காண்போம்.    

’கழிபெருஞ் சிறப்பின் துறைபதின் மூன்றே’ என்ற அடிக்குச் சிறப்புரை வரைந்த இளம்பூரணரே, முதன்முதலில் இன்னும் ”கழிபெருஞ்சிறப்பின்” என்றமையின் பேரரசர் துணையாக வந்த குறுநில மன்னரும் தாமும் பொலிவெய்திப் பாசறை நிலை உரைத்தலும் பிறவும் கொள்க. இவை பற்றியன துணைவஞ்சி. “நீயே புறவின் அல்லல்” (புறம்: 46) “வள்ளியோர்ப் படர்ந்து” (புறம்: 47) என்னும் புறப்பாட்டுகளில் காண்க” எனவுரைப்பர் (தொல்.பொருள். இளம். ப.94). இதனால், பேரரசர் துணையாகவந்த குறுநில மன்னரும் பேரரசரும் பொலிவெய்திப் பாசறைநிலையுரைத்தலும் பிறவும் துணைவஞ்சி என்பது இளம்பூரணர் கருத்துரையாகும்.  

இனி, முன்குறித்த பாடல்கட்கு உரைவரைந்த பழையவுரைகாரர், ‘சந்து செய்வித்தலின் துணைவஞ்சி’யாயிற்றென்பர். இவர் கருத்துப்படி, போர் நிகழாவாறு தடுக்கும் நிலைமை – அமைதிப்படுத்தும் நிலைமை – துணைவஞ்சியெனச் சுட்டப்பெறுதல் காண்க. புறநானூற்றுப் பழையவுரைகாரர், இளம்பூரணர் கருத்தையே ஏற்றுக்கொண்டு துறைவிளக்கம் தந்துள்ளமை இதனாற் தெள்ளிதிற் புலனாகும்.

அடுத்து, மேற்குறித்த புறப்பாடல்களின் பொருளமைதியையும், அவை எழுந்த சூழ்நிலையையுங் காண்போம். இத்துறையில் முதலிற் காணலாகும் பாடல் (36) கருவூர் முற்றியிருந்த சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியதாகும். காவன்மரம் வெட்டும் ஓதை செவியிற் கேட்டும், பகைஎதிர்த்து வாராதவனிடத்துப் போர்மேற்செல்லல் என்பது, நாணுத்தகவுடைத்து எனக் கூறிப் போரை விலக்கும் உட்கோள் கொண்டது இப்பாடல்.

அடுத்த பாடல், உறையூர் முற்றியிருந்த நலங்கிள்ளியையும், அடைத்திருந்த நெடுங்கிள்ளியையும் கோவூர் கிழார் பாடியதாகும். இப்பாடல் போர் மேற்கொண்டானும் அடைத்திருந்தானும் ஒரே குடியினர் (சோழ மரபினர்) அவருள் ஒருவர் வென்றாலும் தோற்றாலும் அவர்தம் குடியே பழியை யெய்தும் எனக்கூறிப் போரைத் தவிர்க்க முயல்கின்றார் புலவர்.

46—ஆம் புறப்பாடல், மலையமான் மக்களைக் கொல்லமுயன்ற குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் கோவூர் கிழார் பாடியது. ஈண்டு, ஏதுமறியாச் சிறுவரைக் கொல்ல எண்ணிய முயற்சியைத் தடுத்தமை காட்டப் பெறுகின்றது.

47—ஆம் புறப்பாடல், இளந்தத்தன் என்ற புலவரை ஒற்றெனக் கருதிக் கொல்லப்புகுந்த நெடுங்கிள்ளியின் செயலைத் தடுப்பான்வேண்டிக் கோவூர் கிழார் பாடியது. ஈண்டுக் கொலை முயற்சியின்றின்றும் புலவரைக் காத்தலைச் சுட்டுகின்றார் கோவூர் கிழார்.

பகைவர் நாட்டின்மீது படையெடுத்தலைத் தவிர்(த்)தற்பொருட்டுப் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனைக் காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது 57—ஆம் புறப்பாடல். இப்பாடலில் போர் முயற்சியைத் தவிர்ப்பது சுட்டப்பெறுகிறது.

தன்மக்கள்மேற் படையெடுத்துச் சென்ற கோப்பெருஞ்சோழனைப் புல்லாற்றூர் எயிற்றியனார் பாடியது புறம் 213. இங்கும் போர்முயற்சியைத் தவிர்த்தலே பாடற் பொருளாகிறது.

மேற்காட்டிய ஆறு பாடல்களில் 36, 45, 46, 57-ஆம் எண்களில் அமைந்த பாடல்கள் நான்கும் பகைமேற் சென்று பொருதலைத் தவிர்ப்பான் வேண்டியெழுந்தன. இவை மண்நசையான் மேற்சென்றமை சுட்டுமாற்றான் வஞ்சித்திணைப் பாற்படும் என்பது பொருந்தும். இந்நான்கு பாடல்களிலும் புலவர்கள் சந்துசெய்ய முயன்றமையும் தெள்ளிதிற் புலனாகின்றன. சந்து செய்விக்கும் முயற்சியை நேரடியாகச் சுட்டும் துறையொன்றும் வஞ்சித்திணைக்குரிய துறைகளை விளக்கும் நூற்பாவில் இடம்பெறவில்லை.

இந்நிலையில் வஞ்சித்திணையிற் சார்ந்தும், அத்துறைகளில் அடக்கவியலாப் பாடல்களை யாங்ஙனம் அமைப்பது என்ற எண்ணம் அறிஞர்களிடத்து எழுந்திருக்கக் கூடும். அத்தருணத்தில் இத்தகைய பாடல்களைப் புறனடையிற் சுட்டுமாறு போன்று, துணைவஞ்சி என்றொரு துறையைப் படைத்திருக்க வாய்ப்புண்டு.

இத்தகைய புறப்பாடல்களைக் கண்ட இளம்பூரணர், ‘கழிபெருஞ் சிறப்பின்’ என்ற மிகையானே ‘துணைவஞ்சி’ என்ற ஒரு துறையை அமைத்து, அத்துறையுள் அடக்குவாராயினர்.

ஆனால் மலையமான் மக்களை (குழந்தைகளை)க் கொல்ல முயன்ற கொலை முயற்சியைத் தவிர்க்க முயன்றமை வஞ்சித் திணையில் அடங்குமாறு யாங்ஙனம்? பகைவர் மண்ணை நச்சிப் படையெழுதலும், பகைவரை வென்றபின் அவர்தம் மக்களைப் பற்றிவந்து கொல்லும் முயற்சியும் ஒன்றாதல் பொருந்துமா என்பதை எண்ணுக. ஈதொப்பவே, ஒற்றன் எனத் தவறாகக் கருதியமையான் இளந்தத்தன் என்ற புலவரைச் சிறைப்படுத்திக் கொல்லமுயன்ற செயலும் வஞ்சித் திணையாமோ? தன்மக்கள்மீது கொண்ட சினத்தான் அவரைக் கொல்லக் கருதியமையைப் பிறர் மண்ணை விரும்பிப் படையெழும் வஞ்சித் திணையுள் அடக்குவதும் பொருந்துமாறில்லை.

இப்பாடல்களுக்கு மன்னுயிர்மாட்டு அன்புசெலுத்தும் புலவர்தம் அருள் உள்ளங்களே கரணியமாகின்றன. பிற உயிர்கள்மாட்டு அன்புசெலுத்தும் பேருள்ளப் பாங்கினை வஞ்சித்திணையில் அடக்குவதும், துணைவஞ்சி எனப் புதியதொரு துறை வகுத்துரைப்பதும் தொல்காப்பியர் காட்டும் புறத்திணை நெறிக்குப் பொருந்தி வாராமையை எண்ணுக. அதனாலேயே தொல்காப்பியர், துணைவஞ்சி என ஒரு துறை வகுக்கவில்லை. பின்னர் விரிவாகப் புறத்திணைகளைச் சுட்டும் புறப்பொருள் வெண்பா மாலையும் ‘துணைவஞ்சி’ என ஒரு துறையை வகுக்கவில்லை.

இவ்வஞ்சித்திணைப் பகுதிக்கு உரைவரைந்த நச்சினார்க்கினியர், துணைவஞ்சியில் இளம்பூரணர் அடக்கிய புறப்பாடல்கட்கு அத்துறை பொருந்தாதெனக் கூறி மறுப்பர். அவர், “துணை வேண்டுதல் உலகியல் வழக்கு. “நீயே புறவினல்ல லன்றியும் பிறவும்” (46) என்னும் புறப்பாட்டும், “வள்ளியோர்ப் படர்ந்து” (47) என்னும் புறப்பாட்டு முதலியனவும் துணைவஞ்சி என்பார்க்கு அவை மேற்செலவின்கண் அடங்காமையிற் பாடாண்திணை யெனப்படுமென்றுரைக்க” எனக்கூறி இளம்பூரணர் கருத்தை மறுப்பர்.

புறநானூற்றுப் பழையவுரைகாரர் இந்த ஆறு புறப்பாடல்களையும் ‘சந்து செய்வித்தலின் துணைவஞ்சி யாயிற்று’ எனக் கூறுவதை நோக்கின், இளம்பூரணர் உரைசெல்வாக்கான் அவ்வாறு கூறியிருப்பாரோவென எண்ணத் தோன்றுகின்றது. இன்றேல் புறநானூற்றுப் பாடல்கட்குத் திணை, துறை வகுத்தார் இன்று கிட்டாதவொரு புறப்பொருள் இலக்கணநூலைப் போற்றியொழுகியிருக்க வேண்டும் என்பது புலனாம். எனினும், இத்துறை வகுப்பு தொல்காப்பியப் புறத்திணை நெறிக்குப் பொருந்துமாறில்லையென்க.

முடிவுரை: இதுகாறுங்கூறியவற்றான், புறப்பாடல்கட்கு வகுத்துரைக்கப்பட்ட திணை, துறைகள் பொருந்துமாற்றைத் தொல்காப்பியம் அல்லது புறப்பொருள் வெண்பா மாலையை முழுமையாகப் பின்பற்றி ஆய்வுசெய்தல் வேண்டும். அவ்வாறு செய்யின், ஐயத்திற்கும் குழப்பத்திற்கும் இடமின்றிப் புறப்பாடல்கட்குத் திணை, துறைகளைத் தெளிவாய்ச் சுட்டவியலும். ஆகலின், இலக்கணிகளும் ஆய்வாளர்களும் இத்துறையில் கருத்தினைச் செலுத்துதல் வேண்டும். ஆய்வொளி பரவின் ஐயவிருள் இரிந்தோடுமன்றோ!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *