நாகேஸ்வரி அண்ணாமலை

images (2)

உலகில் எத்தனையோ மனிதர்கள் பிறக்கிறார்கள், இறக்கிறார்கள்.  எல்லோரும் பெரிய மனிதர் என்ற பெயர் வாங்குவதில்லை.  ஆனால் கலாம் போன்ற மிகச் சிலரே இறந்த பிறகும் பலராலும் போற்றப்படுகிறார்கள்.  அவர் இறந்த சமயம் நான் தமிழ்நாட்டில் இருந்தேன்.  தமிழ்நாட்டில் பல இடங்களுக்கும் சென்றபோது அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, மதங்களுக்கு அப்பாற்பட்டு, ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு அவர் சிறப்பாக வாழ்ந்ததற்கு ஆதாரமாக எல்லா அலுவலகங்கள் முன்பும் சாலை ஓரங்களிலும் அவர் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து உருக்கமாகக் கீழே எழுதியிருந்த வாசகங்கள் அந்த மனிதகுல மாணிக்கத்தின் பெருமையைப் பறைசாற்றிக்கொண்டிருந்தன.  அவற்றில் சில:

சரித்திரம் சரிந்தது.

உன் பிறப்பு தற்செயலாக இருக்கலாம்.  உன் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்.

மண்ணுக்குச் செய்த சேவை போதுமென்று விண்ணுக்குப் போய்விட்டாயா?

உன் கனவு தூக்கத்தில் காணும் கனவு அல்ல; தூங்காமல் விழித்திருந்து செய்ய வேண்டிய கனவு.

அவர் பள்ளிப் படிப்பை முடித்தது எங்கள் ஊரில் (இராமநாதபுரம்) உள்ள சுவார்ட்ஸ் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில்.  அங்கு பெரிய பேனர் வைத்திருந்தார்கள்.  எங்கள் வீட்டிற்கு மிகவும் அருகில் உள்ள அந்தப் பள்ளியைக் கடந்து செல்லும்போது மனதில் பெருமை தாண்டவமாடியது.  அவரின் பூதஉடலை அருகில் சென்று பார்க்க வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றாலும் மதுரையிலிருந்து அதைச் சுமந்துகொண்டு இராமேஸ்வரத்திற்குச் சென்ற ஹெலிகாப்டரைக் காண முடிந்தது.  அதுவே அவருடைய பூத உடலுக்குச் செய்த மரியாதையாக நினைத்துக்கொண்டேன்.

சிறு வயதிலேயே இந்தியாவை விஞ்ஞானம் மூலம் உயர்த்தி உலகிலேயே வல்லரசு நாடாக ஆக்க வேண்டும் என்பதே அவருடைய ஆசை.  எந்தப் பள்ளிக்குச் சென்றாலும் கல்லூரிக்குச் சென்றாலும் அங்கு மாணவர்களிடம் உரையாடி அவர்களை கல்வியில் ஊக்குவிப்பதே அவருடைய செயல்.  சதாசர்வ காலமும் எந்தவித தன்னலமும் இன்றி இந்தியாவின் முன்னேற்றமே அவருடைய மூச்சாக இருந்தது.  டாக்டர்கள் தடுத்தும் ஷில்லாங்கில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவர்களிடையே பேசும் வாய்ப்பை ஏற்று அப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே உயிரை விட்ட அம்மாமனிதரின் விருப்பத்தை – மாணவர்களிடம் உரையாடிக்கொண்டிருக்கும்போதே – இறைவன் எப்படி நிறைவேற்றி வைத்திருக்கிறான்!

1998-இல் வாஜ்பாய் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட அப்போதைய பி.ஜே.பி. அரசு கலாமை ஜனாதிபதியாக நியமித்தது.  ஐந்து வருடங்கள் ஆன பிறகு அவருடைய முதல் பதவிக்காலம் முடிந்தபோது அவரையே இன்னொரு ஐந்து வருடங்கள் ஜனாதிபதி பதவியில் தொடரவிடலாமா என்ற எண்ணம் எழுந்தபோது ஊழலிலே ஊறிப் போன லாலு பிரசாத் யாதவ் போன்றவர்கள் கலாம் பதவி இறங்குவதுதான் அவர் செய்யக் கூடிய கண்ணியமான செயல் என்பதுபோல் பேசினார்கள்.  யார் யாரைப் பார்த்து என்ன பேசுவது என்ற விவஸ்தையே இல்லாமல் போயிற்று.  தான் ஜனாதிபதியாகப் பதவியேற்றதைக் காண வந்த அவருடைய உறவினர்கள் எல்லோரையும் டில்லிக்கு தன் சொந்த செலவில் வரவழைத்தார்  கலாம்.  தன்னலம் கருதாது நாட்டின் வருங்காலத்தைப் பற்றியே கனவுகண்டுகொண்டிருந்த கலாம் எங்கே?  ஊழலைத் தவிர வேறு ஒன்றையும் அறியாத லாலு எங்கே?  இந்தியாவில் மட்டும்தான் இந்த மாதிரியான விமர்சனங்கள் நடக்கும்.  இன்னும் ஐம்பது வருஷங்கள் கழித்து லாலுவும் ஜெயலலிதாவும் வாழ்ந்த காலத்தில் கலாம் போன்றவர்கள் வாழ்ந்தார்களா என்ற ஐயம் மக்களுக்கு எழுந்தாலும் எழலாம்.

பதவியில் இருந்தபோதும் இல்லாதபோதும் மிக எளிமையாக வாழ்க்கை நடத்தியவர் கலாம்.  இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சுத்த சைவ உணவையே உண்டு வந்தவர்.  தமிழ்நாட்டில் டாக்சியில் போய்க்கொண்டிருந்தபோது ‘இவ்வளவு சீக்கிரம் கலாம் இறந்துவிட்டாரே.  மருத்துவப் பரிசோதனைகள் எல்லாம் செய்துகொண்டாரா’ என்று நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது டாக்சி டிரைவர் ‘முஸ்லீம்கள் எல்லோரும் நிறைய மாமிசம் சாப்பிடுபவர்கள்.  திடீரென்று கொழுப்பு அடைத்து இறந்துவிடுவார்கள்’ என்றான்.  எப்படிப்பட்ட அறியாமை!  அவர் சுத்த சைவம் என்றதும் வாயடைத்துப் போய்விட்டான்.

இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர் என்றாலும் வீணை வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவர்.  இசைக்கு ஷெனாய் போன்ற வாத்தியத்தைத் தேர்ந்தெடுக்காமல் கர்நாடக சங்கீதத்தின் முக்கிய அங்கமாகிய – சரஸ்வதியின் இசைக் கருவியான – வீணையைத் தேர்ந்தெடுத்தார்.  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகிலுள்ள கலசலிங்கம் பல்கலைக்கு ஒரு விழாவிற்குச் சென்றவரை அங்குள்ள ஸ்ரீஆண்டாள் கோவிலுக்கு அழைத்துச் சென்றனர்.  கோவில் அதிகாரிகள் அவருக்குப் பரிவட்டம் கட்டி மரியாதை செய்தார்கள்.  அதை எந்தவிதத் தயக்கமும் இன்றி ஏற்றுக்கொண்டார் கலாம்.  அவரைப் பொறுத்தவரை எல்லா மதங்களும் சமம்.  அவர் மதங்களுக்கு அப்பாற்பட்டவர்.

அறிவு, எளிமை, நாணயம், தேசப்பற்று, தொண்டுணர்வு இவையெல்லாம் ஒரு சேர ஒரு மனிதரிடம் பார்ப்பது அரிது.  கலாம் ஒரு அரிய மனிதர்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *